பைபிளின் கருத்து
நாம் பேசும் விதம் ஏன் முக்கியம்?
ஒரு வயதான பெண்ணிடம் சாந்தமாகப் பேசி முடித்த பிறகு, ‘மைக் ஆன்’ ஆகியிருப்பதை அறியாத பிரதமர் தன்னுடைய ஊழியர்களைக் கூப்பிட்டு ‘இந்தப் பொம்பளய ஏன் என்கிட்ட வரவிட்டீங்க? திமிர்பிடிச்சவ’ என்று கேவலமாகப் பேசினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுவரை அவர் சம்பாதித்திருந்த நற்பெயரை எல்லாம் ஒரு நொடியில் இழந்துவிட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து, பிரதமர் பதவியையும் இழந்தார்.
எந்தவொரு மனிதனாலும் தன் பேச்சை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது. (யாக்கோபு 3:2) இருந்தாலும், நாம் பேசும் வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்தப் பிரதமருடைய அனுபவம் காட்டுகிறது. ஆம், உங்களுடைய நற்பெயர், வேலை, மற்றவர்களோடு உள்ள உறவு எல்லாம் உங்கள் பேச்சைப் பொறுத்ததே.
ஆனால், உங்கள் வார்த்தைகளுக்கு இன்னும் அதிக சக்தி இருக்கிறது! உங்களுடைய பேச்சு, உங்கள் உள்ளத்தில் இருப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டும் என பைபிள் விளக்குகிறது. “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 12:34) உங்கள் பேச்சு உங்களுடைய உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதால் உங்கள் வார்த்தைகளை அலசி ஆராய்வது மிக முக்கியம். இதற்கு பைபிள் உதவுமா? பார்ப்போம் வாருங்கள்.
பண்பாகப் பேச...
வார்த்தைகள்தான் எண்ணங்களாக உருவெடுக்கின்றன. எனவே, நீங்கள் நல்ல விஷயங்களை யோசித்தால்தான் நல்ல வார்த்தைகளைப் பேச முடியும். கடவுளுடைய வார்த்தையைக் கடைப்பிடித்தால் உங்கள் எண்ணங்களும் வார்த்தைகளும் நல்லவையாக மாறும். அது எப்படி?
இருதயத்தை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். அந்த நல்ல எண்ணங்கள் எவை என பைபிள் சொல்கிறது: “உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
இந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பது தவறான எண்ணங்களை விட்டொழிக்க உங்களுக்கு உதவும். நீங்கள் பார்க்கிற விஷயங்களும் படிக்கிற விஷயங்களும் உங்கள் எண்ணத்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, அசுத்தமான எண்ணங்களைத் தவிர்க்க தவறான செல்வாக்குகளைக் களைந்தெறிய வேண்டும். அப்படியென்றால், ஆபாசமும் வன்முறையும் நிறைந்த பொழுதுபோக்குகளை விட்டு விலக வேண்டும். (சங்கீதம் 11:5; எபேசியர் 5:3, 4) அதேசமயம், உங்கள் மனதைச் சுத்தமான, நல்ல விஷயங்களால் நிரப்ப வேண்டும். இதற்கு பைபிள் உங்களுக்கு உதவும். உதாரணமாக, நீதிமொழிகள் 4:20-27-ஐயும் எபேசியர் 4:20-32-ஐயும் யாக்கோபு 3:2-12-ஐயும் வாசியுங்கள். இந்த வசனங்களிலுள்ள நியமங்களைக் கடைப்பிடிப்பது பண்பாகப் பேச எப்படி உதவும் என்பதைக் கவனியுங்கள்.a
யோசித்துப் பேசுங்கள். “சிந்தனையற்ற பேச்சு வாள்போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்” என்பதாக நீதிமொழிகள் 12:18 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. நீங்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை அடிக்கடி ‘புண்படுத்தியிருந்தால்,’ எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து அதிக கவனமாக இருக்க வேண்டும். எனவே, நீதிமொழிகள் 15:28-லுள்ள (ஈஸி டு ரீட் வர்ஷன்) சிறந்த ஆலோசனைக்குச் செவிகொடுங்கள்: “நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.”
ஒரு இலக்கு வையுங்கள். அடுத்த 30 நாட்களில், நீங்கள் கோபமாக இருக்கும்போது படபடவென பேசக்கூடாது என்று ஒரு தீர்மானம் எடுங்கள். கோபம் வரும்போது, இந்தக் கட்டுரையில் இருக்கும் வசனங்களை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அன்பாகவும் ஞானமாகவும் சாந்தமாகவும் பேச முயற்சி எடுங்கள். (நீதிமொழிகள் 15:1-4, 23) ஆனால், அதுமட்டுமே போதாது.
கடவுளிடம் உதவி கேளுங்கள். ‘யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரியமாய் இருப்பதாக’ என்று ஒரு பைபிள் எழுத்தாளர் ஜெபித்தார். (சங்கீதம் 19:14) உங்கள் பேச்சு யெகோவா தேவனுக்கு விருப்பமானதாகவும், மற்றவர்களை உங்களிடம் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையைக் கடவுளிடம் சொல்லுங்கள். “உங்கள் வார்த்தைகள் இனிமையாக இருக்கட்டும்; இதனால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். வார்த்தைகளுக்கு வாழ்வையோ சாவையோ ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது” என்று நீதிமொழிகள் 18:20, 21 சொல்கிறது.—கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.
கடவுளுடைய வார்த்தையைக் கண்ணாடியைப்போல் பயன்படுத்துங்கள். பைபிள் ஒரு கண்ணாடியைப் போன்றது. நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதை அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். (யாக்கோபு 1:23-25) உதாரணமாக, பின்வரும் மூன்று பைபிள் நியமங்களைச் சிந்திக்கும்போது, ‘என்னுடைய பேச்சும் நடத்தையும் இந்த நியமங்களுக்கு இசைவாக இருக்கிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
“சாந்தமான பதில் கோபத்தை அகற்றும், கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பிவிடும்.” (நீதிமொழிகள் 15:1, திருத்திய மொழிபெயர்ப்பு) நீங்கள் சாந்தமாகவும் சமாதானமாகவும் பேசுகிறீர்களா?
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள்.” (எபேசியர் 4:29) உங்களுடைய பேச்சு உங்களைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்துகிறதா?
“உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.” (கொலோசெயர் 4:6) இறுக்கமான சூழ்நிலைகளில்கூட நீங்கள் சொல்லும் வார்த்தைகள் இதமானதாகவும் இனிமையானதாகவும் இருக்கிறதா?
கண்ணாடியில் பார்த்து உங்களைச் சரிசெய்துகொள்ளும்போது மற்றவர்கள் பார்வைக்கு நன்றாகத் தெரிவீர்கள், நீங்களும் சந்தோஷப்படுவீர்கள். அதேபோல, கடவுளுடைய வார்த்தையாகிய “கண்ணாடியில் பார்த்து” உங்கள் பேச்சை சரிசெய்துகொள்ளும்போது அதிக நன்மைகளை அடைவீர்கள். (g11-E 06)
[அடிக்குறிப்பு]
a பைபிளை விளக்கும் மற்ற பிரசுரங்களைப் படிக்க www.watchtower.org என்ற வெப்சைட்டைப் பார்க்கவும்.
உங்கள் பதில்?
● உங்களுடைய பேச்சு எதைப் பிரதிபலிக்கிறது?—லூக்கா 6:45.
● நீங்கள் மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்?—எபேசியர் 4:29; கொலோசெயர் 4:6.
● பண்பாகப் பேச நீங்கள் என்னென்ன முயற்சிகளை எடுக்கலாம்?—சங்கீதம் 19:14; பிலிப்பியர் 4:8.
[பக்கம் 32-ன் படம்]
நம் பேச்சு நம்முடைய நற்பெயரையும் மற்றவர்களோடு உள்ள உறவையும் பாதிக்கும்