நேர்மை வெற்றியின் ஏணிப்படி
“ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.” —லூக்கா 12:15.
வாழ்க்கையில் வேலை செய்து சம்பாதிப்பது அவசியம். சொல்லப்போனால், நம்மையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டியது கடவுள் கொடுத்த பொறுப்பு.—1 தீமோத்தேயு 5:8.
ஆனால், தேவைக்கு மிஞ்சி சம்பாதிக்க வேண்டுமா? பணம் சம்பாதிப்பதுதான் வாழ்க்கையில் உங்கள் லட்சியமாக இருக்கிறதா? பணம், பொருள் சம்பாதிப்பதில் குறியாக இருப்பவர்கள் நேர்மையற்ற வழியில் சுலபமாகச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் கொண்டுபோய் விடும் என்பதை கடைசியில்தான் புரிந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, பண ஆசை பலவிதமான வேதனைகளைக் கொண்டு வரும் என்று பைபிளும் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:9, 10.
இப்போது நான்கு பேருடைய உதாரணங்களைக் கவனிக்கலாம்; பணம் மட்டுமே நமக்கு வெற்றியைத் தராது என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.
சுய மரியாதை
“சில வருஷத்துக்கு முன்னால நான் ஒருத்தர சந்திச்சேன். அவர் பத்து லட்சம் டாலருக்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும்னு சொன்னாரு. அந்த பாலிசிய அவர் எடுத்தா எனக்கு ஆயிரக்கணக்கில கமிஷன் கிடைக்கும். ஆனா, அந்த கமிஷன்ல பாதிய நான் அவருக்குக் கொடுத்தாதான் அவர் இந்த பாலசிய எடுப்பேன்னு சொன்னாரு. அவர் அப்படிச் சொன்னது நியாயமே இல்ல, அது சட்ட விரோதமானதும்கூட. அதை அவர்கிட்ட நேரடியா சொல்லிட்டேன்.
“இது தப்புனு புரிய வைக்கிறதுக்காக அவர்கிட்ட இப்படி கேட்டேன்: ‘நீங்க சொல்ற மாதிரி செஞ்சா அது மோசடி தானே! இப்படி மோசடி பண்ற ஒருத்தர்கிட்ட உங்களோட சொந்த விஷயங்கள, பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள எல்லாம் சொல்வீங்களா?’ அதுக்கப்புறம், நான் ஏன் இதை செய்ய மாட்டேங்கறத அவர்கிட்ட தெளிவா சொன்னேன். ‘யோசிச்சு பாருங்க, என்கிட்ட பாலிசி எடுக்கணும்னு விரும்புனா எனக்கு ஃபோன் பண்ணுங்க’னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர்கிட்டயிருந்து எந்த பேச்சு மூச்சும் இல்ல.
“நான் மட்டும் ‘சரி’னு சொல்லியிருந்தா, ஒரு கிறிஸ்தவனா இருக்கிறதுல அர்த்தமே இருந்திருக்காது. அதுமட்டுமா, என்னோட நேர்மை, சுய மரியாதை எல்லாம் என்ன ஆகியிருக்கும்! அவரோட மோசடி திட்டத்துக்கு உடந்தையா இருந்திருந்தா நான் அவரோட கைப்பாவையா ஆகியிருப்பேன்.”—டான், அமெரிக்கா.
மன நிம்மதி
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட டேனிக்கும் இதுபோன்ற சோதனை வந்தது. அந்தத் தொழிற்சாலையின் பொருள்கள் தரமானது என்று டேனி பொய் சொல்வதற்காகப் பெரும் தொகையை மானேஜர் லஞ்சமாகக் கொடுத்தார். ஆனால், அவர் என்ன செய்தார்?
“அந்த மானேஜர் எனக்கு விருந்து கொடுத்து கவனிச்சதுக்கு நன்றி சொன்னேன். ஆனா, பணத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் விடவே இல்ல. உங்களோட கம்பெனி எங்ககிட்ட கான்ட்ராக்ட் எடுத்தா, இன்னும் நிறைய பணம் தர்றேனு சொன்னாரு. அவர் எவ்ளோ வற்புறுத்தியும் நான் வாங்கவே இல்ல.
“அந்தப் பணத்தை மட்டும் நான் வாங்கியிருந்தா, மாட்டிக்குவோமோனு நினைச்சு பயந்து பயந்து வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும். ஒரு நாள், என் முதலாளிக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சு. தப்புதண்டா செய்யாம இருந்தத நினைச்சு எனக்கு சந்தோஷமா, நிம்மதியா இருந்துச்சு. நீதிமொழிகள் 15:27-தான் எனக்கு ஞாபகம் வந்தது: ‘பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை [அதாவது லஞ்சத்தை] வெறுக்கிறவனோ பிழைப்பான்.’”—டேனி, ஹாங் காங்.
குடும்ப சந்தோஷம்
“நான் கட்டடம் கட்டும் தொழில சொந்தமா நடத்திட்டு வர்றேன். இந்தத் தொழில்ல வாடிக்கையாளர்கள நல்லா ஏமாத்த முடியும், வரி கட்டாம தப்பிக்க முடியும். ஆனா, நேர்மையா இருக்கணுங்கறதுதான் என்னோட தீர்மானம். அதனால, எனக்கும் என் குடும்பத்துக்கும் நிறைய நன்மை கிடைச்சிருக்கு.
“தொழில்ல மட்டும் இல்ல, வாழ்க்கையில எல்லா விஷயத்திலயும் நேர்மையா இருக்கணும். கடவுளோட நியமங்கள விட்டுக்கொடுக்காம நேர்மையா இருப்பீங்கனு உங்க கணவனோ மனைவியோ தெரிஞ்சுக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கை அதிகமாகும். பாதுகாப்பாவும் உணருவீங்க.
“பணத்த வெச்சு ஒரு பெரிய கம்பெனியே நீங்க விலைக்கு வாங்கலாம். ஆனா, பிரச்சினை இல்லாத நிம்மதியான குடும்ப வாழ்க்கைய வாங்க முடியாது. ஒரு யெகோவாவின் சாட்சியா நான் பைபிளின்படி வாழ முயற்சி செய்றேன்; அதனாலதான் சமநிலையோடு வாழ முடியுது. பணம், பணம்னு அலையாம இருக்கிறதுனால என் குடும்பத்தோட சந்தோஷமா நேரம் செலவிட முடியுது.”—டார்வின், அமெரிக்கா.
கடவுளோடு பந்தம்
“கம்பெனிக்குத் தேவையான பொருள்கள வாங்குறதுதான் என்னோட வேலை. சேல்ஸ் ஏஜென்டுகள் சிலசமயம், பொருள்கள முழு தள்ளுபடி விலையில கம்பெனிக்குக் கொடுக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா, அந்தப் பொருளுக்காக எங்க கம்பெனி அவங்களுக்கு தர்ற பணத்துல ஒரு குறிப்பிட்ட சதவீதத்த என் கையில கொடுப்பாங்க. ஆனா நான் வாங்கிக்க மாட்டேன். இது என் கம்பெனி பணத்த திருடுற மாதிரி இருக்கும்.
“எனக்கு சம்பளம் ரொம்ப கொஞ்சம்தான்; அதனால, அந்தப் பணத்த வாங்கியிருக்கலாம். ஆனா, சுத்தமான மனசாட்சி பறிபோயிடுமே, கடவுளோடு உள்ள என் பந்தம் முறிஞ்சிடுமே. அதனால, வேலைன்னு வந்துட்டா பைபிளில் எபிரெயர் 13:18-ல இருக்கிற வார்த்தைகள மனசுல வெச்சுக்குவேன்: ‘எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்.’”—ராக்கல், பிலிப்பைன்ஸ். (g12-E 01)
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
நேர்மையாகத் தொழில் நடத்த சில நியமங்கள்
தொழில் தர்மம் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. இருந்தாலும், இதைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிற நியமங்கள் மாறுவதே இல்லை. ஆகவே, அந்த நியமங்களை ஆதாரமாக வைத்து தீர்மானங்கள் எடுப்பது நல்லது. நேர்மையாகத் தொழில் நடத்த உதவும் ஆறு அம்சங்களைக் கவனியுங்கள்:
உண்மை
நியமம்: “ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதிருங்கள்.”—கொலோசெயர் 3:9.
சொல் தவறாமை
நியமம்: “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.”—மத்தேயு 5:37.
நம்பிக்கை
நியமம்: “அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே.”—நீதிமொழிகள் 25:9, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நேர்மை
நியமம்: ‘பரிதானம் [அதாவது, லஞ்சம்] வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கும்.’—யாத்திராகமம் 23:8.
நியாயம்
நியமம்: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” —மத்தேயு 7:12.
சட்டம்
நியமம்: “யாருக்கு வரி செலுத்த வேண்டுமோ அவருக்கு வரி செலுத்துங்கள்.”—ரோமர் 13:7.
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
தொழிலில் எப்போதும் நேர்மையாய் இருக்க...
● எது முக்கியமெனத் தீர்மானியுங்கள். உதாரணத்திற்கு, பணம், பொருள் சம்பாதிப்பது முக்கியமா, கடவுளோடுள்ள பந்தத்திற்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியமா என்பதைத் தீர்மானியுங்கள்.
● முன்கூட்டியே திட்ட மிடுங்கள். உங்கள் நேர்மைக்கு சவால்விடும் சூழ்நிலைகள் எவையென யோசித்துப் பார்த்து, அவற்றை எப்படிச் சமாளிக்கலாமென முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
● தீர்மானத்தைத் தெரிவித்துவிடுங்கள். தொழிலைத் தொடங்குவதற்கு முன்பே, அதில் சம்பந்தப்பட்ட ஆட்களிடத்தில் உங்கள் தீர்மானத்தைச் சாதுரியமாகச் சொல்லுங்கள்.
● மற்றவர்களின் உதவியை நாடுங்கள். குறுக்கு வழியில் போக வேண்டுமென்ற எண்ணம் வந்தால் உங்களைப் போலவே நேர்மையாய் நடக்கிற ஒருவரிடம் ஆலோசனை கேளுங்கள்.
[பக்கம் 8-ன் படம்]
நேர்மையாக நடந்தால் மன நிம்மதி கிடைக்கும்