பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்
“பூமிக்கு எதுவும் ஆகாது. அந்தளவுக்கு அது உறுதியாக இருக்கிறது.”
உலகம் முழுவதும் இருக்கிற ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து வானிலை மாற்றத்தைப் பற்றிப் பேசியபோது இந்த முடிவுக்கு வந்தார்கள். மனிதர்கள்மேல் உயிரையே வைத்திருக்கிற ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால், ஆராய்ச்சியாளர்களின் முடிவைக் கேட்கும்போது, பூமி தன்னைத்தானே சரிசெய்கிற மாதிரி கடவுள் அதை அழகாக வடிவமைத்திருப்பது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம்.
ஆனாலும், மனிதர்கள் இந்தப் பூமியை ரொம்ப நாசம் செய்திருக்கிறார்கள். அதனால், இது தானாகவே சரியாகும் என்று நம்மால் சொல்ல முடியாது. கடவுள் இதைக் கண்டிப்பாகச் சரிசெய்வார் என்று நாம் நம்பலாம். ஏன் அப்படிச் சொல்கிறோம்?
பூமி உயிர்வாழும், அதுவும், செழிப்பாக வாழும் என நம்புவதற்கு இந்தப் பெட்டியில் இருக்கும் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.
நம் பூமியை உருவாக்கியது கடவுள். “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.”—ஆதியாகமம் 1:1
இந்தப் பூமிக்குச் சொந்தக்காரர் கடவுள்தான். “பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான்a சொந்தம்.”—சங்கீதம் 24:1
பூமிக்கு முடிவே இல்லாத மாதிரிதான் கடவுள் அதை உருவாக்கியிருக்கிறார். “அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் அசைக்கப்படாது.”—சங்கீதம் 104:5
பூமியில் உயிரினங்கள் என்றென்றைக்கும் வாழும் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘உண்மையான கடவுள் பூமியை உருவாக்கினார், . . . அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.’—ஏசாயா 45:18
மனிதர்கள் என்றென்றும் இந்தப் பூமியில் வாழ்வார்கள் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29
பூமி தன்னைத்தானே சரிசெய்கிற மாதிரி கடவுள் அதைப் படைத்ததற்குக் காரணம், மனிதர்கள் அதற்கு எந்தக் கெடுதலும் செய்யாமல் அதில் என்றென்றைக்கும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் பூமியைக் கெடுத்து நாசமாக்குகிறவர்களுக்குச் சரியான சமயத்தில் கடவுள் முடிவைக் கொண்டுவருவார் என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18
பைபிள் சொல்கிற மாதிரி, கடவுள் இந்தப் பூமியை அழகான, செழிப்பான பூஞ்சோலையாக மாற்றப்போகிறார். அவருடைய “கையைத் திறந்து, எல்லா உயிர்களின் ஆசைகளையும்” திருப்தி செய்யப்போகிறார்.—சங்கீதம் 145:16
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.