அதிகாரம் 26
கடவுளைத் துதிக்கும் பிள்ளைகள்
உனக்கு ஒரு வாய் ஏன் இருக்கிறது என்று நீ எப்பொழுதாவது சற்று நின்று யோசித்திருக்கிறாயா? அதை நீ எப்படி உபயோகிக்கிறாய்? —
சாப்பிடுவதற்கு நமக்கு வாய் தேவை என்பது நிச்சயமாகவே உண்மை. ஆனால் வாய் சாப்பிடுவதற்கு மாத்திரமே இல்லை. நம்மில் பெரும்பாலோர் ஒரு நாளில் ஒருசில தடவைகள் மாத்திரமே சாப்பிடுகிறோம். ஆனால் பேசுவதற்கு அதைப் பார்க்கிலும் மிக அதிகமாய் உன் வாயை நீ உபயோகிக்கிறாய் என்பது உண்மையல்லவா? — உன் உதடுகள், உன் நாவு, உன் பற்கள், உன் மேல்வாய், இன்னும் அதிகமானவை, ஆகிய எல்லாம் ஒவ்வொரு தடவையும் நீ பேசும்போது ஒரு பாகத்தை நடப்பிக்கின்றன.
உன்னால் பேசமுடியாதென்றால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப்பார். நீ நினைத்துக் கொண்டிருப்பதை எவருக்கும் ஒருபோதும் உன்னால் சொல்ல முடியாதென்றால் எவ்வளவு விசனமாயிருக்கும்! யெகோவா நமக்கு ஒரு வாயைக் கொடுத்ததற்காக நீ சந்தோஷமாய் இருக்கிறாய் அல்லவா? — அவர் நமக்கு ஒரு வாயைக் கொடுத்திருப்பதால், அவரைக் கனப்படுத்தும் ஒரு முறையில் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று நீ ஒப்புக்கொள்ளுகிறாய் அல்லவா? —
இந்த விதமாகவே அரசனாகிய தாவீது உணர்ந்தான். அவன் கடவுளுடைய ஒரு ஊழியனாக இருந்தான். “என் வாய் யெகோவாவின் துதியைச் சொல்லும்,” என்று அவன் சொன்னான். நம்முடைய வாயினால் இப்படிச் செய்வது ஒரு நல்ல காரியம் என்று நீ ஒப்புக்கொள்ளுகிறாயா? — அப்படியானால், அவன் சொன்னதை நாம் இருவரும் சேர்ந்து திரும்பவும் சொல்லலாம்: “என் வாய் யெகோவாவின் துதியைச் சொல்லும்.”—சங்கீதம் 145:21.
தன் வாயை இந்த விதமாய் உபயோகித்த ஓர் இளம் இஸ்ரவேலப் பெண் இருந்தாள். அவள் வாழ்ந்துகொண்டிருந்தபோது, சீரியா தேசமும் இஸ்ரவேல் தேசமும் சத்துருக்களாக இருந்தன. ஒரு நாள் சீரியர் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தஞ்செய்து அந்தச் சிறு பெண்ணைக் கைதியாக எடுத்துக் கொண்டனர். அவள், நாகமான் எனப்பட்ட படைத் தலைவனின் வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். அங்கே அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியானாள்.
நாகமானுக்குக் குஷ்டரோகம் என்ற வியாதி இருந்தது. வைத்தியர் ஒருவரும் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆனால் இஸ்ரவேலிலிருந்துவந்த இந்தச் சிறு பெண் யெகோவாவில் மிகுந்த விசுவாசம் உடையவளாக இருந்தாள். அவர் அதிசயமான காரியங்களைச் செய்யக் கூடுமென்று அவள் அறிந்திருந்தாள். கடவுளுடைய விசேஷித்த ஊழியரில் ஒருவனான ஒரு தீர்க்கதரிசி, நாகமானுக்கு உதவி செய்யக்கூடும் என்று அவள் நம்பினாள். நிச்சயமாகவே, நாகமானும் அவனுடைய மனைவியும் யெகோவாவில் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களுக்கு வேறொரு மதம் இருந்தது. இந்தச் சிறு பெண் தனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்ல வேண்டுமா? ஒருவேளை அவர்களுக்கு அதைக் கேட்கவுங்கூட மனமிராது. நீ என்ன செய்திருப்பாய்? —
தான் பேசவேண்டுமென்று அவள் அறிந்திருந்தாள். அதுவே அன்பான காரியமாக இருக்கும். கடவுள் பேரிலுள்ள அவளுடைய அன்பை அது காட்டும். ஆகவே அவள் பின்வருமாறு சொன்னாள்: ‘இஸ்ரவேலில் இருக்கும் யெகோவாவின் தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரம் நாகமான் போவாரானால் நலமாயிருக்கும். அப்படிச் செய்வாரானால், தன்னுடைய குஷ்டரோகத்திலிருந்து அவர் சுகமடையக்கூடும்.’
நாகமான், தான் சுகப்படுத்தப்பட வேண்டுமென்று மிக அதிகமாய் விரும்பினான். ஆகவே அவன் அந்தப் பெண்ணுக்குச் செவி கொடுத்தான். அவன் யெகோவாவின் தீர்க்கதரிசியினிடத்தில் சென்றான். அந்தத் தீர்க்கதரிசி அவனுக்குச் சொன்னதை அவன் செய்தபோது, அவன் சுகமடைந்தான். இது நாகமானை மெய்க் கடவுளின் வணக்கத்தானாகும்படி செய்தது. இஸ்ரவேலிலிருந்து வந்த அந்தச் சிறு பெண் யெகோவாவைத் துதிப்பதற்குப் பயப்படாமல் இருந்ததற்காக அவன் எவ்வளவு சந்தோஷமுள்ளவனாக இருந்திருப்பான்!—2 இராஜாக்கள் 5:1-15.
அந்தச் சிறுபெண் செய்ததுபோல் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்படி யாருக்காவது உதவி செய்ய உனக்குப் பிரியமா? — யாருக்கு நீ உதவி செய்யக்கூடும்? —
நிச்சயமாகவே, முதலில், அவர்கள் தங்களுக்கு உதவி தேவை என்று ஒருவேளை நினைக்கமாட்டார்கள். ஆனால், யெகோவா செய்கிற நல்ல காரியங்களைப்பற்றி நீ அவர்களிடத்தில் பேசலாம். அவர்கள் ஒருவேளை செவிகொடுப்பார்கள். நீ செய்வதுபோல அவர்கள் யெகோவாவை நேசிக்கிறவர்களாக ஆகிவிடுவார்களேயானால் எவ்வளவு நன்றாயிருக்கும் அல்லவா? — யெகோவாவைத் துதிப்பதற்கு நீ உன் வாயை உபயோகிக்கையில் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கின்றன.
தீமோத்தேயு என்ற பெயரையுடைய ஒரு வாலிபனைப் பற்றியுங்கூட பைபிள் சொல்லுகிறது. அவனுடைய தகப்பன் யெகோவாவில் நம்பிக்கையுள்ளவனாக இருக்கவில்லை. ஆனால் அவனுடைய தாய் நம்பிக்கையுள்ளவளாக இருந்தாள். அவனுடைய பாட்டியம்மாவும் அப்படி இருந்தார்கள். தீமோத்தேயு அவர்களுக்குச் செவிகொடுத்தான். அவன் மிகவும் சிறியவனாய் இருந்த காலத்திலிருந்தே பைபிளை அறிந்திருந்தான். யெகோவாவைத் துதிப்பதற்கு நாம் பைபிளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவரைப்பற்றி நமக்குச் சொல்வது பைபிளே.
தீமோத்தேயு பெரியவனாக வளர்ந்தபோது, அவன் ஒரு சிறந்த வாலிபனானான். ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனாகிய பவுல், தீமோத்தேயு வாழ்ந்து வந்த பட்டணத்துக்கு வந்தான். தீமோத்தேயு எவ்வளவாய் யெகோவாவைச் சேவிக்க விரும்பினான் என்பதை அவன் கவனித்தான். ஆகவே இன்னும் பெரிதான ஒருமுறையில் கடவுளைச் சேவிப்பதற்குத் தன்னுடன் வரும்படி அவன் இந்த வாலிபனை அழைத்தான். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மற்ற இடங்களுக்குப் பிரயாணப்பட்டனர். எங்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அவர்கள் ஜனங்களுக்குச் சொல்லிவந்தார்கள்.—அப்போஸ்தலர் 16:1-5.
கடவுளை எப்படித் துதிப்பது என்பதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுலினிடத்திலிருந்து தீமோத்தேயு அதிகம் கற்றறிந்தான். பெரிய ஜனக் கூட்டங்களுக்குப் பவுல் பேச்சுகள் கொடுப்பதை அவன் கண்டான். வீடுகளில் இருப்பவர்களுக்குப் பிரசங்கிக்கும்படியாகப் பவுல் ஜனங்களின் வீடுகளுக்குச் செல்வதையும் அவன் பார்த்தான். ஆனால் தீமோத்தேயு வெறுமென கவனித்துப் பார்த்துக் கொண்டுமட்டும் இருக்கவில்லை. அவன் அந்த வேலையில் பங்குகொண்டான். பவுல் சொன்னபிரகாரம், ‘நான் செய்துகொண்டிருக்கிறது போலவே, தீமோத்தேயுவும் யெகோவாவின் வேலையைச் செய்துகொண்டிருக்கிறான்.’—1 கொரிந்தியர் 16:10.
கடவுளைப் பற்றித் தீமோத்தேயு பேசினபோது எல்லோரும் அதை விரும்பவில்லை. ஆனால் அவன் அதை விட்டுவிடவில்லை. நான் வீட்டுக்குப் போய்விட விரும்புகிறேன் என்று அவன் சொல்லவில்லை. யெகோவாவின் துதியைப் பேச தன் வாயை தான் உபயோகிக்கக் கூடியவனாக இருந்ததற்காக அவன் சந்தோஷமாயிருந்தான்.
இது பெரிய ஆட்கள் மாத்திரமே செய்யவேண்டிய ஒன்று என்பதாகச் சிலர் சொல்லக்கூடும். ஆனால் நீ அதை நம்புகிறாயா? — அப்படியில்லை என்று பெரிய போதகர் அறிந்திருந்தார். ஒரு நாள், சிறு பையன்கள் கடவுளைத் துதிப்பதை நிறுத்திவைக்க சில ஆட்கள் பிரயாசப்பட்டபோது, இயேசு “சிறுபிள்ளைகளின் வாயிலிருந்து துதி வெளிப்படும்,” என்று “வேத எழுத்துக்களில் நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையா?” என்று சொன்னார்.—மத்தேயு 21:16.
நமக்கு உண்மையில் விருப்பம் இருக்குமானால் நாம் எல்லோரும் யெகோவாவைத் துதிக்கக்கூடும். இது கடினமானதல்ல. கடவுள் நமக்கு ஒரு வாயைக் கொடுத்திருக்கிறார், அதைக்கொண்டு நாம் பேசலாம். நாம் துதிக்கத் தொடங்குவதற்கு முன்பாக பைபிளைப் பற்றிய எல்லாவற்றையும் நாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நாம் ஏற்கெனவே கற்றிருக்கிறவற்றை நாம் வெறுமென மற்றவர்களுக்குச் சொல்லலாம். இதைச் செய்ய உனக்குப் பிரியமா? —
(இளைஞர்கள் கடவுளைச் சேவிக்கும்படி, உற்சாகப்படுத்தும் வேறு வேத வசனங்கள் சங்கீதம் 148:12, 13; பிரசங்கி 12:1; 1 தீமோத்தேயு 4:12 ஆகியவை.)