அதிகாரம் 20
திருமணத்தில் நீ வெற்றி காணக்கூடுமா?
நீ மணம் செய்துகொள்ள விரும்புகிற அந்தச் சமயம் வருகையில், உன் திருமணம் வெற்றிகரமாயிருக்க நீ விரும்புவது இயல்பே. உச்ச அளவாய்ப் பெருகிக் கொண்டுபோகும் விவாகரத்துவின் விகிதத்தைக் கொண்டு தீர்ப்பு செய்தால், உன் எதிர்பார்ப்புகள் வெகு நல்லவையாக இல்லை என்றே தோன்றலாம். சில இடங்களில் விவாக ரத்துக்களின் எண்ணிக்கை திருமணங்களின் எண்ணிக்கையை எட்டிக் கொண்டிருக்கிறது! நீ மணம் செய்தால், பிரச்னைகள் உன் மண வாழ்க்கையின் சந்தோஷத்தைக் கெடுத்துப் போடுவதை நீ எப்படித் தடுத்து வைக்கக்கூடும்.
2 முதல் திருமணத்தை ஆழ்ந்து கவனிப்பது, பிரச்னைகளின் பேரில் அவற்றைத் தீர்க்கும் வழிகளின் பேரிலும் உனக்கு அதிக விளக்கமளிக்கக்கூடும். திருமணம் மனிதனால் தொடங்கப்பட்டதென்றும், ஏதோவொரு வழிவகையில் பூர்வத்தில் மனிதரால் இது ஏற்பாடு செய்யப்பட்டதென்றும் பலர் நம்புகின்றனர். ஆனால் இந்த எண்ணமே இன்றைய படுமோசமான குடும்ப நிலைகுலைவுக்கு வேராக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் மணவாழ்க்கைப் பிரச்னைகளின் பேரில் கொடுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆலோசனையை இது முக்கியமல்லாததென்று ஒரு புறம் தள்ளிவிடுகிறது.
3 திருமணம் உண்மையில் மிக உயர்ந்த இடத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள கடவுள் தாமேயும் அந்த முதல் மனிதனையும் மனுஷியையும் படைத்து, மக்களைப் பிறப்பிக்கும் வல்லமைகளை அவர்களுக்குத் தந்து, அவர்கள் இருவரையும் திருமணத்தில் ஒன்றாக இணைத்தார். மேலும் திருமணத்தை எப்படி வெற்றிகரமாக்குவது என்பதன் பேரிலும் கடவுள் அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார்—இவை பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டளைகளைக் கவனமாகப் பின்பற்றுவதே நீ மணம் செய்கையில் உனக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரும்.
4 மக்கள் வெகு காலமாக பைபிளை வைத்திருக்கின்றனர், என்றபோதிலும் அவர்களுடைய திருமணங்கள் தோல்விகளாகவே இருந்திருக்கின்றன என்று சொல்லி, சிலர் மறுத்து கூறலாம். விவாகரத்துவின் எண்ணிக்கை கூடிக்கொண்டுவருவதன் காரணமானது, ஒரு சில தம்பதிகளே சந்தோஷமற்ற மணவாழ்க்கையைச் சகித்துப் பொறுத்துப்போக மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்று அவர்கள் சொல்லுகின்றனர். இந்த விவாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது. சந்தோஷமற்ற இலட்சக்கணக்கான தம்பதிகள் மெய்யாகவே பைபிளை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை வாசித்திருக்கிறார்களா? அதற்கும் மிக முக்கியமாக, அதன் நியமங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகித்திருக்கிறார்களா? சிக்கலற்ற எளிய உண்மை என்னவென்றால், பைபிளின் ஆலோசனை ஏற்கெனவே இலட்சக்கணக்கான தம்பதிகளுக்குத் தங்கள் குடும்பப் பிரச்னைகளை வெற்றிகரமாய்க் கையாள உதவி செய்திருக்கிறது என்பதே. உனக்குச் சந்தோஷமான மணவாழ்க்கை வேண்டுமென்றால், அது உனக்குங்கூட உதவி செய்யக்கூடும்.
மண வாழ்க்கையில் பால் சம்பந்த இன்பமனுபவிப்பு
5 பால் ஈடுபாடே பல மண வாழ்க்கைப் பிரச்னைகளின் வேராக இருக்கிறதென்று சொல்லப்படுவதை நீ ஒருவேளை கேட்டிருக்கலாம், இது உண்மையே. இது பெரும்பாலும் செய்தி விளம்பரப்படுத்துகிறவர்கள் மெய்ம்மையல்லாத கற்பனைக் கருத்துக்களைத் திட்டமிட்டுப் பரப்புவதன் காரணமாகவேயாகும். பலர் விரும்பும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஓடும் படங்கள் ஆகியவை தம்பதிகள் “காதலித்து” “பின்பு எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்தலைப்” பற்றியே கருத்து உட்படுத்திக் காட்டுகின்றன. இலக்கியங்களுங்கூட பால் சம்பந்த இன்பங்களையே முனைப்பாகத் தோன்றி நிற்கச் செய்கின்றன. இவ்வாறு பெரும்பாலும் மெய்ம்மையான நிறைவேற்றத்திற்கும் மேலாக எதிர்பார்ப்புகளை எழுப்புகின்றன. உதாரணமாக, ஓர் இளம் மனைவி பின்வருமாறு விளக்கினாள்: “பாலுறவானது, ஒரு பின்பால் பொறியைப் போல் உலக முழுவதையும் வெளிச்சமாக்குகிற ஏதோ கற்பனை விளையாட்டாக இருக்கும்படி நான் விரும்பினதாகத் தெரிகிறது. என் கருத்து என்னவென்றால், அதெல்லாம் சரிதான் ஆனால் ‘இருப்பதெல்லாம் இதுதானா? எல்லாம் உண்மையில் இது தானா?’ என்று நான் தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தேன்.”
6 இளைஞனாக நீ அநேகமாய் மணமாகாதவனாக[ளாக] இருக்கிறாயென்றாலும், இந்த இளம் மனைவியின் பிரச்னையைக் காண்கிறாயா? அவளுடைய மிதமீறிய அக்கறை தன்னுடைய சொந்த பால் சம்பந்த இன்பமாக இருந்தது, மேலும் அவள் திருப்தியடையாதவளாக இருந்தாள். இதுவே—அதாவது, தங்கள் கணவன்மார் பால் சம்பந்தமாய்த் தங்களைத் திருப்தி செய்கிறதில்லை என்பதே—பல பெண்களின் மனக்குறையாக இருக்கிறது. இப்படிப்பட்ட காரியத்தில், ஒரு மனைவி என்ன செய்யக்கூடும்? உதவியான எதையாவது பைபிள் சொல்லுகிறதா? அது கொடுக்கிற ஒளிவு மறைவில்லாத ஊக்கமூட்டுதலைக் கவனியுங்கள்: “கணவன் தன் மனைவிக்கு அவளுக்குரிய கடனைச் செலுத்தக்கடவன்; மனைவியுங்கூட அவ்வாறே தன் கணவனுக்குச் செய்யக்கடவள். இருவரும் ஒருமிக்கச் சம்மதித்தால் தவிர, ஒருவருக்கொருவர் அதைக் கொடாமல் விலக்கி வைத்துக் கொள்ளாதிருங்கள்.”—1 கொரிந்தியர் 7:3, 5, NW.
7 நீ மணம் செய்து கொள்வாயானால் இந்தப் பைபிள் ஆலோசனையின்படி, முக்கியமாய் யாரைப் பிரியப்படுத்துவதில் நீ அக்கறையுள்ளவனாக[ளாக] இருக்கவேண்டும்? முன் குறிப்பிடப்பட்ட அந்த மனைவியின் முக்கிய அக்கறை இருந்ததைப்போல் உன்னைத்தானேயா? இல்லை, அதற்கு மாறாக உன் துணைவனை அல்லது துணைவியையே பிரியப்படுத்துவதில் முதல் அக்கறை கொண்டிருக்கவேண்டும். இங்கேயுள்ள பைபிளின் அடிப்படையான நியமமானது கொடுப்பதேயாகும். உன்னுடையதல்ல உன் திருமணத் துணையின் சுகநலமும் இன்பமுமே சரியாய் முதலாவதாக வரவேண்டும். இது பின்வரும் மேலுமான பைபிள் நியமங்களுக்கு இசைய இருக்கிறது: “ஒவ்வொருவனும் தன் சுய பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” “அன்பு . . . தற்பொழிவை [தனக்கானதை, தி.மொ.] நாடாது.”—1 கொரிந்தியர் 10:24; 13:4, 5.
8 ஆனால், “நான் மணம் செய்கையில், என் மனைவியை அல்லது என் கணவனைப் பிரியப்படுத்தும்படி, தேடுவது என்னுடைய திருப்தியை எப்படி அதிகரிக்கக்கூடும்?” என்று நீ ஒருவேளை கேட்கலாம். திருமணம் சார்ந்த கூட்டுறவை அனுபவித்து மகிழ்வது பெரும்பாலும் மனதின் பேரிலும் இருதயத்தின் பேரிலுமே சார்ந்திருக்கிறது. இவ்வாறாக, பாலுறவை உன் கணவனுக்குக் காட்டும் ஆழ்ந்த அன்புக்குரிய ஒரு வாய்ப்பாக நீ கருதுவாயானால், அநேகமாய், ஒரு பக்கப்பலனாக, இந்த உறவை ஓர் உயர்ந்த அளவில் அனுபவித்து மகிழ்வதாய்க் காண்பாய். ஒரு மனைவியின் மனம் முக்கியமாய் தன் சொந்த உணர்ச்சிகளின்பேரில் தங்கியிராதபோது, அவள் பெரும்பாலும் தளர்ந்த நிலையில் இருக்கிறாள், அப்பொழுது இயல்பான விளைவாக, இந்த மண வாழ்க்கைச் செயலில் அவள் உண்மையில் விரும்புகிற அந்தத்தனிப்பட்ட இன்பத்தை அவள் கண்டடையக்கூடும்.
9 தன்னைத்தானே கொடுப்பது, அதன் முறையாக ஒருவருக்குத் திருப்தியைக் கொண்டுவருமென்று, பூமியில் நடமாடினவரில் மிகப் பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்து காட்டினார். “வாங்குவதில் இருப்பதைப் பாக்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது,” என்று அவர் சொன்னார். மிக நெருங்கிய மண உறவுகள் சம்பந்தமாக இந்த நியமம் பல முறைகளில் உண்மையாய் நிரூபித்திருக்கிறது.—அப்போஸ்தலர் 20:35, NW.
10 நீ மணம் செய்கையில், பைபிளின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பது ஏன் உன்னுடைய சொந்த திருப்திக்கேதுவாகப் பெரும்பாலும் செயல்படுகிறதென்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. வேறு எதற்கும் மேலாக இதுவே உன்னுடைய கணவன் அதிக அன்பாதரவுடன் உன்னுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் எண்ணம் செலுத்தி, உன்னிடமாகத் தன்னலமற்றவனாய் நடக்க அவனைத் தூண்டுவிக்கும். பல திருமணங்களில் இது இவ்வாறு நடந்திருக்கிறது. கொடுப்பதில் முந்திக்கொள்கிறவர் அதே வகையில் திரும்பப் பெற்றுக்கொள்வர். இவ்வாறாக, ஒருவருக்கொருவர் மணவாழ்க்கைக் கடன்களைச் செலுத்துவதில் தன்னலமற்றத் தன்மையையும் அன்பையும் காட்டும்படி பைபிள் தூண்டி ஊக்கப்படுத்துகிறது. இதை நினைவில் வைத்துக்கொள், நீ திருமணம் செய்துகொள்வாயானால் இது சந்தோஷமான உறவுக்கு ஏதுவாக உனக்கு உதவி செய்யும்.
11 தங்கள் மனைவிகள் தகுதியான பாலுறவு துணைவர்களாக இருக்க முடியாத அளவில் வெகுவாய்க் “கிளர்ச்சியற்றவர்களாக” இருக்கின்றனரென்று கணவர்கள் அடிக்கடி முறையிடுவதை நீ ஒருவேளை கேட்டிருக்கலாம். பெரும்பாலும் இதற்குக் காரணமான தொந்தரவு எங்கே இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா? பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” (எபேசியர் 5:28, 29) ஆம், இங்கே பைபிள் சொல்லும் இதற்குக் கணவன் செவிகொடுக்கத் தவறுவதிலேயே பெரும்பாலும் தொந்தரவு அடங்கியிருக்கிறது.
12 தங்கள் கணவரால் நேசிக்கப்படுவது பெண்களுக்கு உண்மையில் தேவையாயிருக்கிறதா? நிச்சயமாகவே அவர்களுக்குத் தேவை. திருமண ஆலோசனை கூறுபவர்கள் அடிக்கடி இதை அறிவுறுத்துகிறார்கள். இது அடிப்படையான ஒரு சத்தியம்: மனைவிகள் உண்மையில் சந்தோஷமாய் இருப்பதற்குத் தாங்கள் நேசிக்கப்படுகிறார்களென்று அவர்கள் உணருவது அவசியம். ஆகையால் நீ திருமணம் செய்து கொள்வாயானால், அனலான நெருங்கிய மண உறவுக்கு முக்கியமானது, நேசிக்கப்படும்படியான உன் மனைவியின் இந்தத் தேவையை நீ நிரப்புவதே என்பதை நினைவுபடுத்திக்கொள். பைபிள் கணவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுகிறது: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னில் அன்புகூருகிறதுபோல் தன் மனைவியிலும் அன்புகூரக்கடவன்.”—எபேசியர் 5:33.
13 என்றபோதிலும், பொருள் சம்பந்தமாய் உன் மனைவியைப் பராமரித்து வருவது உன் அன்புக்குப் போதிய அத்தாட்சியாக இருக்குமென்று நீ ஒருவேளை உணருவாய். ஆனால் பாசம் வெளிப்படுத்திக் காட்டப்படாமல் இருந்தால் அது அவளை எவ்வாறு பாதிக்கும்? ஒரு மனைவியிடமிருந்து வந்த பின்வரும் இந்தக் கடிதம் உனக்கு ஓரளவான அபிப்பிராயத்தைக் கொடுக்கலாம். அவள் எழுதினதாவது: “இதுவே என் பிரச்னை: சிறிது இனிமையான ஒரு பேச்சுக்கு, ஒரு நேசப்புகழ்ச்சிக்கு, நான் சமைக்கையில் என் இடுப்பைச் சுற்றி அவருடைய புயத்தை உணரும் உணர்ச்சிக்கு—அல்லது அவருடைய மடியில் உட்காருவதற்கான ஒரு வாய்ப்புக்கு ஆ, நான் எவ்வளவு பசியாயிருக்கிறேன். ஒரு பாசமுள்ள நெருங்கிய அணைப்புக்குக் கைம்மாறாக எனக்குண்டான எல்லாப் பொருட்களையும் நான் கொடுத்துவிடுவேன்.”
14 ஆம், மனைவிகளுக்கு அன்பு காட்டப்பட வேண்டும். அதைப் பெறுகையில் அவர்கள் மலர்ச்சியடைந்து, அதிக திருப்தியும், மேலும் உடல் சம்பந்தமாயும் அடிக்கடி இன்னும் மிகுந்த கவர்ச்சிகரமாயும் ஆகிறார்கள். அன்புக்கான இந்தத் தேவையுடன் அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கள் மனைவிகளை நேசிக்கும்படி கடவுள் கணவர்களுக்குக் கட்டளையிடுகிறார். இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கத் தவறுவதானதே இன்று மணவாழ்க்கைப் பலவற்றில் காணப்படும் சந்தோஷமில்லாமைக்கு முக்கிய காரணம். ஏன் அப்படி?
15 தன்னுடைய கணவனின் கனிவும் பாசமும் இல்லாமல் ஏக்கத்திற்குள்ளாக்கப்படுகிற ஒரு மனைவி தன் பெண்மையைக் குறித்ததில் அநேகமாய்ப் பாதுகாப்பற்ற நம்பிக்கையில்லாத உணர்ச்சியுள்ளவளாகக்கூடும். தன் கணவனிடமாக அவளுக்கு ஒருவேளை மனக்கசப்புங்கூட வளர்ந்துகொண்டு போகலாம், தன்னைக் கவனியாதிருப்பதற்குப் பழிக்குப்பழி வாங்குபவளாய்த் தானும் நடந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் தன்னையறியாமலே அவளுக்கு உண்டாகலாம்.
16 நீ மணம் செய்துகொள்ளும் பெண்ணை அன்புடனும் கனிவுடனும் நடத்துவது ஆண்மையில்லாமையாக இருக்குமென்று நீ ஒருவேளை உணரலாம். முரட்டுத்தனமான முறையில் தாங்கள் நடத்தப்படுவதைப் பெண்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுவதையுங்கூட நீ கேள்விப்பட்டிருப்பாய். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் ஒரு பெண், கடுமையாயும் வற்புறுத்திக் கேட்கிறவனாயும் இருக்கிற ஒருவனுக்கல்ல, தயவாயும் அன்பான யோசனையுடனும் நடத்துகிறவனுக்கே ஆதரவாய்ப் பிரதிபலிக்கும்படி கடவுளால் திட்டமிட்டமைக்கப்பட்டாள் என்பதை அவளுடைய கணவன் மதித்துணர தவறுகிறானென்றால், மனைவிக்குப் பாலுறவுகள் திருப்தியற்றதாயும், வெறுப்புண்டாக்குவதாயுங்கூட இருக்கக்கூடும்.
17 கணவர்கள் அத்தனை அநேக பிழையான எண்ணங்களை எதிர்ப்படுகிறவர்களாய் இருப்பதனால், தங்கள் மனைவிகளை எப்படி நேசிப்பது என்பதன் பேரில் அவர்களுக்குக் கட்டளைகள் தேவை என்று சிருஷ்டிகர் உணர்ந்தார். அதன் காரணமாகவே அவர், அவர்களைக் கனிவாயும் அன்பான யோசனையுடனும் இருக்கும்படி ஊக்கப்படுத்துகிறவராய்ப் பின்வருமாறு கூறினார்: “புருஷர்களே, ஸ்திரீ ஜாதி பலவீன பாண்டமென்றறிந்து நீங்கள் விவேகமுள்ளவர்களாய் அவர்களோடு [மனைவிகளுடனே] வாழ்ந்து . . . அவர்களுக்குரிய கனத்தைச் செலுத்துங்கள்.”—1 பேதுரு 3:7, தி.மொ.
18 பாலுறவுகளுக்கு வருகையில், ஒரு கணவன் இந்த அறிவுரைகளுக்குச் செவிகொடுப்பது விசேஷமாக முக்கியமாய் இருக்கிறது. கடவுள் பெண்ணை எவ்வாறு உண்டாக்கினார் என்பதைப் பற்றிய அறிவுக்கேற்ப அவன் நடக்க வேண்டும். உடலின் பிரகாரமாய் அவர்கள் பொதுவாய் ஆண்களைப்போல் அவ்வளவு பலமுள்ளவர்களல்ல. மேலும் உணர்ச்சி வேகத்தைக் குறித்ததில் அவர்கள் பொதுவாய் ஆண்களைப் பார்க்கிலும் அதிக கூருணர்வுடையவர்களாயும் உணர்ச்சிக் கனிவு கொண்டவர்களாயும் இருக்கிறார்கள். ஆகையால் மனைவிகளுக்குப் பலவீன பாண்டமென்று கனத்தைக் கொடுக்கும்படி, அவர்களுடைய உணர்ச்சி வேக அமைப்பு, குறைபாடுகள், நிலைமாற்றங்கள் ஆகியவற்றைக் குறித்ததில் மரியாதையுள்ளவர்களாயிருக்கும்படி கடவுள் கணவர்களுக்குச் சொல்லுகிறார்.
மற்றப் பிரச்னைகளைத் தீர்த்தல்
19 திருமணத்தில் கடவுளுடைய கட்டளைகள் பொருத்திப் பிரயோகிக்க வேண்டியதில் பால் சம்பந்தப்பட்டது உண்மையில் வெறும் ஒரு சிறிய பகுதியேயாகும். நீ மணம் செய்து கொள்கையில், உன்னுடைய மனைவியின் மாதவிடாய்ச் சார்ந்த சுழற்சி சில சமயங்களில் ஒருவேளை அவளை, உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றின் பிரகாரமாய் மாறாகப் பாதிக்கலாமென்பதை நீ தெரிந்திருக்கவேண்டும். அப்பொழுது அவள், தான் சாதாரணமாய் நடவாத முறையில் பேசவோ காரியங்களைச் செய்யவோகூடும். இதை நீ கவனத்தில் வைத்து, அவள் எப்போதாவது வெடுக்கென்று கோபமாய்ப் பேசி, எண்ணாது துணிச்சலாகக் காரியங்களைச் செய்கிறாளென்றால் நீ எளிதில் புண்படாமலிருந்து, அவளைத் தொடர்ந்து அன்புடன் நடத்த வேண்டும்.
20 என்றபோதிலும் இன்னுமதிகம் உட்பட்டிருக்கிறது. வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ஒத்துழைப்பும் பேச்சுத்தொடர்பும் தேவைப்படுகிறது. இதை அடைய கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய தெளிந்துணர்வு உனக்கு உதவி செய்யும். ஆணும் பெண்ணும் ஓரளவு வெவ்வேறுபட்ட பண்பியல்புகளுடனும் பொறுப்புகளுடனும் படைக்கப்பட்டார்களென்றும், அவர்கள் ஒன்றுபடுவது அவர்கள் இருவருடைய சந்தோஷத்துக்கேதுவாக உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு அவ்வாறு படைக்கப்பட்டார்களென்றும் பைபிள் காட்டுகிறது. மனிதனைப் படைத்த பின்பு சிருஷ்டிகர் பின்வருமாறு கூறினார்: “அவனைப் பூர்த்திச் செய்யும் ஒன்றாக, அவனுக்கு ஒரு துணையை நான் உண்டாக்கப்போகிறேன்.”—ஆதியாகமம் 2:18, NW.
21 இவ்வாறு இந்த இருவரும் ஒன்றாக இணைந்துபோகும்படி சிருஷ்டிக்கப்பட்டார்கள், அவர்களுடைய பண்பியல்புகள் ஒன்றோடொன்று சரியீடு செய்பவையாக அல்லது இணைந்து முழுமையாக்குபவையாக இருந்தன. ஒவ்வொருவரும் அந்த மற்றவர் நிரப்ப வேண்டிய ஒரு தேவையோடு படைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு பெண் தன்னுடைய கணவனுக்கு ஒரு துணையாக உண்டாக்கப்பட்டாள், இந்த வாழ்க்கைப் பங்குக்கு இசைவாக பைபிள் பின்வருமாறு கட்டளையிடுகிறது; “மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்களாக . . . ஏனென்றால் கணவன் தன் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” மேலுமாக: “மனைவி தன் கணவனிடம் ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்கவேண்டும்,” என்றுங்கூட பைபிள் சொல்லுகிறது. (எபேசியர் 5:22, 23, 33 NW) இது நடைமுறைக்குரியதாய் இருக்கிறது, எப்படியெனில் குடும்பத்தில் தன் மனைவியின் மரியாதையைப் பெறுகிற தலைவன் இல்லையென்றால், அங்கே சாதாரணமாய் ஒற்றுமையில்லாமையும் குழப்பமுமே இருக்கும்.
22 இன்று பெண்கள் ஆண்களோடு வலுச்சண்டைக்குப் போவதும், போட்டியிடுவதும் சாதாரண காரியமாகிவிட்டிருக்கிறது, இந்தப் பண்பியல்கள், குடும்பப் பிரச்னைகளுக்கு ஒரு மூலகாரணமாக இருப்பதாய் திருமண ஆலோசனை கூறுபவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆகையால் நீ திருமணம் செய்துகொள்கையில், பைபிள் நியமத்தைப் பொருத்திப் பிரயோகிப்பாயானால் ஞானமுள்ளவளாக இருப்பாய். உன் கணவன், தான் செய்யவேண்டிய பிரகாரம், தலைமைத்தாங்கத் தவறுகிறானென்றால், உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: குடும்பத்தில் அவர் தன்னுடைய சரியான பாகத்தை வகிப்பதற்கு அவரை ஊக்குவிக்க நான் மேலுமதிகம் செய்யக்கூடுமா? அவருடைய ஆலோசனைகளுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் நான் கேட்கிறேனா? தலைமைத் தாங்கி வழி நடத்துவதற்காக அவரை நோக்கியிருக்கிறேனென்று நான் தெரிவிக்கிறேனா? அவர் சொல்வதைச் சிறுமைப்படுத்திப் பேசுவதை நான் தவிர்க்கிறேனா? சின்னஞ்சிறிய வழிகளில் தீர்மானங்களைச் செய்ய அல்லது குடும்ப விவகாரங்களில் தலைமைத் தாங்க அவர் மனமுள்ளவராகத் தன்னைக் காட்டுகையில், அதற்காக நன்றி மதித்துணர்வை நான் வெளிப்படுத்துகிறேனா?
23 என்றாலும், முக்கியமாய், ஆண் பைபிள் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் மண வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதற்கான நிலையில் இருக்கிறான். நீ மணம் செய்துகொள்வாயானால் இதை மனதில் வை. அப்பொழுது நீ, கணவனாக, குடும்பத்தின் தலையாக இருப்பாயென்றாலும், அது உன்னை ஒரு சர்வாதிகாரியாக்குகிறதில்லை. இல்லை, ஏனெனில் கணவர்கள் தங்கள் மனைவிகளை, “கிறிஸ்து [கிறிஸ்தவ] சபையில் அன்பு கூர்ந்து தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்ததுபோல,” நேசிக்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. (எபேசியர் 5:25, தி.மொ.) ஆகவே, பைபிளின் ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம், நீ திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்காக, அன்புடனும் மனப்பூர்வமாயும் தியாகங்களை செய்வாய். தீர்மானங்களைச் செய்வதற்கு முன்பாக அவளுடைய கருத்துக்களையும் கலந்தாலோசித்து அவளுடைய விருப்பு வெறுப்புகளுக்கு நீ கவனம் செலுத்துவது, மேலும் தொந்தரவுக்கேதுவான பிரச்னை நிலை எதுவும் இல்லையென்றால் அவள் விரும்புவதைத் தெரிந்து கொள்ளும்படியுங்கூட சலுகையளிப்பது நல்லது. இவ்வகையில் நீ பைபிள் கட்டளையிடுகிறபடி அவளுக்கு அன்பையும் கனத்தையும் காட்டுவாய்.
24 உன் திருமணத்துக்கான சமயம் வருகிறபோது, இவ்வாறு கடவுளுடைய ஆலோசனைக்குச் செவிகொடுப்பதன் மூலம், நீ உன் மணவாழ்க்கையில் சமாதானத்தையும் பொருந்திய இசைவையும் அனுபவித்துக் களிப்பாய். அது உண்மையாய் வெற்றிகரமாயிருக்கும் இந்தச் சிறப்பான ஏற்பாடு மனிதவர்க்கத்துக்குக் கொண்டு வரும்படியாக நம்முடைய சிருஷ்டிகர் நோக்கங்கொண்டதன் நிறைவேற்றத்திலும் திருப்தியிலும் பலனடையும்.
[கேள்விகள்]
1-4. (எ) ஒருவர் தன் திருமணம் வெற்றிகரமாயிருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்புகளைப் பற்றி அக்கறை கொள்வதற்கு ஏன் நல்ல காரணம் இருக்கிறது? (பி) திருமணத்தில் வெற்றி காண்பதற்கு அதன் தொடக்கத்தைப் பற்றி எதை மதித்துணர வேண்டும்? ஏன்? (ஆதியாகமம் 2:21-24; மத்தேயு 19:4-6)
5-10. (எ) பால் சம்பந்த இன்பமனுபவிப்பைக் குறித்ததில் எந்த மெய்ம்மையல்லாத கற்பனைக் கருத்தைப் பல மக்கள் கொண்டிருக்கின்றனர்? (பி) தன்னலமற்ற கொடுத்தலைப் பற்றிய பைபிள் ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பது எப்படித் தம்பதிகள் மண வாழ்க்கையின் இந்த அம்சத்தில் திருப்தியை கண்டடையும்படி உதவி செய்யும்?
11-15. (எ) அன்புள்ள கவனம் வேண்டியதாயுள்ள மனைவியின் இந்தத் தேவையைப் பற்றி எதிர்கால கணவன் எதை மதித்துணர வேண்டும்? (பி) இதைக் குறித்ததில் கணவனின் பொறுப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
16-18. (எ) பெண்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஆண்கள் சிலர் என்ன தப்பெண்ணத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்? (பி) 1 பேதுரு 3:7-ல் உள்ள இந்த அறிவுரையின் கருத்தென்ன?
19. தாங்கள் ஒன்றாகச் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் உடலமைப்பைப் பற்றிய வேறு எதையும் ஓர் ஆண் கவனத்தில் வைக்க வேண்டும்? (கொலோசெயர் 3:12-14)
20-24. (எ) திருமணத்தில் என்ன பாகத்தை வகிப்பதற்குத் தகுந்த பண்பியல்புகளுடன் கடவுள் பெண்ணைப் படைத்தார்? (பி) தன் கணவனுடைய தலைமை வகிப்புக்குத் தான் உண்மையில் மரியாதை கொடுக்கிறாளென்று ஒரு மனைவி எப்படிக் காட்டக்கூடும்? (சி) உண்மையில் அன்புள்ள ஒரு குடும்பத் தலைவனாக இருக்க கணவன் பங்கில் என்ன தேவைப்படுகிறது?
[பக்கம் 161-ன் படம்]
மனைவி மகிழ்ச்சியுடனிருக்க தான் நேசிக்கப்படுகிறாள் என்று உணர வேண்டும்
[பக்கம் 164-ன் படம்]
உன் துணைவர் பேசும்போது அதற்கு உண்மையான கவனம் செலுத்துவது மகிழ்ச்சியுள்ள விவாகத்திற்கு மிகவும் அவசியம்