அதிகாரம் 4
ஆழ்ந்த மரியாதையைப் பெறுகிற கணவன்
உங்களுக்கு மரியாதை கொடுக்கும்படி எவருக்காவது வெறுமென கட்டளையிடுவதனால் மரியாதையை நீங்கள் பெற முடியாது. நீங்கள் பேசும் விதம், நடந்துகொள்ளும் முறை, நீங்கள் உண்மையில் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் ஆகியவற்றினாலேயே நீங்கள் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்.
2 கிறிஸ்து இயேசுவின் காரியத்தில் இது விளக்கமாகக் காட்டப்படுகிறது. தம்முடைய கற்பிக்கும் முறையினால் அவர் போதகராக மரியாதை பெற்றார். அவருடைய மலைப்பிரசங்கத்திற்குப் பின், “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” எது அவருக்கு இந்த மரியாதையைச் சம்பாதித்தது? அவர் மற்ற மனிதருடைய அபிப்பிராயங்களின்பேரில் சார்ந்திராமல் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் பேரிலேயே நம்பி சார்ந்திருந்ததாகும். அவருடைய ஒரே அதிகாரத்துவம் யெகோவா தேவனும் அவருடைய வார்த்தையுமேயாகும். இயேசு, நண்பரிடமிருந்தும் பகைவரிடமிருந்தும் மரியாதையைப் பெற்றார், உழைத்துச் சம்பாதிப்பதன் மூலமே அதைப் பெற்றார்.—மத்தேயு 7:28, 29; 15:1-9; யோவான் 7:32, 45, 46.
3 “மனைவி தன்னுடைய கணவனிடம் ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்க வேண்டும்,” என்பதே எபேசியர் 5:33-ல் (NW) கொடுக்கப்பட்டிருக்கிற கட்டளை. ஆனால் இந்த மரியாதையைப் பெற தகுதியுள்ளவனாயிருப்பதற்கு கணவன் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்; மற்றப்படி, இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயலாற்றுவது மனைவிக்கு வெகு கடினமாயிருக்கும். இப்படிப்பட்ட மரியாதையைப் பெறுவதற்கு, பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி தன் பங்கை கணவன் எப்படி நிறைவேற்றக்கூடும்?
சரியான தலைமை வகிப்பைச் செலுத்துவதன் மூலம்
4 விவாக ஏற்பாட்டில் பைபிள், கணவனுக்கு தலைமை வகிப்புக்குரிய இடத்தைக் கொடுத்து பின்வருமாறு கூறுகிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கும் எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.” (எபேசியர் 5:22-24) இந்த ஏற்பாடு குடும்பத்தில் சந்தோஷமிருப்பதற்கு உண்மையில் உதவி செய்யுமா? சில பெண்கள் தாங்கள் விவரிக்கிற அளவு மீறிக் குறுகிய ஆண்மைப் பற்றுக்கு விரோதமாக, அதாவது, சில ஆண்கள் பெண்கள் சம்பந்தப்பட்டதில் தங்கள் ஸ்தானத்தைப் பற்றிக் கொண்டிருந்த வீண் பெருமையான அல்லது மிகைப்பட்ட கருத்துக்கு எதிராக வெளிப்படையாய்ப் பேசுகிறார்கள். ஆனால் பைபிளின் போதகங்கள் இப்படிப்பட்ட குறுகிய ஆண்மைப் பற்றை ஆதரித்துப் பேசுகிறதில்லையென்பதை நாங்கள் தொடக்கத்திலேயே சொல்லுகிறோம்.
5 பெண் மட்டுமல்ல, ஆணுங்கூட தலைமையின் கீழ் இருக்கிறான் என்ற இந்த உண்மையை பைபிள் அறிவுறுத்துகிறது. பைபிள் புத்தகமாகிய 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரம், 3-ம் வசனத்திற்குத் திருப்புகையில், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் இவ்வார்த்தைகளைக் கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதினதை நாம் காண்கிறோம்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாறென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்.” ஆணுக்கு கிறிஸ்து அவனுடைய தலையாக இருக்கிறார், கணவனாகிய உங்களுக்குக் கடவுளும் கிறிஸ்துவும் முன்மாதிரிகளாகவும், போதகர்களாகவும் இருக்கிறார்கள். உங்கள் தலைமை வகிப்பை எப்படிச் செலுத்த வேண்டுமென்பதை நீங்கள் அவர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.
6 கிறிஸ்துவின்மேல் யெகோவாவின் தலைமை வகிப்பானது அன்புள்ள இரக்கத்தோடு செலுத்தப்பட்டது. “என் தேவனே, உம்முடைய சித்தத்தைச் செய்வதிலேயே நான் இன்பங் கொண்டிருக்கிறேன்,” என்பது கிறிஸ்துவின் பதிலாக இருந்தது. (சங்கீதம் 40:8; எபிரெயர் 10:7, NW) இயேசு கிறிஸ்துவின் தலைமை வகிப்புங்கூட அன்புள்ளதாயிருக்கிறது. தம்முடைய சீஷராகப் போகிறவர்களுக்கு அவர் பின்வருமாறு கூறினார்: “நான் இருதயத்தில் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், நீங்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள்.” (மத்தேயு 11:29, NW) வேத எழுத்துக்கள் மணவாட்டிக்கு ஒப்பிடுகிற அவருடைய சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறவர்கள், அவருடைய தலைமை வகிப்பின் கீழ் இப்படிப்பட்ட இளைப்பாறுதலை நிச்சயமாகவே கண்டடைந்திருக்கிறார்கள். அவர் அவர்களைத் தன்னல நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அதற்கு மாறாகத் தம்முடைய அன்பில் தன்னுயிரைத் தியாகம் செய்தவராக இருந்திருக்கிறார். இதுவுங்கூட கணவன் தன் மனைவியின் மேல் செலுத்த வேண்டிய வகையான தலைமை வகிப்பாக இருக்கிறது. “கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து தம்மைத் தாமே அதற்காக ஒப்புக் கொடுத்ததுபோல, புருஷர்களே, மனைவிகளில் அன்பு கூருங்கள். . . . அப்படியே புருஷரும் தங்கள் சரீரங்களில் அன்புகூருகிறது போலவே தங்கள் மனைவிகளும் அன்புகூரக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில் தானே அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தை ஒருவனும் ஒருக்காலும் பகைத்ததில்லையே; கிறிஸ்து திருச்சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான் . . . உங்களில் ஒவ்வொருவனும் தன்னில் அன்புகூருகிறதுபோல தன் மனைவியிலும் அன்புகூரக்கடவன்; மனைவியோ புருஷனிடம் பயபக்தியாயிருக்கக்கடவள்.” [ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்கக்கடவள், NW] (எபேசியர் 5:25-29, 33) கிறிஸ்துவின் தலைமை வகிப்புக்குக் கீழ்ப்படியும் இந்த முன்மாதிரியை நீங்கள் வைப்பீர்களானால் உங்கள் மனைவி, தன் கணவனாக உங்கள் தலைமை வகிப்புக்கு ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருப்பது அவளுக்குக் கடினமான காரியமாயிராது, உண்மையில், அது அவளுக்கு இன்பமாக இருக்கக்கூடும்.
7 ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால், கணவன், குடும்பத்தின் தலைவனாகத் தனக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறபோதிலும், அபூரணத்தின் காரணமாகவும் உடன்பிறந்த தன்னலத்தின் காரணமாகவும், அவன் தன் மனைவிக்குத் தேவைப்படுகிற அன்பையும் பரிவையும் காட்டத் தவறுகிற சமயங்கள் இருக்கின்றன. பல தடவைகளில் மனைவியானவள் தான் தன் கணவனால் நேசிக்கப்படுவதாக உணருகிறதில்லை என்றும் அவனுடைய ஒரே அக்கறை அவனுடைய சொந்த இன்பமும் திருப்தியுமே என்றும் சொல்வாள். மேலும், தங்கள் கணவன்மார் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்களென்று சில மனைவிமார் குறை கூறுகிறார்கள். இது ஒருவேளை கணவனின் தலைமை வகிப்பைப் பறித்துக் கொள்ள மனைவி முயற்சிகள் செய்து அவளுடைய இப்படிப்பட்ட ஆக்ரமிப்பைக் கணவன் எதிர்ப்பதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம். அல்லது, அந்த ஆண், பல கணவர்கள் அகந்தையுடனும் ஆணவத்துடனும் அதிகாரம் செலுத்துகிற ஒரு சுற்றுப்புற சூழ்நிலையில் வளர்ந்திருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும், தலைமை வகிப்பைத் தவறான வகையில் பயன்படுத்துவது அவனுக்கு எவருடைய மரியாதையையும் கொண்டு வருகிறதில்லை.
8 மறுபட்சத்தில், சில கணவர்கள் தலைமை வகிப்பைத் தவறான வகையில் செலுத்துவதற்குப் பதிலாக அதை முற்றிலும் கைவிட்டு விடுகிறார்கள். எல்லாத் தீர்மானம் செய்தலையும் தங்கள் மனைவிமாரிடமே கடத்திவிடுகிறார்கள். அல்லது, ‘தங்களை அவசரப்படுத்த வேண்டாம்’ என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு அவ்வளவாகக் காலந்தாழ்த்திக் கொண்டே போவதால் குடும்ப அக்கறைகள் பாதிக்கப்படுகின்றன. உடல் சம்பந்தமாய் அவர்கள் சோம்பலாகவோ வீண்காலங்கழிக்கிறவர்களாகவோ இருக்க மாட்டார்கள், ஆனால் மனமுயற்சியிலிருந்து தயங்கி பின்வாங்குகிறவர்களாக இருப்பார்களானால் அதன் விளைவானது, நீதிமொழிகள் 24:33, 34-ல் பின்வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறபடியே இருக்கக்கூடும்: “இன்னும் கொஞ்சம் தூக்கம், இன்னும் சிறிது நித்திரை, இன்னும் கைமுடக்கிச் சிறிது உறக்கம் என்பாயோ? உன் தரித்திரம் வழிபறிப்பவன் போல் வரும். உன் வறுமை ஆயுதமணிந்தவன் போல் வரும்.”—தி.மொ.
9 நீங்கள் உங்களை மனநிலையுறுதியும் மனத்திடமுமுள்ளவராகவும், தீர்மானங்களைச் செய்யக் கூடியவராகவும் காட்டுவீர்களானால் உங்கள் மனைவியிடமிருந்து மரியாதையைப் பெறுவீர்கள். ஆனால் இது குடும்பத்தில் வேறு எவருடைய அபிப்பிராயத்தையும் கலந்தாலோசிக்க வேண்டியதில்லையென்றோ உங்கள் மனைவியினுடைய அபிப்பிராயம் உங்களுடையதுடன் பொருந்தாதிருக்க நேரிடுகிறதனால் தானே அதற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டியதில்லையென்றோ அர்த்தங் கொள்ளுகிறதில்லை. ஆபிரகாம், சாராள் ஆகியவர்களின் குடும்பத்தில், அவர்களுடைய குமாரனாகிய ஈசாக்கும் அவர்களுடைய வேலைக்காரப் பெண்ணாகிய ஆகாரின் குமாரனும் உட்பட்ட கவலைக்கிடமான ஒரு பிரச்னை எழும்பினதைப் பற்றி பைபிள் பதிவின் தொடக்கத்தில் நாம் வாசிக்கிறோம். சாராள் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரு வழியை யோசனையாகக் கூறினாள். இது அந்தக் காரியத்தில் ஆபிரகாமின் உணர்ச்சிகளோடு ஒத்துப் போகவில்லை. ஆனால் கடவுள் ஆபிரகாமிடம்: “சாராள் உனக்குச் சொல்வதையெல்லாம் கேள்,” என்று சொன்னார்.—ஆதியாகமம் 21:9-12, தி.மொ.
10 இதிலிருந்து, கணவன் தன் மனைவியின் விருப்பங்களுக்கு எப்பொழுதும் இணங்கிப் போகவேண்டுமென்று நாம் முடிவு செய்யக்கூடாது. ஆனால், குடும்பத்தைப் பாதிக்கும் தீர்மானங்களை மனைவியோடு கலந்துபேசி, அவள் தன்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தாராளமாய் வெளிப்படுத்தும்படி அவளை ஊக்கப்படுத்துவது நன்மை பயக்குவதாய் இருக்கக்கூடும். பேச்சுத் தொடர்பு எப்பொழுதும் திறந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், எப்பொழுதும் அணுகக்கூடியவர்களாக இருங்கள், மேலும் நீங்கள் செய்யும் தீர்மானங்களில் அவளுடைய விருப்பங்களையும் முக்கியமானதாகக் கவனத்திற்குள் எடுத்துக் கொள்ளுங்கள். தலைமை வகிப்பைச் செலுத்துகையில் ஒருபோதும் அடக்கியாளுகிறவர்களாகவோ கொடுங்கோன்மையாகவோ இராதேயுங்கள், அதற்கு மாறாக மனத்தாழ்மையைக் காட்டுங்கள். நீங்கள் பரிபூரணரல்லர், நீங்கள் தவறுகளைச் செய்யக்கூடும், அப்படிச் செய்கையில், உங்களுடைய மனைவி உங்களை விளங்கிக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்ப நிலைகள் எழும்புகையில் பெருமை குணமுள்ள துணைவரைக் கொண்ட மனைவியைவிட மனத்தாழ்மையுள்ள கணவனையுடைய மனைவியே தன் கணவனுடைய தலைமை வகிப்புக்கு மரியாதை கொடுப்பதை எளிதாகக் காண்பாள்.
நன்றாய்ப் பராமரிப்பவனாக இருப்பதன் மூலம்
11 தன்னுடைய குடும்பத்திற்கு வாழ்க்கைக்குரிய பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கொடுத்துப் பராமரிப்பது கணவனின் உத்தரவாதமாயிருக்கிறது. 1 தீமோத்தேயு 5:8 இதைப் பின்வருமாறு காட்டுகிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலுங் கெட்டவன்.” பல நாடுகளில், இன்று வாழ்க்கை நடத்துவதற்குப் பெருந்தொகையான பணம் வேண்டியதாயிருக்கிறது, இந்தத் தேவையை எப்படி நிரப்புவதென்பதை உட்படுத்தும் தீர்மானங்களைக் கணவனாக இருக்கிற நீங்களே செய்ய வேண்டும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்குக் கொண்டவருகிறதோடு கூட, கணவனும் மனைவியுமாகிய நீங்கள் இருவரும் புரிந்து கொள்ளுகிற வரவு செலவுத் திட்டப்பட்டியல் ஒன்றை நீங்கள் உங்கள் மனைவியுடன் தயாரிப்பது அவசியமாயிருக்கும். இது வெறுமென ஒரு கட்டுப்பாட்டுச் செலவுக்கான ஓர் ஏற்பாட்டைக் கொண்டிருப்பதையே குறிக்கிறது. இது உங்கள் வருவாய்க்குள் வாழ்க்கை நடத்தும்படி உங்களுக்கு உதவி செய்கிறது. மேலும் சம்பள நாளுக்கு முன்பாகப் பணம் செலவாகிவிடுகையில் சில சமயங்களில் எழும்புகிற வகையான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் அதிகத்தைச் செய்யக்கூடும்.
12 பெரும்பான்மையருடைய காரியங்களில் கணவனே குடும்பத்தின் ஆதரவுக்காகப் பணத்தைக் கொண்டு வருகிறவனாக இருக்கிறபோதிலும், அது கூட்டிணைவு முயற்சியால் சம்பாதிக்கப்பட்டிருக்கிறதென்பதை மறந்துவிடக்கூடாது. கணவனாகிய நீங்கள், இதைத் தனியே நீங்கள் தாமே செய்வதாக எண்ணுவீர்களானால், அப்பொழுது பொருள் வாங்கும் செயல் முதல்வர், சமையற்காரர், பாத்திரங்களைக் கழுவுபவர், வீட்டைக் கவனிப்பவர், வீட்டை அழகு செய்பவர், தாதி முதலிய எல்லாரையும் கூலிக்கு அமர்த்துவதற்கு உங்களுக்கு எவ்வளவு செலவாகுமென்பதைச் சற்று நின்று கணக்குப் போட்டுப் பாருங்கள். பொதுவாய், உங்கள் மனைவி, நிச்சயமாகவே, விவாகத் துணைவியாகத் தன் பங்காயிருக்கிற இந்த வேலைகளையெல்லாம் செய்வதன் மூலம் இந்தச் செலவை மீத்து வைக்கிறாள். மேலும் வீட்டு செலவுகளைப் பற்றிய மிகுதியான பதிவுகளை அவள் வைக்கிறாளென்றால் முன் கொடுக்கப்பட்ட பட்டியலில் “கணக்கர்” ஒருவரையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். நீதிமொழிகள் 18:22-ல் (NW) சொல்லப்பட்டிருப்பது மிகவும் உண்மையாயிருக்கிறது. “ஒருவன் நல்ல மனைவியைக் கண்டடைந்திருக்கிறானா? அவன் நல்ல காரியத்தைக் கண்டடைந்திருக்கிறான்.”
13 பொருள் சம்பந்தமாய்ப் பராமரித்து வருவதில், பொருளாசை சம்பந்தப்பட்ட மனநிலைசார்புக்கும் வாழ்க்கை நோக்குக்கும் வழுவி விழுதலின் அபாயம் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. குடும்ப சந்தோஷத்தின் அஸ்திபாரத்தை இதைப்போல் அவ்வளவு அதிகம் ‘அரித்துப் போடக்’ கூடியவை ஒரு சிலவே இருக்கின்றன. “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை,” என்று பைபிள் எழுத்தாளனாகிய பவுல் சொல்லுகிறான். ஆகையால், “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” பொருள் பற்றாசையான வாழ்க்கை முறை எப்பேர்ப்பட்ட உடைமைகளைக் கொண்டு வந்தாலும் சரிதான், குடும்ப உறவுகள் பலவீனப்பட்டு முறிந்து போவதைக் காணும் இந்த வேதனைக்கு அது ஒருபோதும் சரியீடு செய்ய முடியாது. ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட இழப்பானது, பொருள் சம்பந்தப்பட்டதில் அடையும் இலாபத்தை வெகுவாய் மிஞ்சிவிடுகிறது.—1 தீமோத்தேயு 6:7-10.
14 பொருள் கொள்கையானது வெறுமென பொருளுடைமைகளைக் கொண்டிருப்பதல்ல, பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களின் பேரில் ஆசையேயாகும். ஓர் ஆள் ஏழையாகவும் பொருளாசை கொண்டவனாகவும் இருக்கக்கூடும், அல்லது செல்வந்தனாகவும் ஆவிக்குரிய மனப்பற்றுடையவனாகவும் இருக்கக்கூடும். அவனுடைய இருதயம் எங்கே இருக்கிறதென்பதன் பேரிலேயே இது சார்ந்திருக்கிறது. இயேசு பின்வருமாறு கூறினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுவதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”—மத்தேயு 6:19-21.
15 பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளை அளித்து நன்றாய்ப் பராமரிக்கிற ஒரு கணவன் இப்படிப்பட்ட வேதப்பூர்வ புத்திமதியை மனதில் வைத்து சிந்தனை செய்வான். மேலும் பொருள் சம்பந்தமாய்த் தேவைப்படுபவற்றைக் கொடுத்துவருவது மட்டுமல்லாமல், தன் குடும்பத்திற்கு ஆவிக்குரிய பிரகாரமாய்த் தேவைப்படுபவற்றைக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய நேரத்தைச் செலவிடுவான். உங்கள் வீட்டாரை ஆவிக்குரிய முறையில் கட்டியெழுப்ப போதிய நேரமும் சக்தியும் உங்களுக்கு இல்லாமற் போகுமளவுக்குப் பொருள் சம்பந்தப்பட்டவைகளைச் சம்பாதிக்க உலகப் பிரகாரமான வேலையில் அவ்வளவு அதிக நேரத்தைச் செலவிடுவதில் என்ன பலன்? வாழ்க்கையின் பிரச்னைகளை வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்கு ஞானத்தைக் கொண்டிருக்க, சரியான நியமங்களை ஒருமுக நோக்குடன் உறுதியாய்க் கடைப்பிடிப்பதைக் குடும்பத்தாருக்குள் படிப்படியாய்க் கட்டியெழுப்புவற்கு நேரம் கட்டாயமாகச் செலவிடப்படவேண்டும். ஒருமுகப்பட்ட ஜெபம் இவ்வாறு கட்டியெழுப்புவதைப் போலவே, கடவுளுடைய வார்த்தையை ஒன்று சேர்ந்து வாசிப்பதற்கும் அதைப் பற்றிப் பேசுவதற்கும் உங்கள் வாழ்க்கையில் இடம் உண்டாக்குவது இதைச் செய்யக்கூடும். குடும்பத் தலைவனாக இதில் முன்னின்று வழிநடத்துவது, கணவனான உங்களைப் பொறுத்ததாயிருக்கிறது. இதன் பலன்கள் நீங்கள் செலவிடும் நேரத்தையும் பிரயாசத்தையும் வெகுவாய் மிஞ்சிவிடும். கடவுளுடைய பின்வரும் வாக்குத்தத்தம் தவறிப்போகாது. “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:6.
16 தன் நடைகளை வழிநடத்தும்படி சிருஷ்டிகரை நோக்குகிற ஒரு கணவன் பிரசங்கி 7:12-ல் காணப்படுகிற ஆலோசனையின் சமநிலையை மதித்துணருகிறான். “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” ஆகையால், நன்றாய்ப் பராமரிக்கிறவனாக, கணவன் தன் குடும்பத்தாரின் உடல் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கொடுத்துவர கடினமாய் உழைக்கிறான். இருந்தபோதிலும், அவன் தன் நம்பிக்கையை “நிலையற்ற ஐசுரியத்தின் மேல் வையாமல், . . . தேவன் மேல் வைக்கி”றான். தானும் தன் மனைவியும் “உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக் கொள்ளும்படி” ஆவிக்குரிய அக்கறைகளின் பேரில் முதலாவதாக அழுத்தத்தை வைப்பதில் அவன் ஒரு முன்மாதிரியை வைக்கிறான். (1 தீமோத்தேயு 6:17-19) உடல் சம்பந்தப்பட்டதிலும் ஆவிக்குரிய பிரகாரமாயும் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு கணவன் எடுக்கும் இந்த முயற்சிகள், கடவுளுக்குப் பயப்படும் மனைவியின் மரியாதையைப் பெறும்படி செய்யும்.
அவளுக்குக் கனத்தைக் கொடுப்பதன் மூலம்
17 அப்போஸ்தலனாகிய பேதுரு கணவன்மார்களிடம் அவர்களுடைய மனைவிகளைப் பற்றிப் பேசி, “ஸ்திரீ ஜாதி பலவீன பாண்டமென்றறிந்து . . . அவர்களுக்குரிய கனத்தைச் செலுத்துங்கள்,” என்று அவர்களுக்குச் சொல்லுகிறான். (1 பேதுரு 3:7, தி.மொ.) இதே வசனத்தில், உன் மனைவியோடு வாழ்கிற கணவனாகிய நீ ‘அறிவின்படி’ இந்தக் கனத்தை அவளுக்குச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்று பேதுரு குறிப்பிடுகிறான்.
18 இது நிச்சயமாகவே பாலுறவுகளைக் குறித்ததில் பொருந்துகிறது. கணவன்மார், பெண்ணின் உடல் மற்றும் உணர்ச்சி அமைப்பைப் பற்றி அறியாதிருப்பதே மனைவிகள் பெரும்பாலும் கிளர்ச்சியில்லாதிருப்பதற்குக் காரணமாயிருக்கிறது. “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.” ஆனால் ‘அறிவின்படி’ அதாவது, ‘பலவீன பாண்டமென்றறிந்து . . . அவளுக்குரிய கனத்தைச் செலுத்துகிறவனாய்’ அதைச் செய்யக்கடவன், என்று கடவுளுடைய வார்த்தை புத்திமதி கூறுகிறது. (1 கொரிந்தியர் 7:3) நீங்கள் உண்மையில் ‘அவளுக்குக் கனத்தைக் கொடுப்பீர்களானால்’ நீங்கள் அவளிடம் கடுகடுப்பாயும், அதிகாரத்துடன் வற்புறுத்துகிறவர்களாயும் அவள் ஒருவேளை மிகக் களைப்பாக இருக்கையில் அல்லது மாதவிடாய் சம்பந்தப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கும் சமயங்களிலுங்கூட உங்கள் சொந்த காம உணர்ச்சிகளைத் திருப்தி செய்து கொள்வதில் பிடிவாதமாயும் இருக்க மாட்டீர்கள். (லேவியராகமம் 20:18-ஐ ஒத்துப்பாருங்கள்.) மேலும் நீங்கள் பாலுறவுகள் கொள்ளும் போதும், அவளுடைய தேவைகளை நீங்கள் பொருட்படுத்தாமல் விடுமளவாக உங்கள் சொந்த இன்பத்தின் பேரிலேயே கருத்தூன்றியவர்களாக இருக்கமாட்டீர்கள். வாழ்க்கையின் இந்தப் பகுதியில் பொதுவாய் ஒரு பெண்ணானவள் ஆண் பிரதிபலிப்பதைப் பார்க்கிலும் தாமதமாகவே பிரதிபலிப்பாள். அவளுக்குக் கனிவும் பாசமும் விசேஷித்த வண்ணமாய்த் தேவைப்படுகின்றன. கணவன் “தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்” என்று சொல்லுகையில் பெற்றுக் கொள்வதில் அல்ல, கொடுப்பதிலேயே பைபிள் அழுத்தத்தை வைக்கிறது.
19 இந்த வகையான கொடுத்தல், நிச்சயமாக, தன் சொந்த விவாகத் துணைவிக்கு மாத்திரமே உரியதாய்த் தனியே ஒதுக்கி வைக்கப்படவேண்டும். இன்று பல ஆண்கள் மற்றப் பெண்களோடு “நடவடிக்கைகள்” வைத்துக் கொள்ளுகிறார்களென்பது உண்மையே. ஆனால், முடிவில் அவர்கள் எதை அடைகிறார்கள்? தங்கள் சொந்த வீட்டின் சந்தோஷத்தைத் தானே அடியோடு கெடுத்துக் கொள்ளுகிறார்கள். தங்கள் மனைவிகளுக்குக் ‘கனத்தைச் செலுத்தத்’ தவறுகிறார்கள். ஆகையால் தங்கள் மனைவிகள் தங்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு ஆதாரத்தை அளிக்கிறதில்லை. இதற்கும் மேலாக, கடவுளால் தொடங்கப்பட்ட ஓர் ஏற்பாடாகிய விவாகத்தைத் தானே அவமதிக்கிறார்கள். இது கொண்டுவருகிற எல்லா இருதய வேதனையையும் கருதுகையில், எபிரெயர் 13:4 ஏன் பின்வருமாறு நமக்கு வற்புறுத்திக் கூறுகிறதென்பது விளங்கத்தக்கதாக இருக்கிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”
20 தன் மனைவிக்குக் கனத்தைச் செலுத்துவதானது பாலுறவுகளோடு முடிந்துவிடுகிறதில்லை. உண்மையில் மரியாதை கொடுக்கப்படுகிற கணவன், மற்றக் காரியங்களிலுங்கூட, தன்னுடைய மனைவியை உயர்வாய் மதிக்கிறானென்பதை வெளிப்படுத்திக் காட்டுவான். இது, அவன் அவளை ஒரு நிலை மேடையில் ஏற்றி வைத்து அவளுடைய அடிமையாவது அல்ல. அதற்கு மாறாக, எபேசியர் 5:28-லிருந்து முன்பு நாம் வாசித்தபடி இது இருக்கிறது, அதாவது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.” இவ்வாறு செய்கிற மனிதன் நிச்சயமாகவே தன் மனைவியை ஒரு கீழ்த்தர ஆள் என்பதாக நடத்தப்போகிறதில்லை. சாப்பாட்டு நேரங்களில் தன்னுடைய உடலே எல்லா முதன்மையான பங்குகளுக்கும் தகுதியுடையது, தான் சாப்பிட்டு மீந்தவற்றையே அவள் சாப்பிடுவாள் என்பதாக அவன் உணரமாட்டான்—நிச்சயமாகவே, ‘தன்னுடைய சொந்த சரீரத்தைப்போல்’ அவன் அவளை நேசிப்பானாகில் அவ்வாறு உணரமாட்டான். தன்னுடைய சொந்தத் தோற்றத்தைப் பற்றியே கண்ணுங்கருத்துமாய் இருப்பதற்கு மாறாக, தன்னுடைய மனைவியின் தோற்றத்தைப்பற்றி அதைப்போல் அல்லது அதற்கு மேலாக அக்கறையுள்ளவனாக இருந்து அவள் தன்னுடைய உடைகளைப் பற்றி திருப்தியுடையவளாக உணரும்படி அவளுக்கு உதவி செய்ய தன்னால் கூடியதைச் செய்வான். ஒருவன் தான் விரும்பக்கூடிய அளவில் ஒரு காரியத்தைச் செய்ய தான் தவறுகையில் அவன் தன்னைத்தானே அடித்துக் கொள்ளுகிறதில்லை. அவ்வாறே ஒரு கிறிஸ்தவ கணவனுங்கூட தன் மனைவி தன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் சில சமயங்களில் குறைவுபடுவதன் காரணமாகத் தானே அவளை அடிக்கமாட்டான். இதற்கு மிகவும் எதிர்மாறாக, எவராவது அவளைக் கடுமையாய் நடத்தினால் அவன் உண்மைப்பற்றுடையவனாய் அவளுடைய உதவிக்கு வருவான். தன் சொந்த உடலை நேசிக்கிறது போலவே அவன் அவளை நேசிக்கிறான்.
21 நீங்கள் உங்கள் மனைவிக்குக் ‘கனத்தைச் செலுத்தப்’ போகிறீர்களென்றால், உங்கள் தேவைகள் ஒன்று போலிருக்கும் பகுதிகளை நன்றியோடு மதித்துணருகையில் உங்கள் இருவருக்கும் இடையேயுள்ள மன இயல்புக்கடுத்த வித்தியாசங்களையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அடிப்படையாய், பெண்கள் ஓர் அதிகாரத்துவ வரம்பின் கீழ் வேலை செய்யவே விரும்புகின்றனர், நிபந்தனையானது அந்த அதிகாரம் சரியானபடி செலுத்தப்பட வேண்டுமென்பதே. இவ்வகையாகவே யெகோவா தேவன் அவர்களைச் சிருஷ்டித்தார். பெண், ‘ஆணுக்கு உதவியாகவும் அவனைப் பூர்த்தி செய்பவளாகவும்’ இருக்கும்படி உண்டாக்கப்பட்டாள். (ஆதியாகமம் 2:18, NW) ஆனால் மேற்பார்வை மட்டுக்கு மீறிய நுட்பமாக இருந்து, பெண்ணானவள் தானாக முயற்சியெடுத்து தன் சொந்தத் திறமைகளை உபயோகிக்க இடமில்லாதிருக்குமானால், தன் வாழ்க்கையிலிருந்து சந்தோஷத்தைப் பிழிந்தெடுத்துப் போடுவதைப் போல் அவள் உணரத் தொடங்கக்கூடும், மேலும் மனக்கசப்பு தோன்றி வளரக்கூடும்.
22 கவனிக்க வேண்டிய மற்றொரு இன்றியமையாத அம்சமானது தான் தேவைப்படுவதாக உணரும் உணர்ச்சியாகிய பெண்ணின் இயல்பான ஆவலாகும். உதவியாயிருக்கும் கணவன் பெரும்பான்மையான மனைவிகளால் நன்றியோடு மதிக்கப்படுகிறான். ஆனால் வெறுமென தன் மனைவியை ஒரு புறம் தள்ளிவிட்டு காரியங்களைத் தன் கையில் எடுத்துக் கொள்ளுகிற கணவன், நன்மையைப் பார்க்கிலும் அதிகத் தீமையையே தான் செய்திருப்பதாக ஒருவேளை காணலாம். நீங்கள் கனிவாயும் நன்றியோடு மதிக்கிறவர்களாயும் இருந்து, அவள் தேவைப்படுகிறாள் என்றும் அவளை நீங்கள் கனத்துக்குரியவளாகக் கருதுகிறீர்களென்றும் நீங்கள் ஒன்றிணைந்த ஒரு குழுவாக வேலை செய்கிறீர்கள் என்றும், “நான்,” “நீ,” அல்லது “என்னுடையது,” “உன்னுடையது,” என்பதல்ல. “நாம்,” “நம்முடையது,” என்பதே என்றும் அவள் அறியும்படி செய்வீர்களானால் உங்கள் மனைவியின் உண்மைத்தவறா பற்றுதலை அடைய நீங்கள் அதிகம் செய்கிறீர்கள். உங்கள் மனைவியை நீங்கள் எவ்வளவு அதிகமாய் மதித்துப் பாராட்டுகிறீர்கள். அவள் உங்களுக்கு எவ்வளவு அதிகமாய்த் தேவைப்படுகிறாள் என்பதை நீங்கள் உண்மையில் அவள் அறியும்படி செய்கிறீர்களா? அவளுக்குச் சம்பளத்தைக் கொடுப்பதன்மூலம் இதை நீங்கள் செய்கிறதில்லை; இதை நீங்கள் மற்ற வழிகளில் காட்டவேண்டும்.
அவளுடைய பெண்மை பண்புகளை நன்றியோடு மதியுங்கள்
23 உள நூல் வல்லுநராயிருக்கும் ஒரு பெண் பின்வருமாறு எழுதினாள்: ‘அடிப்படையாய், பெண்கள் உணருகிறார்கள், ஆண்கள் சிந்திக்கிறார்கள்.’ தனித்தனியே கவனிக்கையில் இந்தப் பண்புகளில் ஒன்று மற்றொன்றைவிட மேம்பட்டதாக இல்லை; அவை வெறுமென வித்தியாசமானவையாகவே இருக்கின்றன. உணர்ச்சியற்றவர்களாயிருக்கிற ஆட்களை நாம் விரும்புகிறதில்லை; சிந்தனையற்ற ஆட்களையுங்கூட நாம் விரும்புகிறதில்லை. உணரவும் சிந்திக்கவும் பெண்களுக்குத் திறமை இருக்கின்றன. ஆண்களைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது. ஆனால் பொதுவாய்ச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண்ணின் ஆழ்ந்த உணர்ச்சிகளே மிக விரைவில் முன் வருகிறது, ஆனால் ஆணோ, காரியங்களை நியாய முறைப்படி நோக்குவதாகத் தான் கருதுகிறதன் சார்பாய்த் தன் உணர்ச்சி வேகத்தைக் கீழடக்க முயலும்படியே பொதுவாய் மனம் சாய்கிறவனாக இருக்கிறான். நிச்சமாகவே இதற்கு விதி விலக்குகளும் காணப்படுகிற போதிலும், இது கணவனையும் மனைவியையும் ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்கிறவர்களாக்குகிற மற்றொரு வேறுபாடாகும். அடிப்படையாய் பெண்ணின் அதிகப்படியான உணர்ச்சி வேக அமைப்போடு கூட ஆட்களில் அவளுக்கிருக்கும் ஊக்கமான அக்கறை பல தடவைகளில் ஆணை விட அதிகப்படியாகப் பேசும்படி அவளைச் செய்விக்கிறது. மேலும் அந்தப் பேச்சுக்குப் பதிலளிக்க அவளுக்கு எவராவது தேவைப்படுகிறார்கள். இங்கே தான் பல கணவர்கள் குறைவுபடுகிறார்கள்.
24 நீங்கள் உங்கள் மனைவியுடன் பேசுகிறீர்களா? உங்கள் வேலையைப் பற்றி மாத்திரமே அல்ல, அவளுடைய வேலையைப் பற்றியுங்கூட? நீங்கள் அதில் அக்கறையுடையவர்களாக இருப்பதை அவள் அறியும்படி செய்கிறீர்களா? அவளுடைய அந்நாளின் அனுபவம் என்ன? பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? வீட்டுக்கு வந்து, ‘சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்காதேயுங்கள். அதைச் சாப்பிட்ட பின்பு, செய்தித்தாளுக்குப் பின்னால் உங்கள் தலையை மறைத்துக் கொண்டு அவள் உங்களோடு பேசுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு வாய் திறவாமல் ‘உம்’ கொட்டிக் கொண்டிராதேயுங்கள். உங்கள் மனைவியில், அவளுடைய எண்ணங்களில், அவளுடைய நடவடிக்கைகளில், காரியங்களைப் பற்றியதில் அவளுடைய உணர்ச்சிகளில் அக்கறையுள்ளவர்களாக இருங்கள். அவளுடைய செயல்முறை ஏற்பாடுகளில் அவளை உற்சாகப்படுத்துங்கள். அவளுடைய நிறைவேற்றங்களில் அவளைப் போற்றுங்கள். அவள் செய்வதை அன்புடன் பாராட்டுவீர்களானால் தான் செய்யத் தவறியிருக்கக்கூடிய மற்ற வேலைகளையும் செய்யும்படி அவள் தொடங்கக்கூடும். குறைகூறுவது மெல்ல கொல்லும் நஞ்சுவைப் போலும் ஊக்கத்தை அழிக்கும் பொருளைப் போலும் இருக்கக்கூடும். ஆனால் தகுதியாயிருக்கையில் கொடுக்கப்படும் உண்மையான போற்றுதலானது சுகப்படுத்தும் நிவாரணமாகவும் ஆவியை உயர எழும்பச் செய்கிற கிளர்ச்சியூட்டும் பொருளாகவும் இருக்கிறது!—நீதிமொழிகள் 12:18; 16:24.
25 இடையிடையே எப்பொழுதாவது அவளுக்கு ஒரு பரிசை நீங்கள் கொண்டு வருகிறீர்களா? இது அதிக விலையுயர்ந்ததாக இருக்க வேண்டியதில்லை, ‘நான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்,’ என்று சொல்வதாக இருக்கக்கூடிய ஒரு சிறிய பொருளாகத்தானேயும் இருக்கலாம். ஒரு திட்டமான சந்தர்ப்பத்திற்காகவே இவ்வாறு செய்ய வேண்டுமென்றிராமல், நீங்களே மனமுவந்து, வேறு எந்தக் காரணத்திற்காகவுமல்லாமல், உங்கள் உள்ளத்தில் நீங்கள் கொடுக்க விரும்புவதனால் தானே இதைச் செய்கிறீர்களா? மகிழ்வளிக்கிற எதிர்பாரா வியப்புகள் எப்பொழுதும் இன்பமாயிருக்கின்றன. நீங்கள் பிரியப்படுகிற ஏதோ விசேஷித்த உணவு வகையைத் தயாரிப்பதன் மூலம் அவள் உங்களுக்கு எதிர்பாரா வியப்பைத் தருகையில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களல்லவா? வியப்புக்கு வியப்பைக் கொடுத்து அவளை மகிழ்வியுங்கள். அன்பினால் தூண்டப்பட்டு கொடுக்கப்படும் சிறிய நினைப்பூட்டுப் பொருட்கள், வழக்க முறைப்படி—ஒருவேளை மனச்சங்கடத்துடனுங்கூட—ஏதோ கடமையுணர்ச்சியுடன் வழங்கப்படும் விலையுயர்ந்த பரிசுகளைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கின்றன. “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) மனைவிகளும் அப்படிப்பட்டவர்களிலேயே பிரியமாயிருக்கிறார்கள். உணவுகள் விசேஷித்தவையாக இராதபோதிலும், “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும் சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது,” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 15:17.
26 கொடுத்தலில் மிக அதிக முக்கியமானது உங்களைத் தானே கொடுப்பதாகும்—உங்கள் நேரத்தை, உங்கள் சக்தியை, உங்கள் கவனத்தை மேலும் உங்கள் சிந்தனைகளை, முக்கியமாய் உங்கள் இருதயத்திற்கு மிக நெருங்கியவையாய் இருக்கும் சிந்தனைகளைக் கொடுப்பதாகும். ஆண்களில் பலர் அதைக் கடினமாகக் காண்கின்றனர். தங்களுடைய மிகுந்த அன்பைப் பலவகையில் வெளிப்படுத்திக் காட்டுவது முட்டாள்தன உணர்ச்சிப்பசப்பாகவும் எவ்வாறோ ஆண்மையற்றதாகவும் இருப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால் நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கிறீர்களென்றால் ஒரு பார்வை, ஒரு தொடுதல், ஒரு வார்த்தை ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அருமையாயிருக்கக்கூடுமென்பதை நீங்கள் மனதில் வைத்திருப்பீர்கள். இவை இல்லாமலிருப்பதே அவள் சிடுசிடுப்பாய், சோர்வாய், மகிழ்ச்சியற்றவளாய் உணரும்படி செய்ய அதிகத்தைச் செய்யக்கூடும். ஆகையால் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சாலொமோனின் உன்னதப்பாட்டின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். மற்றவர்களுக்கு மரியாதையையும் ஆழ்ந்த அன்பையும் வெளிப்படுத்திக் காட்டுவது, இவ்விதம் வெளிப்படுத்துகிறவனுக்கு நல்லதாயிருக்கிறது. அனலுள்ள ஆட்களிடமாக மக்கள் தடுக்க முடியாத வண்ணம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். அனலுள்ள ஆள் என்றாலென்ன? தன் உணர்ச்சிகளையும் ஆர்வ கனிவையும் தான் அன்போடு அக்கறை கொள்ளுகிறவர்களுக்கு வெளிப்படுத்துகிற ஆளே அனலுள்ள ஓர் ஆள். இப்படிப்பட்ட அனல், தொற்றும் தன்மையுடையது; இதைக் கொடுக்கிறவனுக்கு இது திருப்பிக் கொடுக்கப்படும்.—சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:2, 15; லூக்கா 6:38.
27 கணவனாயிருக்கும் நீங்கள், பின்வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்: என் தலைமை வகிப்பு, என் மனைவி எளிதாக மரியாதை கொடுப்பதற்கேதுவாகச் செலுத்தப்படுகிறதா? என்னை நான் நேசிக்கிறதைப் போல் அவளை நான் நேசிக்கிறேனா? அல்லது என் சொந்தத் திருப்தியிலும் எனக்கு வேண்டியவற்றிலும் மாத்திரமே முதன் முதலாக நான் அக்கறையுடையவனாக இருக்கிறேனா? அவளுடைய தேவைகளை நான் எவ்வளவு அதிகமாய் எண்ணிப் பார்க்கிறேன்? குடும்பத் தீர்மானங்களை நான் செய்வதற்கு முன்பாக அவளுடைய கருத்துகளுக்குச் செவிகொடுத்து அவளுடைய விருப்பங்களை எண்ணிப் பார்க்கிறேனா? அவளுடைய சுக நலத்தைக் கருத்தில் கொண்டு என்னுடைய தீர்மானங்கள் செய்யப்படுகின்றனவா? அதிகப்படியாய் பலவீன கட்டமைப்பையுடைய பாண்டமாக, பெண்ணானவளுக்கு அவளுக்குரிய கனத்தை நான் கொடுக்கிறேனா? நான் அவளோடு பேச்சுத் தொடர்பு கொண்டு என் இருதயத்தை அவளுக்குத் திறந்து காட்டுகிறேனா?
28 பரிபூரண அளவுக்கு இவற்றை நீங்கள் செய்யக்கூடாதவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் விடாது தொடர்ந்து மனத்தாழ்மையுடன் முயற்சி செய்து வருவீர்களானால் உங்கள் மனைவியின் ஆழ்ந்த மரியாதையையும், கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெறும் ஒரு கணவனாவதை நோக்கி வெகுவாய் முன்னேறும்படி இது செய்யக்கூடுமென்று நீங்கள் திட நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம்.
[கேள்விகள்]
1, 2. மரியாதையைப் பெறுவது எப்படி? இயேசு கிறிஸ்துவின் காரியத்தில் இது எப்படி நன்றாய் விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது?
3. என்ன கடமையை எபேசியர் 5:33 மனைவியின் மீது வைக்கிறது, இது கணவன் பங்கில் என்ன தேவைப்படுத்துகிறது?
4. பைபிள் கணவனுக்குக் கொடுக்கிற இடம் என்ன?
5. தலைமையைப் பற்றி கணவன் எதை ஒப்புக்கொள்ள வேண்டும், யாருடைய முன்மாதிரிகளை அவன் பின்பற்ற வேண்டும்?
6. தலைமை வகிப்பைப் பற்றி யெகோவா தேவனிடமிருந்தும் இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் கணவர்கள் என்ன கற்றுக் கொள்ளக்கூடும்?
7, 8. சரியான தலைமை வகிப்பைச் செலுத்த சில கணவர்கள் தவறுகிற வழிகளில் சிலவற்றைக் கூறுங்கள்.
9,10. குடும்பத்தைப் பாதிக்கும் தீர்மானங்களைச் செய்கையில், யாருடைய கருத்துக்களையும் கணவன் கவனிக்க வேண்டும்?
11, 12. (எ) வாழ்க்கையின் பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளை அளிப்பதைப் பற்றியதில் கணவனின் உத்தரவாதம் என்ன? (பி) உண்மையில், இப்படிப்பட்ட பொருள் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகள் எப்படி கூட்டிணைவு முயற்சியால் செய்யப்படுகின்றன?
13. பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு வருகையில், என்ன மனப்பான்மையை விவாகத் துணைவர்கள் தவிர்க்க வேண்டும்? இது அவர்களுக்கு எப்படி நன்மை பயக்கக்கூடும்?
14. பொருள் சம்பந்தப்பட்ட காரியங்கள் ஒருவனின் வாழ்க்கையில் மட்டுக்கு மீறிய முக்கியத்துவத்தையுடையதாயிருக்கிறதா என்பதை எது தீர்மானிக்கிறது?
15, 16. சந்தோஷமான ஒரு குடும்பமாயிருக்கும்படி தொடர்ந்து பராமரித்துவர ஒரு கணவன் பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கொடுத்து கவனித்துவருவது மட்டுமல்லாமல் வேறு எதையும் செய்ய வேண்டும்?
17-19. மனைவிக்கு “கனத்தைக்” கொடுக்கும்படியான பைபிளின் இந்தப் புத்திமதியைப் பாலுறவுகள் சம்பந்தமாக எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
20. எபேசியர் 5:28-ல் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறபடி வேறு எந்த வழிகளில் ஒரு மனைவிக்கு கனம் காட்டப்படவேண்டும்?
21, 22. மனைவி தன் வாழ்க்கைப் பங்கை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியைக் கண்டடையும் கணவன் அவளுக்கு எப்படி உதவி செய்யக்கூடும்?
23. பொதுவாய்ச் சொல்ல வேண்டுமென்றால், உணர்ச்சிவேகங்களைக் குறித்ததில் ஆண்களும் பெண்களும் எப்படி வேறுபடுகின்றனர்?
24. தன் மனைவி சொல்வதைக் கவனித்துக் கேட்டு அவளோடு பேசுவது கணவனுக்கு ஏன் முக்கியமானது?
25, 26. (எ) மனைவிக்குக் கொடுக்கும் ஒரு பரிசு என்ன செய்தியைத் தெரிவிக்கிறது? (பி) என்ன வகையான கொடுத்தல் அவளுக்கு மிக அதிக முக்கியமானதாயிருக்கிறது?
27, 28. (எ) தலைமை வகிப்பைத் தான் சரியான முறையில் செலுத்துகிறானா என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள கணவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்விகள் யாவை? (பி) இந்தக் காரியத்தைப் பற்றி அக்கறையுடையவர்களாக இருப்பது ஏன் நல்லது?
[பக்கம் 49-ன் படம்]
சிறிய காரியங்களும் அதிக அர்த்தமுடையவை