அதிகாரம் 12
உங்கள் பெற்றோரின் இருதயத்தை மகிழச் செய்தல்
நாம் இன்னும் இளைஞராக இருந்தாலும் சரி, முழு வளர்ச்சி பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் சரி, அல்லது இப்பொழுது முழுமையாய் வளர்ந்த ஆண்களும் பெண்களுமாக இருந்தாலும் சரி, நாமெல்லாரும் யாரோ ஒருவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, குழந்தை பருவத்திலிருந்து முழு வளர்ச்சி பருவம் வரையாக, நம்மில் பெரும்பான்மையானவர்கள் மேல் பெற்றோர் செலவிட்டிருக்கிற எல்லாக் கவனிப்பு, வேலை, பணம், தன்னலத் தியாகத்துடன் கூடிய பிரயாசம் ஆகியவற்றின் விலைமதிப்பைக் கணக்கிடுவதுங்கூட கடினமாயிருக்கும். மேலும், உண்மையில், நாம் பதிலாக அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியாத ஒன்றை நம்முடைய பெற்றோர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர். எப்படியெனில், நாம் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கக்கூடிய மற்ற எல்லாவற்றோடுங்கூட நமக்குத் தற்போது இருக்கும் உயிருக்கு நாம் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம். அவர்களில்லாமல், நாம் இருந்திருக்கமாட்டோம் இந்த வெளிப்படையான உண்மை தானேயும் பின்வரும் இந்தத் தெய்வீகக் கட்டளைக்குச் செவிகொடுப்பதற்குப் போதிய அளவுக்கு மேற்பட்ட காரணமாக இருக்க வேண்டும்: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”—எபேசியர் 6:2, 3.
2 எல்லா உயிருக்கும் உண்மையான மூல காரணராயிருக்கிற நம்முடைய சிருஷ்டிகருக்கே நாம் முதலாவதாகக் கடன்பட்டவர்களாய் இருக்கையில் நம்முடைய பெற்றோருக்கு ஆழ்ந்த உணர்ச்சியுடன் நன்றி செலுத்தக் கடன்பட்டவர்களாய் நாம் உணர வேண்டும் அவர்கள் நமக்குக் கொடுத்ததற்கு மாற்றீடாக நாம் அவர்களுக்கு என்ன கொடுக்கக்கூடும்? இந்த உலகத்தின் உடைமைகள் முழுவதையும்கூட விலையாகக் கொடுத்தாலும் உயிரை வாங்கமுடியாதென்று இயேசு சொன்னார், ஏனென்றால் உயிரின் பேரில் விலைமதிப்பு சீட்டை நீங்கள் வைக்கவே முடியாது. (மாற்கு 8:36, 37; சங்கீதம் 49:6-8) “ஒருவரிலொருவர் அன்பு கூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்,” என்று கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. (ரோமர் 13:8) நம்முடைய பெற்றோரும் நாமும் உயிரோடிருக்கும் வரையாக அவர்களுக்கு நாம் கடன்பட்டவர்களாகவும் விடாமல் தொடர்ந்து விசேஷித்த முறையில் அவர்களுக்கு அன்பைக் கொடுத்து வரும்படி தூண்டப்படுகிறவர்களாயும் நாம் உணர வேண்டும். அவர்கள் நமக்குக் கொடுத்தப் பிரகாரம் அவர்களுக்கு நாம் உயிரைக் கொடுக்க முடியாதிருக்கையில், அவர்களுடைய வாழ்க்கையை வாழத்தகுந்ததாக்குகிற ஏதாவதொன்றை நம்முடைய பாகமாக அவர்களுக்கு நாம் செய்து வரக்கூடும். அவர்கள் மகிழ்ச்சியும் ஆழ்ந்த மனத்திருப்திக்குரிய உணர்ச்சியும் உடையவர்களாய் இருப்பதற்கேதுவாக நாம் நம் பங்கை அவர்களுக்குச் செய்யக்கூடும். நாம் அவர்களுடைய பிள்ளைகளாய் இருப்பதால் அநேகமாய் வேறு எந்த ஆட்களும் செய்ய முடியாத ஒரு விசேஷித்த முறையில் நாம் இதைச் செய்யக்கூடும்.
3 நீதிமொழிகள் 23:24, 25 சொல்லுகிற பிரகாரம்: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.” தங்கள் பிள்ளைகள் எதை செய்கிறார்களோ அதில் பெருமை கொள்வதும், அவர்களில் இன்பத்தைக் கண்டடைவதுமே பெற்றோரின் இயல்பான விருப்பமாய் இருக்கிறது. நம்முடைய பெற்றோரைக் குறித்ததில் இவ்வாறு இருக்கிறதா?
4 அவர்கள் வகிக்கும் ஸ்தானத்தை நாம் உண்மையாய் மதித்து அவர்களுடைய அறிவுரைக்குச் செவிகொடுக்கிறோமா, இல்லையா என்பதன்பேரில் இது பேரளவாய்ச் சார்ந்திருக்கிறது. இன்னும் இளைஞராய் இருக்கிறவர்களுக்கு, கடவுளுடைய அறிவுரையானது: “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:20) “எல்லாக் காரியத்திலேயும்” என்பதானது, கடவுளுடைய வார்த்தையோடு ஒத்திராத காரியங்களைக் கேட்க பெற்றோருக்கு அதிகாரம் இருக்கிறதென்று நிச்சயமாக அர்த்தங்கொள்ளுகிறதில்லை, ஆனால், நாம் இளைஞராய் இருக்கையில், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நம்மை வழிநடத்த அவர்கள் உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கிறார்களென்று இது நிச்சயமாகவே காட்டுகிறது.—நீதிமொழிகள் 1:8.
5 நீ இப்பொழுது இளைஞனாய் இருக்கிறாயா? ஏதோ ஒரு நாளில் நீ ஒருவேளை ஒரு தகப்பனாக இருப்பாய். உன்னை மரியாதையாக நடத்தின பிள்ளைகளை நீ விரும்புவாயா, அல்லது பணிய மறுத்த பிள்ளைகளை, ஒருவேளை செவிகொடுப்பதாகப் பாசாங்கு செய்து, கண்மறைவிலிருக்கையில் கீழ்ப்படியாதிருந்த பிள்ளைகளை நீ விரும்புவாயா? மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு மாறாக, “மூட புத்திரன் தந்தைக்குச் சஞ்சலமாவான், பெற்ற தாய்க்குக் கசப்புமாவான்,” என்று நீதிமொழிகள் 17:25 சொல்லுகிறது. (தி.மொ.) உன் பெற்றோரை மகிழ்விக்க உனக்கு விசேஷித்தத் திறமை இருப்பதுபோலவே, வேறு எந்த ஆட்களைப் பார்க்கிலும் அதிகமாக, அவர்களுக்கு ஆழ்ந்த விசனத்தையும் ஏமாற்றத்தையும் நீயே கொண்டு வரக்கூடும். எதைக் கொண்டுவருவாய் என்பதை உன் நடத்தை தீர்மானிக்கும்.
ஞானத்தை அடைவதற்குக் காலம் எடுக்கிறது
6 ஞானத்தை அடைவதில் வயது முக்கியமான அம்சமாய் இருக்கிறதென்பதை மதித்துணருவது இளைஞருக்கு நல்லது. நீ இப்பொழுது 10 வயதானவனாக இருக்கிறாயா? நீ ஐந்து வயதாக இருந்தபோது உனக்குத் தெரிந்திருந்ததைவிட அதிகம் இப்பொழுது உனக்குத் தெரிகிறதென்பதை நீ காணக்கூடுமல்லவா? உனக்கு 15 வயதா? நீ 10 வயதாக இருந்தபோது உனக்குத் தெரிந்திருந்ததைவிட அதிகம் இப்பொழுது உனக்குத் தெரிகிறதல்லவா? நீ 20 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறாயா? நீ 15 வயதாக இருந்தபோது உனக்குத் தெரிந்திருந்ததைவிட இன்னும் அதிகம் இப்பொழுது உனக்குத் தெரிகிறதென்று நீ நிச்சயமாக உணருகிறாய். பின்னால் பார்வையைச் செலுத்தி, வயது உன்னை மேலும் ஞானவானாக்குகிறதென்பதைக் காண்பது எளிதாயிருக்கிறது, ஆனால் முன்னால் நோக்கி இந்த உண்மையை ஏற்பது கடினமாய் இருக்கிறது. ஓர் இளைஞன் எவ்வளவு ஞானமுள்ளவனாக உணர்ந்தாலும் சரிதான், எதிர்காலம் அதிகப்பட்ட ஞானத்தைக் கொண்டு வரக்கூடும், கொண்டு வரவும் வேண்டும் என்பதை அவன் அல்லது அவள் தெளிவாக உணரவேண்டும்.
7 இதன் குறிப்பு என்ன? உன் பெற்றோர் உன்னைவிட முதியவர்களாகவும் உனக்கு இருக்கிறதைவிட அதிக அனுபவம் உடையவர்களாகவும் இருக்கிறதனால் வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர்த்துச் சமாளிப்பதில் நியாயமாகவே உன்னைவிட ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இதை ஏற்பது இளைஞர் பலருக்குக் கடினமாயிருக்கிறது. முதியோராய் இருக்கிறவர்களை “கூர்மங்கிய கிழவர்கள்” என்பதாக அவர்கள் ஒருவேளை குறிப்பிடலாம். சிலர் ஒருவேளை அப்படியிருக்கலாம், பலர் அவ்வாறு இல்லை, சில இளைஞர் பொறுப்புணர்ச்சியில்லாதவர்களாக இருப்பதன் காரணமாகத் தானே எல்லா இளைஞரும் பொறுப்புணர்ச்சியில்லாதவர்கள் என்று சொல்லமுடியாது. அவ்வாறே இதுவும் இருக்கிறது. முதியோரைப் பார்க்கிலும் தாங்கள் ஞானமுள்ளவர்கள் என்று தங்களை எண்ணிக்கொள்வது இளைஞருக்கு அசாதாரணமானதல்ல. இஸ்ரவேலின் அரசன் ஒருவன் இந்தச் சிந்தனையற்றப் பெரும்பிழையைச் செய்து, அழிவுக்கேதுவான விளைவுகளை அனுபவித்தான். 41 வயதாயிருக்கையில் ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோனைப் பின்தொடர்ந்து அரசனானபோது, மக்கள் தங்கள் சுமைகள் இலகுவாக்கப்படவேண்டுமென்று அவனைக் கேட்டார்கள். ரெகொபெயாம் முதியோரைக் கலந்தாலோசித்தான். அவர்கள், இரக்கமாயும் கருணையாயும் இருக்கும்படி ஆலோசனை கூறினார்கள். பின்பு அவன் இளைஞரிடம் ஆலோசனைக்குச் சென்றான், அவர்கள், கனிவற்றக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆலோசனை கூறினார்கள். அவன் இளைஞருடைய ஆலோசனையை ஏற்றான். இதன் விளைவு என்ன? 12 கோத்திரங்களில் பத்துக் கோத்திரங்கள் கலகம் செய்தனர். ரெகொபெயாமுக்குத் தன் ராஜ்யத்தில் ஏறக்குறைய ஆறில் ஒரு பாகம் மாத்திரமே மீந்திருந்தது. இளைஞரல்ல முதியோரே ஞானமான ஆலோசனையைக் கொடுத்தார்கள். “முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.”—யோபு 12:12; 1 இராஜாக்கள் 12:1-16; 14:21.
8 உன் பெற்றோர் இனிமேலும் இளைஞராக இல்லை என்ற காரணத்தினால்தானே அவர்களுடைய ஆலோசனையை இக்காலத்திற்கு உதவாத பழமைப்பட்டதாகக் கருதாதே. அதற்குமாறாக, கடவுளுடைய வார்த்தை சொல்லுகிற பிரகாரம்: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது (வயது சென்றவளானதன் காரணமாகத்தானே, NW) அவளை அசட்டை பண்ணாதே.” வயதை மதிப்பது தகுந்ததாயிருக்கிறது. “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்திரு. முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு, உன் கடவுளுக்குப் பயப்படு; நானே யெகோவா.” அநேக இளம் ஆட்கள் இந்தக் கட்டளைகளை அசட்டை செய்கிறார்கள் என்பது மெய்தான். இப்படி செய்வதானது அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிச்சயமாகவே மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை.—நீதிமொழிகள் 23:22; லேவியராகமம் 19:32.
உன் பங்கைச் செய்
9 நீ செய்வது மற்ற ஆட்களைப் பாதிக்கிறது—இதைத் தட்டிக்கழிக்க முடியாது. குடும்பத்தில் ஓர் அங்கத்தினன் துன்பப்பட்டால் எல்லாரும் அமைதி குலைந்தவர்களாகிறார்கள். ஒருவன் குறை கூறுகிறவனாக அல்லது கட்டுப்பாடுகளை எதிர்ப்பவனாக இருக்கிறானென்றால், முழு குடும்பத்தின் சமாதானமும் தகர்க்கப்படுகிறது. மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கையைக் கொண்டிருக்க ஒவ்வொருவரும் அவரவருடைய பங்கைச் செய்யவேண்டும்.—1 கொரிந்தியர் 12:26-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
10 நீ செய்யக்கூடிய உடன்பாடான கட்டியமைக்கக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. குடும்பத்திற்குத் தேவையானவற்றைக் கொடுத்துப் பராமரிப்பதற்காகப் பெற்றோர் கடினமாய் உழைக்கிறார்கள். நீ இளைஞனாக வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாயானால், நீயும் உதவி செய்யக்கூடும். வாழ்க்கையின் பெரும்பாகம் வேலையில் செலவிடப்படுகிறது. இதைப்பற்றி சில ஆட்கள் முணுமுணுக்கிறார்கள். ஆனால் நல்ல வேலையைச் செய்யவும் அதை நல்ல உள்நோக்கத்துடன் செய்யவும் நீ கற்றுக்கொள்வாயானால், அது உனக்கு மெய்யான மனத்திருப்தியைக் கொண்டுவரும். மறுபட்சத்தில், தன்னுடைய பங்கைச் செய்யாமல் மற்றவர்களே தனக்கு எல்லாவற்றையும் செய்யும்படி எதிர்பார்க்கிற ஓர் ஆள் இந்த மனத்திருப்தியை ஒருபோதும் அறிகிறதில்லை, மேலும், பைபிள் சொல்லுகிற பிரகாரம் ஒருவன் “கண்களுக்குப் புகை எப்படியிருக்கிறதோ” அப்படியே அவன் மற்றவர்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் தொந்தரவுக்குக் காரணமாக இருக்கிறான். (நீதிமொழிகள் 10:26; பிரசங்கி 3:12, 13) ஆகையால், வீட்டில் வேலை உனக்குக் கொடுக்கப்படுகையில் அவற்றைச் செய், மேலும் அவற்றை நன்றாகச் செய். உங்கள் பெற்றோருக்கு இன்பத்தைக் கொண்டுவர நீ உண்மையில் விரும்புகிறாயென்றால், அவர்கள் உன்னைக் கேட்காமலே அதிகப்படியான சில வேலைகளையும் நீயே செய். நீ அநேகமாய் அந்த வேலையை—அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்ற உன் இருதயத்தின் ஆவலினால் தானே செய்ததன் காரணமாக—எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக அதிக மகிழ்ச்சி தருவதாகக் காண்பாய்.
11 ஓர் இளைஞனுடைய நல்நடத்தையால் மக்கள் மனம் கவரப்படுகிறவர்களாகையில் அவர்கள் அநேகமாய் எப்பொழுதும் அவன் அல்லது அவள் யாருடைய பிள்ளை என்பதை அறிய விரும்புகின்றனர். இளைஞனாகிய தாவீது கவனிக்கத்தக்க தைரியத்தையும் விசுவாசத்தையும் காட்டினபோது அரசனாகிய சவுல் உடனடியாக: “இந்த வாலிபன் யாருடைய மகன்?” என்று கேட்டான். (1 சாமுவேல் 17:55-58) உன்னுடைய குடும்பத்தின் பெயரை நீ சுமக்கிறாய். நீ என்ன செய்கிறாய் எவ்வகையான ஆளாக இருக்கிறாய் என்பது அந்தப் பெயரையும் அதை உனக்குக் கொடுத்த பெற்றோரையும் மக்கள் கருதும் முறையைப் பாதிக்கும். மற்றவர்களுக்கு கருணையும் உதவியும் மரியாதையும், சிநேகப்பான்மையும் காட்டுவதன் மூலம்—உன்னுடைய சுற்றுப்புறத்திலும் பள்ளியிலும்—உன் பெற்றோருக்குக் கனத்தைக் கொண்டுவரக்கூடிய மிகப் பல வழிகள் உனக்கு இருக்கின்றன. அதே சமயத்தில் அதன் மூலம் நீ உன் சிருஷ்டிகரை கனப்படுத்துகிறாய்.—நீதிமொழிகள் 20:11; எபிரெயர் 13:16.
12 உன்னுடைய பெற்றோரின் மகிழ்ச்சி உன்னுடைய சொந்த மகிழ்ச்சியுடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பாதையில் ஒரு நல்ல தொடக்கத்தை உனக்குக் கொடுக்கும்படியான குறிக்கோளுடனேயே உன்னைப் பயிற்றுவிக்கும்படி அவர்கள் முயற்சிகள் எடுக்கின்றனர். அவர்களுடன் ஒத்துழை, அப்பொழுது அவர்களுக்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கிறவனாக இருப்பாய், ஏனெனில் மிகச் சிறந்ததையே உனக்குக் கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளன் வெளிப்படுத்திக்கூறினபடி: “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.” (நீதிமொழிகள் 23:15) மெய்ஞானத்தின் வழிகளில் உன்னை வழிநடத்தவேண்டிய, கடவுளுக்கு முன்பாக இருக்கும் தங்கள் உத்தரவாதத்தை உங்கள் பெற்றோர் மதித்துணருகிறார்களென்றால், அந்த உத்தரவாதத்தை உண்மையுடன் நிறைவேற்ற அவர்களுக்கு உதவி செய். “உன் எதிர்காலத்தில் நீ ஞானமுள்ளவனாகக் கூடும்படி, ஆலோசனைக்குச் செவிகொடுத்து சிட்சையை ஏற்றுக்கொள்.”—நீதிமொழிகள் 19:20, NW.
13 உன்னுடைய பெற்றோர் மட்டுக்கு மீறியவற்றை உன்னிடம் எதிர்பார்க்கிறார்கள் அல்லது அவர்களுடைய கட்டுப்பாடுகள் அளவுக்கு மீறி அதிகமாய் இருக்கின்றனவென்று நீ உணருகிற சமயங்கள் இருக்கலாம். சிட்சைக்குரிய காரியங்களில் சரியான சமநிலையை அடைவது எளிதாக இல்லை. ஏதோ ஒரு நாளில் நீ ஒரு குடும்பத்தை உடையவனாக இருக்கையில் இதே பிரச்னையை நீ எதிர்ப்படுபவனாக உன்னை நீ காணக்கூடும். குறிப்பிட்ட சில இளைஞருடன் நீ சகவாசம் வைத்துக் கொள்வதை உன் பெற்றோர் கட்டுப்படுத்துகிறார்களென்றால், அல்லது போதைப் பொருட்களை உபயோகிப்பதற்கு எதிராக உன்னைப் பாதுகாக்கிறார்களென்றால் அல்லது எதிர்பாலாருடன் உன் கூட்டுறவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகிறார்களென்றால், சற்றும் அக்கறைகொள்ளாத பெற்றோரைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் சிட்சை செய்கிற பெற்றோரைக் கொண்டிருப்பது எவ்வளவு மேலானதென்பதைச் சற்று நிறுத்தி சிந்தித்துப் பார்! (நீதிமொழிகள் 13:20; 3:31) அவர்களுடைய சிட்சைக்குச் செவிகொடு. உனக்குத்தானே நன்மை பயக்கச் செய்வாய், அவர்களுடைய இருதயமும் மகிழும்படி செய்வாய்.—நீதிமொழிகள் 6:23; 13:1; 15:5; எபிரெயர் 12:7-11.
14 நிச்சயமாகவே, வீட்டில் எழும்புகிற பல நெருக்கடி நிலைகள் நீ உண்டுபண்ணுகிறவையல்ல. ஆனால், அவற்றின் மத்தியில் நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பது வீட்டின் சூழ்நிலையைப் பாதிக்கிறது. பைபிள் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) இதைச் செய்வது எப்பொழுதும் எளிதாக இருக்கிறதில்லை. நாம் எல்லாரும் வேறுபட்டவர்களாக இருக்கிறோம்; நாம் வேறுபட்ட முறையில் காரியங்களைக் காண்கிறோம், வேறுபட்ட முறையில் பிரதிபலிக்கிறோம். அபிப்பிராயங்களும் ஆவல்களும் முரண்பாடாக இருக்கலாம். இவ்வாறு முரண்படுவது உன் சகோதரனுடனோ சகோதரியுடனோவென்று வைத்துக் கொள்வோம். அந்த மற்றவனே தன்னலமாயிருப்பதாக நீ உணரக்கூடும். நீ என்ன செய்வாய்?
15 சில பிள்ளைகள் உடனடியாகக் கத்திக் கூச்சலிட்டு ஒரு குற்றச்சாட்டைக் கூறி, தங்கள் பெற்றோரில் ஒருவர் தலையிட்டுச் சரி செய்ய வேண்டுமென்று கேட்பார்கள். அல்லது, காரியங்களைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்கிறவர்களாய், தாங்கள் விரும்புவதை நிறைவேற்றும்படி, இடித்துத் தள்ளுவதிலும் அடிப்பதிலும் முற்படக்கூடும். ஆனால் தேவாவியால் ஏவப்பட்ட ஒரு நீதிமொழி: “மனுஷனுடைய விவேகம் [உட்பார்வை, NW] அவன் கோபத்தை அடக்கும்,” என்று சொல்லுகிறது. (நீதிமொழிகள் 19:11) எந்த முறையில்? மன்னித்துவிடும் சந்தர்ப்ப நிலைமைகளைக் கவனிக்கும்படி அவனை அது செய்விப்பதில். (ஒருவேளை அந்தச் செயல் வேண்டுமென்றே செய்யப்பட்டாதாயிராது.) தான்தானேயும் தவறில் இருந்திருக்கிற பல தடவைகளை நினைவு கூரும்படி அது அவனைச் செய்விக்கிறது. (கடவுளுடைய மன்னிப்புக்காக, ஆ தான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறான்!) மேலும் தன்னுடைய சகோதரன் அல்லது சகோதரி தவறில் இருக்கின்றபோதிலும்கூட, தன்னுடைய கோபம், முழுகுடும்பத்தின் சமாதானத்தையும் தகர்த்துப் போடவிடுவது தன்னுடைய பங்கில் தவறாயிருக்குமென்று உணரும்படியும் அது அவனைச் செய்விக்கக்கூடும். இப்படிப்பட்ட விவேக உட்பார்வையையுடைய ஆளைப்பற்றி இந்த நீதிமொழி தொடர்ந்து பின்வருமாறு சொல்லுகிறது: “குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.”—கொலோசெயர் 3:13, 14-ஐயும் பாருங்கள்.
16 அடிப்படையாய், கடவுளுக்குப் பயப்படுகிற பெற்றோரை எது மகிழச் செய்கிறதோ அதுவே யெகோவாவின் இருதயத்தையும் மகிழச் செய்கிறது. எது அவர்களை விசனப்படுத்துகிறதோ அதுவே அவரையும் விசனப்படுத்துகிறது. (சங்கீதம் 78:36-41) யெகோவா தேவனின் மனதை அறியாத பெற்றோர், தங்கள் பிள்ளைகள் உலகத்தில் பிரசித்திப் பெற்றவர்களாகி, தங்களுக்குப் பெயரை உண்டுபண்ணி, ஏராளமான பணத்தைச் சம்பாதித்து, இன்னும் இப்படிப்பட்டவற்றைச் செய்துவருகிறவர்களாக இருப்பார்களானால் மகிழ்ச்சியடையக்கூடும். என்றபோதிலும் யெகோவாவைத் தங்கள் கடவுளாகக் கொண்டிருக்கிற பெற்றோர், இந்த உலகமும் அதன் ஆசைகளும் ஒழிந்து போகின்றன “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்பதை அறிந்திருக்கிறார்கள். (1 யோவான் 2:15-17) ஆகையால், அவர்களை உண்மையில் மகிழச் செய்வது, தங்கள் பிள்ளைகள் தங்களுடைய சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய பண்புகளை வாழ்க்கையில் பிரதிபலிப்பதேயாகும். தங்கள் பிள்ளைகள் பள்ளியில் தங்கள் படிப்புகளில் நன்றாகச் செய்கையில் தெய்வபக்தியுள்ள பெற்றோர் சந்தோஷப்படுகிறார்களென்பது மெய்யே. என்றாலும், பள்ளியிலும் மற்ற இடங்களிலும் அவர்களுடைய நடத்தை, கடவுளுடைய தராதரங்களுக்கு உண்மை தவறாமையையும், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையையும் பிரதிபலிக்கையில் அவர்கள் அதைவிட அதிகமாய்ச் சந்தோஷப்படுகிறார்கள். மேலும், இந்தப் பிள்ளைகள் தொடர்ந்து தங்கள் வாலிப வாழ்க்கையினூடேயும் யெகோவாவின் வழிகளில் இன்பத்தைக் கண்டடைந்து வருகிறவர்களாக இருக்கையில் அவர்கள் விசேஷித்தப் பிரகாரமாய் மனமகிழ்ச்சியடைகிறார்கள்.
பெற்றோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு
17 நாம் முழு வளர்ச்சியடைந்து வீட்டை விட்டு செல்கிறோமென்றால் நம் பெற்றோரின் மீதிருந்த நம்முடைய அக்கறை தணிந்து போகக்கூடாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். பல ஆண்டுகளாக அவர்கள் நமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுத்துப் பராமரித்து வந்திருக்கிறார்கள், இதைச் செய்ய பல தடவைகளில் தங்களைத் தாங்களே பேரளவாய்த் தியாகம் செய்திருக்கிறார்கள். நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோமென்பதைக் காட்ட நாம் இப்பொழுது என்ன செய்யலாம்?
18 “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,” என்ற இந்தத் தெய்வீக கட்டளையை நாம் மனதில் வைக்கக்கூடும். (மத்தேயு 19:19) நாம் ஒருவேளை அதிக வேலையாக இருக்கலாம். என்றாலும் நம்மிடமிருந்து கடிதம் வருவதும் நாம் அவர்களைப் போய் பார்ப்பதும் நம்முடைய பெற்றோருக்கு மிக அதிகத்தை குறிக்கிறதென்பதை நாம் மதித்துணர வேண்டும்.
19 வருடங்கள் கடந்து கொண்டிருக்கையில் மற்ற வழிகளிலும் அவர்களுக்குக் “கனம்” காட்டப்படலாம். பொருள் சம்பந்தமான உதவி தேவைப்படுகையில், அவர்கள் உங்களுக்குச் செய்த எல்லாவற்றிற்கும் யெகோவாவின் நீதியுள்ள கட்டளைக்கும் நன்றியுணர்வைக் காட்டுங்கள். முதிர் வயதாய் இருக்கிறவர்களைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “விதவையான ஒருத்திக்குப் பிள்ளைகளாவது பேரப்பிள்ளைகளாவது இருந்தால் இவர்கள் தங்கள் தெய்வபக்தியை முதலாவது சொந்தக் குடும்ப விஷயத்தில் பாராட்டி பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளக்கடவர்கள்; இது கடவுளின் சந்நிதியில் உகந்தது.”—1 தீமோத்தேயு 5:3, 4, தி.மொ.
20 தன்னுடைய பெற்றோருக்குக் “கனத்தைச்” செலுத்துவது அவர்களுக்குப் பொருள் சம்பந்தப்பட்ட ஆதரவு கொடுப்பதையும் உட்படுத்தக்கூடுமென்பது வேத எழுத்துக்களில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி அவருடைய சீஷர்கள் பாரம்பரியங்களை மீறுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். இயேசு அதற்கு பிரதியுத்தரமாக: “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறிநடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் (கடவுளுக்குக்) காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம் பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்,” என்று சொன்னார்.—மத்தேயு 15:1-6.
21 பாரம்பரியத்தின்படி, அவர்களுடைய பணம் அல்லது உடைமையைக் கடவுளுக்குக் “காணிக்கையாகக் கொடுக்கிறேன்,” என்று சொல்லிவிடுவதன் மூலம், அவர்கள் தங்கள் பெற்றோரைக் கவனிக்க வேண்டிய உத்தரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்பதாயிருந்தது. ஆனால் இயேசு இதை ஒப்புக்கொள்ளவில்லை. இன்று நாம் இதை இருதயத்தில் ஏற்க வேண்டும். பல நாடுகளில், “சமுதாய சுகநல” ஏற்பாட்டின் பலனாக முதிர் வயதான பெற்றோரின் சில தேவைகள் கவனிக்கப்பட்டு வரலாம் என்பது மெய்யே. ஆனால் இந்த ஏற்பாடு உண்மையில் போதுமானதா? இல்லையென்றால், அல்லது இப்படிப்பட்ட ஏற்பாடே இல்லையென்றால், உண்மையில் குறைவுபடுகிற எதையும் நிரப்ப தங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுகிற பிள்ளைகள் தங்களால் கூடியவற்றைச் செய்வார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன பிரகாரம், தேவையிலிருக்கிற முதிர் வயதான தன்னுடைய பெற்றோரைக் கவனிப்பது “தெய்வ பக்தியின்” ஓர் அத்தாட்சியாயிருக்கிறது, ஆம், குடும்ப ஏற்பாட்டை உண்டு பண்ணினவராகிய யெகோவா தேவனுக்குத்தாமே ஒருவன் செலுத்தும் அவனுடைய பக்தியின் அத்தாட்சியாயிருக்கிறது.
22 என்றபோதிலும், முதிர்வயதான ஆண்டுகளில் பெற்றோருக்குத் தகுந்த உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை இருக்கிறதென்றால் போதும், வேறு எதுவும் தேவையில்லை என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. அவர்களுக்கு உணர்ச்சி சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளுங்கூட இருக்கின்றன. அவர்களுக்கு அன்பும் திரும்பத் திரும்ப நம்பிக்கையூட்டுகிற கவனிப்பும் தேவையாயிருக்கின்றன, மேலும் பல தடவைகளில் மிகக் கட்டாய நிலையில் வேண்டியதாக இருக்கின்றன. நம்மை ஒருவர் நேசிக்கிறார்கள் என்றும் நாம் ஒருவருக்கு உரியவராயிருக்கிறோம் என்றும், நாம் தனியாய் இல்லை என்றும் நம் வாழ்நாளெல்லாம் அறிந்திருப்பது அவசியமாயிருக்கிறது. பிள்ளைகள் தங்கள் முதியோரான பெற்றோருக்கு உடல் சம்பந்தப்பட்ட அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளைக் கொடுப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ளக்கூடாது. “தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.”—நீதிமொழிகள் 19:26.
23 வளரிளமை பருவத்திலிருந்து முழு வளர்ச்சி பருவம் வரையான வாழ்க்கையில், பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் பலர் துக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் காரணராய் இருக்கிறார்கள். ஆனால் நீ உன் பெற்றோரின் ஸ்தானத்தை மதித்து அவர்களுடைய ஆலோசனைக்குச் செவிகொடுப்பாயானால், அவர்களுக்கு உண்மையான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவாயானால், நீ நாள்தோறும் அவர்களுடைய இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஊற்றுமூலமாய் இருக்கக்கூடும். ஆம், “உன் தகப்பனும் உன் தாயும் இன்ப மகிழ்ச்சியடைவதற்குக் காரணமாயிரு, உன்னைப் பெற்றவள் மகிழட்டும்.”—நீதிமொழிகள் 23:25, New English Bible.
[கேள்விகள்]
1. ஒருவன் தன்னுடைய பெற்றோரைக் கனம் பண்ணுவது ஏன் சரியானது?
2. நம்முடைய பெற்றோருக்குக் கடன்பட்டவர்களாக நாம் ஏன் உணரவேண்டும்?
3. நீதிமொழிகள் 23:24, 25-ன் பிரகாரம் பிள்ளையிலுள்ள என்ன பண்புகள் அவன் பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடும்?
4. கொலோசெயர் 3:20 என்ன செய்யும்படி பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகிறது?
5. தன்னுடைய சொந்த பிள்ளைகளிடமிருந்து தான் எதை எதிர்பார்ப்பான் என்பதைக் குறித்து ஓர் இளைஞன் தன்னைத்தானே என்ன கேட்டுக் கொள்ளலாம்?
6. ஞானம் சாதாரணமாய் வயது முதிர்ச்சியோடு வருகிறதென்று எந்த உதாரணம் காட்டுகிறது?
7. அரசனாகிய ரெகொபெயாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனையிலிருந்து ஞானத்தைப் பற்றியதில் என்ன பாடத்தை நாம் கற்றுக் கொள்ளலாம்?
8. பெற்றோர் உட்பட முதிர் வயதான ஆட்களிடமாக என்ன மனப்பான்மையைக் காட்டும்படி பைபிள் ஊக்கப்படுத்துகிறது?
9. குடும்பத்தின் அங்கத்தினரில் ஒருவன் அவசியமில்லாமல் குறைகூறுகிறவனாக அல்லது கட்டுப்பாட்டை எதிர்ப்பவனாக இருக்கையில் முழு குடும்பமும் எப்படிப் பாதிக்கப்படுகிறது?
10. நல்ல வேலையைச் செய்ய கற்றுக் கொள்வது பிள்ளைகளுக்கு ஏன் நன்மை பயக்குவதாயிருக்கிறது?
11. பிள்ளையின் வார்த்தைகளும் செயல்களும் எப்படி அவனுடைய பெற்றோரின் பேரில் அனுகூலமாய்ப் பிரதிபலிக்கக்கூடும்?
12. தங்களைப் பயிற்றுவிக்கும்படி தங்கள் பெற்றோர் எடுக்கும் முயற்சிகளுடன் ஒத்துழைப்பது பிள்ளைகளுக்கு ஏன் நல்லது?
13. தன் பெற்றோர் வைக்கிற கட்டுப்பாடுகளைச் சரியான நோக்குநிலையில் காணும்படி பிள்ளைக்கு எது உதவி செய்யக்கூடும்?
14, 15. குடும்ப அங்கத்தினர்களுக்குள் பிரச்னைகள் எழும்புகையில் எந்தப் பைபிள் நியமங்களை மதித்துணருதல் சமாதானத்தைப் பாதுகாத்து வைக்கும்படி பிள்ளைக்கு உதவி செய்யக்கூடும்?
16. தங்கள் பிள்ளைகளுடைய பங்கில் எந்த நடத்தைப் போக்கு கடவுளுக்குப் பயப்படும் பெற்றோர் மகிழும்படி செய்விக்கிறது?
17-19. முழு வளர்ச்சி பருவத்தையடைந்த குமாரரும் குமாரத்திகளும், தங்கள் பெற்றோரை நன்றியோடு மதித்துணருகிறார்கள் என்பதை எப்படிக் காட்டக்கூடும்?
20, 21. (எ) மத்தேயு 15:1-6-ன் பிரகாரம் பெற்றோரைக் கனப்படுத்துவதில் உட்பட்டிருப்பது என்ன? (பி) தன் பெற்றோரை இவ்விதமாய்க் கனப்படுத்தும் கடமையிலிருந்து ஒருவனை விடுவித்துவிடக் கூடியது ஏதாவது இருக்கிறதா?
22. பொருள் சம்பந்தமான காரியங்களை மட்டுமல்லாமல் வேறு எவற்றையும் நாம் நம்முடைய பெற்றோருக்குக் கொடுக்க வேண்டும்?
23. ஒரு பிள்ளை தன் பெற்றோருக்கு மகிழ்ச்சிக்குரிய ஊற்றுமூலமாக எப்படி இருக்கக்கூடும்?