அதிகாரம் 13
யெகோவாவின் சிங்காசனத்துக்கு முன் திரள் கூட்டம்
ஆபேல் முதற்கொண்டு முழுக்காட்டும் யோவான் வரையான கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைத் தங்கள் வாழ்க்கையில் முதல் வைத்தபோதிலும், அவர்களெல்லாரும் மரித்து உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் இருக்கப் போகிற 1,44,000 பேரும் தங்கள் பரிசைப் பெறுவதற்கு முன் மரிக்க வேண்டும். இதற்கு மாறாக, “மிகுந்த உபத்திரவத்தை” உண்மையில் தப்பிப்பிழைக்கப் போகிறதும், மரணமடையாமல், என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பையுடையதுமான ஒரு திரள் கூட்டம் இருக்குமென்று அப்போஸ்தலனாகிய யோவானுக்குத் தரிசனத்தில் காட்டப்பட்டது.—வெளி. 7:9-17, தி.மொ.
இந்தத் திரள் கூட்டத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்
2 இந்தத் “திரள் கூட்டம்” என்னவென்று பல நூற்றாண்டுகள் விளங்காதிருந்தது. ஆனால் அதோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்கள் படிப்படியாய் விளங்கிக்கொள்ளப்பட்டது. வழியை ஆயத்தப்படுத்தியது. 1923-ல், மத்தேயு 25:31-46-ல் உள்ள இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட “செம்மறியாடுகளும்” யோவான் 10:16-ல் அவர் குறிப்பிட்ட “மற்றச் செம்மறியாடுகளும்” இங்கே பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பைக் கொண்டிருக்கப்போகிற இப்பொழுது வாழும் ஆட்கள் என்பது தெளிவாகியது. 1931-ல், எசேக்கியேல் 9:1-11-ல் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த மனிதனால் நெற்றியில் அடையாளம் போடப்படுகிறவர்கள் மத்தேயு 25-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செம்மறியாடுகள் என்று அடையாளங் கண்டுகொள்ளப்பட்டது. பின்பு, 1935-ல், வெளிப்படுத்தின விஷேசம் 7:9-17-ல் குறிப்பிடப்பட்டுள்ள “திரள் கூட்டமும்” செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்டுள்ள “செம்மறியாடுகளும்” ஒன்றே என்று தெறியவந்தது. முன்னே 1923-ல் இத்தகைய செம்மறியாடுகளைப் போன்ற ஆட்கள் சிலர் ஏற்கெனவே தங்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதாகத் தெரிந்த போதிலும், 1935-லிருந்தே அவர்களுடைய எண்ணிக்கை விரைவாய்ப் பெருகத் தொடங்கினது. இன்று சொல்லர்த்தமாய் இலட்சக்கணக்கானோர், தெய்வீக தயவுபெற்ற இந்த “மற்றச் செம்மறியாடுகளின்” “திரள் கூட்டத்தின்” பாகமாகத் தாங்கள் அடையாளங் கண்டு கொள்ளப்படும்படி நாடுகின்றனர்.
3 இந்தத் “திரள் கூட்டத்”தார் வெளிப்படுத்தின விசேஷத்தில் அதே அதிகாரத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலின் 1,44,000 உறுப்பினரிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர். இந்தத் “திரள் கூட்டத்”தார் பரலோகத்தில் இருப்பதாக யோவான் தன் தரிசனத்தில் காணவில்லை. அவர்கள் கடவுளுடைய “சிங்காசனத்திற்கு முன்” . . . (கிரேக்கில் ஈனோப்பீயன் டோ த்ரோ னோ,) (e·no’pi·on tou thro’nou,) அதாவது, (“சிங்காசனத்தைப் பாக்கக்கூடிய நிலையில்”) ‘நின்றுகொண்டிருப்பது’ அவர்கள் பரலோகத்தில் இருக்கும்படி அவசியப்படுத்துகிறதில்லை. அவர்களுடைய நிலை அவர்கள் கடவுளுடைய ‘பார்வையில்’ இருப்பதேயாகும், தாம் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைப் பார்ப்பதாக அவர் நமக்குச் சொல்லுகிறார். (வெளி. 7:9, தி.மொ.; சங். 11:4; சங்கீதம் 100:1, 2-ஐயும், லூக்கா 1:74, 75-ஐயும், அப்போஸ்தலர் 10:33-ஐயும் ஒத்துப் பாருங்கள்) இதைப் போலவே, மத்தேயு 25:31, 32-ல் விவரித்திருக்கிறபடி “சகல ஜாதியாரும்” கிறிஸ்துவின் சிங்காசனத்துக்கு முன் (சொல்லர்த்தமாய் “அவருக்கு முன்னிலையில்”) இருப்பதற்கு அவர்கள் பரலோகத்தில் இருக்க வேண்டியதில்லை. “ஒருவரும் எண்ணமுடியாத திரள்கூட்டம்,” பரலோக வகுப்பார் அல்ல என்ற இந்த உண்மை வெளிப்படுத்துதல் 7:4-8-ஐயும் 14:1-4-ஐயும் ஒத்துப் பார்க்கையில் தெரிகிறது, இவ்வசனங்களில், பரலோகத்திலிருக்கும்படி பூமியிலிருந்து எடுக்கப்படுகிறவர்களின் திட்டவட்டமான எண்ணிக்கை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
4 யோவான் பின்வருமாறு எழுதி இந்தத் “திரள்கூட்டத்தை” அடையாளங் காட்டுகிறான்; “இவர்களே பெரிதான உபத்திரவத்திலிருந்து [வெளி] வருகிறவர்கள்” அவர்கள் தப்பிப் பிழைப்பது, நிச்சயமாகவே பூமியில் அனுபவித்த எதையும் பார்க்கிலும் மிகப் பெரிய உபத்திரவமாயிருக்கும். (வெளி. 7:13, 14, தி.மொ. மத். 24:21) யெகோவாவின் அந்தத் திகிலூட்டும் நாளைத் தப்பிப் பிழைக்கிறவர்கள், தங்கள் விடுதலைக்குக் காரணர் யார் என்பதை எவ்வித சந்தேகமுமில்லாமல் அறிந்திருப்பர். தங்கள் இரட்சிப்புக்குக் காரணர் கடவுளும் ஆட்டுக்குட்டியானவரும் என்று அவர்கள் நன்றியுடன் கூறி ஆர்ப்பரிக்கையில் யோவான் தரிசனத்தில் கண்டபடி, பரலோகத்திலிருக்கும் உண்மையுள்ள சிருஷ்டிகள் யாவரும் அவர்களுடன் சேர்ந்து, ஒரே உண்மையான கடவுளின் வணக்கத்தில் தங்கள் குரல்களை ஒருமிக்க எழுப்பி: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்,” என்று சொல்வார்கள்.—வெளி. 7:11, 12.
தப்பிப்பிழைப்பதற்குத் தகுதி பரீட்சிக்கப்படுதல்
5 இந்தத் “திரள் கூட்டம்” பாதுகாக்கப்படுவது யெகோவாவின் சொந்த நீதியுளள தராதரங்களுக்கினங்க நடைபெறுகிறது. விடுவிக்கப்படப்போகிறவர்களை அடையாளங்காட்டும் பண்புகளின் தெளிவான அறிகுறிகள், அவர்களைப் பற்றிக் கூறும் பைபிளின் தீர்க்கதரிசனக் குறிப்புகளில் அடங்கியிருக்கின்றன. இவ்வாறு, நீதியை நேசிக்கிறவர்கள் தப்பிப் பிழைப்பதை நோக்கில் கொண்டு இப்பொழுதே செயல்படுவது சாத்தியமாயிருக்கிறது. பின்வரும் வேதவசனங்களை நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம் ஆனால் இப்பொழுது அவற்றை, இடக்குறிப்பு கொடுத்திருக்கும் கூடுதலான வசனங்களின் உதவியைக் கொண்டு உன்னிப்பாகப் பகுத்தாராய்ந்து, இந்தத் தீர்க்கதரிசன விவரிப்புகளுக்குப் பொருந்த உங்களைத் தகுதியாக்குவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள்.
யோவான் 10:16-ல் குறித்துள்ள “மற்றச் செம்மறியாடுகள்”
இயேசுவின் குரலுக்கு உண்மையில் செவிகொடுப்பதென்பது ஒருவனுக்கு எதைக் குறிக்கிறது? (யோவான் 10:27; மத் 9:9; எபே. 4:17-24)
கிறிஸ்துவை நம்முடைய “ஒரே மேய்ப்பனாக” நாம் ஒப்புக்கொள்வதை எப்படிக் காட்டலாம்? (மத். 23:10, 11)
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையிலுள்ள “செம்மறியாடுகள்” (மத். 25:31-46)
இவர்கள் நன்மை செய்கிற கிறிஸ்துவின் “சகோதரர்கள்” யார்? (எபி. 2:10, 11; 3:1)
எந்தக் கடினமான சூழ்நிலைமைகளின் கீழ் அவர்கள் தங்களை பூமியிலிருக்கும் கிறிஸ்துவின் சகோதரரோடு அடையாளங் கண்டுகொள்ளச் செய்யும்படி அழைக்கப்படுகின்றனர்? எந்த வேலையில் அவர்கள் உண்மைத் தவறாத உதவியைக் கொடுக்கிறார்கள்? (வெளி. 12:12, 17; மத். 24:14; 28:19, 20)
கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த மனிதன் தப்பிப் பிழைப்பதற்காக அடையாளம் போடும் ஆட்கள். (எசேக். 9:1-11)
அடையாளக் குறிப்பான எருசலேமில், அல்லது கிறிஸ்தவ மண்டலத்தில் செய்யப்படும் அருவருப்பான காரியங்களைத் தாங்கள் ஒப்புக்கொள்கிறதில்லை என்று அவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள்? (வெளி. 18:4, 5)
கிறிஸ்தவர்களாகப் பாசாங்கு செய்கிறவர்களிலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டி பாதுகாப்புக்குப் பாத்திரராக ஒதுக்கி வைக்கும் “அடையாளத்தில்” என்ன உட்பட்டிருக்கிறது? (1 பேதுரு 3:21; மத். 7:21-27; யோவான் 13:35)
6 வெளிப்படுத்துதல் 7:9-15-ல் காணப்படுகிற இந்தத் “திரள் கூட்டத்தைப்” பற்றிய விவரிப்பு மேலும் முக்கியமான நுட்ப விவரங்களைக் கூட்டுகிறது. இந்தத் “திரள் கூட்டம்” “மிகுந்த உபத்திரவத்”துக்குப் பின் எப்படித் தோன்றுகிறதென்பதை வேதவசனங்கள் நமக்குச் சொல்லுகையில், அவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு வழிநடத்தின காரணங்களையும் கவனிக்கச் செய்கின்றன.
7 அவர்கள் எல்லா தேசங்களிலிருந்தும், கோத்திரங்களிலிருந்தும், ஜனங்களிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் வருகிற போதிலும் ஒன்றுபட்டு “சிங்காசனத்திற்கு முன்நின்று” சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யொகோவா சர்வலோகப் பேரரசர் என்று தாங்கள் ஒப்புக் கொள்வதைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் அவருடைய அரசாட்சியை உண்மைத்தவறாமல் உறுதியாய்க் கடைப்பிடிப்பதைத் தங்கள் வாழ்க்கை முறையில் நிரூபித்திருக்கின்றனர். இவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருக்கும் இந்தக் காரியம், கடவுளுடைய ஆட்டுக்குட்டியானவராக இயேசுவின் பலியின் பாவநிவாரண விலைமதிப்பு தங்களுக்குத் தேவையென அவர்கள் உணர்ந்திருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (யோவான் 1:29; 1 யோவான் 2:2) விசுவாசத்துடன் அவர்கள் இந்தப் பலியின் ஆதாரத்தின் பேரில் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அதற்கு அடையாளமாக முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர்; அவர்களுடைய வெள்ளை அங்கிகளால் படமாகக் குறித்துக் காட்டப்படுகிறபடி, இப்பொழுது கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்து மகிழ்கிறார்கள். கடவுளுடைய குமாரனில் அவர்களுக்கிருக்கும் விசுவாசத்தை யாவரறிய வெளிப்படையாய்த் தெரிவிப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. (மத். 10:32, 33) இந்த எல்லாவற்றோடும் ஒத்திருக்க, அவர்கள் கடவுளுடைய ஆலயத்தில் அல்லது வணக்கத்துக்குரிய சர்வலோக வீட்டில் கடவுளை வணங்கி அவருக்கு “இரவும் பகலும் சேவை செய்துகொண்டிருப்பதாகக்” காட்டப்படுகிறார்கள். இவ்வாறு தாங்கள், உண்மையான வணக்கத்தைப் பற்றுறுதியுடன் ஆதரிக்கிறவர்கள், அவருடைய ராஜ்யத்தைப் பிரஸ்தாபிக்கிறவர்கள் என்ற ஒரு பதிவைத் தங்களுக்கு உண்டுபண்ணியிருக்கிறார்கள்.—ஏசா. 2:2, 3.
8 இந்தத் தீர்க்கதரிசன படக்குறிப்புகளின் விவரங்கள் உங்களுக்குப் பொருந்துகிறதா? இங்கே விவரிக்கப்பட்டதோடு உங்கள் வாழ்க்கையை மேலும் முழுமையாய் ஒத்திருக்கச் செய்யும்படி தேவைப்படுகிற வழிகள் இருக்கின்றனவா? அப்படியானால், அதைச் செய்வதற்குக் காலம் இதுவே!
ஆவிக்குரிய பரதீஸில் வாழ்தல்
9 “திரள் கூட்டத்தின்” பாகமாகத் தப்பிப் பிழைக்கும் நம்பிக்கை கொண்டவர்களில் நீர் ஒருவரா? யெகோவாவின் நீதியுள்ள வழிகளுக்கு ஒத்துக் கீழ்ப்படிகிறீர்களென்றால், ஆவிக்குரிய பரதீஸ் என்று தகுதியாகவே அழைக்கப்படுகிற வாக்குப்பண்ணப்பட்ட இந்த நிலைமைகளைச் சந்தேகமில்லாமல் ஏற்கெனவே அனுபவித்து மகிழத்தொடங்கியிருக்கிறீர்கள். அப்போஸ்தலனாகிய யோவானுக்குப் பின்வருமாறு சொல்லப்பட்டது: “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்!” (வெளி. 7:16) உங்கள் காரியத்தில் இது எப்படி உண்மையாய் நிரூபித்திருக்கிறது?
10 நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்புள்ள கவனிப்பின் கீழ் வருவதற்கு முன்பாக நீங்கள் நீதிக்காகப் பசிதாகம் கொண்டீர்களா? (மத்தேயு 5:6-ஐ ஒத்துப் பாருங்கள்) அப்படியானால், நீங்கள் ஏங்கியதை யெகோவா மாத்திரமே தம்முடைய குமாரன் மூலமாய் அளிக்கக் கூடும். யெகோவாவின் நீதியுள்ள வழிகளை—அதாவது, அக்கிரமக்காரரை அழிக்கும்படியான அவருடைய நோக்கத்தையும், என்றபோதிலும் ஆதாமின் சந்ததியாருக்கு இரட்சிப்பைக் கூடியதாக்கச் செய்ததில் அவருடைய தகுதியற்றத் தயவையும்—பற்றி நீங்கள் கற்றபோது, சந்தேகமில்லாமல், உங்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக நீங்கள் உண்மையாகவே திருப்தி உணர்வடைந்தீர்கள். கடவுளுடைய வர்த்தையிலிருந்து வரும் ஆவிக்குரிய உணவும் பானமும் அவருடைய அமைப்பின் மூலமாய்ப் பரிமாறப்பட்டு, உங்களுக்குத் தொடர்ந்து மனத்திருப்தியைக் கொண்டுவருகிறது. (ஏசா. 65:13, 14) நீங்கள் கிறிஸ்துவின் மூலமாய்க் கடவுளுக்கு உங்களை ஒப்புக் கொடுத்திருந்தால், இப்பொழுது உங்களுக்கு வாழ்க்கையில் உண்மையான நோக்கம் உண்டு. (யோவான் 4:32-34-ஐ ஒத்துப் பாருங்கள்) பரதீஸான பூமியில் நித்தியமாய் வாழும் சந்தோஷமான எதிர்பார்ப்பு உங்கள் முன் இருக்கிறது, ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவர் “[“திரள் கூட்டத்தை”] ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”
11 நம்பியிருக்கும் “செம்மறியாடுகளைக்” காப்பதைப்போல், நல்லமேய்ப்பர் இந்தத் “திரள் கூட்டத்தைச்” சேர்ந்தவர்களையும் பாதுகாத்து பத்திரமாய் வழிநடத்துகிறார். இதன் காரணமாகவே, குறிப்பாய்ச் சொல்ல, ‘இனி வெயிலாவது பொசுக்கும் உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை’. இது, “திரள் கூட்டத்தாரில்” ஒருவராக நீங்கள் இந்த உலகத்திலிருந்து எந்தத் துன்புறுத்தலையும் அனுபவிக்கமாட்டீர்களென அர்த்தங்கொள்வதில்லை. அதைப் பார்க்கிலும் கடவுளுடைய கோபத்தின் பொசுக்கும் உஷ்ணத்திலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்களென்று இது குறிக்கிறது. பொல்லாதவர்கள் மீது தெய்வீக அழிவை அவர் பொழிகையில், அது உங்களை அழிக்காது. இந்தத் தயவுக்குரிய உறவு என்றென்றும் தொடரக்கூடும்.—எசேக். 38:22, 23; ஒத்துப் பாருங்கள் சங்கீதம் 11:6; 85:3, 4.
12 நீங்கள் உண்மையில் இந்தத் “திரள் கூட்டத்தாரில்” ஒருவராக இருந்தால் மகிழ்ச்சியடைவதற்கு எத்தகைய அதிசயமான காரணங்கள் உங்களுக்கு இருக்கின்றன! பொல்லாதவர்கள் முற்றிலும் நீக்கப்படுவதையும் பின்பு உங்கள் சொந்த மனதும் உடலும் பாவத்தின் எல்லா விளைவுகளிலிருந்து உண்மையில் விடுதலையாக்கப்படுவதையும் காணும் அதிசயமான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. இப்பொழுதேயும், கடவுளை அறியாததன் காரணமாக மக்கள் அனுபவிக்கும் துக்கம் உங்களைத் தொல்லைப்படுத்துகிறதில்லை. யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற ஜனங்களுக்கு மாத்திரமே உரியதாயிருக்கிற மகிழ்ச்சியை நீங்கள் அறியத்தொடங்குகிறீர்கள். (சங். 144:15b, தி.மொ.) இவ்வகையில், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்,” என்ற இந்த வாக்கின் நிறைவேற்றத்தை நீங்கள் ஏற்கெனவே அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள்.
13 “திரள் கூட்டத்தார்” இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப் பிழைத்திருக்கப் போவதைப்போல் ஆவிக்குரிய பரதீஸைக் குறித்ததிலும் இருக்கும். நீங்கள் இவர்களில் ஒருவராக இருந்தால் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி படிப்படியாக முன்னேறுகையில் ஆவிக்குரிய விருந்தின் கொளுத்த பதார்த்தங்களை நீங்கள் தொடர்ந்து அனுபவிப்பீர்கள். கடவுளுடைய தவறாத நோக்கம் மெய்யாக மகிமையாய் நிறைவேறுவதை நீங்கள் காண்கையில் கடவுளைப் பற்றிய உங்களுடைய அறிவும் ஆழமாகும். உண்மையான வணக்கத்தில் உங்களோடு ஒன்றுசேர மரித்தோரிலிருந்து படிப்படியாய் வரும் திரள் கூட்டத்தைத் திரும்ப வரவேற்பதில் நீங்கள் பங்குகொள்கையில் உங்கள் மகிழ்ச்சி பெருகும். அப்பொழுது அருளப்பட்டிருக்கும் இயற்கை பொருள் சம்பந்த ஆசீர்வாதங்கள் கடவுளுடைய உண்மைத்தவறா ஊழியர்கள் யாவருக்கும் விசேஷமாய் அருமையாயிருக்கும், ஏனெனில் அவற்றை யெகோவா தாமே வெளிப்படுத்தும் அவருடைய அன்பின் வெளிக்காட்டுகளாக காண்பார்கள்.—ஏசா. 25:6-9; யாக். 1:17.
மறு கலந்தாலோசிப்பு
● இந்தத் “திரள் கூட்டத்தை” எந்த அசாதாரண சம்பவத்துடன் பைபிள் இணைக்கிறது, எப்படி?
● தெய்வீகத் தயவுபெற்ற இந்தத் “திரள் கூட்டத்தில்” அடங்கியிருக்க நாம் உண்மையில் விரும்பினால், இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?
● ஆவிக்குரிய பரதீஸின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவை?
[கேள்விகள்]
1. (எ) கிறிஸ்தவ காலத்துக்கு முன்னிருந்து கடவுளுடைய ஊழியர்களாவது அல்லது 1,44,000 பேராவது தங்கள் பரிசைப் பெறுவதற்கு முன்பாக, எதை அனுபவிக்க வேண்டும்? (பி) ஆனால் “மிகுந்த உபத்திரவம்” தாக்குகையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு திரள் கூட்டத்தாருக்கு எது சாத்தியமாயிருக்கும்?
2. வெளிப்படுத்தின விசேஷம் 7:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் “திரள் கூட்டம்” இன்னதென்று தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு எது வழிநடத்தினது?
3. அவர்கள் ‘சிங்காசனத்திற்கு முன் நிற்பது’ அவர்களைப் பரலோக வகுப்பாரென்று ஏன் குறிக்கிறதில்லை?
4. (எ) அவர்கள் தப்பிப் பிழைக்கும் “மிகுந்த உபத்திரவம்” என்ன? (பி) வெளிப்படுத்துதல் 7:11, 12-ல் கூறப்பபட்டிருக்கிறபடி இந்தத் “திரள் கூட்டத்தை” யார் கவனித்துப் பார்த்து அவர்களோடு வணக்கத்தில் பங்குகொள்கிறார்கள்?
5. (எ) பாதுகாக்கப்படப் போகிற இந்தத் திரள் கூட்டத்தின் பாகமாயிருக்க என்ன தேவை என்பதை நாம் எப்படி உறுதியாகத் தெரிந்து கொள்ளலாம்? (பி) இந்தப் பத்தியின் முடிவிலுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம், “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப் பிழைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று விளக்குங்கள்.
6. “திரள் கூட்டத்தைப்” பற்றி யோவான் விவரித்திருப்பது அவர்கள் பாதுகாக்கப்பட்டதன் காரணத்தை விளங்கிக் கொள்ள நமக்கு எப்படி உதவி செய்கிறது?
7. “மிகுந்த உபத்திரவத்”துக்கு முன்பு அவர்கள் என்ன செய்தார்கள், இது எப்படித் தெரிவிக்கப்படுகிறது?
8. இந்தத் தகவல் நமக்கு நன்மை பயக்குவிக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?
9. இப்போதே இந்தத் “திரள் கூட்டத்தார்” அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை யோவான் எப்படி விவரிக்கிறான்?
10. (எ) ஆவிக்குரிய கருத்தில் இந்தத் “திரள் கூட்டத்தார்” “இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை” என்பது எப்படி உண்மையாயிருக்கிறது? (பி) நீங்கள் இதை அனுபவித்திருக்கிறீர்களா?
11. (எ) ‘இனி வெயிலாவது பொசுக்கும் உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை,’ என்பது எவ்வகையில் நிறைவேறுகிறது? (பி) இது உங்களுக்கு எவ்வளவு முக்கியமாயிருக்கிறது?
12. இப்பொழுதேயும் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர்கள் எப்படித் துடைக்கப்படுகின்றன?
13. கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி படிப்படியாய் முன்னேறுகையில் ஆவிக்குரிய பரதீஸின் மகிழ்ச்சிகளை எவை மேலும் மிகுதியாக்கும்?