அதிகாரம் 7
முன்னறிவிக்கப்பட்ட உலக அழிவு எப்பொழுது வரும்?
போர், குற்றச்செயல்கள், பூமியை அசுத்தமாக்குதல் ஆகியவை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதைக் காண்பது எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கும்! தனக்கும் தன் குடும்பத்துக்கும் பூரண பாதுகாப்பு இருக்கக்கூடிய உண்மையில் நீதியுள்ள ஒரு நிர்வாகத்தின்கீழ் வாழ்வது எவ்வளவு இன்பமாயிருக்கும்! கடவுள் இந்தக் காரியங்களை மெய்ம்மையாக்குவார் என்று பைபிள் காட்டுகிறது. ஆனால் எப்பொழுது?
2 கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குக்கு வழி உண்டாக்குகிற இந்த உலக அழிவைக் குறித்து அப்போஸ்தலனாதிய பவுல் பின்வருமாறு சொல்லுகிறான்: “இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவின், NW] நாள் வரும்.” அவன் மேலும் சொல்வதாவது: “சகோதரரே, அந்த நாள் திருடனைப் போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.” (1 தெசலோனிக்கேயர் 5:2, 4) ஆகவே, எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுக்கத் தவறுகிறவர்கள், “யெகோவாவின் நாள்” வந்துவிடுகையில், திடீரென்று கண்ணியில் அகப்பட்டுக்கொண்ட மிருகங்களைப்போல் இருப்பார்கள். ஆனால் இது உங்களுக்கு நடக்கவேண்டியதில்லை. இந்த வேதவசனத்தின் பிரகாரம், ‘அந்தகாரத்தில் இராத’ மக்கள் இருக்கின்றனர். எப்படியெனில் நம்முடைய நாளைப் பற்றிக் கடவுளுடைய வார்த்தையில் சொல்லியிருப்பவற்றை அவர்கள் ஆராய்ந்துபார்த்து இருதயத்தில் ஏற்கிறார்கள்.—லூக்கா 21:34-36.
3 இந்த 20-ம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகளை பைபிள் தெளிவாக விவரிக்கிறது. ஆனால் இதை அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்தது! இந்த நிகழ்ச்சிகளில் பல பொதுவாக அறியப்பட்டிருக்கையில் அவற்றின் முழு உட்கருத்தை பைபிள் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது.
4 நம்முடைய நாளைப் பற்றி பைபிளிலுள்ள தீர்க்கதரிசன செய்தி பின்வரும் நுட்ப விவரங்களைத் தருகிறது: (1) “மனுஷருடைய ராஜ்யத்தைத்” “தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்குக்” கடவுள் கொடுக்கப்போகும் அந்தத் திட்டமான ஆண்டு. (2) “இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு” என்றறியப்பட்டிருக்கும் காலப் பகுதியினூடே நடைபெறவிருக்கும் அறிகுறி பொருள்கொண்ட நிகழ்ச்சிகள். (3) அக்காலத்தில் உண்டாகும் கவனிக்கத்தக்க மத நிலைமாற்றங்கள். (4) “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்” தொடக்கத்தைக் கண்ட அந்தச் சந்ததியில் சிலராவது தப்பிப்பிழைத்தல், (5) உலக அழிவு தொடங்கும் தறுவாயில் இருக்கிறதென்பதற்குக் கடைசி முன் அறிகுறியாக உலக விவகாரங்களில் கவனத்தை விரைவில் கவரும் சூழ்நிலைத் தோற்றம். இந்தக் குறிப்புகளை நாம் ஆராயலாம்.
(1) குறிக்கப்பட்ட அந்த ஆண்டு—பொ.ச. 1914
5 மனித விவகாரங்களைப் பரந்தவண்ணமாய்ப் பாதித்து விளைவுகளை உண்டுபண்ணும் பெரும் நிகழ்ச்சிகள் நடந்தேறும் காலமாக பைபிள் தீர்க்கதரிசனம் பொ.ச. 1914-ம் ஆண்டைக் குறித்ததென மிக முன்பே 1876-லேயே யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தார்கள். இந்த உண்மைக்குக் காரணத்தை யாவரும் அறிய பரப்பினார்கள்.
6 தானியேல் 4-ம் அதிகாரத்துக்கு உங்கள் பைபிளைத் திறந்து பார்த்தால், பூமியின்மேல் அரசாதிகாரத்தைக் குறித்தக் கடவுளுடைய நோக்கத்தை வெளிப்படுத்தும் தீர்க்கதரிசனத்தை அதில் நீங்கள் காண்பீர்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்துக்குப் பின்னாலுள்ள நோக்கம், “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடு”க்கிறார் என்று உயிர்வாழும் ஜனங்கள் அறியும்படிக்கே எனக் கூறப்பட்டிருக்கிறது. (வசனங்கள் 2, 3, 17) மகா உன்னதமானவர் ‘ராஜ்யத்தைக்’ கிறிஸ்து இயேசுவுக்கே கொடுக்கிறார். பரலோக அரசராகக் கிறிஸ்துவுக்கு “உலக அரசாட்சி” கொடுக்கப்படுகிற அந்தக் காலத்தைப் பற்றி பைபிளின் கடைசி புத்தகம் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15; 12:10, தி.மொ.) அப்படியானால், இது, “உலக அரசாட்சி”யை இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுப்பதன்மூலம் கடவுள் மனித விவகாரங்களில் தலையிடப் போகும் அந்தக் காலத்தைப் பற்றியே தானியேலின் தீர்க்கதரிசனம் பேசுகிறதென்று பொருள்படுகிறது. இது எப்பொழுது நடக்குமென தீர்க்கதரிசனம் காட்டுகிறது?
7 தானியேல் புத்தகத்திலுள்ள இந்தத் தீர்க்கதரிசன சொப்பனம் ஒரு மிகப் பெரிய மரத்தை விவரிக்கிறது, அது வெட்டப்பட்டு “ஏழு காலங்கள்” அதன்பேரில் கடந்து போகுமட்டும் இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டது. இந்தக் காலத்தின்போது, அதற்கு “மிருக இருதயம்” கொடுக்கப்படும். (தானியேல் 4:10-16) இது எதைக் குறித்தது? தானியேல் பின்வருமாறு விளக்கும்படி கடவுள் செய்தார்: பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தன் நல்லறிவு நிலையை இழந்து, தன் சிங்காசனத்திலிருந்து நீக்கப்பட்டு ஒரு மிருகத்தைப்போல் வாழும்படி மனிதர் மத்தியிலிருந்து விரட்டப்படுவான். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அரசனின் நிதான அறிவுநிலை திரும்பும். இது அரசனுக்கு உண்மையில் நடந்தது, கடவுளுடைய ஆட்சியின் ஈடற்ற உயர்வை ஒப்புக்கொண்டவனாகத் தன்னுடைய சிங்காசனத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டான். (தானியேல் 4:20-37) ஆயினும் இதெல்லாம் மேலும் பெரிய உட்பொருளைக் கொண்டிருந்தது. இந்தக் காரணத்தினிமித்தம் இது பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
8 இந்த மேலும் பெரிய உட்பொருள் பூமியிலிருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கப்போகிற மேலும் வல்லமை வாய்ந்த ஆட்சி சம்பந்தப்பட்டது. தீர்க்கதரிசனம் சொல்லுகிற பிரகாரம், அதிலிருந்து “எல்லா ஜீவனுக்கும் . . . ஆகாரம்” உண்டாயிருக்கும், மேலும் மிருகங்களுக்கும் பறவைகளுக்குங்கூட பாதுகாப்பு கிடைக்கும். (தானியேல் 4:12) இந்த நன்மைகளை உண்மையில் அளிக்கக்கூடிய அந்த ஒரே ஆட்சி கடவுளுடைய ராஜ்யமே. இந்த அரசாங்கத்தின் நீதியுள்ள நியமங்கள் எருசலேமில் யூதாவின் அரசர்களுடைய ஆட்சி சம்பந்தப்பட்ட யூதாவின் சரித்திரத்தில் தெளிவுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் உண்மையற்றுப்போனதன் காரணமாக பொ.ச.மு. 607-ல் பாபிலோன் யூதாவைக் கைப்பற்றும்படி யெகோவா அனுமதித்தார். இது அந்தச் சொப்பனத்தில் கண்ட மரம் வெட்டப்பட்டு அதன் அடிமரத்தைச் சுற்றி கட்டுப்படுத்தும் விலங்குகள் போடப்பட்டதுபோல் இருந்தது. அதுமுதற்கொண்டு புறஜாதி அரசாங்கங்கள் தெய்வீகத் தலையிடுதல் இல்லாமல் உலக ஆட்சியைச் செலுத்தின. பைபிளில் இந்தப் புறஜாதி ராஜ்யங்கள் “மிருகங்களாகக்” குறித்துக் காட்டப்படுவதால், அது, பரலோகத்திலிருந்து ஒரு தூதன் பின்வருமாறு அறிவித்ததைப்போல் இருந்தது: “மிருக இருதயம் அதற்குக் கொடுக்கப்படக்கடவது; அதன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.” (தானியேல் 4:16; 8:1-8, 20-22) ஆனால் கடைசியில், மிருகத்தைப் போன்ற அரசாங்கங்களின் அந்த “ஏழு காலங்களின்” அரசாட்சி முடிவடையும். அப்பொழுது “விலங்குகள்” நீக்கப்படும், “உலக அரசாட்சி”யை யெகோவா கொடுக்கும் அவரால் உலக ஆட்சி செலுத்தப்பட ஆரம்பிக்கையில், அந்த “மரம்” மறுபடியும் வளரும்.
9 இந்த “ஏழு காலங்கள்” எவ்வளவு காலம் நீடித்தவை? ஏழு ஆண்டுகளைப் பார்க்கிலும் மிக அதிகம் நீடித்தவை, எப்படியென்றால் நூற்றாண்டுகளுக்கப்பால் இயேசு கிறிஸ்து, “இந்த ராஜ்யங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” இன்னும் தொடர்ந்திருந்தனவென்று தெரிவித்தார். பொ.ச.மு. 607-ல் பாபிலோன் எருசலேமைக் கைப்பற்றினது முதற்கொண்டு அவை உலக ஆட்சி செலுத்தி வந்தன, இன்னும் சிறிது காலத்துக்கு அவ்வாறு தொடர்ந்து செலுத்தும்.—லூக்கா 21:24.
10 தீர்க்கதரிசன “காலங்களை” பைபிள் எவ்வாறு குறிப்பிடுகிறதென்பதை நீங்கள்தாமே கவனித்துப் பாருங்கள். வெளிப்படுத்துதல் 11:2, 3-ல், 1,260 நாட்கள், 42 மாதங்கள் அல்லது மூன்றரை ஆண்டுகள் அடங்கியவையென காட்டியிருக்கிறது. வெளிப்படுத்துதல் 12:6, 14-ல் இதே எண்ணிக்கையான நாட்கள் (1,260) குறிப்பிட்டிருக்கின்றன, ஆனால் அவை “ஒரு காலமும் [1] “காலங்களும் [2] அரைக்காலமும்” அல்லது, மூன்றரை “காலங்கள்” என குறிப்பிட்டிருக்கின்றன. இந்தக் “காலங்களில்” ஒவ்வொன்றும் 360 நாட்கள் (3 1⁄2 × 360 = 1,260). “ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக” என்ற விதியின்படி இந்தத் தீர்க்கதரிசன “காலங்களின்” ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முழு ஆண்டைக் குறிப்பிட்டு நிற்கிறது. (எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6) இவ்வாறு அந்த “ஏழு காலங்கள்” (7×360) 2,520 ஆண்டுகளுக்குச் சமம். யூதாவிலிருந்த கடவுளுடைய மாதிரி குறிப்பான ராஜ்யம் பாபிலோனால் தாழ்த்தப்பட்டபோதான பொ.ச.மு. 607-ன் இலையுதிர் காலத்திலிருந்து கணக்கிட 2,520 ஆண்டுகள் பொ.ச. 1914-ன் இலையுதிர் காலத்துக்கு (606 1/4+1913 3/4=2,520) நம்மைக் கொண்டுவருகின்றன. இயேசு கிறிஸ்துவுக்கு “உலக அரசாட்சி” ஒப்படைக்கப்பட வேண்டிய ஆண்டு இதுவே.
11 பைபிள் பொ.ச. 1914-ம் ஆண்டைச் சுட்டிக் காட்டினதென யாவரறிய அறிவித்தப் பின்பு, யெகோவாவின் சாட்சிகள் இந்தப் பலனைக் காண்பதற்கு முன்பாகப் பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1914-ம் ஆண்டின் முற்பகுதியில் உலகத்தின் சமாதான பாங்கு, ஒன்றும் நடக்கப் போவதில்லையெனத் தோன்றும்படி செய்தது. ஆனால் கோடைக்காலம் முடிவதற்கு முன்பே இந்த உலகம் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒரு போரில் மூழ்கியபோது சாட்சிகளின் நம்பிக்கை சரியென்று நிரூபிக்கப்பட்டது. 1914 என்ற புத்தகத்தின் மதிப்பாய்வுரையில் சரித்திராசிரியர் A.L. ரெளஸ் பின்வருமாறு எழுதினார்: “ஒரு சகாப்தத்தின் முடிவையும் மற்றொன்றின் தொடக்கத்தையும் குறித்துக் காட்டின ஓர் ஆண்டு என்றாவது இருந்ததென்றால், அதுவே 1914 ஆகும். அந்த ஆண்டு அந்தப் பழைய உலகத்தை அதன் பாதுகாப்பு உணர்ச்சியோடுகூட ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து, நம்முடைய அனுதின பங்காயிருக்கும் பாதுகாப்பின்மையே இதன் தனி பண்பாயிருக்கிற இந்த நவீன சகாப்தத்தைத் தொடக்கி வைத்தது.”44 பிரிட்டிஷ் ஆட்சி நிபுணர் உவின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய அறிக்கை ஒன்று குறிப்பிடுவதாவது: “ஜூன் 28, 1914-ல், சரஜீவோவில் வெடிக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு, பாதுகாப்புக்கும் படைப்பியல்பு பகுத்தறிவுக்குமுரிய அந்த உலகத்தை நொறுக்கித் தள்ளிவிட்டது. . . . அது முதற்கொண்டு இவ்வுலகம் அதே இடமாக ஒருபோதும் இருக்கவில்லை. . . . அது ஒரு திரும்புகட்டமாக இருந்தது; அமைதியான, கவர்ச்சிகரமுள்ள அந்த நேற்றைய அதிசய உலகம், மறுபடியும் ஒருபோதும் தோன்றாத வண்ணம் மறைந்து இல்லாமற் போய்விட்டது.”45 பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பைபிள் தீர்க்கதரிசனத்தால் குறிக்கப்பட்ட அந்த ஆண்டு, நிச்சயமாகவே சரித்திரத்தில் ஒரு திரும்புகட்டமாக நிரூபித்தது.
12 கிறிஸ்து சிங்காசனத்திலேற்றப்பட்டது, பூமியில் முன்னாருபோதும் நடந்திராத வகையான போரால் குறிக்கப்படுவது முதலில் வினோதமாகத் தோன்றலாம். ஆனால், இந்த “உலகத்தின் அதிபதி” பிசாசாகிய சாத்தான் என்பதை மறந்து விடாதீர்கள். (யோவான் 14:30) கடவுளுடைய ராஜ்யம் பூமியின் விவகாரங்களின்மீது ஆட்சி அதிகாரம் கொண்டிருப்பதைக் காண அவன் விரும்பவில்லை. மனிதரின் கவனத்தை ராஜ்யத்திலிருந்து வேறு வழியில் திருப்ப, அரசாட்சி தங்களுக்குரியதென்ற தங்கள் சொந்த உரிமைபாராட்டல்களை விடாப்பிடியாய் வலியுறுத்துவதற்கு, அவர்கள் ஒரு போரில் ஈடுபடும்படி அவன் சூழ்ச்சிசெய்து தூண்டினான். மேலும், இந்த ராஜ்ய அரசாங்கம் பிறந்தவுடனே அதை விழுங்கிப்போட சாத்தானும் அவனுடைய பேய்களும் முயன்றார்களென்று பைபிள் காட்டுகிறது. இதன் விளைவென்ன? “வானத்திலே யுத்தமுண்டாயிற்று . . . உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத் தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” சாத்தானுக்குக் “கொஞ்சக்கால மாத்திரம்” மீந்திருந்ததால் அவன் மிகுந்த கோபம் கொண்டிருந்தான். (வெளிப்படுத்துதல் 12:3-12) பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் இந்த விளைவைப் பற்றித் திருத்தமான விவரிப்பை அளித்தது.
(2) தனி அறிகுறி பொருள்கொண்ட நிகழ்ச்சிகள்
13 இயேசு, ‘தாம் வந்திருப்பதையும் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவையும் குறிக்கும் அடையாளத்தை’ பொ.ச. 33-ம் ஆண்டில் நுட்ப விவரமாய்க் கூறினார். இது மத்தேயு 24, 25-ம் அதிகாரங்களிலும் மாற்கு 13-லும் லூக்கா 21-லும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எருசலேமில் தம்முடைய சீஷர்களின் ஒரு தொகுதியுடன் இருக்கையில், இயேசு, அங்கிருந்த ஆலயத்தின் அழிவை முன்னறிவித்திருந்தார். பின்பு அவருடைய சீஷர்கள் பின்வருமாறு கேட்டனர்: “இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்? எங்களுக்குச் சொல்லும்.”—மத்தேயு 24:1-3, NW.
14 இதற்குப் பதிலளித்து இயேசு சொன்னதாவது: “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” லூக்கா 21:11 (தி.மொ.) காட்டுகிற பிரகாரம், “இங்குமங்கும் . . . கொள்ளைநோய்கள்” உண்டாகுமென்றும் அவர் குறிப்பிட்டார், “அக்கிரமம் மிகுதியாவதைப்” பற்றி அவர் எச்சரித்து, இதன் காரணமாக “அநேகருடைய அன்பு தணிந்துபோம்,” என்று கூறினார். மேலும் தனிக் கவனிப்புக்குரிய முறையில்: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்,” (NW) என்று அவர் முன்னறிவித்தார்.—மத்தேயு 24:4-14.
15 ஆனால், ‘பொ.ச. 70-ம் ஆண்டில் ரோமர் எருசலேமை அழிப்பதற்கு முன்னால் இந்தத் தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேற்றமடைந்தன அல்லவா?’ என்ற கேள்வி ஒருவேளை கேட்கப்படலாம். ஆம், இவற்றில் சில நிறைவேற்றமடைந்தன. ஆனால், இந்தத் தீர்க்கதரிசனங்கள்தாமே காட்டுகிற பிரகாரம், மேலும் அதிகம் வரவிருந்தன. உண்மைதான், இயேசு, தம்முடைய சீஷருக்கு உடனடியான அக்கறைக்குரியதாயிருந்த ஒரு கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆனால், “மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்” வரப்போவதும் “தேவனுடைய ராஜ்யம்” சமீபமாயிருப்பதுமான அந்தக் காலத்தைப் பற்றிய தொலைதூர தகவலை அளிப்பதற்கு அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.—லூக்கா 21:27, 31.
16 நிச்சயமாகவே, இந்தக் காரியங்கள், பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவு வருவதற்குள் நடந்தேறவில்லை. ஏறக்குறைய பொ.ச. 96-ல் எழுதப்பட்ட பைபிளின் கடைசி புத்தகம், ராஜ்யம் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் இன்னும் எதிர்காலத்தில் நிகழவிருந்தனவென காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 1:1; 11:15-18; 12:3-12) இயேசு முன்னறிவித்த போர்கள், உணவு குறைபாடுகள், கொள்ளை நோய்கள் ஆகியவை அசாதாரண அளவில், இன்னும் எதிர்கால சம்பவங்களாயிருக்குமென அடையாளக் குறிப்பான மொழிநடையில் வெளிப்படுத்துதல் காட்டுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் எல்லா எதிரிகளையும் கிறிஸ்து வென்று கீழ்ப்படுத்தத் தொடங்கி முடிக்கும் அந்தக் காலத்தை அவை குறிக்கும். (வெளிப்படுத்துதல் 6:1-8) இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் சில பாகங்கள் முதல் நூற்றாண்டில் நிறைவேற்றமடைந்த இந்த உண்மை அதைச் சத்தியமென முத்திரையிட்டது; மேலும் சம்பவிக்குமென்று இயேசு சொன்ன மற்ற எல்லாவற்றிலும் திட நம்பிக்கை வைப்பதற்கு நேர்மை வாய்ந்தக் காரணத்தைக் கொடுக்கிறது.
17 இத்தீர்க்கதரிசனங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பெரிய, பூர்த்தியான நிறைவேற்றத்தைக் கண்டிருக்கின்றனவா? எழுபதுக்குக் குறைந்த வயதுள்ள செய்தித் தெரியாத ஆட்கள், நம்முடைய காலங்கள் இயல்பான நிலையில் இருப்பதுபோல் உணரலாம், ஏனென்றால் காரியங்கள் வேறுபட்டிருந்த ஒரு காலம் அவர்கள் நினைவில் இல்லை. ஆனால் முதிர்வயதான ஆட்களும், சரித்திர செய்தி அறிந்திருக்கிற மற்றவர்களும் காரியம் அவ்வாறில்லையென தெரிந்திருக்கிறார்கள். 1914-ன் நிகழ்ச்சிகளைக் குறித்து, சரித்திர புத்தகம் ஒன்றில் சொல்லியிருக்கிற பிரகாரம்: “பதினைந்து நாடுகள் மாத்திரமே இந்தப் போரில் உட்படவில்லை . . . ஆனால் இவற்றிற்குள் சமாதான மத்தியஸ்தனாக நடப்பதற்கு வல்லமை கொண்டிருக்கக் கூடிய எந்தப் பெரிய நாடும் இல்லை. உலக சரித்திரத்தில் இது ஒருபோதுமே சம்பவித்ததில்லை; எந்தப் போரும் இப்பேர்ப்பட்ட பரப்பளவுகளை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்,’ என்ற பரிசுத்த பைபிளின் இந்தத் தீர்க்கதரிசனம் சொல்லர்த்தமாய் நிறைவேற்றமடைந்தது.”46
18 ஆனால் இயேசு சொன்ன “அடையாளத்தின்” பாகம் இத்தகைய காரியங்கள் மாத்திரமேயல்ல. ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தி அவர் பின்வருமாறு கூறினார்: “அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 21:29-32) பருவமில்லாத காலத்தில் ஒரே ஒரு மரம் தளிர்க்கிறதை நீங்கள் கண்டால் வசந்தகாலம் நெருங்கிவிட்டதென்று எண்ணமாட்டீர்கள். ஆனால், சரியான காலத்தில் எல்லா மரங்களும் தளிர்க்கிறதை நீங்கள் காண்கையில் அது எதைக் குறிக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதைப் போலவே, தாம் “வந்திருப்பதும்” “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவும்,” வெறும் போரினால் மாத்திரமல்ல, எல்லாம் ஒரே சந்ததியின் வாழ்நாளில் நடைபெறும் பல காரியங்களால் குறிக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்.
19 இந்தக் காரியங்கள் சம்பவித்திருக்கின்றனவா? “அடையாளம் என்னவாயிருக்கும்?” என்ற தலைப்பைக் கொண்டுள்ள தொடர்ந்துவரும் அட்டவணையை ஆராய்ந்து பார்க்கையில், இதற்கு முந்தின நூற்றாண்டுகளில் நடந்த போர்களைப்பற்றி நீங்கள் வாசித்தது நினைவுக்கு வரலாம். ஆனால் முதல் உலகப் போர் மற்ற எல்லாவற்றிலுமிருந்து தனி மாதிரியாக, சரித்திரத்தில் ஒரு திரும்புகட்டமாகத் தோன்றிநிற்கிறது. மேலும் 1914-க்கு முன்னால் கவனிக்கத்தக்க உணவு குறைபாடுகள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் நடந்த காலங்கள், சமாதானத்தையும் பாதுகாப்பையும் முன்னேற்றுவிக்க அசாதாரண முயற்சிகள் ஆகியவை நிகழ்ந்திருப்பது உங்கள் நினைவுக்கு வரலாம். எனினும், சரித்திரத்தில் வேறு எந்தக் காலத்திலும், இந்த எல்லாக் காரியங்களும் ஒரே சந்ததியின்மேல் இப்பேர்ப்பட்ட சமாளிக்க முடியாத மிகப் பேரளவில் வந்திருக்கவில்லை. மெய்யாகவே, 1914 முதற்கொண்டு சம்பவித்துவரும் இந்நிகழ்ச்சிகள் இந்த அடையாளத்தை நிறைவேற்றுகிறதில்லை என்றால், இதைவிட அதிகமான வேறு என்னதான் தேவையாயிருக்கிறது? எவ்வித சந்தேகமுமில்லாமல், நாம், ராஜ்ய வல்லமையில் இயேசு ‘வந்திருக்கும்’ காலத்தில் வாழ்கிறோம்.
20 “அடையாளத்தின்” இந்த அம்சங்கள் தோன்றுவது, கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியிலிருந்து எல்லா அக்கிரமத்தையும் உடனடியாகச் சுத்திகரிக்கும் என்று பொருள்படவில்லை. இயேசு முன்னறிவித்தபடி, “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமே.” (மத்தேயு 24:8) மற்றவை பின்தொடர வேண்டும். தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “முதல் உலகப் போரும் அதன் பின்விளைவும், 1930-க்குரிய பத்தாண்டுகளின் முற்பகுதியின்போது சரித்திரத்திலேயே மிகப் பெரிய பொருளாதார மந்தத்துக்கு வழிநடத்தின. இந்தப் போரின் விளைவுகளும் சமாதானத்துக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்வதற்குரிய பிரச்னைகளும் ஏறக்குறைய எல்லாத் தேசங்களிலும் அமைதிக் குலைவுக்கு வழிநடத்தின.”47 ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் திடீரென்று தொடங்கினது. இது முதல் உலகப் போரைப் பார்க்கிலும் பல மடங்குகள் மிகப் பயங்கரமாயிருந்தது. அது முதற்கொண்டு, உயிரையும் உடைமையையும் மதியாமை வளர்ந்து விட்டிருக்கிறது, குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட பயம் அனுதின வாழ்க்கையின் பாகமாகிவிட்டது. நல்லொழுக்க நெறிகள் ஒருபுறமாகத் தள்ளிவிடப்பட்டிருக்கின்றன. ஜனத்தொகை வெடி திணறவைக்கும் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது, அவை தீர்க்கப்படாதிருக்கின்றன. தூய்மைக்கேடு வாழ்க்கைக்குரிய பண்பைக் கெடுத்தும் அதை அழித்துங் கொண்டிருக்கிறது. அணுசக்தியால் பேரழிவுண்டாக்கும் பயமுறுத்தலுங்கூட இருக்கிறது.
21 இந்த “வேதனைகள்” எப்பொழுது தொடங்கின? “இந்த உலகம் பைத்தியமடைந்த நாள் . . . 1914 [ல்] என்று, அடுத்த நூற்றாண்டிலுள்ள ஒரு சரித்திராசிரியன் நன்றாய் முடிவு செய்யக்கூடும்,” என்று லண்டன் ஸ்டார் குறிப்பிட்டது.48 இந்த ஆண்டாகிய பொ.ச. 1914, பைபிள் தீர்க்கதரிசனத்தில் வெகு காலத்துக்கு முன்பே குறிக்கப்பட்டது.
(3) கவனிக்கத்தக்க மத நிலைமாற்றங்கள்
22 “இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு” காலத்தின்போது சம்பவிக்கப் போவதாக இயேசு குறிப்பிட்ட உட்பொருளுள்ள நிகழ்ச்சிகளுக்குள் பின்வருபவையும் இருந்தன: “அநேகக் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:11, 12) அக்கிரமம் மிகுதியாவதையும் அன்பு தணிந்துபோவதையும் பொய்த் தீர்க்கதரிசிகளின், அதாவது, கடவுளின் சார்பில் பேசுவதாகப் பொய்யாய் உரிமைபாராட்டுகிற மதபோதகர்களின் செல்வாக்குடன் இயேசு சம்பந்தப்படுத்தினார். மதகுருமார், தேசங்களின் போர்களை ஆதரித்தனர், பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள ஒழுக்கத் தராதரங்களைக் காலப் பொருத்தமற்றவையென அவமதித்துத் தள்ளினர் மேலும் பைபிளின் பகுதிகளைப் பொய்யெனக் குறிப்பிட்டனர் என்பவற்றிற்கு அத்தாட்சி இந்தப் புத்தகத்தின் ஆரம்பப் பகுதியில் கொடுக்கப்பட்டது. இவற்றின் விளைவு என்ன? கடவுள்பேரிலும் அவருடைய சட்டங்களிலும் ‘அன்பு தணிந்துபோவதே’யாகும். அதிகாரத்தை மதியாமையும் தன்னைப் போன்ற உடன் மனிதனுக்கு அக்கறை காட்டாமையும் உட்பட ஒழுக்க நடத்தையின் சீர்குலைவில் இது பெரும்படியான காரணமாயிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
23 இந்த நிலைமைகளின் காரணமாக, லட்சக்கணக்கில் ஆட்கள் மத அமைப்புகளிலிருந்து விலகிவிட்டனர். சிலர் பைபிளுக்குத் திரும்பி அதன் வழிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் விலகிக்கொள்கின்றனர். பலர், மதத்தின் எதிரிகளாகிக் கொண்டிருக்கின்றனர். பத்திரிகை பத்தியில் எழுதுபவர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “உலகத்தின் தொந்தரவு எவ்வளவு மிகுதியாய் மதத்தில் வேரூன்றியிருக்கிறதென்பதால் ஒருவர் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. மேலும் மதப் போரின் இரத்தஞ்சிந்தும் வெறியார்வத்தை உலகப்பிரகாரமான ஒருசில அரசியல் போட்டியுணர்ச்சிகளே எப்போதாவது தோற்றுவிக்கின்றன.” இதனால் அவர் கேட்டதாவது: “மதத்தை ஒழித்துவிட்டாலென்ன?”49
24 பெரும் பகுதி மதங்கள் படிப்படியாய் வீழ்ச்சியடைவது ஆதாரமூலத்தால் நன்றாய்க் காட்டப்பட்டிருக்கிறது. உதாரணமாக, இத்தாலியில் 95 சதவீத மக்கள் கத்தோலிக்கரென தங்களை உறுதிப்படுத்துகையில், “ஞாயிற்றுக் கிழமை சர்ச் ஆஜர் 20 சதவீதத்துக்கும் குறைவென மதிப்பிடப்பட்டிருக்கிற”தென்று இத்தாலியைப் பற்றிய ஓர் அறிக்கை காட்டுகிறது.50 மற்றொரு அறிக்கை, பத்து ஆண்டுகளில் உலகமுழுவதிலும் குருமாரின் எண்ணிக்கையில் 25,000 குறைந்துவிட்டதென்று வெளிப்படுத்துகிறது.51 ஐக்கிய மாகாணங்களில் ஒரு சர்ச்சின் ஆராய்ச்சி, “2000 ஆண்டுக்குள் அமெரிக்கக் கத்தோலிக்கக் குருத்துவத்தில் 50 சதவீதமளவுக்கு (மேலும்) குறுகிவிடுமென” முன்மதிப்பிட்டுரைத்தது.52 U.S. நியூஸ் அண்ட் உவோர்ல்ட் ரிப்போர்ட் ஐக்கிய மாகாணங்களில் “கத்தோலிக்க சமய போதனைக் கூட்டங்களில் பெயர் பதிவுசெய்யும் ஆண்களின் எண்ணிக்கை மிகப் பேரளவில் குறைந்திருப்பதைக்” குறிப்பிட்டது, 20-க்கும் குறைந்த ஆண்டுகளில் உச்சநிலை 48,992-லிருந்து 11,262-க்குக் குறைந்துவிட்டது.53 உலகமெங்கும் “15 ஆண்டுகளில் மாடக் கன்னிகளின் எண்ணிக்கை 1,81,421-லிருந்து 1,21,370-க்கு வீழ்ந்துவிட்டது”54 என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. பெரும்பான்மையான மதங்களில் நிலைமை இதைப்போன்று இருக்கிறது.
25 இதற்கு நேர்மாறாக, இந்த முடிவின் காலத்தில், சகல ஜாதிகளிலுமிருந்து வரும் “திரள் கூட்டத்தார்” யெகோவாவின் வணக்கத்துக்குக் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்று பைபிள் தெரிவிக்கிறது. இயேசு இந்தக் கூட்டிச் சேர்த்தலை முன்னறிவித்து, “மிகுந்த உபத்திரவத்தி”னூடே பாதுகாத்து வைப்பதற்கோ அல்லது “நித்தியமாய் அறுப்புண்டு போதலுக்கோ” ஜனங்களை, ஒருவரிலிருந்து ஒருவரைத் தாம் பிரிப்பாரெனக் கூறினார். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; ஏசாயா 2:2-4; மத்தேயு 25:31-33, 46) தப்பிப்பிழைப்பதற்கு ஜனங்களைப் பிரிப்பது என்ன? பைபிள் பின்வருமாறு பதிலளிக்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) கடவுளுடைய சித்தம் என்னவென்பதை ஜனங்கள் எப்படி அறிவார்கள்? “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி, குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்,” என்று சொன்னபோது இயேசு முன்னறிவித்த, உலகமெங்கும் விரிவாய்ச் செய்யப்படும் இந்தக் கல்வி புகட்டும் வேலைக்குச் செவிகொடுப்பதன் மூலமேயாகும். (மத்தேயு 24:14, NW) இந்தப் பிரசங்க வேலை, சகல ஜாதிகளின் ஜனங்களையும் பின்வரும் இந்த விவாதத்தை எதிர்ப்பட செய்கிறது: அவர்கள், கடவுளுடைய அரசாட்சியின் சார்பாக இருக்கிறார்களா? அல்லது, ஏதேனில் சாத்தான் தூண்டிவிட்டதற்கிணங்க மனிதருடைய சுதந்தரமான அரசாட்சி தங்களுக்கு வேண்டுமா? தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யெகோவா ஜனங்களுக்குக் கொடுக்கிறார்.
26 பெருகும் வேகத்தில் உலகமெங்கும் ராஜ்யத்துக்குச் சாட்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 200-க்கு மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் ஜனங்களை அவர்கள் வீடுகளில் போய்ச் சந்தித்து, இலவசமாய் அவர்களோடு பைபிளைப் படிக்க மனமார முன்வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் பிரசுரங்கள் பெரும்பாலும் பூமியில் மிக அதிக விரிவாய்ச் சுற்றிப் பரப்பப்படும் பைபிள் பிரசுரங்களாகும். உண்மையில், அவை மிக அதிகமாய்ப் பரவச் செய்யப்படும் எவ்வகையான பிரசுரங்களுக்குள்ளும் இருக்கின்றன. மேலும் இவை ஏறக்குறைய 190 மொழிகளில் கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
27 இந்தப் பிரிக்கும் வேலை, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பொழுது இது இதன் பூர்த்திக்கு வெகு அருகில் இருக்கிறது. அவருடைய ராஜ்ய ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டவர்களும், மேலும், அவரைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அசட்டையாய்க் கடத்தி விடுபவர்களும் அறுப்புண்டுபோவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. (மத்தேயு 25:34, 41, 46; 2 தெசலோனிக்கேயர் 1:6-9) தங்களைக் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பிலிருப்பவர்களாக அடையாளங் காட்டுகிற மற்றவர்களுக்கு, இது மகத்தான விடுதலைக்குரிய காலத்தைக் குறிக்கும். ஆனால், இந்த நியாயத்தீர்ப்பு எப்பொழுது வரும்?
(4) “இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது”
28 “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” குறித்து “பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார்,” என்று இயேசு சொன்னார். ஆனால் பின்வருமாறு சொன்னபோது காலத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு உதவியாயிருக்கும் ஒன்றை இயேசு மெய்யாகவே கொடுத்தார்: “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது.” (மத்தேயு 24:34, 36) இவ்வாறு அந்த “அடையாளத்தின்” பற்பல அம்சங்கள் எல்லாம், மேலும், “மிகுந்த உபத்திரவமும்” ஒரு சந்ததியின் வாழ்நாளுக்குள்—1914-ன் சந்ததிக்குள் நடந்தேறவேண்டும். இது, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” தொடங்கினபோது, 1914-ன் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்த சில ஆட்கள், “மிகுந்த உபத்திரவம்” ஏற்படுகையில் அதன் முடிவைக் காண இன்னும் உயிரோடிருப்பார்களென்று குறிக்கிறது. 1914-ன் நிகழ்ச்சிகளை நினைவில் வைத்திருப்பவர்கள் இப்பொழுது வயது முதிர்ந்தவர்களாகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய எண்ணிக்கையில் பலர் ஏற்கெனவே மரித்துவிட்டனர். ஆனால், இந்தக் காரிய பொல்லாத ஒழுங்குமுறையின் அழிவு வருவதற்கு முன்னால் “இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது” என்று இயேசு நமக்கு உறுதியளித்தார்.—மத்தேயு 24:21.
29 மனந்திரும்புவதற்கு இந்த நீடிக்கப்பட்ட வாய்ப்பை அருளினதில் கடவுள் எவ்வளவு பொறுமையுள்ளவராக இருக்கிறார்! (2 பேதுரு 3:9) சரித்திரத்தில் முதல் தடவையாக, ஒரு பிரச்னையைப் பின்தொடர்ந்து மற்றொன்று—போர், தூய்மைக்கேடு, மட்டுக்கு மீறிய ஜனத்தொகை, மேலுமதிகமானவை—மிகப் பெரிய அளவுகளை எட்டியிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றுதானேயும் பூரண அழிவைக் கொண்டுவரக்கூடும். இத்தகைய அத்தாட்சி குவிந்துகொண்டு வரும்படி அனுமதிப்பதன்மூலம், இவற்றைத் தீர்க்கும் பரிகாரங்கள் மனிதனிடம் இல்லை என்பதை மக்கள் காண்பதற்குக் கடவுள் எளிதாக்கியிருக்கிறார். அதே சமயத்தில், “ராஜ்யத்தின் நற்செய்தி”யைப் பிரசங்கிப்பது, கடவுளுடைய ராஜ்யமே உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒரே நம்பிக்கையென கண்டுணர நேர்மையான இருதயமுள்ளோருக்கு உதவிசெய்திருக்கிறது. இவ்வாறு இந்தப் பெரிய விவாதத்தில் கடவுளுடைய சார்பில் தங்களை அடையாளங்காட்டுவதற்கு அவர் அவர்களுக்குக் காலத்தைக் கொடுக்கிறார்.
(5) கடைசி அறிகுறி
30 உலக அழிவு நெருங்கிவிட்டதென சந்தேகத்துக்கிடமில்லாத அறிகுறியாக இன்னுமொரு நிகழ்ச்சி நிறைவேறும். இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவின், NW] நாள் வரும் . . . சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 3; லூக்கா 21:34, 35.
31 அணுசக்தி போர் உண்மையில் அடியோடு அழிவைக் குறிக்குமென உலகத் தலைவர்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும், தூய்மைக்கேடு, ஜனத்தொகை வெடி, உள்நாட்டுப் பிரச்னைகள் போன்ற நெருக்கடியான பிரச்னைகள் கவனத்தையும் பணத்தையும் வற்புறுத்திக் கேட்கின்றன. ஆகவே, நிலைதிரிந்த சர்வதேச உறவுகளைத் தளர்த்த அவர்கள் விரும்புகிறார்கள். 1986-ஐ ‘சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமுரிய சர்வதேச ஆண்டு’ என ஐக்கிய நாட்டுச் சங்கம் பொது அறிவிப்பு செய்ததும் இதன் ஓர் அத்தாட்சியாகும். இது, சந்தேகமில்லாமல், மேலே எடுத்துக் குறிப்பிட்ட பவுலின் வார்த்தைகள் நிறைவேறுவதை நோக்கிய ஒரு படியாகும். நிச்சயமாகவே, அரசியல் ஒப்பந்தப் பேச்சுகளும் நேச உடன்படிக்கைகளும் மக்கள் ஒருவரையொருவர் நேசிக்கும்படி அவர்களில் எவ்வித மெய்யான மாற்றங்களையும் உண்டுபண்ணுகிறதில்லை. அவை அக்கிரமச் செயல்களை நிறுத்துவதுமில்லை, நோயையும் மரணத்தையும் நீக்குவதுமில்லை. எனினும் ஓரளவு “சமாதானமும் பாதுகாப்பும்” அடைந்தாயிற்றென்று தேசங்கள் அறிவிக்கப்போகும் அந்தக் காலம் வருமென தீர்க்கதரிசனம் காட்டுகிறது. இது சம்பவிக்கையில் மனிதவர்க்கத்தை மோசம் போக்கும் அவர்கள்மீதும் அவர்களோடுகூட அவர்களில் நம்பிக்கை வைக்கிற யாவர்மீதும் “திடீர் அழிவு” “சடிதியாய்” வரும்.
32 ஆனால் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருப்பீர்களா?
[கேள்விகள்]
1. மனிதவர்க்கத்துக்காகக் கடவுள் என்ன மகத்தான நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்?
2. (எ) “யெகோவாவின் நாள்” வருகையில் யார் திடீரென்று அகப்பட்டுக்கொள்வர்? (பி) இது நமக்குச் சம்பவியாதபடி நாம் எவ்வாறு தவிர்க்கமுடியும்?
3, 4. (எ) இந்த 20-ம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகளின் முழு உட்கருத்து எங்கே விளக்கப்பட்டிருக்கிறது? (பி) பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறித்து வைத்துள்ள எந்த ஐந்து முக்கிய குறிப்புகளை நாம் ஆராயப் போகிறோம்?
5. தனிக் கவனிப்புக்குரிய ஓர் ஆண்டாக பொ.ச. 1914-ஐ பைபிள் குறித்துக் காட்டினதென எவ்வளவு காலத்துக்கு முன்பே யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தனர்?
6. (எ) தானியேல் 4:2, 3, 17-ல் என்ன தர்க்கிக்கப்படுகிறது? (பி) யெகோவா “ராஜ்யத்தைக்” கொடுக்கும் “அவர்” யார்?
7. (எ) தானியேல் 4:10-16-ல் என்ன தீர்க்கதரிசன சொப்பனம் விவரித்திருக்கிறது? (பி) இது அரசன் நேபுகாத்நேச்சாருக்கு எவ்வாறு பொருந்தினது?
8. (எ) இந்தத் தீர்க்கதரிசனத்தின் பெரிய உட்பொருள் எந்த ராஜ்யம் சம்பந்தப்பட்டது? (பி) பெரிய நிறைவேற்றத்தில், இந்த மரம் வெட்டப்படுவது எதைக் குறிக்கிறது, எவ்வாறு ‘மிருக இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது’?
9, 10. (எ) இந்த “ஏழு காலங்களின்” நீடிப்பைக் கணக்கிடுகையில், ஒவ்வொரு ‘காலமும்’ எவ்வளவு நீண்டதாக நிரூபிக்கிறது? பைபிள் இதை எப்படித் தெரிவிக்கிறது? (பி) இந்த “ஏழு காலங்கள்” எப்பொழுது தொடங்கின? எத்தனை ஆண்டுகள் நீடித்தவை? இவை எப்பொழுது முடிவடைகின்றன?
11. 1914-ம் ஆண்டின் முக்கியத்துவத்தைக் குறித்து சரித்திராசிரியர்கள் என்ன சொல்லுகின்றனர்?
12. 1914-லும் அதன் பின்னும் மனித விவகாரங்களில் ஏற்பட்ட அந்தப் பெரும் கிளர்ச்சிக்குக் காரணம் என்ன?
13. ‘தாம் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவுக்கும் அடையாளத்தை’ இயேசு கூறும்படி வழிநடத்தினது எது?
14. இந்த “அடையாளத்தில்” இயேசு உள்ளடக்கின அறிகுறி பொருள்கொண்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.
15, 16. (எ) பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு முன்னால் இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் எவையாவது நிறைவேற்றமடைந்தனவா? (பி) அதைப் பார்க்கிலும் அதிக முக்கியமான இன்னொரு நிறைவேற்றமும் இருக்கவேண்டுமென நாம் எவ்வாறு அறிகிறோம்?
17. இன்று உலகத்திலுள்ள நிலைமைகள் 1914-க்கு முன்னாலிருந்த நிலைமைகளுக்கு மிக வேறுபடுகின்றனவா?
18. விரிவாய்ப் பரவியிருந்த அந்தப் போர் மட்டுமே அந்த “அடையாளத்தைக்” குறித்ததென நாம் முடிவுசெய்தால் அது ஏன் பிழையாயிருக்கும்?
19. (எ) பின்வரும் அட்டவணையில் காட்டியிருக்கிறபடி, 1914 முதற்கொண்டு, இந்த “அடையாளத்தின்” பற்பல அம்சங்கள் எவ்வாறு நிறைவேற்றமடைந்திருக்கின்றன? (பி) அதற்கு முன்னால் ஏற்பட்ட போர்கள், உணவு குறைபாடுகள், பூமியதிர்ச்சிகள் முதலியவை ஏன் இயேசு குறிப்பிட்டுப் பேசின அந்த “அடையாளத்தை” உண்டுபண்ணுகிறதில்லை?
20, 21. முதல் உலகப் போரோடு சேர்ந்த நிகழ்ச்சிகள், இயேசு முன்னறிவித்தபடி எவ்வாறு “வேதனைகளுக்கு ஆரம்பமாக” மாத்திரமே நிரூபித்தன?
22. (எ) அக்கிரமம் மிகுதியாவதையும் அன்பு தணிந்துபோவதையும் பற்றிய தம்முடைய முன்னறிவிப்பை இயேசு எதனுடன் சம்பந்தப்படுத்தினார்? (பி) மதகுருமாரின் போதகங்கள் எவ்வாறு இந்தச் சூழ்நிலைமைக்கு உதவியளித்திருக்கின்றன?
23, 24. சமீப ஆண்டுகளில் மதத்துக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?
25. (எ) இதற்கு நேர்மாறாக, இக்காலத்தில் உண்மையான வணக்கத்தைக் குறித்து என்ன நடக்குமென பைபிள் காட்டுகிறது? (பி) உண்மையான கடவுளை வணங்குவோரைக் கூட்டிச் சேர்க்கும் இது, யாருடைய வழிநடத்துதலின்கீழ் செய்யப்படுகிறது? எந்த ஆதாரத்தின்பேரில்? (சி) சகல ஜாதிகளின் ஜனங்களும் எந்த விவாதத்தை எதிர்ப்படுகின்றனர்?
26, 27. (எ) இந்தச் சாட்சி பகரும் வேலை எந்த அளவுக்கு ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது? (பி) இந்த ராஜ்ய செய்திக்கு ஒருவரின் பிரதிபலிப்பு ஏன் முக்கிய கவனத்துக்குரிய காரியம்?
28. முன்னறிவித்துள்ள உலக அழிவு எந்தக் கால வரம்புக்குள் வருமென்று இயேசு கூறினார்?
29. 1914 முதற்கொண்டு ஏற்பட்டுவரும் நிகழ்ச்சிகள், அவை எட்டியிருக்கும் நிலை வரையாக வளர்ந்துகொண்டுசெல்ல அனுமதித்ததனால் மானிடர் சரியான தீர்மானம் செய்வதைக் கடவுள் எவ்வாறு எளிதாக்கியிருக்கிறார்?
30. உலக அழிவு நெருங்கிவிட்டதன் என்ன கடைசி அறிகுறியைப் பைபிள் திட்டவட்டமாய்க் குறிப்பிடுகிறது?
31, 32. (எ) அரசியல் அதிபதிகள் அறிவிக்கப்போகும் அந்தச் “சமாதானமும் பாதுகாப்பும்” உண்மையாயிருக்குமா? (பி) அதால் மோசம்போக்கப்படுவது ஏன் அபாயகரமாயிருக்கும்?
[பக்கம் 78, 79-ன் பெட்டி]
“அடையாளம் என்ன?”
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் . . . எழும்பும்”—
“முதல் உலகப் போர்—பூகோளப் போர் என்ற பதத்தின் முதல் முழு கருத்தில்—மொத்தப் போருக்குரிய இந்த நூற்றாண்டை அறிமுகப்படுத்தினது. . . . 1914-1918-க்கு முன்னால் ஒருபோதும் ஒரு போர் . . . பூமியின் இவ்வளவு பெரிய பாகத்தை உட்படுத்தினதில்லை . . . ஒருபோதும் இவ்வளவு பரந்தவண்ணம் கண்மூடித்தனமாய்ப் படுகொலை நடந்ததில்லை.”—முதல் உலகப் போர், H. பால்ட்வின் என்பவராலாகியது.
முதல் உலகப் போர் 1 கோடி 40 லட்சம் போர்ச் சேவகரையும் போரில் ஈடுபடாத மற்றவர்களையும் கொன்றது. இரண்டாம் உலகப் போர் 5 1/2 கோடி ஆட்களைக் கொன்றது. இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு நூற்றுக்கணக்கான திடீர் அரசியல் புரட்சிகளும், கலகங்களும், போர்களும் 3 1/2 கோடி உயிர்களைப் போக்கியிருக்கின்றன.
இவ்வாறு, 1914 முதற்கொண்டு 10 கோடி உயிர்கள் போரில் இழக்கப்பட்டிருக்கின்றன!
“உணவு குறைபாடுகள் உண்டாயிருக்கும்”—
முதல் உலகப் போருக்குப் பின்னும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் உணவு குறைபாடுகள் பல நாடுகளை வாட்டின.
இப்பொழுது பல ஆண்டுகளாக விஞ்ஞானம் முன்னேற்றமடைந்திருந்தும், ஏறக்குறைய உலகத்தின் கால் பாகம் பசியாயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி 20 லட்சம் பிள்ளைகள் ஊட்டக் குறைவின் காரணமாகத் தங்கள் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே சாகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மற்றவர்களும் அதே காரணத்தால் சாகின்றனர்.
“கொள்ளை நோய்கள்”—
பதிவுசெய்யப்பட்ட எந்தக் கொள்ளைநோயும் 1918-1919-ன் ஸ்பானிஷ் சளிக்காய்ச்சலுக்குச் சமமாக ஒருபோதும் இல்லை. அது குறைந்தபட்சம் 50 கோடி ஆட்களைத் தாக்கியது; 2 கோடிக்கு மேற்பட்டவர்கள் மாண்டனர்.
இருதய நோய் போன்றவை பெருவாரியாகப் பரவுமளவுகளை எட்டாதபடி தடுத்துவைக்க மருத்துவ ஆராய்ச்சியால் முடியவில்லை. புற்றுநோய் கொள்ளைநோய் அளவுக்குப் பெருகிக்கொண்டுவருகிறது. பாலுறவினால் கடத்தப்படும் நோய்களுற்றவரின் எண்ணிக்கை வானளாவும் வண்ணம் விரைந்து ஏறிவிட்டிருக்கிறது.
“பூமியதிர்ச்சிகள்” பல இடங்களில்—
செய்தி ஊற்றுமூலங்களைச் சார்ந்து, இழப்புப் புள்ளிவிவரங்களின் மதிப்புகள் வேறுபடுகின்றன. ஆனால் ஒரு சில உதாரணங்களைக் கொடுக்க: 1915-ல் இத்தாலியில் ஒரு பூமியதிர்ச்சியில் 30,000—32,000 பேர் மாண்டனர்; 1920-ல் சீனாவில் 1,00,000—2,00,000; 1923-ல் ஜப்பானில் 95,000—1,50,000; 1935-ல் இந்தியாவில் 25,000—60,000; 1968-ல் ஈரானில் 12,000—20,000; 1970-ல் பெரூவில் 54,000—70,000; 1976-ல் கெளத்தமாலாவில் 20,000—23,000; 1976-ல் சீனாவில் 1,00,000—8,00,000; 1914 முதற்கொண்டு மற்றப் பல ஆயிரக்கணக்கானோர் பூமி முழுவதிலும் நூற்றுக்கணக்கான பெரும் பூமியதிர்ச்சிகளில் மாண்டனர்.
1914 முதற்கொண்டு ஏற்பட்ட கடும் பூமியதிர்ச்சிகளின் ஒவ்வொரு ஆண்டு சராசரி எண்ணிக்கை அதற்கு முந்தின 2,000 ஆண்டுகளுக்குரிய சராசரி எண்ணிக்கையைப் பார்க்கிலும் பல தடவைகள் மிகுதியாயிருக்கிறதென பற்பல செய்தி ஊற்றுமூலங்களிலிருந்து வரும் செய்திக் குறிப்புகள் காட்டுகின்றன.
“அக்கிரமம் மிகுதியாவது”—
நடைபெறும் நிகழ்ச்சிகள் உங்களுக்குத் தெரியும். பெருகும் குற்றச் செயல்கள் பூமியிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கின்றன. உங்கள் சொந்த வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சமுதாயத்தில் பள்ளிக்கூடங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? நீங்கள் இருக்கும் பகுதியில் போதைப் பொருட்களின் சட்ட விரோத உபயோகம் இருந்து வருகிறதா? வியாபாரத்தில் நேர்மையில்லாமையைப் பற்றியதென்ன? இரவில் தெருக்களில் எவ்வளவு பாதுகாப்பாய் நீங்கள் உணருகிறீர்கள்?
இந்தச் சட்ட மீறுதல், மனித சட்டத்தைக் குறித்து மாத்திரமல்ல, இன்னுமதிகமாய்க் கடவுளுடைய சட்டத்தைக் குறித்து இருந்துவருகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, 13-ஐப் பாருங்கள்.)
கடவுளுடைய ராஜ்யம் உலகெங்கும் பிரசங்கிக்கப்படுதல்—
இந்த வேலை ஒழுங்காய் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தச் செய்தியை யாவரறிய பிரசங்கிப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகள் ஏறக்குறைய 400 கோடி மணிநேரங்களைச் செலவிட்டனர். அதே காலப் பகுதியில் அவர்கள் கடவுளுடைய ராஜ்யமே மனிதனின் ஒரே நம்பிக்கையெனக் குறிப்பிட்டுக் காட்டும் 500 கோடிக்கு மேற்பட்ட இலக்கியங்களை ஏறக்குறைய 190 மொழிகளில் பிரசுரித்தனர்.
“சமாதானமும் பாதுகாப்பும்” என்ற அறிவிப்பு—
அணுசக்தியினால் அழிவுண்டாவதைத் தவிர்க்கவும், வளரும் மற்றப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தவும் சமாதானம் தேவைப்படுவதைத் தலைவர்கள் கண்டுணருகின்றனர். இத்திசையை நோக்கி எடுக்கப்பட்ட ஒரு முயற்சி, ஐக்கிய நாட்டுச் சங்கம் 1986-ஐ “சமாதானத்துக்கும் சர்வதேச பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமுரிய” ஆண்டென அறிவிப்பு செய்ததாகும்.—ஜெனரல் அஸெம்பிளி, நினைவுக் குறிப்பேடு குறிப்பெண் 32, 39-வது மாமன்ற அமர்வு.
இவை யாவும் எதற்கு “அடையாளம்”? நாம் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில்” இப்பொழுது வாழ்கிறோம் என்பதற்கு. கிறிஸ்து தம்முடைய பரலோக சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், மேலும் சகல ஜாதிகளின் ஜனங்களிலிருந்து கடவுளுடைய சித்தத்தை உண்மையில் செய்ய விரும்புவோரைத் தனியே பிரித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு. “மிகுந்த உபத்திரவம்” வெகு சமீபம் என்பதற்கு. மேலுமான விவரங்களுக்கு மத்தேயு 24, 25, மாற்கு 13, லூக்கா 21 ஆகிய அதிகாரங்களை வாசியுங்கள்.