அதிகாரம் 35
மகா பாபிலோனை அழித்தல்
1. தேவதூதன் சிவப்புநிற மூர்க்க மிருகத்தை எவ்வாறு விவரிக்கிறார், வெளிப்படுத்துதலிலுள்ள அடையாளங்களைப் புரிந்துகொள்ள எப்படிப்பட்ட ஞானம் தேவைப்படுகிறது?
மே லுமாக, வெளிப்படுத்துதல் 17:3-லுள்ள சிவப்புநிற மூர்க்க மிருகத்தை விவரிப்பவராக தேவதூதன் யோவானுக்குப் பின்வருமாறு சொல்கிறார்: “ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக் காலம் தரித்திருக்கவேண்டும்.” (வெளிப்படுத்துதல் 17:9, 10) தேவதூதன் வெளிப்படுத்துதலிலுள்ள அடையாளங்களைப் புரிந்துகொள்ள உதவும் அந்த ஞானத்தை, பரத்திலிருந்துவரும் ஞானத்தைப் பற்றியே இங்கு அறிவிக்கிறார். (யாக்கோபு 3:17) இந்த ஞானம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை யோவான் வகுப்பாருக்கும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கும் அறிவுறுத்துகிறது. அது பக்தியுள்ள இருதயங்களில் இப்பொழுது நிறைவேற்றப்பட இருக்கிற யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளைப் போற்றவும் யெகோவாவைக் குறித்து ஓர் ஆரோக்கியமான பயத்தை ஆழப் பதியும்படியும் கட்டியமைக்கிறது. நீதிமொழிகள் 9:10 சொல்வதுபோல: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” தெய்வீக ஞானம் மூர்க்க மிருகத்தைக் குறித்து நமக்கு என்ன வெளிப்படுத்துகிறது?
2. சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் ஏழு தலைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன, எவ்வாறு “ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான்”?
2 அந்த அச்சந்தருகிற மிருகத்தின் ஏழு தலைகள் ஏழு ‘மலைகளை’ அல்லது ஏழு ‘ராஜாக்களைக்’ குறிக்கின்றன. இந்த இரண்டு பெயர்களும் அரசாங்க அதிகாரங்களைக் குறிக்க வேதப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. (எரேமியா 51:24, 25; தானியேல் 2:34, 35, 44, 45) பைபிளில் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் என்ற ஆறு உலக வல்லரசுகள் கடவுளுடைய ஜனங்களின் வாழ்க்கை மீது செயல் விளைவுகளைக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றன. அதில் யோவான் வெளிப்படுத்துதலைப் பெற்ற சமயத்திலே ஐந்து ஏற்கெனவே வந்து சென்றுவிட்டன, ஆனால் ரோம் உண்மையிலேயே இன்னும் உலக வல்லரசாக இருந்தது. இது “ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான்,” என்பதுடன் சரியாகவே பொருந்துகிறது. ஆனால் வர இருந்த அந்த “மற்றவ”னைக் குறித்தென்ன?
3. (அ) எவ்வாறு ரோம பேரரசு பிளவுப்பட்டது? (ஆ) மேற்கில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டன? (இ) பரிசுத்த ரோமப் பேரரசு எவ்வாறு நோக்கப்படவேண்டும்?
3 யோவானின் நாளுக்குப் பின்பாக ரோம பேரரசு நிலைத்திருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு விரிவடைந்தது. பொ.ச. 330-ல் பேரரசன் கான்ஸ்டன்டீன் தன்னுடைய தலைநகரை ரோமிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் என மறுபெயரிடப்பட்ட பைஃஜான்டியத்திற்கு மாற்றினார். பொ.ச. 395-ல் ரோமப் பேரரசு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளாக பிளவுபட்டது. பொ.ச. 410-ல் ரோம்தானேயும் விசிகோத்ஸ்-ன் (ஆரிய வகை ‘கிறிஸ்தவத்திற்கு’ மதம்மாறிய ஜெர்மானிய வம்ச) ராஜாவாகிய அலெரிக்கிடம் வீழ்ச்சியடைந்தது. ஜெர்மானிய வம்சத்தார் (அவர்களும் “கிறிஸ்தவர்கள்”) ஸ்பெய்னையும் வட ஆப்பிரிக்காவிலுள்ள ரோமின் அநேக பிராந்தியங்களையும் கைப்பற்றினர். பல நூற்றாண்டுகளுக்கு உயர்வெழுச்சியும், அமைதியின்மையும், மறுசீரமைத்தலும் ஐரோப்பாவில் இருந்தது. மேற்கில் 9-ம் நூற்றாண்டில், போப் லியோ III-உடன் நட்புத் தொடர்பு கொண்டிருந்த சார்லிமேன், 13-ம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த ஃபெட்ரிக் II போன்ற குறிப்பிடத்தக்க அரசர்கள் தோன்றினர். ஆனால் அவர்களுடைய ஆட்சிப்பரப்பெல்லை பரிசுத்த ரோமப் பேரரசு என பெயரிடப்பட்ட போதிலும்கூட செழிப்பான காலத்திலிருந்த ஆரம்ப ரோமப் பேரரசைக் காட்டிலும் மிகச் சிறியதாக இருந்தது. அது புதிய பேரரசாக இருப்பதைக் காட்டிலும் மீண்டும் அமைக்கப்பட்ட அல்லது பூர்வ வல்லரசின் ஒரு தொடர்ச்சியாகவே இருந்தது.
4. என்ன வெற்றிகளை கிழக்கத்திய பேரரசு அடைந்தது, வட ஆப்பிரிக்கா, ஸ்பெய்ன், சிரியா போன்ற பூர்வ ரோமின் முன்னாளைய பிராந்தியங்களில் பெரும்பகுதிக்கு என்ன ஏற்பட்டது?
4 கான்ஸ்டான்டிநோபிளில் மையம் கொண்ட ரோமின் கிழக்கத்திய பேரரசு மேற்கத்திய பேரரசுடன் ஏதோ அமைதலற்ற ஓர் உறவில் நீடித்திருந்தது. ஆறாம் நூற்றாண்டில், கிழக்கத்திய பேரரசர் ஜஸ்டீனியன் I வட ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை மீண்டும் கைப்பற்றினார், ஸ்பெய்னிலும், இத்தாலியிலும்கூட அவர் இடையே குறுக்கிட்டார். ஏழாம் நூற்றாண்டில், ஜஸ்டீனியன் II ஸ்லாவிக் இனமனிதரால் கைப்பற்றப்பட்ட மக்கெதோனியா பகுதிகளைப் பேரரசுக்காக திரும்பப் பெற்றுக்கொண்டார். என்றபோதிலும், எட்டாம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்கா, ஸ்பெய்ன், சிரியா போன்ற பூர்வ ரோமின் முன்னாளைய பிராந்தியங்களின் பெரும்பகுதி புதிய பேரரசாகிய இஸ்ஸாமின் கீழ் வந்தது, இவ்வாறு கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் ரோம் ஆகிய இரண்டின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட்டது.
5. பொ.ச. 410-ல் ரோம் நகரம் வீழ்ச்சியடைந்தபோதிலும் உலகக் காட்சியிலிருந்து ரோம அரசியல் பேரரசின் எல்லா தடையங்களும் மறைவதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தது எவ்வாறு?
5 கான்ஸ்டான்டிநோபிள் நகரம் தானேயும் சிறிது நீண்ட காலம் நிலைத்திருந்தது. அது பெர்சியர்கள், அரேபியர்கள், பல்கர்கள் மற்றும் ரஷ்யர்களின் அடிக்கடித் தாக்குதல்களிலிருந்து 1203 வரை தப்பித்து இறுதியில்—முகமதியர்களிடம் அல்ல—ஆனால் மேற்கிலிருந்து வந்த சிலுவைப்போர் வீரர்களிடம் வீழ்ந்தது. இருந்தபோதிலும், 1453-ல் அது முகமதிய ஒட்டோமன் அரசராகிய மெஹ்மெட் II-வின் கீழ் வந்தது, சீக்கிரத்தில் ஒட்டோமன் பேரரசின் அல்லது துருக்கிய பேரரசின் தலைநகரமாக ஆனது. இவ்வாறு, பொ.ச. 410-ல் ரோம் நகரம் வீழ்ச்சியடைந்தபோதிலும், உலக காட்சியிலிருந்து ரோம அரசியல் பேரரசின் எல்லா தடையங்களும் மறைவதற்கு பல நூற்றாண்டுகளெடுத்தன. அதன் பின்பும்கூட, மத பேரரசுகளில், ரோமின் போப்பாதிக்கமும் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளில் அதனுடைய செல்வாக்கும் இன்னும் பார்க்க முடிவதாகவேயிருந்தது.
6. என்ன புத்தம்புதிய பேரரசுகள் தோன்றின, எது அதிக வெற்றிகரமானதாக ஆனது?
6 என்றபோதிலும், 15-ம் நூற்றாண்டிற்குள், சில நாடுகள் புத்தம்புதிய பேரரசுகளைக் கட்டிக்கொண்டிருந்தன. இந்தப் புதிய பேரரசுக்குரிய வல்லரசுகளில் சில, ரோமின் முந்தைய குடியேற்றப்பகுதிகளின் பிராந்தியத்தில் காணப்பட்டாலும், அவர்களுடைய பேரரசுகள் ரோமப் பேரரசின் வெறும் தொடர்ச்சியல்ல. போர்த்துகல், ஸ்பெய்ன், பிரான்ஸ், மற்றும் ஹாலந்து ஆகிய அனைத்தும் பரந்து விரிந்த பரப்பெல்லைகளைக் கொண்டவற்றில் பிரதானமாக இருந்தன. ஆனால் அதிக வெற்றிகரமாக இருந்தது ‘சூரியன் ஒருபோதும் மறையாத,’ பெரிய பேரரசை அடக்கி ஆட்சிசெய்த பிரிட்டன் ஆகும். வெவ்வேறு சமயத்தில் இந்தப் பேரரசு வட அமெரிக்காவின் பெரும் பகுதி, ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, அது மட்டுமல்லாமல் தென் பசிபிக்கின் பகுதிகளிலும் பரந்துகிடந்து.
7. ஒருவகை இரட்டை உலக வல்லரசு எவ்வாறு தோன்றியது, ஏழாவது ‘தலை,’ அல்லது உலக வல்லரசு எத்தனை காலம் தொடர்ந்திருக்கும் என யோவான் சொன்னார்?
7 வட அமெரிக்காவின் குடியேற்றப் பகுதிகளில் சில 19-ம் நூற்றாண்டிற்குள் ஏற்கெனவே பிரிட்டனிலிருந்து பிரிந்து சுதந்திர அமெரிக்க ஐக்கிய மாகாணங்களை உண்டுபண்ணின. அரசியல்ரீதியில் புதிய தேசத்திற்கும் முன்னாளைய தாய்நாட்டிற்கும் இடையே சச்சரவுகள் தொடர்ந்திருந்தன. இருந்தபோதிலும், முதல் உலக யுத்தம் இரு நாடுகளும் தங்கள் பொதுவான அக்கறைகளைக் கண்டுணரவும் அவற்றினிடையே விசேஷ உறவை உறுதியாக இணைக்கவும் வலுக்கட்டாயப்படுத்தியது. இவ்வாறு, இப்போது உலகின் பெரிய செல்வந்த நாடாக இருக்கும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் உலகின் மிகப் பெரிய பேரரசின் மையமாக இருக்கும் பிரிட்டன் ஆகியவற்றால் ஆன ஒருவகை இரட்டை உலக வல்லரசு தோன்றியது. இதுவே முடிவின் காலத்தில் தொடர்ந்திருக்கும் உலக வல்லரசு அல்லது ஏழாவது ‘தலை’யாக ஆனது, மேலும் யெகோவாவின் நவீன நாளைய சாட்சிகள் முதலாவது ஸ்தாபிக்கப்பட்ட பிராந்தியங்களிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆறாவது தலையின் நீண்டகால ஆட்சியுடன் ஒப்பிடுகையில், எல்லா தேசங்களின் ஆட்சிகளையும் கடவுளுடைய ராஜ்யம் அழிக்கும்வரை “கொஞ்சக் காலம்” மாத்திரமே ஏழாவது தரிந்துநிற்கும்.
எட்டாவது ராஜாவென அழைக்கப்பட்டது ஏன்?
8, 9. அடையாள அர்த்தமுள்ள சிவப்புநிற மூர்க்க மிருகத்தைத் தேவதூதன் என்னவென அழைக்கிறார், அது எவ்வாறு ஏழாவதிலிருந்து தோன்றியதாக இருக்கிறது?
8 அந்தத் தூதன் மேலும் பின்வருமாறு யோவானுக்கு விளக்குகிறார்: “இருந்ததும் இராததுமாகிய [மூர்க்க, NW] மிருகமே எட்டாவதானவனும், [எட்டாவது ராஜாவானவனும், NW] அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.” (வெளிப்படுத்துதல் 17:11) அடையாள அர்த்தமுள்ள சிவப்புநிற மூர்க்க மிருகம் ஏழு தலைகளிலிருந்து “தோன்றுகிற”தாக இருக்கிறது; அதாவது சிவப்புநிற மூர்க்க மிருகம் சொரூபமாக இருக்கும் ‘சமுத்திரத்திலிருந்து எழும்பிய’ முதல் ‘மூர்க்க மிருகத்தின்’ தலைகளிலிருந்து வந்ததால் அல்லது இது உண்டாவதற்குக் காரணமாக இருந்ததால் அதற்கு இது கடமைப்பட்டிருக்கிறது. எந்த விதத்தில்? 1919-ல் மேலெழும்பி வந்த அந்தத் தலை ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசாகும். முந்தைய ஆறு தலைகள் வீழ்ந்துவிட்டன, இந்த இரட்டை தலைக்கு ஆட்சிசெய்யும் உலக வல்லரசு என்ற ஸ்தானம் கொடுக்கப்பட்டது, இப்போது அது மையமாக அமைந்திருந்தது. உலக வல்லரசுகளின் வரிசையில் தற்போதைய பிரதிநிதியான இந்த ஏழாவது தலை, சர்வதேச சங்கத்தை ஸ்தாபிப்பதில் தூண்டுவிக்கும் வலிமையாக இருந்தது, அதுவே இன்னும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தை பணசம்பந்தமாக ஆதரிப்பதாகவும் அதற்கு பிரதான ஊக்குவிப்பாளராகவும் இருக்கிறது. இவ்வாறு, அடையாள அர்த்தத்தில், சிவப்புநிற மூர்க்க மிருகம்—எட்டாவது ராஜா—முந்தைய ஏழு தலைகளிலிருந்து ‘தோன்றுகிறது.’ இந்த விதத்தில் நோக்குகையில், ஏழிலிருந்து தோன்றியது என்ற சொற்றொடர், வெளிப்படுத்துதலில் முன்பு குறிப்பிட்ட இரண்டு கொம்புகளையுடைய ஆட்டுக்குட்டிக்கொப்பான மிருகம் (முந்தைய மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு) சொரூபத்தை உண்டுபண்ணவும் அதற்கு ஆவியைக் கொடுக்கவும் தூண்டியதுடன் நன்றாகவே ஒத்திருக்கிறது.—வெளிப்படுத்துதல் 13:1, 11, 14, 15.
9 கூடுதலாக, மகா பிரிட்டனுடன், கிரீஸ், ஈரான் (பெர்சியா), இத்தாலி (ரோம்), போன்ற முந்தைய தலைகளின் நிலையிலிருந்து ஆட்சிசெய்த சில அரசாங்கங்களும் சர்வதேச சங்கத்தின் முந்தைய உறுப்பினர்களாக இருந்தன. இறுதியில், முந்தைய ஆறு உலக வல்லரசுகளின் கீழிருந்த பிராந்தியங்களில் ஆட்சிசெய்யும் அரசாங்கங்கள் மூர்க்க மிருகத்தின் சொரூபத்தை ஆதரிக்கும் உறுப்பினர்களாயின. இந்த அர்த்தத்தில்கூட, இந்தச் சிவப்புநிற மூர்க்க மிருகம் அந்த ஏழு உலக வல்லரசுகளிலிருந்து தோன்றியது எனச் சொல்லலாம்.
10. (அ) சிவப்புநிற மூர்க்க மிருகமே ‘எட்டாவது ராஜாவானவனுமாய் இருப்பதாக’ எவ்வாறு சொல்லக்கூடும்? (ஆ) எவ்வாறு முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஒருவர் ஐக்கிய நாட்டுச் சங்கத்திற்கு தன்னுடைய ஆதரவு தெரிவித்தார்?
10 சிவப்புநிற மூர்க்க மிருகமே “எட்டாவது ராஜாவானவனு”மாயிருப்பதைக் கவனியுங்கள். இவ்வாறு ஐக்கிய நாட்டுச் சங்கம் இன்று உலக அரசாங்கமாக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது சில சமயங்களில், சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கொரியா, சீனாய் தீபகற்பம், சில ஆப்பிரிக்க நாடுகள், லெபனன் போன்ற இடங்களுக்கு படைகளை அனுப்பி அதைப்போன்று செயல்பட்டிருக்கிறது. ஆனால், அது ராஜாவின் ஒரு சொரூபமாக மட்டுமே இருக்கிறது. மத சொரூபத்தைப் போலவே அதை உண்டுபண்ணியவர்களாலும் அதை வணங்குபவர்களாலும் அதற்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதுவல்லாமல் வேறே உண்மையான செல்வாக்கு அல்லது வல்லமை அதற்கில்லை. சில சமயங்களில், இந்த அடையாள அர்த்தமுள்ள மூர்க்க மிருகம் வலுவிழந்து காணப்படுகிறது; ஆனால், சர்வாதிகார எண்ணங்கொண்ட உறுப்பினர்களால் அபிஸிற்குள் தள்ளப்பட்ட சர்வதேச சங்கத்தைப்போல இது ஒருபோதும் முழுமையாக கைவிடப்பட்ட நிலையை அனுபவிக்கவில்லை. (வெளிப்படுத்துதல் 17:8) மற்ற காரியங்களில் அடிப்படையில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருந்தபோதிலும், 1987-ல் முன்னாள் சோவியத் யூனியனின் முக்கியத்துவம் வாய்ந்து ஒரு தலைவர் ரோமின் போப்புடன் சேர்ந்து ஐநா-வுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் ஐநா-வை அடிப்படையாக கொண்ட “சர்வதேச பாதுகாப்புக்காக பரந்த ஓர் அமைப்பு”க்கான அழைப்பைவிடுத்தார். யோவான் சீக்கிரத்தில் கற்றுக்கொள்கிற விதமாகவே ஐநா போதுமான அதிகாரத்துடன் செயல்படும் காலம் வரும். அப்போது அது தன்னுடைய பங்காக “நாசமடையப்போகிற”தாயிருக்கும்.
ஒரு மணிநேரத்திற்கு பத்து ராஜாக்கள்
11. அடையாள அர்த்தமுள்ள சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் மீதுள்ள பத்துக் கொம்புகளைப் பற்றி யெகோவாவின் தூதன் என்ன சொல்கிறார்?
11 வெளிப்படுத்துதலின் முந்திய அதிகாரத்திலே, ஆறாம் மற்றும் ஏழாம் தூதர்கள் தேவனுடைய கோபாக்கினையென்னும் பாத்திரத்தை ஊற்றினர். இவ்வாறு அர்மகெதோனிலே தேவனுடைய யுத்தத்திற்காக பூமியின் ராஜாக்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள் என்றும் ‘மகா பாபிலோன் தேவனுக்கு முன்பாக நினைப்பூட்டப்படவிருக்கிறது,’ என்றும் நாம் முன்னெச்சரிக்கப்பட்டோம். (வெளிப்படுத்துதல் 16:1, 14, 19) இப்போது இவற்றின் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்படவிருக்கின்றன என்பதை நாம் அதிக விவரமாக கற்றறிவோம். பின்வருமாறு யோவானிடம் யெகோவாவின் தூதன் பேசுவதை மீண்டும் செவிகொடுத்துக் கேளுங்கள்: “நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்.”—வெளிப்படுத்துதல் 17:12-14.
12. (அ) பத்துக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன? (ஆ) எவ்வாறு அந்த அடையாள அர்த்தமுள்ள பத்துக் கொம்புகள் ‘இன்னும் ராஜ்யத்தைப் பெறவில்லை’? (இ) எவ்வாறு அடையாள அர்த்தமுள்ள பத்துக் கொம்புகள் இப்போது ‘ராஜ்யத்தைக்’ கொண்டிருக்கின்றன, எவ்வளவு காலத்திற்கு?
12 பத்துக் கொம்புகள் தற்போது உலகக் காட்சியில் தற்காலிகமாக அரசியல் ஆதிக்கம் செலுத்தி, மூர்க்க மிருகத்தின் சொரூபத்தை ஆதரிக்கும் எல்லா அரசியல் வல்லரசுகளையும் படமாகக் குறிக்கின்றன. இப்போது இருக்கும் வெகு சில தேசங்களே யோவானின் நாளில் அறியப்பட்டிருந்தன. எகிப்தாக, பெர்சியாவாக (ஈரான்) இருந்தவை, இன்று முற்றிலும் வித்தியாசமான அரசியல் அமைப்புமுறையைக் கொண்டிருக்கின்றன. எனவே, முதல் நூற்றாண்டில், ‘பத்துக் கொம்புகள் ராஜ்யத்தைப் பெறவில்லை.’ ஆனால் இப்போது, கர்த்தருடைய நாளில், அவற்றிற்கு “ராஜ்யம்,” அல்லது அரசியல் அதிகாரம் இருக்கிறது. முக்கியமாக இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு பெரிய குடியேற்றப் பகுதிப் பேரரசுகளின் வீழ்ச்சியால் அநேக புதிய தேசங்கள் உருவாகியிருக்கின்றன. இவையும், அநேக ஆண்டுகளாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வல்லரசுகளும் அர்மகெதோனில் எல்லா உலக அரசியல் அதிகாரங்களுக்கும் யெகோவா முடிவைக் கொண்டுவரும் முன்பு—“ஒருமணி நேரமளவும்”—குறுகிய காலத்திற்கு மூர்க்க மிருகத்துடன் ஆட்சிசெய்ய வேண்டும்.
13. எந்தவிதத்தில் இந்தப் பத்துக் கொம்புகள் “ஒரே யோசனையுள்ளவர்க”ளாய் இருக்கின்றனர், ஆட்டுக்குட்டியானவரிடமாக எப்படிப்பட்ட மனப்பான்மையை இது உறுதிப்படுத்துகிறது?
13 இன்று, இந்தப் பத்துக் கொம்புகளைச் செயல்பட தூண்டுவிக்கும் பலமான சக்திகளில் ஒன்று தேசாபிமானமாகும். கடவுளுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் தேசத்தின் அரசுரிமையைப் பாதுகாக்க விரும்புவதில் அவர்கள் “ஒரே யோசனையுள்ள”வையாக இருக்கின்றன. முதலில், உலக சமாதானத்தைப் பாதுகாப்பதும் இவ்வாறு தங்கள் தாமே அதன் மூலம் பிழைத்திருப்பதும் சர்வதேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தையும் ஏற்படுத்துவதில் அவர்களுடைய நோக்கமாயிருந்தது. இத்தகைய மனப்பான்மை, கொம்புகள் “கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிற” ஆட்டுக்குட்டியானவரை எதிர்க்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் கீழுள்ள தம்முடைய ராஜ்யத்தின்மூலம் இந்த ராஜ்யங்களனைத்தையும் சீக்கிரத்தில் மாற்றியமைக்க யெகோவா நோக்கங்கொண்டிருக்கிறார்.—தானியேல் 7:13, 14; மத்தேயு 24:30; 25:31-33, 46.
14. பூமியின் ஆட்சியாளர்கள் எவ்வாறு ஆட்டுக்குட்டியானவரோடுகூட யுத்தம்பண்ணுவது கூடிய காரியம், அதன் விளைவு என்னவாயிருக்கும்?
14 இயேசுவுக்கு எதிராகத் தானே இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் ஒன்றும் செய்யமுடியாது என்பது உண்மையே. அவர்கள் எட்டமுடியாத அதிக தூரத்தில், அவர் பரலோகத்திலிருக்கிறார். ஆனால் இயேசுவின் சகோதரர்கள், ஸ்திரீயினுடைய வித்தின் மீதமானவர்கள் இன்னும் பூமியிலிருக்கின்றனர், அவர்கள் தெளிவாகவே சேதமுறத்தக்க நிலையில் இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 12:17) அந்தக் கொம்புகளில் அநேகம் ஏற்கெனவே அவர்களிடமாக கசப்பான பகைமையைக் காட்டியிருக்கின்றன, இந்த விதத்தில் அவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடே யுத்தம்செய்தனர். (மத்தேயு 25:40, 45) என்றபோதிலும், சீக்கிரத்தில், கடவுளுடைய ராஜ்யம் “அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்”குவதற்கான காலம் வரும். (தானியேல் 2:44) பிறகு, நாம் சீக்கிரத்தில் பார்க்க இருக்கிறவிதமாகவே பூமியின் ராஜாக்கள் ஆட்டுக்குட்டியானவரோடே யுத்தம்பண்ணி அழிந்துபோவார்கள். (வெளிப்படுத்துதல் 19:11-21) ஆனால் தேசங்கள் வெற்றியடையாது என்பதை உணர்ந்துகொள்ள போதுமானதை நாம் இங்கே கற்றறிந்தோம். அவர்களும் ஐநா சிவப்புநிற மூர்க்க மிருகமும் “ஒரே யோசனை”யைக் கொண்டிருந்தபோதிலும் பெரிய “கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமா”கியவரையும் அவர்கள் தோற்கடிக்க முடியாது, இன்னும் பூமியிலிருந்து அவரைப் பின்பற்றும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களை உள்ளடக்கும் “அவரோடுகூட . . . அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிற”வர்களையும் தோல்வியுறச் செய்யமுடியாது. சாத்தானின் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் இவர்களும்கூட தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதன்மூலம் வெற்றிசிறப்பார்கள்.—ரோமர் 8:37-39; வெளிப்படுத்துதல் 12:10, 11.
வேசியைப் பாழாக்குதல்
15. வேசியைப் பற்றியும், அவளிடமாக பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும் கொண்டுள்ள மனப்பான்மையையும் செயலையும் பற்றியும் தேவதூதன் என்ன சொல்கிறார்?
15 கடவுளுடைய மக்கள் மட்டுமே பத்துக் கொம்புகளுடைய பகைமையின் ஒரே இலக்காக இல்லை. இப்போது வேசியினிடமாக அந்தத் தேவதூதன் மீண்டும் யோவானின் கவனத்தை இழுக்கிறார்: “பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 17:15, 16.
16. அரசியல் அரசாங்கங்கள் மகா பாபிலோனுக்கெதிராக திரும்பும்போது தன்னுடைய பாதுகாப்பான ஆதரவிற்காக அவள் ஏன் தன்னுடைய தண்ணீர்களிடமாக திரும்ப முடியாது?
16 பூர்வ பாபிலோன் தன்னுடைய தண்ணீர் பாதுகாப்பின்மீது சார்ந்திருந்ததுபோலவே, இன்று மகா பாபிலோனும் “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரு”மாகிய தன்னுடைய பெருந்திரளான உறுப்பினர்களின் மீது சார்ந்திருக்கிறாள். திடுக்கிடும் முன்னேற்றத்தைக் குறித்துச் சொல்வதற்கு முன் இந்தத் தேவதூதன் இதற்குப் பொருத்தமாகவே நம்முடைய கவனத்தைத் திருப்புகிறார்: இந்தப் பூமியின் அரசியல் அரசாங்கங்கள் மகா பாபிலோனின் மேல் வன்மையாய் திரும்பும். அப்போது இந்த “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்கார”ரும் என்ன செய்வார்கள்? ஐபிராத்தின் தண்ணீர் வற்றிவிடும் என ஏற்கெனவே கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனை எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 16:12) அந்தத் தண்ணீர்கள் இறுதியில் முழுவதுமாக வற்றிவிடும். அருவருக்கத்தக்க அந்தப் பழைய வேசிக்குத், தேவை வெகு அதிகமாக இருக்கும் அந்தச் சமயத்தில் எந்தப் பயனுள்ள ஆதரவையும் அவர்கள் கொடுக்கமுடியாது.—ஏசாயா 44:27; எரேமியா 50:38; 51:36, 37.
17. (அ) மகா பாபிலோனின் செல்வங்கள் அவளை ஏன் பாதுகாக்க மாட்டாது? (ஆ) மகா பாபிலோனின் முடிவு எவ்வாறு மதிப்புக்குரியதாக இருக்காது? (இ) பத்துக் கொம்புகளை அல்லது தனிப்பட்ட தேசங்களைத் தவிர மகா பாபிலோனுக்கெதிரான வன்முறைச் செயலில் யாரும்கூட சேர்ந்துகொள்வர்?
17 நிச்சயமாகவே, மகா பாபிலோனின் அளவிடமுடியாத பொருளாதார செல்வங்கள் அவளைக் காப்பாற்றாது. அவை அவளுடைய அழிவை விரைவுபடுத்துவதாகவும்கூட இருக்கலாம், மூர்க்க மிருகமும் பத்துக் கொம்புகளும் தங்களுடைய பகைமையை வெளிப்படுத்தும்போது அவளுடைய ராஜரீக வஸ்திரங்களையும் அவளுடைய எல்லா அணிகலன்களையும் உரித்தெடுத்துவிடுவார்கள் என தரிசனம் காட்டுகிறது. அவர்கள் அவளுடைய செல்வத்தைக் கொள்ளையாடுவார்கள். அவர்கள் “அவளை . . . நிர்வாண”மாக்கி வெட்கக்கேடான அவளுடைய உண்மையான குணயியல்பை வெளிப்படுத்துவார்கள். என்னே பாழாக்குதல்! அவளுடைய முடிவும்கூட மதிப்புக்குரியதாக இராது. அவளை அழித்து “அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து,” அவளை உயிரற்ற எலும்புக்கூடாக்கும். இறுதியாக, “அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” தொற்றுநோய் உடையவரைப்போல ஒரு நல்ல சவ அடக்கங்கூட இல்லாமல் அவள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுகிறாள்! மகா வேசியை அழிப்பது பத்துக் கொம்புகள் பிரதிநிதித்துவம் செய்யும் தேசங்கள் மட்டுமல்ல ஆனால் ‘மூர்க்க மிருகம்’ அர்த்தப்படுத்தும் ஐநா-தானேயும் இந்த வன்முறைச் செயலில் அவர்களோடு சேர்ந்து கொள்கிறது. அது பொய் மதம் அழிக்கப்படுவதற்கான தன்னுடைய ஒப்புதலைக் கொடுக்கும். ஐநா-விலுள்ள பெரும்பான்மையான 190-க்கும் அதிகமான தேசங்கள் தங்களுடைய வாக்களிப்பு முறைமூலம் ஏற்கெனவே மதத்தினிடமாக, முக்கியமாக கிறிஸ்தவமண்டலத்தினிடமாக தங்களுடைய பகைமையைக் வெளிக்காட்டியிருக்கின்றன.
18. (அ) பாபிலோனிய மதத்திற்கெதிராக தேசங்கள் திரும்புவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறதென்பதை ஏற்கெனவே நாம் பார்த்தோம்? (ஆ) மகா வேசியின் மீதான முழுவேகத்துடனான தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் என்னவாயிருக்கும்?
18 தேசங்கள் தங்களுடைய முன்னாளைய கள்ளக் காதலியை ஏன் இத்தனை கொடுமையாக நடத்துகின்றன? பாபிலோனிய மதத்துக்கெதிராக திரும்புவதற்கான இப்படிப்பட்ட வாய்ப்பு குறித்து சமீப கால வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம். சீனா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் உள்ள மதங்களின் செல்வாக்குகளைச் சட்டப்பூர்வ அரசாங்க எதிர்ப்புகள் அதிக அளவில் குறைத்திருக்கின்றன. ஐரோப்பாவின் புராட்டஸ்டன்ட் பகுதியில், எங்கும் பரவியிருக்கும் அக்கறையின்மையும் சந்தேகமும் சர்ச்சுகளை வெறுமையாக்கியிருக்கின்றன, எனவே மதமானது செயலில் மரித்துவிட்டிருக்கிறது. பரந்த கத்தோலிக்க பேரரசு அதன் தலைவர்களால் அமைதிப்படுத்த முடியாத நிலையில் கலகத்தாலும் உடன்பாடின்மையாலும் பிளவுபட்டிருக்கிறது. என்றபோதிலும், இந்த மகா பாபிலோனின் மீதான, இறுதியான, முழுவேகத்துடனான தாக்குதல் மகா வேசியின் மீதான கடவுளுடைய மாற்றியமைக்கமுடியாத நியாயத்தீர்ப்பென்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.
கடவுளுடைய எண்ணத்தை நிறைவேற்றுதல்
19. (அ) மகா வேசியின் மீதான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு பொ.ச.மு. 607-ல் விசுவாச துரோக எருசலேமிற்கெதிரான அவருடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதுடன் எவ்வாறு ஒப்பிடப்படலாம்? (ஆ) பொ.ச.மு. 607-க்குப் பின்னிருந்த பாழான, குடியிருக்கப்படாத எருசலேமின் நிலை எதற்கு நம்முடைய நாளில் முன்படமாக இருக்கிறது?
19 இந்த நியாயத்தீர்ப்பை யெகோவா எவ்வாறு நிறைவேற்றுகிறார்? பூர்வத்திலிருந்த தம்முடைய விசுவாச துரோக ஜனங்களுக்கு எதிரான யெகோவாவின் செயல்நடவடிக்கையுடன் இது ஒப்பிடப்படலாம். அவர்களைக் குறித்து பின்வருமாறு சொன்னார்: “எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.” (எரேமியா 23:14) பொ.ச.மு. 607-ல் ஆவிக்குரிய விபசாரத்திலிருந்த நகரத்தை யெகோவா நேபுகாத்நேச்சாரை உபயோகித்து ‘வஸ்திரங்களை உரிந்து, சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக் கொண்டு, அம்மணமும் நிர்வாணமுமாக்கி விடும்படி’ செய்தார். (எசேக்கியேல் 23:4, 26, 29) அப்போதிருந்த எருசலேம் இன்றுள்ள கிறிஸ்தவமண்டலத்திற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது, முந்தைய தரிசனங்களில் யோவான் பார்த்தவிதமாகவே, கிறிஸ்தவமண்டலத்திற்கும் மற்ற பொய் மதங்களுக்கும் அதே போன்ற தண்டனையை யெகோவா வழங்குவார். பொ.ச.மு. 607-க்குப் பின்னிருந்த பாழான, குடியிருக்கப்படாத எருசலேமின் நிலை, மத சம்பந்தமான கிறிஸ்தவமண்டலம் அவளுடைய செல்வங்கள் உரித்தெடுக்கப்பட்டு வெட்கப்படும் நிலையில் வெளிப்படுத்துப்படும்போது எப்படிக் காணப்படும் என்பதைக் காட்டுகிறது. மகா பாபிலோனின் மற்ற பகுதிகள் இனிமேலும் சிறந்து விளங்காது.
20. (அ) நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற யெகோவா மீண்டும் மனித ஆட்சியாளர்களை உபயோகிப்பார் என்பதை யோவான் எவ்வாறு காண்பிக்கிறார்? (ஆ) கடவுளுடைய “யோசனை” என்ன? (இ) எந்த விதத்தில் தேசங்கள் தங்களுடைய “ஒரே யோசனை”யைச் செயல்படுத்தும், ஆனால் யாருடைய யோசனை உண்மையில் செயல்படுத்துப்பட்டிருக்கும்?
20 மீண்டும் யெகோவா நியாயத்தீர்ப்பளிக்க மனித ஆட்சியாளர்களை உபயோகிக்கிறார். “தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.” (வெளிப்படுத்துதல் 17:17) தேவனுடைய “யோசனை” என்ன? மகா பாபிலோனை அழிக்கயிருப்பவர்கள் ஒரே குழுவாக இருந்து அவளை முழுவதுமாக அழிக்கச் செய்ய ஏற்பாடு செய்வதேயாகும். ஆட்சியாளர்கள் அவளைத் தாக்குவதன் நோக்கம் தங்களுடைய சொந்த ‘ஒரே யோசனையை’ செயல்படுத்துவதற்கே என்பது உண்மைதான். மகா வேசியினிடமாக அவர்கள் திரும்புவது தங்களுடைய தேசாபிமான அக்கறைகளினாலேயே என கருதுவார்கள். தங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஸ்தாபிக்கப்பட்ட மதம் தொடர்ந்திருப்பது தங்களுடைய அரசுரிமைக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என உணர ஆரம்பிக்கக்கூடும். ஆனால் உண்மையில் யெகோவா காரியங்களை சரியாக வழிநடத்துகிறார்; ஒரே அடியில் அவருடைய நெடுநாளைய, விபசார எதிரியை அவருடைய யோசனைக்கிசைய செயல்பட்டு அவர்கள் அழிப்பார்கள்.—எரேமியா 7:8-11, 34, ஒப்பிடுக.
21. மகா பாபிலோனை அழிப்பதற்கு சிவப்புநிற மூர்க்க மிருகம் பயன்படுத்தப்படப்போவதால், இறுதியில் தேசங்கள் ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் சார்பாக என்ன செய்யும்?
21 ஆம், மகா பாபிலோனை அழிக்க தேசங்கள் சிவப்புநிற மூர்க்க மிருகமாகிய ஐக்கிய நாட்டுச் சங்கத்தை உபயோகிக்கும். தங்களுடைய சொந்த முயற்சியில் அவர்கள் செயல்படுவதில்லை, ஏனெனில் யெகோவா “ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு” அவர்களுடைய இருதயங்களை ஏவினார். காலம் வரும்போது, இறுதியில் தேசங்கள் ஐக்கிய நாட்டுச் சங்கத்தைப் பலப்படுத்துவதற்கான தேவையைக் காண்பார்கள். ‘தேவனுடைய வார்த்தை நிறைவேறுமளவும்’ பொய் மதத்தினிடமாக திரும்பி அவளுக்கெதிராக வெற்றிகரமாக யுத்தம்செய்ய அதற்கு பற்களை அளிப்பதுபோல, தங்களிடமுள்ள எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அதற்குக் கொடுப்பார்கள். இவ்வாறு, பூர்வ வேசி தன்னுடைய முற்றிலுமான முடிவுக்கு வருவாள். இது அவளுக்கு நல்ல முடிவு!
22. (அ) வெளிப்படுத்துதல் 17:18-ல் தேவதூதன் தன்னுடைய சாட்சியத்தை முடிக்கும் விதத்தில் எது முக்கியப்படுத்திக் காட்டப்படுகிறது? (ஆ) இரகசியம் வெளிப்படுத்தப்பட்டதற்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்?
22 பொய் மத உலகப் பேரரசின்மீதான யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் நிச்சயமான நிறைவேற்றத்தை அழுத்திச் சொல்லும்விதமாக தம்முடைய சாட்சியத்தைப் பின்வருமாறு சொல்வதன்மூலம் தேவதூதன் முடிக்கிறார்: “நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.” (வெளிப்படுத்துதல் 17:18) பெல்ஷாத்சாரின் காலத்திலிருந்த பாபிலோனைப்போலவே மகா பாபிலோன் “தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்”டது. (தானியேல் 5:27) அவளுடைய நியாயத்தீர்ப்பு சீக்கிரத்தில் வருகிறதாகவும் இறுதியானதாகவும் இருக்கும். சிவப்புநிற மூர்க்க மிருகத்தைப்பற்றியதும் மகா வேசியைப்பற்றியதுமான இரகசியம் வெளிப்படுத்தப்பட்டதற்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? சத்தியத்தை உண்மையோடு தேடிக்கொண்டிருக்கும் ஆட்களுக்கு “கிருபை பொருந்தின” பதிலைச் சொல்வதோடு யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளை அறிவிப்பதில் அவர்கள் வைராக்கியத்தைக் காண்பிக்கின்றனர். (கொலோசெயர் 4:5, 6; வெளிப்படுத்துதல் 17:3, 7) நம்முடைய அடுத்த அதிகாரம் காண்பிக்கவிருக்கும்விதமாக, மகா வேசி அழிக்கப்படும்போது தப்பிப்பிழைக்க விருப்பமுள்ள அனைவரும் செயல்படவேண்டும், வேகமாக செயல்படவேண்டும்!
[பக்கம் 252-ன் படம்]
தொடர்ச்சியாக வந்த ஏழு உலக வல்லரசுகள்
எகிப்து
அசீரியா
பாபிலோன்
மேதிய-பெர்சியா
கிரீஸ்
ரோம்
ஆங்கில-அமெரிக்கா
[பக்கம் 254-ன் படம்]
‘இதுதானேயும் எட்டாவதான ராஜாவாயிருக்கிறது’
[பக்கம் 255-ன் படம்]
ஆட்டுக்குட்டியானவரைப் புறக்கணிப்பதன் மூலம் ‘இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுக்கிறார்கள்’
[பக்கம் 257-ன் படம்]
அடியோடு அழிக்கப்படுவதில் மகா பாபிலோனின் பிரதான பாகமான கிறிஸ்தவமண்டலம் பூர்வ எருசலேமைப் போன்றிருக்கும்