அதிகாரம் 30
என்றும் வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?
யெகோவா தேவன் அதிசயமான ஒன்றை—அவருடைய நீதியுள்ள புதிய காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனை—உங்களுக்கு அளிக்க முன்வருகிறார். (2 பேதுரு 3:13) ஆனால் அப்பொழுது வாழ்வதானது கடவுளுடைய சித்தத்தை இப்பொழுது நீங்கள் செய்துவருவதன் பேரில் சார்ந்திருக்கிறது. தற்போதைய பொல்லாத உலகம், அதன் பாகமாக நிலைத்திருக்கிற எல்லோரும் உட்பட, விரைவில் கடந்து போகவிருக்கிறது, “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) ஆகவே நீங்கள் இரண்டு போக்குகளில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று மரணத்துக்கு வழிநடத்துகிறது மற்றது நித்திய ஜீவனுக்கு வழி நடத்துகிறது. (உபாகமம் 30:19, 20) நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்?
2 நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுகிறீர்கள் என்பதை எப்படிக் காட்டுவீர்கள்? முதலாவதாக, யெகோவாவிலும் அவருடைய வாக்குத்தத்தங்களிலும் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்றும் “தம்மை ஆவலாய்த் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறாரென்றும்” நீங்கள் உறுதியாய் நம்புகிறீர்களா? (எபிரெயர் 11:6) அன்பும் இரக்கமுமுள்ள ஒரு தகப்பனை ஒரு மகனோ மகளோ உறுதியாய் நம்புகிறதுபோல நீங்கள் கடவுளை உறுதியாய் நம்பவேண்டும். (சங்கீதம் 103:13, 14; நீதிமொழிகள் 3:11, 12) இப்படிப்பட்ட விசுவாசத்தை உடையவர்களாய், சில சமயங்களில் காரியங்களை நீங்கள் முற்றிலுமாய் விளங்கிக் கொள்ளாதபோதுங்கூட அவருடைய அறிவுரையே ஞானமானது அல்லது அவருடைய வழிகளே சரியானவை என்பதன் பேரில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இராது.
3 என்றபோதிலும், விசுவாசம் மட்டுமல்லாமல் மேலுமதிகம் தேவைப்படுகிறது. யெகோவாவைப் பற்றி உங்களுடைய உண்மையான உணர்ச்சிகள் யாவை என்பதை வெளிப்படுத்திக் காட்டி நிரூபிக்கச் செயல்களும் இருக்க வேண்டும். (யாக்கோபு 2:20, 26) கடந்த காலத்தில் சரியானதைச் செய்வதில் எவ்விதமாவது தவறியிருப்பீர்களானால் அதற்கு நீங்கள் வருந்துகிறீர்களென்று காட்ட காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைப் போக்கை யெகோவாவின் சித்தத்துக்கு இசைவாகக் கொண்டுவர மனந்திரும்பும்படி அல்லது மாற்றங்களைச் செய்யும்படி நீங்கள் தூண்டி செயல்படுத்தப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் முற்றிலுமாய்த் திரும்பியிருக்கிறீர்களா? அதாவது, நீங்கள் ஒருவேளை பின்பற்றியிருந்திருக்கக்கூடிய எந்தத் தவறான போக்கையும் விட்டுத் தள்ளி, கடவுள் கட்டளையிடுகிற காரியங்களைச் செய்ய தொடங்கிவிட்டீர்களா? (அப்போஸ்தலர் 3:19; 17:30) இப்படிப்பட்ட செயல்கள் நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுகிறீர்களென்று காட்டும்.
ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டப்படுதலும்
4 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படி எது உங்களைத் தூண்டுவிக்க வேண்டும்? நன்றியோடு கூடிய மதித்துணர்வே அவ்வாறு தூண்டுவிக்க வேண்டும். சற்று எண்ணிப் பாருங்கள்: எல்லா நோய்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் நீங்கள் விடுதலையாவதை யெகோவா கூடிய காரியமாக்கியிருக்கிறார். விலைமதியா பரிசாகிய தம்முடைய குமாரனின் மூலமாய்க் கடவுள், உங்களுக்குப் பரதீஸ் பூமியில் முடிவற்ற ஜீவனை அடைவதற்கான வழியைத் திறந்து வைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 6:19, 20; 7:23; யோவான் 3:16) யெகோவாவின் அன்பு, அவரை நீங்கள் நேசிக்கும்படி உங்களைத் தூண்டுகையில், நீங்கள் என்ன செய்யவேண்டும்? (1 யோவான் 4:9, 10; 5:2, 3) இயேசுவின் பெயரில் நீங்கள் கடவுளை அணுகி, நீங்கள் அவருடைய ஊழியனாக இருக்கும்படி, அவருக்குரியவனாக இருக்கும்படி விரும்புகிறீர்களென்று அவரிடம் ஜெபத்தில் சொல்ல வேண்டும். இந்த முறையில் நீங்கள் உங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறீர்கள். இது உங்களுடைய சொந்தத் தனிப்பட்ட காரியம். வேறு எவரும் இதை உங்களுக்குச் செய்ய முடியாது.
5 கடவுளுக்கு உங்கள் ஒப்புக்கொடுத்தலை நீங்கள் செய்த பின்பு, அதன்படி வாழும்படி அவர் உங்களிடம் எதிர்பார்ப்பார். ஆகவே, நீங்கள் உயிரோடிருக்குமளவும், இந்தத் தீர்மானத்தை, அல்லது ஒப்புக்கொடுத்தலை விடாமல் உறுதியுடன் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களைச் சொல் தவறாத ஆளாக நிரூபியுங்கள். (சங்கீதம் 50:14) கடவுளுடைய காணக்கூடிய அமைப்புடன் நெருங்கி இருந்து வருவீர்களானால், உடன் கிறிஸ்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், அன்புள்ள ஊக்கமூட்டுதலையும் ஆதரவையும் அவர்கள் உங்களுக்குச் சந்தோஷமாய்க் கொடுப்பார்கள்.—1 தெசலோனிக்கேயர் 5:11.
6 என்றபோதிலும், நீங்கள் யெகோவாவுக்கு உரியவர்களாக இருக்க வேண்டுமென்று தனிமையில் யெகோவாவிடம் சொல்வது மட்டுமல்லாமல் மேலுமதிகம் செய்யவேண்டும். கடவுளைச் சேவிக்கும்படி நீங்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்திருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் காட்ட வேண்டும். இதை நீங்கள் எப்படிச் செய்ய வேண்டும்? தண்ணீரில் முழுக்காட்டப்படுவதன் மூலமே. இப்படிப்பட்ட தண்ணீர் முழுக்காட்டுதலானது, ஒருவன் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்யும்படி தன்னை முன்வந்து அளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை யாவரறிய வெளிப்படுத்திக் காட்டுவதாய் இருக்கிறது.
7 இந்தத் தண்ணீர் முழுக்காட்டுதலானது ஒரு முக்கிய தேவை என்பது இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியால் காட்டப்படுகிறது. இயேசு தம்முடைய தகப்பனிடம் தாம் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு வந்திருந்ததாக வெறுமென சொல்லிவிடவில்லை. (எபிரெயர் 10:7) இயேசு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பவராகத் தம்முடைய சேவையைத் தொடங்க விருக்கையில், தம்மை யெகோவாவுக்கு முன்வந்து அளித்து தண்ணீரில் முழுக்காட்டப்பட்டார். (மத்தேயு 3:13-17) இயேசு இந்த மாதிரியை முன்வைத்தனால், இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்கள் முழுக்காட்டப்பட வேண்டும். (1 பேதுரு 2:21; 3:21) உண்மையில், இயேசு, சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கும்படியும் பின்பு இந்தப் புதிய சீஷர்களை முழுக்காட்டும்படியும் தம்மைப் பின்பற்றுபவருக்குக் கட்டளையிட்டார். இது குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல் அல்ல. இது யெகோவாவைச் சேவிக்கும்படி தங்கள் மனதில் உறுதியாய்த் தீர்மானித்து விசுவாசிகளாயிருக்கிற ஆட்களின் ஞானஸ்நானம் அல்லது முழுக்காட்டுதல் ஆகும்.—மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 8:12.
8 நீங்கள், யெகோவாவைச் சேவிக்கும்படி உங்கள் மனதில் தீர்மானித்து முழுக்காட்டப்படும்படி விரும்புகிறீர்களென்றால், என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கூட்டுறவு கொண்டுவருகிற யெகோவாவின் சாட்சிகளின் சபையில் நடத்தும்-கண்காணியிடம் உங்கள் விருப்பத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும். அவர், சபையிலுள்ள மற்ற மூப்பரோடுங்கூட, நீங்கள், கடவுளை ஏற்கத்தகுந்த முறையில் சேவிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டிய தகவலை உங்களோடு மகிழ்ச்சியுடன் திரும்பப் பார்வையிடுவார். பின்பு நீங்கள் முழுக்காட்டப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படக்கூடும்.
இன்று உங்களைக் குறித்ததில் கடவுளுடைய சித்தம்
9 ஜலப்பிரளயத்துக்கு முன்பாக, வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிப்பதற்கும் பாதுகாப்புக்குரிய அந்த ஒரே இடமாகிய பேழையைச் சுட்டிக் காட்டுவதற்கும் “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” நோவாவை யெகோவா பயன்படுத்தினார். (மத்தேயு 24:37-39; 2 பேதுரு 2:5; எபிரெயர்11:7) அதைப் போன்ற ஒரு பிரசங்க வேலையை நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டுமென்பது கடவுளுடைய சித்தமாயிருக்கிறது. நம்முடைய காலத்தைக் குறித்து இயேசு பின்வருமாறு முன்னறிவித்தார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) மற்றவர்கள், இந்த ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து என்றுமாக வாழ வேண்டுமென்றால், கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி நீங்கள் கற்றிருக்கிற காரியங்களை அவர்களும் அறிய வேண்டும். (யோவான் 17:3) உயிரளிக்கும் இந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் பங்குகொள்வதற்கு உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுகிறதல்லவா?
10 கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். ஆட்கள் தம்மிடத்தில் வரும்படி அவர் காத்திருக்கவில்லை, இந்த ராஜ்ய செய்திக்குச் செவிகொடுக்க கூடியவர்களுக்காக அவர் தேடிக்கொண்டு சென்றார். மேலும் அவர், தம்மைப் பின்பற்றுவோர்—யாவரும்—அப்படியே செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 4:13; ரோமர் 10:10-15) கிறிஸ்துவின் கட்டளையையும் முன்மாதிரியையும் பின்பற்றி, பூர்வ கிறிஸ்தவர்கள் ஆட்களை அவர்கள் வீடுகளில் போய்ச் சந்தித்தனர். அவர்கள் ராஜ்ய செய்தியை “வீடுவீடாகக்” கொண்டு சென்றனர். (லூக்கா 10:1-6; அப்போஸ்தலர் 20:20) நம்முடைய நாளில் உண்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் போதக ஊழியத்தை நிறைவேற்றிவருகிற முக்கியமான முறை இன்னும் இதுவேயாகும்.
11 இந்த வேலையைச் செய்வதற்குத் தைரியம் வேண்டியதாய் இருக்கிறது. சாத்தானும் அவனுடைய உலகமும் பூர்வ காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களைப் பிரசங்கிக்காதபடி தடுத்து நிறுத்த முயன்றதைப் போலவே உங்களையும் தடுத்து நிறுத்த நிச்சயமாய் முயலுவார்கள். (அப்போஸ்தலர் 4:17-21; 5:27-29, 40-42) ஆனால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களை யெகோவா ஆதரித்துத் தாங்கிப் பலப்படுத்தினதுபோலவே, இன்று உங்களையும் பலப்படுத்துவார். (2 தீமோத்தேயு 4:17) ஆகவே தைரியமாயிருங்கள்! உயிரைக் காக்கும் இந்தப் பிரசங்க மற்றும் போதக வேலையில் முழு பங்கைக் கொள்வதன் மூலம் நீங்கள் உண்மையில் யெகோவாவையும் உங்கள் உடன் மனிதரையும் நேசிக்கிறீர்களென்று நிரூபியுங்கள். (1 கொரிந்தியர் 9:16; 1 தீமோத்தேயு 4:16) யெகோவா உங்கள் வேலையை மறந்துபோக மாட்டார், உங்களுக்கு நிறைவாகப் பலனளிப்பார்.—எபிரெயர் 6:10-12; தீத்து 1:3.
12 கொடுப்பதற்கு இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை வைத்திருக்கிறவற்றில் உண்மையான மதிப்புள்ள எதுவும் இல்லை, ஆகவே அதற்கு உங்கள் முதுகைத் திருப்புவதன் மூலம் நீங்கள் எதையோ இழந்து போவதாக ஒருபோதும் நினையாதேயுங்கள். “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்,” என்று இயேசு சொன்னார். (லூக்கா 17:32) அவளும் அவளுடைய குடும்பமும் சோதோமை விட்டுத் தப்பின பின்பு, தாங்கள் பின்னால் விட்டுவந்திருந்த பொருட்களுக்காக ஆவல் கொண்ட முறையில் ஏங்குபவளாய்ப் பின்நோக்கினாள். அவளுடைய இருதயம் எங்கே இருந்தது என்பதைக் கடவுள் கண்டார், அவள் ஓர் உப்புத் தூண் ஆனாள். (ஆதியாகமம் 19:26) லோத்தின் மனைவியைப்போல் இராதேயுங்கள்! முன்னால் இருக்கிறதன் பேரில் கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் வாழப்போகும் ‘அந்த உண்மையான வாழ்க்கை’யின் பேரில் உங்கள் கண்களை ஊன்றவையுங்கள்.—1 தீமோத்தேயு 6:19, NW.
பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்
13 தெரிந்தெடுப்பதற்கு, உண்மையில், இரண்டே காரியங்கள் இருக்கின்றன. கிறிஸ்து இதை, இரண்டு வழிகளில் ஒன்றைத் தெரிந்துகொள்வதற்கு ஒப்பிட்டார். ஒரு வழி “விரிவும் விசாலமுமாயிருக்கிறது” என்று அவர் கூறினார். அதில் பயணஞ்செய்கிறவர்கள் தங்களைப் பிரியப்படுத்திக்கொள்ள சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். என்றாலும் அந்த மற்ற வழி “நெருக்கமாய்” இருக்கிறது. ஆம், இந்த வழியில் செல்லுகிறவர்கள் கடவுளுடைய கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியும்படி கேட்கப்படுகின்றனர். பெரும்பான்மையர் அந்த விரிவான வழியையே தெரிந்துகொள்கின்றனர். ஒரு சிலரே இடுக்கமான வழியைத் தெரிந்துகொள்கின்றனர். நீங்கள் எந்த வழியைத் தெரிந்துகொள்வீர்கள்? உங்கள் தெரிந்துகொள்ளுதலைச் செய்கையில் பின்வரும் இதை மனதில் வையுங்கள்: அந்த விரிவான வழி திடீரென்று—அழிவில்—முடிந்துவிடும்! மறுபட்சத்தில் அந்த இடுக்கமான வழியோவெனில் நேரே கடவுளுடைய புதிய ஒழுங்கு முறைக்குள்ளேயே உங்களை வழிநடத்திக் கொண்டுபோய்விடும். அங்கே இந்தப் பூமியை ஒரு மகிமையான பரதீஸாக்குவதில் நீங்கள் பங்கு கொள்ளலாம் அங்கே நீங்கள் என்றும் சந்தோஷத்தில் வாழக்கூடும்.—மத்தேயு 7:13, 14.
14 கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனை அடைய நீங்கள் பின்பற்றக் கூடிய வெவ்வேறுபட்ட வழிகள், அல்லது வழி முறைகள் இருக்கின்றவென்ற முடிவுக்கு வராதேயுங்கள். ஒரே ஒரு வழியே இருக்கிறது. ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்திருந்தது ஒரே ஒரு பேழையே, பல படகுகள் அல்ல. விரிவாய் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப் பிழைத்திருக்கப் போவது ஒரே ஒரு அமைப்பே—கடவுளுடைய காணக்கூடிய அமைப்பேயாகும். எல்லா மதங்களும் ஒரே இலக்குக்கே வழிநடத்துகிறதென்பது சற்றேனும் உண்மையல்ல. (மத்தேயு 7:21-23; 24:21) யெகோவாவின் ஆசீர்வாதமாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு, நீங்கள் யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருந்து, கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்க வேண்டும்.—சங்கீதம் 133:1-3.
15 ஆகவே, கடவுளுடைய வாக்குப் பண்ணப்பட்ட புதிய காரிய ஒழுங்கு முறையின் இந்தக் காட்சியை, உங்கள் மனதிலும் இருதயத்திலும் தெள்ளத்தெளிவாக வைத்திருங்கள். யெகோவா தேவன் உங்களுக்கு நீட்டுகிற—பூமியில் பரதீஸில் என்றும் வாழும்—இந்த மிக மேன்மையான பரிசைப் பற்றி ஒவ்வொரு நாளும் சிந்தியுங்கள். இது வெறும் கனவல்ல. இது உண்மையானது! எப்படியெனில் பைபிளின் பின்வரும் வாக்குத்தத்தம் நிச்சயமாக நிறைவேறும்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள் . . . துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”—சங்கீதம் 37:29, 34.
[கேள்விகள்]
1. (எ) எந்த இரண்டு போக்குகள் உங்களுக்குத் திறந்திருக்கின்றன? (பி) சரியான போக்கை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
2. (எ) உங்களுக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறதென்றால், நீங்கள் எதைப்பற்றி உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருப்பீர்கள்? (பி) ஓர் அன்புள்ள தகப்பனை ஒரு பிள்ளை நம்புவது போல் கடவுளை நீங்கள் நம்புவது அவரைச் சேவிக்க உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?
3. (எ) விசுவாசத்தோடு கூட, வேறு எதுவும் வேண்டியதாய் இருக்கிறது? (பி) நீங்கள் ஜீவனைத் தெரிந்து கொள்ளுகிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு என்ன செயல்கள் தேவையாக இருக்கின்றன?
4. (எ) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு எது உங்களைத் தூண்டுவிக்க வேண்டும்? (பி) கடவுளைச் சேவிக்க வேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்கையில், செய்ய வேண்டிய சரியான காரியமென்ன?
5. (எ) கடவுளுக்கு உங்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்த பின்பு, நீங்கள் என்ன செய்யும்படி அவர் எதிர்பார்க்கிறார்? (பி) உங்கள் ஒப்புக்கொடுத்தலின்படி வாழ்க்கை நடத்துவதற்கு என்ன உதவி உங்களுக்குக் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது?
6. (எ) உங்கள் வாழ்க்கையை நீங்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கையில், அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும்? (பி) முழுக்காட்டுதலின் கருத்தென்ன?
7. (எ) கிறிஸ்தவர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? (பி) இயேசு கட்டளையிட்ட இந்த முழுக்காட்டுதல் அல்லது ஞானஸ்நானம் ஏன் குழந்தைகளுக்குரியதல்ல?
8. நீங்கள் முழுக்காட்டப்பட வேண்டுமென்றால், சபையில் யாரிடம் இதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்? ஏன்?
9. ஜலப்பிரளயத்துக்கு முன்பாக நோவா செய்த எது, இப்பொழுது நீங்கள் செய்யும்படியான கடவுளுடைய சித்தமாய் இருக்கிறது?
10. (எ) ஆட்களை நேசிப்பது இயேசுவின் என்ன முன்மாதிரியைப் பின்பற்றும்படி நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்? (பி) பிரசங்க வேலையின் பெரும் பாகம் எப்படிச் செய்யப்படுகிறது?
11. (எ) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கு ஏன் தைரியம் வேண்டியதாய் இருக்கிறது, ஆனால் நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை? (பி) நாம் செய்யும் இந்த வேலையை யெகோவா எப்படிக் கருதுகிறார்?
12. லோத்தின் மனைவியின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
13. நாம் எல்லோரும் செய்ய வேண்டிய இந்தத் தெரிந்து கொள்ளுதலை இயேசு எப்படி விளக்கிக் காட்டினார்?
14. கடவுளுடைய புதிய ஓழுங்கு முறைக்குள் தப்பிப் பிழைத்திருப்பதற்கு நீங்கள் எதன் ஒரு பாகமாக இருக்க வேண்டும்?
15. (எ) ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்ய வேண்டும்? (பி) எந்த நம்பிக்கை வெறும் ஒரு கனவல்லாமல், மிக மேம்பட்டதாய் இருக்கிறது?
[பக்கம் 251-ன் படம்]
உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து . . . முழுக்காட்டப்படுங்கள்
[பக்கம் 253-ன் படம்]
“லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்”
[பக்கம் 254-ன் படம்]
கடவுளுடைய புதிய ஒழுங்கு முறையை உங்கள் மனதிலும் இருதயத்திலும் தெள்ளந்தெளிவாக வைத்திருங்கள்