கருச்சிதைவு
சொற்பொருள் விளக்கம்: கருச்சிதைவு என்பது ஒரு கருவின் அல்லது சிசுவின் வெளியேற்றம், சாதாரணமாக, அது கருப்பைக்கு வெளியே வாழ இயலாதது. தன்னிச்சையான கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம், மனித அபூரணத்தினாலோ அல்லது தற்செயலான நிகழ்ச்சியாலோ விளைவடையலாம். விரும்பப்படாத ஒரு குழந்தையின் பிறப்பைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தூண்டி செய்யப்பட்ட கருச்சிதைவு வேண்டுமென்றே மனித உயிரைக் கொல்வதாகும்.
மனித உயிரின் மூலக்காரணம் எப்படி இந்தக் காரியத்தைக் குறித்து நம்முடைய நோக்குநிலையைப் பாதிக்கும்?
அப். 17:28: “அவருக்குள் [கடவுளால்] நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”
சங். 36:9: “உம்மிடத்தில் [யெகோவா தேவனிடத்தில்] ஜீவ ஊற்று இருக்கிறது.”
ரோமர் 14:12: “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”
கருத்தரித்தலுக்குப் பின், வளர்ச்சியின் ஆரம்பகால நிலைகளிலும், யெகோவா ஒரு குழந்தையின் உயிரை அருமையானதாகக் கருதுகிறாரா?
சங். 139:13-16: “[யெகோவா], என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”
பிறவாத குழந்தைக்குத் தீங்கு செய்வதைக் குறித்து ஒரு நபர் கணக்கொப்புவிக்க வேண்டும் என்று கடவுள் எப்போதாவது கூறியிருக்கிறாரா?
யாத். 21:22, 23: “மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்க வேண்டும். வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்.” (இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சட்டத்தில் தாய்க்கு என்ன நேரிடுகிறது என்பதே முக்கியமானது, கருவுக்கு என்ன நேரிடுகிறது என்பதல்ல என சில மொழிபெயர்ப்புகள் தோன்ற செய்கின்றன. இருப்பினும், எபிரெய மூல வாசகம், தாய்க்கோ அல்லது கருவுக்கோ நேரிடும் உயிருக்கு ஆபத்துவிளையும் விபத்துக்களைக் குறிப்பிடுகிறது.)
கடவுளின் சட்டப்பூர்வ அதிகாரமில்லாமல் மனித உயிரை வேண்டுமென்றே எடுத்துப்போடுவது எவ்வளவு வினைமையானது?
ஆதி. 9:6: “மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.”
1 யோவான் 3:15: “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது.”
யாத். 20:13: “கொலை செய்யாதிருப்பாயாக.”
கர்ப்பத்தை முழு வளர்ச்சியடைய அனுமதிப்பது தாயின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர் கருத்து தெரிவிப்பதால் கருச்சிதைவு செய்வது சரியானதே என்று தீர்மானிக்கலாமா?
மருத்துவரீதியான கருத்துக்கள் சில சமயங்களில் தவறானது. சக கூட்டாளி ஒருவனுக்கு ஒரு நபர் தீங்கிழைக்கக்கூடும் என்பதால் அந்த நபரைக் கொலைசெய்வது சரியானதா? ஒருவேளை குழந்தைப் பிறப்பின் சமயத்தில் தாயின் உயிரா அல்லது குழந்தையின் உயிரா என்பதில் தெரிவு செய்ய வேண்டியபோது, அது தனிப்பட்டவர்களின் தெரிவுக்கு உரியதாக இருக்கிறது. இருப்பினும், பல நாடுகளில் மருத்துவ செயல்முறைகளில் முன்னேற்றங்கள் இந்தச் சூழ்நிலைமையை அபூர்வமாக்கியிருக்கிறது.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘ஆனால் என்னுடைய உடலைப் பாதிக்கும் காரியங்களைப்பற்றித் தீர்மானிக்க எனக்கு உரிமையுண்டு.’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. அடிக்கடி நம்முடைய உரிமைகள் மற்றவர்களால் மிதிக்கப்படுகின்றன; பலர், மற்றவர்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஆனால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகாட்டி நியமங்களைப் பைபிள் நமக்கு அளிக்கிறது. இருப்பினும், நன்மைகளைப் பெற நாம் உத்தரவாதங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘பிள்ளைகளுக்குரிய தந்தைமார் பிள்ளைகளின் தாய்மார்களைக் கைவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் பைபிள் தராதரங்களின்படி வாழ்கையில், கணவன் தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் உண்மையில் நேசிப்பான் மற்றும் அவர்களோடு உண்மைப்பற்றுடன் நிலைத்திருந்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வான். (1 தீமோ. 5:8; எபே. 5:28-31)’ (2) ‘நாம் தனிப்பட்ட விதமாக அப்படிப்பட்ட அன்பையும் மரியாதையையும் பெறவேண்டுமென்றால், குடும்பத்தின் அங்கத்தினரிடையே நம்முடைய மனப்போக்கு சம்பந்தப்பட்டதில் பைபிள் தராதரங்களைப் பொருத்திப் பிரயோகிக்க வேண்டும். நாம் பிறப்பிக்கும் குழந்தைகளை எவ்வாறு கருதவேண்டும் என்று பைபிள் சொல்கிறது? (சங். 127:4; ஏசாயா 49:15-ஐ வித்தியாசப்படுத்திக் காட்டுங்கள்.)’