சுகப்படுத்துதல்
சொற்பொருள் விளக்கம்: உடல், மனம், அல்லது ஆவிக்குரிய பிரகாரம் நோயுற்றிருக்கும் ஓர் ஆள் நல்ல சுகம்பெறச் செய்வது. கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய எபிரெயத் தீர்க்கதரிசிகளில் சிலரும் இயேசு கிறிஸ்துவும் பூர்வக் கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் சிலரும் கடவுளுடைய ஆவியால் அற்புதச் சுகப்படுத்துதலைச் செய்ய முடிந்தது.
நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக்கொண்டு அற்புதச் சுகப்படுத்துதல் செய்யப்படுகிறதா?
அற்புதங்களை நடப்பிக்கும் திறமை உண்மையான கடவுளிடமிருந்தல்லாமல் வேறே தோற்றுமூலத்திலிருந்து வரமுடியுமா?
இஸ்ரவேல் ஜனம் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு வனாந்தரத்துக்குள் செல்ல அனுமதி கொடுக்கும்படி கேட்க மோசயும் ஆரோனும் எகிப்தின் பார்வோனுக்குமுன் தோன்றினார்கள். தெய்வீக ஆதரவின் அத்தாட்சியாக, ஆரோன் தன் கோலைக் கீழே போடும்படி மோச கட்டளையிட்டான், அது ஒரு பெரிய சர்ப்பமாயிற்று. இந்த அற்புதம் கடவுளுடைய ஆவியால் நடப்பிக்கப்பட்டது. ஆனால் எகிப்தின் மந்திரவித்தை நடப்பிக்கும் புரோகிதர்கள் தங்கள் கோல்களைப் போட்டார்கள், இவையும் பெரிய சர்ப்பங்களாயின. (யாத். 7:8-12) இவர்கள் யாருடைய வல்லமையால் தங்கள் அற்புதங்களை நடப்பித்தார்கள்?—உபாகமம் 18:10-12-ஐ ஒத்துப்பாருங்கள்.
இந்த 20-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவமண்டல குருமார் நடத்தும் ஆராதனைகளில் ஏதோ விசுவாச சுகப்படுத்துதல் நடப்பிக்கப்படுகின்றன. கிறிஸ்தவமல்லாத மதங்களுக்குள் பில்லி சூனியஞ்செய்கிற புரோகிதர்கள், பில்லி சூனிய மருத்துவர்கள், மாய மந்திரவாதிகள், இன்னும் மற்றவர்கள் இருக்கிறார்கள், இவர்களும் சுகப்படுத்துதலைச் செய்கிறார்கள்; இவர்கள் பெரும்பாலும் மாயவித்தையையும் மந்திரத்தையும் பயன்படுத்துகிறார்கள். “இயல் இயக்க மீறிய ஆற்றலால் சுகப்படுத்துவோர்” சிலர் தாங்கள் சுகப்படுத்துவது மதத்தோடு எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லையெனக் கூறுகிறார்கள். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும், சுகப்படுத்தும் வல்லமை உண்மையான கடவுளிடமிருந்து வருகிறதா?
மத். 24:24: “கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.”
மத். 7:15-23: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; . . . அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
நம்முடைய நாளில் நடப்பிக்கும் பரப்பரப்பூட்டும் சுகப்படுத்தல்கள், இயேசுவும் அவருடைய முதல் சீஷர்களும் அற்புதச் சுகப்படுத்தல்கள் நடப்பித்த அதே முறையில் நடப்பிக்கப்படுகின்றனவா?
சேவைகளுக்குச் செலுத்தும் செலவுகள்: “வியாதியுள்ளவர்களைக் குணமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” (மத். 10:8, தி.மொ.) (இன்றைய சுகப்படுத்துவோர் அவ்வாறு செய்கிறார்களா—இயேசு கட்டளையிட்டபடி, இலவசமாய்க் கொடுக்கிறார்களா?)
வெற்றியின் வீதம்: “அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.” (லூக்கா 6:19) “பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.” (அப். 5:15, 16) (நம்முடைய நாளில், சுகப்படுத்தலை நாடி மதசம்பந்த சுகப்படுத்துவோரிடமாயினும் அல்லது மதக் கோயில்களுக்காயினும் செல்வோர் எல்லாரும் சுகமாகிறார்களா?)
“சுகப்படுத்துவோர்” பாகமாக அமைந்துள்ள அந்த அமைப்பின் உறுப்பினரின் வாழ்க்கைமுறை, அவர்கள் கடவுளுடைய ஆவியைக் கொண்டிருக்கின்றனரென்ற அத்தாட்சியைக் கொடுக்கிறதா?
ஒரு தொகுதியாக அவர்கள், அன்பு, நீடிய-பொறுமை, சாந்தம், தன்னடக்கம் போன்ற ஆவியின் கனிகளை முதன்மையான முறையில் வெளிப்படுத்துகிறார்களா?—கலா. 5:22, 23.
அவர்கள் இந்த உலகத்தின் விவகாரங்களில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து, தாங்கள் உண்மையில் “உலகத்தின் பாகமல்லர்” என்ற நிலையில் இருக்கிறார்களா? போர்க் காலத்தின்போது இரத்தப் பழிக்கு விலகி சுத்தமாய் நிலைத்திருந்தார்களா? இந்த உலகத்தின் ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதனால் சிறந்த நற்பெயர் அவர்களுக்கு இருக்கிறதா?—யோவான் 17:16; ஏசா. 2:4; 1 தெச. 4:3-8.
அற்புதச் சுகப்படுத்துதலைச் செய்யும் திறமையால் இன்று உண்மையான கிறிஸ்தவர்கள் அடையாளங் கண்டுகொள்ளப்படுகிறார்களா?
யோவான் 13:35: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (இதையே இயேசு சொன்னார். நாம் அவரை உண்மையில் நம்பினால், உண்மையான கிறிஸ்தவத்தின் அத்தாட்சியாக, அற்புதச் சுகப்படுத்துதலையல்ல அன்பு இருக்கிறதாவெனவே நோக்குவோம்.)
அப். 1:8: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (தம்முடைய அப்போஸ்தலரைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பு, இயேசு இதையே அவர்கள் செய்யவேண்டிய இன்றியமையாத வேலையென அவர்களுக்குக் கூறினார், சுகப்படுத்துதலையல்ல. மத்தேயு 24:14; 28:19, 20-ஐயும் பாருங்கள்.)
1 கொரி. 12:28-30: “தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா?” (ஆகையால், உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் சுகமாக்கும் வரத்தைக் கொண்டிராரென பைபிள் தெளிவாய்க் காட்டுகிறது.)
நோயுற்றோரைச் சுகப்படுத்தும் திறமை விசுவாசிகளை அடையாளங் கண்டுகொள்வதற்கு ஓர் அடையாளமென மாற்கு 16:17, 18 காட்டுகிறதல்லவா?
மாற்கு 16:17, 18: “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.”
இந்த வசனங்கள் பொ.ச. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளின் சில பைபிள் கையெழுத்துப் பிரதிகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் தோன்றுகின்றன. ஆனால் இவை அவற்றிற்கு முற்பட்ட பழமையான நான்காம் நூற்றாண்டு கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளான, சைனய்ட்டிக்கஸ் மற்றும் வாட்டிகன் MS. 1209 ஆகியவற்றில் காணப்படுகிறதில்லை. “இந்த வசனங்கள் . . . மூலத் தொடர் உரையின் பாகமல்ல, ஆனால் ஒரு பின்சேர்ப்பேயாகும்,” என்று பைபிள் கையெழுத்துப் பிரதிகளின்பேரில் நிபுணரான டாக்டர் B. F. உவெஸ்ட்காட் கூறினார். (சுவிசேஷங்களின் படிப்புக்கு ஓர் அறிமுகம், லண்டன், 1881, பக். 338) “ஏறக்குறைய கிரேக்கக் கையெழுத்துச் சுவடிகள் அனைத்திலும் இந்தப் பகுதி இல்லை,” என்று ஐந்தாம் நூற்றாண்டில் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோம் கூறினார். (சென்ட் மாற்குவின் பிரகாரமான சுவிசேஷத்தின் கடைசி பன்னிரண்டு வசனங்கள், லண்டன், 1871, J.W. பர்கன், பக். 53) நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967) பின்வருமாறு சொல்கிறது: “அதன் சொற்றொகுதியும் எழுத்துநடையும் மீதியான சுவிசேஷத்திலிருந்து அவ்வளவு உச்ச அளவில் வேறுபடுவதால் மாற்குதானே அதை [அதாவது, வசனங்கள் 9-20-ஐ] இயற்றியிருப்பது சாத்தியமல்லவெனத் தோன்றுகிறது.” (புத். IX, பக். 240) பூர்வக் கிறிஸ்தவர்கள் தாங்கள் விசுவாசிகள் என்று நிரூபிக்க விஷத்தைக் குடித்தார்கள் அல்லது சர்ப்பங்களைக் கையாண்டார்கள் என்பதற்கு எந்தப் பதிவுமில்லை.
அற்புதச் சுகப்படுத்தலைச் செய்வதற்கான திறமைபோன்ற இத்தகைய வரங்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டன?
எபி. 2:3, 4: “முதலாவது கர்த்தர்மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.” (அப்பொழுது புதிதாயிருந்த, கிறிஸ்தவ சபை, உண்மையில் கடவுள் ஏற்பாடு செய்ததென்பதற்கு இங்கே நிச்சயமாகவே, நம்பவைக்கும் அத்தாட்சி இருந்தது. ஆனால் அது ஒருமுறை முற்றிலும் நிலைநாட்டப்பட்டபின், அதை மறுபடியும் மறுபடியும் நிரூபிப்பதற்குத் தேவையுண்டா?)
1 கொரி. 12:29, 30; 13:8, 13: “எல்லாரும் தீர்க்கதரிசிகளா? . . . எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? . . . அன்பு ஒருக்காலும் ஒழியாது, தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், . . . இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (இந்த அற்புத வரங்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினபின் ஒழிந்துபோம். ஆனால் கடவுளுடைய ஆவியின் கனிகளான விலைமதியா பண்புகள் உண்மையான கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் இன்னும் வெளிப்படுத்தப்படும்.)
ஒருவர் சுகப்படுத்தப்படும் வரையில், அது எவ்வாறு செய்யப்படுகிறதென்பது உண்மையில் முக்கியமா?
2 தெச. 2:9, 10: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் [“சகலவித அற்புதங்களோடும்,” JB] அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.”
லூக்கா 9:24, 25: “தன் ஜீவனை [ஆத்துமாவை, NW] இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”
எல்லா நோய்களிலிருந்தும் உண்மையான சுகமடைவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
வெளி. 21:1-4: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
ஏசா. 25:8: “அவர் மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து . . . விடுவார்.” (தி.மொ.) (மேலும் வெளிப்படுத்துதல் 22:1, 2-ம்)
ஏசா. 33:24: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘சுகப்படுத்துதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘சுகப்படுத்துவதற்குக் கடவுளுக்கு வல்லமை உண்டென்பதை எவராவது நம்பாவிடில் அவருக்கு பைபிளில் நம்பிக்கை இல்லை. ஆனால் இன்று ஆட்கள் அதைக் குறித்து சரியான முறையில் செயல்படுகிறார்களாவென சிந்தியாமல் என்னால் இருக்க முடியவில்லை.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘நான் உங்களுக்கு வேதவசனம் ஒன்றை வாசிக்கிறேன், நம்முடைய நாளில் இதற்கு மிக வேறுபடுகிற ஒரு பழக்கம் இருக்கிறதாவென கவனியுங்கள். (மத். 10:7, 8) . . . தம்முடைய சீஷர்கள் செய்ய முடியும் என்று இயேசு சொன்னதும் ஆனால் இன்றைய சுகப்படுத்துவோர் செய்ய முடியாததுமான ஒன்றையும் நீங்கள் கவனிக்கிறீர்களா? (அவர்கள் மரித்தோரை உயிர்த்தெழுப்ப முடியாது.)’ (2) ‘நாம் மற்ற ஆட்களின் நியாயாதிபதிகள் அல்லர், ஆனால் நாம் அதற்கெதிராக நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய ஒன்றை மத்தேயு 24:24 குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘சுகப்படுத்துதலைப்பற்றி பைபிள் சொல்வது உண்மையென நான் நிச்சயமாய் நம்புகிறேன். ஆனால் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் செய்யும் எந்தச் சுகப்படுத்துதலும் தற்காலிகமான நன்மைகளையே கொண்டுவருகிறதல்லவா? முடிவில் நாம் எல்லாரும் சாகிறோம். உயிர்வாழும் எல்லாரும் நல்ல சுகத்தை அனுபவித்து ஒருபோதும் சாகாமலிருக்கும் ஒரு காலம் எப்பொழுதாவது வருமா? (வெளி. 21:3, 4)’