அதிகாரம் 23
விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?
‘நீங்கள் ஒருவரையொருவர் காதலித்தால் அது சரிதானா? அல்லது நீங்கள் விவாகம் செய்யும்வரை காத்திருக்க வேண்டுமா?’ ‘நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னிடத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா?’ இதுபோன்ற கேள்விகள் இளைஞரிடையே மிகுதியாக இருக்கின்றன.
இருப்பினும் “பருவ வயதில் இருந்தபோது பாலுறவு கொண்டில்லாது இருந்தவன் ஒரு விதிவிலக்கான இளைஞன்தான்” என்று ஆலன் குட்மாகர் ஸ்தாபனம் தன்னுடைய 1981-வது ஆண்டு அறிக்கையில் முடிவாக சொன்னது. “10 ஆண்களில் எட்டு பேரும், 10 பெண்களில் ஏழு பேரும் தங்களுடைய பருவ வயதில் பாலுறவு கொண்டாக அறிக்கையிட்டனர்.”
‘ஏன் அப்படி செய்யக்கூடாது?’ என்று நீங்கள் கேட்கலாம். அன்பு காட்டப்படுவதை உணர விரும்புவது இயல்புதானே? நீங்கள் இளைஞராக இருக்கையில் உங்கள் கவனத்தைத் திருப்பும் வகையில் உங்கள் காதலுணர்ச்சிகள் வல்லமையுள்ளவையாக இருக்கக்கூடும். மேலுமாக, உங்களுடைய சகாக்களின் செல்வாக்கும் அங்கே இருக்கிறது. விவாகத்துக்கு முன்னான பாலுறவு கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது என்றும், உண்மையில் நீங்கள் ஒருவரை விரும்புகையில் நெருக்கமாய் பழக ஆவல்கொள்வது இயல்பானதே என்றும் அவர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். பாலுறவு கொள்வது உங்கள் ஆண்மையையும் அல்லது உங்கள் பெண்மையையும் நிரூபித்துக் காட்டுகிறது என்றும் சிலர் சொல்லலாம். விசித்திரமானவர் என்று நோக்கப்பட விரும்பாததன் காரணமாக பாலுறவு நெருக்கங்களை அனுபவிக்க உங்கள்மேல் அழுத்தம் வருவதை நீங்கள் உணரலாம்.
பிரபலமான கருத்துக்கு மாறாக, எல்லா இளைஞர்களுமே தங்களுடைய கன்னிமையை விட்டுக்கொடுக்க அவசரப்படுகிறவர்களாக இல்லை. உதாரணமாக, எஸ்தர் என்ற பெயருடைய விவாகமாகாத ஓர் இளம் பெண்ணைக் கவனியுங்கள். அவள் மருத்துவ சோதனைக்காக சென்றபோது அவளுடைய மருத்துவர் உண்மைகளை அறிய கேட்டதாவது: “எந்தக் கருத்தடை முறையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள்?” எஸ்தர் பதிலளித்தாள்: “நான் எதையும் உபயோகிப்பதில்லை.” அவளுடைய மருத்துவர் ஆச்சரியத்தோடு கூறினார்: “என்ன! நீ கர்ப்பிணியாக விரும்புகிறாயா? எதையுமே உபயோகிக்காதிருக்கையில் எப்படி கர்ப்பிணியாகாதிருக்க எதிர்பார்க்கிறாய்?” எஸ்தர் பதிலளித்தாள்: “ஏனென்றால், நான் பாலுறவு கொள்வதில்லை!”
அவளுடைய மருத்துவர் அதை நம்பமுடியாமல் அவளை உற்றுப் பார்த்தார். “இது நம்பமுடியாதது,” அவர் சொன்னார். “13 வயது இளம் பிள்ளைகள் இங்கே வந்திருக்கிறார்கள், அவர்கள் இனிமேலும் கன்னிகைகள் அல்ல. நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க நபர்.”
எஸ்தரை எது “குறிப்பிடத்தக்கவர்” ஆக்கியது? அவள் பைபிளின் புத்திமதியைப் பின்பற்றினாள். “சரீரம் வேசித்தனத்திற்கல்ல (விவாகத்துக்கு முன்னான பாலுறவு உட்பட) . . . வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.” (1 கொரிந்தியர் 6:13, 18) ஆம், விவாகத்துக்கு முன்னான பாலுறவு கடவுளுக்கெதிரான ஒரு வினைமையான பாவம் என்பதை அவள் அறிந்திருந்தாள். “நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்று 1 தெசலோனிக்கேயர் 4:3, (NW) சொல்கிறது. இருப்பினும், என்ன காரணத்துக்காக பைபிள் விவாகத்துக்கு முன்னான பாலுறவை விலக்குமாறு சொல்கிறது?
பின் விளைவுகள்
பைபிள் காலங்களிலும்கூட சிலர் விவாகத்துக்கு முன்னான பாலுறவில் ஈடுபட்டனர். ஓர் ஒழுக்கக்கேடான பெண் ஓர் இளம் ஆணை அனுபவிக்க அழைக்கும் வகையில் சொல்வதாவது: “வா, விடியற்காலம் வரைக்கும் நம்முடைய காதல் ரசத்தைப் பருகுவோம்; காதல் விளையாட்டுகளில் ஒருவரையொருவர் அனுபவிப்போம்.” (நீதிமொழிகள் 7:18, NW) இருப்பினும், இன்றைக்கு அனுபவிக்கும் இன்பங்கள் நாளைக்கு வேதனையுண்டாக்கும் என்று பைபிள் எச்சரிக்கிறது. “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்,” என்று சாலொமோன் குறிப்பிட்டான். ஆனால், அவன் தொடர்ந்து சொல்கிறான், “அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையாயிருக்கும்.”—நீதிமொழிகள் 5:3, 4.
சாத்தியமுள்ள ஒரு பின்விளைவு, பாலுறவினால் தொற்றப்பெறும் வியாதி, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, பாலுறவு அனுபவம், சரி செய்யமுடியாத பாதிப்பு ஒன்றை, ஒருவேளை, கருத்தரியாமை அல்லது ஒரு வினைமையான உடல்நலப் பிரச்னையை உண்டாக்கியுள்ளது என்பதை ஒருவர் அறியவரும்போது என்னே ஓர் இருதய வேதனையாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! நீதிமொழிகள் 5:11, (NW) எச்சரிக்கிறது: “எதிர்காலத்திலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கிக்க வேண்டியிருக்கும்.” விவாகத்துக்கு முன்னான பாலுறவு முறைதவறிப் பிறக்கும் குழந்தைகளுக்கும், (பக்கங்கள் 184-5-ஐப் பார்க்கவும்.) கருச்சிதைவுக்கும், அகால விவாகத்துக்கும் வழிநடத்துகிறது—ஒவ்வொன்றும் அதனதனுடைய வேதனைத்தரும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது. ஆம், விவாகத்துக்கு முன்னான பாலுறவில் ஈடுபடும் ஒருவர் உண்மையிலேயே ‘அவனுடைய அல்லது அவளுடைய சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறார்.’—1 கொரிந்தியர் 6:18.
அத்தகைய அபாயங்களை அறிந்தவராய், டாக்டர் ரிச்சர்டு லீ, யேல் ஜர்னல் ஆஃப் பயாலஜி அண்டு மெடிசின் என்ற பத்திரிகையில் எழுதியதாவது: “நாம் நம்முடைய இளைஞர்களிடம் கர்ப்பந்தரித்தலைத் தவிர்ப்பதைப் பற்றியும் மேகநோய் சிகிச்சை ஆகியவற்றில் நாம் கண்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றியும் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம், ஆனால், அதிக நம்பத்தகுந்ததும், விசேஷித்ததும், விலைமலிவானதும், கெடுதியற்றதும் கர்ப்பவதியாயிருக்கும் காலப்பகுதியின் மனவேதனைகளுக்கும் மேகநோய் சம்பந்தமான மனவேதனைகளுக்கும் எதிரான தற்காப்பாகவும் இருக்கிற பூர்வகாலத்திய, மதிப்புவாய்ந்த, மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கேதுவான கன்னித்தன்மையை புறக்கணிக்கிறோம்.”
குற்ற உணர்வும் ஏமாற்றமும்
மேலும் விவாகத்துக்கு முன்னான பாலுறவு கசப்பான ஏமாற்றத்தைக் கொண்டுவருகிறது என்று அநேக இளைஞர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். விளைவு என்ன? குற்ற உணர்வு மற்றும் குறைந்துவிட்ட சுய-மரியாதை, இருபத்திமூன்று வயதான டென்னிஸ் ஒப்புக்கொண்டது: “அது பெரிய ஓர் ஏமாற்றம்—அது நல்ல உணர்வையும், அன்பின் அனலையும் உண்டுபண்ணுவதாக சொல்லப்பட்டது, ஆனால், அது அங்கே காணப்படவில்லை. மாறாக, எவ்வளவு தவறானது அந்தச் செயல் என்பதில் முற்றிலும் தெளிவான உணர்வு என்னைத் தாக்கியது. என்னுடைய இச்சையடக்கத்தை இழந்ததைக் குறித்து நான் வெகுவாக வெட்கப்பட்டேன்.” ஓர் இளம்பெண் ஒப்புக்கொண்டாள்: “வேதனைதரும் அதிர்ச்சியோடு சுயநினைவுக்கு வந்தேன். . . . விருந்து முடிந்தது, நான் வேதனையுள்ளவளாகவும், மலிவான பொருளாகவும், அசுத்தமானவளாகவும் உணர்ந்தேன். ‘காரியங்கள் அதிக தூரம் செல்வதற்கு முன்னே, நீ ஏன் நம்மைத் தடுக்கவில்லை?’ என்று அவன் சொன்னதைக் கேட்பது எனக்கு எவ்விதத்திலும் அதிக மேம்பட்ட நிலையின் உணர்வைக் கொண்டுவரவில்லை.”
அத்தகைய பிரதிபலிப்புகள் அபூர்வமானவையல்ல என்பதாக டாக்டர் ஜெய் செகல் கூறுகிறார். 2,436 கல்லூரி மாணவர்களின் பாலுறவு செயல்களை ஆய்வு செய்த பிறகு அவர் முடிவு செய்ததாவது: “அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தந்த முதல் [பாலுறவு சம்போக] அனுபவங்கள், நிறைவையும் கிளர்ச்சியையும் தந்தவற்றைப் பார்க்கிலும் ஏறக்குறைய இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அதிகமாக இருந்தன. ஆண்களும் பெண்களுமாகிய இருதரத்தாருமே தாங்கள் பேரளவில் ஏமாற்றம் அடைந்தனர் என்று நினைவுகூர்ந்தனர். விவாகமான தம்பதிகளும் சில சமயங்களில் பாலுறவு சம்பந்தமான தங்களுடைய பிரச்னைகளைக் கொண்டிருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு விவாகத்தில் உண்மையான அன்பும் பொறுப்புணர்ச்சியும் இருக்கும்போது அத்தகைய பிரச்னைகள் எளிதில் தீர்க்கப்படக்கூடும்.
பலருடன் பாலுறவுகொள்ளும் பழக்கத்தின் கிரயம்
சில இளைஞர்கள் பாலுறவு கொள்வதில் எந்த ஒரு குற்ற உணர்வையும் கொண்டிருப்பதில்லை. எனவே அவர்கள் பல்வேறு கூட்டாளிகளுடன் பாலுறவை நாடுவதன் மூலம் மாம்ச இச்சைகளைத் திருப்தி செய்வதில் தீவிர ஈடுபாடு கொள்கின்றனர். அத்தகைய இளைஞர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற உணர்வுக்கு ஒரு விலைமதிப்பைச் செலுத்துகின்றனர் என்று ஆராய்ச்சியாளர் ராபர்ட் சொரென்சன் பருவவயது பாலுறவு நடத்தைப் பற்றிய தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டார். சொரென்சன் எழுதுவதாவது: “எங்களுடைய தனிப்பட்ட பேட்டிகளில் அநேகர் [பல்வேறு நபர்களைப் பாலுறவு கூட்டாளிகளாகக் கொண்டிருக்கும் இளைஞர்கள்] தாங்கள் நோக்கமற்ற மற்றும் சுயதிருப்தியற்ற வகையில் செயல்படுகிறோம் என்று நம்புவதாக வெளிக்காட்டுகின்றனர்.” இவர்களில் நாற்பது விழுக்காடு தொகையினர் ஒத்துக்கொள்ளும் கூற்றாவது: “நான் இப்பொழுது வாழும் முறையில் என்னுடைய திறமைகளில் பெரும்பான்மை வீணாய்ப்போகிறது.” இந்தப் பல்வேறு கூட்டாளி பாலுறவுப் பழக்கமுள்ள இளைஞர்கள் மிகக் குறைவான “திடநம்பிக்கையையும், சுய மதிப்பையும்” அறிவித்ததாக சொரென்சன் மேலுமாகக் கண்டுபிடித்தார்.
இது நீதிமொழிகள் 5:9 சொல்வது போன்றே இருக்கிறது; பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோர் “[தங்களுடைய] மேன்மையை அந்நியர்களுக்குக்” கொடுக்கிறார்கள்.
பாலுறவுக்குப் பின்
ஒரு காதல் ஜோடி முறைகேடான உறவுகளை ஒரு தடவை கொண்டிருந்த பிறகு, அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் வித்தியாசமாக பார்க்கின்றனர். அந்தப் பெண்ணுக்கான தன்னுடைய உணர்வுகள் முன்னிருந்ததைப்போல அவ்வளவு தீவிரமாக இல்லாதிருப்பதை ஒரு வாலிபப் பையன் காணக்கூடும். மறுபட்சத்தில், ஒரு பெண் தான் சுயநலத்திற்காக உபயோகிக்கப்பட்டவளாக உணரக்கூடும். கன்னிப்பெண்ணான தாமாரிடமாக வாலிபனாகிய அம்னோன் எவ்வளவாய் காதல்நோய் கொண்டவனாக இருந்தான் என்பதைப் பற்றிய பைபிள் விவரப்பதிவை நினைவுகூருங்கள். இருப்பினும், அவளுடைய பாலுறவுக்குப் பிறகு, “அவளை அதிக வெறுப்போடு வெறுக்க ஆரம்பித்தான்.”—2 சாமுவேல் 13:15, NW.
மரியா என்ற பெயர்கொண்ட பெண் இதே போன்ற அனுபவத்தைக் கொண்டிருந்தாள். பாலுறவு கொண்ட பிறகு அவள் ஒப்புக்கொண்டதாவது: “நான் என்னை வெறுத்தேன் (என்னுடைய பலவீனத்தைக் குறித்து) மற்றும் என்னுடைய ஆண் சிநேகிதனையும் வெறுத்தேன். உண்மையில், எங்களை நெருங்கிவரச் செய்யும் என்று நாங்கள் நினைத்த பாலுறவு எங்களுடைய உறவுக்கு முடிவைக் கொண்டுவந்தது. நான் அவனை அதற்குப் பிறகு பார்க்கவும் விரும்பவில்லை.” ஆம், விவாகத்துக்கு முன்னான பாலுறவைக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு ஜோடி தாங்கள் மறுபடியும் திரும்பிப்போக முடியாத ஓர் எல்லைக் கோட்டைத் தாண்டிப்போகிறார்கள்!
குடும்ப வாழ்க்கைப் பிரிவில் மதிப்புக்குரிய ஓர் ஆராய்ச்சியாளரான பால் H. லாண்டிஸ் குறிப்பிடுவதாவது: “விவாகத்துக்கு முன்னான பாலுறவின் தற்காலிக பாதிப்பு உறவைப் பலப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையிலான பாதிப்புகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கக்கூடும்.” உண்மையில், பாலுறவிலிருந்து விலகியிருக்கும் ஜோடிகளோடு ஒப்பிடுகையில் பாலுறவு கொள்ளும் ஜோடிகளுக்கே பிரிந்துபோவதற்கான அதிக சாத்தியம் இருக்கிறது! காரணம்? முறைகேடான உறவுகள் பொறாமையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது. ஓர் இளைஞன் ஒப்புக்கொண்டான்: “சிலர் பாலுறவு கொள்ளும்போது பிற்பாடு சிந்திக்கின்றனர், ‘அவள் என்னோடு சம்போகம் கொண்டிருந்தாளென்றால், ஒருவேளை, மற்றொருவனோடும்கூட அவள் கொண்டிருந்திருப்பாள்.’ உண்மையைச் சொல்லப்போனால் நான் அப்படித்தான் உணர்ந்தேன். . . . நான் மிதமிஞ்சிய பொறாமையும், சந்தேகமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக இருந்தேன்.”
இது உண்மையான அன்பிலிருந்து எவ்வளவு தூரமாக இருக்கிறது. உண்மை அன்புக்குப் “பொறாமை இல்லை, . . . கண்ணியமற்ற விதத்தில் நடக்காது, சுயநல அக்கறைகளை மட்டுமே நாடாது.” (1 கொரிந்தியர் 13:4, 5) நிலைவரமான உறவுகளை வளர்க்கும் அன்பு குருட்டுத்தனமான காதலுணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல.
கற்புடைமையின் நன்மைகள்—சமாதானமும் சுயமரியாதையும்
இருப்பினும், கற்புடைமையைக் காத்து வருவது பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் ஓர் இளம் நபருக்கு உதவுவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்கிறது. தன்னுடைய ஆண் சிநேகிதனுக்கான ஊக்கமான அன்பின் மத்தியிலும் கற்புடையவளாகத் தன்னை வைத்துக்கொண்ட ஓர் இளம் பெண்ணைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதன் விளைவாக அவள் பெருமிதத்துடன் இவ்வாறு சொல்லக்கூடியவளாக இருந்தாள்: “நான் மதில்தான், என் ஸ்தானங்கள் கோபுரங்கள்.” அவள் ஒழுக்கக்கேடு என்ற அழுத்தத்தால் எளிதில் ‘திறந்திடும்’ ஓர் ‘ஊசல் கதவு’ அல்ல. ஒழுக்கரீதியாக, அவள் அணுக முடியாத கோபுரங்களைக் கொண்ட ஒரு கோட்டையின் ஏறிக்குதிக்க முடியாத மதிலைப் போன்று நிற்கிறாள். அவள் “கற்புள்ளவள்” என்று சொல்வதற்குத் தகுதியுள்ளவள். தன்னுடைய வருங்கால கணவனைப் பற்றி அவளால் இப்படிச் சொல்ல முடியும்: “அவனுடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.” அவளுடைய சொந்த மனச் சமாதானமே அவர்கள் இருவருக்கிடையே இருக்கும் மனநிறைவுக்கு உதவியது.—சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:9, 10, NW; 8:9, 10.
முன்னர் குறிப்பிடப்பட்ட எஸ்தர் என்ற கற்புள்ள பெண் உள்ளான சமாதானத்தையும் சுயமரியாதையையும் கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: “நான் என்னைக் குறித்து நல்லதாக உணர்ந்தேன். உடன் வேலையாட்கள் என்னைப் பரியாசம் செய்தாலும் நான் என்னுடைய கற்புடைமையை வைரம்போன்று கருதினேன். அவ்வளவு மதிப்புள்ளது, ஏனென்றால் அது அவ்வளவு அபூர்வமானது.” மேலும், எஸ்தர் போன்ற இளைஞர்கள் குற்றமுள்ள மனச்சாட்சியினால் வாதிக்கப்படுவதில்லை. “யெகோவா தேவனிடமாக நல்மனச்சாட்சியைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நேர்த்தியானது வேறொன்றும் இல்லை” என்பதாக ஸ்டீபன் என்ற 19 வயது கிறிஸ்தவன் சொன்னான்.
‘ஆனால், பாலுறவு கொள்ளவில்லையென்றால் ஒரு காதல் ஜோடி எப்படி ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முடியும்?’ என்று சில இளைஞர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
நிலைவரமான நெருங்கிய உறவை வளர்த்தல்
பாலுறவினால் மட்டுமே நிரந்தர உறவை உருவாக்க முடியாது; முத்தமிடுதல் போன்ற பாச வெளிக்காட்டுகளாலும் முடியாது. ஆன் என்ற ஓர் இளம்பெண் எச்சரிக்கிறாள்: “சில சமயங்களில் வெகு விரைவிலேயே நீங்கள் உடல்சம்பந்தமான நெருக்கத்தில் வந்துவிடக்கூடும் என்பதை நான் அனுபவத்தில் கற்றறிந்தேன்.” ஒரு காதல் ஜோடி மிஞ்சிய பாச உணர்வுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பதில் அவர்களுடைய நேரத்தைக் கழிப்பார்களானால், அர்த்தமுள்ள பேச்சுத் தொடர்பு நின்றுவிடுகிறது. இப்படியாக அவர்கள் வினைமையான கருத்து வேறுபாடுகளை மூடி மறைக்கலாம். ஆனால் அவை விவாகத்துக்குப்பின் மறுபடியும் தோன்றக்கூடும். பிற்பாடு, தான் முடிவில் விவாகம் செய்துகொண்ட இன்னொரு நபருடன் ஆன் பழுகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடுகையில், அவள் உடல்சம்பந்தமாக நெருங்கி வருவதைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருந்தாள். ஆன் விவரிக்கிறாள்: “பிரச்னைகளைக் கையாளுவது பற்றி சிந்திப்பதிலும், எங்களுடைய வாழ்க்கையின் இலக்குகளைக் குறித்து கலந்தாலோசிப்பதிலும் எங்களுடைய நேரத்தைக் கழித்தோம். நான் எப்படிப்பட்ட நபரை விவாகம் செய்கிறேன் என்பதை அறிய முற்பட்டேன். விவாகத்திற்குப் பின்பு, எதிர்பாராத இனிய செய்திகளே இருந்தன.”
அத்தகைய இச்சையடக்கத்தை வெளிக்காட்டுவது ஆனுக்கும் அவளுடைய ஆண் சிநேகிதனுக்கும் கடினமாயிருந்ததா? “ஆம், அப்படித்தான் இருந்தது!” ஆன் ஒப்புக்கொண்டாள். “நான் இயல்பாகவே ஒரு பாச உணர்ச்சியுள்ள நபர். ஆனால் நாங்கள் ஆபத்துக்களைக் குறித்துப் பேசி ஒருவருக்கொருவர் உதவி செய்தோம். கடவுளுக்குப் பிரியமாயிருக்கவே நாங்கள் இருவரும் அதிகமாக விரும்பினோமேயன்றி வரப்போகும் எங்கள் விவாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை.”
ஆனால் முந்தியே பாலுறவு அனுபவத்தைக் கொண்டிருப்பது ஒரு புதிய கணவனுக்கு அல்லது மனைவிக்கு உதவுவதாக இருக்கிறதா? இல்லை, மாறாக, விவாக நெருக்கத்தை அது குறைத்துப்போடுவதாயிருக்கிறது! விவாகத்துக்கு முன்னான உறவுகளில், பாலுறவின் உடல் சம்பந்தமான அம்சங்கள் அடங்கிய சுய-திருப்தியின் மீதே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற காதலுணர்ச்சிகள் பரஸ்பர மரியாதையை அடியரித்துவிடுகிறது. அத்தகைய சுயநலமான வடிவமைப்புகள் ஒருமுறை உருவாக்கப்படுகையில் அவைகளை முறியடிப்பது கடினம் மற்றும் முடிவிலே அவை நட்புறவின் மீது பெருஞ்சேதத்தைக் கொண்டுவரக்கூடும்.
இருப்பினும், விவாகத்தில் ஆரோக்கியமுள்ள நெருங்கிய உறவுக்கு இச்சையடக்கம் என்ற கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. கொடுப்பதிலேதான் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், பெறுவதைக் காட்டிலும் ‘ஒருவருக்கொருவர் கொடுக்கவேண்டிய பாலுறவுப் பங்கைச் செலுத்த வேண்டும்.’ (1 கொரிந்தியர் 7:3, 4, NW) கற்புடையவர்களாய் தொடர்ந்திருப்பது உங்களுக்கு அத்தகைய இச்சையடக்கத்தை வளர்க்க உதவும். உங்களுடைய விருப்பங்களுக்கு முன்னதாக மற்றவர்களுடைய நலத்துக்கான சுய-நலமற்ற அக்கறையை வைக்க அது உங்களுக்குப் போதிக்கிறது. மேலும், விவாகத்தில் மனநிறைவு என்பது உடல் சம்பந்தமான அம்சங்களினால் மட்டுமே உண்டாவதல்ல என்பதையும் நினைவில் வையுங்கள். மேலுமாக ஒரு பெண்ணின் பாலுறவுப் பிரதிபலிப்பு அவள், “நெருங்கிய தொடர்பு, நெருக்கம் மற்றும் நம்பகமான தன்மை” ஆகியவற்றைக் கொண்டிருப்பதன் பேரிலும் அவளுடைய கணவன், “தன்னுடைய மனைவியுடன் தான் ஐக்கியப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் திறமையிலும் மற்றும் . . . அவள் அவனில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்” என்பதின்பேரிலும் சார்ந்திருக்கிறது என்று சமூக உறவுநல நிபுணரான சைமூர் ஃபிஷர் சொல்கிறார்.
அக்கறையூட்டும் விதமாக, விவாகமான 177 பெண்களைப் பற்றிய ஆய்வு ஒன்றில், விவாகத்துக்கு முன்னான பாலுறவில் ஈடுபட்டவர்களில் நான்கில் மூன்றுபேர் விவாகத்தின் முதல் இரண்டு வாரங்களின்போது பாலுறவுப் பிரச்னைகளைக் கொண்டிருந்ததாக அறிவித்தனர். மேலும், நீண்டகால அடிப்படையிலான பாலுறவுப் பிரச்னைகளை அறிக்கையிட்டவர்கள் எல்லாரும் “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பின்னணியைக் கொண்டிருந்தனர்.” விவாகத்துக்கு முன்னான பாலுறவில் ஈடுபடுவோர் விவாகத்துக்குப் பின் விபசாரத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு மடங்கு அதிக சாத்தியமுள்ளது என்பதை ஆய்வு மேலும் வெளிக்காட்டியது! பைபிளின் வார்த்தைகள் எவ்வளவு மெய்யானவை: “வேசித்தனம் . . . நல்ல உள்நோக்கத்தை அப்புறப்படுத்தும்.”—ஓசியா 4:11, NW.
ஆகவே, ‘எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்.’ (கலாத்தியர் 6:7, 8) காதலுணர்ச்சிகளை விதைப்பீர்களேயானால் நீங்கள் சந்தேகங்கள் மற்றும் பாதுகாப்பின்மையின் பெரும் விளைச்சலை அறுப்பீர்கள். மாறாக, இச்சையடக்கத்தை விதைத்தால், நீங்கள் நம்பகமான தன்மை, மற்றும் பாதுகாப்பின் விளைச்சலை அறுப்பீர்கள். முன் குறிப்பிட்ட எஸ்தர் இப்பொழுது அநேக ஆண்டுகளாக விவாகமானவளாக சந்தோஷத்துடன் இருக்கிறாள். “நான் என்னுடைய மனைவியிடம் வீட்டுக்கு வருகையில் நாங்கள் ஒருவருக்கொருவர் மட்டுமே உரியவர்களாக இருப்பதை அறிவது விவரிக்க முடியாத சந்தோஷமாகும். இந்த நம்பிக்கை உணர்வின் இடத்தை எதுவும் பூர்த்திசெய்யாது” என்று அவளுடைய கணவர் சொல்கிறார்.
விவாகமாகும் வரையாகக் காத்திருப்பவர்கள், அவர்கள் கடவுளுக்குப் பிரியமாக இருக்கிறார்கள் என்பதை அறிவதால் மனச்சமாதானத்தை அனுபவிக்கிறார்கள். இருந்தபோதிலும் இந்த நாட்களிலே கற்புடன் இருப்பது என்பது மிகவும் கடினம். அவ்வாறு இருக்க உங்களுக்கு எது உதவக்கூடும்?
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻ நீங்கள் அறிந்திருக்கும் இளைஞர்களிடையே விவாகத்துக்கு முன்னான பாலுறவு எவ்வளவு பரவலாக இருக்கிறது? இது உங்களுக்கு ஏதாவது பிரச்னைகளை அல்லது அழுத்தங்களை உண்டாக்குகிறதா?
◻விவாகத்துக்கு முன்னான பாலுறவின் சில சாதகமற்ற பின்விளைவுகள் யாவை? இந்த வழிகளில் துன்பம் அனுபவித்திருக்கிற இளைஞர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?
◻ பருவ வயது கர்ப்பந்தரித்தல் பிரச்னைக்குக் கருத்தடை செய்வதுதான் பதிலாக இருக்கிறதா?
◻ முறைகேடான பாலுறவில் ஈடுபட்ட பிறகு சிலர் ஏன் குற்ற உணர்வும் ஏமாற்றமும் அடைகின்றனர்?
◻ விவாகமாகாத ஜோடியை நெருங்கி வரச் செய்வதற்கு பாலுறவு உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
◻ எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளின்போது ஒரு காதல் ஜோடி எப்படி ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள முடியும்?
◻ விவாகமாகும்வரை கன்னியாகவே இருப்பதில் என்ன நன்மைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
[பக்கம் 182-ன் சிறு குறிப்பு]
“பருவ வயதில் இருந்தபோது பாலுறவு கொண்டில்லாது இருந்தவன் ஒரு விதிவிலக்கான இளைஞன்தான்”—ஆலன் குட்மாகர் ஸ்தாபனம்
[பக்கம் 187-ன் சிறு குறிப்பு]
“அது பெரிய ஓர் ஏமாற்றம்—அது நல்ல உணர்வையும் அன்பின் அனலையும் உண்டுபண்ணுவதாக சொல்லப்பட்டது, ஆனால், அது அங்கே காணப்படவில்லை”
[பக்கம் 190-ன் சிறு குறிப்பு]
விவாகத்துக்கு முன்னான பாலுறவைக் கொண்டிருப்பதன் மூலம், ஒரு ஜோடி தாங்கள் மறுபடியும் திரும்பிப் போகமுடியாத ஓர் எல்லைக் கோட்டைத் தாண்டிப்போகிறார்கள்!
[பக்கம் 184, 185-ன் பெட்டி/படம்]
பருவ வயதில் கர்ப்பந்தரிக்கும் பிரச்னை—‘இது எனக்குச் சம்பவியாது!’
“பத்து பருவ வயதினரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பிணியாகின்றனர். இந்த விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலை மாறவில்லையென்றால் 10 இளம்பெண்களில் நான்குபேர் ஒரு தடவையாவது தங்களுடைய பருவ வயதில் கர்ப்பிணியாவார்கள்.” இப்படியாக பருவ வயதில் கர்ப்பந்தரித்தல்: நீங்காத ஒரு பிரச்னை என்ற ஆங்கிலப் பிரசுரம் அறிக்கை செய்கிறது. எப்படிப்பட்ட பெண்கள் கர்ப்பிணியாகின்றனர்? பருவ வயது என்ற ஆங்கிலப் பிரசுரம் சொல்கிறது: “கர்ப்பிணியாகும் பள்ளி வயது சிறுமிகள் எல்லாச் சமூக-பொருளாதார தொகுதிகளிலிருந்தும் . . . எல்லா இனங்கள், எல்லா மதங்கள் மற்றும் கிராமப்புறம், நகர்ப்புறம் ஆகிய தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள்.”
சில பெண்களே கர்ப்பிணியாவதை விரும்புகிறார்கள். “பேட்டிகளில் பெரும்பான்மையர் ‘இது எனக்கு நேரிடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை’ என்று அடிக்கடி குறிப்பிட்டனர்” என்பதாக 400 பருவ வயது கர்ப்பிணிகள் சம்பந்தமான தன்னுடைய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியில் ஃபிராங்க் ஃபர்ஸ்டென்பெர்க், ஜூனியர், குறிப்பிட்டார்.
ஆனால் தங்களுடைய நண்பர்களில் சிலர் கர்ப்பிணியாகாமல் பாலுறவு சம்போகங்களை அனுபவித்திருக்கின்றனர் என்று கவனித்தபோது அவர்களும் அப்படியே செய்யக்கூடும் என்று சில பெண்கள் எண்ணினர். ஃபர்ஸ்டென்பெர்க் மேலும் குறிப்பிட்டார்: “ஒரு தொகுதியான ஆட்கள் தாங்கள் ‘உடனே’ கர்ப்பந்தரிப்போம் என்பதை சாத்தியமானது என்று எண்ணவில்லை. வேறு சிலர், ‘ஏதோ ஒரு சமயத்தில்’ பாலுறவு கொண்டால் தாங்கள் கர்ப்பிணியாவதில்லை என்று எண்ணினர். . . . தாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு நீண்ட காலம் கர்ப்பந்தரியாமலிருந்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு கர்ப்பந்தரிக்கும் சாத்தியங்களை அலட்சியம் செய்தனர்.”
எனினும் உண்மை என்னவென்றால், ஒருவர் பாலுறவில் ஈடுபடும்போதெல்லாம், கர்ப்பிணியாகும் ஆபத்து இருக்கிறது. (544 பெண்களின் ஒரு தொகுதியில், ‘சுமார் ஐந்தில் ஒரு பங்கானோர், பாலுறவில் ஈடுபட ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குள் கர்ப்பிணியாயினர்.’) ராபின் என்ற பெயர் கொண்ட விவாகமாகாத தாய் போன்ற அநேகர் வேண்டுமென்றே கருத்தடை முறைகளை பயன்படுத்தாதிருக்க தெரிந்து கொண்டிருக்கின்றனர். அநேக இளைஞர்களைப் போலவே, ராபின் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது அவளுடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கிழைக்கும் என்று அஞ்சினாள், அவள் மேலும் ஒப்புக்கொள்வதாவது: “கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது, தவறான ஏதோ ஒன்றை நான் செய்கிறேன் என்பதை ஒப்புக்கொள்வதாயிருக்கும். அதை என்னால் செய்ய முடியாது. ஆகவே நான் செய்துகொண்டிருந்தக் காரியத்தை என்னுடைய மனதுக்கு மறைத்து, எதுவும் சம்பவியாது என்று நம்பிக்கையோடிருந்தேன்.”
அத்தகைய முடிவுக்கு வருவது விவாகமின்றி தாயானவர்களிடையே பொதுவாக நிலவுகிறது. ஃபர்ஸ்டென்பெர்கின் ஆய்வில், “பாலுறவுகொள்ள ஆரம்பிப்பதற்கு ஒரு பெண் விவாகம் வரையாகக் காத்திருப்பது அவளுக்கு மிகவும் முக்கியம் என்று ஏறத்தாழ பருவ வயதினரில் பாதிபேர் கூறினார்கள். . . . மறுக்க முடியாத வண்ணமாக, வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருந்தது . . . அவர்கள் ஒரு தொகுதியான தராதரங்களைப் பெற்றிருந்தனர், ஆனால், இன்னொரு தொகுதியின் அடிப்படையில் வாழக் கற்றுக்கொண்டனர்.” இந்த உணர்ச்சிப் பிரகாரமான முரண்பாடு “தங்களுடைய பாலுறவு நடத்தையின் விளைவுகளை நடைமுறையாகக் கையாளுவதை இந்தப் பெண்களுக்கு விசேஷமாக கடினமாக்கியிருக்கிறது.”
கருத்தடை உபயோகம்கூட ஒரு பெண் விவாகமின்றி தாய்மை அடைவதைத் தவிர்ப்பாள் என்பதற்கு உறுதியளிக்காது. பிள்ளைகளைக் கொண்டிருக்கும் பிள்ளைகள் என்ற ஆங்கிலப் புத்தகம் நமக்கு நினைப்பூட்டுகிறது: “எந்த வழிமுறையும் ஒரு தோல்வி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. . . . விவாகமாகாத பருவ வயதினர் கருத்தடை முறைகளை எப்போதும் தொடர்ந்து உபயோகித்து வந்தாலும்கூட . . . அப்பொழுதும் 5,00,000 பேர் [ஐக்கிய மாகாணங்களில்] ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பிணியாவார்கள்.” விவாகமின்றி தாயான 16 வயதுள்ள பேட் என்ற பெண் புலம்புவது பின்னர் மேற்கோள் காட்டப்பட்டது: “நான் [கருத்தடை மாத்திரைகளை] ஒருநாள்கூட தவறாமல் உட்கொண்டேன். ஆம், நான் ஒரு நாள்கூட தவறியதில்லை.”
“மோசம் போகாதிருங்கள்,” பைபிள் எச்சரிக்கிறது. “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) வேசித்தனத்தின்மூலம் உண்டாகும் துன்பகரமான விளைச்சலை அறுக்கக்கூடிய வழிகளில் ஒன்று கர்ப்பிணியாதல். அதிர்ஷ்டவசமாக, ஒழுக்கக்கேட்டில் சிக்கிக்கொண்ட மற்ற எல்லாரையும் போன்றே, விவாகமின்றி தாயானவர்களும் ராஜாவாகிய தாவீதைப்போன்று மனம்திரும்பி கடவுளிடம் வரக்கூடும். அவன் ஜெபித்தான்: “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” (சங்கீதம் 51:2) மனந்திரும்பிய அத்தகையவர்கள் தங்களுடைய பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்க்க எடுக்கும் முயற்சிகளைக் கடவுள் ஆசீர்வதிப்பார்.—எபேசியர் 6:4.
இருப்பினும், விவாகத்துக்கு முன்னான பாலுறவைத் தவிர்ப்பதே மேலானது! நீங்கள் அதில் ஈடுபட்டுத் தண்டனைக்குத் தப்பலாம் என்று சொல்பவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
[பக்கம் 183-ன் படம்]
முறைகேடான பாலுறவுக்குப் பின் ஓர் இளைஞன் அநேகமாக ஏமாற்றப்பட்டவனாக அல்லது அவமானப்படுத்தப்பட்டவனாகவும்கூட உணருகிறான்
[பக்கம் 186-ன் படம்]
பாலுறவினால் தொற்றப்படும் வியாதிகள், அநேகமாக விவாகத்துக்கு முன்னான பாலுறவின் விளைவாக இருக்கின்றன
[பக்கம் 188-ன் படம்]
மிஞ்சிய பாச உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒரு ஜோடியை ஒழுக்க சம்பந்தமாக ஆபத்துக்களுக்கு பாதுகாப்பற்ரவர்களாக்கி அர்த்தமுள்ள பேச்சுத் தொடர்பைக் குறைத்துவிடும்
[பக்கம் 189-ன் படம்]
விவாக மகிழ்ச்சி, ஜோடிகளின் உடல் சம்பந்தமான உறவைக் காட்டிலும் அதிகத்தின் பேரில் சார்ந்திருக்கிறது