அதிகாரம் 91
லாசரு உயிர்த்தெழும்போது
இப்போது இயேசுவும் அவரோடுகூட வந்தவர்களும் லாசருவின் ஞாபகார்த்த கல்லறைக்கு வந்து சேருகின்றனர். உண்மையில் அது ஒரு குகை, அதன் வாசலில் ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. “கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொல்கிறார்.
இயேசு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் மார்த்தாள் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே.”
ஆனால் இயேசு கேட்கிறார்: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?”
ஆகையால் அந்தக் கல் எடுத்துப் போடப்படுகிறது. பின்பு இயேசு தம் கண்களை ஏறெடுத்து ஜெபிக்கிறார்: “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்.” அவர் செய்யப் போகும் காரியம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட வல்லமையினால் சாதிக்கப்படும் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்வதற்காக இயேசு வெளிப்படையாக ஜெபிக்கிறார். பின்பு அவர் “லாசருவே, வெளியே வா!” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிடுகிறார்.
அப்போது லாசரு வெளியே வருகிறான். அவனுடைய கைகளும் கால்களும் இன்னும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருக்கின்றன, அவனுடைய முகம் சீலையால் சுற்றப்பட்டிருக்கிறது. “இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள்” என்று இயேசு சொல்கிறார்.
மரியாளையும் மார்த்தாளையும் ஆறுதல்படுத்துவதற்கு வந்திருந்த யூதர்களில் அநேகர் அற்புதத்தைக் கண்ட போது இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். என்றபோதிலும், மற்றவர்கள் என்ன நடந்தது என்பதை பரிசேயர்களிடம் சொல்வதற்கு செல்கின்றனர். யூத உயர்நீதிமன்றமாகிய நியாயசங்கத்தின் கூட்டத்துக்காக அவர்களும், பிரதான ஆசாரியர்களும் உடனடியாக ஏற்பாடு செய்கின்றனர்.
அந்த நியாயசங்கம் தற்போதைய பிரதான ஆசாரியனாகிய காய்பா, பரிசேயர்கள், சதுசேயர்கள், பிரதான ஆசாரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான ஆசாரியர்கள் ஆகியோர் அடங்கியது. இவர்கள் இவ்வாறு புலம்புகின்றனர்: “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே, நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே.”
இயேசு “அநேக அற்புதங்களைச் செய்வதை” மதத் தலைவர்கள் ஒப்புக்கொண்டாலும் அவர்கள் அக்கறையாய் இருக்கும் ஒரே காரியம் அவர்களுடைய ஸ்தானமும் அதிகாரமும் மட்டுமே. லாசருவை உயிர்த்தெழுப்பியது விசேஷமாக சதுசேயர்களுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கிறது; ஏனென்றால் அவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதில்லை.
காய்பா என்பவன் ஒருவேளை சதுசேயனாக இருக்கலாம், அவன் இப்பொழுது பேசுகிறான்: “உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்.”
காய்பா இதைச் சொல்லும்படி கடவுள் செய்வித்தார். ஏனென்றால் அப்போஸ்தலனாகிய யோவான் பின்னர் இவ்வாறு எழுதினான்: “இதை அவன் [காய்பா] சுயமாய்ச் சொல்ல”வில்லை. அதிகாரமான, செல்வாக்கான தங்களுடைய ஸ்தானங்களை மேலுமதிகமாக இயேசு வீழ்த்திவிடாமலிருக்க அவரைத் தடை செய்வதற்கு அவர் கொல்லப்பட வேண்டும் என்று உண்மையில் காய்பா அர்த்தப்படுத்தினான். என்றபோதிலும், யோவானின் பிரகாரம், ‘அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் இயேசு மரிக்கப் போகிறாரென்று காய்பா தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.’ தம்முடைய குமாரன் எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக மரிக்க வேண்டும் என்பது உண்மையிலேயே கடவுளுடைய நோக்கமாயிருக்கிறது.
இயேசுவைக் கொலை செய்வதற்கு திட்டங்கள் போட நியாயசங்கத்தை தூண்டுவதில் இப்போது காய்பா வெற்றி பெறுகிறான். நியாயசங்கத்தின் ஓர் உறுப்பினராயிருக்கும் நிக்கொதேமு இயேசுவிடம் நட்புடன் இருப்பதால் இயேசு இத்திட்டங்களைப் பற்றி அவனிடமிருந்து அறிந்துகொண்டு, அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் செல்கிறார். யோவான் 11:38–54.
▪ லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பு இயேசு ஏன் வெளிப்படையாய் ஜெபம் செய்கிறார்?
▪ இந்த உயிர்த்தெழுதலை பார்த்தவர்கள் இதற்கு எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
▪ நியாயசங்க அங்கத்தினர்களின் துன்மார்க்கத்தை எது வெளிக்காட்டுகிறது?
▪ காய்பாவின் நோக்கம் என்னவாயிருந்தது, ஆனால் அவன் என்ன தீர்க்கதரிசனம் சொல்லும்படி கடவுள் அவனை உபயோகப்படுத்தினார்?