பகுதி 10—கடவுள் உருவாக்கும் மகத்தான புதிய உலகம்
கடவுளுடைய சுத்திகரிக்கும் அர்மகெதோன் யுத்தத்துக்குப் பின்பு, அப்போது என்ன? அப்பொழுது மகத்துவமான ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகும். அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் ஏற்கெனவே கடவுளுடைய ஆட்சிக்குத் தங்கள் உண்மைத்தவறாமையை நிரூபித்திருக்கும் காரணத்தால், புதிய உலகிற்குள் அழைத்துச்செல்லப்படுவர். மனிதகுடும்பத்துக்கு மகத்தான நன்மைகள் கடவுளிடமிருந்து பெருக்கெடுத்து வருகையில் அது வரலாற்றில் எத்தனை கிளர்ச்சியூட்டும் புதிய காலப்பகுதியாக இருக்கும்!
2 கடவுளுடைய ராஜ்யத்தின் வழிநடத்துதலின் கீழ், தப்பிப்பிழைப்பவர்கள் படிப்படியாக ஒரு பரதீஸை தோற்றுவிக்க துவங்குவர். அவர்களுடைய சக்திகள், அப்போது உயிர்வாழும் அனைவருக்கும் நன்மைபயக்கும் தன்னலமற்ற முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்படும். பூமி மனிதவர்க்கத்துக்கு ஓர் அழகான, அமைதியான, மனநிறைவளிக்கும் வீடாக மாற்றப்பட ஆரம்பிக்கும்.
அக்கிரமத்துக்குப் பதிலாக நீதி
3 சாத்தானுடைய உலகத்தை அழிப்பதன் மூலம் இவை அனைத்தும் சாத்தியமாக்கப்படும். பிரிவினை உண்டாக்கும் பொய் மதங்கள், சமுதாய அமைப்புகள் அல்லது அரசாங்கங்கள் இனிமேலும் இருக்காது. மக்களை ஏமாற்றுவதற்கு சாத்தானிய பிரச்சாரம் இனிமேலும் இருக்காது; அதை உண்டுபண்ணும் எல்லா காரணிகளும் சாத்தானிய ஒழுங்குமுறையோடுகூட அழிக்கப்படும். சற்று யோசித்துப்பாருங்கள்: சாத்தானிய உலகின் நச்சூட்டும் முழு சூழ்நிலையும் ஒழிக்கப்பட்டுவிடும்! அது எத்தனை நிம்மதியாக இருக்கும்!
4 பின்பு மனித ஆட்சியின் அழிவுசெய்யும் கருத்துக்களுக்கு பதிலாக கடவுளிடமிருந்துவரும் கட்டியெழுப்பும் போதனைகள் இடம்பெறும். “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் [யெகோவாவால், NW] போதிக்கப்பட்டிருப்பார்கள்.” (ஏசாயா 54:13) ஆண்டுதோறும் இந்த ஆரோக்கியமான போதனையின் காரணமாக, “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) மக்கள் இனிமேலும் தீயதை கற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் “பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) கட்டியெழுப்பும் எண்ணங்களும் செயல்களும் பொதுமுறையாக இருக்கும்.—அப்போஸ்தலர் 17:31; பிலிப்பியர் 4:8.
5 இவ்விதமாக அங்கே கொலை, வன்முறை, கற்பழிப்பு, களவு அல்லது மற்ற எந்தக் குற்றச்செயலும் இருக்காது. மற்றவர்களின் துன்மார்க்கச் செயல்களினால் எவரும் துன்பப்படவேண்டியதாக இருக்காது. நீதிமொழிகள் 10:30 சொல்கிறது: “நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.”
பரிபூரண ஆரோக்கியம் திருப்பிக்கொடுக்கப்படுகிறது
6 புதிய உலகத்தில், ஆதி கலகத்தின் எல்லா தீய பாதிப்புகளும் மாற்றப்பட்டுவிடும். உதாரணமாக, ராஜ்ய ஆட்சி வியாதியையும் முதுமையையும் நீக்கிவிடும். இன்று, நீங்கள் ஓரளவு நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்தாலும்கூட நீங்கள் வயோதிபராகும்போது கடைசியில் நீங்கள் மரிக்கும்வரையாக உங்கள் பார்வை மங்கலாகி, உங்கள் பற்கள் சிதைந்து, உங்கள் செவி மந்தமாகி, உங்கள் தோல் சுருங்கி, உங்கள் உள்ளுறுப்புகள் ஆற்றலிழந்துவிடுவதே கடினமான உண்மையாகும்.
7 இருப்பினும், நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து நாம் சுதந்தரித்துக்கொண்டிருக்கும் அந்த வேதனையளிக்கும் பாதிப்புகள் விரைவில் கடந்தக் காலத்துக்குரியதாக இருக்கும். இயேசு பூமியிலிருக்கையில் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக அவர் என்ன செய்துகாட்டினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பைபிள் சொல்கிறது: “அப்பொழுது சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்[டார்கள்].”—மத்தேயு 15:30, 31.
8 நம்முடைய எல்லா கஷ்டங்களும் நீக்கப்படுகையில் புதிய உலகத்தில் என்னே பெருமகிழ்ச்சி இருக்கும்! உடல்நலக்கேட்டின் விளைவாக வரும் துன்பம் நம்மை ஒருபோதும் மறுபடியுமாக வாதிக்காது. “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையின் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 33:24; 35:5, 6.
9 ஒவ்வொரு காலையும் எழுந்திருந்து நீங்கள் முந்தின நாள் இருந்ததைக் காட்டிலும் ஆரோக்கியமாயிருப்பதை உணரும்போது அது கிளர்ச்சியூட்டுவதாய் இருக்காதா? ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் அனுபவித்துக்களித்த உடல் மற்றும் மனதின் பரிபூரணத்தைப் படிப்படியாக எட்டும்வரையாக வயதான ஆட்களுக்கு ஒவ்வொரு நாளும் கடந்துசெல்கையில் அவர்கள் அதிகமதிகமாக இளமையடைந்துவருவதை அறிவது ஆறுதலளிப்பதாக இருக்காதா? பைபிளின் வாக்குறுதி பின்வருமாறு: “அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” (யோபு 33:25) அந்த மூக்குக்கண்ணாடிகளையும், காதுகேட்க உதவும் கருவிகளையும், முடவன் கோல்களையும், சக்கர நாற்காலிகளையும், மருந்துகளையும் தூக்கியெறிவது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்! மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் பல்மருத்துவர்களுக்கும் மறுபடியும் ஒருபோதும் தேவையிராது.
10 இப்படிப்பட்ட வலுவான சுகஆரோக்கியத்தை அனுபவித்து மகிழும் ஆட்கள் மரிக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் மரிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் மனிதவர்க்கம் இனிமேலும் சுதந்தரிக்கப்பட்ட அபூரணம் மற்றும் மரணத்தின் பிடியில் இருக்கமாட்டார்கள். கிறிஸ்து “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்ய வேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” “தேவனுடைய கிருபைவரமோ . . . நித்தியஜீவன்.”—1 கொரிந்தியர் 15:25, 26; ரோமர் 6:23; ஏசாயா 25:8-ஐயும்கூட பார்க்கவும்.
11 பரதீஸில் மனிதகுடும்பத்துக்கு அக்கறையுள்ள கடவுளிடமிருந்து பெருக்கெடுத்து வரவிருக்கும் நன்மைகளைச் சுருக்கி, பைபிளின் கடைசி புத்தகம் சொல்வதாவது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
மரித்தோர் திரும்பிவருகின்றனர்
12 இயேசு வியாதியஸ்தரை சுகப்படுத்தி ஊனரை குணப்படுத்துவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்தார். அவர் கல்லறையிலிருந்தும் மக்களைத் திரும்ப கொண்டுவந்தார். இவ்விதமாக, கடவுள் அவருக்குத் தந்திருந்த உயிர்த்தெழுப்பும் அதிசயமான வல்லமையைக் காண்பித்தார். இயேசு, ஒரு மனுஷனுடைய வீட்டுக்கு—அவனுடைய மகள் மரித்திருந்தபோது—வந்திருந்த சமயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இயேசு மரித்துப்போன பெண்ணிடமாக: “சிறுபெண்ணே எழுந்திரு,” என்றார். என்ன விளைவோடு? “உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்.” அதைப் பார்த்த போது, மக்கள் “மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.” அவர்களால் தங்கள் மகிழ்ச்சியை உள்ளடக்கி வைக்க முடியவில்லை!—மாற்கு 5:41, 42; மேலும் லூக்கா 7:11-16; யோவான் 11:1-45-கூட பார்க்கவும்.
13 புதிய உலகத்தில், “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்தி”ருப்பார்கள். (அப்போஸ்தலர் 24:15) அந்தச் சமயத்தில் இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்ப கடவுள் கொடுத்த தம்முடைய வல்லமையை பயன்படுத்துவார். ஏனென்றால் அவர் தாமே சொன்னவிதமாக: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25) அவர் மேலுமாகச் சொன்னார்: “ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள [கடவுளுடைய ஞாபகத்திலுள்ள] அனைவரும் அவருடைய [இயேசு] சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29, NW.
14 தொகுதி தொகுதியாக மரித்த ஆட்கள் தங்கள் அன்பானவர்களைச் சேர்ந்துகொள்வதற்காக உயிருக்குத் திரும்பி வருகையில் பூமி முழுவதிலும் சந்தோஷம் மிகப்பெரியதாயிருக்கும்! உயிரோடிருப்பவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டுவர இறப்புச்செய்திப் பகுதிகள் இனிமேலும் இருக்காது. மாறாக அதற்கு எதிர்மாறானது இருக்கக்கூடும்: அவர்களை நேசித்தவர்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவர புதிதாக உயிர்த்தெழுப்பப்பட்டவர்களைப் பற்றிய அறிவிப்புகள். ஆகவே இனி சவ அடக்கங்கள், சவ அடக்க ஈமத்தீ, சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் இருக்காது!
மெய்யாகவே சமாதானமுள்ள ஓர் உலகம்
15 வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் மெய்ச் சமாதானம் தெளிவாக உணரப்படும். போர்கள், போர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்திசெய்வது ஆகியவை கடந்தக்காலத்திற்குரிய காரியங்களாக இருக்கும். ஏன்? ஏனென்றால் பிரிவினை உண்டாக்கும் தேசிய, கோத்திர மற்றும் இனப்பற்றுகள் மறைந்துபோகும். பின்னர் முழுமையான கருத்தில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—மீகா 4:3.
16 மனிதனின் இரத்த தாக இடைவிடாத போர் வரலாற்றை முன்னிட்டுப் பார்க்கையில் இது ஆச்சரிமாகத் தோன்றலாம். ஆனால் அதற்குக் காரணம் மனிதவர்க்கம் மனித மற்றும் பேய்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்திருக்கிறது. ராஜ்ய ஆட்சியின் கீழ், புதிய உலகத்தில் இதுதானே சம்பவிக்கும்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] செய்கைகளை வந்துபாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [யுத்த] இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.
17 மனிதனும் மிருகங்களும்கூட ஏதேனில் இருந்ததுபோல சமாதானமாயிருக்கும். (ஆதியாகமம் 1:28; 2:19) கடவுள் சொல்கிறார்: “அக்காலத்திலே நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், ஒரு உடன்படிக்கை பண்ணி, . . . அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.”—ஓசியா 2:18.
18 அந்தச் சமாதானம் எவ்வளவு விரிவாக இருக்கும்? “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும் பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.” இனி மிருகங்கள் மனிதனுக்கோ அவற்றுக்குத்தானேயும் அச்சுறுத்தலாக ஒருபோதும் இருக்காது. “சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்.”—ஏசாயா 11:6-9; 65:25.
பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படுகிறது
19 முழு பூமியும் மனிதவர்க்கத்துக்கு ஒரு பரதீஸ் வீடாக மாற்றப்படும். அதன் காரணமாகவே, இயேசு தம்மீது விசுவாசம் வைத்த மனிதனிடம் இவ்வாறு சொல்லமுடிந்தது: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.” பைபிள் சொல்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.”—லூக்கா 23:43; ஏசாயா 35:1, 6.
20 கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ், பசி மறுபடியும் ஒருபோதும் லட்சக்கணக்கானோருக்கு வேதனை அளிக்காது. “பூமியிலே ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்; மலைகளின் உச்சிகளில் பொங்கிவழிந்தோடும்.” “வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 72:16, NW; எசேக்கியேல் 34:27.
21 வறுமையும், வீடிழந்த ஆட்களும், சேரிகளும் அல்லது குற்றச்செயல் பெருகிய சுற்றுப்புறங்களும் இனிமேல் இருக்காது. “வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.” “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—ஏசாயா 65:21, 22; மீகா 4:4.
22 மனிதர்கள் இந்த எல்லா காரியங்களோடும் இன்னும் அதிகமாகவும், பரதீஸில் ஆசீர்வதிக்கப்படுவார்கள். சங்கீதம் 145:16 சொல்கிறது: “நீர் [கடவுள்] உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு அறிவிப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.
கடந்த காலத்தைத் துடைத்தழித்தல்
23 கடவுளுடைய ராஜ்யம், கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக மனிதகுடும்பத்துக்கு இழைக்கப்பட்ட எல்லா சேதத்தையும் துடைத்தழித்துவிடும். அந்தச் சமயத்திலிருக்கும் சந்தோஷம் மனிதர்கள் அனுபவித்திருக்கும் எந்தத் துன்பத்தைக் காட்டிலும் மதிப்பில் மிக உயர்ந்ததாக இருக்கும். துன்பத்தின் எந்த மோசமான நினைவுகளாலும் வாழ்க்கையின் அமைதி குலைக்கப்படாது. மக்களின் தினசரி வாழ்க்கையாக இருக்கும் கட்டியெழுப்பும் எண்ணங்களும் செயல்களும் துயரமளிக்கும் நினைவுகளைப் படிப்படியாக தடமில்லாமல் அழித்துவிடும்.
24 அக்கறையுள்ள கடவுள் தெரிவிக்கிறார்: “நான் புதிய வானத்தையும் [மனிதவர்க்கத்தின்மேல் ஒரு புதிய பரலோக அரசாங்கத்தையும்] புதிய பூமியையும் [நீதியுள்ள ஒரு மனித சமுதாயத்தையும்] சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” “பூமி முழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.”—ஏசாயா 14:7; 65:17, 18.
25 ஆகவே கடவுள் தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக இத்தனை நீண்டகாலமாக நீடித்திருந்த மோசமான நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றிடுவார். நித்திய காலம் முழுவதிலும், நம்முடைய கடந்தகால வாழ்க்கையில் பெற்றுக்கொண்டிருந்த எந்தக் காயத்தையும் ஈடுசெய்வதற்கும் மேலாக இருக்கும் ஆசீர்வாதங்களைப் பொழிவதன் மூலம் நம்மிடமாக அவருடைய மிகுதியான அக்கறையை அவர் காண்பிப்பார். நாம் அனுபவித்திருக்கும் முன்நிகழ்ந்த தொந்தரவுகள், நாம் நினைத்துப்பார்க்க எண்ணினாலும் அப்போது மங்கலான ஒரு நினைவிற்குள் மறைந்துவிடும்.
26 அவ்விதமாகத்தான், நாம் இந்த உலகில் சகித்திருக்கக்கூடிய துன்பத்துக்கு கடவுள் நமக்கு ஈடுசெய்வார். நாம் அபூரணராக பிறந்தது நம்முடைய குற்றமில்லை என்பதை அவர் அறிவார், ஏனென்றால் நாம் நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து அபூரணத்தைச் சுதந்தரித்துக்கொண்டோம். ஒரு சாத்தானிய உலகிற்குள் நாம் பிறந்தது நம்முடைய குற்றமில்லை, ஏனென்றால் ஆதாமும் ஏவாளும் உண்மையுள்ளவர்களாக இருந்திருந்தால், இதற்கு பதிலாக நாம் ஒரு பரதீஸிற்குள் பிறந்திருப்போம். ஆகவே மிகுதியான இரக்கத்தோடு கடவுள் நம்மீது சுமத்தப்பட்ட மோசமான கடந்தகாலத்துக்கு ஈடுசெய்வதற்கும் மேலாகச் செய்வார்.
27 புதிய உலகத்தில் மனிதவர்க்கத்தினர் ரோமர் 8:20, 22-ல் முன்னறிவிக்கப்பட்ட சுயாதீனத்தை அனுபவிப்பர்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் . . . நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” அப்போது மக்கள் பின்வரும் ஜெபத்தின் முழுமையான நிறைவேற்றத்தைக் காண்பர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) பரதீஸ் பூமியின் மீதிருக்கும் மகத்தான நிலைமைகள் பரலோகத்திலுள்ள நிலைமைகளைப் பிரதிபலிக்கும்.
[கேள்விகள்]
1, 2. சுத்திகரிக்கும் அர்மகெதோன் யுத்தத்திற்குப் பிறகு என்ன சம்பவிக்கும்?
3. அர்மகெதோனுக்குப் பின் உடனடியான என்ன நிம்மதி உணரப்படும்?
4. போதனையில் நடந்தேற இருக்கும் மாற்றத்தை விவரிக்கவும்.
5. எல்லா துன்மார்க்கத்துக்கும் துன்மார்க்கருக்கும் என்ன சம்பவிக்கும்?
6, 7. (எ) ராஜ்ய ஆட்சி என்ன கடினமான உண்மையை முடிவுக்கு கொண்டுவரும்? (பி) பூமியிலிருக்கையில் இயேசு இதை எவ்விதமாக செய்துகாட்டினார்?
8, 9. பரிபூரண ஆரோக்கியம் திருப்பிக்கொடுக்கப்படுகையில் புதிய உலகத்தில் வரும் மகிழ்ச்சியை விவரிக்கவும்.
10. மரணத்துக்கு என்ன சம்பவிக்கும்?
11. வெளிப்படுத்துதல் எவ்விதமாக புதிய உலகத்தின் நன்மைகளைச் சுருக்கிச்சொல்கிறது?
12. இயேசு எவ்விதமாக கடவுள் கொடுத்த உயிர்த்தெழுதல் வல்லமையைக் காண்பித்தார்?
13. என்ன வகையான ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
14. மரணம் இனி இல்லாத காரணத்தால், என்ன காரியங்கள் இனி இருக்காது?
15. மீகாவின் தீர்க்கதரிசனம் எவ்விதமாக முழுமையான கருத்தில் தெளிவாக உணரப்படும்?
16. கடவுள் எவ்விதமாக யுத்தங்கள் சாத்தியமற்றதாகும்படி பார்த்துக்கொள்வார்?
17, 18. புதிய உலகத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையே என்ன உறவு இருக்கும்?
19. பூமி என்னவக மாற்றப்படும்?
20. பசி ஏன் மறுபடியும் ஒருபோதும் மனிதவர்க்கத்துக்கு வேதனையளிக்காது?
21. வீடு இல்லாமை, சேரிகள் மற்றும் மோசமான சுற்றுப்புறங்களுக்கு என்ன நேரிடும்?
22. கடவுளுடைய ஆட்சியின் ஆசீர்வாதங்களை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
23. கடவுளுடைய ராஜ்யம் எவ்விதமாக நாம் அனுபவித்திருக்கும் எல்லா துன்பத்தையும் துடைத்தழிக்கும்?
24, 25. (எ) என்ன சம்பவிக்கும் என்று ஏசாயா முன்னறிவித்தார்? (பி) கடந்தகால துன்பதைப் பற்றிய நினைவுகள் மறைந்துவிடும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
26. கடந்த கால துன்பத்துக்கு கடவுள் ஏன் ஈடுசெய்வார்?
27. என்ன தீர்க்கதரிசனங்கள் புதிய உலகத்தில் அவற்றின் மகத்தான நிறைவேற்றத்தைக் காணும்?
[பக்கம் 23-ன் படங்கள்]
புதிய உலகத்தில் வயதானவர்கள் இளமையின் உடல்பலத்துக்குத் திரும்புவார்கள்
[பக்கம் 24-ன் படம்]
எல்லா வியாதிகளும் பலவீனங்களும் புதிய உலகத்தில் நீக்கப்பட்டுவிடும்
[பக்கம் 25-ன் படம்]
புதிய உலகத்தில் மரித்தோர் ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்
[பக்கம் 26-ன் படம்]
‘இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை’
[பக்கம் 27-ன் படங்கள்]
மனிதர்களும் மிருகங்களும் பரதீஸில் முழுமையான சமாதானத்தில் இருப்பர்
[பக்கம் 27-ன் படம்]
‘கடவுள் தம்முடைய கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்’
[பக்கம் 28-ன் படங்கள்]
கடவுளுடைய ராஜ்யம் நாம் சகித்திருந்த எல்லா துன்பத்துக்கும் ஈடுசெய்வதற்கும் அதிகமாகச் செய்யும்