பாடம் 4
பிசாசு யார்?
பிசாசாகிய சாத்தான்—அவன் எங்கிருந்து வந்தான்? (1, 2)
சாத்தான் எப்படி மக்களைத் தவறாக வழிநடத்துகிறான்? (3-7)
நீங்கள் ஏன் பிசாசை எதிர்த்து நிற்க வேண்டும்? (7)
1. வேறொரு நபரைப் பற்றி பொல்லாத பொய்களைச் சொல்லும் ஒருவர் என்பதையே “பிசாசு” என்னும் வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. “சாத்தான்” என்பது ஒரு பகைவன் அல்லது எதிர்ப்பவன் என்று அர்த்தப்படுகிறது. கடவுளுடைய பிரதான பகைவனுக்குக் கொடுக்கப்பட்ட பதங்கள் இவை. முதலில், அவன் பரலோகத்தில் கடவுளுடன் ஒரு பரிபூரண தேவதூதனாக இருந்தான். என்றபோதிலும், பின்னர் அவன் தன்னைக் குறித்து அளவுக்கதிகமாக நினைத்து, சரியாக கடவுளுக்கே உரியதான வணக்கத்தைப் பெற விரும்பினான்.—மத்தேயு 4:8-10.
2. இந்தத் தேவதூதன், சாத்தான், ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் பேசினான். அவளிடம் பொய்களைச் சொல்வதன்மூலம், அவளைக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்தான். இவ்வாறாக, கடவுளுடைய “உன்னத அரசதிகாரம்” எனப்படுவதை அல்லது மகா உன்னதமானவர் என்ற நிலையை சாத்தான் தாக்கினான். தகுந்த முறையிலும் தம்முடைய குடிமக்களின் மிகச் சிறந்த நலன்களைக் கருத்தில்கொண்டும் கடவுள் ஆட்சி செய்கிறாரா என்பதைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பினான். எந்த மனிதனாவது கடவுளுக்கு உண்மையுடன் இருப்பானா என்பதைக் குறித்தும் சாத்தான் சந்தேகங்களை எழுப்பினான். இதைச் செய்வதன்மூலம், சாத்தான் தன்னையே கடவுளுக்குப் பகைவனாக்கினான். அதன் காரணமாகவே அவன் பிசாசாகிய சாத்தான் என்று அழைக்கப்படலானான்.—ஆதியாகமம் 3:1-5; யோபு 1:8-11; வெளிப்படுத்துதல் 12:9.
3. சாத்தான் தன்னை மக்கள் வழிபடும்படியாக அவர்களைத் தந்திரமாகச் சிக்கவைக்க முயலுகிறான். (2 கொரிந்தியர் 11:3, 14) அவன் மக்களைத் தவறாக வழிநடத்துகிற ஒரு வழி, பொய் மதத்தின் மூலமாகும். ஒரு மதம் கடவுளைப் பற்றி பொய்களைப் போதிக்கிறது என்றால், அது உண்மையில் சாத்தானுடைய நோக்கத்தைச் சேவிக்கிறது. (யோவான் 8:44) பொய் மதங்களின் அங்கத்தினராக இருக்கிற மக்கள், தாங்கள் உண்மையான கடவுளை வழிபடுவதாக உள்ளார நம்பக்கூடும். ஆனால் அவர்கள் உண்மையில் சாத்தானைச் சேவிக்கிறார்கள். அவன் ‘இந்த உலகத்தின் தேவனாக’ இருக்கிறான்.—2 கொரிந்தியர் 4:4.
4. சாத்தான் தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் மக்களைக் கொண்டுவருகிற மற்றொரு வழி, ஆவிக்கொள்கை. அவர்கள் தங்களைப் பாதுகாக்க, மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க, எதிர்காலத்தை முன்னறிவிக்க, அல்லது அற்புதங்களைச் செய்ய ஆவிகளை அழைக்கலாம். இந்த எல்லா பழக்கங்களின் பின்னாலும் இருக்கும் பொல்லாத சக்தி சாத்தான். கடவுளைப் பிரியப்படுத்த, நாம் ஆவிக்கொள்கையுடன் எவ்வித தொடர்பையும் வைத்திருக்கக் கூடாது.—உபாகமம் 18:10-12; அப்போஸ்தலர் 19:18, 19.
5. மட்டுமீறிய இனப்பெருமை, அரசியல் அமைப்புகளை வணங்குதல் ஆகியவற்றின் மூலமும் மக்களை சாத்தான் தவறாக வழிநடத்துகிறான். தங்களுடைய தேசம் அல்லது இனம் மற்றவர்களுடையதைவிட சிறந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இது சரியல்ல. (அப்போஸ்தலர் 10:34, 35) மற்றவர்கள், மனிதனின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியல் அமைப்புகளை நோக்குகிறார்கள். இவ்வாறு செய்வதன்மூலம், அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை நிராகரிக்கிறார்கள். அதுவே நம் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கிறது.—தானியேல் 2:44.
6. மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு வழி, பாவமுள்ள விருப்பங்களை வைத்து மக்களைச் சோதிப்பதாகும். பாவமுள்ள பழக்கங்களைத் தவிர்க்கும்படி யெகோவா நமக்குச் சொல்லுகிறார், ஏனென்றால், அவை நமக்குக் கேடு விளைவிக்கும் என்று அவர் அறிந்திருக்கிறார். (கலாத்தியர் 6:7, 8) அப்படிப்பட்ட பழக்கங்களில் நீங்களும் தங்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று சில மக்கள் விரும்பக்கூடும். ஆனாலும், இந்தக் காரியங்களை நீங்கள் செய்ய வேண்டுமென்று உண்மையில் விரும்புவது சாத்தானே என்பதை நினைவில் வையுங்கள்.—1 கொரிந்தியர் 6:9, 10; 15:33.
7. நீங்கள் யெகோவாவை விட்டுவிட செய்வதற்காக துன்புறுத்தல் அல்லது எதிர்ப்பை சாத்தான் பயன்படுத்தக்கூடும். நீங்கள் பைபிளைப் படிப்பதால், உங்களுக்கு அன்பானவர்கள் சிலர் அதிக கோபமடையக்கூடும். மற்றவர்கள் உங்களைக் கேலி செய்யக்கூடும். ஆனால் நீங்கள் உங்கள் உயிருக்காக யாருக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதை நிறுத்திவிடச் செய்வதற்காக சாத்தான் உங்களை பயமுறுத்த விரும்புகிறான். சாத்தானை வெற்றிபெற விடாதீர்கள்! (மத்தேயு 10:34-39; 1 பேதுரு 5:8, 9) பிசாசை எதிர்ப்பதன்மூலம், நீங்கள் யெகோவாவை மகிழ்வித்து, அவருடைய உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கிறீர்கள் என்று காண்பிக்கலாம்.—நீதிமொழிகள் 27:11.
[பக்கம் 9-ன் படம்]
பொய் மதம், ஆவிக்கொள்கை, தேசப்பற்று ஆகியவை மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன
[பக்கம் 9-ன் படம்]
யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம் சாத்தானை எதிர்த்து நில்லுங்கள்