பாடம் 3
கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வது அவசியம்
கடவுளுடைய நண்பராவதற்கு அவரைப் பற்றி கற்றுக்கொள்வது அவசியம். உங்களுடைய நண்பர்களுக்கு உங்கள் பெயர் தெரியுமா, அதை அவர்கள் பயன்படுத்துகிறார்களா? அவர்களுக்கு உங்களுடைய பெயர் தெரியும், அதை பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதைப் போலவே கடவுளும் தம்முடைய பெயரை நீங்கள் அறிய வேண்டும், அதை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். யெகோவா என்பதே கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:17; மத்தேயு 6:9) அவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நண்பர்கள் யார், விரோதிகள் யார் என்பதை நீங்கள் அறிவது அவசியம். ஒருவரை பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு சில காலம் ஆகும். ஆகவே யெகோவாவை பற்றி கற்றுக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்குவது ஞானமானது என பைபிள் சொல்கிறது.—எபேசியர் 5:15, 16.
கடவுளுடைய நண்பர்கள் அவருக்குப் பிரியமானதை செய்கிறார்கள். உங்களுடைய நண்பர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர்களை மரியாதை குறைவாக நடத்தி அவர்களுக்குப் பிரியமல்லாத காரியங்களை செய்தால், அவர்கள் தொடர்ந்து உங்கள் நண்பர்களாக இருப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள்! அது போலவே, நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க விரும்பினால், அவருக்குப் பிரியமானதை செய்ய வேண்டும்.—யோவான் 4:24.
கடவுளுடைய நண்பராவதற்கு எல்லா மதங்களும் வழிநடத்துவதில்லை. கடவுளுடைய மிக நெருங்கிய நண்பர் இயேசு. அவர் இரண்டு வழிகளைப் பற்றி பேசினார். ஒன்று அகலமான வழி, இந்த வழியில் அநேக ஜனங்கள் செல்கிறார்கள்; இது அழிவிற்கு வழிநடத்துகிறது. மற்றொன்று குறுகியது, கொஞ்சம் ஜனங்களே அதில் பயணம் செய்கிறார்கள்; அந்த வழி நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. கடவுளுடைய நட்பை விரும்பினால், கடவுளை வணங்கும் சரியான வழி எது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.—மத்தேயு 7:13, 14.