அதிகாரம் இருபத்து எட்டு
தேசங்களுக்கு ஒளி
யெகோவா ஒளியின் ஊற்றுமூலர், “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவ[ர்].” (எரேமியா 31:35) இதை அடிப்படையாக கொண்டே அவரை உயிரின் ஊற்றுமூலராக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் ஒளியின்றி உயிரில்லை. சூரியனின் வெப்பத்தையும் ஒளியையும் இந்தப் பூமி தொடர்ந்து பெறவில்லை என்றால் அதில் எந்த உயிரும் வாழ முடியாது என்பது நாம் அறிந்த விஷயம். அப்போது நம்முடைய கிரகம் குடியிருப்பதற்கு ஏற்றதாக இராது.
2 ஆகவே, யெகோவா நம்முடைய காலத்தை ஒளியின் காலமாக அல்ல, இருளின் காலமாக முன்னறிவித்திருப்பது நமக்கு மிகுந்த அக்கறைக்குரிய ஒன்று. தேவாவியால் ஏவப்பட்டு ஏசாயா இவ்வாறு எழுதினார்: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்.” (ஏசாயா 60:2) உண்மையில், இந்த வார்த்தைகள் சொல்லர்த்தமான இருளை அல்ல ஆவிக்குரிய இருளையே குறித்தன. ஆனால், இவற்றின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. சூரியனிலிருந்து வரும் ஒளியின்றி ஒருவர் எவ்வாறு உயிர்வாழ முடியாதோ அவ்வாறே ஆவிக்குரிய ஒளியின்றி தொடர்ந்து உயிர்வாழ முடியாது.
3 இந்த இருண்ட காலங்களில், யெகோவா தரும் ஆவிக்குரிய ஒளியை நாம் அசட்டை செய்துவிட முடியாது. முடிந்தவரை தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசிப்பதன் மூலம் நம்முடைய பாதையில் அதன் ஒளி பிரகாசிக்கும்படி செய்வது மிக முக்கியம். (சங்கீதம் 119:105) “நீதிமான்களுடைய பாதை”யில் நிலைத்திருக்க ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு கிறிஸ்தவக் கூட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. (நீதிமொழிகள் 4:18; எபிரெயர் 10:23-25) ஊக்கமான பைபிள் படிப்பிலிருந்தும் சிறந்த கிறிஸ்தவ கூட்டுறவிலிருந்தும் நாம் பெறும் பலம், ‘யெகோவாவுடைய கோபத்தின் நாளில்’ உச்சக்கட்டத்தை எட்டவிருக்கும் இந்தக் ‘கடைசி நாட்களின்’ இருளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:1; செப்பனியா 2:3) அந்த நாள் விரைவாக நெருங்கிக்கொண்டிருக்கிறது! இதே போன்ற நாள் பூர்வ எருசலேமின் மீது வந்ததுபோலவே இப்போதும் நிச்சயமாய் வரும்.
யெகோவா ‘வழக்காடுகிறார்’
4 மெய்சிலிர்க்க வைக்கும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் முடிவான வசனங்களில், தம் கோபத்தின் நாளுக்கு வழிநடத்தும் சம்பவங்களை யெகோவா தத்ரூபமாக விவரிக்கிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினி ஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார்; பெருங்காற்றைப் போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார். கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.”—ஏசாயா 66:15, 16.
5 அந்த வார்த்தைகள், ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தங்களுடைய மோசமான நிலையை உணர்த்த வேண்டும். யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றும் பாபிலோனியரின் இரதங்கள் புயற்காற்றைப் போன்று தூசி மேகங்களை எழுப்பிக்கொண்டு எருசலேமுக்கு விரோதமாக வரும் அந்தக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது எத்தகைய பயங்கரமான காட்சியாயிருக்கும்! உண்மையற்ற யூத ‘மாம்சமானோர்’ எல்லாருக்கும் விரோதமாக தம்முடைய தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு யெகோவா அந்தப் படையினரை பயன்படுத்துவார். அது, யெகோவாவே தம்முடைய ஜனங்களுக்கு எதிராக போர் செய்வதுபோல் இருக்கும். அவருடைய ‘உக்கிரம்’ தணியாது. யூதர் பலர், ‘யெகோவாவினால் கொலையுண்டது’ போல் வீழ்வார்கள். பொ.ச.மு. 607-ல், இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.a
6 யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக ‘வழக்காடுவதில்’ நியாயமானவராக இருக்கிறாரா? சந்தேகமேயில்லை! யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக யூதர்கள் கருதப்பட்டபோதிலும், பொய் வணக்கத்தில் மூழ்கிப்போய் இருந்தார்கள் என்பதே ஏசாயாவின் புத்தகத்தை ஆராய்ந்ததில் நாம் அடிக்கடி பார்த்த விஷயம். அவர்களுடைய செயல்களை யெகோவா பாராமல் இல்லை. பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளில் இதை நாம் மறுபடியும் காண்கிறோம்: “தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 66:17) அந்த யூதர்கள் தூய வணக்கத்திற்கு ஆயத்தமாகத்தான் ‘தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளுகிறவர்களும், . . . சுத்திகரித்துக் கொள்ளுகிறவர்களுமாக’ இருக்கிறார்களா? நிச்சயமாகவே இல்லை. மாறாக, விசேஷ தோப்புகளில் புறமத சுத்திகரிப்பு சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். அதன்பின், மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி அசுத்தமானவையாக கருதப்பட்ட பன்றி இறைச்சியையும் மற்ற இறைச்சிகளையும் பேராசையுடன் உண்கிறார்கள்.—லேவியராகமம் 11:7, 21-23.
7 ஒரே மெய்க் கடவுளுடன் உடன்படிக்கை உறவில் இருந்த ஒரு ஜனத்திற்கு எத்தகைய அருவருப்பான நிலைமை! ஆனால் இதைச் சிந்தியுங்கள்: இன்று கிறிஸ்தவமண்டல மதங்களிலும் அதற்கொத்த அருவருப்பான நிலைமை இருந்து வருகிறது. இந்த மதத்தினர் கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டுகின்றனர், இவர்களது தலைவர்கள் பலர் பக்திமான்கள் போல பாசாங்கு செய்கின்றனர். ஆனாலும், புறமத போதகங்களாலும் பாரம்பரியங்களாலும் தங்களைக் கறைப்படுத்தி, ஆவிக்குரிய இருளில் இருப்போராக தங்களை நிரூபிக்கின்றனர். அந்த இருள் எவ்வளவு அதிகமாயிருக்கிறது!—மத்தேயு 6:23; யோவான் 3:19, 20.
‘அவர்கள் என் மகிமையைக் காண்பார்கள்’
8 கிறிஸ்தவமண்டலத்தின் கண்டிக்கத்தக்க செயல்களையும் பொய் போதகங்களையும் யெகோவா கவனிக்கிறாரா? ஏசாயா பதிவுசெய்த யெகோவாவின் பின்வரும் வார்த்தைகளை வாசித்து, நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள் என்பதை பாருங்கள்: “நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச் சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.” (ஏசாயா 66:18) தம்முடைய ஊழியரென சொல்லிக்கொள்வோரின் கிரியைகளை மட்டுமல்ல அவர்களுடைய நினைவுகளையுங்கூட யெகோவா அறிகிறார், அவர்களை நியாயந்தீர்க்கவும் ஆயத்தமாயிருக்கிறார். யூதா யெகோவாவை நம்புவதாக சொல்கிறது, ஆனால் அதன் விக்கிரக வணக்கமும் புறமத பழக்கவழக்கங்களும் அந்த உரிமைபாராட்டலை பொய்யாக்குகின்றன. அதன் குடிமக்கள் புறமத சடங்குகளின்படி தங்களைச் ‘சுத்திகரிப்பது’ வீணே. தேசம் அழிக்கப்படும்; விக்கிரக ஆராதனைக்காரர்களான அவர்களுடைய அயலகத்தாருடைய கண்ணெதிரே அது நடக்கும். அவர்கள் இந்தச் சம்பவங்களைக் கண்ணாரக் கண்டு, யெகோவாவின் வார்த்தை உண்மையாயிற்று என்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தில் இருப்பார்கள். இந்தக் கருத்திலேயே அவர்கள் ‘யெகோவாவின் மகிமையைக் காண்பார்கள்.’ இவை யாவும் கிறிஸ்தவமண்டலத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன? அது அழிக்கப்படும்போது, அதன் முன்னாள் நண்பர்களும் வர்த்தக கூட்டாளிகளும் யெகோவாவின் வார்த்தை நிறைவேறுவதைப் பார்த்தவாறே செய்வதறியாது நிற்கும் கட்டாயத்திற்குள்ளாவர்.—எரேமியா 25:31-33; வெளிப்படுத்துதல் 17:15-18; 18:9-19.
9 பொ.ச.மு. 607-ல் எருசலேமுக்கு நிகழ்ந்த அழிவு, யெகோவாவுக்கு இனி பூமியில் சாட்சிகள் இருக்கப் போவதில்லை என்று அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. உத்தமத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த தானியேலையும் அவருடைய மூன்று தோழர்களையும் போன்றோர், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையிலும் யெகோவாவைத் தொடர்ந்து சேவிப்பார்கள். (தானியேல் 1:6, 7) ஆம், யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளின் சங்கிலி போன்ற தொடர்பு அறுந்து விடாமல் நிலைத்திருக்கும். 70 ஆண்டுகளின் முடிவில், உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் பாபிலோனைவிட்டு வெளியேறி, யூதாவுக்குத் திரும்பிச் சென்று தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவார்கள். இதையே யெகோவா அடுத்தபடியாக தெரிவிக்கிறார்: “நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே [“தேசங்களில்,” NW] அறிவிப்பார்கள்.”—ஏசாயா 66:19.
10 பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பிவருகிற பெருங்கூட்டமான இந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் ஆச்சரியமூட்டும் ஓர் அடையாளமாக இருப்பார்கள்; யெகோவா தம் ஜனங்களை விடுவித்ததற்கு நிரூபணமாக இருப்பார்கள். சிறைப்படுத்தப்பட்ட யூதர்கள் யெகோவாவின் ஆலயத்தில் தூய வணக்கத்தை மீண்டும் தொடருவதற்காக ஒரு நாள் விடுதலை பெறுவர் என்பதை யார்தான் கற்பனை செய்திருப்பர்? இதற்கு ஒப்பாக முதல் நூற்றாண்டில், “அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும்” இருந்தவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களே; யெகோவாவைச் சேவிக்க விரும்பிய சாந்தகுணமுள்ளவர்கள் அவர்களிடம் திரண்டு சென்றார்கள். (ஏசாயா 8:18; எபிரெயர் 2:13) இன்று, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் திரும்ப நிலைநாட்டப்பட்ட தங்கள் தேசத்தில் செழித்தோங்குகிறார்கள்; இந்த பூமியில் ஆச்சரியமூட்டும் ஓர் அடையாளமாக சேவிக்கிறார்கள். (ஏசாயா 66:8) யெகோவாவுடைய ஆவியின் வல்லமைக்கு உயிருள்ள அத்தாட்சியாக இருக்கும் அவர்கள் சாந்தகுணமுள்ளவர்களை ஈர்க்கிறார்கள்; இந்த சாந்தகுணமுள்ளவர்களின் இதயம் யெகோவாவை சேவிக்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறது.
11 ஆனால் பொ.ச.மு. 537-ல் திரும்ப நிலைநாட்டப்பட்ட பின்பு, யெகோவா நடப்பித்த காரியங்களைப் பற்றி கேள்விப்படாத மற்ற தேசத்தார் எப்படி அவரை அறிந்து கொள்வார்கள்? பாபிலோனிய சிறையிருப்பின் முடிவில் உண்மையுள்ள யூதர்கள் எல்லாருமே எருசலேமுக்குத் திரும்ப மாட்டார்கள். தானியேலைப் போன்ற சிலர் பாபிலோனில் தொடர்ந்து இருப்பார்கள். மற்றவர்களோ பூமியின் நாலா பக்கமும் சிதறி போவார்கள். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்குள், பெர்சிய பேரரசு முழுவதிலும் யூதர்கள் சிதறியிருந்தார்கள். (எஸ்தர் 1:1; 3:8) சந்தேகமில்லாமல் அவர்களில் சிலர், புறமதத்தைச் சேர்ந்த தங்கள் அயலகத்தாருக்கு யெகோவாவைப் பற்றி சொல்லியிருப்பார்கள்; ஏனென்றால் அந்தத் தேசத்தாரில் பலர் யூத மதத்திற்கு மாறினார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சீஷன் பிலிப்பு பிரசங்கித்த அண்ணகனாகிய எத்தியோப்பியன் விஷயத்தில் இதுவே நடந்தது. (அப்போஸ்தலர் 8:26-40) இவை யாவும் சகரியா தீர்க்கதரிசி உரைத்த பின்வரும் வார்த்தைகளின் ஆரம்ப நிறைவேற்றமாக நடந்தேறின: “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.” (சகரியா 8:23) நிச்சயமாகவே தேசங்களுக்கு ஒளியை யெகோவா அனுப்பினார்!—சங்கீதம் 43:3.
“யெகோவாவுக்குக் காணிக்கை” கொண்டுவருதல்
12 எருசலேம் திரும்பக் கட்டப்பட்ட பின்பு, தங்கள் தாயகத்தைவிட்டு தூரமாய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கும் யூதர்கள் அந்நகரத்தையும் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஆசாரியத்துவத்தையுமே தூய வணக்கத்திற்கு மையமாக நோக்குவார்கள். வருடாந்தர பண்டிகைகளில் கலந்து கொள்வதற்காக அவர்களில் பலர் நெடுந்தூரம் பயணம் செய்து எருசலேமுக்கு வருவார்கள். தேவாவியால் ஏவப்பட்டு ஏசாயா இவ்வாறு எழுதுகிறார்: “இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவதுபோல, புறஜாதியார் உங்கள் சகோதரரெல்லாரையும் குதிரைகளின்மேலும் இரதங்களின்மேலும் பல்லக்குகளின்மேலும் கோவேறு கழுதைகளின்மேலும் வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்தும் [“தேசங்களிலிருந்தும்,” NW] எருசலேமிலுள்ள என் பரிசுத்த பர்வதத்துக்கு யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்தெடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.”—ஏசாயா 66:20, 21, தி.மொ.
13 “சகல தேசங்களிலிருந்தும்” வந்த ‘சகோதரர்களில்’ சிலர், பெந்தெகொஸ்தே நாளில் இயேசுவின் சீஷர்களின்மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது அங்கிருந்தார்கள். அந்தப் பதிவு இவ்வாறு வாசிக்கிறது: “வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.” (அப்போஸ்தலர் 2:5) அவர்கள் யூத வழக்கத்தின்படி வணங்குவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டபோதோ, பலர் அவரில் விசுவாசம் வைத்து முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
14 இத்தீர்க்கதரிசனத்திற்கு தற்கால நிறைவேற்றம் இருக்கிறதா? ஆம். முதல் உலகப் போருக்குப் பின், யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள், 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை வேதவசனங்களிலிருந்து தெளிவாக அறிந்தார்கள். கூடுதலான ராஜ்ய சுதந்தரவாளிகள், அல்லது ‘சகோதரர்கள்’ கூட்டிச் சேர்க்கப்பட வேண்டியிருந்ததை, கவனமாக பைபிளை படிப்பதன் வாயிலாக அறிந்தார்கள். அஞ்சாத ஊழியர்கள், எல்லா வகை போக்குவரத்தையும் பயன்படுத்தி, அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரில் மற்றவர்களை தேடி “பூமியின் கடைசிபரியந்தமும்” பயணித்தார்கள். இவர்களில் பெரும்பான்மையர் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிலிருந்து வந்தார்கள். தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள், யெகோவாவுக்குக் காணிக்கையாக கொண்டுவரப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 1:8.
15 ஆரம்ப ஆண்டுகளில் கூட்டிச் சேர்க்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், பைபிள் சத்தியத்தை அறிவதற்கு முன்னால் தாங்கள் இருந்த விதமாகவே யெகோவா தங்களை ஏற்கும்படி எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தங்களை ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்திகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். அதன் மூலம் ‘சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையாக,’ அல்லது அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி ‘கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் கற்புள்ள கன்னிகையாக’ தங்களை அளிக்க முடிந்தது. (2 கொரிந்தியர் 11:2) கோட்பாடு சம்பந்தப்பட்ட தவறுகளை புறக்கணித்ததோடு இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களில் உறுதியாக நடுநிலை வகிப்பதைப் பற்றியும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 1931-ல், தம்முடைய ஊழியர்கள் போதியளவு சுத்திகரிக்கப்பட்டவுடன் தமது பெயரை—யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை—தரித்துக்கொள்ளும் பாக்கியத்தை யெகோவா அவர்களுக்குத் தயவாய் அருளினார். (ஏசாயா 43:10-12) எனினும், எவ்வகையில் யெகோவா ‘சிலரை ஆசாரியர்களாக தெரிந்தெடுப்பார்’? அபிஷேகம் பண்ணப்பட்ட இந்தத் தொகுதியினர், ‘ராஜரீக ஆசாரியக் கூட்டமும் பரிசுத்த ஜாதியுமானோரின்’ பாகமாகி, கடவுளுக்கு துதியின் பலிகளைச் செலுத்துகிறார்கள்.—1 பேதுரு 2:9; ஏசாயா 54:1; எபிரெயர் 13:15.
கூட்டிச் சேர்த்தல் தொடர்கிறது
16 அந்த ‘ராஜரீக ஆசாரியக் கூட்டத்தாரின்’ முழு எண்ணிக்கை 1,44,000. காலப்போக்கில் அவர்களைக் கூட்டிச் சேர்ப்பது முடிவடைந்தது. (வெளிப்படுத்துதல் 7:1-8; 14:1) அது கூட்டிச்சேர்க்கும் வேலையின் முடிவாக இருந்ததா? இல்லை. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: “நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் என் பார்வையில் நிலைத்திருப்பதுபோல உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிலைநிற்கும்; இது யெகோவாவின் திருவாக்கு.” (ஏசாயா 66:22, தி.மொ.) இந்த வார்த்தைகளின் முதல் நிறைவேற்றத்தில், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவரும் யூதர்கள் பிள்ளைகளைப் பிறப்பிக்கத் தொடங்குவார்கள். இவ்வாறு திரும்ப நிலைநாட்டப்பட்ட யூத மீதியானோராகிய “புதிய பூமி,” புதிய யூத ஆட்சிமுறையாகிய ‘புதிய வானத்தின்’ கீழ் உறுதியாக ஸ்தாபிக்கப்படும். இருந்தாலும், இந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் மிகவும் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை அடைந்திருக்கிறது.
17 ஆவிக்குரிய சகோதரர்களான இந்த ஜனம் பிறப்பிக்கும் “சந்ததி,” பூமியில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையுடைய ‘திரள் கூட்டத்தினராவர்.’ இவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வருகிறார்கள்; “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்” நிற்கிறார்கள். இவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9-14; 22:17) இன்று இந்தத் ‘திரள் கூட்டத்தார்,’ ஆவிக்குரிய இருளிலிருந்து, யெகோவா அருளும் ஒளியிடம் வருகிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் அபிஷேகம் பண்ணப்பட்ட தங்கள் சகோதர சகோதரிகளைப்போல், ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமாக நிலைத்திருக்கப் பிரயாசப்படுகிறார்கள். அவர்கள் ஒரு தொகுதியாக கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் தொடர்ந்து சேவித்து, என்றுமாக ‘நிலைநிற்பார்கள்’!—சங்கீதம் 37:11, 29.
18 ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் சுத்தமாய் நிலைத்திருக்க வேண்டியது முக்கியம் என்பதை பூமிக்குரிய நம்பிக்கையுடைய இந்தக் கடின உழைப்பாளிகளான ஆண்களும் பெண்களும் அறிந்திருக்கிறார்கள். அதே சமயத்தில், யெகோவாவைப் பிரியப்படுத்துவதில் இன்னும் அதிகம் உட்பட்டிருப்பதையும் அறிந்திருக்கிறார்கள். கூட்டிச்சேர்க்கும் வேலை மும்முரமாய் நடைபெற்று வருகிறது, அதில் அவர்களும் பங்குகொள்ள விரும்புகிறார்கள். அவர்களைக் குறித்து வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறது: “இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:15) இந்த வார்த்தைகள், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் கடைசி வசனத்திற்கு முந்தின வசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது: “அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுது கொள்வார்களென்று யெகோவா சொல்லுகிறார்.” (ஏசாயா 66:23, தி.மொ.) இது இன்று நடந்து வருகிறது. “அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும்”—அதாவது தவறாமல் மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும்—அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களாகிய திரள் கூட்டத்தாரும் யெகோவாவை வணங்குவதற்கு ஒன்றுகூடுகிறார்கள். மற்ற காரியங்களோடுகூட, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவதன் மூலமும், வெளி ஊழியத்தில் ஈடுபடுவதன் மூலமும் அவர்கள் இதைச் செய்கிறார்கள். தவறாமல் வந்து ‘யெகோவாவுக்கு முன்பாகத் தொழுதுகொள்வோரில்’ நீங்களும் ஒருவரா? இதைச் செய்வதில் யெகோவாவின் ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்; “மாம்சமான யாவரும்”—உயிரோடிருக்கும் மனிதர் யாவரும்—“அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும்” நித்திய காலத்துக்கும் யெகோவாவைச் சேவிக்கும் அந்நாளை திரள்கூட்டத்தார் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
கடவுளுடைய சத்துருக்களின் கடைசி முடிவு
19 ஏசாயா தீர்க்கதரிசனத்தைப் பற்றிய நம் ஆராய்ச்சியில் இன்னும் ஒரு வசனம் மீந்திருக்கிறது. பின்வரும் இவ்வார்த்தைகளுடன் இந்தப் புத்தகம் முடிகிறது: “அவர்கள் வெளியே போய், எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்கள் புழு சாகாமலும், அவர்கள் அக்கினி அவியாமலும் இருக்கும்; மாம்சமான யாவருக்கும் அவர்கள் அரோசிகமாயிருப்பார்கள்.” (ஏசாயா 66:24, தி.மொ.) தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும்படியும் ராஜ்ய அக்கறைகளை முதலாவதாக வைக்கும்படியும் தம் சீஷர்களை ஊக்குவித்தபோது, இந்தத் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் மனதில் இருந்திருக்கலாம். அவர் இவ்வாறு சொன்னார்: “உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே [“கெஹென்னாவிலே,” NW] தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.”—மாற்கு 9:47, 48; மத்தேயு 5:29, 30; 6:33.
20 கெஹென்னா என்று அழைக்கப்படுகிற இது என்ன இடம்? பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யூத அறிஞர் டேவிட் கிம்ஹி இவ்வாறு எழுதினார்: “இது . . . எருசலேமை தொட்டாற்போல் அமைந்திருந்த ஓர் இடம்; அருவருப்பூட்டும் இடம். அசுத்தமான பொருட்களையும் பிணங்களையுமே அங்கு எறிந்தார்கள். அசுத்தமானவற்றையும் பிணங்களின் எலும்புகளையும் எரிப்பதற்கு நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. ஆகவே, அக்கிரமக்காரரின் தண்டனை தீர்ப்பு கெஹின்னோம் என்று அடையாளமாக அழைக்கப்படுகிறது.” இந்த யூத அறிஞர் குறிப்பிடுவதுபோல், குப்பைகளையும் அடக்கம் செய்வதற்கு தகுதியற்றவர்களென கருதப்பட்டோரின் பிணங்களையும் அப்புறப்படுத்துவதற்கு கெஹென்னா பயன்படுத்தப்பட்டிருந்தால் அத்தகைய குப்பைக்கூளங்களை ஒழிப்பதற்கு அக்கினி பொருத்தமான ஒன்றாக இருக்கும். அக்கினி அழிக்காததை, புழுக்கள் தின்று அழிக்கும். கடவுளுடைய சத்துருக்கள் அனைவரின் இறுதி முடிவுக்கு எத்தகைய பொருத்தமான சித்தரிப்பு!b
21 மெய்சிலிர்க்க வைக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனம், பிணங்கள், அக்கினி, புழுக்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுவதால் பீதியடையச் செய்யும் தொனியில் முடிகிறதென்பது உண்மையல்லவா? கடவுளுடைய சத்துருக்கள் அப்படி நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடவுளுடைய சிநேகிதர்களுக்கோ, அக்கிரமக்காரரின் நித்திய அழிவைப் பற்றிய ஏசாயாவின் விவரிப்பு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்குகிறது. சத்துருக்களின் கைகள் இனிமேலும் ஓங்குவதில்லை என்ற வாக்குறுதியை யெகோவாவின் ஜனங்கள் அறிந்துகொள்வது அவசியம். கடவுளை வணங்குவோருக்கு அதிக துன்பத்தையும் கடவுளுடைய பெயருக்கு பெரும் நிந்தையையும் கொண்டுவந்துள்ள அந்தச் சத்துருக்கள் நித்தியமாய் அழிக்கப்படுவர். அதற்குப் பின்பு, “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.”—நாகூம் 1:9.
22 ஏசாயா புத்தகத்தைப் பற்றிய நம் கலந்தாராய்ச்சியை முடிக்கையில், இந்த பைபிள் புத்தகம் வெறும் கடந்தகால சரித்திரம் அடங்கிய புத்தகமல்ல என்பதை நாம் நிச்சயமாகவே மதித்துணருகிறோம். அதற்கு மாறாக, இன்று நமக்கு வேண்டிய ஒரு செய்தியும் இதில் உள்ளது. ஏசாயா வாழ்ந்த இருண்ட காலத்திற்கு நம் கவனத்தை செலுத்துகையில், அந்தக் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்குமுள்ள ஒப்புமைகளை காணலாம். அரசியல் குழப்படிகள், மத பாசாங்குத்தனம், நீதி நியாயம் வழங்குவதில் முறைகேடுகள், நீதிமான்களும் ஏழைகளும் ஒடுக்கப்படுதல் ஆகியவை ஏசாயாவின் காலத்தில் இருந்தன, இன்றும் இருக்கின்றன. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையுள்ள யூதர்கள் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருந்திருப்பார்கள்; இன்று அத்தீர்க்கதரிசனத்தைப் படிக்கும் நமக்கும் ஆறுதல் கிடைக்கிறது.
23 இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடுகிற இந்தக் கொடிய காலங்களில், ஏசாயாவின் மூலமாக யெகோவா சகல மனிதருக்கும் வெளிச்சம் அருளியிருப்பதற்காக நாமெல்லாரும் அதிக நன்றியுள்ளோராய் இருக்கிறோம்! எந்த தேசம் அல்லது இனமாக இருந்தாலும் சரி, ஆவிக்குரிய அந்த ஒளியை முழு இருதயத்துடன் ஏற்போர் எல்லாருக்கும் அது நித்திய ஜீவனை குறிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) அப்படியானால், நாம் கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசித்து, அதன்பேரில் தியானித்து, அதன் செய்தியை நெஞ்சார நேசித்து, அதன் ஒளியில் தொடர்ந்து நடப்போமாக. இது நம்முடைய நித்திய ஆசீர்வாதத்திற்கும், யெகோவாவின் பரிசுத்த பெயருக்குத் துதி உண்டாவதற்கும் ஏதுவாயிருக்கும்!
[அடிக்குறிப்புகள்]
a பாபிலோனியரிடம் எருசலேம் வீழ்ச்சியடைந்த பின்பு இருந்த நிலைமையை குறித்து சொல்கையில் ‘ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும்’ பற்றி எரேமியா 52:15 குறிப்பிடுகிறது. இதைக் குறித்து வேதாகமத்தின்பேரில் உட்பார்வை தொகுதி 1, பக்கம் 415 இவ்வாறு சொல்கிறது: “‘நகரத்தில் மீதியான மற்ற ஜனம்’ என்ற சொற்றொடர், பஞ்சத்தால், நோயால், அல்லது அக்கினியால், எண்ணற்றோர் மரித்தனர் அல்லது போரில் கொல்லப்பட்டனர் என்பதை குறிப்பிடுவதாக தெரிகிறது.”
b உயிருள்ள ஆட்கள் அல்ல, செத்தப் பிணங்களே கெஹென்னாவில் எரிக்கப்பட்டதால், இந்த இடம் நித்திய வாதனையை அடையாளமாக குறிப்பதில்லை.
[கேள்விகள்]
1, 2. ஒளி ஏன் முக்கியமானது, என்ன வகையான இருள் இன்று பூமியை மூடுகிறது?
3. இந்த இருண்ட காலங்களில் ஒளியை நாம் எங்கே கண்டடையலாம்?
4, 5. (அ) எவ்வகையில் எருசலேமுக்கு விரோதமாக யெகோவா வருகிறார்? (ஆ) பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவை கொஞ்ச பேர் மாத்திரமே தப்பிப்பிழைப்பரென நாம் ஏன் முடிவு செய்யலாம்? (அடிக்குறிப்பை காண்க.)
6. கண்டிக்கத்தக்க என்ன பழக்கவழக்கங்கள் யூதாவில் நடைபெறுகின்றன?
7. கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்த யூதாவுக்கு ஒப்பாக இருக்கிறது?
8. (அ) யூதாவுக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கும் என்ன நடக்கும்? (ஆ) என்ன கருத்தில் தேசங்கள் ‘யெகோவாவின் மகிமையைக்’ காண்பார்கள்?
9. என்ன நற்செய்தியை யெகோவா அறிவிக்கிறார்?
10. (அ) பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்ட உண்மையுள்ள யூதர்கள் என்ன கருத்தில் ஓர் அடையாளமாக இருப்பார்கள்? (ஆ) இன்று அடையாளமாக இருப்பவர்கள் யார்?
11. (அ) திரும்ப நிலைநாட்டப்பட்ட பின் தேசங்கள் எவ்வாறு யெகோவாவைப் பற்றி அறிந்து கொள்ளும்? (ஆ) சகரியா 8:23 ஆரம்பத்தில் எப்படி நிறைவேறியது?
12, 13. பொ.ச.மு. 537 முதற்கொண்டு எவ்விதத்தில் ‘சகோதரர்கள்’ எருசலேமுக்குக் கொண்டுவரப்படுவார்கள்?
14, 15. (அ) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள், முதல் உலகப் போருக்குப் பின், எப்படி இன்னும் அதிகமான ஆவிக்குரிய ‘சகோதரர்களை’ கூட்டிச் சேர்த்தார்கள், இவர்கள் எவ்வாறு யெகோவாவுக்கு, ‘சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையாக’ கொண்டுவரப்பட்டார்கள்? (ஆ) எவ்வகையில் யெகோவா ‘சிலரை ஆசாரியர்களாக தெரிந்தெடுத்தார்’? (இ) ஆவிக்குரிய சகோதரர்களை கூட்டிச் சேர்ப்பதில் பங்காற்றிய அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் யார்? (இப்பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
16, 17. முதல் உலகப் போருக்குப் பின், “உங்கள் சந்ததி” எனப்படுவோர் யார்?
18. (அ) திரள் கூட்டத்தினர் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களைப்போல் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றனர்? (ஆ) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் அவர்களுடைய தோழர்களும் எவ்வாறு “அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும்” யெகோவாவை வணங்குகின்றனர்?
19, 20. பைபிள் காலங்களில் கெஹென்னா என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது, அது எதற்கு அடையாளமாக இருக்கிறது?
21. ஏசாயாவின் புத்தகம் யாருக்கு சாதகமான தொனியில் முடிகிறது, ஏன்?
22, 23. (அ) ஏசாயாவின் புத்தகத்தை கலந்தாராய்ந்ததிலிருந்து நீங்கள் பயனடைந்த வழிகள் சிலவற்றை விளக்குங்கள். (ஆ) ஏசாயாவின் புத்தகத்தை ஆராய்ந்த பின், இப்போது உங்கள் தீர்மானம் என்ன, உங்கள் நம்பிக்கை என்ன?
[பக்கம் 409-ன் பெட்டி]
சகல தேசங்களிலுமிருந்தும் யெகோவாவுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்
குவான் மூனிஸ் 1920-ல் ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஸ்பெய்னுக்குச் சென்றார்; அங்கிருந்து அர்ஜன்டினாவுக்குப் பயணப்பட்டார்; அங்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் சபைகளை அமைத்தார். 1923 முதற்கொண்டு, சியர்ரா லியோன், கானா, லைபீரியா, காம்பியா, நைஜீரியா போன்ற இடங்களில் மிஷனரியான வில்லியம் ஆர். பிரௌன் (பெரும்பாலும் பைபிள் பிரௌன் என்றே அழைக்கப்பட்டவர்) ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கியபோது மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த நல்மனமுள்ளோர்மீது சத்தியத்தின் ஒளி பிரகாசித்தது. அதே ஆண்டில் கனடா நாட்டின் ஜார்ஜ் யங், பிரேஸிலுக்கும், பின்பு அங்கிருந்து அர்ஜன்டினா, கோஸ்டா ரிகா, பனாமா, வெனிசுவேலா ஆகிய இடங்களுக்கும் சோவியத் யூனியனுக்கும்கூட சென்றார். ஏறக்குறைய அதே சமயத்தில், எட்வின் ஸ்கின்னர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கப்பற்பயணம் செய்து, அங்கு அறுவடை வேலையில் பல ஆண்டுகள் உழைத்தார்.
[பக்கம் 411-ன் படம்]
பெந்தெகொஸ்தே நாளில் இருந்த யூதர்களில் சிலர் ‘சகல தேசங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட சகோதரர்கள்’ ஆவர்
[பக்கம் 413-ன் முழுபக்க படம்]