நாம் அறிவிக்க வேண்டிய செய்தி
யெகோவா நமக்கு ஒரு பொறுப்பையும் மிகப் பெரிய சிலாக்கியத்தையும் தந்து, “நானே தேவன் . . . என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள்” (ஏசா. 43:12) என்று சொல்லியிருக்கிறார். நாம் வெறுமனே விசுவாசிகள் அல்ல, கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையிலுள்ள இன்றியமையா சத்தியங்களை வெளிப்படையாக அறிவிக்கும் சாட்சிகள். நமது நாளில் அறிவிப்பதற்கு யெகோவா நம்மிடம் தந்திருக்கும் அந்தச் செய்தி என்ன? அச்செய்தி யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவினிடமும் மேசியானிய ராஜ்யத்தினிடமும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.
“[மெய்த்] தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்”
“பூமியிலுள்ள சகல ஜனங்களும்” தங்களை ஆசீர்வதித்துக் கொள்வதற்குரிய ஏற்பாட்டைப் பற்றி கிறிஸ்தவ சகாப்தத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே உண்மையுள்ள ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். (ஆதி. 22:18) அனைத்து மனிதர் மீதுமுள்ள அடிப்படைப் பொறுப்பைக் குறித்தும் எழுதும்படி சாலொமோனை அவர் ஏவினார்: “[மெய்த்] தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிர. 12:13) ஆனால் இந்தக் காரியங்களை எல்லா ஜனங்களும் எப்படி கற்றுக்கொள்வார்கள்?
கடவுளுடைய வார்த்தை மீது நம்பிக்கை வைத்த ஜனங்கள் சிலர் எல்லா காலத்திலும் வாழ்ந்துவந்த போதிலும், சகல ஜனங்களையும் சென்றெட்டுகிற உலகளாவிய தீவிர சாட்சிகொடுத்தல் ‘கர்த்தருடைய நாளுக்கென’ வைக்கப்பட்டிருந்தது என பைபிள் காட்டுகிறது. அது 1914-ல் ஆரம்பமானது. (வெளி. 1:10) தேவதூதர்களுடைய வழிநடத்துதலில், “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” ஒரு முக்கியமான அறிவிப்பு கொடுக்கப்படும் என இந்தக் காலத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் 14:6, 7 முன்னறிவித்தது. “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்” என அவர்கள் உந்துவிக்கப்படுவார்கள். இந்தச் செய்தி அறிவிக்கப்படுவது கடவுளுடைய சித்தம். இந்த வேலையில் ஈடுபடுவது நம் சிலாக்கியம்.
‘மெய்த் தேவன்.’ தேவத்துவத்தைப் பற்றிய விவாதம் சர்ச்சைக்குள்ளான சூழமைவில்தான் “நீங்கள் எனக்குச் சாட்சிகள்” என யெகோவா அறிவித்தார். (ஏசா. 43:10) ஏதோவொரு மதத்தில் இருக்க வேண்டும் அல்லது ஏதோவொரு கடவுளில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது அறிவிக்கப்பட வேண்டிய செய்தியல்ல. மாறாக, வானத்தையும் பூமியையும் படைத்தவரே மெய்யான தேவன் என்பதை கற்றுக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். (ஏசா. 45:5, 18, 21, 22; யோவா. 17:3) மெய்த் தேவனால் மட்டுமே வருங்காலத்தைப் பற்றி நம்பகமான விதத்தில் முன்னறிவிக்க முடியும். கடந்த காலத்தில் யெகோவாவின் வார்த்தை நிறைவேறியதானது, வருங்காலத்திற்காக அவர் வாக்குறுதி அளித்துள்ளவையும் முழுமையாக நிறைவேறும் என்பதை நம்புவதற்கு உறுதியான ஆதாரத்தைத் தருகிறது என எடுத்துச் சொல்வது நமது சிலாக்கியம்.—யோசு. 23:14; ஏசா. 55:10, 11.
நாம் சாட்சி கொடுக்கிற ஜனங்கள் பலரும் பிற கடவுட்களை வணங்குகிறார்கள் அல்லது எந்தக் கடவுளையுமே வணங்குவதில்லை. அவர்களை செவிசாய்க்க வைப்பதற்கு, இருவருக்கும் அக்கறைக்குரிய பொதுவான ஒரு விஷயத்தை சொல்லி உரையாடலை ஆரம்பிக்க வேண்டியிருக்கலாம். அப்போஸ்தலர் 17:22-31-ல் பதிவு செய்யப்பட்டுள்ள உதாரணத்திலிருந்து நாம் பயனடையலாம். அப்போஸ்தலன் பவுல் சாதுரியமாக பேசினார் என்றாலும், வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளுக்கு அனைவரும் கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதை தெளிவாக குறிப்பிட்டார் என்பதை கவனியுங்கள்.
கடவுளுடைய பெயரை தெரிவித்தல். மெய்க் கடவுளின் பெயரை தெரிவிக்க தவறாதீர்கள். யெகோவாவுக்கு தமது பெயர் மிகவும் பிரியமானது. (யாத். 3:15; ஏசா. 42:8; NW) அந்தப் பெயரை ஜனங்கள் அறிய வேண்டுமென அவர் விரும்புகிறார். தம்முடைய மகத்தான பெயரை பைபிளில் 7,000 தடவைக்கும் மேல் பதிவுசெய்து வைத்தார். இதை ஜனங்களுக்கு தெரியப்படுத்துவது நம் கடமை.—உபா. 4:35, NW.
மனிதகுலம் அனைத்தின் வருங்கால வாழ்க்கையும் யெகோவாவை அறிவதிலும் விசுவாசத்தோடு அவரை நோக்கிக் கூப்பிடுவதிலுமே சார்ந்திருக்கிறது. (யோவே. 2:32; மல். 3:16; 2 தெ. 1:7) என்றாலும், பெரும்பாலோருக்கு யெகோவாவைப் பற்றி தெரியாது. பைபிளின் கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டும் பலருக்கும்கூட அவரைப் பற்றி தெரியாது. அவர்கள் பைபிளை வைத்திருந்து அதை வாசித்தாலும்கூட, இன்னும் கடவுளுடைய பெயரை அறியாமல் இருக்கலாம்; ஏனென்றால் நவீன மொழிபெயர்ப்புகள் பலவற்றிலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. யெகோவா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என தங்களுடைய மதத் தலைவர்கள் சொன்னபோதுதான் சிலர் அந்தப் பெயரையே கேட்டிருக்கிறார்கள்.
கடவுளுடைய பெயரை நாம் ஜனங்களுக்கு எப்படி தெரியப்படுத்தலாம்? பைபிளிலிருந்து—முடிந்தவரை அவர்களுடைய சொந்த பைபிளிலிருந்து—அதைக் காட்டுவதே சிறந்த வழி. சில மொழிபெயர்ப்புகளில், இப்பெயர் ஆயிரக்கணக்கான தடவை வருகிறது. இன்னும் சில மொழிபெயர்ப்புகளிலோ சங்கீதம் 83:17 அல்லது யாத்திராகமம் 6:3-6 வசனங்களில் காணப்படலாம்; அல்லது ஏசாயா 12:2, 26:4 போன்ற வசனங்களில் மட்டுமே காணப்படலாம். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், மூல மொழியில் கடவுளுடைய பெயர் காணப்படுகிற இடங்களில் “கர்த்தர்” மற்றும் “தேவன்” என மாற்றி அதை தடித்த எழுத்துக்களிலோ பெரிய எழுத்துக்களிலோ போட்டிருக்கின்றன. நவீன மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை முற்றிலும் நீக்கிவிட்டிருந்தால், என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துவதற்காக நீங்கள் பழைய பைபிள் மொழிபெயர்ப்பை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். சில நாடுகளில், கீர்த்தனைகளிலோ பொது கட்டிடத்திலோ கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் சுட்டிக்காட்டலாம்.
பிற கடவுட்களை வணங்குபவர்களுக்கும்கூட புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எரேமியா 10:10-13 வசனங்களை நீங்கள் திறம்பட பயன்படுத்தலாம். அந்த வசனங்கள் கடவுளுடைய பெயரை குறிப்பிடுவது மட்டுமல்லாமல் அவர் யார் என்பதையும் தெளிவாக விளக்குகின்றன.
கிறிஸ்தவ மண்டலத்தாரைப் போல் யெகோவா என்ற பெயருக்கு பதிலாக “தேவன்” மற்றும் “கர்த்தர்” என்ற பட்டப் பெயர்களை பயன்படுத்தாதீர்கள். உரையாடும் ஒவ்வொரு சமயத்தின் ஆரம்பத்திலும் இந்தப் பெயரை பயன்படுத்த வேண்டுமென இது அர்த்தப்படுத்துவதில்லை. தப்பெண்ணத்தின் காரணமாக சிலர் சம்பாஷிப்பதை நிறுத்திவிடலாம். ஆனால் சம்பாஷணைக்கு அடித்தளமிட்ட பின்பு கடவுளுடைய பெயரை பயன்படுத்த தயங்காதீர்கள்.
“கர்த்தர்” மற்றும் “தேவன்” என்ற பட்டப் பெயர்களைவிட கடவுளுடைய தனிப்பட்ட பெயரை பைபிள் மிக அதிகமாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், பைபிள் எழுத்தாளர்கள் வாக்கியத்துக்கு வாக்கியம் கடவுளுடைய பெயரை பயன்படுத்தவில்லை. இயல்பாக, சாதாரணமாக, மரியாதைக்குரிய விதத்தில் அதை பயன்படுத்தினார்கள். அதுவே நாம் பின்பற்றுவதற்கு சிறந்த மாதிரி.
அந்தப் பெயருக்கு உரியவர். கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட பெயர் இருப்பது முக்கியமான சத்தியமாக இருந்தாலும் அது அவரைப் பற்றி அறிவதற்கு ஓர் ஆரம்பம் மட்டுமே.
யெகோவாவை நேசித்து, விசுவாசத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட வேண்டுமென்றால் அவர் எப்படிப்பட்ட கடவுள் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்வது அவசியம். சீனாய் மலையில் மோசேக்கு யெகோவா தம் பெயரை தெரியப்படுத்தியபோது அவர் வெறுமனே “யெகோவா” என்ற பெயரை மறுபடியும் மறுபடியும் சொல்லவில்லை. அவர் தம்முடைய தலைசிறந்த பண்புகள் சிலவற்றிற்கு கவனத்தை ஈர்த்தார். (யாத். 34:6, 7, NW) அது நாம் பின்பற்றுவதற்கு சிறந்த மாதிரி.
புதிதாக ஆர்வம் காட்டுவோரிடம் சாட்சி கொடுக்கையிலும்சரி சபையில் பேச்சு கொடுக்கையிலும்சரி, ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்றால், அப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்த கடவுளைப் பற்றி அவை என்ன காட்டுகின்றன என்பதை சுட்டிக் காட்டுங்கள். அவரது கட்டளைகளை குறிப்பிடுகையில் அவற்றில் வெளிப்படும் அவரது ஞானத்தையும் அன்பையும் வலியுறுத்திக் காட்டுங்கள். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவை நமக்கு கஷ்டத்தை கொடுப்பதில்லை, ஆனால் நம்முடைய நன்மைக்கானவை என்பதை தெளிவுபடுத்துங்கள். (ஏசா. 48:17, 18; மீ. 6:8) யெகோவாவுடைய வல்லமையின் வெளிக்காட்டுகள் ஒவ்வொன்றும் அவருடைய இயல்பு, தராதரங்கள் மற்றும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்பதை காட்டுங்கள். யெகோவா தம்முடைய பண்புகளை சமநிலையோடு வெளிப்படுத்தும் விதத்திற்கு கவனத்தை திருப்புங்கள். யெகோவாவைப் பற்றி உங்களுடைய சொந்த உணர்வுகளை ஜனங்களிடம் வெளிப்படுத்துங்கள். யெகோவாவிடம் நீங்கள் காட்டும் அன்பு மற்றவர்களிலும் அத்தகைய அன்பைத் தூண்டுவதற்கு உதவலாம்.
யெகோவாவுக்கு பயப்படும்படி சகல ஜனங்களையும் உந்துவிப்பதே நம் நாளில் செய்யப்படுகிற மிக அவசரமான வேலை. நாம் சொல்லும் விதத்தின் வாயிலாக அந்தத் தேவ பயத்தை அவர்களில் வளர்க்க வேண்டும். இது ஆரோக்கியமான பயம், யெகோவா மீது காட்டும் ஆழ்ந்த பயபக்தியாகும். (சங். 89:7) இது, யெகோவாவே உன்னத நீதிபதி என்பதையும் நம்முடைய வருங்கால எதிர்பார்ப்புகள் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதைப் பொறுத்தது என்பதையும் அறிந்திருப்பதைக் குறிக்கிறது. (லூக். 12:5; ரோ. 14:12) ஆகவே, அந்தப் பயம் அவர் மீதுள்ள ஆழ்ந்த அன்புடனும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஊக்கமான ஆவலுடனும் இரண்டற கலந்திருக்கிறது. (உபா. 10:12, 13) தீமையை வெறுக்கவும் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் அவரை முழு இருதயத்தோடு வணங்கவும் இந்தத் தேவ பயம் நம்மைத் தூண்டுகிறது. (உபா. 5:29; 1 நா. 28:9; நீதி. 8:13) உலகியல் இன்பங்களை நேசித்து அதே சமயத்தில் கடவுளையும் சேவிக்க முயலுவதற்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.—1 யோ. 2:15-17.
கடவுளின் பெயர்—“பலத்த கோபுரம்.” யெகோவாவை உண்மையில் அறிந்துகொள்கிறவர்கள் மிகுந்த பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட பெயரை அவர்கள் வெறுமனே பயன்படுத்துவதாலோ அவருடைய சில பண்புகளை பட்டியலிட்டு கூறுவதாலோ அல்ல, ஆனால் அவர் மீது நம்பிக்கை வைப்பதன் காரணமாகவே அப்படிப்பட்ட பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 18:10 (தி.மொ.) இவ்வாறு கூறுகிறது: “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.”
யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு பிறரை உந்துவிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். (சங். 37:3; நீதி. 3:5, 6) இத்தகைய நம்பிக்கை யெகோவாவிலும் அவரது வாக்குறுதிகளிலும் விசுவாசத்தைக் காட்டுகிறது. (எபி. 11:6) யெகோவாவே சர்வலோகப் பேரரசர் என்பதை அறிந்து, அவருடைய வழிகளை நேசித்து, உண்மையான இரட்சிப்பு அவரிடமிருந்தே வருகிறது என்பதில் முழு நம்பிக்கை வைத்து ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடும்போது’ அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (ரோ. 10:13, 14, NW) நீங்கள் பிறருக்கு கற்பிக்கும்போது, அத்தகைய விசுவாசத்தை வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
திணறடிக்கும் பிரச்சினைகளை அநேகர் இன்று வாழ்க்கையில் எதிர்ப்படுகிறார்கள். அதிலிருந்து விடுபட வழியின்றி அவர்கள் தவிக்கலாம். யெகோவாவின் வழிகளை கற்றுக்கொள்ளவும் அவரில் நம்பிக்கை வைக்கவும் கற்றவற்றை கடைப்பிடிக்கவும் அவர்களை உந்துவியுங்கள். (சங். 25:5) கடவுளுடைய உதவிக்காக ஊக்கமாக ஜெபிக்கும்படியும் அவருடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி தெரிவிக்கும்படியும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். (பிலி. 4:6, 7) அவர்கள் பைபிளிலுள்ள சில விவரங்களை வெறுமனே வாசிப்பதன் மூலம் அல்ல, ஆனால் யெகோவாவுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதன் மூலம் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும்போது பாதுகாப்பை பெற ஆரம்பிப்பார்கள்; யெகோவா என்ற பெயர் எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதால் வரும் பாதுகாப்பு அது.—சங். 34:8; எரே. 17:7, 8.
மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கு பயப்படுவதன் ஞானத்தை மதித்துணர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள ஜனங்களுக்கு உதவி செய்ய கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
‘இயேசுவைக் குறித்து சாட்சி பகர்தல்’
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, ஆனால் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு தம்முடைய சீஷர்களுக்கு அறிவுரை வழங்கி இவ்வாறு கூறினார்: “நீங்கள் . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப். 1:8) நம் நாளிலுள்ள கடவுளின் பற்றுமாறா ஊழியர்கள் ‘இயேசுவைக் குறித்து சாட்சிபகரும் பணியை உடையவர்கள்’ என வர்ணிக்கப்படுகிறார்கள். (வெளி. 12:17, NW) அந்தச் சாட்சியை கொடுப்பதில் நீங்கள் எந்தளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்?
இயேசுவை நம்புகிறோம் என உள்ளப்பூர்வமாக கூறும் அநேகருக்கு அவர் பூமியில் மனிதனாக பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் பூமியில் வாழ்ந்தபோது உண்மையில் ஒரு மனிதனாகவே இருந்தார் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர் கடவுளுடைய குமாரன் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்வதில்லை. கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவருடைய பங்கை குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இப்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதும் தெரியாது; எதிர்காலத்தில் அவர் செய்யப்போகும் காரியங்கள் தங்களுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்பாதவர்கள் என்றும்கூட அவர்கள் தவறாக நினைக்கலாம். இந்த விஷயங்களைப் பற்றிய சத்தியத்தை தெரியப்படுத்துவது நம்முடைய சிலாக்கியம்.
வேறு சிலரோ பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு உண்மையில் வாழ்ந்ததாகவே நம்புவதில்லை. சிலர் அவரை ஒரு மாமனிதராக மட்டுமே கருதுகிறார்கள். அவர் கடவுளுடைய குமாரன் என்ற கருத்தையே அநேகர் மறுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ‘இயேசுவைக் குறித்து சாட்சி பகருவதற்கு’ அதிக முயற்சியும் பொறுமையும் சாதுரியமும் தேவை.
செவிசாய்ப்போரின் கருத்து எதுவாக இருந்தாலும், நித்திய ஜீவனுக்கான கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து நன்மை பெற வேண்டுமென்றால், அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். (யோவா. 17:3) உயிரோடிருக்கிற யாவரும் ‘இயேசு கிறிஸ்து கர்த்தரென்று அறிக்கை செய்து’ அவருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதே தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கடவுளுடைய சித்தம். (பிலி. 2:9-11) ஆகவே, உறுதியான அதேசமயத்தில் தவறான கருத்துக்களையோ தப்பெண்ணத்தையோ கொண்டிருக்கிறவர்களை நாம் சந்திக்கையில் இந்த விஷயத்தைக் குறித்து சொல்லாதிருக்க முடியாது. சிலரிடம் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தாராளமாக—முதல் சந்திப்பின்போதும்கூட—பேச முடிகிறபோதிலும், வேறு சிலரிடம் அவரைப் பற்றி சொல்லும்போது விவேகத்துடன் பேச வேண்டியிருக்கலாம்; அப்போதுதான் அவரை சரியாக புரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அடுத்து வரும் சந்திப்புகளின்போது அதே விஷயத்தைக் குறித்து கூடுதலாக எவ்விதங்களில் பேசலாமென்றும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கலாம். என்றாலும், ஒருவருடன் பைபிள் படிப்பு நடத்தாத வரையில் எல்லா விஷயங்களையும் சொல்வது சாத்தியமல்ல.—1 தீ. 2:3-7.
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் முக்கிய பங்கு. இயேசு ‘வழியாக’ இருப்பதாலும் ‘அவராலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது’ என்பதாலும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்காமல் கடவுளுடன் அங்கீகரிக்கப்பட்ட உறவை அனுபவிப்பது முடியாத விஷயம் என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ள உதவி செய்வது அவசியம். (யோவா. 14:6) யெகோவா தம் முதற்பேறான குமாரனுக்கு நியமித்துள்ள முக்கிய பங்கை ஒருவர் உணராத பட்சத்தில் பைபிளை புரிந்துகொள்வது இயலாத காரியம். ஏன்? ஏனெனில் யெகோவா தம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் இந்தக் குமாரனை முக்கிய நபராக்கினார். (கொலோ. 1:17-20) பைபிள் தீர்க்கதரிசனங்கள் இதையே மையமாக கொண்டிருக்கின்றன. (வெளி. 19:10) சாத்தானுடைய கலகத்தால் எழும்பிய எல்லா பிரச்சினைகளுக்கும் ஆதாமினால் கடத்தப்பட்ட பாவத்துக்கும் இயேசு கிறிஸ்து மூலமாகவே பரிகாரம் அளிக்கப்படுகிறது.—எபி. 2:5-9, 14, 15.
மனிதர் வருந்தத்தக்க நிலையில் இருப்பதையும் அதிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் பற்றி ஒருவர் அறிந்துகொண்டால் மட்டுமே கிறிஸ்து வகிக்கும் பங்கை புரிந்துகொள்ள முடியும். நாம் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்கள். இது நம் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம். முடிவில் இது மரணத்தில் விளைவடைகிறது. (ரோ. 3:23; 5:12) நாம் சாட்சி பகருகிறவர்களிடம் இந்த விஷயத்தின் பேரில் நியாயங்காட்டிப் பேசலாம். அதற்குப்பின் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலம் அதில் விசுவாசம் காட்டுவோரை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்கு யெகோவா அன்புடன் ஏற்பாடு செய்திருப்பதை சுட்டிக்காட்டுங்கள். (மாற். 10:45; எபி. 2:9) இது பரிபூரணத்தோடு நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வதற்குரிய வழியை அவர்களுக்குத் திறந்து வைக்கிறது. (யோவா. 3:16, 36) இதற்கு வேறெந்த வழியும் இல்லை. (அப். 4:12) ஒரு போதகராக, பிறரிடத்திலோ சபையிலோ இந்த உண்மைகளை வெறுமனே குறிப்பிடுவதோடு நிறுத்தி விடாதீர்கள். நம்முடைய மீட்பராக கிறிஸ்து வகிக்கும் பங்கிற்கு கேட்போர் நன்றியுணர்வை வளர்ப்பதற்கு தயவாகவும் பொறுமையாகவும் உதவுங்கள். இந்த ஏற்பாட்டிற்கு நன்றியுணர்வை காட்டுவது ஒருவரின் மனநிலையிலும், நடத்தையிலும், இலட்சியங்களிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.—2 கொ. 5:14, 15.
இயேசு ஒரேவொரு தரம் மட்டுமே தம் உயிரை பலியாக கொடுத்தார். (எபி. 9:28) என்றாலும், அவர் இப்பொழுது பிரதான ஆசாரியராக மும்முரமாக சேவை செய்து வருகிறார். அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை பிறர் புரிந்துகொள்ள உதவுங்கள். தங்களை சுற்றிலுமுள்ளவர்களின் ஈவிரக்கமற்ற நடத்தையால் அவர்கள் அழுத்தங்களையும் ஏமாற்றத்தையும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அனுபவிக்கிறார்களா? இயேசு மனிதனாக இருந்தபோது இவை அனைத்தையும் அனுபவித்தார். நாம் எப்படி உணர்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நம்முடைய அபூரணத்தின் காரணமாக கடவுளின் இரக்கம் நமக்குத் தேவை என்பதை உணர்கிறோமா? இயேசுவின் பலியின் அடிப்படையில் மன்னிப்புக்காக நாம் கடவுளிடம் ஜெபம் செய்கையில் இயேசு நமக்காக “பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” பச்சாதாபத்துடன் அவர் ‘நமக்காக வேண்டுதல் செய்கிறார்.’ (1 யோ. 2:1, 2; ரோ. 8:34) இயேசுவின் பலியின் அடிப்படையிலும் அவருடைய பிரதான ஆசாரிய சேவையின் வாயிலாகவும் ஏற்ற சமயத்தில் உதவியைப் பெற யெகோவாவின் ‘கிருபாசனத்தை’ நம்மால் அணுக முடிகிறது. (எபி. 4:15, 16) நாம் அபூரணராக இருந்தாலும், பிரதான ஆசாரியராக இயேசு அளிக்கும் உதவியால் சுத்த மனசாட்சியோடு கடவுளை சேவிக்க முடிகிறது.—எபி. 9:13, 14.
அதோடு, கிறிஸ்தவ சபையின் தலைவராக கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு மிகுந்த அதிகாரத்தை செலுத்தி வருகிறார். (மத். 28:18; எபே. 1:22, 23) அதனால், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக தேவையான வழிநடத்துதலை தருகிறார். நீங்கள் பிறருக்கு கற்பிக்கையில், எந்த மனிதனுமல்ல இயேசு கிறிஸ்துவே சபையின் தலைவர் என்பதை புரிந்துகொள்ள உதவுங்கள். (மத். 23:10) ஆர்வம் காண்பிப்பவர்களை சபைக் கூட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே அழையுங்கள். அங்குதான் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ வாயிலாக அளிக்கப்படும் தகவலின் உதவியால் நாம் பைபிளை படிக்கிறோம். அந்த “அடிமை” யார் என்பதை மட்டுமல்ல, எஜமான் யார் என்பதையும் விளக்குங்கள், அப்போதுதான் இயேசுவின் தலைமைத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (மத். 24:45-47, NW) அவர்களை மூப்பர்களிடத்தில் அறிமுகப்படுத்துங்கள், மேலும் இந்த மூப்பர்கள் பெற்றிருக்க வேண்டிய வேதப்பூர்வ தகுதிகளையும் அவர்களிடம் விளக்குங்கள். (1 தீ. 3:1-7; தீத். 1:5-9) மூப்பர்களுக்கு சபை சொந்தமானதல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு இந்த மூப்பர்கள் நமக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். (அப். 20:28; எபே. 4:16; 1 பே. 5:2, 3) கிறிஸ்துவின் தலைமைத்துவத்தின்கீழ் செயல்படுகிற ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட உலகளாவிய சமுதாயம் இருக்கிறது என்பதை ஆர்வமுள்ளோர் கண்டுணர உதவுங்கள்.
இயேசு தம் மரணத்திற்கு சற்று முன்பு எருசலேமுக்குச் சென்றபோது அவருடைய சீஷர்கள் அவரை, ‘[யெகோவாவின்] நாமத்தினாலே வருகிற ராஜா’ என வாழ்த்தி வரவேற்றதை சுவிசேஷங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். (லூக். 19:38) ஜனங்கள் பைபிளை ஆழ்ந்து படிக்கப் படிக்க, ஆட்சி செய்வதற்குரிய அதிகாரத்தை யெகோவா இப்பொழுது இயேசுவுக்கு அளித்திருப்பது சகல தேசத்து மக்களையும் பாதிக்கிறது என்பதை கற்றுக் கொள்கிறார்கள். (தானி. 7:13, 14) சபையில் பேச்சுக்களை கொடுக்கையிலோ பைபிள் படிப்புகளை நடத்துகையிலோ இயேசுவின் ஆட்சி நம் அனைவருக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை மதித்துணர கேட்போருக்கு உதவுங்கள்.
இயேசு கிறிஸ்துவே ராஜாவென்று நாம் உண்மையிலேயே நம்புகிறோமா, அவருடைய ஆட்சிக்கு நாம் மனப்பூர்வமாக கீழ்ப்படிகிறோமா என்பதை நம் வாழ்க்கை முறை காட்டுவதை வலியுறுத்துங்கள். ராஜாவாக இயேசு அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்த வேலையிடம் அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். (மத். 24:14; 28:18-20) வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காரியங்களின் சம்பந்தமாக அதிசயமான ஆலோசனைக் கர்த்தாவாகிய இயேசு என்ன சொன்னார் என்பதை அவர்களிடம் கலந்து பேசுங்கள். (ஏசா. 9:6, 7, NW; மத். 6:19-34) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் காண்பிக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றி சமாதானப் பிரபு என்ன சொன்னார் என்ற விஷயத்தின் மீது அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். (மத். 20:25-27; யோவா. 13:35) மற்றவர்கள் எந்தளவுக்கு செய்கிறார்கள் என்பதை நியாயந்தீர்க்காதபடிக்கு கவனமாயிருங்கள். ஆனால் கிறிஸ்துவின் ராஜரீக அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதைப் பற்றி அவர்களுடைய செயல்கள் என்ன காட்டுகின்றன என்பதை சிந்திக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அப்படி உற்சாகப்படுத்தும்போது, நீங்களும் அதை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஒத்துக் கொள்ளுங்கள்.
கிறிஸ்துவை அஸ்திவாரமாக வைத்தல். கிறிஸ்தவ சீஷராக்கும் வேலையை இயேசு கிறிஸ்துவை அஸ்திவாரமாகக் கொண்டு எழுப்பப்படும் கட்டிட வேலைக்கு பைபிள் ஒப்பிடுகிறது. (1 கொ. 3:10-15) இதைச் செய்வதற்கு இயேசுவைப் பற்றி பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளபடியே அவரை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவுங்கள். அவர்கள் உங்களையே பார்த்து பின்பற்றாதபடிக்கு கவனமாயிருங்கள். (1 கொ. 3:4-7) இயேசு கிறிஸ்துவின் மீது அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள்.
அஸ்திவாரம் நன்கு போடப்பட்டிருந்தால், கிறிஸ்து “தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி” நமக்கு மாதிரியைப் பின்வைத்துச் சென்றிருக்கிறார் என்பதை மாணாக்கர்கள் புரிந்துகொள்வார்கள். (1 பே. 2:21) அதன்மீது கட்டுவதற்கு, சுவிசேஷங்களை வெறுமனே ஓர் உண்மை சரித்திரமாக அல்ல, ஆனால் பின்பற்றத்தக்க மாதிரியாக எண்ணி அவற்றை வாசிக்க மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள். இயேசுவின் மனப்பான்மையையும் பண்புகளையும் அவர்கள் நினைவில் வைத்து பின்பற்றுவதற்கு உதவுங்கள். இயேசு தம் பிதாவைக் குறித்து எப்படி உணர்ந்தார், சோதனைகளையும் கஷ்டங்களையும் எப்படி சகித்தார், கடவுளுக்கு எப்படி கீழ்ப்படிந்தார், பல்வேறு சூழ்நிலைகளில் ஜனங்களிடம் எப்படி நடந்துகொண்டார் போன்ற காரியங்களுக்கு கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள். இயேசு தம் வாழ்நாள் முழுவதும் என்ன வேலையைச் செய்தார் என்பதை வலியுறுத்திக் காட்டுங்கள். அப்போது, வாழ்க்கையில் தீர்மானங்களையும் சோதனைகளையும் எதிர்ப்படுகையில் மாணாக்கர் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்வார்: ‘இதே சூழ்நிலையை இயேசு எதிர்ப்பட்டால் என்ன செய்வார்? நான் தேர்ந்தெடுக்கும் வழி அவர் எனக்கு செய்திருக்கும் காரியங்களுக்கு போற்றுதல் காட்டுவதாய் இருக்குமா?’
சபையார் முன் பேசும்போது, உங்களுடைய சகோதரர்கள் ஏற்கெனவே இயேசுவில் விசுவாசம் வைத்திருப்பதால் அவரிடத்தில் விசேஷித்த கவனம் செலுத்தும்படி வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்க வேண்டாம். அந்த விசுவாசத்தின் மீது கட்டுவீர்களாகில் நீங்கள் சொல்வது அவர்களுடைய விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்தும். கூட்டங்களைப் பற்றி பேசுகையில், சபையின் தலைவராக இயேசு வகிக்கும் பாகத்தோடு அதை சம்பந்தப்படுத்துங்கள். வெளி ஊழியத்தைப் பற்றி பேசும்போது ஊழியத்தில் இயேசு காண்பித்த வைராக்கியத்திற்கு கவனத்தை திருப்புங்கள், புதிய உலகிற்குள் மக்களை கொண்டு செல்ல ராஜாவாக கிறிஸ்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை மனதில் வைத்து ஊழியத்தைப் பற்றி சொல்லுங்கள்.
இயேசுவைப் பற்றிய அடிப்படை உண்மைகளை தெரிந்திருப்பது மட்டுமே போதாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மெய்க் கிறிஸ்தவர்களாவதற்கு ஜனங்கள் அவரை விசுவாசித்து அவரில் உண்மையாய் அன்புகூர வேண்டும். அத்தகைய அன்பு பற்றுமாறா கீழ்ப்படிதலை காட்ட தூண்டுவிக்கிறது. (யோவா. 14:15, 21) அது, கஷ்டப்படும்போது விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கும், வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் தொடர்ந்து நடப்பதற்கும் மக்களுக்கு உதவுகிறது; மேலும், ‘அஸ்திவாரத்திலே வேரூன்றி நிலைத்திருக்கிற’ முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக தங்களை நிரூபிப்பதற்கும் அவர்களுக்கு உதவுகிறது. (எபே. 3:17, NW) இத்தகைய செயல், இயேசு கிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமாயிருக்கிற யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது.
‘ராஜ்யத்தின் இந்த நற்செய்தி’
இயேசு தம்முடைய பிரசன்னத்திற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளங்களை சொன்னபோது, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் [“நற்செய்தி,” NW] பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என முன்னறிவித்தார்.—மத். 24:14.
அந்தளவுக்கு பரவலாக அறிவிக்கப்பட வேண்டிய அந்தச் செய்திதான் என்ன? அது ராஜ்யத்தைப் பற்றிய செய்தி; “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என கடவுளிடம் ஜெபிக்க இயேசு நமக்கு கற்பித்தது அதற்காகத்தான். (மத். 6:10) ‘நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யம்’ என வெளிப்படுத்துதல் 11:15 அதை குறிப்பிடுகிறது; ஏனெனில் ஆளும் அதிகாரம் யெகோவாவிடமிருந்து வருகிறது, அவர் அதை ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார். என்றாலும், நம் நாளில் பிரசங்கிக்கப்படும் என இயேசு சொன்ன செய்தி, முதல் நூற்றாண்டில் அவரது சீஷர்கள் செய்ததைவிட மிக விரிவான அளவில் செய்யப்படுவதை கவனியுங்கள். “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது” என அவர்கள் ஜனங்களுக்குச் சொன்னார்கள். (லூக். 10:9) ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசு அப்போது அவர்கள் மத்தியில் இருந்தார். ஆனால் மத்தேயு 24:14-ல் குறிப்பிட்டுள்ளபடி, கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றமாக உலகெங்கிலும் அறிவிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான சம்பவத்தையும் இயேசு முன்னறிவித்தார்.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய தரிசனம் தானியேல் தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்டது. “மனுஷகுமாரனுடைய சாயலான” இயேசு கிறிஸ்து ‘நீண்ட ஆயுசுள்ளவராகிய’ யெகோவா தேவனிடமிருந்து, ‘சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரீகத்தையும்’ பெறுவதை தானியேல் கண்டார். (தானி. 7:13, 14) உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவம் 1914-ல் நடந்தது. அதன் பின்பு பிசாசும் அவனுடைய பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். (வெளி. 12:7-10) அப்போதே இந்தப் பழைய ஒழுங்குமுறைக்கு கடைசி நாட்கள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் அது முழுமையாக அழிக்கப்படுவதற்கு முன்பு, யெகோவாவின் மேசியானிய அரசர் இப்பொழுது பரலோகத்திலிருந்து ஆளுகிறார் என்ற செய்தி பூகோள அளவில் பிரசங்கிக்கப்படுகிறது. இச்செய்தி எல்லா ஜனங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அச்செய்திக்கு அவர்கள் காட்டும் பிரதிபலிப்பு, “மனுஷருடைய ராஜ்யத்தில்” ஆளுகை செய்யும் உன்னதமானவர் மீது அவர்கள் வைத்திருக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.—தானி. 4:32.
ஆனால் இன்னுமதிக சம்பவங்கள் நிகழவிருக்கின்றன! “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என இன்னமும் நாம் ஜெபிக்கிறோம்; ஆனால் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கு இன்னும் அதிக காலம் செல்லும் என்ற கருத்தில் அல்ல. மாறாக, தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 21:2-4 போன்ற தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற அந்தப் பரலோக ராஜ்யம் விசேஷித்த விதத்தில் செயல்படும் என்ற கருத்திலேயே ஜெபிக்கிறோம். அது, கடவுளையும் சக மனிதரையும் நேசிக்கும் ஜனங்கள் வாழும் ஒரு பரதீஸாக இந்தப் பூமியை மாற்றும். ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ நாம் பிரசங்கிக்கையில் அந்த எதிர்கால ஆசீர்வாதங்களை குறிப்பிடுகிறோம். ஆனால் அதை ஆளுவதற்குரிய முழு அதிகாரத்தையும் யெகோவா தமது குமாரனுக்கு ஏற்கெனவே கொடுத்திருக்கிறார் என்பதையும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். ராஜ்யத்தைப் பற்றி சாட்சி கொடுக்கும்போது இந்த நற்செய்தியை வலியுறுத்திக் கூறுகிறீர்களா?
ராஜ்யத்தைப் பற்றி விளக்குதல். கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் இந்தப் பொறுப்பை நாம் எப்படி நிறைவேற்றலாம்? பல்வேறு பொருள்களில் உரையாடலை ஆரம்பிப்பதன் மூலம் அக்கறையைத் தூண்டலாம், அதே சமயத்தில் நம்முடைய செய்தி கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தி என்பதை விரைவிலேயே தெளிவுபடுத்துவதும் அவசியம்.
ராஜ்யம் சம்பந்தப்பட்ட வசனங்களைக் குறிப்பிடுவது அல்லது வாசிப்பது இந்த வேலையின் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த ராஜ்யத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது என்ன என்பதை கேட்போர் புரிந்துகொள்கிறார்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளுடைய ராஜ்யம் என்பது ஓர் அரசாங்கம் என்று மட்டுமே சொன்னால் போதாது. காண முடியாத ஓர் அரசாங்கத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அதை பல வழிகளில் அவர்களிடம் நியாயங்காட்டிப் பேசலாம். உதாரணமாக, புவி ஈர்ப்பு விசையை காண முடியாது, ஆனால் அது நம் வாழ்க்கையில் பலமாக செல்வாக்கு செலுத்துகிறது. புவி ஈர்ப்பு விதியை உருவாக்கியவரை நாம் பார்க்க முடியாது, ஆனால் அவர் மகா சக்தி படைத்தவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவரை ‘நித்திய ராஜா’ என பைபிள் குறிப்பிடுகிறது. (1 தீ. 1:17) அல்லது ஒரு பெரிய நாட்டில் வாழும் அநேகர் தலைநகரையோ ஆட்சியாளரையோ நேரில் பார்த்திருக்க மாட்டார்கள் என நீங்கள் சொல்லலாம். இந்த விஷயங்களை எல்லாம் செய்திகள் வாயிலாகவே அறிந்துகொள்கின்றனர். அது போலவே, 2,200-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்படும் பைபிள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சொல்கிறது; இந்த ராஜ்யத்தை ஆளும் அதிகாரம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இந்த ராஜ்யம் என்ன செய்து வருகிறது போன்றவற்றை அது நமக்கு தெரிவிக்கிறது. வேறெந்த பத்திரிகைகளையும்விட அதிக மொழிகளில் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம், அதன் அட்டைப் பக்கம் குறிப்பிடுகிறபடி, “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது;” அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அந்த ராஜ்யம் என்னவென்று ஜனங்களுக்கு புரியவைக்க, பொதுவாக அரசாங்கத்திடம் அவர்கள் எதிர்பார்க்கும் காரியங்களை நீங்கள் குறிப்பிடலாம்; அவற்றில் சில, பொருளாதார பாதுகாப்பு, சமாதானம், குற்றச்செயலிலிருந்து விடுதலை, எல்லா இனத்தவரையும் சமமாக பாவிப்பது, கல்வி, உடல்நலம். கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாகவே இவையும் மனிதரின் மற்றெல்லா நியாயமான ஆசைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று சொல்லுங்கள்.—சங். 145:16.
இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆளுகை புரியும் அந்த ராஜ்யத்தில் பிரஜைகளாக இருப்பதற்கு ஜனங்களின் ஆவலைத் தூண்டுங்கள். பரலோக அரசராக அவர் செய்யப்போகிற காரியங்களுக்கு முன்நிழலாக அவர் செய்த அற்புதங்களைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அவர் காட்டிய இனிய பண்புகளைப் பற்றி எப்பொழுதும் பேசுங்கள். (மத். 8:2, 3; 11:28-30) அவர் நமக்காக மரித்ததையும் அதற்குப்பின் கடவுள் அவரை அழியாமையுடையவராய் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பியதையும் விளக்குங்கள். அங்கிருந்தே அவர் ராஜாவாக ஆளுகிறார்.—அப். 2:29-35.
கடவுளுடைய ராஜ்யம் இப்பொழுது பரலோகத்திலிருந்து ஆளுகிறது என்பதை வலியுறுத்துங்கள். என்றாலும், அப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக ஜனங்கள் எதைக் காண எதிர்பார்க்கிறார்களோ அதைக் காண்பதில்லை என்பதை அறிந்திருங்கள். இதை மனதிற்கொண்டு, இயேசு கிறிஸ்து அதற்கு அத்தாட்சியாக சொன்னவற்றை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என கேளுங்கள். மத்தேயு 24-ம் அதிகாரம், மாற்கு 13-ம் அதிகாரம் அல்லது லூக்கா 21-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டு அடையாளத்தின் சில அம்சங்களை சிறப்பித்துக் காட்டுங்கள். பின்பு, கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டதால் பூமியில் ஏன் இப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்பட வேண்டும் என கேளுங்கள். வெளிப்படுத்துதல் 12:7-10, 12 வசனங்களுக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள்.
கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்கிறது என்பதற்கான கண்கூடான அத்தாட்சிக்கு உதாரணமாக மத்தேயு 24:14-ஐ வாசித்து, இப்பொழுது நடைபெற்று வரும் உலகளாவிய பைபிள் கல்வித் திட்டத்தைப் பற்றி விவரியுங்கள். (ஏசா. 54:13) பைபிள் அடிப்படையில், இலவசமாக நடத்தப்படும் பல்வேறு பள்ளிகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் பயனடைந்து வருவதைப் பற்றி சொல்லுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தைத் தவிர, 230-க்கும் மேலான நாடுகளில் தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும் நாம் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதையும் விளக்குங்கள். எந்த மனித அரசாங்கத்தால் இப்படிப்பட்ட விரிவான கல்வியை அதன் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ஜனங்களுக்கும் வழங்க முடியும்? அந்தக் கல்வி மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் நல்ல பாதிப்பைக் காண ராஜ்ய மன்றத்திற்கும் மாநாடுகளுக்கும் வரும்படி ஜனங்களை அழையுங்கள்.—ஏசா. 2:2-4; 32:1, 17; யோவா. 13:35.
ஆனால் தன்னுடைய வாழ்க்கையை இது எப்படி பாதிக்கிறது என்பதை வீட்டுக்காரர் அறிந்துகொள்வாரா? கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாகும் வாய்ப்பு அனைவருக்கும் திறந்திருப்பதைப் பற்றி பேசவே சந்திக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சாதுரியமாக சொல்லுங்கள். அந்த வாய்ப்பை எப்படி பெறலாம்? கடவுள் எதிர்பார்ப்பவற்றை கற்றுக்கொண்டு இப்பொழுதே அதற்கிசைய வாழ்வதன் மூலம் பெறலாம்.—உபா. 30:19, 20; வெளி. 22:17.
ராஜ்யத்தை முதலிடத்தில் வைக்க பிறருக்கு உதவுதல். ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்ட பிறகும் ஒருவர் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் உள்ளன. அவர் கடவுளுடைய ராஜ்யத்திற்கு தன் வாழ்க்கையில் எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்? ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை . . . தொடர்ந்து தேடும்படி’ இயேசு தம் சீஷர்களை உந்துவித்தார். (மத். 6:33, NW) அதைச் செய்ய சக கிறிஸ்தவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? நாமே அதற்கு சிறந்த முன்மாதிரி வைப்பதன் மூலமும், என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பேசுவதன் மூலமும் உதவலாம். சில சமயங்களில், அதற்கான சில வாய்ப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறாரா என கேட்பதன் மூலமும், மற்றவர்கள் இதற்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உதவலாம். யெகோவா மீதுள்ள அன்பை ஆழமாக்குவதற்கு உதவும் விதத்தில் பைபிளிலுள்ள பதிவுகளைப் பற்றி பேசுவதன் மூலம் உதவலாம். ராஜ்யம் எவ்வளவு நிஜமானது என்பதை அழுத்திக் காட்டுவதன் மூலம் உதவலாம். ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கும் வேலை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறுவதன் மூலம் உதவலாம். என்ன செய்ய வேண்டும் என சொல்வதால் அல்ல, ஆனால் அதைச் செய்வதற்கான ஆவலைத் தூண்டுவதாலேயே பெரும்பாலும் அதிக பலன் கிடைக்கிறது.
நாம் அனைவரும் அறிவிக்க வேண்டிய அந்தச் செய்தி யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் ராஜ்யத்திடமுமே கவனத்தை முக்கியமாக திருப்புகிறது என்பதில் சந்தேகமில்லை. இதைப் பற்றிய இன்றியமையா சத்தியங்களை சாட்சிபகரும் வேலையிலும் சபையிலும் நம் வாழ்க்கையிலும் முக்கியப்படுத்திக் காட்ட வேண்டும். அவ்வாறு செய்யும்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து உண்மையிலேயே பயனடைகிறோம் என்பதை காட்டுகிறோம்.