அதிகாரம் இருபத்து ஒன்று
யெகோவாவின் நோக்கம் மகத்தான வெற்றி அடைகிறது
புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அனைத்தும் ஒரே மெய்க் கடவுளை வணங்குவதில் ஒன்றுபட வேண்டும், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்—இதுவே யெகோவாவின் அன்பான நோக்கம். நீதியை நேசிப்போரின் உள்ளார்ந்த ஆசையும் அதுவே.
2 யெகோவா தமது சிருஷ்டிப்பின் வேலையை துவங்கியபோது இந்த மகத்தான நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார். அவர் முதலில் தம் குமாரனை படைத்தார்; அந்தக் குமாரன் உயிர்த்தெழுதல் முதற்கொண்டு ‘[கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாய் இருந்து வருகிறார்.’ (எபிரெயர் 1:1-3) இவர் கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டதால் தனித்தன்மை வாய்ந்தவராக இருந்தார். அதன் பிறகு மற்ற அனைவரும் இந்தக் குமாரன் மூலமே படைக்கப்பட்டனர்: முதலாவதாக பரலோகத்திலுள்ள தூதர்கள், அடுத்து பூமியிலுள்ள மனிதர்கள். (யோபு 38:7; லூக்கா 3:38) இவர்கள் அனைவரும் ஒரே சர்வலோக குடும்பத்தாராக இருந்தார்கள். சர்வலோக பேரரசராகிய யெகோவாவே இவர்கள் அனைவருக்கும் கடவுளும் அன்பான தகப்பனும் ஆவார்.
3 வேண்டுமென்றே பாவம் செய்ததால் நம் முதல் மனித பெற்றோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது கடவுள் அவர்களை ஏதேனிலிருந்து துரத்தி, கைவிட்டு விட்டார். அவரது சர்வலோக குடும்பத்தின் அங்கத்தினராக இருக்கும் வாய்ப்பையும் அவர்கள் இழந்தனர். (ஆதியாகமம் 3:22-24; உபாகமம் 32:4, 5) நாம் அனைவரும் அவர்களுடைய சந்ததியாராக இருப்பதால் பாவம் செய்யும் மனச்சாய்வுடன் பிறந்திருக்கிறோம். ஆனால், ஆதாம் ஏவாளின் சந்ததியாரில் சிலர் நீதியை நேசிப்பார்கள் என்பதை யெகோவா அறிந்திருந்தார். எனவே, இவர்கள் ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு’ அன்புடன் ஏற்பாடு செய்தார்.—ரோமர் 8:20, 21.
இஸ்ரவேலர் தயவான நிலையை இழக்கிறார்கள்
4 ஆதாமின் படைப்புக்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பின் குறிப்பிட்ட சிலர் தம்முடன் விசேஷித்த உறவை அனுபவிப்பதற்கான சிலாக்கியத்தை யெகோவா அளித்தார். அவர் பூர்வ இஸ்ரவேலரை தமது ஜனமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நியாயப்பிரமாண சட்டத்தையும் கொடுத்தார். (ஆதியாகமம் 12:1, 2) அவர்களை ஒரு தேசமாக உருவாக்கி, தம்முடைய நோக்கத்தை செயல்படுத்த பயன்படுத்தினார். (உபாகமம் 14:1, 2; ஏசாயா 43:1) என்றாலும், அவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் கட்டுக்குள் இருந்தார்கள்; ஆகவே ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் பெற்றிருந்த மகிமையான சுயாதீனத்தை அவர்கள் அனுபவிக்கவில்லை.
5 இருந்தாலும், இஸ்ரவேலர் கடவுளுடைய தயவில் இருந்தனர். யெகோவாவை தங்களுடைய பிதாவாக மதித்து, அவருடைய நோக்கத்திற்கு இசைய வாழும் பொறுப்பும்கூட அவர்களுக்கு இருந்தது. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்தினார். (மத்தேயு 5:43-48) இருந்தாலும், அந்த இஸ்ரவேலர் அதைச் செய்ய தவறினர். “ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன்” என அந்த யூதர்கள் உரிமைபாராட்டினாலும் அவர்களுடைய செயல்களும் மனப்பான்மையும் அதைப் பொய்யாக்கியதாக இயேசு அறிவித்தார். (யோவான் 8:41, 44, 47) பொ.ச. 33-ல் கடவுள் அந்த நியாயப்பிரமாண சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்; இஸ்ரவேலர் அவருடன் வைத்திருந்த விசேஷித்த உறவும் அத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால், ஜனங்கள் இனி ஒருபோதும் கடவுளுடன் தயவான உறவை அனுபவிக்க முடியாதென இது அர்த்தப்படுத்தியதா?
‘பரலோகத்திலிருக்கிறவைகளை’ கூட்டிச் சேர்த்தல்
6 மனிதரில் சிலர் கடவுளுடன் விசேஷித்த உறவை அனுபவிக்க முடியும் என அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, விசுவாசத்தைக் காண்பிப்பவர்கள் தம்முடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாவதற்கான யெகோவாவின் ஏற்பாடு சம்பந்தமாக பவுல் இவ்வாறு எழுதினார்: “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி [“நிர்வாகத்தின்படி,” NW] பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு [கடவுள்] அறிவித்தார்.” (எபேசியர் 1:9, 10) இந்த ‘நிர்வாகம்’ இயேசு கிறிஸ்துவை மையமாக கொண்டது. இவர் மூலமாக மனிதர் கடவுளுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களில் குறைந்த எண்ணிக்கையானோருக்கு பரலோகத்தில் வாழும் எதிர்பார்ப்பு உள்ளது. பெரும் எண்ணிக்கையானோர் பூமியில் என்றென்றும் வாழ்வர்.
7 முதலாவதாக, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, ‘பரலோகத்திலிருக்கிறவைகளிடம்,’ அதாவது கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் உடன் சுதந்திரவாளிகளாக இருக்கப் போகிறவர்களிடம் கவனம் செலுத்தப்பட்டது. இயேசுவுடைய பலியின் மதிப்பில் வைத்த விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் நீதிமான்கள் என கடவுளால் அறிவிக்கப்பட்டனர். (ரோமர் 5:1, 2) காலப்போக்கில் யூதர்களும் புறதேசத்தினரும் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; ‘பரலோகத்திலிருக்கிறவைகள்’ 1,44,000 பேராவர். (கலாத்தியர் 3:26-29; வெளிப்படுத்துதல் 14:1) அவர்களில் மீதிப்பேர் மட்டும் இன்னும் பூமியில் இருக்கிறார்கள்.
‘பூலோகத்திலிருக்கிறவைகளைக்’ கூட்டிச் சேர்த்தல்
8 அதே நிர்வாகம், ‘பூலோகத்திலிருக்கிறவைகளையும்’ கூட்டிச் சேர்க்கிறது. இன்று லட்சக்கணக்கானோர், பூமியில் நித்தியமாய் வாழும் எதிர்பார்ப்புடன் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். ராஜ்ய சுதந்திரவாளிகளில் மீதிப்பேருடன் ஒன்றுபட்டவர்களாக இவர்கள் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துகிறார்கள், அவருடைய வணக்கத்தை மேன்மைப்படுத்துகிறார்கள். (ஏசாயா 2:2, 3; செப்பனியா 3:9) தங்களுடைய உயிருக்கு ஊற்றுமூலர் யெகோவாவே என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் அவரை “பிதா” எனவும் அழைக்கிறார்கள். அதோடு, இயேசு சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைப்பதால் அவர்கள் அவருக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை அனுபவிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆனால், அவர்கள் இன்னும் அபூரணராக இருப்பதால், கடவுளுடைய பிள்ளைகளாக முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படுவது எதிர்காலத்தில்தான்.
9 பூமியில் வாழும் எதிர்பார்ப்புடைய இவர்கள், மனிதர் ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படும்’ அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். (ரோமர் 8:20) கிறிஸ்துவும் அவரது பரலோக சேனைகளும் அர்மகெதோன் மூலம் மிகுந்த உபத்திரவத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகே இந்த விடுதலை ஆரம்பமாகும். இது, சாத்தானிய பொல்லாத ஒழுங்குமுறை முழுவதும் அழிக்கப்படும் என்பதையும் அதைத் தொடர்ந்து கிறிஸ்துவின் ஆயிர வருட ராஜ்ய ஆட்சியின் ஆசீர்வாதங்கள் பொழியும் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 19:17-21; 20:6.
10 “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின” என்று பரலோகத்திலிருக்கிற யெகோவாவின் ஊழியர்கள் மகிழ்ச்சியோடு அறிவிக்க, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களும் அவர்களுடன் சேர்ந்து குரலெழுப்புகையில், அது எவ்வளவாய் மெய்சிலிர்க்க வைக்கும்! (வெளிப்படுத்துதல் 15:3, 4) ஆம், யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் ஒரே மெய்க் கடவுளை வணங்குவதில் ஒன்றுபடுவார்கள். மரித்தோரும் உயிர்த்தெழுப்பப்பட்டு, யெகோவாவை துதிப்பதில் தங்கள் குரலை எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கப்படுவார்கள்.—அப்போஸ்தலர் 24:15.
எதிர்காலத்தில் மகத்தான விடுதலை!
11 மிகுந்த உபத்திரவமும் அதன் உச்சக்கட்டமான அர்மகெதோனும், இந்தப் பூமியிலிருந்து துன்மார்க்கத்தை ஒழித்துக்கட்டிய பின்பு, பிசாசாகிய சாத்தான் இனிமேலும் ‘இப்பிரபஞ்சத்தின் தேவனாக’ இரான். யெகோவாவை வணங்குபவர்கள் இனிமேலும் சாத்தானின் கீழ்த்தரமான செல்வாக்கை எதிர்த்துப் போராட வேண்டியிருக்காது. (2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 20:1, 2) பொய் மதம் யெகோவாவை இனிமேலும் தவறாக பிரதிநிதித்துவம் செய்யாது. மனித சமுதாயத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தாது. மெய்க் கடவுளின் ஊழியர்கள் இனிமேலும் மனித அதிகாரிகளுடைய கைகளில் அநியாயத்தையோ சுரண்டலையோ அனுபவிக்க மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட அற்புதமான விடுதலை!
12 “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”யான இயேசு தம் பலியின் மதிப்பின் அடிப்படையில் மனிதகுலத்தின் பாவங்களை நீக்கிப் போடுவார். (யோவான் 1:29) பூமியில் இருக்கையில் இயேசு ஒருவனுடைய பாவங்களை மன்னித்தபோது, அதற்கு நிரூபணமாக அவனை அவர் சுகப்படுத்தினார். (மத்தேயு 9:1-7; 15:30, 31) அதே விதமாகவே, கடவுளுடைய ராஜ்யத்தின் பரலோக அரசராக கிறிஸ்து இயேசு குருடர், ஊமையர், செவிடர், உடல் ஊனமுற்றோர், மனநோயாளிகள் ஆகியோரையும் வேறு பல சுகவீனங்களால் அவதிப்படுவோரையும் அற்புதமாய் சுகப்படுத்துவார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) கீழ்ப்படிதலுள்ள அனைவரின் ‘பாவப்பிரமாணமும்’ செல்லுபடியற்றதாகிவிடும். அதன் மூலம் அவர்களுடைய சிந்தைகளும் செயல்களும் தங்களுக்கும் கடவுளுக்கும் பிரியமானதாக இருக்கும். (ரோமர் 7:21-23) ஆயிரம் ஆண்டு முடிவுக்குள் அவர்கள் ஒரே மெய்க் கடவுளின் ‘சாயலிலும் ரூபத்திலும்’ பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்படுவர்.—ஆதியாகமம் 1:26.
13 மனிதகுலத்தை பரிபூரண நிலைக்குக் கொண்டு வந்த பின்பு கிறிஸ்து தமக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் தம் பிதாவிடத்தில் ஒப்படைப்பார்; அப்போது அவர் ‘சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லா சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியுள்ளது.’ (1 கொரிந்தியர் 15:24, 25) ராஜ்யத்தின் ஆயிர வருட ஆட்சி அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியிருக்கும்; ஆகவே, யெகோவாவுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே இனிமேலும் ஒரு துணை அரசாங்கத்திற்கான அவசியம் இராது. பாவமும் மரணமும் முற்றிலும் நீக்கப்பட்டு மனிதகுலமும் மீட்கப்பட்டிருக்கும் என்பதால் மீட்பராக இயேசு வகித்த பாகத்திற்கான தேவையும் அத்துடன் முடிவுறும். அதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”—1 கொரிந்தியர் 15:28.
14 அதைத் தொடர்ந்து, ஒரே மெய்க் கடவுளுக்கு நித்திய காலமாய் சேவை செய்ய தாங்கள் தெரிவு செய்திருப்பதை நிரூபிக்க, பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்பட்ட மனிதகுலத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆகவே, அந்தப் பரிபூரண மனித குலத்தை யெகோவா தம்முடைய பிள்ளைகளாக முழுமையாக தத்தெடுப்பதற்கு முன்பு அவர்களை ஒரு கடைசி சோதனைக்கு உட்படுத்துவார். சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். உண்மையிலேயே யெகோவாவை நேசிப்போருக்கு இது எவ்விதத்திலும் நித்திய தீங்கை விளைவிக்காது. ஆனால், உண்மை பற்றுறுதி அற்றவர்களாக, யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போவதற்கு தங்களை அனுமதிப்போர், அந்த முதல் கலகக்காரனோடும் அவனுடைய பேய்களோடும் சேர்ந்து என்றென்றைக்குமாக அழிக்கப்படுவர்.—வெளிப்படுத்துதல் 20:7-10.
15 அந்தக் கடைசி சோதனையின்போது கடவுளுடைய அரசுரிமையை ஆதரிக்கும் பரிபூரண மனிதர் அனைவரையும் யெகோவா தம்முடைய பிள்ளைகளாக தத்தெடுப்பார். அது முதற்கொண்டு, கடவுளுடைய சர்வலோக குடும்பத்தின் பாகமாக, கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை முழு அளவில் அவர்கள் அனுபவித்து மகிழ்வர். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் அனைத்தும் அவரை ஒரே மெய்க் கடவுளாக வணங்குவதில் மறுபடியும் ஒன்றுபடுவர். யெகோவாவின் நோக்கம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும்! அந்தக் குதூகலமான, நித்தியமான, சர்வலோக குடும்பத்தின் பாகமாக இருக்க உங்களுக்கு விருப்பமா? அப்படியானால், 1 யோவான் 2:17-ல் பைபிள் என்ன சொல்கிறது என்பதற்கு செவிசாய்க்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”
மறுபார்வை
• ஏதேனில் கலகம் தலைதூக்குவதற்கு முன்பு, யெகோவாவை வணங்கிய அனைவரும் அவருடன் என்ன உறவை அனுபவித்தார்கள்?
• கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன பொறுப்பு உள்ளது?
• கடவுளுடைய பிள்ளைகளாக ஆகப்போகிறவர்கள் யார்? ஒன்றுபட்ட வணக்கம் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கத்தோடு இது எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது?
[கேள்விகள்]
1, 2. (அ) புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கம் என்ன? (ஆ) கடவுளுடைய வணக்கத்தாரின் ஒன்றுபட்ட குடும்பத்தில் யாரெல்லாம் உட்பட்டனர்?
3. (அ) நம் முதல் பெற்றோரிடமிருந்து நாம் அனைவரும் எதைச் சுதந்தரித்திருக்கிறோம்? (ஆ) ஆதாமின் சந்ததியாருக்கு யெகோவா அன்புடன் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?
4. பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா என்ன சிலாக்கியத்தை அளித்தார்?
5. கடவுளுடன் அனுபவித்த தயவான உறவை இஸ்ரவேலர் எப்படி இழந்தனர்?
6. எபேசியர் 1:9, 10-ல் பவுல் குறிப்பிட்ட அந்த ‘நிர்வாகத்தின்’ நோக்கம் என்ன?
7. ‘பரலோகத்திலிருக்கிறவைகள்’ என்பது யார்?
8. ‘பூலோகத்திலிருக்கிறவைகள்’ என்பது யார், யெகோவாவுடன் அவர்கள் என்ன உறவை அனுபவிக்கிறார்கள்?
9. ரோமர் 8:20 மனிதகுலத்திற்கு என்ன வாக்குறுதியை அளிக்கிறது?
10. யெகோவாவின் ஊழியர்கள் என்ன துதிப் பாடலை பாடுவர்?
11. மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் எப்பேர்ப்பட்ட அற்புதமான விடுதலையை அனுபவித்து மகிழ்வர்?
12. பாவத்திலிருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் அனைவரும் எவ்வாறு விடுவிக்கப்படுவர்?
13. ஆயிர வருட ஆட்சியின் முடிவில் கிறிஸ்து என்ன நடவடிக்கை எடுப்பார், அதன் விளைவு என்ன?
14. பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்பட்ட மனிதர் எதற்கு உட்படுத்தப்படுவர், ஏன்?
15. யெகோவாவின் புத்திக்கூர்மையுள்ள படைப்புகளிடையே மீண்டும் என்ன நிலை உருவாகும்?
[பக்கம் 190-ன் படம்]
கீழ்ப்படிதலுள்ள மனிதர் ஓர் உலகளாவிய பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வர்