அதிகாரம் 12
ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்
யெகோவா தேவனோடு நீ பேசுவாயா?— நீ பேச வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீ கடவுளோடு பேசும்போது, ஜெபம் செய்கிறாய் என்று அர்த்தம். இயேசு பரலோகத்திலிருக்கும் தன் அப்பாவோடு அடிக்கடி பேசினார். சிலசமயம் கடவுளோடு பேசும்போது தனியாக இருக்க விரும்பினார். ஒருமுறை ‘அவர் ஜெபம் செய்வதற்காக மலைமேல் ஏறினார். இருட்டாகிவிட்ட போதும் அவர் அங்கே தனியாக இருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 14:23.
யெகோவாவிடம் தனியாக ஜெபம் செய்வதற்கு நீ எங்கே போகலாம்?— ராத்திரி படுப்பதற்கு முன் நீ தனியாக யெகோவாவிடம் பேசலாம். ‘நீங்கள் ஜெபம் பண்ணும்போது, உங்களுடைய அறைக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டு, உங்கள் தந்தையிடம் பேசுங்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:6) ஒவ்வொரு நாளும் தூங்கப் போவதற்கு முன் நீ யெகோவாவிடம் ஜெபம் செய்கிறாயா?— நீ ஜெபம் செய்ய வேண்டும்.
இயேசு தனியாக இருந்தபோதும் . . . மற்றவர்களோடு இருந்தபோதும் ஜெபம் செய்தார்
மற்றவர்களுடன் இருக்கும் போதும் இயேசு ஜெபம் செய்தார். அவருடைய நண்பர் லாசரு இறந்தபோது, அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் முன் இயேசு ஜெபம் செய்தார். (யோவான் 11:41, 42) தன் நண்பர்களோடு கூட்டம் நடத்திய சமயங்களில்கூட இயேசு ஜெபம் செய்தார். ஜெபம் செய்யப்படும் கூட்டங்களுக்கு நீயும் செல்கிறாயா?— அங்கே பொதுவாக வயதில் பெரியவர் ஒருவர் ஜெபம் செய்வார். அவர் சொல்வதை கவனமாகக் கேள். ஏனென்றால் உனக்காக அவர் கடவுளிடம் பேசுகிறார். அதோடு கவனமாகக் கேட்டால்தான் உன்னால் “ஆமென்” என்று சொல்ல முடியும். ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்று சொல்வதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா?— உனக்கு அந்த ஜெபம் பிடித்திருக்கிறது என்பதே அதன் அர்த்தம். அதை நீ ஏற்றுக்கொள்வதையும், உன்னுடைய ஜெபமும் அதுதான் என்று சொல்வதையும் அர்த்தப்படுத்துகிறது.
சாப்பிடும் நேரங்களில்கூட இயேசு ஜெபம் செய்தார். உணவு கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னார். நீயும் சாப்பிடுவதற்கு முன் எப்போதும் ஜெபம் செய்கிறாயா?— சாப்பிடுவதற்கு முன் எப்போதுமே யெகோவாவுக்கு நன்றி சொல்வது நல்லது. மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது வேறு யாராவது ஜெபம் செய்யலாம். ஆனால் நீ தனியாக சாப்பிட்டால்? அல்லது யெகோவாவுக்கு நன்றி சொல்லாத சிலரோடு சேர்ந்து சாப்பிட்டால்? அப்போது என்ன செய்வாய்?— அப்போது நீ தனியாக ஜெபம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும்.
நாம் எப்போதும் சத்தமாக ஜெபிக்க வேண்டுமா? அல்லது மனசுக்குள் ஜெபம் செய்தாலே யெகோவாவுக்குக் கேட்குமா?— பதிலை தெரிந்துகொள்ள, நெகேமியா என்பவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். அவர் யெகோவாவை வணங்கியவர். பெர்சிய நாட்டு ராஜாவான அர்தசஷ்டாவின் மாளிகையில் வேலை செய்தவர். ஒருநாள் நெகேமியா மிகவும் சோகமாக இருந்தார். ஏனென்றால் எருசலேமை சுற்றியிருந்த சுவர்கள் இடிந்து கிடந்ததை அவர் கேள்விப்பட்டார். எருசலேம்தான் அவரது ஜனங்களுடைய முக்கிய நகரமாக இருந்தது.
ஏன் சோகமாக இருக்கிறாய் என்று ராஜா நெகேமியாவைக் கேட்டார். உடனே நெகேமியா மனசுக்குள் ஜெபம் செய்தார். பிறகு சோகமாக இருப்பதற்கான காரணத்தை சொன்னார். அதோடு, எருசலேமுக்குச் சென்று சுவர்களை கட்ட அவரிடம் அனுமதியும் கேட்டார். என்ன நடந்தது?—
நெகேமியாவின் ஜெபத்திற்கு கடவுள் பதிலளித்தார். எருசலேமுக்குப் போக ராஜா அனுமதி கொடுத்தார்! அதுமட்டுமல்ல, சுவர்களைக் கட்டுவதற்கு நிறைய மரங்களைக் கொடுத்து அனுப்பினார். ஆகவே நாம் மனசுக்குள் ஜெபம் செய்தால்கூட கடவுள் நிச்சயமாக அதைக் கேட்பார்.—நெகேமியா 1:2, 3; 2:4-8.
இதைக் கொஞ்சம் யோசித்துப் பார். நாம் தலை குனிந்தபடி ஜெபம் செய்ய வேண்டுமா? அல்லது மண்டியிட்டு ஜெபம் செய்ய வேண்டுமா? நீ என்ன நினைக்கிறாய்?— இயேசு சிலசமயம் மண்டியிட்டு ஜெபம் செய்தார். மற்ற சமயங்களில் நின்றுகொண்டு ஜெபம் செய்தார். சில தடவை மேலே அண்ணாந்து பார்த்து ஜெபம் செய்தார். லாசருவுக்காக ஜெபம் செய்தபோது அப்படித்தான் செய்தார்.
இது எதைக் காட்டுகிறது?— எப்படிப்பட்ட நிலையில் ஜெபம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல என்று காட்டுகிறது. சிலசமயம் தலை குனிந்து கண்களை மூடுவது சரியாக இருக்கும். மற்ற சமயங்களில் இயேசுவைப் போல் மண்டியிட்டு ஜெபம் செய்ய நீ விரும்பலாம். பகலோ இரவோ எந்த நேரத்திலும் நாம் கடவுளிடம் ஜெபம் செய்யலாம், அவர் அதைக் கேட்பார் என்பதை மறக்காதே. யெகோவா நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்பதை மனதார நம்புவதுதான் முக்கியம். யெகோவா உன் ஜெபங்களைக் கேட்கிறார் என்று நீ நம்புகிறாயா?—
யெகோவாவிடம் ஜெபத்தில் நாம் என்ன சொல்லலாம்?— நீ ஜெபம் செய்யும்போது கடவுளிடம் என்ன சொல்வாய்?— யெகோவா நமக்கு நல்ல நல்லதாக எத்தனையோ தருகிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம் அல்லவா?— நாம் சாப்பிடும் உணவிற்காக நன்றி சொல்லலாம். ஆனால் நீலநிற வானம், பச்சைப்பசேல் என்ற மரங்கள், அழகான பூக்கள் போன்றவற்றிற்காக நீ நன்றி சொல்லியிருக்கிறாயா?— அதையெல்லாம் அவர் அல்லவா உண்டாக்கினார்!
எப்படி ஜெபிப்பது என்று கற்றுக்கொடுக்கும்படி இயேசுவின் நண்பர்கள் ஒருமுறை அவரிடம் கேட்டார்கள். பெரிய போதகர் அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுத்தார். என்னென்ன முக்கியமான காரியங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதெல்லாம் உனக்குத் தெரியுமா?— உன் பைபிளை எடுத்து மத்தேயு 6-ஆம் அதிகாரத்திற்குத் திருப்பு. 9-13 வசனங்களில் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம் இருக்கிறது. அதைத்தான் பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என்று பலர் சொல்கிறார்கள். இப்போது அதை நாம் சேர்ந்து வாசிக்கலாம்.
முதலாவதாக, கடவுளுடைய பெயரைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டுமென்று இயேசு சொல்லியிருக்கிறார். கடவுளுடைய பெயர் பரிசுத்தமாக வேண்டும் என்று ஜெபிக்க சொன்னார். கடவுளுடைய பெயர் என்ன?— ஆமாம், யெகோவா என்பதுதான் அவரது பெயர். நாம் அந்தப் பெயரை நேசிக்க வேண்டும்.
இரண்டாவதாக, கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டுமென்று ஜெபிக்க சொன்னார். இந்த ராஜ்யம் முக்கியமானது. ஏனென்றால் அது பூமியில் சமாதானத்தைக் கொண்டுவந்து, அதை பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றும்.
மூன்றாவதாக, கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுகிறது போல் பூமியிலும் செய்யப்பட வேண்டும் என்று இயேசு ஜெபிக்க சொன்னார். நாம் இதற்காக ஜெபித்தால், கடவுளுடைய விருப்பப்படி செய்யவும் வேண்டும்.
அடுத்ததாக, தினந்தோறும் நமக்கு தேவைப்படும் உணவிற்காக ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். மேலும், தப்பு செய்யும்போது அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லித் தந்தார். நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆனால் அவர் நம்மை மன்னிக்க வேண்டும் என்றால், நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் உனக்கு ஏதாவது கெட்டது செய்யும்போது அவர்களை மன்னிப்பது உனக்கு சுலபமாக இருக்கிறதா?—
கடைசியாக, பொல்லாதவனாகிய சாத்தானிடமிருந்து நம்மை காப்பாற்றுமாறு யெகோவா தேவனிடம் ஜெபிக்க வேண்டுமென இயேசு சொன்னார். ஆகவே இந்த நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்காகவும் நாம் கடவுளிடம் ஜெபம் செய்யலாம்.
யெகோவா நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்று நம்ப வேண்டும். உதவியைக் கேட்பது மட்டுமல்லாமல் எப்போதுமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் உண்மையோடு ஜெபம் செய்யும்போது அவர் சந்தோஷப்படுகிறார். சரியானதை அவரிடம் கேட்கும்போதும் சந்தோஷப்படுகிறார். அவற்றை நிச்சயம் நமக்குக் கொடுப்பார். நீ இதை நம்புகிறாயா?—
சில வசனங்கள் ஜெபத்தைப் பற்றி நல்ல ஆலோசனைகளை தருகின்றன. அதைப் படிக்கலாமா? ரோமர் 12:12; 1 பேதுரு 3:12; 1 யோவான் 5:14.