அதிகாரம் 44
நம் நண்பர்கள் கடவுளை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்
நாம் யாரோடு பேசவும் நேரம் செலவிடவும் விரும்புகிறோமோ அவர்களே நம் நண்பர்கள். ஆனால் நாம் சரியான நண்பர்களை வைத்திருப்பது முக்கியம். யார் நம்முடைய மிகச் சிறந்த நண்பராக இருக்க முடியும் என்று நினைக்கிறாய்?— ஆமாம், யெகோவா தேவன்தான்.
நம்மால் உண்மையிலேயே கடவுளுடைய நண்பர்களாக இருக்க முடியுமா?— ரொம்ப காலத்திற்கு முன்பு வாழ்ந்த ஆபிரகாம் என்பவர் ‘யெகோவாவின் நண்பராக’ இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:23) ஏன் என்று உனக்குத் தெரியுமா?— ஆபிரகாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததாலேயே அவருடைய நண்பராக இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. கஷ்டமான ஒன்றை செய்யும்படி கேட்கப்பட்ட போதுகூட அவர் கீழ்ப்படிந்தார். ஆகவே நாம் யெகோவாவின் நண்பராக இருப்பதற்கு, அவருக்குப் பிரியமானதை செய்ய வேண்டும். ஆபிரகாம் அதைத்தான் செய்தார், பெரிய போதகரும் எப்போதுமே அதைத்தான் செய்திருக்கிறார்.—ஆதியாகமம் 22:1-14; யோவான் 8:28, 29; எபிரெயர் 11:8, 17-19.
‘நான் கட்டளையிடுவதை எல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்’ என்று இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொன்னார். (யோவான் 15:14) இயேசு மக்களுக்கு சொன்ன எல்லா விஷயங்களுமே கடவுள் அவருக்கு சொன்னதுதான். ஆகவே கடவுள் சொல்வதை செய்பவர்களே தன் நண்பர்கள் என இயேசு அர்த்தப்படுத்தினார். உண்மையில் அவருடைய நண்பர்கள் எல்லாருமே கடவுளை நேசித்தார்கள்.
பெரிய போதகரின் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவருடைய அப்போஸ்தலர்களாக இருந்தனர். அவர்களுடைய படங்களை இந்தப் புத்தகத்தில் 75-ஆம் பக்கத்தில் நீ பார்க்கலாம். அவரோடு ஊர் ஊராக சென்று பிரசங்கம் செய்ய உதவி செய்தார்கள். இயேசு இவர்களோடுதான் நிறைய நேரம் செலவிட்டார். அவர்கள் ஒன்றுசேர்ந்து சாப்பிட்டார்கள். ஒன்றுசேர்ந்து கடவுளைப் பற்றி பேசினார்கள். மற்ற காரியங்களையும் சேர்ந்து செய்தார்கள். ஆனால் இயேசுவுக்கு இன்னும் நிறைய நண்பர்களும் இருந்தார்கள். அவர்களோடு தங்கி சந்தோஷமாக நேரம் செலவிட்டார்.
இயேசு முக்கியமாக ஒரு குடும்பத்தாரோடு தங்க விரும்பினார். அவர்கள் எருசலேமைத் தொட்டாற்போலவே இருந்த பெத்தானியா என்ற சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் குடும்பத்தாரை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— அவர்கள் மரியாள், மார்த்தாள், அவர்களுடைய சகோதரர் லாசரு ஆகியவர்களே. லாசருவை நண்பன் என இயேசு குறிப்பிட்டார். (யோவான் 11:1, 5, 11) இயேசு ஏன் இந்தக் குடும்பத்தாரை நேசித்தார், ஏன் அவர்களோடு தங்க விரும்பினார் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் யெகோவாவை நேசித்து அவரை சேவித்து வந்தார்கள்.
ஆனால் கடவுளை சேவிக்காதவர்கள் மீது இயேசு அன்பு காட்டவில்லை என்று அர்த்தமல்ல. அவர்களிடமும் அவர் அன்பு காட்டினார். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களோடு சாப்பிடவும் செய்தார். இதனால் இயேசு, ‘வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பர்’ என்று சிலர் சொன்னார்கள். (மத்தேயு 11:19) ஆனால் அவர்கள் வாழ்ந்து வந்த விதம் இயேசுவுக்கு பிடித்திருந்ததால் அவர்களுடைய வீடுகளுக்கு போனார் என்று சொல்ல முடியாது. யெகோவாவைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்காகவே சென்றார். இதுதான் உண்மை. கெட்ட காரியங்களை விட்டுவிட்டு கடவுளை சேவிக்க அவர்களுக்கு உதவவே முயற்சி செய்தார்.
ஒருநாள் எரிகோ ஊரில் இது நடந்தது. இயேசு இந்த ஊர் வழியாக எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் சகேயு என்ற ஒருவன் இருந்தான். அவன் இயேசுவைப் பார்க்க விரும்பினான். ஆனால் குள்ளமாக இருந்ததால் அந்தக் கூட்டத்தில் அவனால் இயேசுவை பார்க்க முடியவில்லை. ஆகவே அவன் முன்னால் ஓடிப்போய் ஒரு மரத்தின் மேல் ஏறினான். இயேசு அந்த வழியாக போகும்போது அவரை நன்றாக பார்ப்பதற்காகவே அப்படி செய்தான்.
இயேசு அந்த மரத்திற்குப் பக்கத்தில் வந்தபோது, மேலே பார்த்து, ‘சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிற்கு வருகிறேன்’ என்றார். ஆனால் சகேயு கெட்ட காரியங்களை செய்திருந்த ஒரு பணக்காரனாக இருந்தான். அப்படிப்பட்ட கெட்டவனின் வீட்டிற்குப் போக இயேசு ஏன் விரும்பினார்?—
அவன் வாழ்ந்த விதம் அவருக்குப் பிடித்திருந்ததால் அவர் அங்கு போனார் என்று சொல்ல முடியாது. ஆனால் கடவுளைப் பற்றி சகேயுவிடம் பேசுவதற்காகவே சென்றார். அவன் தன்னைப் பார்க்க எப்படி கடினமாக முயற்சி செய்தான் என்பதை அவர் கவனித்திருந்தார். ஆகவே சகேயு தான் கற்றுக்கொடுப்பதைக் கேட்பான் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றி அவனிடம் பேச அது நல்ல சந்தர்ப்பமாக இருந்தது.
அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?— இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள் சகேயுவுக்கு பிடித்திருந்தது. மக்களை இவ்வளவு நாட்களாக ஏமாற்றியதற்கு அவன் மிகவும் வருத்தப்பட்டான். மேலும், தான் அபகரித்திருந்த காசையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிடுவதாக சத்தியம் செய்தான். பிறகு அவன் இயேசுவின் சீஷன் ஆனான். அதற்கு பிறகுதான் இயேசுவும் சகேயுவும் நண்பர்கள் ஆனார்கள்.—லூக்கா 19:1-10.
நாம் பெரிய போதகரை பின்பற்றினால், நம் நண்பர்களாக இல்லாதவர்களை போய் சந்திப்போமா?— ஆமாம் சந்திப்போம். ஆனால் அவர்கள் வாழும் விதத்தை விரும்பி அவர்களுடைய வீட்டிற்குப் போக மாட்டோம். மேலும் அவர்களோடு சேர்ந்து கெட்ட காரியங்களை செய்யவும் மாட்டோம். கடவுளைப் பற்றி பேசுவதற்காக மட்டுமே அவர்களை சந்திப்போம்.
யாரோடு நாம் நேரம் செலவிட மிகவும் விரும்புகிறோமோ அவர்களே நம்முடைய நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு, கடவுளுக்குப் பிரியமானவர்களாக இருக்க வேண்டும். சிலருக்கு யெகோவா யார் என்றுகூட தெரியாது. ஆனால் அவரைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்கள் விரும்பினால் நாம் உதவி செய்யலாம். பிறகு நம்மைப் போலவே அவர்களும் யெகோவாவை நேசிக்கும் போது, நாம் நெருங்கிய நண்பர்கள் ஆகலாம்.
ஒருவர் நமக்கு நல்ல நண்பரா என்பதை தெரிந்துகொள்ள இன்னொரு வழி உண்டு. அவர் செய்யும் காரியங்களைக் கவனி. மற்றவர்களைப் புண்படுத்தும் காரியங்களை செய்துவிட்டு பிறகு அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சிரிக்கிறாரா? அது சரியாக இருக்குமா?— அவர் எப்போதுமே பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறாரா? இப்படி அவரோடு சேர்ந்து நாமும் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டோம் அல்லவா?— அல்லது வேண்டுமென்றே கெட்ட காரியங்களைச் செய்துவிட்டு, பிறகு யாரிடமும் பிடிபடாமல் தப்பியதால் தான் கெட்டிக்காரன் என்று நினைக்கிறாரா? அவர் உண்மையிலேயே பிடிபடாமல் தப்பினாலும், அவர் செய்ததை கடவுள் பார்த்தார் அல்லவா?— இப்படிப்பட்ட காரியங்களை செய்பவர்கள் நமக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறாயா?—
இப்போது உன் பைபிளை கொஞ்சம் எடுக்கிறாயா? நண்பர்கள் நம் வாழ்க்கையை பாதிப்பதைப் பற்றி அது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 1 கொரிந்தியர் அதிகாரம் 15, வசனம் 33-ஐ வாசிக்கலாம். எடுத்துவிட்டாயா?— அது என்ன சொல்கிறது பார்: “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்,” அதாவது கெட்ட நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள். நாம் கெட்டவர்களோடு நேரம் செலவிட்டால் நாமும் கெட்டவர்களாவோம் என்பதே இதன் அர்த்தம். அதேசமயத்தில் நல்ல நண்பர்கள் நல்ல பழக்கங்களை வளர்க்க நமக்கு உதவுவார்கள் என்பதும் உண்மை.
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் யெகோவா என்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அவரோடு உள்ள உறவை கெடுத்துக்கொள்ள நாம் விரும்ப மாட்டோம், இல்லையா?— ஆகவே கடவுளை நேசிப்பவர்களை மட்டுமே நம் நண்பர்களாக கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சரியான நண்பர்களை தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைப் பற்றி சில பைபிள் வசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். சங்கீதம் 119:115; நீதிமொழிகள் 13:20; 2 தீமோத்தேயு 2:22; 1 யோவான் 2:15.