பிற்சேர்க்கை
இயேசு கிறிஸ்து—வாக்குப்பண்ணப்பட்ட மேசியா
வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த இரட்சகருடைய பிறப்பு, ஊழியம், மரணம் ஆகியவற்றைக் குறித்த விவரங்களை அநேக பைபிள் தீர்க்கதரிசிகள் மூலம் யெகோவா தேவன் அளித்தார். இந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின. ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அவை வெகு துல்லியமாகவும், நுணுக்கமாகவும் இருக்கின்றன. எப்படி? இதைப் புரிந்துகொள்ள மேசியாவின் பிறப்பு, குழந்தைப் பருவம் சம்பந்தமாக முன்னறிவிக்கப்பட்ட சில தீர்க்கதரிசனங்களை இப்போது நாம் சிந்திக்கலாம்.
தாவீது ராஜாவின் வம்சாவளியில்தான் மேசியா வருவார் என ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். (ஏசாயா 9:7) அவ்வாறே தாவீதின் சந்ததியில்தான் இயேசு பிறந்தார்.—மத்தேயு 1:1, 6-17.
அவர் காலப்போக்கில் ஒரு ராஜாவாக ஆவார், ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமிலே’ பிறப்பார் என்று மற்றொரு தீர்க்கதரிசியான மீகா முன்னறிவித்தார். (மீகா 5:2) இயேசு பிறந்த காலத்தில், பெத்லகேம் என்ற பெயருடைய இரண்டு பட்டணங்கள் இஸ்ரவேலில் இருந்தன. ஒன்று அதன் வடக்குப் பகுதியிலுள்ள நாசரேத்திற்குப் பக்கத்தில் இருந்தது, இன்னொன்று யூதேயாவிலுள்ள எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்தது. எருசலேமுக்குப் பக்கத்திலிருந்த பெத்லகேம் முன்னர் எப்பிராத்தா என அழைக்கப்பட்டது. தீர்க்கதரிசனம் முன்னறிவித்தபடியே, இயேசு அந்தப் பட்டணத்தில்தான் பிறந்தார்!—மத்தேயு 2:1.
கடவுளுடைய குமாரன் ‘எகிப்திலிருந்து வரவழைக்கப்படுவார்’ என பைபிளில் வேறொரு தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. குழந்தையாக இருந்த இயேசு எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஏரோதின் மரணத்திற்குப் பிறகு அங்கிருந்து அவர் திரும்பக் கொண்டு வரப்பட்டபோது அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—ஓசியா 11:1; மத்தேயு 2:15.
பக்கம் 200-ல், “தீர்க்கதரிசனம்” என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வசனங்களில் மேசியாவைக் குறித்த விவரங்கள் உள்ளன. இந்த வசனங்களை “நிறைவேற்றம்” என்ற தலைப்பின் கீழுள்ள வசனங்களோடு தயவுசெய்து ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு செய்வது, கடவுளுடைய வார்த்தை உண்மையே என்பதன் பேரிலான உங்கள் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தும்.
இவை எல்லாமே இயேசுவின் பிறப்புக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்பதை மனதில் வைத்து இந்த வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். இயேசு இவ்வாறு சொன்னார்: ‘மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் [“என்னைப் பற்றி,” NW] எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டும்.’ (லூக்கா 24:44) பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறபடி, அவை எல்லாமே நிறைவேறின—ஆம், துளியும் பிசகாமல் நிறைவேறின!