அதிகாரம் 8
சுத்தமான மக்களைக் கடவுள் நேசிக்கிறார்
“தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்.”—சங்கீதம் 18:26.
1-3. (அ) ஒரு தாய் தன்னுடைய மகன் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டுமென ஏன் விரும்புகிறாள்? (ஆ) தன்னை வணங்குவோர் சுத்தமாய் இருக்க வேண்டுமென யெகோவா ஏன் விரும்புகிறார், நாம் ஏன் சுத்தமாய் இருக்க விரும்புகிறோம்?
வெளியே கிளம்புவதற்கு முன் அம்மா தன் செல்ல மகனைக் குளிப்பாட்டி அவனுக்குச் சுத்தமான, நேர்த்தியான உடை உடுத்துகிறாள். தன் அன்பு மகனின் ஆரோக்கியத்திற்குச் சுத்தம் அவசியம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். பிள்ளையின் தோற்றம் பெற்றோரின் மதிப்பைக் கூட்டும் அல்லது கெடுக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
2 நம் பரலோகத் தகப்பன் யெகோவா தனது ஊழியர்கள் சுத்தமாய் அல்லது தூய்மையாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார். “தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்” என்று அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது.a (சங்கீதம் 18:26) யெகோவா நம்மை நேசிக்கிறார்; சுத்தமே நமக்குச் சுகாதாரம் தரும் என்பதை அறிந்திருக்கிறார். நாம் அவருடைய சாட்சிகளாய் இருப்பதால் அவருக்குப் புகழ் சேர்க்க வேண்டுமென எதிர்பார்க்கிறார். நம்முடைய சுத்தமான தோற்றம், நல்நடத்தை, யெகோவாவுக்கும் அவருடைய புனிதமான பெயருக்கும் கனம் சேர்க்கும், களங்கம் உண்டாக்காது.—எசேக்கியேல் 36:22; 1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.
3 சுத்தமான மக்களையே கடவுள் நேசிப்பதால் நாம் சுத்தமாயிருக்க வேண்டுமென விரும்புகிறோம். நாம் அவரை நேசிப்பதால் நம் வாழ்க்கை முறை அவருக்குப் புகழ் சேர்க்க வேண்டுமென விரும்புகிறோம். அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் விரும்புகிறோம். ஆகவே, நாம் ஏன் சுத்தமாய் இருக்க வேண்டும், சுத்தமாய் இருப்பது என்றால் என்ன, எப்படி நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை ஆராயலாம். அப்படி ஆராயும்போது, எந்தெந்த அம்சங்களில் நம்மைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிந்துகொள்வோம்.
நாம் ஏன் சுத்தமாய் இருக்க வேண்டும்?
4, 5. (அ) நாம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் என்ன? (ஆ) சுத்தத்திற்கு யெகோவா முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைப் படைப்பு எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது?
4 யெகோவா பல விதங்களில் நம்மை வழிநடத்துகிறார்; அதில் ஒன்று அவருடைய முன்மாதிரி. அதனால்தான், “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று அவருடைய வார்த்தை நம்மை உந்துவிக்கிறது. (எபேசியர் 5:1) நாம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாம் வணங்கும் கடவுளான யெகோவா எல்லா அம்சங்களிலும் சுத்தமாக, தூய்மையாக, பரிசுத்தமாக இருக்கிறார்.—லேவியராகமம் 11:44, 45-ஐ வாசியுங்கள்.
5 யெகோவாவின் படைப்பு அவருடைய எண்ணற்ற பண்புகளையும் வழிகளையும் எடுத்துக்காட்டுவது போல் அவருடைய தூய்மையையும் எடுத்துக்காட்டுகிறது. (ரோமர் 1:20) மனிதர்களுக்காக பூமி எனும் சுத்தமான வீட்டை யெகோவா படைத்தார். காற்றையும் நீரையும் தூய்மைப்படுத்துவதற்கு சூழியல் சுழற்சிகளை அமைத்திருக்கிறார். சிலவகை நுண்ணுயிரிகள் சுகாதாரத் துறையைப் போல் செயல்பட்டு, கழிவுப் பொருள்களை தீங்கற்ற பொருள்களாக மாற்றுகின்றன. மனிதனின் சுயநலத்தினாலும் பேராசையினாலும் ஏற்படுகிற எண்ணெய் கழிவுகளையும் மாசுகளையும் நீக்க கோரப் பசியுள்ள இந்த நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். இந்தப் ‘பூமியைப் படைத்தவர்’ சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. (எரேமியா 10:12) எனவே, சுத்தத்திற்கு நாமும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
6, 7. யெகோவாவை வழிபடுவோர் சுத்தமாய் இருப்பது அவசியம் என்பதைத் திருச்சட்டம் எவ்வாறு வலியுறுத்திக் காட்டியது?
6 நம்முடைய உன்னத பேரரசரான யெகோவா தன்னை வணங்குகிறவர்களிடம் சுத்தத்தை எதிர்பார்க்கிறார். இது, நாம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணம். சுத்தத்திற்கும் வழிபாட்டிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதை யெகோவா கொடுத்த திருச்சட்டம் எடுத்துக்காட்டியது. பாவப் பரிகார நாளில் தலைமைக் குரு இருமுறை குளிக்க வேண்டுமென்று திருச்சட்டம் குறிப்பிட்டது. (லேவியராகமம் 16:4, 23, 24) ஆலய குருமார்கள் பலி செலுத்தும் முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 30:17-21; 2 நாளாகமம் 4:6) ஒருவர் உடலில் அசுத்தமடைவதற்கும், ஆசாரப்படி தீட்டாவதற்கும் சுமார் 70 காரணங்களை திருச்சட்டம் பட்டியலிட்டது. தீட்டுப்பட்ட ஓர் இஸ்ரவேலர் வழிபாட்டில் பங்குகொள்ள முடியாது; அப்படி மீறி பங்குகொண்டால் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்படலாம். (லேவியராகமம் 15:31) ஒருவர் சுத்திகரிப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், உதாரணத்திற்கு குளிக்கவோ துணிகளைத் துவைக்கவோ இல்லையென்றால், ‘அவர் சபையில் இல்லாதபடி கொல்லப்படுவார்.’—எண்ணாகமம் 19:17-20.
7 இன்றைக்கு நாம் திருச்சட்டத்தின்கீழ் இல்லை என்றாலும், சுத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள அது நமக்கு உதவுகிறது. யெகோவாவை வழிபடுவோர் சுத்தமாய் இருப்பது அவசியம் என்பதைத் திருச்சட்டம் வலியுறுத்திக் காட்டியது. அவர் இன்றுவரை மாறவில்லை. (மல்கியா 3:6) நம்முடைய வழிபாடு ‘சுத்தமாக, களங்கமில்லாததாக’ இல்லையென்றால் அவர் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். (யாக்கோபு 1:27) எனவே, சுத்தத்தைப் பொறுத்தவரை, கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருக்க...
8. எந்தெந்த அம்சங்களில் நாம் சுத்தமாயிருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்?
8 சுத்தம் என்று பைபிள் சொல்லும்போது உடல் சுத்தத்தை மட்டுமே குறிப்பதில்லை. கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருக்க, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நாம் சுத்தமாய் இருக்க வேண்டும். முக்கியமாக, ஆன்மீக ரீதியில், ஒழுக்க ரீதியில், மன ரீதியில், உடல் ரீதியில் நாம் சுத்தமாயிருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். இப்போது, இந்த ஒவ்வொரு அம்சத்தையும் நாம் விலாவாரியாகச் சிந்திக்கலாம்.
9, 10. ஆன்மீகச் சுத்தம் என்றால் என்ன, உண்மைக் கிறிஸ்தவர்கள் எதைத் தவிர்க்கிறார்கள்?
9 ஆன்மீகச் சுத்தம். சுருங்கச் சொன்னால், உண்மை மதத்தோடு பொய் மதத்தைக் கலக்காமல் இருப்பதே ஆன்மீகச் சுத்தம். இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குக் கிளம்பிய சமயத்தில், “அங்கிருந்து வெளியே வாருங்கள்; அசுத்தமான எதையும் தொடாதீர்கள்! . . . உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்ற தெய்வீக கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. (ஏசாயா 52:11) இஸ்ரவேலர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பி போனதே யெகோவாவின் வழிபாட்டை மீண்டும் ஸ்தாபிக்கத்தான். எனவே, அந்த வழிபாடு சுத்தமாய் இருக்க வேண்டியிருந்தது, கடவுளை அவமதித்த பாபிலோனிய போதனைகளாலும் பழக்கவழக்கங்களாலும் சடங்குகளாலும் கறைபடாதிருக்க வேண்டியிருந்தது.
10 இன்று, உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் மதத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 10:21-ஐ வாசியுங்கள்.) பொய் மதத்தின் செல்வாக்கு இன்று உலகெங்கும் பரவியிருப்பதால் இந்த விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அநேக நாடுகளில், மக்களுடைய பாரம்பரியங்களிலும் அன்றாட பழக்கவழக்கங்களிலும் சம்பிரதாயங்களிலும் பொய்மத போதனைகள் கலந்திருக்கின்றன. ஆத்துமா அழியாது என்ற போதனை அவற்றில் ஒன்று. (பிரசங்கி 9:5, 6, 10) பொய்மதக் கொள்கைகளோடு தொடர்புடைய எல்லாவித பழக்கவழக்கங்களையும் உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் தவிர்க்கிறோம்.b மற்றவர்கள் நம்மை வற்புறுத்தினாலும் ஆன்மீகச் சுத்தம் சம்பந்தமாக பைபிள் தரும் நெறிமுறைகளை நாம் ஒருபோதும் மீறமாட்டோம்.—அப்போஸ்தலர் 5:29.
11. ஒழுக்க சுத்தம் என்றால் என்ன, ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?
11 ஒழுக்க சுத்தம். எல்லாவித ஒழுக்கங்கெட்ட செயல்களையும் தவிர்ப்பதே ஒழுக்க சுத்தம். (எபேசியர் 5:5-ஐ வாசியுங்கள்.) ஒழுக்க ரீதியில் நாம் சுத்தமாய் இருப்பது மிகமிக முக்கியம். ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடினால்தான்’ கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க முடியும். இதை அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம். மனம் திருந்தாமல், பாலியல் முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபடுகிறவர்கள் “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” (1 கொரிந்தியர் 6:9, 10, 18) கடவுளுடைய பார்வையில், இவர்கள் “அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள்.” திருந்தி ஒழுக்கமாய் வாழாவிட்டால் ‘இரண்டாம் மரணம்தான்’ இவர்களுடைய “கதி.”—வெளிப்படுத்துதல் 21:8.
12, 13. சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே என்ன தொடர்பிருக்கிறது, நம் மனதை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?
12 மன சுத்தம். சிந்தனைகள்தான் செயலாக உருவெடுக்கின்றன. மனதிலும் இதயத்திலும் கெட்ட சிந்தனைகள் குடிபுக அனுமதித்தால், என்றைக்காவது ஒருநாள் அசுத்தமான செயல்களைச் செய்துவிடுவோம். (மத்தேயு 5:28; 15:18-20) நம் மனதைத் தூய எண்ணங்களால் நிரப்பினால், நாம் எப்போதும் ஒழுக்கமாக நடக்க முடியும். (பிலிப்பியர் 4:8-ஐ வாசியுங்கள்.) நம் மனதை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்? முதலாவதாக, நம் மனதைக் கெடுக்கிற எல்லாவித பொழுதுபோக்கையும் தவிர்க்க வேண்டும்.c அதோடு, கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிப்பதன் மூலம் நம் மனதைச் சுத்தமான எண்ணங்களால் நிரப்ப வேண்டும்.—சங்கீதம் 19:8, 9.
13 கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு, ஆன்மீக ரீதியில், ஒழுக்க ரீதியில், மன ரீதியில் நாம் சுத்தமாக இருப்பது மிகமிக அவசியம். இந்த விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தின் மற்ற அதிகாரங்களில் இன்னும் அதிகமாய் தெரிந்துகொள்வோம். இப்போது, நான்காவது அம்சத்தைப் பற்றி பார்க்கலாம்—அதுதான் உடல் சுத்தம்.
உடல் சுத்தம் காப்பது எப்படி?
14. உடல் சுத்தம் என்பது ‘என் சொந்த விஷயம்’ என ஏன் சொல்லக்கூடாது?
14 உடல் சுத்தமாயிருக்க உடலை மட்டுமல்ல சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். சுத்தத்தைப் பற்றி பேசினாலே, ‘அதெல்லாம் என் சொந்த விஷயம், அதில் யாரும் தலையிடக்கூடாது’ என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது சரியா? யெகோவாவை வழிபடுகிறவர்கள் அப்படிச் சொல்லக்கூடாது. முன்னரே சிந்தித்தபடி, நாம் சுத்தமாய் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்; ஏனென்றால், அது நம் உடல்நலத்திற்கு நல்லது. அதைவிட முக்கியமாக, நாம் அவருடைய சாட்சிகள். முதல் பாராவில் உள்ள உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பரட்டை தலையோடு அழுக்காக இருக்கும் ஒரு பையனைப் பார்க்கும்போது, அவன் பெற்றோர் அவனை ஒழுங்காக கவனிப்பதில்லை என்றுதானே மற்றவர்கள் நினைப்பார்கள்? நம் தோற்றமும் வாழ்க்கை முறையும் நம் பரலோகத் தகப்பனுக்குக் கெட்ட பெயர் கொண்டுவரும் விதமாகவோ, நாம் சொல்லும் செய்தியை பிறர் உதாசீனப்படுத்தும் விதமாகவோ இருப்பதற்கு நாம் விரும்ப மாட்டோம். ‘நம்முடைய ஊழியத்தில் யாரும் குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக நாம் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் உண்டாக்காமல் இருக்கிறோம். எல்லா விதத்திலும் நம்மைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்’ என பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 6:3, 4) அப்படியானால், நம் உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?
15, 16. சுகாதாரமாய் இருப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் யாவை, நம்முடைய உடை எப்படி இருக்க வேண்டும்?
15 சுகாதாரமும் தோற்றமும். கலாச்சாரமும் வாழ்க்கைச் சூழலும் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், சோப்பும் தண்ணீரும் பொதுவாக எல்லா இடங்களிலும் கிடைப்பதால், நாமும் நம் பிள்ளைகளும் தவறாமல் குளித்து சுத்தமாய் இருக்கலாம். சுகாதாரமாய் இருப்பதற்கு நல்ல பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்; சாப்பிடும் முன்பு, சமைப்பதற்கு முன்பு, கழிவறையைப் பயன்படுத்திய பின்பு, குழந்தைக்குக் கால்கழுவிவிட்ட பின்பு, அல்லது குழந்தையின் டயப்பரையோ ஈரத்துணியையோ மாற்றிய பின்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அப்படிக் கழுவினால், எத்தனையோ நோய்களைத் தவிர்க்கலாம், ஏன், உயிரையே காப்பாற்றலாம். தீங்கு விளைவிக்கிற பாக்டீரியாக்களும் வைரஸ்களும் பரவாமல் தடுக்கலாம்; அதன் மூலம் வயிற்றுப்போக்கு சம்பந்தமான வியாதிகள் தொற்றாமல் நம்மைப் பாதுகாக்கலாம். சில நாடுகளில், கழிவுகளை வெளியேற்றுவதற்கான வசதிகள் வீடுகளில் இல்லாதிருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், பூர்வ இஸ்ரவேலர் செய்ததுபோல, கழிவுகளை மண்ணில் புதைத்துவிடலாம்.—உபாகமம் 23:12, 13.
16 நம் உடை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க, அதை நாம் தவறாமல் துவைக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவரின் உடை விலை உயர்ந்ததாகவோ நவ நாகரிகமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது நேர்த்தியாக, சுத்தமாக, அடக்கமாக இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10-ஐ வாசியுங்கள்.) நாம் எங்கு வாழ்ந்தாலும்சரி, நம் தோற்றம் ‘நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை எல்லா விதத்திலும் அலங்கரிக்க வேண்டும்.’—தீத்து 2:10.
17. நம் வீடும் சுற்றுப்புறமும் ஏன் சுத்தமாகவும் அம்சமாகவும் இருக்க வேண்டும்?
17 நம் வீடும் சுற்றுப்புறமும். நம் வீடு பகட்டாகவோ ஆடம்பரமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம் சூழ்நிலைக்கு ஏற்ப அதைச் சுத்தமாகவும் அம்சமாகவும் வைக்க வேண்டும். ஒருவேளை சபை கூட்டங்களுக்கு அல்லது வெளி ஊழியத்துக்குச் செல்ல நாம் வாகனத்தைப் பயன்படுத்தினால், உள்ளேயும் சரி வெளியேயும் சரி, அதைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சுத்தமான வீடும் சுற்றுப்புறமும் நாம் வணங்கும் கடவுளைப் பற்றி மௌனமாகச் சாட்சியளிக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. யெகோவா சுத்தமான கடவுள், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை அவர் நாசமாக்கப்போகிறார்,’ அவருடைய அரசாங்கம் இந்தப் பூமியைச் சீக்கிரத்தில் பூஞ்சோலையாக மாற்றும் என்றெல்லாம் நாம் மற்றவர்களுக்குப் போதிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 11:18; லூக்கா 23:43) எனவே, நம் வீட்டையும் உடமைகளையும் மற்றவர்கள் பார்க்கும்போது, நாம் சுத்தமான பழக்கங்களை வளர்த்து வருகிறோம் என்பதையும் வரப்போகும் புதிய உலகில் வாழ இப்போதே தயாராகி வருகிறோம் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
18. ராஜ்ய மன்றத்திற்கு நாம் எவ்வாறு மதிப்பு காட்டலாம்?
18 கடவுளை வழிபடும் இடம். நம் ராஜ்ய மன்றம் நம்முடைய வட்டாரத்தில் உண்மை வழிபாட்டிற்கு மையமாகத் திகழ்கிறது. அதனால், யெகோவாவை நேசிக்கிற நாம் அதற்கு மதிப்பு காட்ட வேண்டும். ராஜ்ய மன்றத்துக்கு வருகிற புதிய நபர்களுக்கு அந்த இடத்தின் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டும். ஆகவே, ராஜ்ய மன்றத்தை நாம் தவறாமல் சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும். அப்போதுதான், அது பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ராஜ்ய மன்றத்தை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது அதற்கு மதிப்பு காட்டுகிறோம். வழிபாட்டுக்குரிய இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவும், ‘பழுதுபார்ப்பதற்காகவும்’ நேரம் செலவிடுவதைப் பாக்கியமாகக் கருதுகிறோம். (2 நாளாகமம் 34:10) மாநாட்டு மன்றங்களைப் பொறுத்ததிலும் இதே நியமங்களை நாம் பின்பற்ற வேண்டும், வாடகைக்கு எடுத்திருந்தாலும் சரி.
கறைபடுத்தும் பழக்கவழக்கங்களை விட்டொழித்து சுத்தமாய் இருப்போமாக
19. உடலைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள நாம் எதைத் தவிர்க்க வேண்டும், இந்த விஷயத்தில் பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது?
19 நம் உடலைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள நம்மைக் கறைபடுத்தும் பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, புகைபிடித்தல், அளவுக்குமீறி குடித்தல், மருத்துவரின் ஆலோசனையின்றி போதை மருந்துகளை பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இன்று உலகில் காணப்படும் அசுத்தமான, அருவருப்பான பழக்கங்கள் எல்லாவற்றையும் பைபிள் பட்டியலிடுவதில்லை. ஆனாலும், அவற்றைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார் என்பதைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள அதில் உள்ள நியமங்கள் உதவுகின்றன. நாம் யெகோவாவின் சிந்தையை அறிந்திருப்பதாலும் அவரை நேசிப்பதாலும் அவருக்குப் பிரியமான வழியில் நடக்கத் தூண்டப்படுகிறோம். இப்போது, அவற்றில் ஐந்து நியமங்களைச் சிந்திப்போம்.
20, 21. எப்படிப்பட்ட பழக்கவழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார், அதற்கு பைபிள் தரும் சிறந்த காரணம் என்ன?
20 “அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக.” (2 கொரிந்தியர் 7:1) உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் பழக்கவழக்கங்களை நாம் அறவே தவிர்க்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதித்து, நம்மை அடிமைப்படுத்துகிற பழக்கங்களை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
21 நாம் ஏன் ‘எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள’ வேண்டும் என்பதற்கு பைபிள் வலிமையான காரணம் அளிக்கிறது. “இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்” என்று 2 கொரிந்தியர் 7:1 சொல்வதைக் கவனியுங்கள். அப்படியானால், என்ன வாக்குறுதிகள்? “நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். . . . அதோடு, நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன்” என்று முந்திய வசனங்களில் யெகோவா சொல்கிறார். (2 கொரிந்தியர் 6:17, 18) இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: யெகோவா உங்களைக் கண்மணிபோல் காப்பதாகவும், தகப்பன் தன் பிள்ளைகளை நேசிப்பது போல் உங்களை நேசிப்பதாகவும் வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்கள் ‘உடலையும் உள்ளத்தையும்’ கறைபடுத்தும் எல்லா பழக்கங்களையும் தவிர்த்தால் மட்டுமே யெகோவா உங்களைக் காப்பார், நேசிப்பார். அருவருப்பான ஒரு பழக்கத்திற்கு அடிமைப்பட்டு யெகோவாவிடம் நீங்கள் வைத்திருக்கும் அருமையான பந்தத்தைத் தொலைத்துவிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
22-25. அசுத்தமான பழக்கவழக்கங்களைத் தவிர்க்க எந்த பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?
22 “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:37) கட்டளைகளிலேயே இதுதான் மிக முக்கியமான கட்டளை என இயேசு சொன்னார். (மத்தேயு 22:38) இப்படிப்பட்ட அன்புக்கு யெகோவா தகுதியானவர். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அவர்மேல் அன்பு காட்டினால், நம் ஆயுளைக் குறைத்துவிடுகிற பழக்கவழக்கங்களைத் தவிர்ப்போம்; அதோடு, நம்முடைய சிந்திக்கும் திறன்களை மழுங்கடிக்கிற பழக்கவழக்கங்களையும் தவிர்ப்போம்.
23 “[யெகோவா] எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்.” (அப்போஸ்தலர் 17:24, 25) ஆகவே, உயிர், கடவுள் தந்த பரிசு. நாம் அவரை நேசிப்பதால், அவர் தந்த பரிசை மதிக்கிறோம். நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கிற எல்லாவித பழக்கவழக்கங்களையும் அறவே தவிர்க்கிறோம். இத்தகைய பழக்கங்களில் நாம் ஈடுபட்டால், உயிர் எனும் பரிசை நாம் துச்சமாக நினைக்கிறோம் என்றுதான் அர்த்தம்.—சங்கீதம் 36:9.
24 “உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:39) ஒருவர் அசுத்தமான பழக்கத்தில் ஈடுபட்டால், அது அவரை மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். உதாரணமாக, ஒருவர் புகைபிடித்தால் அது அவருக்கு மட்டுமல்ல அருகில் இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும். இப்படி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறவர், சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளையை மீறுகிறார். அவர் கடவுளை நேசிப்பதாக சொல்லிக்கொண்டாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்.—1 யோவான் 4:20, 21.
25 ‘அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும், . . . என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.’ (தீத்து 3:1, 2) அநேக நாடுகளில், சிலவகை போதை மருந்துகளை வைத்திருப்பதோ பயன்படுத்துவதோ சட்டவிரோதமானது. உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் அப்படிப்பட்ட போதைப்பொருள்களை வைத்திருக்கவும் மாட்டோம், பயன்படுத்தவும் மாட்டோம்.—ரோமர் 13:1.
26. (அ) கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருப்பதே சிறந்த வாழ்க்கை முறை என ஏன் சொல்லலாம்?
26 கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நாம் ஏதாவது ஓர் அம்சத்தில் மட்டும் சுத்தமாயிருந்தால் போதாது; எல்லா அம்சத்திலும் சுத்தமாயிருக்க வேண்டும். நம்மைக் கறைபடுத்தும் பழக்கவழக்கங்களை விட்டொழிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், முயற்சி செய்தால் முடியும்.d சொல்லப்போனால், கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருப்பதைவிட சிறந்த வாழ்க்கை முறை வேறு எதுவுமில்லை; ஏனென்றால், நமக்குப் பிரயோஜனமானதையே யெகோவா எப்போதும் போதிக்கிறார். (ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்.) மிக முக்கியமாக, நாம் சுத்தமாய் இருந்தால், நாம் நேசிக்கும் கடவுளாகிய யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வாழ்கிறோம் என்ற திருப்தியைப் பெறுவோம், அவருடைய அன்பிலும் நிலைத்திருப்போம்.
a மூல மொழிகளில் “தூய்மை” அல்லது “சுத்தம்” என்பதற்கான வார்த்தைகள், சில சமயங்களில் உடல் சுத்தத்தைக் குறிக்கின்றன, ஆனால் பெரும்பாலும் ஒழுக்க சுத்தத்தையும் ஆன்மீகச் சுத்தத்தையும் குறிக்கின்றன.
b உண்மைக் கிறிஸ்தவர்கள் தவிர்த்துவிடுகிற பண்டிகைகளையும் சம்பிரதாயங்களையும் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு 13-ஆம் அதிகாரத்தைக் காண்க.
c நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது 6-ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
d “சரியானதைச் செய்ய கடினமாய் முயலுகிறேனா?” என்ற பெட்டியைப் பக்கம் 106-ல் காண்க; “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்ற பெட்டியை மேலே காண்க.
e உண்மைப் பெயர் அல்ல.