அதிகாரம் 5
நாங்கள் “கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்”
உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஒரு தீர்மானத்தை அப்போஸ்தலர்கள் எடுக்கிறார்கள்
அப்போஸ்தலர் 5:12–6:7-ன் அடிப்படையில்
1-3. (அ) அப்போஸ்தலர்கள் ஏன் நியாயசங்கத்துக்கு முன் இழுத்துவரப்பட்டார்கள், அவர்கள் சந்தித்த விவாதம் என்ன? (ஆ) அப்போஸ்தலர்கள் எடுத்த தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள நாம் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்?
யூத உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெஞ்சில் கோபம் பொங்கிக்கொண்டிருக்கிறது! விசாரணைக்காக நீதிபதிகளின் முன்னால் இயேசுவின் அப்போஸ்தலர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஏன்? “இந்தப் பெயரில் கற்பிக்கக் கூடாதென்று நாங்கள் உங்களுக்குக் கண்டிப்புடன் கட்டளை கொடுத்திருந்தோம்” என தலைமைக் குருவும் நியாயசங்க தலைவருமான யோசேப்பு காய்பா கோபத்தில் வெடிக்கிறார். எரிச்சலுடன் இருக்கும் இந்தத் தலைவருக்கு இயேசுவின் பெயரைக்கூட உச்சரிக்க பிடிக்கவில்லை. “அப்படியிருந்தும், எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்; அந்த மனுஷனுடைய சாவுக்கு எங்கள்மேல் பழிபோட குறியாக இருக்கிறீர்கள்” என்று பொறிந்துதள்ளுகிறார். (அப். 5:28) அவர் சொல்வது இதுதான்: பிரசங்கிப்பதை நிறுத்துங்கள், இல்லையென்றால்...!
2 அதைக் கேட்டு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்? பிரசங்கிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இயேசுவிடமிருந்து வந்தது, இயேசுவுக்கு அந்த அதிகாரம் யெகோவாவிடமிருந்து வந்தது. (மத். 28:18-20) மனித பயத்தில் அப்போஸ்தலர்கள் மௌனமாகிவிடுவார்களா? அல்லது மனவலிமையுடன் தொடர்ந்து பிரசங்கிப்பார்களா? அவர்கள் கடவுளுக்குக் கட்டுப்படுவார்களா அல்லது மனிதருக்குக் கட்டுப்படுவார்களா என்பதுதான் விவாதமே. பேதுரு, கொஞ்சம்கூட தயங்காமல் மற்ற அப்போஸ்தலர்கள் சார்பாகப் பேசுகிறார். அவருடைய வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையிலும் தைரியமும் உறுதியும் எதிரொலிக்கின்றன.
3 நியாயசங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். ஏனென்றால், பிரசங்கிக்கும் பொறுப்பு உண்மைக் கிறிஸ்தவர்களான நமக்கும் இருக்கிறது. கடவுள் கொடுத்திருக்கும் இந்த வேலையைச் செய்யும்போது நாமும் எதிர்ப்புகளைச் சந்திக்கலாம். (மத். 10:22) நம்முடைய வேலையை முடக்க அல்லது முடிவுக்குக் கொண்டுவர எதிரிகள் முயற்சி செய்யலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் என்ன செய்வோம்? அப்போஸ்தலர்கள் எடுத்த தீர்மானத்தைப் பற்றி... நியாயசங்கத்துக்கு முன்னால் அவர்களை நிறுத்திய சம்பவங்களைப் பற்றி... ஆழமாக யோசித்துப்பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.a
‘யெகோவாவின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறக்கிறார்’ (அப். 5:12-21அ)
4, 5. காய்பாவும் சதுசேயர்களும் ஏன் ‘பொறாமையால் பொங்கியெழுந்தார்கள்’?
4 பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி கட்டளை கொடுக்கப்பட்டபோது பேதுருவும் யோவானும் என்ன சொன்னார்கள் என்று பாருங்கள். “நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்றார்கள். (அப். 4:20) நியாயசங்க விசாரணைக்குப் பின்பு, பேதுருவும் யோவானும் மற்ற அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஆலயத்தில் தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்கள். அப்போஸ்தலர்கள் மாபெரும் செயல்களைச் செய்தார்கள்—நோயாளிகளைக் குணப்படுத்தினார்கள், பேய்களை விரட்டினார்கள். இதையெல்லாம் ஆலயத்தின் கிழக்கே இருந்த ‘சாலொமோன் மண்டபத்திலேயே’ செய்தார்கள். அதாவது, யூதர்கள் பலர் கூடிவரும் இடத்திலேயே செய்தார்கள். ஏன், பேதுருவின் நிழல் பட்டுக்கூட மக்கள் குணமானார்கள்! உடல் ரீதியில் குணமடைந்த பலர் ஆன்மீக ரீதியில் குணமடைய விரும்பி கடவுளுடைய வார்த்தையைக் காது கொடுத்து கேட்டார்கள். அதன் விளைவாக, “அதிகமதிகமான ஆண்களும் பெண்களும் எஜமானின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷர்களாக ஆனார்கள்.”—அப். 5:12-15.
5 காய்பாவும் மற்ற சதுசேயர்களும் “பொறாமையால் பொங்கியெழுந்து,” அப்போஸ்தலர்களைக் கம்பி எண்ண வைத்தார்கள். (அப். 5:17, 18) சதுசேயர்கள் ஏன் கொதித்தெழுந்தார்கள்? இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்தார்கள், ஆனால் சதுசேயர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை. இயேசுவின் மீது விசுவாசம் வைத்தால்தான் மீட்படைய முடியுமென அப்போஸ்தலர்கள் போதித்து வந்தார்கள்; ஆனால் இயேசுவை தலைவராக மக்கள் ஏற்க ஆரம்பித்துவிட்டால் ரோமப் பேரரசின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்று சதுசேயர்கள் பயந்தார்கள். (யோவா. 11:48) அதனால், அப்போஸ்தலர்களின் வாயை அடைக்க சதுசேயர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை.
6. இன்று முக்கியமாக யார் யெகோவாவின் ஊழியர்கள்மீது துன்புறுத்தலைத் தூண்டிவிடுகிறார்கள், அதைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
6 இன்றும்கூட முக்கியமாக மத விரோதிகள்தான் யெகோவாவின் ஊழியர்கள்மீது துன்புறுத்தலைத் தூண்டிவிடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளையும் ஊடகங்களையும் பயன்படுத்தி இவர்கள் நம் பிரசங்க வேலைக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். இதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. சுடரொளி வீசும் நம் செய்தி பொய் மத போதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நல்மனமுள்ளவர்கள் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும்போது, பொய்யான போதனைகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலை ஆகிறார்கள். (யோவா. 8:32) அப்படியானால், நம் செய்தியைக் கேட்டு மதத் தலைவர்கள் பொறாமையால் பொங்கியெழுவதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா?
7, 8. தேவதூதரின் கட்டளையைக் கேட்டபோது அப்போஸ்தலர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள், நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
7 விசாரணைக்காக சிறையில் காத்துக்கொண்டிருந்தபோது, விரோதிகளின் கையில் தியாக மரணம் அடைய வேண்டியிருக்குமோ என்று அப்போஸ்தலர்கள் யோசித்திருக்கலாம். (மத். 24:9) ஆனால், அந்த இரவில் யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்தது; ‘யெகோவாவின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்தார்.’b (அப். 5:19) பின்பு, “நீங்கள் போய் ஆலயத்தில் நின்று . . . மக்களிடம் தொடர்ந்து பேசுங்கள்” என்று திட்டவட்டமாகச் சொன்னார். (அப். 5:20) தேவதூதர் கொடுத்த இந்தக் கட்டளை, தாங்கள் சரியானதைத்தான் செய்கிறார்கள் என்ற உறுதியை அப்போஸ்தலர்களுக்குத் தந்தது. இனி எது வந்தாலும் உறுதியாக இருக்கவும் தேவதூதரின் வார்த்தைகள் அவர்களுக்குப் பலம் கொடுத்திருக்கலாம். அதனால், “பொழுது விடிந்தவுடன்” அப்போஸ்தலர்கள் மிகுந்த விசுவாசத்துடனும் தைரியத்துடனும் “ஆலயத்துக்குப் போய் . . . கற்பிக்க ஆரம்பித்தார்கள்.”—அப். 5:21.
8 ‘இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு என்னிடம் விசுவாசமும் தைரியமும் இருக்கிறதா?’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்க’ வேண்டிய முக்கியமான வேலையில் தேவதூதர்கள் நமக்கு ஆதரவும் வழிநடத்துதலும் தருகிறார்கள் என்பது எவ்வளவு தெம்பளிக்கிறது!—அப். 28:23; வெளி. 14:6, 7.
“நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” (அப். 5:21ஆ-33)
9-11. பிரசங்கிப்பதை நிறுத்தும்படி நியாயசங்கம் கட்டளை போட்டபோது அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள், அப்போஸ்தலர்கள் எடுத்த தீர்மானம் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது?
9 காய்பாவும் நியாயசங்கத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகளும் அப்போஸ்தலர்களை ஒருகை பார்க்கத் தயாராயிருந்தார்கள். கைதிகளை அழைத்து வரும்படி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள்—சிறையில் என்ன நடந்ததென்றே தெரியாமல்! சிறைச்சாலை நன்றாகப் பூட்டப்பட்டிருந்தும், ‘காவலாளிகள் கதவுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தும்’ கைதிகள் மாயமாக மறைந்துவிட்டதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! (அப். 5:23) எந்த வேலையைச் செய்ததற்காக அப்போஸ்தலர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களோ அதே வேலையை அவர்கள் செய்துகொண்டிருந்ததை, அதுவும் ஆலயத்தில் நின்றுகொண்டு இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்ததை, ஆலயத் தலைவர் கேள்விப்பட்டார்! உடனே அவரும் மற்ற அதிகாரிகளும் ஆலயத்துக்குப் புறப்பட்டுப்போய் கைதிகளைக் கையோடு நியாயசங்கத்துக்கு அழைத்துவந்தார்கள்.
10 இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தபடி, பிரசங்கிக்கவே கூடாதென்று மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் என்ன சொன்னார்கள்? “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று அப்போஸ்தலர்கள் சார்பாக பேதுரு தைரியமாகச் சொன்னார். (அப். 5:29) இவர்கள் எடுத்த தீர்மானம் வருங்கால கிறிஸ்தவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்தது. கடவுள் செய்யச் சொல்வதை மனித ஆட்சியாளர்கள் தடுக்கும்போது... கடவுளுக்குப் பிடிக்காததை மனித ஆட்சியாளர்கள் செய்யச் சொல்லும்போது... நம் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் உரிமையை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். இன்றும்கூட சாட்சி கொடுக்கும் நம் வேலைக்கு ‘அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ தடை போட்டாலும் கடவுள் கொடுத்திருக்கும் வேலையை நம்மால் நிறுத்த முடியாது. (ரோ. 13:1) அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்க ஞானமாக வழி தேடுவோம்.
11 அப்போஸ்தலர்கள் சொன்ன தைரியமான பதிலைக் கேட்டு ஏற்கெனவே கடுப்பில் இருந்த நீதிபதிகள் இன்னும் ஆக்ரோஷமானதில் ஆச்சரியமே இல்லை. அப்போஸ்தலர்களை “கொன்றுபோட” அவர்கள் துடியாய் துடித்தார்கள். (அப். 5:33) தைரியமும் ஆர்வமும்கொண்ட அந்தச் சாட்சிகளுக்கு இப்போது சாவுதான் என்று தோன்றியது. ஆனால் அவர்களுக்கு உதவி கிடைத்தது—சற்றும் எதிர்பாராத வழியில்!
“உங்களால் அதை ஒழிக்கவே முடியாது” (அப். 5:34-42)
12, 13. (அ) தன்னோடு இருந்தவர்களுக்கு கமாலியேல் என்ன ஆலோசனை கொடுத்தார், அவர்கள் என்ன செய்தார்கள்? (ஆ) இன்று தன்னுடைய மக்கள் சார்பாக யெகோவா எப்படிச் செயல்படலாம், ‘நீதிக்காகக் கஷ்டப்பட’ அவர் நம்மை அனுமதித்தாலும் எதைப் பற்றி நாம் உறுதியாக இருக்கலாம்?
12 “எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்டுவந்த திருச்சட்டப் போதகரான” கமாலியேல் பேசத் தொடங்கினார்.c இந்த வழக்கறிஞருக்கு அவரது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பு மரியாதை இருந்திருக்க வேண்டும். அதனால்தான், ‘அப்போஸ்தலர்களைக் கொஞ்ச நேரத்துக்கு வெளியே கொண்டுபோகும்படி’ அவர் கட்டளை கொடுத்தார். (அப். 5:34) கடந்த காலத்தில் செய்யப்பட்ட கலகங்கள் எல்லாம் அந்தந்த தலைவர்கள் மறைந்ததும் அவர்களைப் போலவே மண்ணோடு மண்ணாகிவிட்டதை மேற்கோள்காட்டி, அப்போஸ்தலர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்கும்படி நீதிபதிகளிடம் சொன்னார். அதோடு, அவர்களுடைய தலைவர் இயேசு இறந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தன என்பதைச் சுட்டிக்காட்டினார். கமாலியேல் எடுத்து சொன்ன நியாயம் அவர்களைச் சிந்திக்க வைத்தது: “இந்த மனுஷர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள், இவர்களை விட்டுவிடுங்கள்; இந்தத் திட்டம் அல்லது செயல் மனுஷர்களுடையதாக இருந்தால், அது ஒழிந்துபோகும். ஆனால், அது கடவுளுடையதாக இருந்தால், உங்களால் அதை ஒழிக்கவே முடியாது; அதில் தலையிட்டால், நீங்கள் கடவுளோடு போர் செய்கிறவர்களாகக்கூட ஆகிவிடலாம்.” (அப். 5:38, 39) அவருடைய ஆலோசனையை நீதிபதிகள் கேட்டுக்கொண்டார்கள். இருந்தாலும், அப்போஸ்தலர்களை அடித்து, “இயேசுவின் பெயரில் பேசுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள்.”—அப். 5:40.
13 இன்றும் தன்னுடைய மக்கள் சார்பாக சில “கமாலியேல்களை” யெகோவா பயன்படுத்தலாம். (நீதி. 21:1) யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களை... நீதிபதிகளை... சட்டம் இயற்றுபவர்களை... தன் விருப்பத்துக்கு இசைவாகச் செயல்பட வைக்கலாம். (நெ. 2:4-8) ஆனால், ‘நீதிக்காகக் கஷ்டப்பட’ அவர் நம்மை அனுமதித்தாலும் இரண்டு விஷயங்களில் நாம் உறுதியாக இருக்கலாம். (1 பே. 3:14) முதலாவதாக, சகித்திருக்க கடவுள் நமக்குப் பலம் தருவார். (1 கொ. 10:13) இரண்டாவதாக, கடவுளுடைய வேலையை எதிரிகளால் “ஒழிக்கவே முடியாது.”—ஏசா. 54:17.
14, 15. (அ) அடிக்கப்பட்டபோது அப்போஸ்தலர்கள் எப்படி உணர்ந்தார்கள், ஏன்? (ஆ) யெகோவாவின் மக்கள் துன்புறுத்தலை சந்தோஷத்தோடு சகித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
14 அப்போஸ்தலர்கள் அடி வாங்கியதால் அவர்களுடைய உற்சாகம் குறைந்துவிட்டதா அல்லது அவர்களுடைய மனஉறுதி ஆட்டம் கண்டதா? அதுதான் இல்லை! அவர்கள் “சந்தோஷமாக நியாயசங்கத்தைவிட்டுப் போனார்கள்.” (அப். 5:41) ‘சந்தோஷமாகவா?’ ஏன்? நிச்சயமாக அடி வாங்கியதற்காக அல்ல, யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததற்காகவும், தங்களுடைய தலைவர் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியதற்காகவும் துன்புறுத்தப்பட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.—மத். 5:11, 12.
15 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நம் சகோதரர்களைப் போல, நல்ல செய்தியின் காரணமாகத் துன்பப்படும்போது நாமும் சந்தோஷத்தோடு சகித்துக்கொள்கிறோம். (1 பே. 4:12-14) மிரட்டப்படுவதாலோ துன்புறுத்தப்படுவதாலோ சிறையில் போடப்படுவதாலோ நாம் சந்தோஷப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவுக்கு உத்தமமாக இருப்பதால் சந்தோஷப்படுகிறோம். உதாரணமாக, சர்வாதிகார ஆட்சியில் நிறைய வருஷங்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டபோதிலும் சகித்திருந்த ஹென்றிக் டார்னிக் என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். ஆகஸ்ட் 1944-ல் அவரையும் அவருடைய சகோதரரையும் சித்திரவதை முகாமுக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்ததாக அவர் சொல்கிறார். “என்ன செய்தாலும் அவர்களை மட்டும் மசிய வைக்கவே முடியாது. உயிர்த்தியாகம் செய்வதிலும் அவர்களுக்குச் சந்தோஷம்தான்” என்று அந்த அதிகாரிகள் சொன்னார்கள். சகோதரர் டார்னிக் சொல்கிறார்: “உயிர்த்தியாகம் செய்வதில் எனக்குச் சந்தோஷம் இல்லை. ஆனால், யெகோவாவுக்கு உத்தமமாக இருப்பதற்காகத் தைரியத்தோடும் கண்ணியத்தோடும் துன்புறுத்தலை எதிர்ப்பட்டதில்தான் எனக்குச் சந்தோஷம்.”—யாக். 1:2-4.
16. அப்போஸ்தலர்கள் முழுமையாகச் சாட்சி கொடுக்க உறுதியாக இருந்ததை எப்படிக் காட்டினார்கள், அவர்களுடைய பிரசங்கிக்கும் முறையை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்?
16 சாட்சி கொடுக்கும் வேலையில் மீண்டும் களமிறங்க அப்போஸ்தலர்கள் துளியும் தாமதிக்கவில்லை. அஞ்சாமல் “தினமும் ஆலயத்திலும் வீடு வீடாகவும் இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.”d (அப். 5:42) ஆர்வத் துடிப்புமிக்க இவர்கள் முழுமையாகச் சாட்சி கொடுக்க உறுதியாக இருந்தார்கள். இயேசு கிறிஸ்து கட்டளை கொடுத்தபடியே நல்ல செய்தியை மக்களுடைய வீடுகளுக்குக் கொண்டுபோனார்கள். (மத். 10:7, 11-14) இப்படித்தான் எருசலேம் நகரத்தைத் தங்களுடைய போதனையால் நிரப்பினார்கள். அந்த அப்போஸ்தலர்கள் பயன்படுத்திய முறைகளைப் பின்பற்றி சாட்சி கொடுப்பதில் இன்று யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்களாய் இருக்கிறார்கள். ஊழிய பகுதியில் இருக்கிற ஒவ்வொரு வீட்டையும் சந்திப்பதன் மூலம்... நல்ல செய்தியைக் கேட்க எல்லாருக்கும் வாய்ப்பு தருவதன் மூலம்... முழுமையாகச் சாட்சி கொடுக்க விரும்புகிறோம் என்பதை நாம் காட்டுகிறோம். நாம் செய்யும் வீட்டுக்கு வீடு ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரா? ஆமாம்! இந்தக் கடைசி காலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் நல்ல செய்திக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள், அதுவும் அநேகர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில்தான் நல்ல செய்தியை முதன்முறையாகக் கேட்டிருக்கிறார்கள்.
“அவசியமான வேலையை” செய்ய தகுதியுள்ள ஆண்கள் (அப். 6:1-6)
17-19. இப்போது என்ன பிரச்சினை வந்தது, அதைத் தீர்க்க அப்போஸ்தலர்கள் என்ன ஆலோசனை சொன்னார்கள்?
17 இந்தப் புதிய சபைக்கு உள்ளுக்குள் இருந்தே ஒரு மறைமுகமான ஆபத்து வந்தது. அது என்ன? எருசலேமுக்கு வந்து ஞானஸ்நானம் பெற்ற சீஷர்கள் பலர் வீடு திரும்புவதற்கு முன்பு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். அதனால், அவர்களுக்குத் தேவையான உணவும் மற்ற பொருள்களும் வாங்க எருசலேமிலிருந்த சீஷர்கள் மனதார நன்கொடை கொடுத்தார்கள். (அப். 2:44-46; 4:34-37) இந்தச் சந்தர்ப்பத்தில், ஓர் இறுக்கமான சூழல் உருவானது. “அன்றாட உணவு கொடுக்கிற விஷயத்தில்” கிரேக்க மொழி பேசும் “விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.” (அப். 6:1) ஆனால், எபிரெய மொழி பேசும் விதவைகளுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பாரபட்சம் காட்டியதாலேயே இந்தப் பிரச்சினை வந்தது. பாரபட்சம் காட்டுவது பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாக ஆனது.
18 வளர்ந்துவரும் சபையின் ஆளும் குழுவாக செயல்பட்டுவந்த அப்போஸ்தலர்கள் ‘கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு கொடுக்கிற வேலையில் ஈடுபடுவது’ ஞானமான செயல் கிடையாது என்பதை உணர்ந்தார்கள். (அப். 6:2) பிரச்சினையைத் தீர்க்க, “கடவுளுடைய சக்தியினாலும் ஞானத்தினாலும் நிறைந்த” ஏழு ஆண்களைத் தேர்ந்தெடுத்து, இந்த “அவசியமான வேலையை” மேற்பார்வைச் செய்ய நியமிக்கும்படி சீஷர்களிடம் சொன்னார்கள். (அப். 6:3) உணவைப் பகிர்ந்தளிப்பதற்கு மட்டுமல்ல, பணத்தை நிர்வகிக்க... பொருள்களை வாங்க... வரவு செலவுகளைக் கவனமாகக் கணக்கு வைக்க... வேண்டியிருந்ததால் தகுதியுள்ள ஆண்கள் தேவைப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள் அனைவருக்குமே கிரேக்கப் பெயர்கள் இருந்ததால், ஓரவஞ்சனை செய்யப்பட்ட விதவைகளுக்கு ஆறுதலாய் இருந்திருக்கும். பரிந்துரை செய்யப்பட்டவர்களின் தகுதிகளை அப்போஸ்தலர்கள் சிந்தித்துப் பார்த்து, ஜெபம் செய்து, இந்த “அவசியமான வேலையை” கவனிக்க அந்த ஏழு ஆண்களை நியமித்தார்கள்.e
19 அந்த ஏழு ஆண்களும் உணவு பகிர்ந்தளிக்க நியமிக்கப்பட்டதால், அவர்கள் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதா? கண்டிப்பாக இல்லை! அவர்களில் ஒருவரான ஸ்தேவான் தைரியமாகவும் வலிமையாகவும் சாட்சி கொடுப்பவராக இருந்தார். (அப். 6:8-10) அந்த ஏழு பேரில் பிலிப்புவும் ஒருவர், அவர் ஒரு ‘நற்செய்தியாளர்.’ (அப். 21:8) அந்த ஏழு பேரும் பிரசங்க வேலையிலும் தொடர்ந்து ஈடுபட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
20. அப்போஸ்தலர்களின் மாதிரியை இன்று கடவுளுடைய மக்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
20 அப்போஸ்தலர்களின் மாதிரியையே இன்று யெகோவாவின் மக்கள் பின்பற்றுகிறார்கள். சபையில் பொறுப்புகளை எடுத்து செய்வதற்காக சிபாரிசு செய்யப்படும் சகோதரர்கள் தெய்வீக ஞானத்தை வெளிக்காட்ட வேண்டும், கடவுளுடைய சக்தி அவர்கள்மீது செயல்படுவதற்கு அத்தாட்சியும் அளிக்க வேண்டும். வேதத்தில் சொல்லியிருக்கும் தகுதிகளைப் பூர்த்தி செய்பவர்கள் ஆளும் குழுவின் வழிநடத்துதலால் மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.f (1 தீ. 3:1-9, 12, 13) இவர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள் என்றே சொல்லலாம். கடினமாக உழைக்கும் இந்த ஆண்கள் அவசியமான பல வேலைகளைச் செய்கிறார்கள். உதாரணத்துக்கு, உண்மையிலேயே உதவி தேவைப்படும் வயதான சகோதர சகோதரிகளுக்கு நடைமுறை உதவிகளைச் செய்ய மூப்பர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். (யாக். 1:27) இன்னும் சில மூப்பர்கள், ராஜ்ய மன்ற கட்டுமானத்தில்... மாநாடுகளை ஒழுங்கமைப்பதில்... மருத்துவமனை தொடர்பு இலாக்காவில்... சேவை செய்கிறார்கள். மேய்ப்பு வேலையுடன் அல்லது போதிக்கும் வேலையுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத வேலைகளை உதவி ஊழியர்கள் செய்கிறார்கள். தகுதிபெற்ற இந்த ஆண்கள் அனைவரும் சமநிலையோடு இருப்பதும் முக்கியம். அதாவது, சபை மற்றும் அமைப்பு சார்ந்த பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்... அதேசமயம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்படி கடவுள் கொடுத்த பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும்.—1 கொ. 9:16.
“கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது” (அப். 6:7)
21, 22. புதிதாய் பிறந்த சபைமீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததென நமக்கு எப்படித் தெரியும்?
21 கண்விழிக்கும் பருவத்திலிருந்த அந்தச் சபை... உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் புறப்பட்ட புயல் போன்ற சோதனைகளை யெகோவாவின் ஆதரவால் வெற்றிகரமாகச் சமாளித்தது. அந்தச் சபைமீது யெகோவாவின் ஆசி இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. எப்படியென்றால், “கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது; எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது; ஏராளமான குருமார்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்” என்று பதிவு சொல்கிறது. (அப். 6:7) அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கும் எண்ணற்ற வளர்ச்சிப் படிகளில் இது ஒன்றே ஒன்றுதான். (அப். 9:31; 12:24; 16:5; 19:20; 28:31) இன்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் பிரசங்க வேலை வீறுநடை போட்டு முன்னேறி வருவதைப் பற்றிய அறிக்கைகளை நாம் கேள்விப்படும்போது புதுப்பெலன் பெற்றதுபோல் உணருகிறோம், இல்லையா?
22 முதல் நூற்றாண்டில், கோபாவேசத்தில் சீறிப்பாய்ந்த மதத் தலைவர்கள் இந்த வளர்ச்சியைப் பார்த்து அடங்கிவிடவில்லை. விரைவில், துன்புறுத்தல் அலைபோல் திரண்டு வரவிருந்தது. சதிகாரர்கள் ஸ்தேவானை சுற்றிவளைத்து அவர்மீது கடும் தாக்குதல் நடத்தினார்கள். அதைத்தான் அடுத்த அதிகாரத்தில் ஆராயப் போகிறோம்.
a “நியாயசங்கம்—யூத உச்ச நீதிமன்றம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b தேவதூதர்களைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தில் சுமார் 20 தடவை குறிப்பிடப்பட்டிருக்கிறது; அதில் இதுதான் முதல் தடவை. இதற்கு முன்பு அப்போஸ்தலர் 1:10-ல் ‘வெள்ளை உடை அணிந்திருந்தவர்கள்’ என்று மறைமுகமாக அவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
c “கமாலியேல்—ரபீக்களின் நாயகர்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
d “‘வீடு வீடாக’ பிரசங்கிப்பது” என்ற பெட்டியைப் பாருங்கள்.
e இந்த “அவசியமான வேலையை” மேற்பார்வை செய்வது ஒரு பொறுப்பான வேலை என்பதால் பொதுவாக மூப்பர்களுக்குத் தேவையான தகுதிகள் இந்த ஆண்களிடம் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், கிறிஸ்தவ சபையில் மூப்பர்கள் அல்லது கண்காணிகள் எப்போதுமுதல் நியமிக்கப்பட்டார்கள் என்பதை பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை.
f முதல் நூற்றாண்டில், மூப்பர்களை நியமிக்கும் பொறுப்பு தகுதியுள்ள ஆண்களிடம் கொடுக்கப்பட்டது. (அப். 14:23; 1 தீ. 5:22; தீத். 1:5) இன்று, ஆளும் குழு வட்டாரக் கண்காணிகளை நியமிக்கிறது. வட்டாரக் கண்காணிகளுக்கு மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கும் பொறுப்பு இருக்கிறது.