பாடம் 8
கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?
1. கஷ்டமும் வேதனையும் எப்படி வந்தது?
சாத்தான் எப்போது முதல் முதலில் பொய் சொன்னானோ அப்போதுதான் உலகத்தில் கஷ்டமும் வேதனையும் வந்தது. ஆரம்பத்தில் சாத்தான் நல்லவனாகத்தான் இருந்தான். ஆனால், அவன் கெட்டவனாக மாறிவிட்டான். அதனால்தான், “சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 8:44) கடவுளை வணங்குவதற்குப் பதிலாக எல்லாரும் அவனை வணங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால் ஏவாளிடம் தந்திரமாகப் பேசி அவன் பக்கம் இழுத்துக்கொண்டான். ஆதாமும் சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டான். அதனால்தான் நமக்கு கஷ்டம் வந்தது, கடைசியில் சாவும் வந்தது.—ஆதியாகமம் 3:1-6, 19-ஐ வாசியுங்கள்.
கடவுள் பேச்சைக் கேட்காதீர்கள் என்று ஏவாளிடம் சொன்னபோது சாத்தான் கடவுளுடைய ஆட்சியை எதிர்த்தான். ஆதாம் ஏவாளுக்கு பிறகு வந்த நிறைய ஜனங்களும் கடவுளுடைய ஆட்சியை ஒதுக்கித் தள்ளிவிட்டு சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். இப்படித்தான் சாத்தான் ‘இந்த உலகத்தை ஆளுகிறவனாக’ ஆனான்.—யோவான் 14:30-ஐயும் 1 யோவான் 5:19-ஐயும் வாசியுங்கள்.
2. கடவுளுடைய படைப்பில் ஏதாவது குறை இருந்ததா?
கடவுளுடைய படைப்பில் எந்த குறையும் இல்லை. அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிற திறமையோடுதான் தேவதூதர்களையும் மனிதர்களையும் கடவுள் படைத்திருக்கிறார். (உபாகமம் 32:4, 5) அதேசமயத்தில், அவருடைய பேச்சைக் கேட்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் கடவுள்மீது நமக்கு அன்பு இருப்பதை காட்டுவோம்.—யாக்கோபு 1:13-15-ஐயும் 1 யோவான் 5:3-ஐயும் வாசியுங்கள்.
3. கஷ்டங்களை கடவுள் ஏன் தீர்க்காமல் இருக்கிறார்?
யெகோவாவுடைய ஆட்சியை நிறையப் பேர் ஒதுக்கித் தள்ளினாலும், அவர் பொறுமையாக இருக்கிறார். ஏன்? அவருடைய உதவி இல்லாமல் மனிதர்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் பொறுமையாக இருக்கிறார். (பிரசங்கி 7:29; 8:9) 6,000 வருடங்களாக மனித ஆட்சியால் போரையும் வியாதியையும் குற்றத்தையும் அநியாயத்தையும் ஒழிக்கவே முடியவில்லை.—எரேமியா 10:23-ஐயும் ரோமர் 9:17-ஐயும் வாசியுங்கள்.
மனிதனுடைய ஆட்சிக்கு யெகோவா சீக்கிரத்தில் முடிவு கட்டுவார். அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் ஜனங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுப்பார். (ஏசாயா 48:17, 18) அவர்கள்தான் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்.—ஏசாயா 11:9.—தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.
கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
4. கடவுள் பொறுமையாக இருப்பதால் நமக்கு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது?
சுயநலத்திற்காகத்தான் மனிதர்கள் யெகோவாவை வணங்குகிறார்கள் என்று சாத்தான் சொன்னான். அது சுத்தப் பொய் என்று நிரூபிக்க ஆசைப்படுகிறீர்களா? கடவுளுடைய ஆட்சியை நாம் ஆதரிக்கிறோமா இல்லையா என்பதை காட்டுவதற்கு யெகோவா நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அவர் இவ்வளவு காலம் பொறுமையாக இருப்பதால்தான் அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. கடவுளுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ளும்போது நாம் அவர் பக்கம் இருக்கிறோம் என்று காட்டலாம்.—யோபு 1:8-12-ஐயும் நீதிமொழிகள் 27:11-ஐயும் வாசியுங்கள்.
5. கடவுளுடைய ஆட்சியை ஆதரிக்கிறோம் என்று எப்படி காட்டலாம்?
பைபிள் சொல்வதுபோல் நாம் கடவுளை வணங்கும்போது அவருடைய ஆட்சியை ஆதரிக்கிறோம் என்று காட்டலாம். (யோவான் 4:23) அதோடு, இயேசுவைப் போலவே நாமும் அரசியல் சம்பந்தமான விஷயங்களில் தலையிடக் கூடாது, போர்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், சாத்தானுடைய ஆட்சியை ஒதுக்கித் தள்ளுகிறோம் என்று சொல்ல முடியும்.—யோவான் 17:14-ஐ வாசியுங்கள்.
சாத்தான் அவனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனங்களை மோசமான வழியில் நடத்துகிறான். கெட்ட பழக்கங்களை நல்லது போல் காட்டுகிறான். அதையெல்லாம் விட்டுவிட்டு நாம் நல்ல வழியில் நடக்கும்போது நண்பர்கள், சொந்தக்காரர்கள் நம்மை கேலி கிண்டல் செய்யலாம், எதிர்க்கலாம். (1 பேதுரு 4:3, 4) அப்போது நாம் என்ன செய்வோம்? நம் நன்மைக்காக கடவுள் கொடுத்திருக்கிற சட்டங்களின்படி நடப்போமா? கடவுளுக்கு பிடித்த மாதிரி நடக்கிறவர்களோடு பழகுவோமா? நம்மை யாராவது எதிர்த்தால் அல்லது கஷ்டப்படுத்தினால் கடவுள் பேச்சைக் கேட்பதை விட்டுவிடுவோம் என்று சாத்தான் சொன்னான். அவன் சொன்னது பொய் என்று நிரூபிக்க நாம் எல்லா சூழ்நிலையிலும் கடவுள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9, 10; 15:33-ஐ வாசியுங்கள்.
கடவுள் நம்மீது அன்பு வைத்திருப்பதால் நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் கண்டிப்பாக முடிவு கட்டுவார். கடவுளுடைய ஆட்சியை ஆதரிக்கிறவர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.—யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.