அதிகாரம் 11
யோவான் ஸ்நானகர் வழியைத் தயார்படுத்துகிறார்
மத்தேயு 3:1-12 மாற்கு 1:1-8 லூக்கா 3:1-18 யோவான் 1:6-8, 15-28
யோவான் பிரசங்கிக்கிறார், ஞானஸ்நானம் கொடுக்கிறார்
நிறைய பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள், ஆனால் எல்லாரும் இல்லை
இப்போது கி.பி. 29-ஆம் வருஷம். 12 வயது இயேசு, ஆலயத்தில் போதகர்களிடம் கேள்வி கேட்ட சமயத்திலிருந்து 17 வருஷங்கள் உருண்டோடிவிட்டன. இந்த வருஷத்தின் ஆரம்பத்தில், இயேசுவின் சொந்தக்காரரான யோவானைப் பற்றி எல்லாரும் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். அவர் யோர்தான் ஆற்றுக்கு மேற்கே இருக்கும் பகுதிகளில் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார்.
யோவானுடைய தோற்றமும் பேச்சும் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அவர் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருக்கிறார்; தோல் வாரை இடுப்பில் கட்டியிருக்கிறார். வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிடுகிறார். “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று எல்லாருக்கும் பிரசங்கிக்கிறார்.—மத்தேயு 3:2.
யோவானின் செய்தி மக்களின் மனதைத் தொடுகிறது. நிறைய பேர் தங்களுடைய பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக்கொண்டு, திருந்தி வாழ வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். “எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் ஆற்றைச் சுற்றியிருந்த எல்லா பகுதிகளிலிருந்தும்” மக்கள் அவரிடம் வருகிறார்கள். (மத்தேயு 3:5) அவர்களில் நிறைய பேர் உண்மையிலேயே திருந்துகிறார்கள். யோவான் அவர்களுக்கு யோர்தான் ஆற்றில் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். எதற்காக?
கடவுளுடைய திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு எதிராகப் பாவம் செய்ததை அவர்கள் ஒத்துக்கொண்டு, திருந்துகிறார்கள். அவர்கள் மனப்பூர்வமாகத் திருந்தியதற்கு அடையாளமாக யோவான் ஞானஸ்நானம் கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 19:4) அதுவும் தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார். மதத் தலைவர்களும் பரிசேயர்களும் சதுசேயர்களும் அங்கே வந்தபோது, அவர்களைப் பார்த்து “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று யோவான் கூப்பிடுகிறார். அதோடு, “நீங்கள் மனம் திருந்திவிட்டீர்கள் என்பதைச் செயலில் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்கள் தகப்பன்’ என்று மனதுக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதீர்கள்; கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்துகூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க முடியுமென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரங்களின் வேருக்குப் பக்கத்தில் ஏற்கெனவே கோடாலி இருக்கிறது; நல்ல பழங்களைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படும்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 3:7-10.
யோவான் ரொம்பப் பிரபலமாகிறார். அவர் ஒரு வலிமையான செய்தியைப் பிரசங்கிக்கிறார், பலருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த யூதர்கள், ஆலய குருமார்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீ யார்?” என்று கேட்கிறார்கள்.
“நான் கிறிஸ்து அல்ல” என்று அவர் சொல்கிறார்.
“அப்படியானால், நீ எலியாவா?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
“இல்லை” என்று யோவான் சொல்கிறார்.
“நீதான் வரவேண்டிய தீர்க்கதரிசியா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அதாவது, மோசே முன்கூட்டியே சொன்ன அந்தப் பெரிய தீர்க்கதரிசி இவர்தானா என்று கேட்கிறார்கள்.—உபாகமம் 18:15, 18.
“இல்லை!” என்று யோவான் சொல்கிறார்.
அப்போது அவர்கள், “அப்படியானால், நீ யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு வழியைச் சமப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்” என்கிறார்.—யோவான் 1:19-23.
அப்போது அவர்கள், “நீ கிறிஸ்துவும் அல்ல, எலியாவும் அல்ல, வரவேண்டிய தீர்க்கதரிசியும் அல்ல என்றால், எதற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு யோவான், “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாது. அவர் எனக்குப்பின் வரப்போகிறவர்” என்று சொல்கிறார்.—யோவான் 1:25-27.
வரவிருந்த மேசியாவை, அதாவது ராஜாவாக ஆகப்போகிறவரை, ஏற்றுக்கொள்வதற்கு மக்களுடைய மனநிலையில் மாற்றம் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தி, மேசியாவை ஏற்றுக்கொள்ள மக்களைத் தயார்படுத்துகிற ஒரு வேலையைச் செய்வதாக யோவான் சொல்கிறார். “எனக்குப் பின்பு வரப்போகிறவர் என்னைவிட வல்லவர்; அவருடைய செருப்புகளைக் கழற்றுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றும் சொல்கிறார். (மத்தேயு 3:11) அதோடு, “எனக்குப் பின்னால் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார்; ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்” என்றும் யோவான் சொல்கிறார்.—யோவான் 1:15.
யோவான் சரியான சமயத்தில்தான் “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்ற செய்தியைப் பிரசங்கித்தார். (மத்தேயு 3:2) இந்தச் செய்தி, யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கப்போகிறார் என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தியது.