அதிகாரம் 18
யோவானைவிட இயேசுவின் செயல்கள் அதிகமாகின்றன
மத்தேயு 4:12 மாற்கு 6:17-20 லூக்கா 3:19, 20 யோவான் 3:22–4:3
இயேசுவின் சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்
யோவான் ஸ்நானகர் சிறையில் அடைக்கப்படுகிறார்
கி.பி. 30-ல் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடிய பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமிலிருந்து கிளம்புகிறார்கள். ஆனால், அவர்கள் கலிலேயாவில் இருக்கிற தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போவதில்லை. அதற்குப் பதிலாக, யூதேயாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போகிறார்கள். அங்கே நிறைய பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அதே வேலையைத்தான் யோவான் ஸ்நானகரும் கிட்டத்தட்ட ஒரு வருஷமாக யோர்தான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் செய்துவருகிறார். யோவானின் சீஷர்களில் சிலரும் அவருடன் இருக்கிறார்கள்.
இயேசு யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. இயேசுவின் சீஷர்கள்தான் அவருடைய வழிநடத்துதலின்கீழ் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில், திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு விரோதமாகப் பாவம் செய்து மனம் திருந்துகிற யூதர்களிடம்தான் இயேசுவும் யோவானும் பிரசங்கிக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 19:4.
யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் இயேசுவைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். அவர்கள் யோவானிடம், “உங்களோடு ஒருவர் [இயேசு] இருந்தாரே . . . அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று குறை சொல்கிறார்கள். (யோவான் 3:26) ஆனால், யோவான் அவர்மேல் பொறாமைப்படவில்லை. எல்லாரும் இயேசுவிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுகிறார். அதேபோல், தன்னுடைய சீஷர்களும் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவர்களிடம், “‘நான் கிறிஸ்து அல்ல, ஆனால் அவருக்குமுன் அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்” என்று சொல்கிறார். அதோடு, இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள எளிமையான ஒரு உதாரணத்தையும் சொல்கிறார். “மணமகள் யாருக்குச் சொந்தமோ அவர்தான் மணமகன். இருந்தாலும், மணமகனின் தோழன் அவர் பக்கத்தில் நின்று அவர் பேசுவதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் எனக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது” என்று சொல்கிறார்.—யோவான் 3:28, 29.
யோவான் ஸ்நானகர் மணமகனின் தோழனைப் போல இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னால்தான், அவர் தன்னுடைய சீஷர்களுக்கு இயேசுவைச் சந்தோஷமாக அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அவர்களில் சிலர் இயேசுவின் பின்னால் போனார்கள். பிற்பாடு, அவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவார்கள். இப்போது தன்னோடு இருக்கிற சீஷர்களும் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று யோவான் நினைக்கிறார். சொல்லப்போனால், கிறிஸ்துவின் ஊழியத்துக்காக வழியைத் தயார்படுத்துவதுதான் யோவானின் வேலை. அதனால்தான், “அவருடைய செயல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்க வேண்டும், ஆனால் என்னுடைய செயல்கள் குறைந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று யோவான் சொல்கிறார்.—யோவான் 3:30.
யோவான் என்ற பெயருள்ள இன்னொருவர் இயேசுவின் சீஷராக இருக்கிறார். இவர் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவர். இயேசு எங்கிருந்து வந்தார் என்பதைப் பற்றியும், மனிதர்களை மீட்பதில் அவருக்கு இருக்கிற முக்கியமான பொறுப்பைப் பற்றியும் அவர் இப்படி எழுதியிருக்கிறார்: “மேலிருந்து வருகிறவர் எல்லாருக்கும் மேலானவர். . . . தகப்பன் தன்னுடைய மகன்மேல் அன்புகாட்டி, எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது, அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்.” (யோவான் 3:31, 35, 36) எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மை இது!
தன்னுடைய செயல்கள் குறைந்துகொண்டே போகும் என்று யோவான் ஸ்நானகர் சொல்லிக் கொஞ்ச நாட்களிலேயே, ஏரோது ராஜா அவரைக் கைது செய்கிறான். ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன்னுடைய மனைவியாக வைத்திருக்கிறான். அவன் செய்வது தவறு என்று யோவான் வெளிப்படையாகக் கண்டிக்கிறார். அதனால், ஏரோது அவரைச் சிறையில் தள்ளுகிறான். இயேசு இதைக் கேள்விப்பட்டபோது, யூதேயாவிலிருந்து கிளம்பி தன்னுடைய சீஷர்களோடு ‘கலிலேயாவுக்குப் புறப்பட்டுப் போகிறார்.’—மத்தேயு 4:12; மாற்கு 1:14.