அதிகாரம் 65
எருசலேமுக்குப் போகும் வழியில் கற்பிக்கிறார்
மத்தேயு 8:19-22 லூக்கா 9:51-62 யோவான் 7:2-10
இயேசுவின் சகோதரர்கள் அவரை எப்படிக் கருதுகிறார்கள்
கடவுளுக்குச் சேவை செய்வது எவ்வளவு முக்கியம்?
இயேசு கொஞ்சக் காலத்துக்கு கலிலேயாவிலேயே ஊழியம் செய்கிறார். ஏனென்றால், யூதேயாவில் இருக்கிறவர்களைவிட இங்கிருக்கிற மக்கள்தான் இயேசு சொல்வதை நன்றாகக் கேட்கிறார்கள். அதோடு, அவர் எருசலேமுக்குப் போயிருந்தபோது ஓய்வுநாளில் ஒருவரைக் குணமாக்கியதால், ‘யூதர்கள் அவரைக் கொலை செய்ய இன்னும் தீவிரமாக முயற்சி செய்திருந்தார்கள்.’—யோவான் 5:18; 7:1.
இப்போது கி.பி. 32-ஆம் வருஷம். இது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமாக இருக்கலாம். கூடாரப் பண்டிகை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கின்றன. இந்தப் பண்டிகை ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படும். எட்டாவது நாளில் விசேஷ மாநாடு நடக்கும். விவசாய வருஷத்தின் முடிவில் இந்தப் பண்டிகை நடக்கும். இந்தச் சமயத்தில், மக்கள் எல்லாரும் ரொம்பச் சந்தோஷமாக இருப்பார்கள், கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்.
இயேசுவின் சகோதரர்களான யாக்கோபு, சீமோன், யோசே, யூதாஸ் ஆகியோர் அவரிடம் வந்து, “நீங்கள் இந்த இடத்தைவிட்டு யூதேயாவுக்குப் போங்கள்” என்று சொல்கிறார்கள். அந்த நாட்டில், மத சம்பந்தமான விஷயங்களுக்கு எருசலேம்தான் மையமாக இருந்தது. வருஷா வருஷம் மூன்று பண்டிகைகள் நடக்கும்போது, அந்த நகரத்தில் கூட்டம் அலைமோதும். அதனால் அவர்கள், “பிரபலமாக இருக்க விரும்புகிற யாரும் எதையும் ரகசியமாகச் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் செய்வதாக இருந்தால் ஊர் உலகத்துக்கே செய்து காட்டுங்கள்” என்று இயேசுவிடம் சொல்கிறார்கள்.—யோவான் 7:3, 4.
அவருடைய சகோதரர்கள் நான்கு பேரும் அவர்தான் மேசியா என்பதை ‘விசுவாசிக்கவில்லை.’ ஆனாலும், பண்டிகைக்கு வருகிற மக்கள் அவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படிச் செய்வது ஆபத்தில் போய் முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் இயேசு அவர்களிடம், “இந்த உலகம் உங்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது. பண்டிகைக்கு நீங்கள் போங்கள்; நான் இப்போது போகப்போவதில்லை; ஏனென்றால், என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை” என்று சொல்கிறார்.—யோவான் 7:5-8.
பண்டிகைக்குப் போகிற மற்ற ஆட்களோடு சேர்ந்து இயேசுவின் சகோதரர்கள் போகிறார்கள். ஒருசில நாட்களுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யார் கண்ணிலும் படாமல் ரகசியமாகப் போகிறார்கள். பொதுவாக, எல்லாரும் யோர்தான் ஆறு வழியாகப் போவார்கள். ஆனால், இயேசுவும் அவருடைய சீஷர்களும் நேரடியாக சமாரியா வழியாகப் போகிறார்கள். சமாரியாவில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் தேவைப்படும். அதனால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனக்கு முன்னால் தூதுவர்களை அனுப்புகிறார். அவர் யூத பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் போய்க்கொண்டிருப்பதால், சமாரியாவில் இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்கவும், உபசரிக்கவும் மறுத்துவிடுகிறார்கள். அப்போது யாக்கோபும் யோவானும், “எஜமானே, எங்களுக்குக் கட்டளையிடுங்கள், வானத்திலிருந்து நெருப்பை வரவழைத்து இவர்களை அழித்துவிடுகிறோம்” என்று கோபமாகச் சொல்கிறார்கள். (லூக்கா 9:54) அப்படிச் சொல்வதுகூட தவறு என்று இயேசு அவர்களைக் கண்டிக்கிறார். அதற்குப் பிறகு, அவர்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது வேத அறிஞன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்” என்று சொல்கிறான். அதற்கு இயேசு அவனிடம், “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” என்று சொல்கிறார். (மத்தேயு 8:19, 20) தன்னைப் பின்பற்றினால் அவன் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார். ஆனால், இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த வேத அறிஞனுக்கு மனத்தாழ்மை இல்லாததுபோல் தெரிகிறது. அதனால் நாம் ஒவ்வொருவரும், ‘இயேசுவைப் பின்பற்ற நான் எந்தளவு தயாராக இருக்கிறேன்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
பின்பு இன்னொருவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு சொல்கிறார். அதற்கு அவன், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்கிறான். அவனுடைய சூழ்நிலை இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர், “இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும், நீ போய்க் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லா இடங்களிலும் சொல்” என்கிறார். (லூக்கா 9:59, 60) அவனுடைய அப்பா உயிரோடுதான் இருக்கிறார். அவர் இறந்துபோயிருந்தால், அவன் இப்போது இயேசுவோடு நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டான். இதிலிருந்து, கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க அவன் தயாராக இல்லை என்பது தெரிகிறது.
அவர்கள் எருசலேமுக்குப் போகிற பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது வேறொருவன் வந்து, “எஜமானே, நான் உங்களைப் பின்பற்றி வருவேன். ஆனால், என் வீட்டில் இருப்பவர்களிடமிருந்து விடைபெற்று வர முதலில் எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்கிறான். அதற்கு இயேசு, “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் திரும்பிப் பார்க்கிற எவனும் கடவுளுடைய அரசாங்கத்துக்குத் தகுதி இல்லாதவன்” என்று சொல்கிறார்.—லூக்கா 9:61, 62.
இயேசுவை உண்மையிலேயே பின்பற்ற நினைக்கிறவர்கள் கடவுளுக்குச் சேவை செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும். நிலத்தை உழுகிறவன் நேராகப் பார்க்கவில்லை என்றால், அவன் உழும்போது ஏற்படுகிற பள்ளங்கள் நேராக இருக்காது. பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக அவன் கலப்பையைக் கீழே வைத்துவிட்டால், வயலில் வேலை நடக்காது. அதேபோல, சாத்தானின் உலகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்தால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வழியில் அவரால் தொடர்ந்து நடக்க முடியாது.