பாடம் 8
ஆபிரகாமும் சாராளும் கீழ்ப்படிந்தார்கள்
பாபேல் நகரத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் ஊர் என்ற நகரம் இருந்தது. அங்கே இருந்த மக்கள் யெகோவாவை வணங்காமல், நிறைய பொய் தெய்வங்களை வணங்கினார்கள். ஆனால், அங்கே இருந்த ஒருவர் யெகோவாவை மட்டுமே வணங்கினார். அவர் பெயர் ஆபிரகாம்.
யெகோவா ஆபிரகாமிடம், ‘நீ உன் வீட்டையும், உன் சொந்தக்காரர்களையும் விட்டுவிட்டு நான் காட்டுகிற இடத்துக்குப் போ’ என்று சொன்னார். பிறகு, ‘நான் உன்னை பெரிய தேசமாக ஆக்குவேன். பூமியில் இருக்கிற நிறைய மக்களுக்கு உன் மூலமாக நல்லது செய்வேன்’ என்று அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தார்.
யெகோவா எங்கே போகச் சொல்கிறார் என்று ஆபிரகாமுக்குத் தெரியாது. ஆனாலும், அவர் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார். ஆபிரகாம், அவருடைய மனைவி சாராள், அவருடைய அப்பா தேராகு, அவருடைய அண்ணன் மகன் லோத்து ஆகியோர் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ரொம்பத் தூரத்துக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
கடைசியில், யெகோவா சொன்ன இடத்துக்கு ஆபிரகாமும் அவருடைய குடும்பத்தாரும் வந்து சேர்ந்தார்கள். அந்த இடத்துக்கு, கானான் தேசம் என்று பெயர். அப்போது, ஆபிரகாமுக்கு 75 வயது. அங்கே, கடவுள் மறுபடியும் ஆபிரகாமிடம் பேசினார். ‘சுற்றிலும் நீ பார்க்கிற இந்த இடம் முழுவதையும் உன்னுடைய பிள்ளைகளுக்குத் தருவேன்’ என்று கடவுள் வாக்குக் கொடுத்தார். ஆனால், ஆபிரகாமும் சாராளும் வயதானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளும் இல்லை. அப்படியிருக்கும்போது, யெகோவா சொன்னது எப்படி நடக்கும்?
“விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தனக்குச் சொத்தாகக் கிடைக்கவிருந்த இடத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார்.”—எபிரெயர் 11:8