பாடம் 84
தண்ணீர்மேல் இயேசு நடக்கிறார்
நோயாளிகளை இயேசு குணமாக்கினார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார் என்று படித்தோம், இல்லையா? அவர் காற்றையும் மழையையும்கூட அடக்கினார். இயேசு ஒரு மலையில் ஜெபம் செய்த பிறகு, அங்கிருந்து கலிலேயா கடலைப் பார்த்தார். அந்தக் கடலில் புயல் அடிப்பது தெரிந்தது. அவருடைய அப்போஸ்தலர்கள் அப்போது படகில் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் படகை ஓட்ட ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். உடனே, இயேசு மலையிலிருந்து இறங்கி வந்து, தண்ணீர்மேல் நடந்து அவர்களுடைய படகை நோக்கிப் போனார். யாரோ ஒருவர் தண்ணீர்மேல் நடந்து வருவதைப் பார்த்து அப்போஸ்தலர்கள் பயந்துபோனார்கள். அதனால் இயேசு, ‘பயப்படாதீர்கள், நான்தான்’ என்று அவர்களிடம் சொன்னார்.
அப்போது பேதுரு, ‘எஜமானே, நீங்களா? அப்படியென்றால், தண்ணீர்மேல் நடந்து உங்களிடம் வர எனக்குக் கட்டளை கொடுங்கள்’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘வா!’ என்றார். புயல் அடித்தாலும், பேதுரு படகிலிருந்து இறங்கி தண்ணீர்மேல் நடந்து இயேசுவை நோக்கிப் போனார். ஆனால் இயேசுவுக்குப் பக்கத்தில் போனபோது, புயலைப் பார்த்துப் பயந்துபோனார். உடனே தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். அதனால், ‘எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று அலறினார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்து, ‘ஏன் சந்தேகப்பட்டாய்? உன்னுடைய விசுவாசம் எங்கே?’ என்று கேட்டார்.
பிறகு, இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினார்கள். உடனே, புயல் நின்றுவிட்டது. அப்போஸ்தலர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர்கள் இயேசுவிடம், ‘நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்’ என்று சொன்னார்கள்.
இதேபோல், இன்னொரு தடவையும் இயேசு புயலை அடக்கியிருக்கிறார். அப்போது இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கடலின் அக்கரைக்குப் படகில் போய்க்கொண்டிருந்தார்கள். படகின் பின்பக்கத்தில் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், பயங்கரமாக புயல் அடித்தது. அலைகள் படகின் மீது மோதின. படகில் தண்ணீர் ஏறியது. உடனே அப்போஸ்தலர்கள் இயேசுவை எழுப்பி, ‘போதகரே, நாம் சாகப் போகிறோம்! என்று அலறினார்கள். இயேசு எழுந்து கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு!’ என்று சொன்னார். உடனே, காற்றும் கடலும் அமைதியாகிவிட்டன. இயேசு தன் அப்போஸ்தலர்களிடம், ‘உங்கள் விசுவாசம் எங்கே?’ என்று கேட்டார். அப்போது அவர்கள், ‘காற்றும் கடலும்கூட இவருடைய பேச்சைக் கேட்கிறதே’ என்று பேசிக்கொண்டார்கள். இயேசுமேல் முழு நம்பிக்கை வைத்தால் எதைப் பார்த்தும் பயப்படத் தேவையில்லை என்று அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்கள்.
“என் வாழ்நாளெல்லாம் யெகோவா எனக்கு நல்லது செய்வார் என்ற விசுவாசம் மட்டும் இல்லையென்றால், என் கதி என்ன ஆகியிருக்குமோ?”—சங்கீதம் 27:13