14 ராகாப்
சொந்த மக்களைவிட யெகோவாவை முக்கியமாக நினைத்தாள்
“பேரீச்ச மரங்கள் நிறைந்த எரிகோ நகரத்தின்” மதில்மேல் ஒரு வீடு இருந்தது; அங்குதான் ராகாப் என்ற விலைமகள் இருந்தாள். (உபா. 34:3) அவளுடைய ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அந்த நகரத்துக்கு வெளியே இருந்த நிலப்பரப்பு சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாகத் தெரிந்தது. ஆனால், நகரத்துக்குள் அவள் நடந்துபோனபோது மக்கள் எல்லாருடைய முகமும் பயத்தில் இருண்டுபோயிருந்ததைப் பார்த்தாள். அவர்கள் ஏன் பயந்துபோயிருந்தார்கள்? தங்கள் நகரத்தைக் கைப்பற்ற இஸ்ரவேலர்களுக்கு யெகோவா உதவி செய்வார் என்றும், தங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
இஸ்ரவேலர்கள் எரிகோவுக்குப் பக்கத்தில் முகாம் போட்டிருந்தார்கள். 40 வருஷங்களுக்கு முன்பு பார்வோனின் படையை யெகோவா செங்கடலில் மூழ்கடித்து தன் மக்களைக் காப்பாற்றியிருந்தார். அதோடு, கொஞ்சக் காலத்துக்கு முன்புதான் பலம்படைத்த எமோரியர்களின் ராஜாக்களான சீகோனையும் ஓகையும் தோற்கடிக்க தன் மக்களுக்கு உதவி செய்திருந்தார். இத்தனைக்கும், இஸ்ரவேலர்கள் போர்வீரர்களாக இல்லை, வனாந்தரத்தில் வெறுமனே நாடோடிகளாகத்தான் இருந்தார்கள். இப்போது, அவர்கள் எரிகோவைத் தாக்கத் தயாராக இருந்தார்கள். ஏனென்றால், அங்கிருந்தவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும் தகுந்த தண்டனையைக் கொடுக்க யெகோவா முடிவு செய்திருந்தார்.
தன் நகரத்திலிருந்த மக்கள் மோசமானவர்கள் என்று ராகாபுக்குத் தெரியும். அவளே ஒரு விலைமகளாக கீழ்த்தரமான வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருந்தாள். ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்று கண்டிப்பாக அவள் ஆசைப்பட்டிருப்பாள். யெகோவா செய்ததையெல்லாம் அவள் கேள்விப்பட்டபோது அவரை நினைத்துப் பயந்து நடுங்குவதற்குப் பதிலாக அவர்மேல் விசுவாசம் வைத்தாள். ஏனென்றால், யெகோவா கானானியர்களின் தெய்வங்களைப் போல இல்லை என்று அவள் புரிந்துகொண்டாள். யெகோவா எப்போதுமே நியாயமாக நடந்துகொள்கிறார், ஒழுக்கத்தை உயர்வாக மதிக்கிறார், தன் மக்களைப் பாதுகாக்கிறார், கண்ணியமாக நடத்துகிறார் என்றெல்லாம் அவள் புரிந்துகொண்டாள். இப்படிப்பட்ட அருமையான கடவுளை வணங்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு வந்தது.
ஒருநாள் ராத்திரி, முன்பின் தெரியாத இரண்டு பேர் அவளுடைய வீட்டுக்கு வந்தார்கள். ராத்திரி தங்குவதற்கு இடம் கேட்டார்கள். அவர்கள் உளவு பார்க்க வந்த இஸ்ரவேலர்கள் என்று ராகாப் சீக்கிரத்தில் கண்டுபிடித்துவிட்டாள்! அந்த இஸ்ரவேலர்கள் வந்த விஷயம் எரிகோவின் ராஜாவுக்கும் தெரியவந்தது. உடனே, அவன் ராகாபிடம் ஆட்களை அனுப்பி அந்த இஸ்ரவேலர்களை ஒப்படைக்கச் சொன்னான். அப்போது ராகாப், தன்னுடைய மக்கள் பக்கம் நிற்பதா அல்லது யெகோவா பக்கம் நிற்பதா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தது. இது அவளுடைய வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு முக்கியமான முடிவாக இருந்தது.
ராகாப் தைரியமாக யெகோவாவின் பக்கம் நின்றாள். உளவு பார்க்க வந்த அந்த இரண்டு இஸ்ரவேலர்களையும் தன்னுடைய மொட்டைமாடியில் ஒளித்துவைத்தாள். ஆனால், அவர்கள் அங்கிருந்து போய்விட்டதாக ராஜாவின் ஆட்களிடம் சொன்னாள். அந்த ஆட்கள் கிளம்பியதும், அவள் மொட்டைமாடிக்குப் போய் அந்த இஸ்ரவேலர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். இப்படி, அவர்களுடைய கடவுள்மேல் விசுவாசம் வைத்ததால்தான் அவர்களைக் காப்பாற்றியதாகச் சொன்னாள். அதோடு, அவர்களுக்குத் தைரியம் தரும் ஒரு விஷயத்தையும் சொன்னாள். அதாவது, எரிகோவில் இருந்தவர்கள் இஸ்ரவேலர்களை நினைத்துப் பயந்து நடுங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதோடு, யெகோவாவின் உதவியுடன் இஸ்ரவேலர்கள் எரிகோவை அழிக்கும்போது தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டாள்.
தன்னுடைய மக்களையும் ஒழுக்கக்கேடான வாழ்க்கையையும் விட்டுவிட்டு வர ஒரு விலைமகளுக்கு எப்படித் தைரியம் வந்தது?
ராகாப் அந்த இரண்டு இஸ்ரவேலர்களுடைய உயிரையும் காப்பாற்றுவதன் மூலம், தான் யெகோவாவின் பக்கம் இருப்பதைக் காட்டியிருந்தாள். அதனால், அவள் கேட்டுக்கொண்டபடியே செய்ய அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ராகாபுக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் எதுவும் ஆகாது என்று வாக்குக் கொடுத்தார்கள். ஆனால், அவளும் அவளுடைய குடும்பமும் தப்பிக்க வேண்டுமென்றால் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதாவது, அவர்கள் வந்துபோன விஷயத்தை அவள் யாரிடமும் சொல்லக் கூடாது... நகரத்தின் மதில்மேல் இருந்த அவளுடைய வீட்டு ஜன்னலில் சிவப்புக் கயிற்றைக் கட்டித் தொங்கவிட வேண்டும்... போர் நடக்கும்போது அவளுடைய வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்... என்றெல்லாம் சொன்னார்கள்.
ராகாப் தன் வீட்டு ஜன்னலில் ஒரு கயிற்றைக் கட்டி அந்த இரண்டு இஸ்ரவேலர்களும் தப்பித்துப்போக உதவி செய்தாள். அதன் பிறகு, அவர்கள் சொன்ன மாதிரியே தன்னுடைய ஜன்னலில் சிவப்புக் கயிற்றைக் கட்டித் தொங்கவிட்டாள், பிறகு தன் குடும்பத்தோடு தன் வீட்டுக்குள்ளேயே இருந்தாள். அந்த இஸ்ரவேலர்கள் வந்துபோன விஷயத்தைப் பற்றி அவள் யாரிடமும் வாய் திறக்கவில்லை. அவர்களைக் காப்பாற்றிய விஷயம் மட்டும் அந்த நகரத்து ஆட்களுக்குத் தெரிய வந்திருந்தால் கண்டிப்பாக அவளைக் கொன்றுபோட்டிருப்பார்கள்! அப்படியென்றால், அவள் எப்பேர்ப்பட்ட தைரியத்தைக் காட்டினாள்! பிறகு, யோர்தான் ஆற்றைக் கடந்துவர யெகோவா இஸ்ரவேலர்களுக்கு அற்புதமாக உதவி செய்ததைப் பற்றி ராகாப் கேள்விப்பட்டபோது, தான் எடுத்த முடிவு சரிதான் என்பது அவளுக்கு இன்னும் உறுதியாகியிருக்கும். எரிகோவில் இருந்த ஜனங்கள், தங்களுடைய நகரத்தை இஸ்ரவேலர்கள் ஏழு நாட்கள் சுற்றி வந்ததைப் பார்த்தபோது பயத்தில் நடுநடுங்கிப்போயிருப்பார்கள். கடைசியாக, ஏழாவது நாளில் ஊதுகொம்புகள் ஊதப்பட்டன. இஸ்ரவேலர்கள் சத்தமாகக் குரல் எழுப்பினார்கள். அப்போது, எரிகோவின் மதில்கள் இடிந்து தரைமட்டமாயின. ஆனால், ராகாபின் வீடு இருந்த பகுதி மட்டும் உடையாமல் அப்படியே இருந்தது. அவளும் அவளுடைய குடும்பமும் அவளுடைய வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள்.
போர் முடிந்த பிறகு, ராகாபையும் அவளுடைய குடும்பத்தையும் அந்த உளவாளிகள் அவளுடைய வீட்டுக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசுவா கட்டளை கொடுத்திருந்த மாதிரியே ராகாபும் அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டார்கள். கொஞ்ச நாட்களில், ராகாப் இஸ்ரவேலர்களில் ஒருத்தியாக ஆனாள். ஒரு இஸ்ரவேலரை அவள் கல்யாணம் செய்துகொண்டாள். அவளுக்குப் பிள்ளைகளும் பிறந்தார்கள். நிறைய வருஷங்களுக்குப் பிறகு ராகாபுடைய வம்சத்தில்தான் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே தைரியசாலியான ஒருவர் பிறந்தார்—அவர்தான் இயேசு கிறிஸ்து. (மத். 1:5, 16) விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டியதற்காக ராகாபை யெகோவா எவ்வளவு ஆசீர்வதித்திருக்கிறார் பார்த்தீர்களா!
பைபிளில் பாருங்கள்:
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
ராகாப் எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டினாள்?
ஆராய்ந்து பாருங்கள்
1. எரிகோவில் ராகாபுக்கு வாழ்க்கை எப்படி இருந்தது என்று விளக்குங்கள். (w13 11/1 பக். 12 பாரா 4–பக். 13 பாரா 1-wcgr)
2. அந்த உளவாளிகள் ராகாபின் வீட்டில் தங்கியது அவளோடு ஒழுக்கக்கேடான உறவு வைத்துக்கொள்வதற்காக இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? (w93 12/15 பக். 24 பாரா 4)
3. ராகாப் வீட்டின் மொட்டைமாடியில் ஏன் ஆளிவிதைச் செடியின் தட்டைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன, அவை எதற்குப் பயன்படுத்தப்பட்டன? (it “ஆளிவிதைச் செடி” பாரா. 2-4-wcgr) படம் A
Thanks for your interest in my photos/Moment Open via Getty Images
படம் A: வயலில் விளைந்திருக்கும் ஆளிவிதைச் செடிகள்
4. உளவாளிகள் போய்விட்டதாக ராஜாவின் ஆட்களிடம் ராகாப் பொய் சொன்னது ஏன் தவறல்ல? (w04 12/1 பக். 9 பாரா 1) படம் B
படம் B
பாடங்களை யோசியுங்கள்
ஒழுக்கக்கேடான வாழ்க்கையை விட்டுவிடுவதற்கும் இஸ்ரவேலர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதற்கும் ராகாபுக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது? ராகாபின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ள பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
பொய்ச் சொல்லக் கூடாது என்று பைபிள் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால், சிலசமயங்களில் நம் சகோதர சகோதரிகளைப் பற்றிய ரகசியங்களைச் சொல்லச் சொல்லி எதிரிகள் நம்மைக் கட்டாயப்படுத்தலாம். அந்த மாதிரி சமயங்களில் ராகாபுடைய உதாரணம் நமக்கு எப்படி உதவி செய்யும்? (நீதி. 11:13; பிர. 3:7; எபே. 4:25) படம் C
படம் C
படம் C
ராகாபைப் போல நீங்கள் வேறு எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டலாம்?
இன்னும் பெரிய விஷயங்களை யோசியுங்கள்
இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்தப் பதிவு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
ராகாப் உயிரோடு வரும்போது அவளிடம் நான் என்ன கேட்பேன்?
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ராகாபின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
“முடிவு வரும்போது நீங்கள் எங்கே இருக்க வேண்டும்?” (w09 5/15 பக். 6-8)
இந்த பைபிள் பதிவைக் கற்பனை செய்து பார்க்க, இதைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.