28 ஆசா
“வாழ்நாளெல்லாம்” யெகோவாவுக்கு உண்மையோடு நடந்துகொண்டார்
ஆசா ராஜாவுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும்போல் இருந்திருக்கும். போர் செய்வதற்காக எத்தியோப்பியாவிலிருந்து ஒரு பெரிய படை யூதாவுக்கு வந்து நின்றுகொண்டிருந்தது. யெகோவா தன்னுடைய மக்களை நிறைய தடவை போருக்கு அனுப்பியிருந்தார். ஆனால், இவ்வளவு பெரிய படையை அவர்கள் எதிர்த்துப் போர் செய்ததாக எந்தப் பதிவும் இல்லை. இந்தப் படையில் பத்து லட்சம் போர்வீரர்கள் இருந்தார்கள்! ஆசாவின் படையிலிருந்த வீரர்களைவிட இவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தார்கள். இவ்வளவு பெரிய படையை ஆசாவால் எப்படித் தைரியமாக எதிர்த்து நிற்க முடிந்தது?
இதற்கு முன்பும், சிக்கலான சில சூழ்நிலைகளில் ஆசா தைரியத்தைக் காட்டியிருந்தார். பத்து வருஷங்களுக்கு முன்பு யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்த சமயத்திலிருந்து, நிறைய விஷயங்களில் அவர் தன்னுடைய எள்ளு தாத்தா தாவீதைப் போலவே நடந்துகொண்டார். எப்படி? யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடப்பதற்குத்தான் ஆசா எப்போதும் ஆசைப்பட்டார். யெகோவாவுடைய தீர்க்கதரிசிகளான ஓதேத்தும், ஓதேத்தின் மகன் அசரியாவும் சொன்ன விஷயங்களை மனத்தாழ்மையோடு கேட்டு நடந்தார். சாலொமோன் ராஜா விசுவாசதுரோகியாக மாறிய சமயத்திலிருந்தே நடந்துவந்த சில அக்கிரமங்களுக்கு இளம் ராஜாவான ஆசா தைரியமாக முடிவுகட்டினார். பொய் தெய்வங்களின் சிலைகளை உடைத்துப் போட்டார். கோயில்களில் இருந்த ஆண் விபச்சாரக்காரர்களைத் தைரியமாகத் தேசத்தைவிட்டே துரத்தினார்.
தன் குடும்பத்தில் இருந்தவர்கள் தவறு செய்தபோதுகூட ஆசா துணிந்து நடவடிக்கை எடுத்தார். தன்னுடைய குடும்பத்தைவிட யெகோவாவுக்குத்தான் அவர் உண்மையாக இருந்தார். உதாரணத்துக்கு, யூதாவின் ‘ராஜமாதாவாக’ பெரிய அந்தஸ்தில் இருந்த அவருடைய பாட்டி மாக்காள் ஒரு அருவருப்பான சிலையைச் செய்து வைத்திருந்தாள். அநேகமாக, பாலியல் முறைகேட்டைத் தூண்டுவதற்காக அதை அவள் செய்து வைத்திருக்கலாம். அதனால், அவளிடமிருந்து ராஜமாதா அந்தஸ்தை ஆசா பறித்துவிட்டார். அந்த அருவருப்பான சிலையையும் சுட்டெரித்தார். அவர் இப்படியெல்லாம் செய்தது யெகோவாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், பத்து வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதியைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அதன் பிறகுதான், எத்தியோப்பியர்கள் யூதாவுக்குப் படைதிரண்டு வந்தார்கள். அப்போது, யெகோவா எப்படி ஆசாவுக்கு உதவி செய்தார்?
பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் எதிரிகளின் படைகளிலேயே ரொம்பப் பெரிய படையை ஆசா ராஜா எதிர்த்து நின்றார்
எத்தியோப்பியர்களின் பெரிய படையைப் பார்த்த உடனேயே ஆசா யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவர் செய்த இந்த ஜெபத்தைக் கேட்டபோது ஆசாவின் வீரர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்: “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும். அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம், இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம். யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய கடவுள். அற்ப மனிதன் உங்களை ஜெயிக்க விட்டுவிடாதீர்கள்.” இந்த உருக்கமான ஜெபம் நிச்சயம் யெகோவாவின் மனதைத் தொட்டிருக்கும். ஆசா ஒருவிதத்தில் சவுலின் மகன் யோனத்தானைப் போலவே இருந்ததை யெகோவா கவனித்தார்; யெகோவாவுக்கு எண்ணிக்கையெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை யோனத்தானும் சரி, ஆசாவும் சரி, புரிந்துவைத்திருந்தார்கள். (1 சா. 14:6) இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்கிற யெகோவாவே ஒருவரின் பக்கம் இருக்கும்போது, எவ்வளவு பெரிய படை எதிர்த்து வந்தாலும் கண்டிப்பாகத் தோற்றுத்தான் போகும்!
ஆசா தன்னுடைய வீரர்களைக் கூட்டிக்கொண்டு போருக்குப் போனார். அப்போது என்ன நடந்தது? “யெகோவாவும் அவருடைய படைவீரர்களும் எத்தியோப்பியர்களை அடியோடு அழித்துப்போட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அந்த எதிரிகளில் ஒருவர்கூட உயிர்தப்பவில்லை.
அதன் பிறகு, யெகோவாவை வணங்குவதற்கு மக்களை ஆசா தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். அதனால், வடக்கே பத்துக் கோத்திர ராஜ்யத்திலிருந்த நிறையப் பேர், எருசலேம் ஆலயத்தில் யெகோவாவை வணங்குவதற்காகத் தெற்கே யூதாவுக்குக் குடிமாறி வந்தார்கள். பிறகு, யூதாவில் இருந்த எல்லாரையும் ஆசா ஒன்றுகூட்டினார். யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதாக அவர்கள் எல்லாரும் உறுதிமொழி எடுத்தார்கள்.
ஆசா செய்த சில மோசமான தவறுகளைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. யூதாவைத் தாக்க இஸ்ரவேலின் ராஜா வந்தபோது, ஆசா யெகோவாவிடம் உதவி கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, சீரியாவின் ராஜாவுக்கு லஞ்சம் கொடுத்து இஸ்ரவேலைத் தாக்கச் சொன்னார். ஆசாவைத் திருத்துவதற்காக இறைவாக்கு சொல்பவராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்த அனானியை யெகோவா அனுப்பினார். ஆனால், ஆசாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால் அனானியைப் பிடித்து சிறையில் தள்ளினார். வயதான காலத்தில், ஆசாவின் உடல்நிலை ரொம்ப மோசமானபோதுகூட அவர் யெகோவாவிடம் உதவி கேட்காமல் மருத்துவர்களிடம் உதவி கேட்டார். ஆரம்பத்தில் அவருக்கு இருந்த பலமான விசுவாசம் அதன் பிறகு அவருக்கு இல்லாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.
“இருந்தாலும், ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. யெகோவா எந்தளவு இரக்கமுள்ள ஒரு அப்பாவாக இருக்கிறார்! 41 வருஷங்கள் ராஜாவாக ஆட்சி செய்த ஆசாவைப் பற்றிய பதிவுகளிலிருந்து, யெகோவாவை நேசிக்கிறவர்களை அவரும் நேசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, யெகோவா நமக்காகச் செய்ததை நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது. வருஷங்கள் போகப் போக, யெகோவா நமக்காகச் செய்கிற எல்லாவற்றையும் நாம் இன்னும் அதிகமாகப் பார்ப்போம். அதனால், நம்முடைய விசுவாசமும் தைரியமும் அதிகமாகிக்கொண்டே போகும்!
பைபிளில் பாருங்கள்:
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
ஆசா எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டினார்?
ஆராய்ந்து பாருங்கள்
1. “பூஜைக் கம்பம்” என்றால் என்ன, அது எந்தத் தெய்வத்தின் சின்னமாக இருந்தது? விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் சிலர் அந்தத் தெய்வத்தை வணங்கினார்கள் என்பதற்கு என்ன தொல்பொருள் ஆதாரங்கள் இருக்கின்றன? (1 ரா. 15:12, 13; w08 6/1 பக். 10 பாரா. 1-5-wcgr) படம் A
படம் A: ஆசா, தன்னுடைய பாட்டியிடமிருந்து ராஜமாதா அந்தஸ்தைப் பறித்துவிட்டார், அவள் செய்து வைத்திருந்த அருவருப்பான சிலையையும் சுட்டெரித்தார்
படம் A: ஆசா, தன்னுடைய பாட்டியிடமிருந்து ராஜமாதா அந்தஸ்தைப் பறித்துவிட்டார், அவள் செய்து வைத்திருந்த அருவருப்பான சிலையையும் சுட்டெரித்தார்
2. இறைவாக்கு சொல்பவரான அனானியின் மகன் யாராக இருந்திருக்கலாம்? அவர் எப்படித் தன்னுடைய அப்பா மாதிரியே தைரியமாக நடந்துகொண்டார்? (2 நா. 19:2; it “அனானி” எண் 2-wcgr)
3. ஆசா தவறுகள் செய்திருந்தாலும், அவர் “யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்” என்று பைபிள் ஏன் சொல்கிறது? (1 ரா. 15:14; w17.03 பக். 19 பாரா. 5-6)
4. ஆசா ராஜா எல்லா “ஆராதனை மேடுகளையும்” அழித்துப்போட்டாரா? (2 நா. 14:2-5; 15:17; w05 12/1 பக். 20 பாரா 3)
பாடங்களை யோசியுங்கள்
அசரியா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் ஆசாவை உற்சாகப்படுத்தியதால், யெகோவாவை சரியான விதத்தில் வணங்க மக்களுக்கு அவர் உதவி செய்தார். நீங்களும் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்? படம் B
படம் B
ஒரு பெரிய படையைத் தோற்கடிக்க வேண்டியிருந்தபோது ஆசா யெகோவாவை நம்பி அவரிடம் உதவி கேட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு சின்ன படையைத் தோற்கடிக்க வேண்டியிருந்தபோது மனிதர்களை நம்பி அவர்களிடம் உதவி கேட்டார். நாம் எல்லா விஷயங்களிலும் யெகோவாவை நம்பியிருப்பது முக்கியம் என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது? (நீதி. 3:5, 6)
ஆசாவைப் போல நீங்கள் எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டலாம்?
இன்னும் பெரிய விஷயங்களை யோசியுங்கள்
இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்தப் பதிவு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
ஆசா உயிரோடு வரும்போது அவரிடம் நான் என்ன கேட்பேன்?
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் வாழும் நாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் யெகோவாவை வணங்க முடிகிறது என்றால், அந்த வாய்ப்பை ஆசாவைப் போலவே நீங்கள் எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?
“அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்” (w20.09 பக். 14-19)
யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் போராடும்போது, ஆசாவின் உதாரணம் நம்மை எப்படி உற்சாகப்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள்.
‘உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’ (w12 8/15 பக். 8-10)