“எவனும் உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படிஉங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்”
“மாயமான தாழ்மையில் . . . விருப்பமுற்று தன் மாம்ச சிந்தையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்.”—கொலோசெயர் 2:19.
1, 2. எவ்விதமாக அநேகர் உடன் மானிடரின் நித்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்திருக்கிறார்கள்?
முதல் மனித பாவியாகிய ஏவாளை மரணத்துக்கு வழிநடத்தியது தந்திரமுள்ள மீமானிட ஆவி சிருஷ்டியாகும். இரண்டாவது பாவியாகிய ஆதாமை குற்றஞ் செய்ய தூண்டியது வெறும் ஒரு மனுஷியாக இருந்த அவனுடைய மனைவியாகும்.—1 தீமோத்தேயு 2:14; ஆதியாகமம் 3:17.
2 ஏவாள், ஒரு நீண்ட ஊர்வலத்தில் முதன்மையாக இருந்தாள். இதிலுள்ள தனி ஆட்களின் தூண்டுதல்களுக்கு இணங்கியிருந்தால், அது உடன் மானிடரின் நித்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்திருக்கும் பைபிள் முழுவதிலுமாக எதிரொலிக்கும் அவர்களுடைய வார்த்தைகளை கவனித்துக் கேளுங்கள். போத்திபாரின் மனவி யோசேப்பிடம்: “என்னோடே சயனி.” (ஆதியாகமம் 39:7) யோபின் மனைவி: “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்.” இஸ்ரவேலர் ஆரோனிடம்: “எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்.” (யாத்திராகமம் 32:1) பேதுரு இயேசு கிறிஸ்துவிடம்: “இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை.”—மத்தேயு 16:22.
3. கொலோசெயர் 2:18-ல் பவுல் என்ன எச்சரிப்பைக் கொடுத்தான்? இதன் விளைவாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?
3 அநேகமாக இத்தகைய தூண்டுதல்கள் யெகோவாவின் ஊழியர்களில் ஒருவர் கெட்டுப்போவதற்கே காரணமாக இருந்திருக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கு “பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராட்டம்” இருப்பது உண்மையாக இருந்தபோதிலும், அநேகமாக நேரடியாக அவர்களுக்கு ஆபத்தாக இருப்பது உடன் மானிடரே. (எபேசியர் 6:12) அதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக எச்சரித்தான்: “எந்த மனிதனும் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி செய்யாதிருக்கட்டும்.” (கொலோசெயர் 2:18) பந்தயப் பொருள் என்ன? அபூரணமான மனிதர்களின் செல்வாக்குக்கு இணங்கிவிடுவதன் மூலம் யெகோவாவின் ஊழியர்களில் சிலர் அதை ஏன் இழந்துவிட்டிருக்கிறார்கள்? இதற்கு பதிலை காண, பவுலை இந்த எச்சரிப்பை கொடுக்கத் தூண்டிய கொலோசே பட்டணத்திலிருந்த சூழ்நிலைமைகளை நாம் ஆராய்வோமாக.
4, 5. (எ) கொலோசெயுவில் என்ன மதசெல்வாக்குகள் இருந்தன? (பி) கிரேக்க தத்துவமும் கிழக்கத்திய ஆன்மீக உணர்வும் கலந்து தோன்றிய கிறிஸ்தவ கோட்பாடு (Gnosticism) என்பது என்ன? அதன் செல்வாக்கு என்ன ஆபத்தான பாதிப்புகளை கொண்டுவரக் கூடும்?
4 கொலோசே பல்வேறு மதங்களும் கலந்து ஒன்றுபட்டிருந்த ஒரு பட்டணமாக இருந்தது. அங்கேயே பிறந்து வளர்ந்த பிரிஜியாவை சேர்ந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், ஆவிக்கொள்கையிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியவர்களாகவும் இருந்தார்கள். யூதேய மதத்துக்கு இன்னும் சிறைப்பட்டிருந்த யூத பொதுமக்கள் நகரத்தில் இருந்தார்கள். கொலேசே பட்டணம், முக்கியமான வாணிக வழிபாதைக்கு அண்மையில் இருந்தால், பார்வையாளர்கள் அதற்கு வந்த வண்ணமாகவே இருந்தார்கள். இந்த அயல்நாட்டவர், தங்களுடைய ஓய்வு நேரத்தை ஞானமானவற்றை சொல்லுவதில் அல்லது கேட்பதில் செவழிக்க விருப்பமுள்ளவர்களாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 17:21 ஒப்பிடவும்) இது புதிய தத்துவங்கள் பரவுவதற்கு வழிநடத்தியது. மெதுவாக கிரேக்க தத்துவமும் கிழக்கத்திய ஆன்மீக உணர்வும் கலந்து ஒரு கிறிஸ்தவ கோட்பாடு (நாஸ்டிஸிஸம்) தோன்றியது. கல்விமானாகிய R.E.O.வைட் இவ்விதமாகச் சொல்லுகிறார்: “பரிணாமக் கோட்பாடு இன்றிருப்பதைபோல, இந்த கிறிஸ்தவ கோட்பாடு (Gnosticism) அப்பொழுது அவ்வளவு பரவலாக அறியப்பட்டிருந்தது.” அது முதல் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்பாக பிரபலமாகி இரண்டாவது நூற்றாண்டில் உச்சநிலையை அடைந்தது. அதில் தத்துவ ஞான கற்பனையும் மூட நம்பிக்கையும், பாதி மாய மந்திர சடங்குகளும் சில சமயங்களில் மதவெறி கொண்ட அல்லது கீழ்த்தரமான வழிபாடும் இணைந்திருந்தது.”
5 இத்தகைய ஒரு சூழ்நிலையில் கொலோசேவில் மதம், தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஒரு வித சோதனையாகவே இருந்து வந்தது. அதில் யூதேய கோட்பாடுகளும், கிரேக்க தத்துவமும் புறமத ஆன்மீக உணர்வும் கலந்திருந்தது. கிறிஸ்தவமும்கூட அதே நிலைக்க கொண்டு போகப்படுமா?
‘பந்தயப்பொருளை இழந்து போகும்படிச் செய்தல்’—எவ்விதமாக?
6 (எ) பவுலின் வார்த்தைகள் எவ்விதமாக புறமத தத்துவங்களையும் யூதேய மத செல்வாக்கையும் தடை செய்திருக்கும்? (பி) கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாய் இருப்பது ஏன் அவசியமாயிருந்தது?
6 கெலோசெயருக்கு பவுல் எழுதிய வலிமை மிக்கக் கடிதம், கிறிஸ்தவத்தில் யூதேய கோட்பாடுகளையும் புறமத தத்துவங்களையும் இணைக்க விரும்பியவர்களின் செல்வாக்கை தடை செய்திருக்கும். மறுபடியும் மறுபடியுமாக அவன் கிறிஸ்துவுக்கு கவனத்தை திருப்புகிறான். பவுல் இவ்வாறு எழுதினான்: “அவருக்குள் [கிறிஸ்து, யூதேய மதத்தவரோ அல்லது புறமத தத்துவ ஞானியோ அல்ல] ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” கொலோசெயர்கள் “அவருக்குள் [கிறிஸ்து] நடந்து கொண்டு அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும், அவர் மேல் கட்டப்பட்டவர்களாகவும் விசுவாசத்தில் உறுதிப்படும்படியாக” துரிதப்படுத்தப்பட்டார்கள். மற்றபடி அவர்கள் வழிதவறி போய்விடக்கூடும். ஆகவே பவுல் பின்வருமாறு எச்சரித்தான்: “லெளகீக ஞானத்தினாலும் மாயமான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களைக் கொள்ளைக் கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் [உலகத்துக்குரிய மூலக் காரியங்களையும், NW] பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:3, 6-8.
7. (எ) புறமத தத்துவ ஞானிகள் மற்றும் யூதேய மதத் தலைவர்களின் போதகங்கள் சில கிறிஸ்தவர்களுக்கு ஏன் கவர்ச்சியாக இருந்திருக்கக்கூடும்? (பி) அவர்களுடைய போதகங்கள் ஏன் வெறுமென “மாய்மான தந்திரமாக” மட்டுமே இருந்தன?
7 இயேசுவை புதிதாக பின்பற்ற ஆரம்பித்தவர்கள் அகநிலை உணர்வு பெறும் பக்தியுணர்வு அல்லது தத்துவத்தின் கிளர்ச்சி இல்லாததன் குறைவை உணர்ந்தார்கள். சில யூத கிறிஸ்தவர்களுக்கு, யூதேய மதத்தின் வழக்கற்றுபோன பாரம்பரியங்களின் மீது இன்னும் பற்று இருந்தது. இத்தகைய ஆட்களுக்கு புறமத தத்துவ ஞானிகள் மற்றும் யூதேய மத தலைவர்களின் போதகங்கள் ஓரளவு கவர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் இந்த பொய் போதகர்கள் எவ்வளவு நம்பத்தக்கவர்களாக அல்லது சொல் வன்மையோடு பேசுவதாக தோன்றிய போதிலும் அது “மாயமான தந்திர”மாக மட்டுமே இருந்தது. கடவுளுடைய தூய்மையான வார்த்தையை விளங்ககுவதற்கு பதிலாக அவர்கள் வெறுமென “உலகத்துக்குரிய மூல காரியங்களையே”—பயனற்ற தத்துவங்களையும் முதுமொழிகளையும் நம்பிக்கைகளையுமே—அவர்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள், அந்த தவறான கருத்துக்களை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்வார்களேயானால், அது கிறிஸ்தவர்களுக்கு தீங்கிழைப்பதாக இருக்கும். ஆகவே பவுல் சொன்னான்: எந்த மனுஷனும் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி செய்யாதிருக்கட்டும்.”—கொலோசெயர் 2:18.
8. (எ) பந்தயப் பொருள் என்னவாக இருந்தது? உங்களுடைய பதிலை என்ன வேதவசனங்கள் ஆதரிக்கின்றன? (பி) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்விதமாக பந்தயப் பொருளை இழந்து போகும்படி செய்யப்படக்கூடும்?
8 பந்தயப் பொருள் “பரலோகங்களில் சாவாமையுள்ள வாழ்க்கையாக இருந்தது. இது முழுமையாக களைப்படையச் செய்யும் ஒரு ஓட்டப்பந்தயத்துக்குப் பின்பு வெற்றி பெறும் ஓட்டக்கராருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வெகுமதிக்கு ஒப்பிடப்பட்டது. (1 கொரிந்தியர் 9:24-27; பிலிப்பியர் 3:14; 2 தீமோத்தேயு 4:7, 8; வெளிப்படுத்தின விசேஷம் 2:7) கடைசியாக யெகோவா தேவன் மட்டுமே இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜீவனுக்கான ஓட்டத்தில் ஒருவரை தகுதியற்றவரென அறிவிக்க முடியும். (யோவான் 5:22, 23) ஆனால், பொய் போதகர் ஒருவர் ஒரு கிறிஸ்தவனை அவருடைய போதனையின் கீழ் கொண்டு வருவாரேயானால், இது பந்தயப் பொருளை அவர் இழந்துபோகும்படி செய்யும் பாதிப்பை கொண்டிருக்கும். ஏமாற்றப்பட்டவர் சத்தியத்திலிருந்து அவ்வளவு தூரமாக திசைமாறிச் சென்று ஓட்டத்தை முடிக்கவே தவறிவிடக்கூடும்.
பொய் போதகர்களின் தனித்தன்மைகள்
9. கொலோசெயர்கள் மத்தியில் பொய் போதகர்களை என்ன நான்கு காரியங்கள் அடையாளங் காட்டின?
9 அப்படியானால், ஒரு கிறிஸ்தவனை பந்தயப்பொருளை இழக்கும்படி செய்வதில் நோக்கமாக இருக்கும் ஒரு நபரை அடையாளங் கண்டுகொள்ள ஏதாவது வழி இருந்ததா? ஆம், ஏனென்றால் கொலோசெயுவில் இருந்த பொய் போதகர்களின் தனித்தன்மையின் வரைபடத்தை பவுல் கொடுத்தான். இத்தகைய ஆள் (1) “மாயமான தாழ்மையிலும் தேவ தூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்ற”வனாய் இருக்கிறான். (2) காணாதவைகளிலே துணிவாய் நுழைகிறான். (3) தன் மாம்ச சிந்தையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிறான். (4) “தலையாகிய” இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொள்ளாதிருக்கிறான்.—கொலோசெயர் 2:18, 19.
10. பொய் போதகர்கள் எவ்விதமாக “மாய்மான தாழ்மையில்” விருப்பமுற்றவர்களாக இருந்தார்கள்?
10 எத்தனை திறமையான சூழ்ச்சி ஏற்பாடு! பிறருடைய கவனத்தைக் கவருவதற்காக, உபவாசிப்பதை இயேசு கண்டனம் செய்ததை அசட்டைசெய்து, பொய் போதகன், பிறரை கவருவதற்காக மனத்தாழ்மையின் தோற்றத்தோடு காணப்பட்டான். (மத்தேயு 6:16) ஆம், பொய் போதகன் உபவாசிப்பதையும் மதசம்பந்தமான மற்ற தன்னல மறுப்பு காரியங்களையும் பகட்டாக காட்டிக் கொள்வதில் “விருப்பமுற்றவனாக” இருந்தான். (கொலோசெயர் 2:20-23) பொய்யான கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் வகையில், அவனுடைய வாட்டமுற்ற முகத்தோற்றம் அமைந்திருந்தது. ஆம் பொய் போதகர்கள், ‘மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக அவர்கள் தர்மத்தைச் செய்தார்கள்.’ (மத்தேயு 6:1) ஆனால் இவை அனைத்தும் போலியான “மாயமான தாழ்மையாக” இருந்தது. தி எக்ஸ்போஸிட்டர் பைபிள் சொல்லுகிறவிதமாக: தான் மனத்தாழ்மையுள்ளவன் என்பதை அறிந்தவனாகவும் அதைக் குறித்து அகமகிழ்கிறவனாகவும் இருக்கும் ஒரு மனிதன், தன்னை பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில், வாட்டமுற்ற முகத்தை ஒரு நொடிப்பொழுது பார்த்துக் கொண்டாலும் அவன் மனத்தாழ்மையுள்ளவனே இல்லை.”—கொட்டை எழுத்துகள் எங்களுடையது.
11. (எ) தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனை என்னவாக இருந்தது? (பி) கொலோசெயுவில் தேவதூதர்களின் வணக்கம் இருந்தது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
11 ஆனால் மற்றபடி முட்டாள்தனமாக இருக்கும் பழக்கமாகிய—தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையை—இந்த போலியான மனத்தாழ்மை நம்பத்தக்கதாகத் தோன்றும்படி செய்தது. அந்த வணக்கம் எவ்விதமாக செய்யப்பட்டது என்பதை துல்லியமாக பவுல் விளக்குவதில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக கொலோசெயுவின் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த பொய் வணக்க முறையாக இது இருந்தது என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. அருகாமையில் இருந்த லவோதிக்கோயாவின் நான்காவது நூற்றாண்டு குழு, பின்வருமாறு அறிவிப்பதை அவசியமாகக் கண்டது: “கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சர்ச்சை புறக்கணித்துவிட்டு, தேவதூதர்களை தொழுதுக் கொள்ளக்கூடாது . . . ஆகவே இரகசியமாக ஒருவர் இந்த விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டால் அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கக் கடவன்.” அனால் ஐந்தாவது நூற்றாண்டு இறைமையியல் வல்லுநரும் கல்விமானுமான தியடோரேட் தேவதூதர்களை தொழுதுகொள்ளும் “இந்த தீய பழக்கம்” அவனுடைய நாளிலும்கூட இன்னும் இருந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறான். இன்று வரையாகவும் கத்தோலிக்க சர்ச் “தேவதூதர்களில் அன்பு கூறவும் அவர்களை கனம் பண்ணவும் அவர்களிடம் வேண்டிக்கொள்ளவும் விசுவாசிகளை” ஊக்குவித்து “தனி மனிதரின் காவல் தூதர்களை கொண்டாடுவதற்காக ஆராதனைகளையும் தெய்வீக வழிபாடுகளையும் ஊக்குவிக்கிறது.—நியூ கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியா, புத்தகம் I, பக்கம் 515.
12. தேவதூதர்களை வணங்குவது சரியே என்பதாக பொய் போதகர்கள் எவ்விதமாக முடிவு செய்திருப்பார்கள்?
12 கத்தோலிக்க இறைமையியல் வல்லுநர்கள் விவாதிப்பது போலவே பொய் போதகர்கள் இவ்விதமாகச் சொல்லியிருக்கலாம்: ‘தேவதூதர்களுக்கு என்ன மகத்தான ஒரு சிலாக்கியம் இருக்கிறது! மோசேயின் நியாயப்பிரமாணம் அவர்கள் மூலமாகவே கொடுக்கப்பட்டதல்லவா? அவர்கள் பரலோகத்தில் கடவுளுக்கு மிக அருகாமையில் இல்லையா? நிச்சயமாகவே வல்லமை மிக்க இவர்களுக்கு தகுதியான கனத்தை நாம் கொடுக்க வேண்டும்! இது நம்முடைய பங்கில் மெய்யான மனத்தாழ்மையை காட்டுவதாக இருக்குமல்லவா? என்ன இருந்தாலும் கடவுள் அவ்வளவு உயரத்தில் இருக்கிறார். நாம் இவ்வளவு தாழ்வானவர்களாக இருக்கிறோம்! ஆகவே தேவதூதர்கள் கடவுளை அணுகுவதற்கு நமக்கு மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.’
13. (எ) தேவதூதர்களை வணங்குவது சரியா? (பி) பொய் போதகர் எவ்விதமாக ‘காணதவைகளிலே துணிவாய் நுழைகிறார்’?
13 ஆனால் என்ன விதத்திலாகிலும் தேவதூதர்களை வணங்குவது தவறான காரியமாகும். (1 தீமோத்தேயு 2:5; வெளிப்படுத்தின விசேஷம் 19:10; 22:8, 9) ஆனால் பொய் போதகரோ ‘காணாதவைகளிலே துணிவாய் நுழைவதன்’ மூலம் இந்த எதிர்ப்பை ஒரு புறமாக தள்ளி வைத்துவிட முயற்சிப்பான். கிரேக்க ஏற்பாட்டின் சொல் அட்டவணையின் பிரகாரம், இந்த சொற்றொடர் “ஒரு நபர் இப்பொழுது இறைவனோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிற ஒரு புதிய வாழ்க்கையினுள் நுழையும் அந்த நிகழ்ச்சியின் உச்சநிலையை குறிப்பிடுவதற்காக மறைமெய்மை மதங்களில்” பயன்படுத்தப்பட்டது. புறமத சொல்நடையை பயன்படுத்துவதன் மூலம், பொய் போதகர் தனக்கு விசேஷமாக நுட்பமான அறிவு இருப்பதாக—ஒருவேளை தெய்வீக காட்சிகள் கிடைத்திருப்பதாக—பெருமைப் பாராட்டிக் கொள்ளும் விதத்தை பவுல் ஏளனம் செய்தான்.
14. பொய் போதகர்கள் எவ்விதமாக மாம்ச சிந்தையினாலே இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்தார்கள்?
14 ஆனால் ஆவிக்குரியவனாக இருப்பதாக உரிமைப் பாராட்டிக் கொண்டாலும், பொய் போதகன் அவனுடைய மாம்ச சிந்தையினிமித்தமாக உண்மையில் வீணாய் இறுமாப்புக் கொண்டிருந்தான். இந்த பாவமுள்ள மாம்சமானது அவனுடைய மனநிலையையும் நோக்கங்களையும் கறைப்படுத்தியது. பெருமையினாலும் அகந்தையினாலும் இறுமாப்புக் கொண்டவனாய், அவனுடைய மனது “துர்க்கிரியைகளின் மீதி”ருந்தது. (கொலோசெயர் 1:21) எல்லாவற்றிலும் மோசமாக, அவன் தலையாகிய கிறிஸ்துவை பற்றிக் கொள்ளாதிருந்தான். ஏனென்றால் அவன் இயேசுவின் போதகங்களைவிட உலகப் பிரகாரமான ஆட்களின் கற்பனைகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தான்.
இன்னும் அபாயமா?
15. (எ) இன்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் கவனிக்கப்படும் மனநிலைகள் யாவை? (பி) இந்த மனநிலைகள் எங்கே ஆரம்பமாயின? பைபிளின் புத்திமதியோடு ஒப்பிடுகையில் அவை எவ்விதமாக இருக்கின்றன?
15 பரலோகத்திலோ அல்லது பரதீஸிய பூமியின் மீதோ—நித்திய ஜீவனின் பரிசு—இன்னும் யெகோவாவின் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. உண்மைதான், அறிவு நெறி கோட்பாட்டாளர்களும் (gnostics) யூதேய மதத்தை பின்பற்றுகிறவர்களும் மறைந்து எத்தனையோ காலமாகிவிட்டது. ஆனால் ஒரு கிறிஸ்தவன் பந்தயப் பொருளை பெற்றுக் கொள்வதை இப்பொழுது தடை செய்யக்கூடிய தனி ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே அவ்விதமாகச் செய்யாதிருக்கலாம். ஆனால் அவர்க்ள இந்த ஒழுங்கின் “லெளகீக ஞானமும் மாயமான தந்திரமும்” தங்களை தவறாக பாதிக்கும்படியாக அனுமதித்து விட்டிருப்பதன் காரணமாக அவர்கள் பின்வருமாறு சொல்லக்கூடும்:
‘நான் நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு வியாபாரத்தைச் செய்யும்போது அது கடினமாக இருக்கிறது. கொடிய போட்டி மனப்பான்மையுள்ள இந்த உலகில் சில சமயங்களில் நாம் விட்டுக் கொடுத்துவிடவே வேண்டியிருக்கிறது.’ (இந்த கருத்தை நீதிமொழிகள் 11:1; எபிரெயர் 13:18 வசனங்களோடு ஒப்பிடவும்.)
‘இன்னும் வெறுமென நீ ஒரு குடும்பத்தலைவியாக மட்டுமாகவா இருக்கிறாய்? காலம் மாறிவிட்டது! ஏன் ஒரு உத்தியோகத்தில் சேர்ந்துகொண்டு, ஏதாவது பிரயோஜனமாக உன்னுடைய வாழ்க்கையில் செய்யக்கூடாது! (நீதிமொழிகள் 31:10-31 ஒப்பிடவும்)
‘என்னுடைய வேலை கூட்டங்களையும் வெளி ஊழியத்தையும் கொஞ்சம் பாதிக்கிறது. ஆனால் எங்களுடைய வாழ்க்கை தரத்துக்கு அதிகமான பணம் தேவையாக இருக்கிறது. ஒரு சில நல்ல காரியங்களை வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ (லூக்கா 21:34, 35; 1 தீமோத்தேயு 6:6-8 வசனங்களுக்கு இந்த விவாதம் எதிர்மாறாக இருப்பதை காண்பிக்கவும்)
‘மூப்பர்கள் எப்போது பார்த்தாலும் வெளி ஊழியத்தைப் பற்றியே பேசுவதை கேட்பது எனக்கு சலிப்பாக இருக்கிறது. வாரம் முழுவதும் நான் வேலைக்குப் போகிறேன். சனி, ஞாயிற்று கிழமைகளில் எனக்கு ஓய்வு தேவையாக இருக்கிறது.’ (லூக்கா 13:24; மாற்கு 12:30 ஒப்பிடவும்)
‘எல்லாராலும் பயனியர் ஊழியம் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் இன்றைய பொருளாதார நிலையில் நீங்கள் எதையாவது சாதிப்பதற்கு உங்களுக்கு பல்கலைக்கழக கல்வி அவசியமாயிருக்கிறது.’ (மத்தேயு 6:33; 1 கொரிந்தியர் 1:19, 20; 1 தீமோத்தேயு 6:9-11 வசனங்களுக்கு இது எதிர்மாறாக இருப்பதை காண்பிக்கவும்.)
பொருளாசையான மற்றும் மாம்சபிரகாரமான விவாதம்—இவ்வுலகத்தை நேசிக்கிறவர்களின் அடிப்படை போதனைகளும் நம்பிக்கைகளுமாகிய “உலக வழிபாடுகளின்” அல்லது ”உலகத்துக்குரிய மூல காரியங்களின்—இன்றியமையாத பாகமாக இருக்கிறது. அதற்கு இசைந்துவிடுவது சீர்படுத்த முடியாத ஆவிக்குரிய சேதத்தை உண்டு பண்ணக்கூடும்.
16. இன்று சிலர் எவ்விதமாக மாய்மாலமான நியாயாதிபதிகளாக மாறிவிடக்கூடும்?
16 தங்களைத் தாங்களே நியாயாதிபதிகளாகவும் போதகர்களாகவும் நியமித்துக் கொள்பவர்கள் மற்றொரு ஆபத்தாக இருக்கிறார்கள். கொலோசேயுவிலிருந்தவர்களைப் போல, முற்றிலும் தனிப்பட்ட விஷயங்களாக இருப்பவைகளை அவர்கள் பிரச்னைகளாக ஆக்கிவிடுகிறார்கள். அநேகமாக அவர்களுடைய “மாயமான தாழ்மையினால்” அவர்களை அடையாளங் கண்டுகொள்ள முடியும். (கொலோசெயர் 2:16-18) ‘உன்னைவிட நான் பரிசுத்தமுள்ளவன்’ என்ற அவர்களுடைய மனநிலை தவறான ஒரு உள்ளெண்ணத்தை—மற்றவர்களுக்கு மேலாக தன்னை உயர்த்துவதற்கு விரும்புவதை—வெளிப்படுத்துகிறது. அவர்கள் பொதுவாக “மிஞ்சின நீதிமானா”யிருந்து “உண்மையுள்ள அடிமை” சொல்லியிருப்பவற்றிற்கு அல்லது வெளியீட்டிருப்பவற்றிற்கு அப்பால் செல்ல அவசரப்படுகிறார்கள். இவர்கள், மறுசிருஷ்டிப்பு, உடல்நலம் பேணுவது, உடை மற்றும் சிகை அலங்காரம் அல்லது மதுபான உபயோகத்தின் சம்பந்தமாக கருத்து மாறுபாடுகளை தூண்டிவிடக்கூடும். (பிரசங்கி 7:16; மத்தேயு 24:45-47) இவ்விதமாக ஆவிக்குரிய காரியங்களிலிருந்து கவனம் திருப்பப்பட்டு மாம்ச இச்சைகளின் மீது அவை ஒருமுகப்படுத்தப்படுகின்றன.—1 தீமோத்தேயு 6:3-5 ஒப்பிடவும்.
17, 18. (எ) சிலர் எவ்விதமாக தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கருதியிருக்கிறார்கள்? இது ஏன் ஆபத்தானது? (பி) நம்முடைய அடுத்த பாடத்தில் நாம் எதை சிந்திப்போம்?
17 இன்று சிலர் வேதவசனங்களைப் பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதற்கு அல்லது தங்களுக்கு விசேஷமாக நுட்பமான அறிவு இருப்பதாக உரிமை பாராட்டும் அளவுக்கு சென்றுவிடலாம். ஒரு வருடத்துக்கு முன்னால் முழுக்காட்டப்பட்ட ஒரு பெண், தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் ஒருத்தியாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு இதன் காரணமாக அவளுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதாக நினைத்தாள். ஆகவே அவள் ஒரு பொறுப்பான ஸ்தானத்தில் “மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் உற்சாகப்படுத்தவும்” தான் வெகுவாக விரும்புவதை தெரிவித்தாள். (1 தீமோத்தேயு 2:12-ஐ ஒப்பிடவும்) ஆனால் யெகோவா “பெருமையையும் அகந்தையையும்” வெறுப்பதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய கருத்துக்களைக் குறித்து அடக்கமான நோக்கைக் கொண்டிருக்க வேண்டும். (நீதிமொழிகள் 8:13) அவர்கள் “மாம்ச சிந்தையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கும்” கண்ணியை தவிர்க்க வேண்டும். (கொலோசெயர் 2:18) தங்களுடைய சொந்த கருத்துக்களை உயர்த்தி, கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட “உண்மையுள்ள அடிமை”யின் புத்திமதிக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் தலையைப் பற்றிக் கொள்கிறவர்களாக இல்லை. அப்படியென்றால் நிச்சயமாகவே யெகோவாவின் உண்மைத் தவறாத சாட்சிகள், பரிசாகிய ஜீவனை அவர்களிடமிருந்து பறித்து விடக்கூடிய தேவ பக்தியற்ற செல்வாக்குக்கு எதிராக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
18 ஜீவனைப் பெற்றுக் கொள்வதிலிருந்து உடன் மானிடரை தடை செய்வதற்கு சாத்தான் இன்னும் மனிதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். பிசாசு இந்த சூழ்ச்சியை வேறு என்ன வழிகளில் பயன்படுத்துகிறான்? யெகோவாவின் ஒரு சாட்சி எவ்விதமாக பந்தயப் பொருளை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கலாம்? (w85 7/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பூர்வ கொலோசெயுவிலிருந்த கிறிஸ்தவர்களை மதசம்பந்தமான என்ன செல்வாக்குகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன?
◻ “பந்தயப் பொருளை” கிறிஸ்தவர்கள் இழக்கும்படியாகச் செய்துவிடக்கூடியவர்களை அடையாளங் கண்டுகொள்ள உதவும் குணங்கள் என்னவாக இருந்தன?
◻ “உலக வழிபாடுகளினால்” தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை சில கிறிஸ்தவர்கள் இன்று எவ்விதமாக காண்பிக்கிறார்கள்?
◻ பொய் போதகர்கள் எவ்விதமாக கிறிஸ்தவர்களை தவறான பாதையில் கொண்டு செல்லக்கூடும்?
[பக்கம் 23-ன் படம்]
‘தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனை’ கொலோசேயிலுள்ள கிறிஸ்தவ சபைக்குள் நுழையும் ஆபத்து இருந்தது. அதுபோன்ற விக்கிரகாராதனை இன்று கிறிஸ்தவர்களாக உரிமைப் பாராட்டுகிறவர்களிடையே தொடருகிறது
[பக்கம் 25-ன் படம்]
இந்த உலக சிந்தனையின் செல்வாக்குக்கு உங்களை அடிமைப்படுத்தக் கூடிய ஆட்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்!