எல்லோரும் சமம்—எப்படி?
எல்லா தேசத்து ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சமமாக நோக்குவது அதற்கு இசைவாக செயல்படுவதும் கூடிய காரியமா? தற்போதய ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டால் அது கூடாத காரியம். என்றாலும் அது இப்பொழுதே கூடிய காரியம் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏன்? ஏனென்றால் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் அது கூடிய காரியம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
உண்மையான கிறிஸ்தவ மதம் சமத்துவத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை யாவரும் அறிந்திருக்கின்றனர். உதாரணமாக அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். [(கிறிஸ்தவர்கள், தி லிவ்விங் பைபிள்) கலாத்தியர் 3:28] இது வெறும் ஒரு கருத்தளவான பேச்சா? ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஓர் உலகில் இது எந்தளவுக்கு நடைமுறையாக இருந்தது?
இயேசு கிறிஸ்து கற்பித்த சகோதரத்துவத்தை விருத்தி செய்துவந்த பூர்வ கிறிஸ்தவர்கள் அன்றிருந்த உலகில் சிறந்ததோர் பாதிப்பை ஏற்படுத்த முடிந்ததைக் குறித்து அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பின்பு இருந்த பூர்வ கிறிஸ்தவர்கள் என்ற தனது புத்தகத்தில் இபர்ஹார்டு அர்னால்டு சொல்லுகிறார்:
“கிறிஸ்தவர்கள் தங்களுடைய உடன் மனிதர்களை சகோதரர்கள் என்று சரிசமமாக பாவித்து மதித்து வந்ததும், ஒரே தீர்ப்பையும் ஒரே அழைப்பையும் பகிர்ந்து கொண்டதும் எல்லாவற்றிலும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தியது. சமமாக மதிக்கும் இந்தக் காரியம் எல்லோருக்கும் ஒரே சரிசமமான பட்டத்தையும், வேலை குறித்த ஒரே சரிசமமான கடமையுணர்ச்சியும், எல்லோருக்கும் வாழ்க்கையில் சரிசமமான வாய்ப்பும் கொண்டிருக்கச் செய்தது. . . . அந்தச் சமயத்திலிருந்த கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் சரிசமமாக மதித்து வந்தக் காரியம் அன்பிலே அடிப்படைக் கொண்ட, பிறப்பில் எல்லோரும் சமம் என்ற அடிப்படையிலான சுமூகக் கூட்டொருமையில் விளைவடைந்தது.”
தேவன் அளித்த ஐக்கியத்திற்கு சிறந்ததோர் சாட்சியம் அல்லவா!
ஐக்கியப்பட்ட சரீரத்தில் சமமானவர்கள்
பூர்வ கிறிஸ்தவ சபையிலிருந்த தனிப்பட்ட நபர்களுக்கு வித்தியாசமான இயல்பான திறமைகளும் ஆற்றல்களும் இருந்தன. சிலர் இசையில் வல்லுநர்களாகவும் மற்றவர்கள் சிறந்த ஞாபகசக்தி படைத்தவர்களாகவும் அல்லது சரீர பலம் படைத்தவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட வேற்றுமைகளோடுகூட பரிசுத்த ஆவி அவர்களுக்கு வெவ்வேறான வரத்தைக் கொடுத்தது; என்றபோதிலும் இவை எல்லாமே ஒன்றுக்கொன்று சார்ந்து சிறந்து செயல்படக்கூடியவையாயிருந்தன. எனவேதான் பவுல் பின்வருமாறு எழுதக்கூடியவனாயிருந்தான்: “எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப் பிரகாரமாக கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும் கிரேக்கராயினும் அடிமைகளாயினும், சுயாதீனராயினும் எல்லாரும் ஒரே ஆவியினாலே, ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஞ்நானம் பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந் தீர்க்கப்பட்டோம்.” (1 கொரிந்தியர் 12:11-13) சபையை மேய்த்தவர்கள் எல்லோரும் தீர்க்கதரிசனமாக “மனிதரில் வரங்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்; இவர்கள் வெகுவாக வித்தியாசப்பட்டவர்களாயிருந்தாலும் எல்லோருமே பிரசங்கிப்பவர்களாயிருந்தார்கள்.—எபேசியர் 4:8; சங்கீதம் 68:18.
கண்காணிகள் ஆவிக்குரிய பிரகாரமாய் முதிர்ச்சியுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் கிரேக்கு மொழியில் எப்பிஸ்கோபாய் என்றழைக்கப்பட்டார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட வினையெச்சமாகிய எப்பிஸ்கோப்போ (கண்காணிப்பை மேற்கொள்ளுதல்) குறித்து எழுதும்போது, W.E. வைன் குறிப்பிட்டதாவது: “இந்த வார்த்தை அப்படிப்பட்ட உத்தரவாதத்திற்குள் பிரவேசிப்பதைக் குறிக்கவில்லை, ஆனால் அதை நிறைவேற்றுவதைக் குறிப்பிடுகிறது. ஒரு பதவியை அல்லது ஸ்தானத்தை ஏற்பதல்ல, ஆனால் கடமைகளை நிறைவேற்றும் ஒரு காரியமாயிருக்கிறது.” நியமிக்கப்பட்ட இந்தக் கண்காணிகளுடன்கூட சேர்ந்து செயல்படுகிறவர்கள்தான் டயக்கொனாய், “ஊழியர்கள்,” “உதவி ஊழியர்கள்,” அல்லது “டீக்கன்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு கிரேக்க வார்த்தை. இந்த வார்த்தை “அடிப்படையில் ஒரு ஊழியனைக் குறிக்கிறது, ஒரு வேலைக்காரன் செய்யும் வேலைகளை செய்கிறவனையும், அல்லது இலவசமான சேவையை செய்யும் ஒரு பணிவிடைக்காரனையும் குறிக்கிறது; இது வேலையின் எந்த ஒரு அம்சத்தையும் குறிப்பாக உட்படுத்தவில்லை.” இந்த இரண்டு பொறுப்புகளுக்கும் ஊழிய சிலாக்கியங்கள்தான் முக்கியமானவை. அந்தப் பதவி அல்லது ஸ்தானம் அழுத்தப்படவில்லை, ஏனென்றால் கடவுளுடைய வணக்கத்தாராக அவர்கள் சமமாக இருந்தார்கள் மற்றும் அவர்கள் எல்லோரும் கடவுளுடைய ஊழியர்களாக இருந்தார்கள்.
இயேசு 12 மனிதர்களை தமது அப்போஸ்தலர்களாக இருக்கும்படி தேர்ந்தெடுத்த போதிலும், பெண்களும்கூட அவரோடு கூட்டுறவு கொள்ள முடிந்தது. அவர்கள் அதிக சுறுசுறுப்பாக இருந்தார்கள். மகதலேனாள் மரியாள், யோவான்னாள் மற்றும் சூசன்னாள் ஆகியவர்கள் இயேசுவுக்கு ஊழியஞ்செய்து வந்தார்கள் என்று குறிப்பாக சொல்லப்படுகிறார்கள். பொ. ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளில் பெண்களும்கூட பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். இப்படியாக அவர்கள் வேறு மொழிகளில் வெளியரங்கமாகப் பேசி தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்த சாட்சி சொல்லக்கூடியவர்காயிருந்தார்கள். என்றபோதிலும் சபைகளில் போதிக்கும் காரியத்தில் கிறிஸ்தவ சகோதரிகள் முன்நிலையிலிருக்கவில்லை, ஆனால் கடவுளுடைய வார்த்தையை வெளியரங்கமாகக் பொதுமக்களிடையே பிரசங்கிப்பதில் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து பங்கு கொண்டார்கள்.—லூக்கா 8:1-3; அப்போஸ்தலர் 1:14; 2:17, 18; 18:26.
ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும் தனிப்பட்டவர்களாக உதவி செய்வதிலும் கிறிஸ்தவர்கள் ஒரு முன்மாதிரியை வைத்தார்கள். உதாரணமாக, பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளின்போது எருசலேமுக்கு வந்திருந்தவர்கள் அப்போஸ்தலர்களின் ஆச்சரியமான வேலைகளைக் காண நேர்ந்தபோது, தாங்கள் திட்டமிட்டதைவிட கூடுதலான நாட்கள் அங்கு தங்கினார்கள். அவர்கள் கொண்டுவந்திருந்த உணவும் பணமும் தீர்ந்துவிட்டது. என்றபோதிலும் வேத வசனங்களின் பதிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தை” அப்போஸ்தலர்களுடைய மேற்பார்வையில் அவற்றை இலவசமாய்ப் பகிர்ந்து கொடுப்பதற்காகக் கொண்டு வந்தார்கள். “அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.” அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் அன்பும் சமத்துவமும் உண்மையில் நடைமுறையான ஒன்று என்பதை வெளிப்படுத்திடும் எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான ஆவி! “சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது,” என்று சொல்லப்படலாம்.—அப்போஸ்தலர் 4:32, 34, 35.
இன்று நடைமுறையாக இருக்கும் சமத்துவம்
இன்று உலகத்திலிருக்கும் பிரிவுகளின் மற்றும் சமுதாய அமைப்புகளின் மத்தியில், அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் மாதிரியைப் பின்பற்றுவது அவ்வளவு எளியதன்று. ஆனால் அப்படிச் செய்வதுதானே யெகோவாவின் சாட்சிளுடைய இலக்காக எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. அவர்கள் பேரளவான வெற்றியைக் கண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாயிருக்கிறது. என்ஸைக்ளோபீடியா கனடியானா கூறுவதாவது:
“யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் வேலை, நம்முடைய சகாப்தத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் இயேசுவாலும் அவருடைய சீஷர்களாலும் கைக்கொள்ளப்பட்ட ஆரம்ப கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியாகவும் மறு ஸ்தாபித்தலாகவும் இருக்கிறது. . . . அவர்கள் எல்லோரும் சகோதரர்கள்.”
1900 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது போலவே இந்தக் கிறிஸ்தவ சகோதரத்துவம் இன்று இக்கட்டான நிலைமைகளின்போது நடைமுறையான உதவியைக் கொடுத்து வருகிறது. நவம்பர் 1980-ல் இத்தாலியின் சில பகுதிகள் கடுமையான பூமியதிர்ச்சியினால் தாக்கப்பட்டபோது, சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு லாரி நிறைய தேவைப்பட்ட பொருட்கள் பூமியதிர்ச்சியினால் இடத்திற்கு அதே மாலை சென்று சேர்ந்தது. அதிகாரப்பூர்வமான ஓர் அறிக்கை பின்வருமாறு:
“தேவைப்பட்ட அவசியமான உதவி அவ்வளவு விரைவில் வந்து சேர்ந்ததைக் கண்டு சகோதரர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நாங்கள் உடனடியாக ஒரு சமையலறையை ஏற்பாடு செய்து, அங்கு சகோதரிகளால் சமைக்கப்பட்ட உணவு ஒவ்வொரு நாளும் சகோதரர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த நகரின் மற்ற குடிமக்கள் அவர்களுடைய தேவைகளுக்ககாக இன்னும் காத்துக் கொண்டிருந்தார்கள், தங்களாலனவற்றை செய்துக் கொண்டிருந்தார்கள். உண்மைத்தான், சகோதரர்கள் தன்னலமுள்ளவர்களல்ல, சாட்சிகளாக இல்லாத அநேகருடன் உணவு பகிர்ந்துண்ணப்பட்டது.”
ஸ்வேஸிலாந்தின் அரசன் சோபுஸா II ஆகஸ்ட் 1982-ல் மரித்ததையொட்டி யெகோவாவின் சாட்சிகள் அந்தத் தேசத்தவரின் துக்கங்கொண்டாடும் பரம்பரை சடங்குகளில் பங்குபெறாததன் காரணமாக துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டார்கள். பிரிட்டனில் இரண்டு சாட்சிகள், ஒருவர் வெள்ளையரும் மற்றவர் கருப்பருமாக இருவரும் சேர்ந்து ஸ்வேஸிலாந்து உயர் ஆணையரிடம் நிலைமையைப் பரிசீலனை செய்யும்படியாக கேட்டுக்கொண்டனர். சற்று செவிகொடுத்த பிறகு அந்த ஸ்வேஸிலாந்து அதிகாரி, நன்கு படித்த ஒரு பிரதிநிதியாக இருந்த அந்தக் கருப்பு நிற சாட்சியைப் பார்ந்து, “நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு அந்த சாட்சி, “ஏனென்றால் உங்களுடைய தேசத்தில் வாழம் என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களைக் குறித்து நான் அக்கறையுள்ளவனாயிருக்கிறேன்,” என்றார். இப்படிப்பட்ட ஒரு படித்த மனிதன் எப்படி தான் ஒருநாளும் விஜயம் செய்திராத ஒரு தேசத்தில் வாழும் ஆப்ரிக்கருடன் தன்னை சமமாக வைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது இந்த அதிகாரிக்குக் கடினமாயிருந்தது.
நீங்கள் ஏன் உங்கள் பிராந்தியத்திலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்திற்கோ அல்லது பெரியளவில் நடைபெறும் ஒரு மாநாட்டிற்கோ சென்று பார்க்கக்கூடாது? நீங்கள் இளைஞராயிருந்தாலும் முதியோராயிருந்தாலும், பணக்காரராயிருந்தாலும் ஏழையாயிருந்தாலும், கல்லூரி பட்டத்தாரியாக இருந்தாலும் பள்ளிக்கூடம் பார்க்காதவர்களாயிருந்தாலும் உங்களை வரவேற்கும் ஒரு சமுதாயத்தை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொருவரும் சகோதரன், கசோதரி என்றழைக்கப்படுகிறார்கள். தனிப்பட்டவர்கள் குலம் கோத்திரத்தினாலோ அல்லது உலகப் பிரகாரமான அந்தஸ்தினாலோ மதிப்பிடப்படுவதில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய கிறிஸ்தவ தன்மைகளுக்காகவும் குணநலன்களுக்காகவுமே போற்றப்படுகின்றனர்.
கற்பிக்கும் முறை முதல் கிறிஸ்தவ சபையின் அமைப்பு முறையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் கொண்ட கற்பிக்கும் முறையாக இருக்கிறது. கூட்டங்கள் பூமி முழுவதும் சமத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. சர்ச் ஆப் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு சொன்னார்:
ஒவ்வொரு கூட்டமும், எப்பொழுதும் நடப்பதாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஏராளமான புத்திமதிகள் நிறைந்ததாயிருக்கிறது. அவர்களுடைய ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்காக காவற்கோபுரம் பத்திரிகையை முன்னதாகவே வாசித்து, அதிலுள்ள பைபிள் வசனங்களை பார்த்து, தாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் கேள்விகளுக்கு விடைகளை ஆயத்தம்செய்து வரும்படியாக அங்கத்தினர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூட்டங்களில் தாமே சபை முழுவதுமாக நல்லவிதத்தில் பங்குகொள்கிறது. உலக முழுவதும் ஒரே சமயத்தில் ஒரே போதனை கொடுக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் அறிந்திருப்பதுதானே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.”
காவற்கோபுரம் பத்திரிகையின் இந்தப் பிரதியை, பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் தேதிகளில் நீங்கள் உங்கள் பிராந்தியத்திலுள்ள சபைக்குக் கொண்டுபோவீர்களானால், அப்படிப்பட்ட ஒரு கலந்தாலோசிப்பை பின்பற்றக்கூடியவர்களாயிருப்பீர்கள்.
இந்தக் கலந்தாலோசிப்புகள் சாதாரணமாக சபையிலுள்ளவர்களின் நம்பிக்கையை உள்ளடங்கியவையாக இருக்கும்: போர்கள் இல்லாத ஒரு பரதீஸான பூமியில் வாழ்க்கை, அங்கு மக்கள் தங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் ஆக்க வேலைகளில் ஈடுபடுத்துவார்கள். இப்படியாக, “தங்கள் கைகளின் கிரியைகளை” உண்மையிலேயே அநுபவிப்பார்கள். கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதரும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் வாழ்வார்கள். பசிபட்டினி என்ற நிலை கடந்தகால காரியமாகிவிட்டிருக்கும், ஏனென்றால் செழிந்தோங்கும் பூமியின் விளைச்சலிலிருந்து ஏராளமான உணவு கிடைக்கும். வியாதியின் கொடுமைகளுக்கும் தள்ளி வைக்கப்பட்டிருக்கும், பூமியின் குடிகள் எல்லோருமே பரிபூரண ஆரோக்கியத்தின் பலத்தை சரிசமமாக அனுபவித்துக் களிப்பார்கள்.—ஏசாயா 2:4; 33:24; 65:22, 23; சகரியா 8:11, 12.
ஆம், இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கை உண்மையான ஒன்று. கிறிஸ்தவ சபையின் தற்போதைய அமைப்பு முறையும் பூமிக்குரிய பரதீஸுக்குள் கொண்டு செல்லப்படும் என்ற அறிவும் உண்மையான ஒன்று. வகுப்பு மற்றும் தேசிய பிரிவுகளாகிய தடைகள் முற்றிலும் நீக்கப்படுவதற்காக ஏற்கனவே போடப்பட்ட பலமான அஸ்திபாரம் விரிவாக்கப்படும். இதைக் குறித்து நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்? ஏனென்றால், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” கிறிஸ்தவர்கள், அப்பொழுது, யெகோவா தேவனுக்கு செலுத்தும் தங்களுடைய உண்மையான வணக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருவார்கள். அவருக்கு முன்பாக அவர்கள் சரிசமமான நிலையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மத்தியில் நீங்களும் உங்கள் குடும்பமுங்கூட இருக்கலாம்.—வெளிப்படுத்துதல் 7:9, 10. (w85 8/15)
[பக்கம் 7-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் நீங்கள் சமத்துவத்தைக் காண்பீர்கள்