இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
ஜீவனுக்குச் செல்லும் வழி
இயேசுவின் போதனைகளைக் கடைபிடிப்பதே அந்த ஜீவ வழி. ஆனால் இதை செய்வது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக, பரிசேயர்கள் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று கடுமையாய்த் தீர்ப்பவர்களாய் இருக்கிறார்கள், பலர் அவர்களைப் பின்பற்றவும் செய்தார்கள். எனவேதான் இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தைத் தொடரும்போது, இந்தப் புத்திமதியைக் கொடுக்கிறார்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.”
அளவுக்கு மிஞ்சி குற்றங்கண்டுபிடிப்பவர்களாயிருக்கும் பரிசேயர்களின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது அதிக ஆபத்தானது. லூக்காவுடையப் பதிவு காட்டுகிறபடி, இயேசு இதன் ஆபத்தை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்: “குருடனுக்கு குருடன் வழிகாட்டக்கூடுமா? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?”
மற்றவர்களில் அதிகமாகக் குற்றம் காண்பவர்களாயிருப்பது, அவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தி அவற்றைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது, ஒரு பொல்லாத குற்றமாகும். எனவே இயேசு கேட்கிறார்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்லுகிறதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”
இயேசுவின் சீஷர்கள் மற்றவர்கள் சம்பந்தமாகப் புரிந்து செயல்படக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் அவர் சொல்லுகிறார்: “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்.” கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்கள் பரிசுத்தமானவை. அவை அடையாள அர்த்தத்தில் முத்துக்களைப் போலானவை. ஆனால் நாய்களைப் போல அல்லது பன்றிகளைப் போல சில ஆட்கள் இந்த விலைமதிக்க முடியாத சத்தியங்களுக்குப் போற்றுதல் காட்டாவிட்டால், இயேசுவின் சீஷர்கள் இப்படிப்பட்ட ஆட்களை விட்டுவிட்டு அதிக ஆவலுள்ளவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.
இயேசு தம்முடைய பிரசங்கத்தில் ஜெபத்தைப் பற்றி ஏற்கெனவே பேசியிருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியத்தை அவர் இப்பொழுது அழுத்திக் காண்பிக்கிறார். “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” ஜெபங்களுக்குப் பதிலளிக்கக் கடவுள் தயாராக இருக்கிறார் என்பதை உதாரணத்தோடு விளக்க, இயேசு பின்வருமாறு கேட்கிறார்: “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? . . . ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது நிச்சயம் அல்லவா?”
அடுத்ததாக, பொன் விதி என்று பொதுவாக சொல்லப்படும் நடத்தைக்குரிய சிறப்பான ஒரு விதிமுறையை இயேசு கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” இந்த விதிமுறைப்படி வாழ்வது, மற்றவர்களுக்கு நன்மை செய்யும் காரியத்தில் பயன்தரும் செயலை, நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேமாதிரி அவர்களையும் நடத்துவதை உட்படுத்துகிறது.
ஜீவனுக்குச் செல்லும் வழி சுலபமான வழி அல்ல என்பதை இயேசுவின் போதனை காட்டுகிறது: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிப்பவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”
மோசம்போக்கப்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது, எனவே இயேசு இப்படியாக எச்சரிக்கிறார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” நல்ல மரங்களும் கெட்ட மரங்களும் அவற்றின் கனிகளின் மூலமாக எவ்வாறு நாம் அடையாளங் கண்டுகொள்ளக்கூடுமோ, அவ்விதமே பொய்த் தீர்க்கதரிசிகளை அவர்களுடைய நடத்தையாலும் போதனைகளாலும் கண்டுகொள்ளக்கூடும் என்று இயேசு குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசுகிறவராய், ஒருவன் என்ன சொல்லுகிறான் என்பதுதானே அவனைத் தம்முடைய சீஷனாக்கிவிடாது, ஆனால் என்ன செய்கிறான் என்பதுதானே சீஷனாக்குகிறது என்று இயேசு விளக்குகிறார். சிலர் இயேசுவைத் தங்களுடைய கர்த்தர் என்பதாக சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய பிதாவின் சித்தத்தைச் செய்யாமல் இருந்தால், அவர் சொல்வதாவது: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
கடைசியாக, இயேசு தம்முடைய பிரசங்கத்துக்கு மறக்கமுடியாத முடிவுரையைக் கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”
மறுபட்சத்தில், இயேசு கூறுகிறார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.”
இயேசு தம்முடைய பிரசங்கத்தை முடித்தபோது, திரளாகக் கூடியிருந்தவர்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள், ஏனென்றால் அவர்களுடைய மதத்தலைவர்களைப்போல் அவர் போதிக்கவில்லை, அதிகாரமுடையவராய்ப் போதித்தார்.—மத்தேயு 7:1–29; லூக்கா 6:27–49.
◆ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பது குறித்து இயேசு என்ன சொல்லுகிறார்? தம்முடைய சீஷர்கள் மற்றவர்கள் சம்பந்தமாகப் புரிந்து செயல்படவேண்டும் என்பதை அவர் எப்படிக் காண்பிக்கிறார்?
◆ ஜெபத்தைக் குறித்து இயேசு மேலுமாக என்ன சொல்லுகிறார்? நடத்தை சம்பந்தமாக அவர் கொடுக்கும் விதிமுறை என்ன?
◆ ஜீவனுக்குச் செல்லும் வழி சுலபமாக இருக்காது என்றும் மோசம்போவதற்கான ஆபத்து இருக்கிறது என்றும் இயேசு எப்படிக் காண்பிக்கிறார்?
◆ இயேசு தம்முடைய பிரசங்கத்தை எப்படி முடிக்கிறார்? அது என்ன பாதிப்பை உடையதாயிருக்கிறது? (w86 11⁄15)