இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இயேசு பரிசேயரைக் கடிந்துகொள்கிறார்
சாத்தானின் வல்லமையால் தாம் பிசாசுகளைத் துரத்துகிறதாக இருந்தால், சாத்தான் தன்னில்தானே பிரிவினையுடையவனாயிருக்கிறான் என்று இயேசு விவாதிக்கிறார். “மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்,” என்கிறார்.
பிசாசுகளைத் துரத்துதலாகிய நல்ல கனி சாத்தானைச் சேவிப்பதால் உண்டாகிறது என்று குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனம். கனி நல்லது என்றால் மரம் கெட்டதாக இருக்க முடியாது. மறுபட்சத்தில் இயேசுவுக்கு எதிரான வீணான குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்ற எதிர்ப்புமாகிய கெட்ட கனி அவர்கள்தானே கெட்டுப்போன நிலையிலிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. “விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்,” என்று இயேசு கூறுகிறார்.
நம்முடைய வார்த்தைகள் நம் இருதயங்களின் நிலையைத் தெரிவிப்பதாயிருப்பதால், நாம் சொல்லுவது நியாயந்தீர்க்கப்படுவதற்கு ஓர் அடிப்படையை அளிக்கிறது. இயேசு சொல்லுகிறார்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்.”
இயேசு வல்லமையான கிரியைகளைச் செய்தபோதிலும் வேதபாரகரும் பரிசேயரும் அவரைப் பார்த்து, “போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்,” என்று கேட்கிறார்கள். எருசலேமிலுள்ள இந்தக் குறிப்பிட்ட ஆட்கள் இயேசுவின் அற்புதங்களைத் தனிப்பட்டவிதத்தில் பார்த்திருக்க மாட்டார்கள் என்றாலும், அவற்றிற்கு மறுக்கமுடியாத கண்கண்ட சாட்சிகள் இருக்கின்றனர். எனவே இயேசு அந்த யூதத் தலைவர்களிடம் சொல்லுகிறார்: “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.”
தாம் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதை விளக்குகிறவராய், இயேசு தொடர்ந்து கூறுகிறார்: “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” மீன் யோனாவை விழுங்கியதற்குப் பின்பு யோனா உயிர்த்தெழுப்பப்பட்டது போல வெளியே வந்தான், அதுபோல தாம் மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார் என்பதை இயேசு முன்னறிவிக்கிறார். இருந்தாலும் இயேசு பின்பு உயிர்த்தெழுந்தபோதும் அந்த யூதத் தலைவர்கள் “யோனாவின் அடையாளத்தை” ஏற்க மறுக்கிறார்கள்.
எனவே யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பிய நினிவே மக்கள் நியாயத்தீர்ப்பின் போது எழுந்து இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்களை கண்டனம் செய்வார்கள் என்று இயேசு சொல்கிறார். அதுபோல பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனின் ஞானத்தைக் கேட்க வந்து தான் பார்த்த கேட்ட காரியங்களை வியந்து பாராட்டிய சேபா தேசத்து ராணியின் காரியத்திற்கு ஓர் இணைவு பொருத்தத்தைச் செய்கிறார். “இதோ,” என்கிறார் இயேசு, “சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்.”
அதற்குப் பின்பு இயேசு அசுத்த ஆவி வெளிவந்த ஒரு மனிதனைப் பற்றிய உதாரணத்தைக் கொடுக்கிறார். என்றபோதிலும், அவன் அது வெளியேற்றப்பட்ட இடத்தை நல்ல காரியங்களால் நிரப்பாததால் கூடுதலாக ஏழு பொல்லாத ஆவிகளால் நிரப்பப்படுகிறான். “அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும்,” என்று இயேசு சொல்கிறார். இஸ்ரவேல் தேசம் சுத்திகரிக்கப்பட்டு சீர்திருத்தங்களை அனுபவித்தது—அந்த அசுத்த ஆவி தற்காலிகமாக வெளியேறியது போல. ஆனால் தேசம் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை மறுத்தது, கிறிஸ்துவையே எதிர்க்கும் ஓர் உச்சக்கட்டத்தை எட்டியது, அதன் பொல்லாத நிலை ஆரம்பத்திலிருந்ததைவிட மிக மோசமாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது.
இயேசு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாயாரும் சகோதரர்களும் கூட்டத்தில் ஒரு பக்கமாக நிற்கிறார்கள். அப்பொழுது ஒருவன் சொல்கிறான்: “உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள்.”
“என் தாயார் யார்? என் சகோதரர் யார்?” என்று இயேசு கேட்கிறார். தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி, “இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! பரலோகத்திலிருக்கும் என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்,” என்கிறார். இப்படியாக, இயேசு தம்முடைய உறவினருடன் தமக்கு இருக்கும் பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும், தம்முடைய சீஷர்களுடன் தமக்கு இருக்கும் உறவு அதைவிட நெருங்கியதாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். மத்தேயு 12:33–50; மாற்கு 3:31–35; லூக்கா 8:19–21.
◆ பரிசேயர்கள் எப்படி மரத்தையும் கனியையும் நல்லதாக ஆக்கத் தவறினார்கள்?
◆ “யோனாவின் அடையாளம்” என்ன? அது எப்படி மறுக்கப்பட்டது?
◆ இஸ்ரவேல் தேசம் எப்படி ஓர் அசுத்த ஆவி வெளியே வந்த மனிதனைப் போல் இருந்தது?
◆ தம்முடைய சீஷர்களிடம் தமக்கு இருக்கும் நெருங்கிய உறவை இயேசு எப்படி அழுத்தமாய்க் கூறினார்? (w87 3⁄1)