கடவுளை நாம் எவ்விதமாக அறிந்துகொள்ளலாம்?
சில ஆட்கள், கடவுள் எல்லா இடங்களிலும், நட்சத்திரங்களிலும் கிரகங்களிலும், வானவில்லிலும் ஒரு பறவையின் சிறகிலும், புல்லின் இதழிலும் இருக்கிறார் என்பதாக நம்புகிறார்கள். ஆனால் பைபிளோ, கடவுள் ஓர் ஆளாக, வாழ்வதற்குத் திட்டவட்டமான ஓர் இடத்தை உடையவராக இருக்கிறார் என்று போதிக்கிறது. ஞானவானாகிய சாலொமோன் ராஜா கடவுளிடமாக ஜெபிக்கையில், பின்வருமாறு சொன்னான்: “உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்க வேண்டும். பைபிள் புத்தகமாகிய ஏசாயாவில், கடவுள்தாமே பின்வருமாறு சொல்வதாக சொல்லப்படுகிறது: “வானம் எனக்குச் சிங்காசனம்.”—1 இராஜாக்கள் 8:49; ஏசாயா 66:1.
கடவுள் தாமே அவருடைய சிருஷ்டிப்பில் இல்லாவிட்டாலும், அவருடைய குணாதிசயங்கள், அவற்றில் பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன. ரோமர் 1:20-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலக முண்டானது முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும்.” அதைப் போல சங்கீதக்காரனாகிய தாவீது பின்வருமாறு எழுதினான்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய தரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அவரைத் தெரிவிக்கிறது.”—சங்கீதம் 19:1, 2.
ஆம், நட்சத்திரங்கள் நிறைந்த ஓர் இரவில் அண்ணாந்து பார்த்து, நம்முடைய பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து அதைக் காப்பதற்குத் தேவைப்படும் பேரளவான ஞானத்தையும் வல்லமையையும் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்! (ஏசாயா 40:26 ஒப்பிடவும்.) ஆம், சிருஷ்டிப்பு கடவுளுடைய ஆளுமையைப் பற்றிய குறையாத தகவலின் ஊற்றுமூலமாக இருக்கிறது. அது கடவுளுடைய தன்மைகளையும் குணங்களையும் பற்றித் தெரிவிக்கும் பேரளவான சாட்சியை மனிதனால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. யோபு புத்தகம், நமக்குப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறது: “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள் அவரைக் குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்.” (யோபு 26:14) ஸ்வீடன் தேசத்து பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: ‘எஜமானர், அவருடைய கிரியைகளைக் காட்டிலும் சிறந்தவர், ஆதலால் சிருஷ்டிப்பு சிறந்ததாக இருக்குமானால், கடவுள் தலைச்சிறந்தவராக இருக்க வேண்டும். சிருஷ்டிப்பு ஞானத்தை வெளிகாட்டுமேயானால், ‘கடவுள் மகா ஞானமுள்ளவராக இருக்க வேண்டும்; சிருஷ்டிப்பில் வல்லமை காணப்பட்டால், கடவுள் மகா வல்லமையுள்ளவராக இருக்க வேண்டும்.
பைபிள்—கடவுளுடைய புத்தகம்
இவ்விதமாக சிருஷ்டிப்பிலிருந்து கடவுளைப்பற்றிய தகவல் ஏராளமாக கிடைக்கிறது. என்றபோதிலும் சிருஷ்டிப்பை உண்ணிப்பாக ஆராய்வது, கடவுளுடைய பெயரை உங்களுக்குச் சொல்லுமா? சிருஷ்டிப்புக்குப் பின்னாலுள்ள நோக்கம் என்ன என்பதை அல்லது அவர் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்பதை அது வெளிப்படுத்துமா? இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய பதில்களைப் பெற்றுக்கொள்ள கடவுளுடைய இயற்பொருள் படைப்பை ஆராய்வதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தம்மைப் பற்றிய இந்தத் தகவல்கள் பைபிளில் எழுதப்படும்படியாகக் கடவுள் செய்திருக்கிறார்.
அங்கே கடவுள் ஒருபோதும், புலனாகாத விளக்கம் தர இயலாத புத்திக்கூர்மையாகவோ அல்லது எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் ஒரு சக்தி அல்லது வல்லமையாகவோ அறிமுகப்படுத்தப்பட்டில்லை. அப்போஸ்தலர் 3:19-ல் நாம், “யெகோவாவுடைய சந்நிதானத்தைப்” பற்றி வாசிக்கிறோம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டபோது, அவர் ‘தேவனுடைய சமுகத்தில் (சொல்லர்த்தமாக, முகம்) பிரத்தியட்சமாகும்படி பரலோகத்தில்தானே பிரவேசித்தார்’ என்று பைபிள் சொல்லுகிறது. (எபிரெயர் 9:24, கிங்டம் இன்டர்லீனியர்) நிச்சயமாகவே, இயேசு கடவுளைப்பற்றிப் பேசுகையில் அல்லது அவரிடமாக ஜெபிக்கையில் ஒருபோதும் அவரை மாபெரும் சக்தி, எல்லையற்ற புத்திக்கூர்மை அல்லது வேறு எந்த மற்ற எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத பதத்தாலும் அழைக்கவில்லை. எதிர்மாறாக, அவரை அடிக்கடி, பரலோகப் பிதா என்றே அழைத்தார். இது கடவுளோடு அவருடைய ஆழமான நெருக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு பதமாக உள்ளது.—மத்தேயு 5:48; 6:14, 26, 32.
ஆகவே கடவுள் பெயரில்லாத “ஏதோ ஒன்று” அல்ல, ஆனால் பெயரையுடைய ஒர் ஆளாக இருக்கிறார். “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர” வேண்டும் என்பதாக சங்கீதம் 83:17 சொல்கிறது. உண்மைதான் பைபிள் கடவுளுக்குப் பட்டப் பெயர்களை அல்லது அவரை வருணிக்கும் பதங்களையுங்கூட உபயோகிக்கிறது: “சர்வவல்லவர்,” “நித்திய ராஜா,” “ரட்சகர்,” “மேய்ப்பர்,” “நீண்ட ஆயுசுள்ளவர்,” “கண்காணி,” “போதகர்,” “சிருஷ்டிகர்,” “கன்மலை.” (ரூத் 1:21; 1 தீமோத்தேயு 1:17; ஏசாயா 43:11; சங்கீதம் 23:1; தானியேல் 7:9, 13, 22; 1 பேதுரு 2:25; ஏசாயா 30:20; 54:5; உபாகமம் 32:4) என்றபோதிலும் இப்படிப்பட்ட பதங்கள், அவருடைய சர்வ வல்லமை, தம்முடைய ஜனங்கள்மீது அன்புள்ள அக்கறை மற்றும் எல்லையற்ற ஞானம் போன்ற கடவுளின் ஆளுமையின் கூடுதலான அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.
கடவுள் ஓர் ஆளாக இருப்பதால் அவருக்கு விருப்பு வெறுப்புகளும்—உணர்ச்சிகளுங்கூட உண்டு. அவர் தம்முடைய ஜனங்களை நேசிக்கிறார் (1 இராஜாக்கள் 10:9), தம்முடைய கிரியைகளில் மகிழ்ச்சியைக் காண்கிறார் (சங்கீதம் 104:31), விக்கிரகாராதனையை வெறுக்கிறார் (உபாகமம் 16:22), பொல்லாப்பைக் குறித்து விசனப்படுகிறார். (ஆதியாகமம் 6:6) என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. 1 தீமோத்தேயு 1:11-ல் அவர் “நித்தியானந்த தேவன்” என்றுங்கூட அழைக்கப்படுகிறார்.
கடவுளை நெருங்கிய வகையில் அறிந்துகொள்ளுதல்
கடவுளுடைய ஆளுமையின் முழு வெளிப்பாட்டையும் உள்ளடக்கிக்கொள்ள, எந்த மனித மனதிலும் போதிய இடமில்லை என்பது உண்மைதான். “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ‘யெகோவாவுடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?!” (ரோமர் 11:33, 34) ஆனாலும்கூட, விசுவாசமுள்ள ஒருவருக்கு, கடவுள் மற்ற எந்த ஆளைப் போலவும் மெய்யானவராக இருக்கக்கூடும். யெகோவா தன் அருகிலேயே இருப்பதுபோல “நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” என்பதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (ஆதியாகமம் 6:9) மோசேக்குங்கூட கடவுள் அவ்வளவு மெய்யானவராக இருந்தபடியால், அவனுக்கு “அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல” இருந்தது. (எபிரெயர் 11:27) ஆபிரகாமைக் குறித்து அவன் “தேவனுடைய சிநேகிதன்” என்று சொல்லப்பட்டது.—யாக்கோபு 2:23.
நிச்சயமாகவே கடவுள் நோவா, ஆபிரகாம் மற்றும் மோசேக்கு தம்மை நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘ஆம், இப்படியாகத் தனிப்பட்ட வகையில் கடவுள் தம்மை எனக்கு வெளிப்படுத்துவாரேயானால், எனக்குங்கூட அவர் மெய்யானவராக இருப்பார் என்பதாக சிலர் சொல்லக்கூடும். ஆனால் நோவா ஆபிரகாம் மற்றும் மோசேயிடம் பைபிள் இருக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ, அவர் நிறைவேற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, கடவுளைப் பற்றி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் கடவுள் தம்மை நேரடியாக வெளிப்படுத்திக் காண்பிப்பது அவசியமாயும் பொருத்தமாயுமிருந்தது.
ஆனால் இன்று, நமக்குப் பைபிளும் பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களின் பல நூற்றாண்டு காட்சிகளும் இருக்கின்றன. நமக்கு இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, கிரியைகள் மற்றும் வார்த்தையின் சுவிசேஷ பதிவுகள் இருக்கின்றன. பவுல் சொல்கிறான்: “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமான அவருக்குள் [கிறிஸ்து] வாசமாயிருக்கிறது.” (கொலோசெயர் 2:9) ஆம், கடவுளை அறிந்துகொள்ளவும் முற்பிதாக்களின் நாட்களில் சாத்தியமாக இல்லாத நெருக்கத்தோடு அவரை அறிந்துகொள்ளவும் கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். இது, அவர் தம்மை நமக்கு நேரடியாக வெளிப்படுத்தாதிருப்பதற்குத் தேவைக்கு மேலாக ஈடுசெய்வதாக இருக்கிறதல்லவா?
பைபிள் வாசிப்பு நம்மை கடவுளிடம் நெருங்கி வரச் செய்கிறது
யாக்கோபு 4:8-ல் நாம் வாசிக்கிறோம்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” பைபிளை வாசிப்பதன் மூலம் நாம் கடவுளிடம் நெருங்கி வரலாம். ஆனால் எவ்விதமாக? ஒரு காரியமானது, ஒவ்வொரு நாளும் பைபிளின் ஒரு பகுதியை வாசிப்பதன் மூலம், அவருடைய ஆளுமையில் புதிய சிறப்பு பண்புகளையும், இயல்பான குணங்களையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் வாசிக்கையில் மறுபடியும் மறுபடியுமாக சற்று நிறுத்தி பின்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: “இந்த வசனத்தில் அல்லது பகுதியில் கடவுளைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்? மேலுமாக உங்கள் புரிந்துகொள்ளும் திறமையிலும் கடவுளிடம் நீங்கள் நெருங்கி வருவதிலும் உங்களுக்கு “உதவியாளனாக” செயல்படும்படி கடவுளுடைய ஆவிக்காக நீங்கள் ஜெபிக்கலாம்.—யோவான் 14:26.
“ஓர் ஆளாக யெகோவாவைப் பற்றி மிக மேம்பட்ட வகையில் புரிந்துகொண்டிருப்பதை நான் போற்றுகிறேன்” என்று ஆரம்பம் முதல் கடைசி வரையாகப் பைபிளைப் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண் தெரிவித்தாள். மிஷனரிகளைப் பயிற்றுவித்து உலகம் முழுவதிலும் அவர்களை அனுப்பும் உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியடில் அவள் ஒரு மாணவியாக இருந்தாள். இந்தப் பள்ளியில் என்ன முறையில் பைபிள் படிக்கப்படுகிறது? போதகர்களில் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரு குழுவாக முழு பைபிளையும் படிக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டு நாங்கள் ஆரம்பித்தோம். ஒரு நாளில் 10-15 பக்கங்களை நாங்கள் எடுத்துக்கொண்டோம் . . . மாணவர்கள் ஆராய்ச்சி செய்து எங்களுடைய கலந்தாலோசிப்பில் கலந்து கொண்டார்கள். கடினமான ஒரு வசனத்தை எதிர்பட்டால், நாங்கள் (1) அந்த வசனத்துக்கு முன் பின் உள்ள மற்ற வசனங்களையும் (2) இது எழுதப்பட்ட சமயத்திலிருந்த சூழ்நிலைமையையும் (3) வசனத்திலுள்ள முக்கிய வார்த்தைகளின் பொருளையும் ஆலோசித்துப் பார்த்தோம். யெகோவாவைப் பற்றியும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் இது நமக்கு என்ன சொல்கிறது?’ என்பதாக நாங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டோம். அது எப்பொழுதும் அவரைப் பற்றி எதையாவது எங்களுக்குச் சொன்னதை நாங்கள் கண்டோம்.”
இந்தப் பள்ளியில் முறையாக பைபிளைப் படிக்கும் சிலாக்கியத்தை நீங்கள் அடைய முடியாவிட்டாலும் கூட, இந்தப் படிப்பு முறைகளில் சில உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்துக்கும் பிரயோஜனமாக இருக்கும். உதாரணமாக யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், அவர்களுடைய சபை கூட்டங்களின் சம்பந்தமாக ஒவ்வொரு வாரமும் பைபிளின் ஒரு சில அதிகாரங்களைப் படிப்பது ஒரு பழக்கமாக இருக்கிறது. ஒரு குடும்பமாக இந்தப் பைபிள் வாசிப்பு அட்டவணையை ஏன் பின்பற்றக்கூடாது? மேலுமாக உவாட்ச் டவர் சொஸையட்டி வெளியிட்டுள்ள ஏய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டான்டிங், புதிய உலக மொழிபெயர்ப்பு குறிப்புரை பைபிள் போன்ற ஆராய்ச்சி புத்தகங்கள் கடினமான பைபிள் பகுதிகளில் உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.a ஒழுங்கான பைபிள் வாசிப்புத் திட்டம் யெகோவாவின் ஆளுமையில் உங்கள் போற்றுதலை வெகுவாக அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக உங்கள் மனதைக் கவரும் ஒரு பைபிள் பகுதியையும் கூட நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக சங்கீதம் 86-லுள்ள 17 வசனங்களைப் படிப்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் அதில் கடவுளுடைய ஆளுமையிலுள்ள 15 பண்புகளையாவது நீங்கள் காண்பீர்கள்: “அவர் நல்லவர், மன்னிக்கிறவர், கிருபை மிகுந்தவர், ஜெபங்களைக் கேட்க மனமுள்ளவர், தேவர்களுக்குள்ளே நிகரற்றவர், ஆக்கப் பூர்வமான வேலையாளாக ஒப்பற்றவர், பேரரசர், அதிசயங்களைச் செய்கிற மகத்துவமுள்ளவர், மரணத்திலிருந்து தப்புவிப்பவர், மனவுருக்கமும் இரக்கமும் நிடிய பொறுமையும் சத்தியமுமுள்ளவர். அவர் உதவி செய்கிறவரும் தேற்றுகிறவருமாய் இருக்கிறார். உங்கள் சிருஷ்டிகரைப் பற்றிக் கற்றறிய முயற்சி செய்வதைக் காட்டிலும் வேறு என்ன மேன்மையான இலக்கை நீங்கள் கொண்டிருக்க முடியும்?
கடவுளை அறிந்து கொள்வதனால் நிறைவான நன்மைகள்
நித்திய ஜீவன் என்ற முடிவான நம்முடைய இலக்கை எட்டுவது, கடவுளை அறிந்துகொள்வதனால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்றாகவே இருக்கிறது. (யோவான் 17:3) மேலுமாக உங்களில் அக்கறையுள்ளவராய் கண்மலையைப் போல அசைக்கமுடியாத ஒருவரை நாள்தோறும் தோழனாகக் கொண்டிருக்கும் நன்மை கிடைக்கிறது. (சங்கீதம் 18:31) தாவீது ராஜா சத்துருக்களால் சூழப்பட்டும் பிரச்னைகளால் அழுத்தப்பட்டும் இருக்கையில், கடவுள் ஒருவரே உண்மையான உதவியாளனாக இருப்பதைக் கண்டான். ஆகவே அவன் சொன்னான்: “யெகோவா மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட வொட்டார்.”—சங்கீதம் 55:22 NW.
அவரைப்பற்றி அறிந்துகொள்ள நீங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வீர்களேயானால், நீங்களுங்கூட கடவுளோடு இப்படிப்பட்ட ஓர் உறவை அனுபவித்துக் களிக்கலாம். அது மிகவும் கடினமானதில்லை. அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கு முயற்சி எடுங்கள். கடவுளை அறிந்திருப்பதைத் தங்களுடைய வாழ்க்கையில் காண்பிக்கும் ஆட்களோடு, அதாவது இந்தப் பத்திரிக்கையை உங்களுக்குக் கொண்டுவந்து கொடுத்தவரைப் போன்றவர்களோடு கூட்டுறவுகொள்ளுங்கள். ஜெபத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏனென்றால், கடவுள் உங்கள் கூக்குரலுக்குச் செவி கொடுக்காதிருக்கும் ஏதோ ஒரு பொதுவான சக்தி இல்லை. அவர் ஜீவனுள்ள தேவனும் “ஜெபத்தைக் கேட்கிறவரு”மாக இருக்கிறார். மேலும் “நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்.”—சங்கீதம் 65:2; 1 நாளாகமம் 28:9. (w87 4/1)
[அடிக்குறிப்புகள்]
a பைபிளை ஆராய்வதற்கு உதவியாக இருக்கும் புத்தகங்களில் இத்தகைய வசனங்களின் விளக்கங்களையும் தெளிவுரைகளையும் கண்டுபிடிக்க உவாட்ச் டவர் பிரசுரங்களின் 1930-1985 அகரவரிசை அட்டவணை உங்களுக்கு உதவியாக இருக்கும்
[பக்கம் 5-ன் படம்]
கடவுள் நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே ஆகியோருக்கு தம்மை நேரடியாக வெளிப்படுத்தினார்
[பக்கம் 7-ன் படம்]
சிருஷ்டிப்பு கடவுளுடைய ஆளுமையைப் பற்றிய குறையாத தகவலின் ஊற்றுமூலமாக இருக்கிறது