யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்
“யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவருடைய வழியைக் கைக்கொள், பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார். துன்மார்க்கர் அறுப்புண்டு போகையில், நீ அதைக் காண்பாய்.”—சங்கீதம் 37:34, NW.
அறிவுத் திறமையில் மனிதக் குடும்பம் அதன் மிக அதிக முன்னேற்ற வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. அதன் பிரயாசத்தினால், அது கடைசியாக அணுசக்தி சகாப்தத்தை எட்டிவிட்டது. அணுசக்தி ஏராளமான ஆற்றலை அளிக்கக் கூடியதாக, இவ்வாறு பூகோள அளவில் முதன்மை வாய்ந்த காரியங்களுக்கு வழிதிறக்குமெனத் தோன்றுகிறது. முரண்பொருள் கொண்டதாக, அது மனிதகுலத்துக்கு மிக உச்ச அளவான தீங்குக்கும் வழி வகுத்திருக்கிறது.
2 அணுசக்தி படுகொலையில் மனிதக் குடும்பம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதை எது தடுத்து நிற்கிறது? பற்பல வகை அரசாங்கங்களைக் கொண்ட ஏறக்குறைய 159 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ளதென பெருமை பாராட்டும் ஐக்கிய நாட்டுச் சங்கமே தடுத்து வைப்பதாகத் தோன்றலாம். அரசியலில் இந்த அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்தில்லை, ஒவ்வொன்றும் அதனதன் அமைப்பு முறையே மேம்பட்டது, ஆம் எல்லாவற்றிலும் சிறந்ததென நம்புகிறது. ஆகவே, ஐ.நா. தனக்குள்தானே முரண்படுகிற குழுவாகும். தேசீய பெருமையும் சுதந்தர ஆவலும் ஊடுருவிப் பரவியிருக்கின்றன. மேலும், பல நாடுகள் கடவுளில், நம்பிக்கை வைப்பதை விட்டு, நாத்திகமாகிவிட்டிருக்கின்றன.
3 கடவுளற்றவையென வகுக்கப்பட விரும்பாமல் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதாயும், இயேசுவுடனும் ஆளாக உருவகம் செய்யப்பட்ட “பரிசுத்த ஆவி”யுடனுங்கூட திரித்துவ இணைப்பில் “பிதாவாகிய கடவுளிலும்” விசுவாசம் வைத்திருப்பதாயும் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்குக் கிறிஸ்தவ மண்டலம் என்ற பெயர் இன்னும் பிரயோகிக்கப்படுகிறது. இந்தத் திரித்துவத்தின் உறுப்பினர் ஒரே சமமானவர்கள் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இயேசுவின் பிதா தம்மை அடையாளங்காட்டும் பின்வரும் வார்த்தைகளை தீர்க்கதரிசி ஏசாயா எழுதும்படி செய்தார்: “நான் யெகோவா, என் நாமம் இதுவே; என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8, தி.மொ.) இந்த யெகோவா அல்லது யாவே (தி ஜெருசலெம் பைபிள்), ஒப்பற்ற சரித்திரப் பதிவைத் தமக்கு உண்டுபண்ணியிருக்கிறார்.
4 ஐக்கிய நாட்டுச் சங்கம் கடவுளுடைய பெயருக்கு அதற்குரிய நன்மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொடாதது, அதற்கு எவ்வகையிலும் மதிப்பைக் கொண்டுவருவதில்லை. இது, இப்பொழுது மிக மோசமான நெருக்கடி நிலையை எதிர்ப்பட்டிருக்கும் மனிதவர்க்கத்தை அந்தப் பெயருடையவரில் நம்பிக்கை வைப்பதற்கு ஊக்குவிப்பதில்லை. எனினும், மனிதவர்க்கம் இப்பொழுது மகிழ்ந்து ஏற்கக்கூடிய நேர்மைவாய்ந்த ஒரே நம்பிக்கைக்கு அவர் ஆதாரம் போட்டிருப்பதைக் காண்கையில், அவர் சரியாகவே “நம்பிக்கையின் தேவன்” என்று குறிப்பிடப்படுகிறார். (ரோமர் 15:13) அவர் கொடுக்கிற நம்பிக்கை பல ஆண்களையும் பெண்களையும் பலப்படுத்தி தளராமல் தொடரச் செய்திருக்கிறது.
5 இந்த நம்பிக்கை கொள்வதற்கு ஆதாரம் மனிதக் குடும்பத்தின் சரித்திர ஆரம்பத்தில் போடப்பட்டது. ஆம், நம்முடைய முதல் பெற்றோரை, மத்திய கிழக்கிலிருந்த அவர்களுடைய ஏதேனிய தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்புதானே அது போடப்பட்டது. அந்தத் தோட்டத்தை, அல்லது பரதீஸைப் பற்றி எபிரெய மொழியில் எழுதப்பட்டுள்ள விவரப் பதிவு, தங்கள் சிருஷ்டிகரை வணங்குவதை விட்டு தங்கள் மனப்போக்கில் சென்ற ஜனங்களின் கட்டுக்கதையுமல்ல, கற்பனைக் கதையுமல்ல.—ஆதியாகமம் 2:7-3:24.
6 4,000-த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதும்படி தேவாவியால் ஏவப்பட்டான்: “ஒரே மனுஷனால் பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் வந்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் பரவினது.” (ரோமர் 5:12, தி.மொ.) அவன் எழுதின மற்றொரு நிருபத்தில், ‘பாவஞ்செய்த அந்த ஒரே மனுஷன்’ யாரென அடையாளங்காட்டினான்: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:22) லூக்கா என்ற பெயர்கொண்ட மருத்துவன், தன்னுடைய சுவிசேஷத்தின் மூன்றாவது அதிகாரத்தில், இயேசுவின் வம்சபரம்பரையைத் தலைமுறைத் தலைமுறையாக ஆதாம் வரை நெடுகக்கொண்டு செல்கிறான், இந்த ஆதாம், ஏதேனிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னால், நம்பிக்கைக்குரிய யெகோவாவின் செய்தியைக் கேட்டான்.—லூக்கா 3:23-38.
7 இயல்பாகவே, அந்தச் செய்தியின் உட்பொருளை அறிய நீங்கள் விரும்ப வேண்டும். ஆனால் அதை வாசிப்பதற்கு முன்னால், நெடுங்காலமாக யெகோவா நம்பிக்கையளிப்பவராக இருந்திருக்கிறார் என்ற இந்த உண்மையைக் கவனியுங்கள். தொடக்கத்தில், ஆதாம் கடவுளுடைய பூமிக்குரிய குமாரனாக இருந்தான், அவன் சந்ததியைப் பிறப்பிக்கும்படி கடவுள் அவனை அனுமதித்தார். கிளர்ச்சியற்ற ஒரு சூழ்நிலைமை வருவதை நீங்கள் முன்னறிந்தால், உங்கள் சந்ததிக்கு ஊக்கமூட்ட அல்லது நம்பிக்கையளிக்க நீங்கள் விரும்பலாம். இதைப்போன்ற ஒன்றைக் கடவுள் செய்தார். ஆதாம் தனியே தன்மீது கடவுளுடைய கண்டன தீர்ப்பு வார்த்தைகள் கூறப்படுவதைக் கேட்ட பின்பு, தன் சந்ததியாருக்கு நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் கூறப்படுவதைக் கேட்டான்.
8 நம்பிக்கையை உள்ளத்தில் உட்புகுத்தும் கடவுளின் அவ்வார்த்தைகள் யாவை? ஆதாமின் பாவத்தில் உட்பட்டிருந்த ஒரு சர்ப்பத்தை நோக்கி கடவுள் பின்வருமாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் [சந்ததிக்கும்] பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) இந்த வார்த்தைகள் நம்பிக்கை எழுப்புவதாக எப்படிச் சொல்ல முடியுமென நீங்கள் ஒருவேளை வியப்படையலாம். முதலாவதாக, “சர்ப்பம்” அதன் தலை நசுக்கப்படவிருக்கிறதென நாம் கற்றறிகிறோம்.
9 வெளிப்படுத்துதல் 12:9-ல் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத் தள்ளப்பட்டது, அதனோடே கூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” ஆம், ஏதேனில் உட்பட்ட அந்த “சர்ப்பம்” (பாம்பு), பிசாசாகிய சாத்தான் என அறியப்படும் அந்தப் பொல்லாத ஆவி சிருஷ்டியேயல்லாமல் வேறு எவருமல்ல. இந்த அடையாளக் குறிப்பான சர்ப்பம் பரலோகத்தில் தூதர்களைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் இங்கே கீழே பூமியிலும் ஒரு “வித்தைக்” கொண்டிருக்கிறது. இந்த “வித்து” உரிய காலத்தில் அவனோடு கூட அழிந்துபோக நசுக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரம்.
10 நம்முடைய முதல் பெற்றோரின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த அந்தச் “சர்ப்பம்” பிசாசானவனே என்று அடையாளங் காட்டப்பட்டதை உறுதிப்படுத்தி, முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து யூத மதத் தலைவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; . . . அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” (யோவான் 8:44) இயேசு அந்த மத எதிரிகளை “விரியன் பாம்புக் குட்டிகளே,” என்றும் அழைத்தார்.—மத்தேயு 12:34; 23:33.
நம்பிக்கை உயிர்ப்புடன் வைக்கப்பட்டது
11 இந்த அடையாளப் பூர்வமான சர்ப்பத்தின் தலையை நசுக்குவதைப் பற்றிய தெய்வீக வாக்கு, இனியும் வரவிருந்த மனிதக் குடும்பம் முழுவதன் முன்னும் இருதயத்துக்கு எழுச்சியூட்டும் நம்பிக்கையை உண்மையில் வைத்தது. ஆதியாகமம் 3:15-ன் மற்ற அம்சங்களை ஆராய்வதன் மூலம் இதன் காரணத்தை நாம் காணலாம். ஸ்திரீயின் “வித்து” குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த “வித்து” என்னவென்பது வெகுகாலம் விளங்காச் செய்தியாக மறைந்திருக்க விடப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அடையாளங் கண்டுகொள்ளப்படாத அந்த “வித்து”வை, யெகோவா தேவன், அந்த அடையாளக்குறிப்பான சர்ப்பத்துடனும் கடவுளுக்கு எதிர்ப்பான அதன் வித்துவுடனும் பகைமையில் வைப்பார் என்பது தெளிவாயிருந்தது. அந்த “ஸ்திரீயின்” “வித்து”வுக்கு வெற்றி வாக்குகொடுக்கப்பட்டது. ஆம், உறுதியளிக்கப்பட்டது! அதன் வெற்றி மனிதவர்க்கத்துக்கு முன்னால் நம்பிக்கையாக வைக்கப்பட்டது. ஆகவே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் அந்த “ஸ்திரீயின்” “வித்து” வருவதற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
12 நூற்றாண்டுகள் கடந்து செல்லச்செல்ல இந்த “வித்து,“ மேசியாவாகும்படியும் மீட்கும் கிரய பலியாகத் தம்முடைய உயிரைச் செலுத்தும்படியும் பூமிக்கு அனுப்பப்பட்ட தம்முடைய ஒரே பேறான குமாரனே என்று கடவுள் வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 22:17, 18; கலாத்தியர் 3:16; 1 யோவான் 2:2; வெளிப்படுத்துதல் 5:9, 10) இந்தக் காரணத்தினிமித்தம் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நம்பிக்கையை ஐக்கிய நாட்டுச் சங்கத்தின்மேல் வைத்தில்லை. அவர்களுடைய நம்பிக்கை, யெகோவா தேவனின் தலைமை பிரதிநிதிப் பேச்சாளராகிய உயிருள்ள இயேசு கிறிஸ்துவின் மீதே தங்கியிருக்கிறது. கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்று நாம் திட நம்பிக்கையுடன் இருக்கலாம், ஏனெனில் அவர் பரலோகத்தில் யெகோவாவின் வலது பாரிசத்தில் உட்காரும்படி மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார். பவுல் சொல்லுகிற பிரகாரம்: “இம்மைக்காக மாத்திரம் [இதில் நம்முடைய 20-ம் நூற்றாண்டு வாழ்க்கையும் உட்பட்டிருக்கிறது] நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில், முதற்பலனானார்.” (1 கொரிந்தியர் 15:19, 20) இந்தப் பத்திரிகையின் பக்கங்களில் பைபிள் பூர்வமாய் அடிக்கடி உறுதிப்படுத்தப்பட்டபடி, இன்று இயேசு கிறிஸ்து பரலோக அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:15.
13 நிச்சயமாகவே, மனிதவர்க்கத்தின் நம்பிக்கையாக யெகோவாவின் இடத்தை இயேசு நிரப்பவில்லை. சங்கீதம் 37:34 இன்னும் பொருத்தமாக நிலைத்திருக்கிறது: “யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவருடைய வழியைக் கைக்கொள், பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார். துன்மார்க்கர் அறுப்புண்டு போகையில், நீ அதைக் காண்பாய்.” (NW) யெகோவாவில் தொடர்ந்து நம்பிக்கை வைப்பதும் மனிதன் உண்டுபண்ணின நிறுவனங்களில் நம்பிக்கை வைப்பதை விட்டு விலகும்படி எல்லா மக்களையும் ஊக்கப்படுத்துவதும் இன்னும் அவசியம்.
14 இந்த உண்மைக்குப் பொருந்த, யெகோவாவின் சாட்சிகள் 208 நாடுகளில் 164 மொழிகளில் சுறுசுறுப்பாய் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதிலிருந்து அவர்களை நிறுத்திப்போட முடியாது. அரசியல் நிறுவனங்கள் மத அமைப்புகளால் தூண்டி உதவிசெய்யப்பட்டு அவர்களை நிறுத்திப்போட முயற்சி செய்வதில் அவர்களுக்குத் தெய்வீக உரிமை இல்லை. நாம் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளாகவும், பின்வருமாறு எழுதின பெத்லகேமின் தாவீது செய்ததைப்போல் அவரில் நம்பிக்கை வைத்துக்கொண்டும் இருக்கலாம்:
15 “யெகோவா என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் நடத்தி, களைப்பாற்றும் தண்ணீர்களண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் எனக்குப் புது உயிர் கொடுக்கிறார், தமது நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாங்குக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலைக்கு எண்ணெய் பூசுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவின் வீட்டிலே சதாகாலமும் நிலைத்திருப்பேன்.”—சங்கீதம் 23, தி.மொ.
16 தாவீது அரசன், பூர்வ இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு யெகோவாவின் ஆவிக்குரிய மேய்ப்பனாயிருந்தான். மேலும் எருசலேம் அந்தத் தேசத்தின் தலைநகராவதற்கு வழியுண்டாக்கினான், அங்கே அவனுடைய குமாரன் சாலொமோன் 40 ஆண்டுகள் ஆண்டான். நல்ல காரணத்துடனே, இயேசு கிறிஸ்து “தாவீதின் குமாரன்” என பேசப்பட்டார். (லூக்கா 1:31; 18:39; 20:41) தாவீது யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தால், அவனுடைய பூமிக்குரிய சந்ததியான இயேசு கிறிஸ்துவும் அவ்வாறே செய்வார். அப்படியே செய்தார்.
17 தாவீதின் மிக அதிகப் பிரசித்திப்பெற்ற பூமிக்குரிய சந்ததியாகிய, இயேசு கிறிஸ்து, சங்கீதம் 37:34-ன் அறிவுரையைப் பின்பற்றினதற்கு அத்தாட்சியாக, வாதனைக்குரிய கழுமரத்தில் தம்முடைய கடைசி மூச்சை விடுகையில், பின்வருமாறு கூறினார்: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” (லூக்கா 23:46) சங்கீதம் 31:5-ல் கடவுளை நோக்கி: “உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்ற தாவீதின் வார்த்தைகளை இயேசு எடுத்துக்கூறி நிறைவேற்றினார். தாவீது அரசனின் நம்பிக்கை வீணாய்போகாததைப் போலவே இயேசுவின் நம்பிக்கையும் வீணாய்ப் போகவில்லை. மூன்றாம் நாளில் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார். நாற்பது நாட்களுக்கு அப்பால் அவர் தம்முடைய பரலோகத் தகப்பனிடம் திரும்பி சென்றார். பொ.ச.1914-ல் புறஜாதியாரின் காலங்களின் முடிவில், யெகோவா தம்முடைய குமாரனை பூமியின் அரசராகும்படி உயர்த்தினார்.
நம்பிக்கை வைப்பதற்குக் காலம் இதுவே
18 இன்று, இந்தப் புதிய ஆண்டாகிய 6,014 A.M. (உலகத்தின் ஆண்டில் 6,014-வது ஆண்டு) மனிதக் குடும்பத்தை எதிர்காலத்துக்குள் முன்கொண்டு செல்கையில், மனிதக் குடும்பத்துக்கு என்ன நம்பிக்கையை எதிர்பார்க்கலாம்? இந்தக் கேள்வி இப்பொழுது மிக அதிகப் பொருத்தமாயிருக்கிறது. ஏனென்றால் நாம், பைபிள் காலத்துக்குப் பிற்பட்ட ஏறக்குறைய 1,900 ஆண்டுகளில் இருக்கிறோம். இது தாவீது சங்கீதம் 37:34 எழுதினதிலிருந்து நெடுங் காலமாகிவிட்டது.
19 இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பின சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா தேவன், குறுகிய பார்வையைக் கொண்ட மனிதர் சதிசெய்ததைப் பார்க்கிலும் மிக அதிக மேன்மையான பாகத்தை அவருக்கு வைத்திருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனை உயிர்த்தெழுப்பி பரலோகங்களில் தம்முடைய வலது பாரிசத்துக்கு உயர்த்தினதன் மூலம், யெகோவா தேவன், நம்முடைய கடைசி நம்பிக்கையாக, தவறா நம்பிக்கையுடன் அவரை நாம் நோக்கியிருப்பதற்குக் காரணத்தை மேலுங் கூட்டினார். தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளன் பவுல் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம், இது மகிழ்ச்சியுடன் வாழும் நம்முடைய நித்திய ஜீவனைக் குறிக்கலாம்: “அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.”—ரோமர் 8:24.
20 இந்த அப்போஸ்தலன் மேலும் தொடர்ந்து கூறுவதாவது: “காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.” (ரோமர் 8:24, 25) ஆகவே தொடக்கத்திலிருந்த அந்த முதல் நம்பிக்கை இன்னும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது, ஆம், மனித குலத்தின்மேல் அதன் மகிமையான நிறைவேற்றத்தை நெருங்குகிறது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:4, 5) இது மனிதவர்க்கம் முழுவதற்குமுரிய நம்பிக்கையாயிருக்கும் காரணத்தினிமித்தமே, எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்குத் தகுதியுள்ளது. இதுவே இந்த “நம்பிக்கையின் தேவனின்” எண்ணம்.
21 எல்லாக் காலங்களிலும் இதுவே இந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்குரிய அவருடைய காலம். ஐ.நா.-வின் நாடுகளில் சில, சடப்பொருள் எல்லாவற்றின் அணு மையத்திலுங்கூட விஞ்ஞான தேர்ச்சித்திறமை அடைந்துள்ள இந்தச் சகாப்தத்திலும் இந்த அரசாங்கங்களின் தலைவர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதை மேலும் உயர்ந்த அறிவு நுட்பமுள்ள ஒருவரிடம் விடுவதற்கான தேவையை உணருகிறதில்லை.—ஆதியாகமம் 11:6-ஐ ஒத்துப்பாருங்கள்.
22 மக்கள் பாராட்டும் மதம் முன்னொருபோதும் இராத வண்ணம், தப்பிக்கொள்ள வழியில்லாமல் எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதன் பிரிக்கும் பாதிப்பு ஒழிக்கப்பட வேண்டும். தாங்கள் அடையக்கூடிய எல்லாவற்றிற்காகவும் உலகக் காரிய ஒழுங்குமுறையை உறிஞ்சிவாழ இவ்வளவு நீடித்தக் காலம் முயன்று, ஆளும் மூல அதிகாரங்களை ஒட்டுணிபோல் பற்றிக்கொண்டிருந்த மதங்களை, அந்த ஆளும் அதிகாரங்கள் உதறித்தள்ளித் தங்களைப் பிரித்துக்கொண்டு தங்கள் மேம்பட்ட நிலையை வற்புறுத்துமென பைபிள் காட்டுகிறது. அப்படியானால், அரசியல் மூலப் பகுதி இந்தப் போக்கை மேற்கொள்ளப்போவது ஆச்சரியமொன்றுமில்லை. அரசியல் பகுதிகள் மதத்தை இவ்வாறு தாக்கி, தாங்கள் தண்டிக்கப்படாமல் பத்திரமாய் விடப்பட்டிருப்பது அவர்களுடைய நோக்குநிலையில், வணங்குவதற்கும் சேவிப்பதற்கும் தகுதியுள்ள கடவுள் இல்லையென குறிக்கும். தீர்க்கதரிசனம் குறிப்பதென்னவெனில், அப்பொழுது அவர்கள், தொடர்ந்து நிலைத்திருக்கும் கடவுளுடைய சாட்சிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்பதே. அவர்கள் தங்கள் கடவுள்-எதிர்ப்புப் போராட்ட ஏற்பாட்டின் கடைசி செயலாக யெகோவாவின் சாட்சிகளின்மேல் மிக அதிக எளிதாய் வெற்றிப் பெறுவதற்கு எதிர்பார்பார்கள்.—வெளிப்படுத்துதல் 17:12-17; எசேக்கியேல் 38:10-23.
23 எனினும், ஒருபோதும் போரில் தோல்வியடையாதவரான, சேனைகளின் யெகோவாவை எதிர்த்துப் போரிடத் துணிகிறவனுக்கு வரவேண்டிய வெட்கக்கேடான தோல்வியை அவர்கள் கடைசியாக அறிந்துகொள்வார்கள். இது, அவர்கள், உண்மையான ஒரே கடவுளின் பிரதான எதிரியின், அதாவது, “சர்ப்பத்தின்,” “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளான” சாத்தானின் நோக்கங்களையே சேவித்துக் கொண்டிருந்தார்களென சந்தேகத்துக்கிடமில்லாமல் தெளிவாக்கும்.—2 கொரிந்தியர் 4:4.
24 இது அவர்களுக்கு எத்தகைய அவமானத்தைக் குறிக்கும்! அவர்கள் மெய்ப்பிக்க நம்பியிருந்தது வெட்கங்கெட்ட துணிகரத்தின் உச்சநிலையாக நிரூபித்து, வானத்துக்கும் பூமிக்கும் கடவுளானவரையே நீதியுள்ள கோபமூளும்படி தூண்டுவிக்கும். அற்பமான மனிதவர்க்கத்தினரிடம் அவர் பின்வருமாறு சொல்லக்கூடும்: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல; இது யெகோவாவின் திருவாக்கு. பூமியிலும் வானம் உயர்ந்திருப்பதுபோல உங்கள் வழிகளிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கின்றன, மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளைகிளம்பி விளையும்படி செய்து, விதைக்க விதையையும் புசிக்க ஆகாரத்தையும் கொடுக்கிறது. என் வாயிலிருந்து வரும் வசனமும் அப்படியே இருக்கிறது, அது வெறுமையாய் என்னிடம் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றுகிறது.”—ஏசாயா 55:8-11, தி.மொ.
25 மனிதனின் இந்தச் சிருஷ்டிகர், அவர்தாமே கொண்டிருக்கிறதைப் போன்ற கூருணர்ச்சி திறமையை மனித இருதயத்துக்குள் வைத்திருக்கிறார். “என்னைத் தமது மகிமைக்கென்று அனுப்பின சேனைகளின் யெகோவா உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளைப் பற்றி இப்படிச் சொல்லுகிறார்—உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.” (சகரியா 2:8) அப்படியானால், யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவில் நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். தம்முடைய சர்வலோக அரசாட்சியின் மிக அதிக அழகுவாய்ந்த அணிகலமாயிருக்க, அவர் அந்த நம்பிக்கைக்கு முழுமையாய்ப் பாத்திரராக நிரூபிப்பார். தாம் மகா உன்னதமானவர், சர்வவல்லவர், நித்திய கடவுள், வானம், பூமி முழுவதிலுமுள்ள தம்முடைய சிருஷ்டிகளின் மிக உயர்ந்த நம்பிக்கைகளுக்குப் பாத்திரர் என மேலும் எந்த விவாதத்துக்கும் இடமில்லாமல் நிரூபிப்பார். அல்லேலூயா!—சங்கீதம் 150:6, தி.மொ. (w87 12/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்
◻ தேசங்களின் நம்பிக்கை ஏன் ஏமாற்றத்தைக் கொண்டுவரக்கூடியது?
◻ ஆதியாகமம் 3:15-ல் கடவுள் எவ்வாறு நம்பிக்கைக்கு ஆதாரத்தை அளித்தார்?
◻ சங்கீதம் 37:34-ஐக் குறித்ததில் இயேசுவின் நிலை என்ன?
◻ இப்பொழுது நமக்கு ஏன் நம்பிக்கைக்குக் காரணம் உண்டு?
[கேள்விகள்]
1, 2. மனிதவர்க்கம் எந்த நிலையில் நிற்பதாகத் தோன்றுகிறது? ஐக்கிய நாட்டுச் சங்கம் இதில் எவ்வாறு உட்பட்டிருக்கிறது?
3. கடவுளைப்பற்றிக் கிறிஸ்தவ மண்டலம் கொண்டிருக்கும் கருத்து எப்படிக் கடவுள்தாமே தம்மைப்பற்றிக்கூறும் கருத்துக்கு வேறுபடுகிறது?
4. ஐக்கிய நாட்டுச் சங்கம் மனிதவர்க்கத்தின் கவனத்தை எதிலிருந்து திருப்புகிறது?
5. நம்பிக்கைக்கு ஆதாரம் எப்பொழுது போடப்பட்டது?
6. மனிதவர்க்கம் தனக்கு நம்பிக்கை தேவைப்படும் நிலைக்கு எவ்வாறு வந்தது?
7. ஆதாம் இன்னும் உயிரோடிருக்கையில் என்ன ஊக்கமூட்டும் காரியத்தைக் கடவுள் செய்தார்?
8. ஆதியாகமம் 3:15 எப்படி நம்பிக்கைக்கு ஆதாரத்தை அளிக்கிறது?
9. ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள “சர்ப்பம்” யார்?
10. இந்தச் “சர்ப்பம்” இன்னதென்று அடையாளங் காட்டுவதை இயேசு எப்படி உறுதிப்படுத்தினார்?
11. நம்பிக்கைக்குக் கூடுதலான என்ன காரணத்தை ஆதியாகமம் 3:15 அளித்தது?
12. காலப்போக்கில் “ஸ்திரீயின்” இந்த “வித்து”வைப் பற்றி மேலும் என்ன வெளிப்படுத்தப்பட்டது?
13, 14. யெகோவாவின் சாட்சிகள் யாரில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள்? அதைப்பற்றி அவர்கள் என்ன செய்கிறார்கள்?
15. தாவீது அரசன் யெகோவாவில் எத்தகைய நம்பிக்கை கொண்டிருந்தான்?
16. எப்படி இயேசு, தாவீது கொண்டிருந்ததைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருந்தார்?
17. இயேசு யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18. இன்று, நம்பிக்கை வைப்பதற்கு ஏன் பொருத்தமான காலம்?
19. யெகோவா இயேசுவுக்கு என்ன செய்து நமக்கு நம்பிக்கையளித்தார்?
20. யெகோவா இன்னும் “நம்பிக்கையின் தேவன்” என்று நாம் ஏன் சொல்லலாம்?
21, 22. சமீப எதிர்காலத்தில் ராஜ்யங்கள் என்ன செய்யும்படி நாம் எதிர்பார்க்கலாம்?
23, 24. ராஜ்யங்கள் தம்முடைய ஜனத்தைத் தாக்குகையில் யெகோவா எவ்வாறு எதிர்ச்செயலாற்றுவார்?
25. அப்படியானால், நம்முடைய நம்பிக்கையின் கடவுளாக யெகோவாவை நோக்கியிருப்பதற்கு நமக்கு ஏன் இப்பொழுது நல்ல காரணமிருக்கிறது?
[பக்கம் 18-ன் படம்]
செம்மறியாடுகள் தங்கள் மேய்ப்பனைப் பின்பற்றுவதுபோல், தாவீது யெகோவாவை நோக்கியிருந்து அவரில் நம்பிக்கை வைத்தான்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.