யெகோவாவை உங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருங்கள்
“யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; . . . யெகோவாவில் மகிழ்ச்சியாயிரு.”—சங்கீதம் 37:3, 4, தி.மொ.
நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் யூத மதத் தலைவர்கள் கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டினார்கள். ஆனால் அவர்கள் அவரில் நம்பிக்கைகொள்ளவில்லை. அவருடைய கற்பனைகளை மீறி அவருடைய பிரதிநிதிகளைத் துன்புறுத்தினார்கள். (மத்தேயு 15:3; யோவான் 15:20) இதன் விளைவாக, யெகோவாவால் ‘அவர்களுடைய வீடு பாழாக்கப்பட்டது.’ (மத்தேயு 23:38) பொ.ச. 70-ல் ரோம சேனை எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பாழாக்கினது, இதனால் அவர்களுடைய மதத் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் ஏராளமாக மாண்டனர். ஆனால் யெகோவாவை நம்பினவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவருடைய பிரதிநிதிகளின் எச்சரிப்புகளுக்குச் செவிசாய்த்து பாதுகாப்புக்காகத் தப்பியோடினார்கள்.—மத்தேயு 24:15-22; லூக்கா 21:20-24.
2 இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில், இந்த உலக மதங்கள் உண்மையான கடவுளாகிய யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களா? அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தைச் செய்கிறார்களா அல்லது கடவுள் புறக்கணித்த முதல் நூற்றாண்டு மதத் தலைவர்களைப் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிறார்களா? “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மை செய்”வதன் காரணத்தால் யெகோவாவின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பை இன்று எந்த மதம் கொண்டிருக்கலாம்?—சங்கீதம் 37:3.
சகோதர அன்பு எங்கே?
3 “மனிதவர்க்கம் முழுவதுமே உயிர்ப்பிழைத்திருப்பது ஆபத்துக்குள்ளிருக்கிறது,” என்று போப் ஜான் பால் II எச்சரிப்பு கூறி வெகு நாட்களாகவில்லை. “அந்த அச்சுறுத்தல்களை வித்தியாசமான மதத் தொகுதிகளின் ஒன்றுபட்ட முயற்சிகொண்டு சமாளிப்பதே மிகச் சிறந்த வழி,” என்று அவர் அறிவுறுத்தினார். மதத் தலைவர்கள் “சமாதானத்துக்கும் ஒப்புறவாகுதலுக்கும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்” என்பது கடவுளுடைய சித்தம் என்றார் அவர். என்றபோதிலும், அது கடவுளுடைய சித்தமாக இருக்குமானால், பல நூற்றாண்டுகளாக இத்திசையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடவுள் ஏன் ஆசீர்வதிக்கவில்லை? அவர் அப்படிச் செய்யாததற்குக் காரணம், கடவுள் தம்முடைய பரலோக ராஜ்யத்தின் மூலமாகச் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான அவருடைய வழியில் இந்த மதங்களுக்கு நம்பிக்கை இல்லை. (மத்தேயு 6:9, 10) மாறாக, அவர்கள் இந்தத் தேசங்களின் அரசியல்களையும் போர்களையுமே ஆதரித்திருக்கின்றனர். இதன் விளைவாக, போர்க் காலங்களில் ஒரு தேசத்தின் மதத்தைச் சேர்ந்த மக்கள் மற்றொரு தேசத்தின் மதத்தைச் சேர்ந்த மக்களைக் கொன்றிருக்கின்றனர், தங்களுடைய சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே கொன்றிருக்கின்றனர். கத்தோலிக்கர் கத்தோலிக்கரையும், புராட்டஸ்டாண்டினர் புராட்டஸ்டாண்டினரையும் கொன்று குவித்திருக்கின்றனர். மற்ற மதங்களும் அதைத்தான் செய்திருக்கின்றன. ஆனால் கடவுளைச் சேவிப்பதாக உரிமை பாராட்டும் உண்மையான ஆவிக்குரிய சகோதரர்கள் ஒருவரையொருவர் கொல்லுகின்றனரா?
4 உண்மை மதத்திற்கு இயேசு தாமே ஒரு தராதரத்தை அமைத்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) எனவே உண்மை மதத்தை அப்பியாசிப்பவர்கள் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். இது ஒரு “புதிதான கட்டளை.” எப்படியெனில் இயேசு சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.” தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்காகத் தம்முடைய உயிரையே அற்பணிக்க மனமுள்ளவராயிருந்தார். அவர்களும் அதைத்தான் செய்ய மனமுள்ளவர்களாயிருக்க வேண்டும்—இல்லை, உடன் விசுவாசிகளின் உயிரை எடுப்பதற்கு அல்ல, ஆனால் அவசியப்பட்டால் தங்களுடைய சொந்த உயிரையும் அற்பணிக்க வேண்டும். அது புதிதான ஒன்றாயிருந்தது, ஏனென்றால் மோசேயின் நியாயப்பிரமாணம் அதைக் கேட்பதாய் இல்லை.
5 கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு கூறுகிறது: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.” (1 யோவான் 4:20, 21) இந்த அன்பின் மூலம், யெகோவாவில் நம்பிக்கையாயிருக்கும் ஆட்கள் உண்மையான சர்வதேச ஐக்கியத்தைக் காத்துக்கொள்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 1:10-ல் பின்வருமாறு சொல்லுகிறான்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.”—1 யோவான் 3:10-12-ஐயும் பாருங்கள்.
6 இரண்டாம் உலக மகா யுத்தத்தில் 5.5 கோடி மக்கள் மாண்டனர் என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது. யெகோவாவின் சாட்சிகளைத் தவிர பிரபலமான எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களாலும் அவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தச் சாவுகளில் ஒன்றுகூட யெகோவாவின் சாட்சியால் ஏற்படுத்தப்பட்டதல்ல, ஏனென்றால் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும் என்ற கற்பனைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள், மற்றும் தேசங்களின் போர்களில் தங்களை உட்படுத்திக்கொள்ளவும் மறுத்தனர். தங்களுடைய நடுநிலைமையின் காரணத்தால் இரத்த சாட்சிகளாகக் கொல்லப்பட்ட அநேக சாட்சிகள் “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன விதமாகச் சொல்ல முடியும்.—அப்.20:27.
7 1945-ல் ஜப்பானில் அணுகுண்டுகளைப் போட்ட போர் விமான ஓட்டிகளுக்குத் தனி மத குருவாயிருந்த ஒரு கத்தோலிக்கப் பாதிரி அண்மையில் குறிப்பிட்டதாவது: “கடந்த 1,700 ஆண்டுகளாக சர்ச் போரை அதிக மதிப்புள்ளதாக்கியது. மக்கள் அதைக் கனம் பொருந்திய கிறிஸ்தவப் பணியாக நம்பும்படிச் செய்து வந்தது. இது உண்மையல்ல. நாங்கள் தவறானதை நம்பும்படிச் செய்யப்பட்டோம். . . . நீதியின் போர் என்ற சுவிசேஷம் இயேசு போதிக்காத சுவிசேஷம். . . . அணு ஆயுதப் போர்க் கருவிகளின் வாயிலாக மக்களை எரித்துச் சாம்பலாக்குவது முறையற்ற செயலாயிருக்க, நேபாம் குண்டுகள் அல்லது எரிகுண்டுகள் மூலம் மக்களை எரித்துச் சாம்பலாக்குவது முறையானது என்பதைக் குறிப்பிட இயேசுவின் வாழ்க்கையிலும் அல்லது போதனையிலுங்கூட எதுவுமில்லை.”
8 லண்டன் கத்தோலிக் ஹெரல்டு குறிப்பிட்டதாவது: “முதல் கிறிஸ்தவர்கள் . . . இயேசு சொன்னதை அப்படியே பின்பற்றினார்கள், மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ரோம இராணுவத்தில் சேர்ந்துகொள்ள மறுத்தார்கள். சர்ச் அதன் ஆரம்ப தராதரத்தைக் காத்து வந்திருக்குமானால், முழு சரித்திரமும் முற்றிலும் வித்தியாசமாயிருந்திருக்குமா? . . . இன்றைய சர்ச்சுகள் ஒன்றுசேர்ந்து போரைக் கண்டனம் செய்வார்களானால் . . . , ஒவ்வொரு அங்கத்தினரும் மனச்சாட்சிக்குக் கட்டுப்படுகிறவராய், கிறிஸ்தவர்களைப் போன்று மனச்சாட்சியின் அடிப்படையில் மறுப்புத் தெரிவிப்பவராயிருந்தால், சமாதானம் உறுதி செய்யப்படக்கூடும். ஆனால் இது ஒருபோதும் நடக்காது என்பது நமக்குத் தெரியும்.”
9 இப்படியாக, இவ்வுலகத்தின் மதங்கள் மரணத்தை விளைவிக்கும் விதத்தில் கடவுளுடையச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய தவறிவிட்டிருக்கின்றன. பரிசேயர்களைப் போலவே அவர்கள் அவரை நம்புவதில்லை: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.” (தீத்து 1:16) இதன் விளைவாக, முதல் நூற்றாண்டில் அந்த மாய்மால யூத மதத்தைக் கடவுள் புறக்கணித்தது போலவே அவர் இந்த உலக மதங்களையும் நிச்சயமாய்ப் புறக்கணித்துவிட்டார்.—மத்தேயு 15:9, 14.
யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பதன் மூலம் தப்பிப்பிழைத்தல்
10 இந்த உலகப் பிரச்னைகளுக்கு மனிதரின் பரிகாரங்களை நம்ப வேண்டாம். மாறாக, தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வல்லவரையே நம்புங்கள். (யோசுவா 23:14) ஓர் உதாரணத்துக்கு, கிறிஸ்துவுக்கு முன்னால் எட்டாம் நூற்றாண்டில் யூதாவின் அரசனாகிய எசேக்கியாவின் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அவன் “யெகோவாவின் பார்வையில் நேர்மையானதைச் செய்து வந்தான்,” என்று பைபிள் அவனைக் குறித்துச் சொல்லுகிறது. (2 ராஜாக்கள் 18:3, தி.மொ.) அவனுடைய ஆட்சியின் போது உலக வல்லரசாயிருந்த அசீரியா எருசலேமுக்கு எதிராக வந்தது. அசீரிய அரசனாகிய சனகெரிபின் பிரதிநிதி எருசலேமைச் சரணடையக் கோரினான்: “எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்க முடியாது. . . . எசேக்கியா உங்களை யெகோவாவை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.”—2 ராஜாக்கள் 18:29, 30, தி.மொ.
11 எசேக்கியா என்ன செய்தான்? பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “எசேக்கியா யெகோவாவின் சந்நிதியிலே விண்ணப்பஞ்செய்து: யெகோவாவே, கேரூபுகள் மீது வீற்றிருக்கிற இஸ்ரவேலின் கடவுளே. பூமியின் சகல ராஜ்யங்களுக்கும் நீர் ஒருவரே கடவுள், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் நீரே. யெகோவாவே உமது திருச்செவியைச் சாய்த்துக் கேட்டருளும், யெகோவாவே உமது திருக்கண்களைத் திறந்து பார்த்தருளும்; ஜீவனுள்ள கடவுளை நிந்தித்து சனகேரிப் சொல்லியனுப்பின வார்த்தைகளை நீரே கேளும். . . . இப்போதும் யெகோவாவே, எங்கள் கடவுளே, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தருளும்; யெகோவாவாகிய நீர் ஒருவரே கடவுள் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படி செய்தருளும் என்று பிரார்த்தித்தான்.”—2 இராஜாக்கள் 19:15-19, தி.மொ.
12 யெகோவா இந்த ஜெபத்தைக் கேட்டு எசேக்கியாவிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொல்லும்படி ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பினார்: “அவன் இந்நகருள் புகிந்திட மாட்டான்; இதன் மேல் அம்பு அவன் ஏய்வதுமில்லை; கேடகம் தாங்கி எதிர்வந்து நில்லான், கொத்தளம் போட்டிதை எதிர்ப்பதுமில்லை.” எசேக்கியா ஒரு இராணுவத்தைக் கொண்டு அசீரியாவை எதிர்ப்பானா? இல்லை, அவன் யெகோவாவில் நம்பிக்கை கொள்ள வேண்டியதாயிருந்தது, அப்படியே செய்தான். பலன்? “யெகோவாவின் தூதன் வந்து அசீரியரின் பாளையத்திலே இலட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்.” யெகோவாவையும் யெகோவாவின் ஊழியரையும் நிந்தித்ததற்காக சனகேரிப்தானே பெருத்த விலை கொடுத்தான், அதாவது அவனுடைய சொந்த குமாரர்கள் அவனைப் பின்னால் கொலை செய்தனர். யெகோவாவின் வார்த்தை உண்மையாயிருந்தது, எருசலேமுக்கு எதிராக எந்த ஒரு ஆயுதமும் எழும்பவில்லை.—2 இராஜாக்கள் 19:32-37, தி.மொ.
13 நம்முடைய நாளிலும் அதுபோன்ற காரியமே நடக்கும். யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இந்த உலகின் நிந்தனைகளையும் இந்த உலகின் முடிவையும் தப்பிப்பிழைப்பார்கள். “உமது திருநாமத்தை அறிந்தவர்களின் நம்பிக்கை உம்மேலிருக்கும். யெகோவா, உம்மைத் தேடி வந்தவர்களைக் கைவிட்டதில்லை.” (சங்கீதம் 9:10, தி.மொ.) ஆனால் இரத்தப்பழி மிகுந்த இந்த உலகத்தை யெகோவா அழிப்பதற்கு முன்பு, நேர்மை இருதயமுள்ளவர்களைப் பாதுகாப்புக்காகத் தம்மிடம் அழைக்கிறார். இது எல்லா தேசங்களிலிருந்தும் ஒரு “திரள் கூட்டமான” மக்களை உருவாக்குகிறது. இவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வருகிறவர்கள். அவர்கள் இந்த ஒழுங்குமுறையைத் தப்பிப் பிழைப்பதற்குக் காரணம், அவர்கள் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து அவரை “இரவும் பகலும்” சேவிக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9-15.
14 ஏசாயா 2:2, 3-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறபடி, இவர்கள் இப்பொழுது உலகமெங்கிலும் கூடுதலான வலிமையுடன் சென்று கொண்டிருக்கும் அழைப்புக் குரலுக்குப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்: “கடைசி நாட்களில் யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் [அவருடைய உண்மை வணக்கம்] பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும் . . . பல ஜாதிகள் [மக்கள், NW] புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” வசனம் 4 சொல்லுகிறது: “அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு [தேசத்துக்கு, NW] விரோதமாய் ஜாதி [தேசம், NW] பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”
15 நம்முடைய நாட்களில் “தங்களுடைய பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக” மாற்றுகிறவர்கள் யார்? ‘இனிமேலும் யுத்தம் கற்றுக்கொள்ளாமலிருப்பவர்கள்’ யார்? பூமிமுழுவதுமுள்ள தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமாக முறிக்க முடியாத அன்பைக் கொண்டிருப்பவர்களும் அவர்களோடு ஐக்கியத்திலிருப்பவர்களும் யார்? உண்மையிலேயே யெகோவாவை நம்பி அப்படிச் செய்யும்படி மற்றவர்களை அழைப்பவர்கள் யார்? இதற்கு ஒரே ஒரு பதில் மட்டுமே இருக்கிறது என்று நம்முடைய காலத்தின் உண்மைகள் காண்பிக்கிறது. அதுதான்: யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் எசேக்கியாவைப் போல யெகோவாவைத் தங்கள் முழு இருதயத்தோடு நம்பி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலம் அதை நடைமுறையில் காண்பிக்கின்றனர்.
ஒளிமயமான ஓர் எதிர்காலம்
16 தம்மில் நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு யெகோவா கற்பனை செய்துபார்க்க முடியாதளவுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை வைத்திருக்கிறார்; அப்பொழுது பழைய உலக சமுதாயத்தைப் புதியதொன்று மாற்றியமைக்கும். பூமியில் புதிய உலகில் பயமோ, அவநம்பிக்கையோ இருக்காது, வறுமை, அநீதி, அல்லது குற்றச் செயல் இருக்காது. போர்களினால் அல்லது கருச்சிதைவினால் இனிமேலும் மக்கள் கொல்லப்படமாட்டார்கள். இனி “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை,” என்றும் வெளிப்படுத்துதல் 21:4 வாக்களிக்கிறது.
17 காலப்போக்கில் இந்தப் பூமி இயேசு வாக்களித்தபடி ஒரு பரதீஸாக மாறும். (லூக்கா 23:43) மரணம்கூட நீக்கப்பட்டுவிடுமாதலால், யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் பரதீஸில் என்றும் வாழ முடியும். மீகா 4:4 முழு நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கும்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்தி மரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாயிருக்கும் ஒரு சமுதாயத்தில் வாழ்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! அது ஏன் அப்படி இருக்கும்? ஏனென்றால் ஏசாயா 54:13 சொல்லுகிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.”
18 என்றபோதிலும், இப்பொழுதே லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதன் நற்பலன்களை அறுவடை செய்கின்றனர். உதாரணமாக, யெகோவாவின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதால் புகைபிடித்தலினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் விடுபட்டவர்களாயிருக்கிறார்கள். ஒழுக்கப் பிரகாரமாய் சுத்தமான சூழ்நிலையில் வாழ்வதால், ஏய்ட்ஸ் உட்பட பாலுறவு மூலம் உலக முழுவதும் பரவும் தொற்து நோய்களால் பொதுவாக அச்சுறுத்தப்படுவதில்லை. அவர்களில் போதை மருந்து துர்பிரயோகம் இல்லாததால் போதை மருந்துக்கு அடிமைபட்டிருக்கும் பலருக்கு எற்படும் மன சம்பந்தமான சேதங்களிலிருந்தும் சாவுக்கேதுவான வேதனைகளிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். அவர்கள் இரத்தமேற்றிக் கொள்ளாததால், கல்லீரல் அழற்சி உட்பட பல கொடிய நோய்களைத் தவிர்க்கின்றனர். இவை ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஆண்டுதோறும் இரத்தமேற்றிக் கொள்வோரில் பத்தாயிரம்பேரைக் கொல்லுவதாய் அல்லது நிரந்தர ஊறு விளைவிப்பதாயிருக்கின்றன.
19 யெகோவாவில் நம்பிக்கையுடையவர்களில் சிலர் வயோதிபத்தாலும், வியாதியாலும் அல்லது விபத்தாலும் மரிக்க நேர்த்தாலும், யெகோவா அவர்களை மீட்டருளுவார். உயிர்த்தெழுதல் மூலம் அவர்களை மீட்பார். எனவே நாம் ‘நம்மீது நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக’ பவுல் அப்போஸ்தலன் நம்மை உற்சாகப்படுத்தினார்.—2 கொரிந்தியர் 1:9.
யெகோவா தம்முடைய ஊழியர்களை உயர்த்துகிறார்
20 “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பிசாசாகிய சாத்தானுக்குள்] கிடக்கிறது” என்பதை மனதிற்கொள்ளுங்கள். (1 யோவான் 5:19) எனவே நீங்கள் கடவுளை நம்புவீர்களானால், நீங்கள் பிசாசுக்கும் அவனுடைய உலகத்துக்கும் எதிராக இருப்பீர்களானால், இயேசுவின் காரியத்தில் இருந்ததுபோல, பரியாசம் அல்லது துன்புறுத்தல் மூலம் உங்கள் நம்பிக்கையைச் சேதப்படுத்திடப் பார்ப்பார்கள். வாதனையின் கழுமரத்தில் அவர் அறையப்பட்ட பின்பு, “அந்த வழியாய் நடந்துபோனவர்கள் அவரைத் தூஷிப்பவர்களாய்த் தங்கள் தலையைத் துலுக்கி: . . . ‘நீ கடவுளுடைய குமாரனானால் வாதனைக் கழுமரத்திலிருந்து இறங்கி வா!’ என்றார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரைப் பரியாசம் பண்ண ஆரம்பித்தனர்: ‘மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை . . . இவன் தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கிறான்; அவர் அவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்.’”—மத்தேயு 27:39-43.
21 ஆம், மூன்று நாட்களுக்குப் பின்பு, இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பினதன் மூலம் கடவுள் அவரை மீட்டார். என்றபோதிலும் பரியாசம் பண்ணின அந்தச் சந்ததியார் ரோம சேனையால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக்கப்பட்டார்கள். அந்தப் பரியாசக்காரர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்படுவார்களானால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் பரியாசம் பண்ணினவருக்கு கீழ்ப்படிய வேண்டியதாயிருக்கும்! ஆம், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு ஆதரவளித்து மேன்மைப்படுத்துகிறார். அவர் பின்வருமாறு சொல்லுகிறார்: “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்.”—சங்கீதம் 56:11.
22 தம்முடைய ஊழியர்களைக் குறித்து யெகோவா பின்வருமாறு அறிக்கை செய்கிறார்: “யெகோவாவில் நம்பிக்கை வைத்து யெகோவாவையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷனோ பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நடப்பட்ட மரம் போலாவான், அது கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடும்; உஷ்ணம் வந்தாலும் அதற்குப் பயமில்லை, அதன் இலை பசுமையாயிருக்கும்; மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் கஷ்டமின்றித் தப்பாமல் கனிகொடுக்கும்.” ஆனால் யெகோவா பின்வருமாறும் அறிக்கையிடுகிறார்: “மனுஷனில் நம்பிக்கை வைப்பவன் சாபத்திற்குட்பட்டவன்; மாம்சத்தை அவன் தன் புயபலமாக்குகிறான்; அவன் இதயம் யெகோவாவைவிட்டு விலகுகிறது. அவன் அவாந்தர வெளியில் களைப்பாய்ப் போன செடிபோலாவான், நன்மை வருவதைக் காணான்.”—எரேமியா 17:5-8, தி.மொ.
23 எனவே இந்தக் கொடிய காலங்களில் “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மை செய்; தேசத்தில் [பூமியில், NW] குடியிருந்து உண்மையைக் கடைப்பிடி. யெகோவாவில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் விண்ணப்பங்களை உனக்கு அருள் செய்வார்.” (சங்கீதம் 37:3, 4) நிறைவேற்றப்படும் உங்கள் விண்ணப்பங்கள், நாம் நம்பும் கடவுள் வாக்களித்திருக்கும் நீதியுள்ள புதிய உலகில் நித்திய ஜீவன் என்ற பரிசையும் உள்ளடங்கியதாயிருக்கக்கடவது. (w88 4⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்ன தராதரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்?
◻இந்த உலக மதங்கள் யெகோவாவை நம்பும்படி போதிக்கிறதா?
◻எசேக்கியா அரசன் யெகோவாவில் கொண்டிருந்த நம்பிக்கை எப்படி மெய்ப்பிக்கப்பட்டது?
◻நம்முடைய நாளில் ஏசாயா 2:2-4-ன் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுகிறது?
◻யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பவர்கள் என்ன எதிர்காலத்தைக் கொண்டிருப்பார்கள்?
[கேள்விகள்]
1, 2. (எ) முதல் நூற்றாண்டில் யெகோவாவை நம்பாத மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பினவர்களுக்கு என்ன நேர்ந்தது? (பி) நம்முடைய காலத்தில் மதத்தைக் குறித்து என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
3. சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான மத முயற்சிகள் ஏன் தோல்வியடைந்துவிட்டிருக்கின்றன?
4. உண்மை மதத்திற்கான தராதரம் குறித்து இயேசு என்ன சொன்னார்? இது ஏன் “ஒரு புதிதான கட்டளையாக” இருந்தது?
5. தம்முடைய உண்மை வணக்கத்தாரிடத்திலிருந்த அன்புக்கும் ஐக்கியத்துக்குமான தேவையைக் கடவுளுடைய வார்த்தை எப்படி வலியுறுத்துகிறது?
6. “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருப்பதாக” ஏன் யெகோவாவின் சாட்சிகள் சொல்லக்கூடும்?
7, 8. சர்ச்சை சேர்ந்த சிலர் எப்படி இரத்தப்பழி தங்கள் மீது இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்?
9. யெகோவா இந்த உலக மதங்களைப் புறக்கணித்துவிட்டார் என்ற முடிவுக்கு நாம் ஏன் வருகிறோம்?
10, 11. எருசலேம் சரணடைய வேண்டும் என்று அசீரியா கோரினபோது எசேக்கியா அரசன் என்ன செய்தான்? சனகேரிபின் பிரதிநிதி யாரை நிந்தித்துக்கொண்டிருந்தான்?
12. எசேக்கியாவின் ஜெபத்துக்கு யெகோவா எப்படி பதிலளித்தார்?
13, 14. சகல தேசத்திலிருந்து வரும் மக்கள் எதன் அடிப்படையில் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையைத் தப்பிப்பிழைப்பார்கள்?
15. ஏசாயா 2:2-4-லுள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறவர்கள் யார்? எப்படி?
16, 17. தம்மை நம்பியிருக்கும் மக்களுக்கு யெகோவா எப்படிப்பட்ட ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை அளிப்பவராயிருக்கிறார்?
18. யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் இப்பொழுதே என்ன நன்மைகளை அறுவடை செய்கிறார்கள்?
19. தம்மைச் சேவிப்பவர்கள் இப்பொழுது மரிக்க நேர்ந்தாலும் யெகோவா அவர்களை எப்படி மீட்டருளுவார்?
20, 21. (எ) இயேசுவுக்கு என்ன நேரிட்டது என்பதை நாம் பார்க்கும்போது, நாம் என்ன எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்? (பி) இயேசுவின் காரியத்தில் செய்தது போலவே யெகோவா எவ்விதம் தம்முடைய மக்களை ஆதரித்து மேன்மைபடுத்துகிறார்?
22. தம்மை நம்புகிறவர்களைக் குறித்தும் நம்பாதவர்களைக் குறித்தும் யெகோவா என்ன அறிக்கை செய்கிறார்?
23. நமக்கு நித்திய ஜீவன் வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 17-ன் படம்]
அசீரிய அரசனின் பிரதிநிதி யெகோவாவை நிந்தித்ததோடு எருசலேம் சரணடைய வேண்டுமென்றும் கோரினான்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் புதிய உலகில் முழுமையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ்வார்கள்