வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: ஆமோஸ் 1:1—9:15
ஒரு தேசத்தின் மறைவு
“உன்தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு” என்று “சேனைகளின் தேவனாகிய யெகோவா” இஸ்ரவேல் தேசத்திடமாகச் சொல்லுகிறார். (ஆமோஸ் 4:12, 13) காரணம்? செழுமையின் காரணமாக அறிவு மழுங்கிய இஸ்ரவேலர் அவருடைய நியாயப்பிரமாணத்தை மறந்து அவருடைய பரிசுத்த தேசத்தை, விக்கிரகாராதனையினாலும் ஒழுக்கயீனத்தினாலும், இரத்தஞ்சிந்துதலினாலும், வன்முறையினாலும் அசுத்தப்படுத்திவிட்டதற்காக குற்றமுள்ளவர்களாக இருந்தனர்.
ஆமோஸ், அவனுடைய சொந்த தேசமாகிய யூதாவுக்கு மட்டுமல்லாமல், ஆனால் குறிப்பாக, இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்துக்கு எச்சரிப்பின் செய்தியை அறிவிப்பதற்காக யெகோவாவின் தீர்க்கதரிசியாக எழுப்பப்படுகிறான். அவன் இஸ்ரவேலை அவளுடைய கட்டுப்பாடற்ற சிற்றின்ப வாழ்க்கை பாணிக்காக கண்டனம் செய்து, சத்துரு தேசங்களின் கையில் அவளுக்கு ஏற்பட இருந்த முடிவான அழிவை முன்னறிவிக்கிறான். பொ.ச.மு. 829-க்கும் பொ.ச.மு. 804-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட ஆமோஸ் புத்தகம் வரப்போகிற அழிவுகளை முன்னறிவிப்பதற்குரிய கடவுளின் திறமையை புரிந்துகொள்ள உதவி செய்து, காலத்துக்கு ஏற்ற சில எச்சரிப்புகளை கொடுக்கிறது.
கடவுளுடைய சத்துருக்களின் அக்கினியிலான அழிவு
கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை எவரும் தப்பமுடியாது. தமஸ்கு (சீரியா) காத்சா (பெலிஸ்தியா) தீரு, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் யூதா தேசங்களுக்கு இது எவ்வளவு உண்மையாக நிரூபித்தது! அவர்களுடைய பாதகங்களினிமித்தமாக, யெகோவா அவர்களுக்கு விரோதமாக தம் கையை நீட்டுவதிலிருந்து ‘திருப்ப மாட்டார்.’ இருந்தபோதிலும் முன்னறிவிக்கப்பட்ட அவைகளின் அழிவுகள், கடவுளோடு தன்னுடைய உடன்படிக்கை உறவைக் காத்துக்கொள்ளவும் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் தவறியதற்காக, இஸ்ரவேல் எதிர்பட்ட நியாயத்தீர்ப்பை வலியுறுத்த மட்டுமே உதவியாக இருந்தன.—ஆமோஸ் 1:1–2:16.
கடவுளுடைய எச்சரிப்புக்குக் கவனம் செலுத்துங்கள். “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்” என்று யெகோவா இஸ்ரவேலிடம் சொல்கிறார். (ஆமோஸ் 3:2) என்றபோதிலும், பாவமுள்ள அவர்களின் நடத்தை, கடவுளுடைய நாமத்தையும் அரசுரிமையையும் அவமதிப்பதைக் காண்பித்தது. அநேகர் செல்வந்தர்களாக தீர்மானித்தவர்களாய், அவர்களுடைய சொந்த சகோதரர்களின் செலவில், ‘கோடை காலத்து வீட்டைத் தவிர மாரி காலத்து வீட்டையும்’ உடையவர்களாய், வீணான ஆடம்பரத்தில் வாழ்ந்து வந்தார்கள். (ஆமோஸ் 3:15) சுயநலக்காரர்களாக, கள்ளப் படிக்கற்களைக் கொண்டு தரித்திரர்களை ஏமாற்றினார்கள். மெய் வணக்கத்தை அவர்கள் கைவிட்டதால், யெகோவாவின் தண்டனையை எதிர்பார்க்க வேண்டியவர்களாக இருந்தனர். என்றபோதிலும், ‘யெகோவா தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்.’ இதன் காரணமாகவே ஆமோஸ் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை முன்னறிவித்து அவர்களை எச்சரித்ததாவது: “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.”—ஆமோஸ் 3:1—4:13.
யெகோவா இரட்சிப்பாயிருக்கிறார்
மனந்திரும்புகிறவர்களுக்கு கடவுள் இரக்கத்தைக் காண்பிப்பார். “என்னைத் தேடுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள்” என்பது இஸ்ரவேலிடமாக யெகோவாவின் வேண்டுகோளாக இருக்கிறது. (ஆமோஸ் 5:4) “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள்.” (ஆமோஸ் 5:15) ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகள் அசட்டைச் செய்யப்படுகின்றன. விசுவாச துரோகிகள் பொய் கடவுட்களுக்கு பலி செலுத்துவதற்காக, விக்கிரகாராதனைக்குப் பேர் போன இடங்களாக இருந்த பெத்தேலுக்கும் கில்காலுக்கும் செல்ல விரும்பினார்கள். (ஆமோஸ் 5:26; 1 இராஜாக்கள் 12:28-30) தந்தத்தினாலான அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் படுத்துக்கொண்டு இந்தப் பொல்லாதவர்கள், உயர் ரகமான மதுபானத்தைக் குடித்து, மிகச் சிறந்த உணவுகளினாலும் பரிமளத் தைலத்தினாலும் தங்களை முழுவதுமாக திருப்தி செய்துக் கொண்டிருந்தார்கள். (ஆமோஸ் 5:11; 6:4-6) “யெகோவாவுடைய நாள்” வந்துக் கொண்டிருந்தது. இஸ்ரவேலின் அழிவைக் குறித்து கடவுள் “தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணை”யிட்டிருந்தார். (ஆமோஸ் 5:18; 6:8) இஸ்ரவேலை ஒடுக்கவும் அவளை தேசத்தை விட்டுத் துரத்தவும், யெகோவா ஒரு தேசத்தை எழுப்புவார்.—ஆமோஸ் 5:1–6:14.