இன்பமான ஒரு பரதீஸில் மகத்தான மனித எதிர்பார்ப்புகள்
“பின்பு தேவன் அவர்களை நோக்கி: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்’ என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.”—ஆதியாகமம் 1:28.
1, 2. மனிதர்களின் சம்பந்தமாக யெகோவா அன்புடன் எந்த நோக்கத்துக்காக உழைத்துவருகிறார்? ஆதாமுக்கு அவர் என்ன வேலையைக் கொடுத்தார்?
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பரிசுத்த பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அவர் அன்புடனும் தன்னலமின்றியும் மனிதவர்க்கத்தில் அக்கறையுள்ளவராக, இனிமையான ஒரு பூமிக்குரிய பரதீஸில் அவர்கள் என்றுமாக ஆரோக்கியமுள்ள, அமைதியான வாழ்க்கையை அனுபவித்துக்களிக்கும்படியாக இடையறாது உழைத்து வருகிறார். (1 யோவான் 4:16; சங்கீதம் 16:11-ஐ ஒப்பிடவும்.) முதல் மனிதனாகிய பரிபூரண ஆதாம் அமைதியான வாழ்க்கையையும், அக்கறையூட்டும் அனுபவித்துச் செய்யும் வேலையையும் கொண்டிருந்தான். மனிதனின் சிருஷ்டிகர் மகிழ்ச்சி நிரம்பிய ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையை அவனுக்குக் கொடுத்தார். என்ன சம்பவித்தது என்பதைப் பற்றிய பதிவு தெரிவிக்கிறபடியே மனிதனின் சிருஷ்டிகர் இப்பொழுது மற்றொரு வேலையை, விசேஷமான ஒன்றை, சவாலாக அமைந்த ஒரு வேலையை அவனுக்குக் கொடுத்தார்:
2 “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்.”—ஆதியாகமம் 2:19, 20.
3. ஆதாமின் பங்கிலும் மிருக சிருஷ்டிகளின் பங்கிலும் அங்கு ஏன் பயமிருக்கவில்லை?
3 மனிதன் குதிரையை சஸ் என்றும், காளையை ஷார் என்றும், செம்மறியாட்டை சே என்றும், வெள்ளாட்டை எஸ் என்றும், பறவையை ஆஃப் என்றும், புறாவை யோனா என்றும், மயிலை டக்கி என்றும், சிங்கத்தை அரியே அல்லது அரி என்றும், கரடியை டாட் என்றும், வாலில்லாக் குரங்கை காஃப், என்றும் நாயை கீலவ் என்றும் சர்ப்பத்தை நாக்காஷ் என்றும் அழைத்தான்.a ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து வந்த ஆற்றினிடமாக அவன் சென்றபோது, அவன் மீனைப் பார்த்தான். மீனுக்கு டாக்கா என்ற பெயரை அவன் கொடுத்தான். ஆயுதமின்றியிருந்த மனிதன் வீட்டு மிருகமாகவும் காட்டு மிருகமாகவும் இருந்த இந்த மிருகங்களைப் பார்த்து அல்லது பறவைகளைப் பார்த்து பயப்படவோ அல்லது அவை இவனைப் பார்த்து பயப்படவோ இல்லை. அவை அவனை இயல்புணர்ச்சியால் தங்களுக்கு மேம்பட்டவனாக, ஓர் உயர்வான உயிர் வகையாக அடையாளங்கண்டு கொண்டன. அவை கடவுளால் உயிரைப் பரிசாகப் பெற்ற கடவுளுடைய சிருஷ்டிப்புகளாக இருந்தன. மனிதனுக்கு அவைகளைக் காயப்படுத்தவோ அவைகளின் உயிரைக் கொல்லவோ எந்த ஆசையும் அல்லது மனச்சாய்வும் இருக்கவில்லை.
4. அனைத்து மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் ஆதாம் பெயரிட்டதன் சம்பந்தாக நாம் என்ன ஊகித்துக்கூற முடியும்? இது என்ன வகையான ஓர் அனுபவமாக இருந்திருக்க வேண்டும்?
4 நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் எவ்வளவு காலமாக மனிதனுக்குக் காட்டப்பட்டது என்பது குறித்து பதிவு நமக்குச் சொல்வதில்லை. அவை அனைத்தும் தெய்வீக வழிநடத்துதல் மற்றும் ஏற்பாட்டின் கீழ் செய்யப்பட்டன. ஆதாம் ஒவ்வொரு மிருகத்தையும் அதன் தனித்தன்மையான பழக்க வழக்கங்களையும் உருவமைப்பையும் கூர்ந்து கவனித்து, ஆராய்வதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்; பின்னர் அவன் விசேஷமாக அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு பெயரைத் தெரிந்தெடுப்பான். இது கணிசமானக் காலப் பகுதிக் கடந்துபோவதை அர்த்தப்படுத்தக்கூடும். இவ்விதமாக, இந்தப் பூமியிலுள்ள உயிரினங்களோடு, அதன் அநேக வகைகளோடுகூட, அறிமுகமாவது ஆதாமுக்கு அதிக அக்கறையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த உயிரினங்களின் ஒவ்வொரு வகையின் வேறுபாட்டையும் காண்பது அதிகமான மனதின் திறமையையும் பேச்சாற்றலையும் கேட்பதாயிருந்தது.
5–7. (எ) சாத்தியமான என்ன கேள்விகள் எழக்கூடும்? (பி) ஆதியாகமம் 1:1–25-லுள்ள சிருஷ்டிப்புப் பதிவில் என்ன விதமான பதில்கள் கொடுக்கப்பட்டன?
5 ஆனால் இந்த எல்லா உயிரினங்களும் எந்த வரிசையில் சிருஷ்டிக்கப்பட்டன? நிலத்தில் வாழும் மிருகங்கள் பறவைகளுக்கு முன்னால் சிருஷ்டிக்கப்பட்டனவா இல்லையா, இந்த எல்லாத் தாழ்ந்த உயிரினங்களின் சம்பந்தமாக மனிதன் எந்தக் காலத்திலும் வரிசையிலும் நின்றான்? கடவுள் எவ்விதமாக இப்பேர்ப்பட்ட பல்வேறு உயிர்வகைகளுக்கும் பூமியைத் தயாரித்து, பறவைகள் இத்தனை உயரத்தில் பறக்கக்கூடியவையாக இருக்க காற்றை அளித்து, பருகுவதற்கு நீரையும் உணவாக சேவிக்க தாவர உயிர்களையும் கொடுத்து, பகலைப் பிரகாசிப்பிக்கச் செய்ய பெரிய சுடரை உண்டு பண்ணி மனிதனைக் காணக்கூடியவனாகச் செய்து, இரவை அழகுப் பெறச் செய்ய சிறிய சுடரை உண்டுபண்ணினார்? மனிதன் பாதுகாப்பின்றியும் உடையில்லாமலும் நடமாடவும் வேலை செய்யவும் உறங்கவும் முடிகிற வகையில் ஏன் தட்ப வெப்ப நிலை மென்மையாயும் வெதுவெதுப்பாயுமிருந்தது?
6 மனிதன் பதில்களை ஊகித்துக் கொள்ளும்படியாகவிடப்படவில்லை. காரியங்களை அறிய ஆர்வமுள்ள அவனுடைய மனது, துல்லிபமாக அறிந்திருந்த, அதிகாரம் பெற்றிருந்த ஊற்றுமூலத்திலிருந்து புத்திக்கூர்மையுள்ள பதில்களைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையதாயிருந்தது. அவன் கடவுளின் அறியாமையுள்ள குமாரனாகக் கைவிடப்படவில்லை, ஆனால் அவனுடைய உயர்ந்த உச்ச அளவு புத்திக்கூர்மை, ஆதியாகமம் 1:1–25-ல் கொடுக்கப்பட்ட சிருஷ்டிப்பின் மகத்தான வரலாற்றினால் மேன்மைப்படுத்தப்பட்டது.
7 கிளர்ச்சியூட்டும் அந்தச் சிருஷ்டிப்பின் பதிவுக்காக ஆதாம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது அநேக காரியங்களுக்கு விளக்கமளித்தது. அதன் சொல்வடிவிலிருந்து, மனிதனுடைய அதிகக் குறுகிய 24 மணிநேர நாளைக் குறிப்பதற்காக நான்காவது சிருஷ்டிப்பு நாளில் கடவுள் ஆகாயவிரிவிலே இரண்டு பெரிய சுடர்கள் தோன்றும்படி செய்ததற்கு முன்பாக, கடவுளுடைய கணக்கீட்டு முறைப்படி அவர் நாட்கள் என்பதாக அழைத்தது, மூன்று நீண்ட காலப் பகுதிகள் என்பதை அவன் அறிந்து கொண்டான். பூமியில் மனிதனின் இந்தக் குறுகிய நாள், பெரிய சுடர் மறைவதிலிருந்து அது அடுத்து இறங்கிவரும் வரையாக கணக்கிடப்பட்டது. வருடக்கணக்கான காலங்கள் தனக்கிருக்கப் போவதையும்கூட அவன் உணர்ந்தவனாக, உடனடியாக தன் வாழ்க்கையின் வருடங்களைக் கணக்கிட ஆரம்பித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆகாயவிரிவிலிருந்த பெரிய சுடர் இதைச் செய்வதற்கு அவனுக்கு உதவி செய்யும். ஆனால் கடவுளுடைய சிருஷ்டிப்பின் நீண்ட நாட்களைப் பொறுத்தவரையில், முதல் மனிதன் தான் கடவுளுடைய ஆறாவது பூமிக்குரிய சிருஷ்டிப்பு நாளிலிருந்ததை உணர்ந்துகொண்டான். நிலத்தில் நடமாடும் அந்த எல்லா மிருகங்களும் பின்னர் மனிதனும் தனித்தனியாக சிருஷ்டிக்கப்பட்ட ஆறாவது நாளின் முடிவைப் பற்றி எதுவும் இன்னும் அவனிடம் சொல்லப்படவில்லை. இப்பொழுது அவன் தாவர உயிரும் கடல்வாழ் உயிரும் பறவைகளும் நிலத்தில் நடமாடும் மிருகங்களும் சிருஷ்டிக்கப்பட்ட வரிசை கிரமத்தை புரிந்துகொள்வான். ஆனால் ஆதாம் ஏதேன் தோட்டத்தில், அவன்தானே பூமிக்குரிய பரதீஸில் மனிதனுக்குரிய கடவுளுடைய அன்புள்ள நோக்கத்தின் முழுமையான, நிறைவான வெளிக்காட்டாக இருக்கவில்லை.
முதல் மனுஷியை சிருஷ்டித்தல்
8, 9. (எ) மிருக சிருஷ்டிப்புகளைப் பற்றியதில் பரிபூரண மனிதன் எதை கவனித்தான்? ஆனால் தன்னைக் குறித்ததில் அவன் என்ன முடிவுக்கு வந்திருந்தான்? (பி) பரிபூரண மனிதன் துணைக்காகக் கடவுளிடம் கேட்காதிருந்தது ஏன் பொருத்தமாக இருந்தது? (சி) முதல் மனித மனைவியின் சிருஷ்டிப்பைப் பைபிள் பதிவு எவ்விதமாக விவரிக்கிறது?
8 பரிபூரண மனதுடனும், கூர்ந்தாராயும் திறமையுடனும் முதல் மனிதன், பறவை மற்றும் மிருகங்களின் உலகில், ஆணும் பெண்ணுமிருப்பதையும் அவைகள் தங்களுக்குள் ஜாதியை இனப்பெருக்கம் செய்ததையும் பார்த்தான். ஆனால் மனிதனுடைய காரியத்தில் அப்போது அவ்விதமாக இருக்கவில்லை. கூர்மையாக இதை நோக்கியது, தோழமையை அனுபவித்துக் களிக்கும் விருப்பத்தை அவனில் ஏற்படுத்தினால், மிருகங்களின் உலகில், வாலில்லா குரங்குகளின் மத்தியிலும்கூட பொருத்தமான ஒரு துணையை அவன் காணவில்லை. தனக்கு ஒரு துணை இல்லை என்ற முடிவுக்கு ஆதாம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவ்விதமாக ஒன்று இருந்திருந்தால், கடவுள் இந்தத் துணையை அவனிடம் அழைத்து வந்திருக்கமாட்டாரா? மனிதன் அந்த எல்லா மிருக ஜாதிகளிலிருந்தும் தனியாக சிருஷ்டிக்கப்பட்டு, அவன் வித்தியாசமாக இருக்கும்படியாக திட்டமிடப்பட்டான்! அவன் காரியங்களைத் தானாக தீர்மானித்து, தன்னுடைய சிருஷ்டிகராகிய கடவுளிடம் ஒரு துணையைத் துடுக்காக கேட்கக் கூடாதவனாக இருந்தான். பரிபூரண மனிதன் முழு காரியத்திலும் கடவுளையே நம்பியிருக்க அனுமதிப்பது பொருத்தமாக இருந்தது. ஏனென்றால், அதற்குப் பின் உடனடியாகவே கடவுள் இந்த நிலைமையைப் பற்றிய தன்னுடைய சொந்த தீர்மானத்துக்கு வந்திருந்தார். இதைக்குறித்தும், இப்பொழுது என்ன நடந்தது என்பதையும் பற்றி பதிவு நமக்குச் சொல்வதாவது:
9 “ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய யெகோவா தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: ‘இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்’ என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.”—ஆதியாகமம் 2:20–25.
10. பரிபூரண மனுஷி பரிபூரண மனுஷனிடம் கொண்டுவரப்பட்டபோது, அவன் எவ்விதமாக பிரதிபலித்தான்? அவனுடைய வார்த்தைகள் எதைக் குறிப்பாக தெரிவித்திருக்கக்கூடும்?
10 பரிபூரண மனுஷி அவனுக்கு ஏற்றத் துணையாக அவனிடம் கொண்டுவரப்பட்டபோது, பின்வரும் அவனுடைய வார்த்தைகளில் முழுமையான திருப்தி வெளியிடப்பட்டது: “இறுதியில் இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்.” இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கையில் கடைசியாக அவன் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட தன்னுடைய மனைவியைப் பார்த்த போது, மனதை மகிழ்விக்கும் இந்தக் கூட்டாளியைப் பெற்றுக்கொள்ள அவன் கொஞ்சக் காலமாகக் காத்திருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. தன்னுடைய ஏற்றத் துணையை விவரிப்பவனாய், ஆதாம் அவனுடைய மனைவியை “இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி (‘இஷ்–ஷா’ அல்லது சொல்லர்த்தமாக “பெண் மனுஷன்”) என்னப்படுவாள்” என்றான். (ஆதியாகமம் 2:23, புதிய உலக மொழி பெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு) பெயரிடும்படியாக ஏற்கெனவே கடவுள் ஆதாமின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்த பறக்கும் பறவைகளுடனும், நிலத்தில் நடமாடும் மிருகங்களுடனும் எந்த உடல்சார்ந்த உறவையும் அவன் உணரவில்லை. அவனுடைய மாம்சம் அவைகளுடையதிலிருந்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் இந்த மனுஷி உண்மையில் அவனுடைய இனமாக இருந்தாள். அவனிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பு அவனுடைய சொந்த உடலிலிருந்ததுப் போன்ற அதே வகையான இரத்தத்தை உண்டுபண்ணினது. (மத்தேயு 19:4–6-ஐ பார்க்கவும்.) இப்பொழுது அவன் எவரோ ஒருவருக்கு, கடவுளுடைய தீர்க்கதரிசியாக சேவித்து சிருஷ்டிப்பின் மகத்தானப் பதிவை பகிர்ந்து கொள்ளமுடியும்.
11–13. (எ) ஆதாம் ஒரு மனைவியைப் பெற்றுக் கொண்டதால், என்ன கேள்விகள் எழும்பக்கூடும்? (பி) முதல் மனித தம்பதிக்குக் கடவுளுடைய நோக்கம் என்னவாக இருந்தது? (சி) பரிபூரண மனித குடும்பத்துக்கு எது உணவாக இருக்கும்?
11 ஆனால் மனிதனின் சிருஷ்டிகர், அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுப்பதில் அவருக்கு என்ன நோக்கமிருந்தது? வெறுமென ஓர் ஏற்றத் துணையை, அவனுடைய சொந்த இனத்தில் ஒரு கூட்டாளியைக் கொடுத்து அவன் தனிமையை உணராதிருக்கச் செய்வதற்கு மாத்திரமா? அவர்களுடைய விவாகத்தின் சமயத்தில் அறிவிக்கப்பட்ட கடவுளுடைய ஆசீர்வாதத்தை நமக்கு எடுத்துரைக்கையில் பதிவு கடவுளுடைய நோக்கத்தை விளக்குகிறது:
12 “பின்பு தேவன்: ‘நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்’ என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்’ என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.”
13 “பின்னும் தேவன்: ‘இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்’ என்றார்; அது அப்படியே ஆயிற்று.”—ஆதியாகமம் 1:26–30.
முதல் மனித தம்பதிக்கு முன்னிருந்த எதிர்பார்ப்புகள்
14. கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு பரிபூரண மனிதனுக்கும் மனுஷிக்கும் முன்னால் என்ன எதிர்காலம் இருந்தது? அவர்கள் சரியாகவே எதைக் கற்பனைச் செய்துபார்க்கக்கூடும்?
14 கடவுள் அவர்களோடு பேசி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிக்கையில் அவருடைய குரலைக் கேட்பது பரிபூரண மனிதனுக்கும் அவனுடைய பரிபூரண மனைவிக்கும் என்னே ஓர் ஆச்சரியமான காரியமாக இருந்தது! கடவுளுடைய ஆசீர்வாதத்தின் காரணமாக, வாழ்க்கைப் பயனற்றதாக இல்லாமல், அவர்கள் என்ன செய்யும்படிச் சொல்லப்பட்டார்களோ அதைச் செய்யக்கூடியவர்களாக இருப்பர். அவர்களுக்கு முன்னால் என்னே ஓர் எதிர்காலம் இருந்தது! மகிழ்ச்சியாக விவாகம் செய்துகொண்ட அந்தத் தம்பதி தங்கள் வீடாகிய ஏதேன் தோட்டத்திலே அங்கு நின்றுகொண்டிருந்த போது, தங்களுக்கான கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகையில், என்ன நடக்கும் என்பதைத் தியானித்துப் பார்த்திருக்க வேண்டும். அவர்களுடைய மனக்கண்கள் தூர எதிர்காலத்துக்குள் ஆவலோடுப் பார்த்தப் போது, அவர்கள் “கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை” மாத்திரமல்ல, ஆனால் முழு பூமியும் பிரகாசமான முகங்களுள்ள ஆண்களாலும் பெண்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டார்கள். (ஆதியாகமம் 2:8) இவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளாக, தங்கள் சந்ததியாக இருப்பதை எண்ணிப்பார்க்கையில் அந்த மனிதனின் இருதயமும் மனுஷியின் இருதயமும் துள்ளி எழும்பிருக்கும். அனைவரும் பரிபூரணராக, உடல்வடிவிலும் அமைப்பிலும் குறைபாடின்றி, நேர்த்தியான உடல் ஆரோக்கியமும் வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் நிலையான இளமையோடு, அனைவரும் ஒருவருக்கொருவர் பரிபூரணமான அன்பை வெளிக்காட்டுகிறவர்களாய், அனைவரும் தங்களுடைய பரலோகத் தகப்பனாகிய மகா சிருஷ்டிகரை ஐக்கியமாக வணங்குகிறவர்களாய், இதைத் தங்கள் முதல் மனித தகப்பனோடும் தாயோடும்கூட செய்கிறவர்களாக இருப்பார்கள். இப்பேர்ப்பட்ட ஒரு குடும்பத்தைக் கொண்டிருப்பதைப் பற்றிய எண்ணத்தினால் முதல் மனிதனின் இருதயமும் மனுஷியின் இருதயமும் எப்படி பொங்கி எழுந்திருக்க வேண்டும்!
15, 16. (எ) மனித குடும்பத்துக்கு ஏன் அங்கு ஏராளமான உணவு இருக்கும்? (பி) மகிழ்ச்சியான குடும்பம் எண்ணிக்கையில் வளர்ந்தபோது, ஏதேன் தோட்டத்துக்கு வெளியே அவர்களுக்கு என்ன வேலையிருக்கும்?
15 முழு பூமியையும் நிரப்பிய இந்த மனித குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஏராளமான உணவு இருக்கும். ஆரம்பத்தில், ஏதேன் தோட்டத்திலே ஏராளமான உணவு இருந்தது. கடவுள் அவர்களுக்கு ஆரோக்கியமான, ஜீவனைக் காக்கும் உணவாக கனி தரும் விருட்சங்களோடுகூட எல்லா விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் கொடுத்தார்.—சங்கீதம் 104:24 ஒப்பிடவும்.
16 மகிழ்ச்சியான அவர்களுடைய குடும்பம் எண்ணிக்கையில் வளர்ந்தபோது அவர்கள் தோட்டத்தை ஏதேனின் எல்லைக்கு அப்பால் விரிவாக்குவார்கள். ஏனென்றால், ஏதேன் தோட்டத்துக்கு வெளியே பூமி தயார் செய்யப்படாத நிலையிலிருந்ததை கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறது. குறைந்தபட்சம், அது கவனிக்கப்படாமலும் ஏதேன் தோட்டத்தைப் போல அந்த உயர்ந்த அளவு பண்படுத்தப்பட்ட நிலைக்குக் கொண்டுவரப்படாமலும் இருந்தது. இதன் காரணமாகவே அவர்களுடைய சிருஷ்டிகர் பூமியை அவர்கள் நிரப்புகையில், அதைக் “கீழ்ப்படுத்திக்”கொள்ளும்படியாக அவர்களுக்குச் சொன்னார்.—ஆதியாகமம் 1:28.
17. வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏன் அங்கு ஏராளமான விளைச்சல் இருக்கும்? தோட்டம் விரிவாக்கப்படுகையில், கடைசியாக அங்கு என்ன நீங்காதிருக்கும்?
17 தோட்டமானது பரிபூரணமான பண்படுத்துபவர்களாலும் பராமரிப்பவர்களாலும் விரிவாக்கப்படுகையில், கீழ்ப்படுத்தப்பட்ட பூமி வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏராளமான விளைச்சலைக் கொடுக்கும். கடைசியாக, ஒரே சீராக விரிவடைந்து வரும் தோட்டம் பூமி முழுவதும் பரவி மனிதவர்க்கத்தின் நித்திய வீடாக தழைத்தோங்க, பூமி முழுவதையும் தழுவிய ஒரு பரதீஸ் அங்கு நீங்காதிருக்கும். பரலோகத்திலிருந்து பார்க்க, அது கண்ணுக்கினிய ஓர் இடமாக இருக்க, பரலோக சிருஷ்டிகர் அது மிக நல்லது என்பதாக அறிவிக்க முடியும்.—யோபு 38:7-ஐ ஒப்பிடவும்.
18. பூமி முழுவதையும் தழுவிய ஏதேன் தோட்டம் ஏன் தொல்லையிலிருந்து விடுபட்டதாக இருக்கும்? என்ன சமாதானம் அங்கு இருக்கும்?
18 அது, புதிதாக விவாகம் செய்துகொண்ட மனிதனும் மனுஷியும் நேரில் அனுபவித்த அந்த ஏதேன் தோட்டத்தைப் போலவே எல்லாம் அமைதியாகவும் எந்தத் தொல்லையிலிருந்தும் விடுபட்டதாகவும் இருக்கும். முதல் மனிதனாக ஆதாம் கூர்ந்து ஆராய்ந்து பெயரிட்டிருந்த அந்த எல்லா மிருகங்களிடமிருந்தும் பறக்கும் பறவைகளிடமிருந்தும் ஆபத்து அல்லது தீங்கு ஏற்படும் என்ற பயத்துக்கு அவசியமிராது. தங்கள் முதல் மனித தகப்பனையும் தாயையும் போல பூமி முழுவதையும் தழுவிய பரதீஸின் அந்தப் பரிபூரண குடிமக்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் சகல காட்டு மிருகங்கள் உட்பட பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்வார்கள். “கடவுளின் சாயலில்” சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கு இந்தக் கீழான உயிரினங்கள் இயல்புணர்ச்சியினால் கீழ்ப்பட்டு அவனோடு சமாதானமாயிருக்கும். அவைகளுடைய மென்மையான, பரிபூரண மனித எஜமான்கள் இந்தக் கீழான உயிரினங்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதில், மிருக சிருஷ்டிகளின் மத்தியில் சமாதானமான ஒரு சூழ்நிலையின் வளர்ச்சிக்கு துணை செய்வார்கள். இந்தக் கடவுளைப் போன்ற மனித எஜமான்களின் சமாதானமான செல்வாக்கு மனநிறைவுள்ள இந்தத் தாழ்வான உயிரினங்களின் மீது, பாதுகாப்பாக பரவி இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, பரிபூரண மனிதவர்க்கம் கடவுளோடு சமாதானமாயிருக்கும். கடவுளுடைய ஆசீர்வாதம் அவர்களிடமிருந்து நீக்கப்படாது.—ஏசாயா 11:9-ஐ ஒப்பிடவும்.
கடவுள் தம்முடைய சிருஷ்டிப்பு வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறார்
19. (எ) கடவுளுடைய நோக்கத்தின் சம்பந்தமாக, முதல் மனிதனும் மனுஷியும் எதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்? (பி) காலத்தின் சம்பந்தமாக கடவுள் என்ன தெரிவித்தார்?
19 பரிபூரண மனித தம்பதி, கடவுளுடைய சித்தத்திற்கிசைவாக முழுமைப் பெற்ற பூமிக்குரிய காட்சியை ஆழ்ந்து சிந்தனைச் செய்கையில் அவர்கள் ஒரு காரியத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள். கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட இந்த மகத்தான வேலையை அவர்கள் நிறைவேற்றுவதற்கு காலம் தேவைப்படும். எவ்வளவு காலம்? அவர்களுடைய சிருஷ்டிகரும் பரலோகத் தகப்பனுமாயிருந்தவர் இதை அறிந்திருந்தார். தொடர்ச்சியான அந்த மாபெரும் சிருஷ்டிப்பு நாட்கள் இப்பொழுது இன்னுமொரு முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் கடவுளுடைய சிருஷ்டிப்பு நாட்களின் சொந்த பதிவுப்படி அவர்கள் “சாயங்காலத்தில்”, புதிய நாளின் ஆரம்பக் கட்டத்திலிருப்பதையும் அவர்களுக்கு அவர் தெரிவித்தார். அது ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகவும் கடவுளுடைய சொந்த தூய்மையான நீதியான நோக்கத்துக்காக பரிசுத்தப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பரிபூரண மனிதனாகிய கடவுளின் தீர்க்கதரிசி இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டான். ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட கதை நமக்குச் சொல்கிறது:
20. “ஏழாம் நாளை”க்குறித்து பைபிள் பதிவு என்ன சொல்கிறது?
20 “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.”—ஆதியாகமம் 1:31–2:4.
21. (எ) கடவுள் தம்முடைய ஓய்வு நாளை முடித்துக் கொண்டதாக, அது மிகவும் நல்லது என்பதாகக் கண்டதாக பைபிள் சொல்கிறதா? விளக்கவும். (பி) என்ன கேள்விகள் எழும்புகின்றன?
21 கடவுள் தம்முடைய ஓய்வு நாளை முடித்துக் கொண்டு, அதை அவர் மிக நல்லது என்று கண்டதாகவும், சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஏழாம் நாள் முடிந்ததாகவும் பதிவு சொல்வதில்லை. முற்பட்ட ஆறு சிருஷ்டிப்பு நாட்களோடு ஒத்திருக்க, ஏழாவது நாள் மிக நல்லதாக இனி அறிவிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அது இன்னும் முடிவடையவில்லை. இதுவரையாகப் பார்க்கையில், யெகோவா தேவன் அந்த நாளை மிக நல்லது என்பதாக அறிவிக்க முடியுமா? இது வரையாக அது அவருக்கு அமைதியான ஓய்வுநாளாக இருந்திருக்கிறதா? முதல் மனுஷனும் மனுஷியும் பரதீஸில் தங்களுடைய விவாக நாளில் கற்பனை செய்து பார்த்திருந்த இருதயத்துக்கு பரவசமூட்டிய எதிர்பார்ப்பைப் பற்றியதென்ன? அடுத்தக் கட்டுரையில் காட்சி படிப்படியாக வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். (w89 8/1)
[அடிக்குறிப்புகள்]
a ஆதியாகமத்திலும் எபிரெய வேதாகமத்திலுள்ள ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட மற்ற புத்தகங்களிலும் எபிரெய வாசகத்தில் காணப்படும் பெயர்கள் இவை.
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ தோட்டத்தைக் கவனித்துக் கொள்வதோடுகூட கடவுள் ஆதாமுக்கு என்ன வேலையைக் கொடுத்தார்? இது எதை இன்றியமையாததாக்கியது?
◻ ஆதியாகமம் 1:1–25-லுள்ள சிருஷ்டிப்பு பதிவு வெளிப்படுத்தியது என்ன?
◻ முதல் மனித மனைவி எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டாள்? தங்கள் விவாக நாளில் ஆதாம் எவ்விதமாகப் பிரதிபலித்தான்?
◻ முதல் மனித தம்பதிக்கு முன்னால் என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன?
◻ தொடர்ச்சியான மாபெரும் சிருஷ்டிப்பு நாட்கள் இன்னுமொரு முடிவை எட்டியிருப்பதைக் கடவுள் எவ்விதமாக தெரிவித்தார்?