திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸ் கடவுளை மகிமைப்படுத்துகிறது
“என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.”—ஏசாயா 60:13.
1, 2. (எ) தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் கடவுள் பூமியைக் குறித்து முன்னறிவித்தது என்ன? (பி) எதிர்காலத்தில் ஓர் ஆயிரம் ஆண்டுகள் நோக்கிட, நாம் பார்ப்பது என்ன?
யெகோவா இந்தப் பூமியைத் தம்முடைய பாதத்தின்கீழ் ஒரு கோளமாக, அடையாளப்பூர்வமான தம்முடைய பாதபடியாகப் படைத்தார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், கடவுள் தம்முடைய ‘பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவதாக’ முன்னறிவித்தார். (ஏசாயா 60:13) பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட பைபிளின் துணைகொண்டு, நாம் ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்காடியைக் கொண்டு பார்ப்பது போல், மனிதனின் எதிர்காலத்தில் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பார்க்க முடியும். என்னே ஒரு கவர்ச்சியான காட்சி நம்முடைய கண்களை வரவேற்கிறது! இந்தப் பூமி முழுவதுமே சர்வலோகத்திலும் மிகச் சிறந்த தோட்டக் கலைஞரால் உண்டாக்கப்பட்ட குறையற்ற எழில் கொண்டு ஒளிருகிறது. மனிதவர்க்கத்துக்குப் பரதீஸ் பூமிமுழுவதுமாகத் திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கும்!
2 ஆம், மனிதனின் வாழ்க்கையை ஒரு பரதீஸ் தோட்டத்தில் ஆரம்பித்துவைத்த உன்னதமான தேவன் மனிதனின் மேன்மையான மகிழ்ச்சியை மனதில் கொண்டிருக்கிறார். மனிதவர்க்கம் எப்பேர்ப்பட்ட ஓர் அன்பான சிருஷ்டிகரைக் கொண்டிருக்கிறது! “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று சொல்வது மிகையாகாது! (1 யோவான் 4:8, 16) திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கும் பரதீஸில் முதிர்ச்சியுள்ள ஆண்களும் பெண்களும் மாசற்ற மனித பரிபூரணத்தில் சகோதர சகோதரிகளாக ஒன்றாக வாழ்கிறார்கள். (ஏசாயா 9:6) அன்பால் உந்துவிக்கப்பட்டவர்களாக, வானத்தையும் பூமியையும் படைத்த மகிமையான சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கு அவர்கள் பூரண கீழ்ப்படிதலுடையவர்களாக இருக்கிறார்கள்.
3, 4. (எ) வானமும் பூமியும் என்ன விதத்தில் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்? (பி) பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுகையில் தேவ தூதர்கள் எவ்விதம் பிரதிபலிப்பார்கள்?
3 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் தம்முடைய ஆட்சிப்பகுதியைக் குறித்து தாம் தெரிந்துகொண்ட மக்களிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்: “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி.” (ஏசாயா 66:1) அவருடைய “பாதபடியின்,” பரதீஸ் பூமியின் மகிமைதானே, காணக்கூடாத உயரத்தில் அமைந்திருக்கும் அவருடைய சிங்காசனத்தின் மகிமைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.
4 பூமியைப் படைக்கும் அந்தச் சமயத்தில், கடவுளுடைய ஆட்சிப்பகுதியில் அமைந்த அவருடைய சிங்காசனத்தில் ஊழியர்களாக இருந்தவர்கள் கீழே பூமியின் காட்சியைக் கவனித்தார்கள். அது மகிமையில் பிரகாசிப்பதை அவர்களுடைய கண்கள் கண்டபோது, அவர்கள் எவ்வளவாய் அதில் ஆழ்ந்துவிட்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும்! தாங்கள் ஒன்றுசேர்ந்து உளமாறப் பாடுவதை எப்படித் தடைசெய்யக்கூடும்? (செப்பனியா 3:17; சங்கீதம் 100:2 ஒப்பிடவும்.) அதில் பிரியப்பட்ட மகிழ்ச்சியுள்ள சிருஷ்டிகர், அந்தப் பரலோகக் காட்சியைப் பற்றிய ஒரு திருத்தமான விவரத்தைப் பதிவுசெய்யும்படியாகத் தம்முடைய பூமிக்குரிய எழுத்தாளரைத் தம் ஆவியால் ஏவினார்: “அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.” (யோபு 38:7) அப்படியிருக்க, பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும்போது அந்தத் தேவ புத்திரர் கடவுளுக்கு மகிமையுண்டாக எவ்வளவாய் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள்!
5. பூமியைக் குறித்த கடவுளுடைய ஆதி நோக்கம் திரும்ப அடையப்பெறுதல் பற்றி நாம் எவ்விதம் உணரவேண்டும்?
5 ஒரு பரதீஸான பூமியை மனிதவர்க்கம் மகத்தானவிதத்தில் பெறுவது என்பதே யெகோவா தேவனின் ஆரம்பமுதலான நோக்கம் என்பதை ஆவியால் ஏவப்பட்டிருக்கும் பரிசுத்த வேத எழுத்துக்கள் நமக்கு உறுதியளிப்பது உண்மையிலேயே நம் இருதயத்திற்கு அனலூட்டுவதாயிருக்கிறது. இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தின் இந்த மகிழ்ச்சியூட்டும், போற்றுதலை எழுப்பும் உச்சக்கட்டம், தம்முடைய உன்னதத்தன்மையை வெளிப்படுத்துவதில் தோல்வியுறாது மகிமையிலிருந்து மகிமைக்குச் செல்லும் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கும் சரியான காரியமாயிருக்கிறது. எல்லாத் துதியும் அவருக்கே உரியது!—சங்கீதம் 150:1, 2; ஏசாயா 45:18; வெளிப்படுத்துதல் 21:3–5.
உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதில் உதவுகின்றனர்
6. அர்மகெதோனுக்குப் பின்பு பூமி எவ்விதம் நிரப்பப்படும்?
6 அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள் என்றாலும், இந்தப் பூமி முழுவதையும் அவர்கள் பிள்ளைப்பேற்றால் மாத்திரமே நிரப்புகிறவர்களாக இருக்க மாட்டார்கள். ஞாபகார்த்த கல்லறையிலுள்ளவர்களும் கிறிஸ்துவின் மீட்கும் கிரய பலியின் நன்மைகளுக்குள் வருகிறவர்களுமாகிய ஆட்களை மீண்டும் ஜீவனுக்குக் கொண்டுவருவதன் மூலமும் யெகோவா ‘தம்முடைய பாதபடியை மகிமைப்படுத்துவார்.’ இவர்கள் நம்முடைய பூமிக் கோளத்தை ஓர் அருமையான அழகிய பரதீஸாக மாற்றும் அந்த மகிழ்ச்சியுள்ள வேலையில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை உடையவர்களாயிருப்பார்கள்.—அப்போஸ்தலர் 24:15.
7. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் இயேசுவின் எந்த வார்த்தைகளை மனதில் கொண்டிருப்பார்கள்?
7 அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் ஆத்துமாவை கிளர்ச்சியடையச் செய்யும் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளைத் தங்களுடைய மனதில் எப்பொழுதும் கொண்டிருப்பார்கள்: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், பிரேதக்குழிகளிலுள்ள [ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள, NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) பெத்தானியிலே லாசருவின் சடலம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்க, தேவனுடைய குமாரன் அந்த லாசருவை நோக்கி, “லாசருவே, வெளியே வா,” என்று சொன்னதற்கு ஒப்பான வார்த்தைகளை ஞாபகார்த்தக் கல்லறையிலுள்ளவர்கள் கேட்க ஆரம்பிக்கும் அந்த நேரம் எப்பேர்ப்பட்ட ஒரு நேரமாயிருக்கும்!—யோவான் 11:43.
8 இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் கீழ் அவருடைய உத்தரவுக்கு இணங்க புது ஜீவனடைய உயிர்த்தெழுப்பப்படும் அந்த முதல் ஆட்கள் யாராக இருக்கக்கூடும்? நியாயமாகவே அவர்கள் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்னால் மரித்த “வேறே ஆடுகளாக” இருப்பர். அவர்கள் முந்தின ஓர் உயிர்த்தெழுதலைக் கொண்டிருப்பர். (யோவான் 10:16) புதிய உலகத்திற்குத் தங்களை அமைத்துக்கொள்வது அவர்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்காது.—மத்தேயு 25:34; யோவான் 6:53, 54 ஒப்பிடவும்.
8, 9. பூமியில் புது வாழ்வுக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் முதலில் யாராக இருக்கக்கூடும்? இது அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கு என்ன சந்தோஷத்தைக் கொண்டுவரும்?
9 மிகுந்த உபத்திரவத்திற்கு முன்னிருந்த சந்ததியின் காலப்பகுதியில் “வேறே ஆடுகளைச்” சேர்ந்த மரித்தவர்கள் திரும்ப உயிர்த்தெழுந்து வருவதைக் காண்பது அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்தவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! (மத்தேயு 24:21) அடையாளம் கண்டுகொள்ளும் திறமைவாய்ந்தவர்களாய், அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் அவர்களை அடையாளங் கண்டுகொள்கின்றனர், வரவேற்கின்றனர், சர்வத்துக்கும் உன்னத தேவனுக்குரிய தங்களுடைய ஐக்கியமான ஊழியத்தை அவர்களுடன் சேர்ந்து தொடருகிறார்கள்!
10. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பதன் மூலம், நீங்கள் எதைப் பார்க்கக்கூடும்?
10 அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களில் ஒருவராக இருப்பதன் மூலம், உங்களுடைய சொந்த பூமிக்குரிய உறவினர்களில் முதல் நபரின் உயிர்த்தெழுதலை நீங்கள் பார்க்கக்கூடும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாங்கள் மரணத்தில் இழந்த 12 வயது மகளை உயிர்த்தெழுப்பி அவர்களுடைய அன்பு கரங்களில் கொடுத்ததைப் பார்த்த பெற்றோரின் உணர்ச்சிகளுக்கு உங்களுடைய உணர்ச்சிகள் எப்படி வித்தியாசமாக இருக்கக்கூடும்? “அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.” (மாற்கு 5:42) ஆம், ஹேடீஸிலிருந்தும் சமுத்திரத்திலிருந்தும் மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவது உங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியைத் தரும். (வெளிப்படுத்துதல் 20:13) ஆ, அது எப்பேர்ப்பட்ட மகிமையான ஒரு மறுநாளாக இருக்கும், சீக்கிரத்தில் இங்கே இருக்கப்போகும் ஒரு மறுநாள்!
“பூமியெங்கும் பிரபுக்கள்”
11, 12. (எ) சங்கீதம் 45:16 எதை அறிவுறுத்துகிறது? (பி) அரசராகிய இயேசு கிறிஸ்து யாரிலிருந்து “பூமியெங்கும் பிரபுக்களை” நியமிக்கக்கூடும்?
11 தம்முடைய பரிபூரண மனித உயிரை யாருக்கு மீட்கும் பலியாக அளித்தாரோ, அந்த மரித்த மனிதரை உயிர்த்தெழுப்புவதற்கான தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தி இயேசு சங்கீதம் 45:16-ஐ நிறைவேற்றுகிறவராயிருப்பார். இந்தச் சங்கீதம் முடிசூட்டப்பட்ட அரசராக இயேசு கிறிஸ்துவுக்கே தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடப்படுகிறது: “உமது [பூமிக்குரிய] பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள், அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.” இங்கே பூமியில் பிள்ளைகளாயிருப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து பரம தந்தையாக இருப்பார் என்பதையும், அவர்களிலிருந்து அவர் “பூமியெங்கும் பிரபுக்களை” நியமிப்பார் என்பதையும் இச்சங்கீதம் வலியுறுத்துகிறது. “தாவீதின் குமாரனாக”வும், யூதக் கன்னிப்பெண்ணாகிய மரியாளின் முதல் குமாரனாகவும், இயேசுவுக்கு, இந்தப் பூமியில் ஆதாம் வரையும் செல்லக்கூடிய பூமிக்குரிய முற்பிதாக்கள் இருந்தனர்.—லூக்கா 3:23–38.
12 இயேசுவின் மாம்சப்பிரகாரமான முற்பிதாக்களாயிருந்தவர்களை தாம் உயிர்த்தெழுப்புவதன் மூலம் அவர்கள் தமக்குக் குமாரர்களாக ஆவார்கள் என்று சங்கீதம் 45:16 கூறுகிறதா? ஆம். இயேசு அவர்கள் வம்சவழியில் வந்ததை மதித்து, அவர்களுக்கு விசேஷ ராஜரீக தயவைக் காண்பிப்பவராயும் அவர்களை மட்டுமே பரதீஸான “பூமியெங்கும் பிரபுக்களாக” நியமிப்பார் என்பதையும் சங்கீதம் 45:16 குறிப்பிடுகின்றதா? இல்லை. தீர்க்கதரிசனம் அந்தவிதத்தில் நிறைவேறுவதானது, பூமியெங்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான “பிரபுக்களைத்”தான் அனுமதிப்பதாயிருக்கும். இந்த உண்மையைத் தவிர, அவருடைய இந்த எல்லா முற்பிதாக்களுமே அவருடைய ஆயிர வருட ஆட்சியின்போது விசேஷ ஸ்தானத்தைக் கொண்டிருக்கக்கூடியளவில் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கவில்லை. “பிரபுக்களாக” நியமிப்பதற்கு, அரசராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய பூமிக்குரிய முற்பிதாக்களைவிட எண்ணிக்கையில் கூடுதலானவர்களை—அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களிலும், கிறிஸ்தவ காலத்திற்கு முன்னான விசுவாச மனிதர் உட்பட “வேறே ஆடுகளில்” உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களிலும் தகுதியானவர்களைக் கொண்டிருப்பார். இவர்களெல்லாரிலும் தகுதியுள்ளவர்களைத் தம்முடைய பூமிக்குரிய பிரதிநிதிகளாக பிரபுக்களின் ஸ்தானத்திற்கு அவர் நியமிக்கக்கூடும்.
13, 14. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் தங்களுடைய சொந்த கண்களால் உயிர்த்தெழுப்பப்பட்ட யாரைப் பார்க்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்கள்?
13 மேசியானிய ராஜ்யத்தின் கீழ் உயிர்த்தெழுதலைப் பெறும் வரிசையில் இருப்பவர்களை எண்ணிப் பாருங்கள். பாருங்கள்! நம்முடைய கண்களை நாம் நம்ப முடிகிறதா? இரத்த சாட்சியாக மரித்த முதல் மனிதன் ஆபேல் இருக்கிறான், மற்றும் கடவுளோடு சஞ்சரித்த ஏனோக்கு இருக்கிறான். பேழையைக் கட்டிய நோவாவும் இருக்கிறான். இஸ்ரவேல் தேசத்தின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களும் இருக்கிறார்கள். (ஆசாரிய கோத்திரமாகிய லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்த) மோசேயும், ராஜ்யத்துக்கான நித்திய உடன்படிக்கை செய்யப்பட்ட தாவீதும் இருக்கின்றனர். பைபிள் எழுத்தாளர்களில் எபிரெய தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், மற்றும் அவர்களில் கடைசியானவனாகிய மல்கியா வரை வாழ்ந்த மற்றவர்களும் இருக்கிறார்கள். முழுக்காட்டுபவனாகிய யோவானும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பும் இருக்கிறார்கள்.
14 இயேசு ஒரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடம் பேசும்போது, “ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காண்”பீர்கள் என்று கூறினார். (லூக்கா 13:28) “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தைப்” பூமியில் தப்பிப்பிழைக்கும் “திரள் கூட்டம்” இங்கே பரதீஸ் பூமியில் உயிர்த்தெழுப்பப்பட்ட “ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும்” நேரடியாகக் காணும் சிலாக்கியத்தைப் பெறும் தேவ தயவையுடையவர்களாயும் தேவனுடைய ராஜ்யத்தின் கீழ் “நித்திய பிதா”வாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜரீக சேவையில் இருப்பதையும் காணும் வாய்ப்பையும் உடையவர்களாயிருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 16:14; ஏசாயா 9:6.
15. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கு ஒப்பிடப்படமுடியாத என்ன சிலாக்கியம் காத்திருக்கிறது?
15 பொ.ச.மு. 2370-ல் பூகோள அளவில் ஏற்பட்ட முதல் உலகின் ஜலப்பிரளய முடிவை தப்பிப்பிழைத்த நோவாவும் அவனுடைய உடன் குடும்ப அங்கத்தினருமாகிய “எட்டு ஆத்துமாக்க”ளிடம் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையைத் தப்பிப்பிழைக்கும் நீங்கள் உங்களுடைய குறிப்புகளை ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது ஆத்துமாவுக்கு எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாயிருக்கும்! உங்களுக்கு இருப்பதைப் போன்ற அனுபவங்களும், இப்படியாக இந்த மேன்மையான, மீண்டும் கிட்டாத வகையில் யெகோவா தேவனுக்குச் சாட்சியாக சேவிக்க முடிவதுமான காரியம் வேறு எவருக்கும் நித்தியத்திற்கும் இருப்பதற்கில்லை.—1 பேதுரு 3:20; மாற்கு 13:19; 2 பேதுரு 3: 5–7.
பரிவிரக்கம் கொண்ட ஒரு தீயோன் நினைக்கப்படுகிறான்
16, 17. (எ) இயேசு அந்தப் பரிவிரக்கங்கொண்ட தீயோனை நினைத்தருளும்போது, அந்தச் சமயத்தில் உயிருடனிருக்கும் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்தவர்களும், மற்றவர்களும் என்ன சிலாக்கியத்தைக் கொண்டிருப்பர்? (பி) உயிர்த்தெழுப்பப்பட்ட அந்தத் தீயோனின் விஷயத்தில் என்ன நம்பிக்கை இருக்கிறது?
16 அந்தச் சமயத்திற்கெல்லாம் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுதல் முழுவேகம் அடைந்துகொண்டிருக்கும். கல்வாரியில் இயேசுவோடுகூட கழுமரத்தில் அறையப்பட்டிருந்த அந்தக் குற்றவாளி, இயேசுவின் தலைக்கு மேல் எழுதப்பட்டிருந்ததைப் புரிந்து, “இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்று சொன்னானே, அவன் திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் பூமிக்குரிய வாழ்க்கைக்காக உயிர்த்தெழுப்பப்படுவான். (லூக்கா 23:42) அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் அப்பொழுது உயிருடனிருப்பவர்களும் மரித்த அவனை வரவேற்கும் வாய்ப்பை உடையவர்களாயிருப்பார்கள். பொ.ச. 33 நைசான் 14-ம் தேதியன்று இயேசு கிறிஸ்துவிடம் பரிவிரக்கத்தை வெளிப்படுத்திய அவனுக்கு இப்பொழுது ஆளும் அரசராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி இவர்கள் முழுமையாகக் கற்றுக்கொடுப்பார்கள்.
17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஆயிர வருட ஆட்சிக் காலப்பகுதியில் அவனை நினைவுகூர தவற மாட்டார். அரசராயிருப்பவரும் தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குக் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அந்தத் தீயோன் தன்னுடைய போற்றுதலை நடைமுறையில் காண்பிப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வலோகப் பேரரசராகிய யெகோவா தேவனுக்குத் தன்னுடைய உண்மைத்தன்மையை நிரூபிப்பதன் மூலம் அப்படிச் செய்வான். அப்பொழுது அவன் திரும்ப நிலைநாட்டப்பட்ட கீழ்ப்படிதலுடைய மனிதவர்க்கத்துடன்கூட பரதீஸாக்கப்பட்டிருக்கும் புதிய உலகில் என்றும் வாழ்வதற்குத் தகுதியுள்ளவனாக எண்ணப்படுவான்.
பூகோள அளவில் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஏதேன் தோட்டத்தில் வாழ்க்கை
18. திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்?
18 திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில் ஒவ்வொருவரும் மற்றவருடைய நண்பர். அகில உலக குடும்ப உறவின் பந்தங்கள் ஒவ்வொருவருடைய ஆத்தும ஆழம் வரையும் செல்கிறது. எல்லாருமே ஒருவரையொருவர் புரிந்துகொள்கின்றனர். அவர்கள் பொதுவாக இருக்கும் ஓர் உலக மொழியைப் பேசுகின்றனர். அது அநேகமாய் மனிதவர்க்கத்தின் ஆரம்ப மொழியாக இருக்கிறது, இந்த மொழி பூமியில் மனிதவர்க்கத்தின் தோற்றத்திலிருந்து முதல் 1,800 ஆண்டுகளுக்குப் பேசப்பட்டது—பொ.ச.மு. 4026-ல் ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் பெலெகுவின் நாள் வரை (பொ.ச.மு. 2269 முதல் 2030 வரை) பேசப்பட்டது, ஏனென்றால் “அவனுடைய நாட்களில் பூமி [அதாவது, பூமியின் ஜனத்தொகை] பகுக்கப்பட்டது.” (ஆதியாகமம் 10:25; 11:1) எல்லாருமே உயிர்வாழும் சிலாக்கியத்தை அனுபவித்துக்களிக்கிறார்கள். ஒவ்வொரு புதிய நாளும் வாழ்வதற்கு ஒரு நாள் கூட்டிக்கொடுக்கப்படுவதால் நன்றியோடு வரவேற்கப்படுகிறது. காலம் செல்ல செல்ல சரீர குறைபாடுகள் கூடுவதில்லை. சரீர சக்திகள் கூடுகின்றன, உடல்களில் தேய்மானங்கள் இல்லை.—யோபு 33:25-ஒப்பிடவும்.
19. முன்னதாக ஊனமுற்றவர்களுடைய விஷயத்தில் என்ன கவனிக்கப்படும்?
19 இதோ பாருங்கள்! ஒரு சமயத்தில் முடமாயிருந்தவர்கள் நடக்கிறார்கள், ஆம், மகிழ்ச்சியினால் குதித்தோடுகிறார்கள். இழக்கப்பட்ட கைகளும் கால்களும் அற்புதமாய்த் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. முற்காலத்தில் குருடராயிருந்தவர்கள் பார்வையடைகிறார்கள், செவிடராயிருந்தவர்களின் செவிகள் கேட்கின்றன, ஊமையர் பேசுகிறார்கள், மகிழ்ச்சியினால் ஆர்ப்பரிக்கிறார்கள். (ஏசாயா 35:5, 6-ஐ ஒப்பிடவும்.) மனித உருவம் மற்றும் தோற்றத்தில் குறைபாடுகள் மறைந்துவிடுகின்றன. மனிதரில் ஆண்மை அழகு பெண்மையின் அழகுடன் இசைவாக இருக்கிறது. (ஆதியாகமம் 2:18) மனித பரிபூரணம் பரிபூரண மனித உடலின் சிருஷ்டிகராகிய யெகோவாவை மகிமைப்படுத்துகிறது.
20. இயற்கை சக்திகள், உணவு பொருட்கள், விலங்கு சிருஷ்டிகள், மற்றும் பூமி எவ்விதம் பயன்படுத்தப்படும் என்பது குறித்து என்ன கவனிக்கப்படும்?
20 இந்தப் பூமி முழுவதும் ஒரு பூகோள அளவான அழகு மையமாக ஆகிறது. பூமியின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் வறட்சியின் அறிக்கையோ, அல்லது பெருஞ்சேதத்தை விளைவித்திடும் பெருமழை பற்றிய அறிக்கையோ அல்லது நாசப்படுத்தும் புயல்கள், சுழல் காற்றுகள், கடும் புயல்கள், சூறை காற்றுகளைப் பற்றிய அறிக்கையோ இல்லை. (மாற்கு 4:37–41-ஐ ஒப்பிடவும்.) இயற்கையின் எல்லாச் சக்திகளும் ஒரு பரிபூரண சமநிலைக்குக் கொண்டுவரப்பட்டு, பூமி முழுவதும் வாழ்வதற்கு ஏற்ற மகிழ்ச்சியுள்ள இடமாக ஆக்கப்படுகிறது. (சங்கீதம் 72:16) யெகோவா சொன்ன பிரகாரம் உலகளாவிய சமாதானமும் பாதுகாப்பும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் கிடைப்பதாயிருக்கிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடு செய்வாருமில்லை.” (ஏசாயா 11:9; வசனங்கள் 6–8-ஐயும் பாருங்கள்.) இப்படியாக பூமி வாழ்வதற்கு ஏற்ற ஓர் இடமாகவும், சிருஷ்டிகரும் பூமியின் சொந்தக்காரருமாகிய யெகோவா தேவனை வணங்குவதற்கும் சேவிப்பதற்கும் ஏற்ற ஓர் இடமாகவும் ஆக்கப்படும். அதன் சிருஷ்டிகராக அது அவருடைய உடைமையாகிறது, எனவே, அவருக்குப் பிரியமாகவும், அவரை மகிமைப்படுத்தும் விதமாகவும் அதை உபயோகிப்பது தகுந்ததே.—ஏசாயா 35:1, 2, 6, 7-ஐ ஒப்பிடவும்.
21. மீட்கப்பட்ட மனிதவர்க்கம் பூமியிலுள்ள அனைத்தையும் எவ்வாறு நோக்கும்? என்ன இசை கேட்கப்படும்?
21 புத்துயிரளிக்கும் விதத்தில் புதியது—மனித வாழ்க்கை எழில் மிகுந்த பரிபூரணத்தில் ஆரம்பித்த அந்தப் பரதீஸிய ஏதேன் தோட்டத்தில் எந்தச் சமயத்திலும் இருந்திராத மீட்கப்பட்ட மனிதருக்கு பூமியிலுள்ள எல்லாமே அப்படித்தான் இருக்கிறது! (வெளிப்படுத்துதல் 21:5) அந்தச் சமயத்தில் வாய்ப்பாட்டும் இசைக் கருவிகளில் எழுப்பப்படும் பாட்டுமாக என்னே இன்பமான இசை கேட்கப்படும்—எல்லாமே யெகோவவைத் துதிப்பவையாய் இருக்கும்!—1 நாளாகமம் 23:4, 5; சங்கீதம் 150:3–6.
22. பரதீஸிய புதிய பூமியில் வாழ்வது எப்படிப்பட்ட உணர்ச்சியாக இருக்கும்?
22 மனித வாழ்வு முழு நிறைவாக இருக்கும் ஒரு பூமியில், ஆதாமின் ஆதி பாவத்தின் விளைவாகிய மரணத்திற்கு வழிநடத்திய அனைத்து பருவங்களும் நீக்கப்பட்டிருக்கும் ஒரு பூமியில் வாழ்வது எவ்வளவு அற்புதமாயிருக்கும்! (யோவான் 10:10-ஐ ஒப்பிடவும்.) ஆம், கடவுளுடைய அங்கீகரிப்பைப் பெற்ற ஒவ்வொரு மனித சிருஷ்டியும் முதல் மனிதன் ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட விதமாக யெகோவா தேவனின் சாயலைப் பிரதிபலிப்பவர்களாக இருக்கும் ஒரு பூமியாக அது இருக்கும்! (ஆதியாகமம் 1:26, 27) பரலோகத்தைச் சேர்ந்த சேராபீன்களுக்கும், கேருபீன்களுக்கும் தேவதூதர்களுக்கும் இந்தப் பூமி இனிமேலும் பார்க்க சகிக்காத இடமாக இருக்காது. தங்களுடைய பிரியமான முகங்களை பூமியினிடமாகத் திருப்பி, பரதீஸிய அழகால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை உற்றுப் பார்க்கும்போது, தாங்கள் நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சிலாக்கியத்தையுடைய சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவுக்குத் தெரிவிக்க துதியும் நன்றியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.—மத்தேயு 18:10.
மகிழ்ச்சியுள்ள முடிவற்ற எதிர்காலம்
23. அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் சம்பந்தமாக என்ன ஏற்படக்கூடும்? பூமிக்குரிய பரதீஸின் குடிகளுக்கு என்ன பலன் இருக்கும்?
23 நிகழக்கூடிய காரியம் மற்றும் சாத்தியமுள்ளது என்ற கட்டத்துக்குள், பரலோக ராஜ்யத்திற்குத் தங்கள் “அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும்” உறுதியாக்கியிருப்பவர்களும் இந்த மேன்மையான உயிர்த்தெழுதலால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பவர்களுமாகிய அபிஷேகம்பண்ணப்பட்டிருப்பவர்களின் பெயர்கள் யாவும் பூமிக்குரிய பரதீஸிலுள்ள மனித குடும்பத்தினர் தெரிந்துகொள்வதற்காக, எதிர்காலத்தில் ஒரு நாள் முழுமையாக வெளியிடப்படக்கூடும். (2 பேதுரு 1:10; சங்கீதம் 87:5, 6) இப்படியாக, பூமிக்குரிய பரதீஸில் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய 1,44,000 பேர் ஏன் இல்லை என்பது எல்லாருக்கும் திருப்தியடையக்கூடிய அளவில் முழுவதுமாகப் புரிந்துகொள்ளப்படும். இது அவர்களினிமித்தமும் அவர்களோடுகூடும் முழு இருதயப்பூர்வமாக யாவரும் மகிழ்ச்சியடைவதற்கு வழிநடத்தும்.
24. (எ) தம்முடைய “பாதபடி” குறித்து யெகோவா எதைச் சாதித்திருப்பார்? (பி) புதிய பூமி ஒருபோதும் முடிவுறாது என்பது நமக்கு எப்படித் தெரியும்? எந்தத் தீர்க்கதரிசன பாடல் நிறைவேற்றப்படும்?
24 சர்வலோகம் முழுவதற்கும் மிகப்பொருத்தமான பேரரசராகிய யெகோவா தேவனுக்கு முறியா பக்தியுடையவர்களாய் நிலைத்திருக்கும் எல்லாருக்குமே முடிவற்ற எதிர்காலம் மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். அளவோடு நிரப்பப்பட்டிருக்கும் பரதீஸ் பூமி பொருத்தமான ஓர் இடமாக, மதிப்புள்ள இடமாக, கடவுளின் அடையாளப்பூர்வமான பாதங்கள் படிவதற்கு ஒரு ‘பாதபடியாக’ இருக்கும். ஆம், யெகோவா ‘தம்முடைய பாதஸ்தானத்தை’ நித்தியத்துக்குமாக மகிமைப்படுத்தினவராயிருப்பார். மனிதவர்க்கம் எல்லாமே அவருக்கு முழு கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருப்பார்கள்! (மத்தேயு 5:34, 35; அப்போஸ்தலர் 7:49) புதிய உலகம் முடிவில்லா ஓர் உலகமாயிருக்கும், ஏனென்றால், “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:7) அப்பொழுது, பரலோகத்தின் தேவதூதர்கள் யூதேயாவின் பெத்லகேமில் இயேசு பிறந்தபோது பாடிய தீர்க்கதரிசன முக்கியத்துவமுடைய அந்தப் பாடல் நிறைவேறும்: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியின்மேல் நற்பிரியமுள்ள மனிதருக்குச் சமாதானம்.”—லூக்கா 2:13, 14, NW.
25. (எ) “வேறே ஆடுகளின்” “திரள் கூட்ட”த்தைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது எதைப் போற்றுகிறார்கள்? (பி) நம்முடைய இருதயப்பூர்வமான ஆசை என்னவாக இருக்க வேண்டும்?
25 நல்ல மேய்ப்பனின் “வேறே ஆடுகளின்” “திரள் கூட்டத்தைச்” சேர்ந்தவர்கள் திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸ் பற்றிய வாக்குத்தத்தத்தின் ஆத்தும கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளைப் போற்றுவார்கள். கடவுளுடைய அமைப்போடு நெருங்க கூட்டுறவு கொண்டிருப்பதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் வேலையாகிய குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் இறுதி சாட்சியாக வைராக்கியமாகப் பிரசங்கிப்பதும் அவர்களுக்கு ஒரு சிலாக்கியம். (மத்தேயு 24:14; மாற்கு 13:10) யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய இருதயப்பூர்வமான ஆசை, அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜரீக ஆட்சியின் கீழ் சர்வலோகப் பேரரசராகிய யெகோவா தேவனின் நித்திய மகிமைக்காகவும், நித்தியத்துக்கும் சலிக்காமல் நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதாகும். அல்லேலூயா!—வெளிப்படுத்துதல் 19:1, 3, 4, 6; நீதிமொழிகள் 10:9. (w89 8/15)
நீங்கள் எவ்விதம் விடையளிப்பீர்கள்?
◻ யெகோவா தம்முடைய அடையாளப்பூர்வ பாதபடியாகிய பூமியைக் குறித்து என்ன வாக்குக் கொடுத்தார்?
◻ பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதில் யார் உதவிசெய்வர்?
◻ அரசராகிய இயேசு கிறிஸ்து யாரிலிருந்து “பூமியெங்கும் பிரபுக்களை” நியமிப்பார்?
◻ உயிர்த்தெழுதல் நடக்கும்போது ஆத்துமாவுக்குக் கிளர்ச்சியூட்டும் என்ன அனுபவம் உங்களுடையதாய் இருக்கக்கூடும்?
◻ யெகோவாவுக்கு முறிக்கமுடியா பக்தியில் நிலைநிற்பவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?