ஒரு பரிசுத்த இரகசியம் வெளிப்படுகிறது
“தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.”—1 தீமோத்தேயு 3:16.
1. 1 தீமோத்தேயு 3:16-ல் என்ன இரகசியம் விவரிக்கப்பட்டிருக்கிறது?
இரகசியங்கள், அறியவேண்டுமென்ற உங்கள் ஆவலைத் தூண்டிவிடுகின்றனவா? இரகசியங்களுக்குள் ஆழமாய் மூழ்கி ஆராய்வதற்கு உங்களுக்குப் பிரியமா? நம்மில் அநேகருக்குப் பிரியம்தான்! அப்படியானால், எல்லா இரகசியங்களிலும் மகத்தான இரகசியத்தை ஆராய்வதில் எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்—அநேக ஆயிரக்கணக்கான வருடங்களாக கடவுளுடைய வார்த்தையில் மூடிக் கிடந்த ஓர் இரகசியம் இது. இந்தப் பரிசுத்த இரகசியம் நமது தற்காலத்திய, மற்றும் எதிர்காலத்திய வாழ்க்கைகளை முக்கியமாக பாதிக்கிறது. அதுவே 1 தீமோத்தேயு 3:16-ல் நமக்காக விவரிக்கப்பட்டுள்ள ‘தேவ பக்திக்குரிய பரிசுத்த இரகசியமாகும்.’ ‘மறைபொருள்களை வெளிப்படுத்துகிற’ யெகோவா, தயவாக இந்த நல்ல இரகசியத்தையும் அதன் அர்த்தத்தையும் நமக்குத் தெரியப்படுத்துவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!—தானியேல் 2:28, 29.
2. (எ) எப்பொழுது யெகோவா முதலாவதாக ஒரு பரிசுத்த இரகசியத்தைப் பற்றி பேசினார், அப்பொழுது அவர் என்ன வாக்குக் கொடுத்தார்? (பி) என்ன கேள்விகளுக்குப் பதில்கள் தேவையாக இருக்கின்றன?
2 யெகோவா ஒரு பரிசுத்த இரகசியத்தைப் பற்றி ஏதேனில் சர்ப்பம் ஏவாளை வஞ்சித்து, ஆதாம் அவளோடு கலகத்தில் தொடர்ந்து சென்றபின்னர் முதலாவதாக பேசினார். ‘வித்து’ அல்லது சந்ததி சாத்தானின் தலையை நசுக்கும் என்று அங்கே கடவுள் வாக்குப் பண்ணினார். (ஆதியாகமம் 3:15) இந்த வித்து யார்? சர்ப்பத்தை அவர் எப்படி மேற்கொள்ளுவார்? கடவுளுடைய உண்மைத் தன்மையையும் இந்தப் பூமியினிடமாக அவருடைய நோக்கத்தையும் சரியென அவர் நிரூபித்துக்காட்டுவாரா?
3. வித்தையும் அவருடைய எதிர்கால வேலைகளையும் அடையாளம் கண்டுகொள்ள என்ன விளக்கக்குறிகளை தெய்வீக தீர்க்கதரிசனங்கள் கொடுத்தன?
3 ஏற்ற காலத்தில், தெய்வீகத் தீர்க்கதரிசனங்கள் வித்தையும் அவருடைய எதிர்கால வேலைகளையும் அடையாளம் கண்டுகொள்ள விளக்கக்குறிகளை தெய்வீக தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்தியது. அவர் ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவரும், தாவீதின் ராஜ்யத்தை சுதந்தரிப்பவரும், சமாதானப் பிரபு என்று அழைக்கப்படுகிறவருமாய் இருப்பார். “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:6, 7; ஆதியாகமம் 22:15-18; சங்கீதம் 89:35-37) ஆனால் ரோமர் 16:25 சொல்லுகிறபடி, அந்தப் பரிசுத்த இரகசியம் ‘ஆதிகால முதல் அடக்கமாயிருந்தது’.
இரகசியத்தைத் தெளிவாக்குதல்
4. பரிசுத்த இரகசியம் எவ்வாறு பொ.ச. 29-ல் வெளிப்பட ஆரம்பித்தது?
4 கடைசியாக, நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பின், பிரகாசம் பளிச்சிடத் தொடங்கியது! எவ்விதத்தில்? பொ.ச. 29-ல் யோவான் நாசரேத்தூர் இயேசுவை யோர்தான் நதியில் முழுக்காட்டினான். அப்பொழுது பரலோகத்திலிருந்து கடவுளுடைய சத்தம் அறிக்கையிட்டது: “இவர் என் நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” (மத்தேயு 3:17) ஆ, இவ்வளவு காலம் சென்றபின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து இதோ வந்திருக்கிறார்! பரிசுத்த இரகசியம் அதனுடைய மகிமையான எல்லாக் கோணங்களில் வெளிப்பட ஆரம்பித்தது—தேவ பக்தியின் விஷயம் உட்பட.
5. “தேவ பக்தி” என்றால் என்ன? அதன்படி நடப்பவர்களை அது எவ்வாறு பாதிக்கிறது?
5 ‘தேவ பக்தி’ என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளுகிறோம்? கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களிலே இப்பதம் குறிப்பாக 20 தடவைகள் வருகிறது, அதில் பாதிக்கும் அதிகமான தடவை பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு நிரூபங்களில் வருகிறது. வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) “தேவ பக்தியை” “அவருடைய சர்வலோக ராஜாதிகாரத்துக்கு உத்தமத்தன்மையோடு, கடவுளுக்கு கொடுக்கப்படும் மரியாதை, வணக்கம், மற்றும் சேவை” என்பதாக விளக்குகிறது. ஆழ்ந்த மரியாதை, அவருடைய மகத்துவம், அவருடைய நித்தியத்துவம், அவருடைய மகிமையான சிருஷ்டிப்பின் பல்வகைகளினால் தூண்டப்படும் ஆச்சரியத்தால் அவரிடமாக இழுக்கப்படும் இருதயத்திலிருந்து புறப்படுகிறது, போற்றுதலுள்ள மனிதர்கள் மீது அவர் பொழிகிற ஆவிக்குரிய, மற்றும் பொருள் சம்பந்தமான ஈவுகளுக்காக நன்றி உணர்வுள்ள இருயத்திலிருந்தும் அது எழும்புகிறது. உண்மையாகவே, தேவபக்திக்கேற்ற விதத்தில் நடக்கும் நம்மில் ஒவ்வொருவரும், சங்கீதக்காரன் சங்கீதம் 104:1-ல் (NW) சொல்லுகிறபடி: “என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்” என்று சொல்லக்கூடும்.
6. (எ) கிறிஸ்தவ மண்டல கோயில்களில் வெறுமென உட்கார்ந்துகொண்டிருப்பவர்களிலிருந்து யெகோவாவை வணங்குபவர்கள் எவ்வாறு வித்தியாசமானவர்கள்? (பி) பவுல் ரோமர் 11:33, 34-ல் என்ன சொல்லுகிறார்? இதன் காரணமாக என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
6 கடவுளிடம் நாம் கொண்டுள்ள பக்தி வெளிக்காட்டப்பட வேண்டும். அது கிரியைகளின் மூலமாக வெளிப்படுகிறது. இவ்விஷயத்தில் உண்மையான தேவனாகிய யெகோவாவை வணங்குபவர்கள் வாடிக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவ மண்டலக் கோயில்களில் வெறுமென உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களிலிருந்து அதிக வித்தியாசமானவர்கள். பூமியில் உள்ள அநேக மக்களுக்கு, மதம் என்ற ஒன்று அவர்களுக்கு இன்னும் இருந்தாலும், அது ஒரு சடங்காசாரமாக மட்டுமே இருக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள கறைப்பட்டுள்ள உலகத்துக்கு இசைவான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்க, புனிதமாகக் காணப்படும்படி மேலே போட்டுக்கொள்ளும் ஒரு போர்வையாக மட்டுமே அது உள்ளது. கடவுள் யார் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. நிச்சயமாக இப்படிப்பட்ட ஆட்கள், ‘அறியப்படாத தேவனை’ வழிபட்டு வந்த அத்தேனியரிடம் அப்போஸ்தலர் 17:23-ல் பவுல் சொன்ன வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பது அவசியம்: “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற (தேவபக்தி காட்டுகிற, NW) அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” அப்படிப்பட்ட மகத்துவமுள்ள தேவனைப் பவுல் ரோமர் 11:33, 34-ல் “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ‘யெகோவாவுடைய (NW) சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக் காரனாயிருந்தவன் யார்?’” அப்படியானால், கடவுளுடைய வழிகளை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? ‘தேவ பக்தியின் பரிசுத்த இரகசியத்தைக்’ கற்றுக்கொள்வதன் மூலமாகவே. ஆனால் அதை எப்படி செய்வது?
7. “தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடி மகா மேன்மையுள்ளது” என்று ஏன் சொல்லப்பட்டது?
7 1 தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய வீட்டில் உள்ள உத்தரவாதமான ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறான். 15-ம் வசனத்தில் அந்த வீடு “ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” என்று வருணிக்கப்படுகிறது. பிறகு பவுல் 16-ம் வசனத்தில்: “தேவ பக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையானது” என்று சேர்த்து எழுதினான். மகா மேன்மையானதுதான், ஏனெனில் யெகோவா இந்த இரகசியத்தை வெளிப்படுத்தவும், உண்மையில் தேவ பக்தி என்றால் என்னவென்பதை நடைமுறையில் காட்டவும், மெய் வணக்கத்தில் அது ஏன் அவ்வளவு முக்கியம், அது எப்படி ஓர் இயக்க மையம் போன்றிருக்கிறது என்பதை விளக்கவும் தன் ஒரே பேறான குமாரனை பூமிக்கு அனுப்பினார். இந்தத் தேவ பக்தியின் பரிசுத்த இரகசியம் இயேசு பூமியில் வாழ்ந்த வாழ்க்கை முறையின் மூலம் வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. யெகோவாவை நேசிக்கும் யாவரும், தேவ பக்திக்கு முன்மாதிரியாக இருந்த கிறிஸ்துவின் பேரில் தங்களுடைய விசுவாசத்தையும் வாழ்க்கைகளையும் கட்டியமைக்க வேண்டும். ஆகவே, எப்படி இயேசு ‘தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தை’ விளக்கிக் காண்பித்தார்?
ஆறு அம்சங்கள்
8. (எ) 1 தீமோத்தேயு 3:16-ல் பவுல் விவரிக்கும் பரிசுத்த இரகசியத்தின் ஆறு அம்சங்கள் யாவை? (பி) வெளிப்பட்ட “அவர்” யார்?
8 தெய்வீக ஏவுதலினாலே பவுல் நம் கேள்விக்கு விடையளிக்கிறான். இங்கே 1 தீமோத்தேயு 3:16-ல் இப்பரிசுத்த இரகசியத்தின் ஆறு அம்சங்களை விவரிக்கிறான். அவன் சொல்லுகிறான்: “அவர் (1) மாம்சத்திலே வெளிப்பட்டார். (2) ஆவியிலே நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார். (3) தேவதூதர்களுக்குத் தோற்றமளித்தார். (4) புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார். (5) உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார். (6) மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.” வெளிப்பட்ட “அவர்” யார்? சந்தேகமில்லாமல் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வந்த வாக்குப்பண்ணப்பட்ட இயேசுவாகிய அவர்தான். அவர் பரிசுத்த இரகசியத்திற்கு மையமாக இருப்பது. உண்மையாகவே அதை மேன்மையானதாக்குகிறது.
9. 1 தீமோத்தேயு 3:16 “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” என்று வாசிக்கும்படி இருக்கக்கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
9 1 தீமோத்தேயு 3:16-ல் சொல்லப்பட்ட ‘அவர்’ தேவன் தாமே என்று பரிசுத்த இரகசியத்தைப் புரிந்துகொள்வதில் திரித்துவக்காரர் குழப்ப முயலுகின்றனர். “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” என்று வாசிக்கிற கிங் ஜேம்ஸ் பைபிளை இதற்கு ஆதாரமாக கொண்டிருக்கிறார்கள். என்றபோதிலும் பெரும்பாலான நம்பத்தகுந்த கிரேக்க கைப்பிரதிகள் என்ன சொல்லுகின்றன? அவை “தேவன்” என்று சொல்லாமல், மறுபெயர் அல்லது சுட்டுப்பெயர் ஆகிய “அவர்” என்றே உபயோகப்படுத்துகின்றன. வசனங்களை ஆராய்ச்சி செய்பவர்கள் இந்த வசனத்திலே “தேவன்” என்று நுழைத்திருப்பது கையெழுத்துப் பிரதி எழுதினவர்களின் தவறு என்று இப்பொழுது ஒத்துக்கொள்ளுகின்றனர். இவ்விதமாக அமெரிக்கன் ஸ்டான்டர்டு மொழிபெயர்ப்பும், தி நியு இங்கிலீஷ் பைபிள் மற்றும் புதிய உலக மொழிபெயர்ப்பு போன்ற சமீப காலத்திய மொழிபெயர்ப்புகள் சரியாக இவ்வாறு வாசிக்கின்றன: “அவர் மாம்சத்திலே வெளிப்பட்டார்.” இல்லை, மாம்சத்திலே வெளிப்பட்டது தேவன்தாமே அல்ல. அதற்குப் பதிலாக அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின பிரகாரம் அவருடைய நேச குமாரனும், முதல் சிருஷ்டியுமானவரே வெளிப்பட்டார்: “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”—யோவான் 1:14.
“மாம்சத்திலே வெளிப்பட்டார்”
10. (எ) இயேசுவின் முழுக்காட்டுதலின்போது பரிசுத்த இரகசியத்தின் முதல் அம்சம் எவ்வாறு தெளிவாகியது? (பி) இயேசு ஏன் “பிந்தின ஆதா”மானார்?
10 இயேசுவின் முழுக்காட்டுதலின்போது பரிசுத்த இரகசியத்தின் முதல் அம்சம் தெளிவாகியது: கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரனாக இயேசு “மாம்சத்திலே வெளிப்பட்டார்.” யெகோவா தேவன் தன் குமாரனின் ஜீவனை பரலோகத்திலிருந்து மரியாளின் கர்ப்பப்பைக்கு மாற்றி இவ்விதமாக இயேசு ஒரு பரிபூரண மனிதனாக மாம்சத்தில் பிறக்கும்படி செய்தார். இவ்விதமாக 1 கொரிந்தியர் 15:45-47 காண்பிக்கிறபடி, இயேசு இரண்டாவதான அல்லது ‘பிந்தின’ ஆதாமாக முதல் ஆதாமுக்கு சரிசமமானவராக ஒரு பரிபூரண மானிட ஆத்துமாவாக ஆனார். என்ன காரணத்துக்காக? முதல் தீமோத்தேயு 2:5, 6 “பிந்தின ஆதாமை” “எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு” என்று அவரைக் குறிப்பிடுகிறது. ஒரு பரிபூரண மானிட பலியின் இந்தச் சட்டப்பூர்வமான ஆதாரத்தின் பேரில், இயேசு அவருடைய ராஜ்யத்தில் அவரோடு உடன் சுதந்தரர்களாக ஆகும் 1,44,000 மானிடர்களுடன் செய்யப்படும் புதிய உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக இருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 14:1-3.
11. இயேசுவின் மீட்கும் பலியின் நன்மைகள் யாருக்கும்கூட செல்லுகிறது?
11 இயேசுவின் பலிக்குரிய மரணத்திலிருந்து மற்றவர்களும்கூட பலன் அடைவார்களா? நிச்சயமாகவே ஆம்! முதல் யோவான் 2:2 இயேசு, “நம்முடைய (யோவானைப் போன்று அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுடைய) பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்,” என்று சொல்லுகிறது. இயேசுவினுடைய மீட்கும்பொருளின் பலன்கள் 1,44,000 அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக அநேகரை உட்படுத்துமளவுக்கு மனிதகுலத்தின் முழு உலகத்துக்குமே நன்மை அளிக்கிறது. இப்பொழுது உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற “ஒரு திரள்கூட்டமும்,” பரதீஸான பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கானவர்களும், இயேசுவின் மீட்கும் பொருளின் பலியின் பேரில் வைக்கும் விசுவாசத்தின் ஆதாரத்திலே நித்திய ஜீவனைப் பெறுவார்கள். வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளபடி ஏற்கெனவே திரள்கூட்டத்தினர் ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசத்தை வைப்பதன் மூலம் தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுத்திருக்கின்றனர். கடவுளோடு கொண்டுள்ள நட்பின் காரியத்தில் அவர்கள் நீதிமான்களாக எண்ணப்படுகின்றனர். மகிழ்ச்சியோடு, பரிசுத்த இரகசியத்தின் பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொண்டு, இயேசுவின் மாதிரிக்கு இசைய தேவபக்தியை வெளிக்காட்டுகின்றனர்!
மற்ற அம்சங்கள்
12. இயேசு எப்படி, “ஆவியிலே நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார்”?
12 1 தீமோத்தேயு 3:16-ல் உள்ள இரண்டாவது அம்சத்தைப் பற்றி இப்பொழுது என்ன? இயேசு “ஆவியிலே நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார்.” ஆனால் எப்படி? உத்தமத்தைக் காத்துக்கொண்ட குமாரனை, ஆவிக்குரிய ஜீவனுக்கு மரித்தோரிலிருந்து யெகோவா எழுப்பினதன் மூலமாக. இயேசு முற்றிலுமாக நீதியுள்ளவர், மேலும் மேன்மையான ஸ்தானங்களுக்குத் தகுதியுடையவர் என்று தேவன் அறிக்கையிடுவதற்கு ஒப்பாக இது இருந்தது. ரோமர் 1:5 சொல்லுகிறபடி இயேசு, “பரிசுத்தமுள்ள ஆவியின்படி, தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரனுமாயிருக்கிறார்.” இதை உறுதிப்படுத்துகிறவராய் பேதுரு தன் முதல் கடிதம் 3-ல் அதிகாரம் 18-ம் வசனத்தில்: “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” என்று சொல்லுகிறான். இயேசுவினுடைய தேவபக்தியின் முன்மாதிரி உங்களைத் தேவனிடமாக நடத்திச் செல்கிறதா?
13. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு எந்தத் தூதர்களுக்குத் தோற்றமளித்தார்? எப்படிப்பட்ட செய்தியை அவர்களுக்கு அவர் பிரசங்கித்தார்?
13 1 தீமோத்தேயு 3:16-ல் பவுல் தொடர்ந்து பரிசுத்த இரகசியத்தின் மூன்றாவது அம்சத்தைக் குறிப்பிடுகிறவராய் இயேசு “தேவதூதர்களுக்குத் தோற்றமளித்தார்” என்று சொல்லுகிறான். இந்தத் தேவ தூதர்கள் யாராக இருக்கலாம்? “ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்ட இயேசுவைக்” குறித்து 1 பேதுரு 3:19, 20-ல் பேதுரு எழுதுகிறான்: “அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்.” யூதா 6-ம் வசனத்தின்படி அந்த ஆவிகள் “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய [பரலோக] வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்.” அவர்கள் பெண்களோடு தவறான பாலுறவை அனுபவிக்கும்படி மாம்ச சரீரத்தை எடுத்துக் கொண்டார்கள். ஆவி மண்டலத்துக்குத் திரும்பச் செல்லும்படி பிரளயம் அந்தத் தூதர்களை வற்புறுத்தியபோது, டார்டரஸ் என்ற படுதாழ்வான ஒரு நிலைக்குள் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். (2 பேதுரு 2:4) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அவர்களுக்கு பிரசங்கித்தார். அது ஓர் இரட்சிப்பின் செய்தியா? நிச்சயமாகவே இல்லை! அதற்குப் பதிலாக இயேசு அவர்களுடைய துன்மார்க்கத்தை தேவபக்திக்கு நேர்மாறான ஒன்றாகக் கண்டித்தார். இன்றைக்குக் கடவுளுடைய ஜனங்களில் யாரேனும் இன ஒழுக்கக்கேட்டைக் குறித்ததில் விளையாடுவார்களேயானால் இந்தத் தூதர்களின் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பை எச்சரிக்கையாகக்கொள்ள வேண்டும்!
14. இயேசு எவ்வாறு “புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்”?
14 1 தீமோத்தேயு 3:16-ன் நான்காவது அம்சம், இயேசு “புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்.” இது எப்படி நிறைவேறியுள்ளது? அவரைக் கைது செய்வதற்கு சற்று முன்பு இயேசு தன் அப்போஸ்தலர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்றார். (யோவான் 14:12) அதன் பிறகு குறுகிய காலத்தில் பொ.ச. 33 பெந்தெகொஸ்தின்போது, இயேசு தன் சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றினார், அதன் பின்பு, “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்” என்ற கிளர்ச்சியூட்டும் செய்தி யூதர்களிடம் பிரசங்கிக்கப்பட்டது. பிறகு சமாரியர்களுங்கூட தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளத் துவங்கினர். (அப்போஸ்தலர் 2:32; 8:14-17) பிறகு பொ.ச. 36-ல் பேதுரு கொர்நேலியுவிடமும் அவன் வீட்டிலே கூடியிருந்தவர்களிடமும் பிரசங்கித்தான். இவ்விதமாக இயேசுவைப் பற்றிய நற்செய்தி “புறஜாதிகளிடத்திலும்” அதாவது யூதரல்லாதவர்கள் மத்தியிலும்கூட “பிரசங்கிக்கப்பட” ஆரம்பித்தது. அவர்களும்கூட பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள்.
15. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தேவ பக்தியின் பரிசுத்த இரகசியத்தை நன்கு கற்றுக்கொண்டிருந்தனர் என்பதை எது நிரூபிக்கிறது?
15 அப்போஸ்தலர் 12:24-ல் அறிக்கை செய்துள்ளபடி, “தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று.” கிரேக்க நாட்டின் வடக்குப் பகுதியில், எதிர்ப்பவர்கள் அங்கு இன்றுவரை கத்துவதைப்போல அன்றும் கத்தினார்கள் என்று அப்போஸ்தலர் 17:6 கூறுகிறது: “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.” 30 வருடத்திற்குள்ளாக பவுல் ரோமிலிருந்து நற்செய்தியானது “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என்று எழுதக்கூடியவனாய் இருந்தான். (கொலோசெயர் 1:23) அக்காலத்திய கிறிஸ்தவர்கள் தேவ பக்தியின் பரிசுத்த இரகசியத்தை நன்கு கற்றுக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு வைராக்கியமாக அதைப் பொருத்திப் பிரயோகித்தனர்! அப்படியே நாமும்கூட ராஜ்ய பிரசங்கித்தலின் உச்சக்கட்டத்தில் இந்நாளிலே அதைக் கற்று, அப்பியாசித்து வருவோமாக!
16. பரிசுத்த இரகசியத்தின் ஐந்தாவது அம்சம் என்ன, எந்தச் செயல் அதைத் தெளிவாக்கியது?
16 அந்த முதல் நூற்றாண்டு பிரசங்கித்தலுக்கு இணங்க, 1 தீமோத்தேயு 3:16-ன் பரிசுத்த இரகசியத்தின் ஐந்தாவது அம்சம் குறிப்பாகத் தெளிவாகியது. இப்பொழுது, இயேசு, “உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்.” பவுலையும் தீமோத்தேயுவையும் உட்பட, வைராக்கியமுள்ள மிஷனரிகள் காட்டின கிறிஸ்துவைப் போன்ற தேவ பக்தியின் விளைவாக இது இருந்திருக்கிறது. இவர்கள் மூலமாக நற்செய்தி சிறிய ஆசியா, ஐரோப்பா, ஒருவேளை ஸ்பெய்ன் வரைக்கும்கூட, மேலும், பேதுரு பாபிலோனிலே சேவை செய்தபோது முழுக்காட்டப்பட்ட எத்தியோப்பிய மனிதனின் வாய் வழியாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும்கூட பரவியது.
17. தற்காலத்திய உலகம் முழுவதிலும் ஏன் இயேசு விசுவாசிக்கப்படக்கூடியவராக இருக்கிறார்?
17 நம் நாளைப் பற்றி என்ன? 1919 முதற்கொண்டு அபிஷேகம் பண்ணப்பட்ட மீந்தவர்கள் தேவபக்தியை சிறந்த முறையில் காட்டி வருகின்றனர். இந்த அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் இயேசுவினால் போடப்பட்ட விசுவாசத்தின் அஸ்திபாரத்தின் பேரில் நல்ல விதமாகக் கட்டியிருக்கின்றனர். விசேஷமாக 1935 முதற்கொண்டு, ஒரு திரள் கூட்டத்தைச் சேர்ப்பதில் முனைந்திருந்திருக்கின்றனர். இத்திரள் கூட்டத்தினர் “மகா உபத்திரவத்தி”னூடாக சென்று பரதீஸான பூமியில் என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்பைக் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (வெளிப்படுத்துதல் 7:9, 14) இவ்விதமாக, இயேசுவின் பேரில் கவனத்தைக் குவிக்கும் இந்த ‘நற்செய்தி’ தற்காலத்திய உலகம் முழுவதும் “விசுவாசிக்கப்”படுவதாய் இருக்கிறது. தேவ பக்தியில் 37,00,000 அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதுமாக இப்பொழுது பிரசங்கித்துக்கொண்டும் செழித்தோங்கிக் கொண்டும் இருக்கின்றனர்!
18. இயேசு எவ்வாறு “மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்”?
18 பரிசுத்த இரகசியத்தின் இன்னொரு அம்சம் எஞ்சியிருக்கிறது, ஆறாவது: இயேசு “மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.” இயேசு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு 40 நாள் வரைக்கும் மாம்ச சரீரத்திலே சீஷர்களுக்குத் தோன்றி “தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை” அவர்களுடனே பேசினார். பிறகு அவர் பரலோகத்துக்கு ஏறிப்போனார். (அப்போஸ்தலர் 1:3, 6-9) இவ்வாறு யோவான் 17:1-5-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அவருடைய ஜெபத்துக்கு உத்தரவு கிடைத்தது: “பிதாவே . . . உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். . . . பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். . . . பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடம் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.”
19. இயேசு பரலோகத்திற்குத் திரும்பச் சென்றபோது என்ன உண்டாயிருந்திருக்கும்?
19 இயேசுவானவர் திரும்பப் பரலோகம் சென்றபோது எவ்வளவு மகிழ்ச்சி உண்டாயிருந்திருக்கும்! வெகு காலத்துக்கு முன்பாக யெகோவா பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது, “தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்.” (யோபு 38:7) யெகோவாவின் அரசுரிமையை உத்தமத் தன்மையோடு காத்து, ஆதரித்த வீரர் தங்கள் நடுவில் மறுபடியுமாக வந்து சேருவதைக் குறித்து இன்னும் அதிகமாகவே அந்தத் தேவதூத சேனைகள் குதூகலம் அடைந்திருப்பார்கள்!
20. இயேசு ஏன் அவ்வளவு சிறந்த நாமத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்? அவர் பூமியிலிருக்கும்போது என்ன செய்தார்?
20 எபிரெயர் 1:3, 4-ல் பவுல் வெற்றிக்கொண்ட இயேசுவைப் பற்றி சொல்லுகிறான்: “நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். இவர் தேவ தூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தை சுதந்தரித்துக் கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.” அநீதியின்பேரில் வெற்றி கொண்டதன் காரணமாக கிறிஸ்து அந்த நாமத்தைப் பெற்றார். நிச்சயமாகவே, இந்தத் தேவ குமாரன் இங்கே பூமியிலே தேவபக்தியின் போக்கிற்கு முன்னோடியாக வழியைத் திறந்து மாதிரியை வைத்தார். நித்திய ஜீவனைப் பெறப்போகிற அனைவருக்கும் ஒரு மாதிரியையும் வைத்துப்போனார். பரலோகத்திலே கடவுளுடைய வலது பாரிசத்திற்கு இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதோடு “தேவபக்திக்குரிய பரிசுத்த இரகசியம்” அதனுடைய எல்லா அம்சங்களிலும் வெளியாக்கப்பட்டுவிட்டது. (w90 1⁄15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ “தேவ பக்தி” என்றால் என்ன?
◻ இயேசு எவ்வாறு “மாம்சத்திலே வெளிப்பட்டு” அதன் பிறகு “ஆவியிலே நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார்”?
◻ எந்தத் தூதர்களுக்கு இயேசு தோற்றமளித்தார், மற்றும் என்ன செய்தியோடு?
◻ இயேசு எவ்வாறு “புறஜாதியாரிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,” எவ்வாறு “உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்”?
◻ இயேசு எப்பொழுது “மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்,” தேவபக்தியைக் குறித்து என்ன செய்த பிறகு?