பொய் மதத்திலிருந்து விடுபட்டு வருதல்
“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள்,” என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்கிறார், “அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”—2 கொரிந்தியர் 6:17.
1. இயேசுவோடு சாத்தான் என்ன பேரம் செய்ய முயற்சி செய்தான்? அவன் இந்த அளிப்பைச் செய்தது என்ன இரண்டு காரியங்களை நமக்குக் கற்பிக்கிறது?
“நீர் சாஷ்டங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்.” பொய் மதம் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிற்பாடு இந்த அளிப்பு செய்யப்பட்ட போதிலும், பொய் மதத்துக்குப் பின்னால் இருப்பது யார் என்பதையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் புரிந்துக்கொள்வதற்குரிய அடிப்படைக் குறிப்பை இது அளிக்கிறது. பொ.ச. 29-ம் ஆண்டின் பிற்பகுதியில், பிசாசு ஒரு வணக்கச் செயலுக்குப் பரிமாற்றமாக, இயேசுவுக்கு உலக ராஜ்யங்கள் அனைத்தையும் அளிக்க முன்வந்தான். இந்த நிகழ்ச்சி, இரண்டு முக்கிய காரியங்களை நமக்குச் சொல்கிறது: கொடுப்பதற்கு இவ்வுலகின் ராஜ்யங்கள் சாத்தானுடையது மற்றும் பொய் மதத்தின் முடிவான நோக்கம் பிசாசு வணக்கமாகும்.—மத்தேயு 4:8, 9.
2. மத்தேயு 4:10-லுள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
2 இயேசு தம்முடைய பதிலின் மூலமாக பொய் மதத்தை தள்ளிவிட்டது மட்டுமல்லாமல், மெய் மதம் எதை உட்படுத்துகிறது என்பதையும்கூட காண்பித்தார். அவர் கூறினார்: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் [யெகோவாவைப், NW] பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.” (மத்தேயு 4:10) ஆகவே மெய் மதத்தின் நோக்கம், ஒரே மெய் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதாக இருக்கிறது. அது விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதையும் உட்படுத்துகிறது.
பொய் மதத்தின் ஆரம்பம்
3. (எ) பூமியில் பொய் மதம் எப்போது எவ்வாறு ஆரம்பமானது? (பி) பதிவு செய்யப்பட்ட முதல் மதசம்பந்தமான சகிப்பின்மைச் செயல் என்ன? மத சம்பந்தமான துன்புறுத்தல் அப்போது முதற்கொண்டு எவ்வாறு தொடர்ந்து வந்திருக்கிறது?
3 முதல் மனிதர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய் “நன்மை தீமை”யைத் தாங்களாகவே தீர்மானிக்கும்படியான சாத்தானின் யோசனையை ஏற்றுக்கொண்ட போது, பொய் மதம் பூமியில் ஆரம்பமானது. (ஆதியாகமம் 3:5) சாத்தானின் யோசனையை ஏற்றுக்கொண்ட போது அவர்கள் யெகோவாவின் நீதியான அரசுரிமையை ஏற்க மறுத்து சரியான வணக்கமாகிய மெய் மதத்தை உதறித் தள்ளினார்கள். அவர்களே, ‘தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்த’ முதல் மனிதராவர். (ரோமர் 1:25) அவர்கள் அறியாமலே வணங்கத் தெரிந்து கொண்ட அந்தச் சிருஷ்டி “பழைய பாம்பு,” பிசாசாகிய சாத்தானேயன்றி வேறு எவரும் இல்லை. (வெளிப்படுத்துதல் 12:9) அவர்களுடைய மூத்த மகன் காயீன் யெகோவாவின் தயவான புத்திமதியைப் பின்பற்ற மறுத்து, இவ்விதமாக அவருடைய அரசுரிமைக்கு எதிராக கலகஞ்செய்தான். அறிந்தோ அறியாமலோ காயீன், “பொல்லாங்கனுடைய [சாத்தானுடைய] ஒரு பிள்ளையாக” மாறி, பிசாசு வணக்கத்தைக் கடைபிடிக்கிறவனாக ஆனான். மெய் வணக்கமாகிய மெய் மதத்தை கடைபிடித்த தன்னுடைய இளைய சகோதரன் ஆபேலை அவன் கொலை செய்தான். (1 யோவான் 3:12, திருத்திய ஆங்கில பைபிள்; ஆதியாகமம் 4:3–8; எபிரெயர் 11:4) மத சம்பந்தமான சகிப்பின்மையின் காரணமாக சிந்தப்பட்ட முதல் இரத்தம் ஆபேலினுடையதாக இருந்தது. பொய் மதம் இன்றைய நாள் வரையாக தொடர்ந்து குற்றமற்றவரின் இரத்தத்தைச் சிந்தி வருவது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.—மத்தேயு 23:29–35; 24:3, 9 பார்க்கவும்.
4. நோவாவின் விஷயத்தில், மெய் மதத்தின் தன்மையை என்ன வேதவசனங்கள் விளக்குகின்றன?
4 ஜலப்பிரளயத்துக்கு முன்பு, சாத்தான் மனிதகுலத்தில் பெரும்பாலானவர்களை மெய் மதத்திலிருந்து விலகிச் செல்ல செய்வதில் வெற்றியடைந்தான். என்றபோதிலும் நோவாவுக்கு, “கர்த்தருடைய [யெகோவாவுடைய NW) கண்களில் கிருபை கிடைத்தது.” ஏன்? ஏனென்றால், “நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.” வேறு வார்த்தைகளில், அவர் மெய் வணக்கத்தை கடைபிடித்தார். மெய் மதம் ஒரு புறஆசாரமாகவோ அல்லது சடங்காகவோ இல்லை, ஆனால் ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. அது யெகோவாவில் விசுவாசம் வைத்து, கீழ்ப்படிதலோடு அவரை சேவிப்பதை, ‘அவரோடு சஞ்சரிப்பதை’ உட்படுத்துகிறது. நோவா இதைச் செய்தார்.—ஆதியாகமம் 6:8, 9, 22; 7:1; எபிரெயர் 11:6, 7.
5. (எ) பிசாசு ஜலப்பிரளயத்துக்குப் பின் எதை ஸ்தாபிக்க முயற்சி செய்தான்? எவ்வாறு? (பி) பிசாசின் திட்டத்தை யெகோவா எவ்விதமாகக் குலைத்துப்போட்டார்? விளைவு என்ன?
5 ஜலப்பிரளயத்துக்குப் பின் விரைவிலேயே, பிசாசு யெகோவாவுக்கு எதிராக இருக்கும் ஒரு வணக்க முறையில் மனித குலம் முழுவதையும் ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியில், “யெகோவாவுக்கு எதிராக” இருப்பதில் பேர் போன மனிதனாகிய நிம்ரோதுவை பயன்படுத்தினான். (ஆதியாகமம் 10:8, 9; 11:2–4) இது அவனுடைய வணக்கத்தார் கட்டின நகரத்தையும் கோபுரத்தையும் மையமாகக் கொண்ட ஒரே ஒன்றுபட்ட பொய் மதமாக, ஐக்கியப்பட்ட பிசாசு வணக்கமாக இருந்திருக்கும். முழு மனித குலத்தாலும் அப்போது பேசப்பட்ட “ஒரே பாஷையை” குழப்பிவிடுவதன் மூலம் யெகோவா இந்தத் திட்டத்தைத் குலைத்துப்போட்டார். (ஆதியாகமம் 11:5–9) ஆகவே இந்த நகரம் பாபேல் என்றும் பின்னால் பாபிலோன் என்றும் அழைக்கப்படலானது, இரண்டு பெயர்களுக்குமே “குழப்பம்” என்பது அர்த்தமாகும். இந்த மொழிச்சார்ந்த குழப்பம் மனிதகுலத்தை பூமி முழுவதிலும் சிதறிப் போகச் செய்தது.
6. (எ) சாத்தானின் வணக்கத்தார், சிதறிப் போவதற்கு முன்பாக பாபிலோனில், அவர்களில் என்ன மத சம்பந்தமான கருத்துகள் புகட்டப்பட்டிருந்தன? (பி) உலகம் முழுவதிலுமுள்ள மதங்கள் ஒத்த நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? (சி) பாபிலோன் என்ன சாத்தானிய நோக்கத்தை சேவித்தது? அந்தப் பண்டைய நகரம் எதற்கு அடையாளமானது?
6 என்றபோதிலும், புராணங்கள் மற்றும் மதத்தின் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கையில், யெகோவா மனிதகுலத்தை இவ்விதமாகச் சிதறிப் போகச் செய்வதற்கு முன்பாக, சாத்தான் தன்னுடைய வணக்கத்தாரின் மனங்களில் பொய் மதத்தின் ஒரு சில அடிப்படை தத்துவங்களை சிறிது சிறிதாகப் புகட்டியிருக்கிறான் என்பது தெரிகிறது. மரணத்துக்குப் பின் ஆத்துமா பிழைத்திருக்கிறது, மரித்தோருக்கான பயம், நரக இயல்புள்ள கீழுலகம் என்ற மத கருத்துகளும் திரியேகத் தொகுதியில் சேர்க்கப்பட்ட எண்ணிலடங்கா தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் வணக்கமும் சேர்ந்து இவைகளில் இடம்பெற்றிருந்தன. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் பல்வேறு மொழி தொகுதியினரால் பூமி முழுவதிலும் எடுத்துச் செல்லப்பட்டன. காலப்போக்கில், இந்த அடிப்படை கருத்துகள் மாறுதல்களுக்கு உள்ளாயின. மொத்தத்தில், உலகின் எல்லாப் பாகங்களிலும் அவையே பொய் மதத்தின் அடிப்படை அமைப்பை உண்டுபண்ணுகின்றன. பாபிலோனில் தன் உலக தலைநகரைக் கொண்ட ஓர் ஐக்கியப்பட்ட பொய் மதத்தை உருவாக்கும் முயற்சியில் தடை செய்யப்பட்டபோதிலும், சாத்தான் பாபிலோனிய தூண்டுதலாகவும் யெகோவாவிடமிருந்து வணக்கத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ள வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கும் மாறுபட்ட இயல்புள்ள பொய் வணக்கத்திலும் திருப்தியடைந்தான். பாபிலோன் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக விக்கிரகாராதனை, மாயவித்தை, மாந்திரீகம் மற்றும் வானசாஸ்திரத்தின்—பொய் மதத்தின் இன்றியமையாத ஆக்கக்கூறுகளின்—செல்வாக்குமிக்க மையமாக இருந்து வந்தது. வெளிப்படுத்துதல் புத்தகம் பொய் மத உலகப் பேரரசை மகா பாபிலோன் என்று அழைக்கப்பட்ட ஓர் அசுத்தமான வேசியாக அடையாளப்படுத்துவது ஆச்சரியமாயில்லை.—வெளிப்படுத்துதல் 17:1–5.
மெய் மதம்
7. (எ) மொழியின் குழப்பத்தால் மெய் வணக்கம் ஏன் பாதிக்கப்படவில்லை? (பி) “விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்” என்று அறியப்பட்டவர் யார்? ஏன்?
7 கருத்துகளை வெளியிடும் மனிதகுலத்தின் முறையை யெகோவா பாபேலில் குழப்பிய போது, மெய் மதம் பாதிக்கப்படாமல் நிலைத்திருந்தது தெளிவாக இருக்கிறது. ஜலப்பிரளயத்துக்கு முன்பு ஆபேல், ஏனோக்கு, நோவா, நோவாவின் மனைவி, நோவாவின் குமாரர்கள் மற்றும் மருமகள்கள் போன்ற உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் மெய் வணக்கத்தை கடைபிடித்து வந்தனர். ஜலப்பிரளயத்துக்குப் பின்பு, மெய் வணக்கம் நோவாவின் குமாரன் சேமின் வம்சா வழியில் பாதுகாக்கப்பட்டது. சேமின் வம்சத்தானாகிய ஆபிரகாம், மெய் வணக்கத்தை கடைபிடித்து “விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்” என்று அறியப்படலானார். (ரோமர் 4:11) அவருடைய விசுவாசம் கிரியைகளினால் ஆதரிக்கப்பட்டது. (யாக்கோபு 2:21–23) அவருடைய மதம் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது.
8. (எ) பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில், மெய் மதம் எவ்வாறு பொய் மதத்தோடு நேருக்கு நேர் நிறுத்தப்பட்டது? என்ன விளைவோடு? (பி) தம்முடைய மெய் வணக்கத்தின் சம்பந்தமாக யெகோவா என்ன புதிய ஏற்பாட்டைத் துவக்கி வைத்தார்?
8 மெய் வணக்கம் தொடர்ந்து ஆபிரகாமின் சந்ததியின் வம்சாவழியில்—ஈசாக்கு, யாக்கோபு (அல்லது இஸ்ரவேல்), மற்றும் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் தோன்றிய யாக்கோபின் 12 குமாரர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பொ.ச.மு. 16-வது நூற்றாண்டின் முடிவில் ஈசாக்கின் மூலமாக பிறந்த ஆபிரகாமின் சந்ததியார் பகைமையான, புறமத சுற்றுப்புறமான எகிப்தில், அடிமைகளாக தாழ்த்தப்பட்ட ஒரு நிலையில் தூய்மையான மதத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தார்கள். யெகோவா, பொய் மதத்தில் ஆழ்ந்து கிடந்த ஒரு தேசமாகிய எகிப்தின் நுகத்திலிருந்து தம்முடைய வணக்கத்தாரை விடுவித்துக்கொண்டு வர லேவியின் கோத்திரத்தானாகிய உண்மையுள்ள ஊழியன் மோசேயை பயன்படுத்தினார். மோசேயின் மூலமாக, யெகோவா இஸ்ரவேலரோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தி அவர்களைத் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக்கினார். அந்தச் சமயத்தில், யெகோவா, தற்காலிகமாக ஓர் ஆசாரியத்துவத்தினால் செயல்படுத்தப்பட்ட பலிகளின் ஓர் அமைப்புமுறையின் வரம்புக்குள்ளும், முதலில் இடம் பெயர்த்தெடுத்துச் செல்லத்தக்க வாசஸ்தலத்தோடும் பின்னால் எருசலேமில் ஓர் ஆலயத்தோடும் தம்முடைய வணக்கத்தை எழுதப்பட்ட சட்டங்களின் ஒரு முறைக்குள் ஒழுங்குபடுத்தி அமைத்தார்.
9. (எ)நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு முன்னால் மெய் வணக்கம் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது? (பி) நியாயப்பிரமாணத்தின் சடப்பொருளாலான அம்சங்கள் நிரந்தரமானவை அல்ல என்பதை இயேசு எவ்விதமாகக் காண்பித்தார்?
9 என்றபோதிலும், இந்தச் சடப்பொருள் சார்ந்த அம்சங்கள், மெய் வணக்கத்தின் நிரந்தர ஆக்கக்கூறுகளாகும்படியாக கருதப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். நியாயப்பிரமாணம் “வருங்காரியங்களுக்கு நிழலாய்” இருந்தது. (கொலோசெயர் 2:17; எபிரெயர் 9:8–10; 10:1) மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு முன்பு, கோத்திர பிதாக்களின் காலங்களில், குடும்பத் தலைவர்கள் அவர்கள் எழுப்பியிருந்த பலிபீடங்களின் மீது பலிகளைச் செலுத்துவதில் தங்கள் குடும்பங்களைப் பிரதிநிதித்துவம் செய்தனர். (ஆதியாகமம் 12:8; 26:25; 35:2, 3; யோபு 1:5) ஆனால் ஆசாரங்களோடும் சடங்குகளோடும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆசாரியத்துவமோ அல்லது பலிகளின் ஏற்பாட்டு முறையோ இருக்கவில்லை. மேலுமாக எருசலேமை மையமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வணக்கத்தின் தற்காலிகமானத்தன்மையை இயேசு தாமே சமாரியப் பெண்ணிடம் இவ்வாறு சொல்லும் போது காண்பித்தார்: “நீங்கள் இந்த மலையிலும் [சமாரிய ஆலயம் முன்பிருந்த இடமாகிய கெரிசீம்] எருசலேமிலும் அல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங் காலம் வருகிறது. . . . உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது.” (யோவான் 4:21–23, NW) மெய் மதம், சடப்பொருள் சம்பந்தமான காரியங்களால் ஆல்ல, ஆனால் ஆவியோடும் உண்மையோடும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று இயேசு காண்பித்தார்.
பாபிலோனிய சிறையிருப்பு
10. (எ) யெகோவா ஏன் தம்முடைய மக்கள் பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்படுவதை அனுமதித்தார்? (பி) பொ.ச.மு. 537-ல் யெகோவா என்ன இரண்டு வழிகளில் உண்மையுள்ள மீதியானோரை விடுவித்தார்? யூதாவுக்கு அவர்கள் திரும்பி வந்ததனுடைய முக்கிய நோக்கம் என்னவாக இருந்தது?
10 ஏதேனில் கலகம் நிகழ்ந்தது முதற்கொண்டு மெய் மதத்துக்கும் பொய் மதத்துக்குமிடையே இடையறாது பகைமை இருந்துவந்திருக்கிறது. சில சமயங்களில் மெய் வணக்கத்தார், அடையாள அர்த்தத்தில் பொய் மதத்தால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். பாபிலோனில் நிம்ரோதுவின் காலம் முதற்கொண்டு அவ்விதமாக சம்பவித்திருக்கிறது. அவருடைய மக்கள் பொ.ச.மு. 617-லும் பொ.ச.மு. 607-லும் பாபிலோனுக்கு சிறைபிடித்து செல்லப்பட அனுமதிப்பதற்கு முன்னால், அவர்கள் ஏற்கெனவே பாபிலோனிய பொய் மதத்துக்கு இரையாகிவிட்டிருந்தார்கள். (எரேமியா 2:13–23; 15:2; 20:6; எசேக்கியேல் 12:10, 11) பொ.ச.மு. 537-ல் உண்மையுள்ள மீதியானோர் யூதாவுக்குத் திரும்பி வந்தனர். (ஏசாயா 10:21) அவர்கள், “பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்” என்ற தீர்க்கதரிசன அழைப்புக்குச் செவிசாய்த்தனர். (ஏசாயா 48:20) இது வெறுமென உடல் சார்ந்த ஒரு விடுதலையாக இருக்கவில்லை. அது அசுத்தமான, உருவ வழிபாட்டு பொய்மத சுற்றுப்புறச்சூழலிலிருந்தும்கூட ஆவிக்குரிய ஒரு விடுதலையாக இருந்தது. ஆகவே உண்மையுள்ள மீதியானோர் இவ்விதமாக உத்தரவிடப்பட்டார்கள்: “புறப்படுங்கள், புறப்படுங்கள். அவ்விடம் விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள். கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். (ஏசாயா 52:11) மெய் மதத்தை, தூய்மை வணக்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதே அவர்கள் யூதாவுக்குத் திரும்பிவந்ததனுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.
11. யூதாவில் தூய்மையான வணக்கம் நிலைநாட்டப்பட்டதோடுகூட பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் மத சம்பந்தமான என்ன புதிய வளர்ச்சி ஏற்பட்டது?
11 அந்தப் பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே மகா பாபிலோனுக்குள் புதிய கிளைகள் ஏற்பட்டது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் மீது பின்னால் அத்தனை அதிகமாக செல்வாக்கு செலுத்த இருந்த பகுத்தறிவுவாத கிரேக்கத் தத்துவத்தைத் தவிர, புத்த மதம், கன்பூசிய மதம், சோராஸ்டிரியனிஸம் மற்றும் சமண மதங்கள் தோன்றின. ஆகவே யூதாவில் தூய்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டுக்கொண்டிருக்கையில், கடவுளுடைய பிரதான சத்துரு பொய் மதத்தில் மாற்றீடாக தெரிவு செய்வதற்கு மிகப் பலவற்றை அளித்துக்கொண்டிருந்தான்.
12. பொ.ச. முதல் நூற்றாண்டில் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து என்ன விடுதலைக் கிடைத்தது? என்ன எச்சரிப்பைப் பவுல் கொடுத்தார்?
12 இயேசு இஸ்ரவேலில் தோன்றுவதற்குள், பெரும்பாலான யூதர்கள் அநேக பாபிலோனிய மத கருத்துகளை ஏற்றுக்கொண்டுவிட்டிருந்த யூதேய மதத்தைக் கடைபிடித்துக் கொண்டிருந்தனர். அது தன்னை மகா பாபிலோனோடு இணைத்துவிட்டிருந்தது. கிறிஸ்து அதைக் கண்டனம் செய்து தம்முடைய சீஷர்களை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவித்தார். (மத்தேயு அதிகாரம் 23; லூக்கா 4:18) பவுல் அப்போஸ்தலன் பிரசங்கித்த இடங்களில் பொய் மதமும் கிரேக்க தத்துவமும் அவ்வளவாகப் பரவியிருந்த காரணத்தால், அவர் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி, அதை மகா பாபிலோனின் அசுத்தமான செல்வாக்கிலிருந்து விலகியிருக்க வேண்டியவர்களாயிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தினார். அவர் எழுதினார்: “தேவனுடைய ஆலயத்துக்கும் [பாபிலோனிய] விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? ‘நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்,’ என்று தேவன் சொன்னபடி, நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். ‘“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்,”’ என்று யெகோவா சொல்லுகிறார், ‘“அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”’”—2 கொரிந்தியர் 6:16, 17, NW.
முடிவின் காலத்தில் பொய் மதத்திலிருந்து விடுபட்டு வருதல்
13. சிறிய ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு கிறிஸ்து அனுப்பிய செய்திகளால் என்ன தெரிகிறது? அதன் விளைவாக என்ன தோன்றியது?
13 அப்போஸ்தலனாகிய யோவானுக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்துதலின் மூலமாக சிறிய ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு கிறிஸ்து அனுப்பிய செய்திகள், பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவுக்குள் பாபிலோனிய மத பழக்கங்களும் மனநிலைகளும் கிறிஸ்தவ சபைக்குள் பரவிக் கொண்டிருந்ததை தெளிவாக காண்பிக்கின்றன. (வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 2 மற்றும் 3) விசுவாசதுரோகம் குறிப்பாக பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரையில் முழு வளர்ச்சியடைந்து தூய்மையான கிறிஸ்தவ மதத்தினுடைய உண்மையற்ற போலிப்பொருள் தோன்றுவதில் விளைவடைந்தது. ஆத்துமா அழியாமை, எரிநரகம் மற்றும் திரித்துவம் ருத்துவம் போன்ற பாபிலோனிய கோட்பாடுகள் விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் போதகங்களுக்குள் சேர்க்கப்பட்டன. கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள், ஆகிய அனைத்தும் இந்தப் பொய் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டன, ஆகவே அவை பிசாசினுடைய பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் பாகமாயின.
14, 15. (எ) கோதுமைகளையும் களைகளையும் பற்றிய இயேசுவின் உவமை என்ன காண்பித்தது? (பி) 19-ம் நூற்றாண்டின் முடிவுக்குள் என்ன சம்பவித்தது? 1914-ற்குள் கோட்பாடு சம்பந்தமாக மெய் கிறிஸ்தவர்கள் என்ன முன்னேற்றத்தைச் செய்திருந்தார்கள்?
14 மெய் மதம் ஒருபோதும் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. நூற்றாண்டுகளினூடாக சத்தியப்–பிரியர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர், யெகோவாவுக்கும் அவருடைய வார்த்தையாகிய பைபிளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தமைக்காக தங்கள் உயிர்களைக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் கோதுமைகளையும் களைகளையும் பற்றிய இயேசுவின் உவமை காண்பிப்பது போல, அடையாள அர்த்தமுள்ள கோதுமை அல்லது ராஜ்யத்தின் அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரர்கள் “உலகத்தின் முடிவில்”தானே களைகள் அல்லது பொல்லாங்கனுடைய குமாரர்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள். (மத்தேயு 13:24–30, 36–43) முடிவின் காலம்—இவ்வாறு பிரிக்கப்படுவதற்கான காலம்—நெருங்கி வருகையில், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த உண்மை மனதுள்ள பைபிள் மாணாக்கர்கள் பொய்மத கட்டுகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள்.
15 1914-ற்குள் இன்று யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் மீட்பில் பலமான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் பிரசன்னம் காணக்கூடாததாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். 1914, “புறஜாதியாரின் கால” முடிவை குறிக்கும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். (லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு) அவர்கள் ஆத்துமா மற்றும் உயிர்த்தெழுதலின் அர்த்தத்தை தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். சர்ச்சினுடைய நரக அக்கினி மற்றும் திரித்துவ போதகங்களின் முழுமையான பிழையானத்தன்மையைக் குறித்தும்கூட அவர்கள் அறிவொளியூட்டப்பட்டிருந்தார்கள். அவர்கள் தெய்வீக நாமத்தை கற்றறிந்து அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள், பரிணாமக் கோட்பாடும் ஆவியுலகத் தொடர்பு கொள்கையை அப்பியாசிப்பதும் தவறு என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
16. 1919-ல் என்ன அழைப்புக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் செவி சாய்த்தார்கள்?
16 பொய் மத கட்டுகளைத் தொலைத்துக் கட்டுவதில் ஒரு நல்ல ஆரம்பம் செய்யப்பட்டிருந்தது. 1919-ல், மகா பாபிலோன் கடவுளுடைய மக்கள் மீது தன்னுடைய செல்வாக்கை முழுவதுமாக இழந்தது. பொ.ச.மு. 537-ல் யூதர்களில் ஒரு மீதியானோர் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது போலவே, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் உண்மையுள்ள மீதியானோர், “அதின் [மகா பாபிலோன்] நடுவிலிருந்து புறப்பட்டு” போங்கள் என்ற அழைப்புக்கு செவிசாய்த்தார்கள்.—ஏசாயா 52:11.
17. (எ) 1922 முதற்கொண்டு என்ன நிகழ்ந்தது? கடவுளுடைய மக்களின் மத்தியில் என்ன தேவை உணரப்படலாயிற்று? (பி) என்ன தீவிரமான நிலைநிற்கை மேற்கொள்ளப்பட்டது? இதை ஏன் புரிந்துகொள்ள முடிகிறது?
17 1922 முதற்கொண்டு, பாபிலோனிய பொய் மதத்தை, குறிப்பாக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளையும் அம்பலப்படுத்தும் வலிமை மிக்க பைபிள் சத்தியங்கள் வெளியிடப்பட்டு பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டன. பொய் மதத்தின் எல்லா அமைப்புகளிலிருந்தும் விடுபட்டு வருதல் முழுமையாக இருத்தல் அவசியம் என்பது கடவுளுடைய சுத்திகரிக்கப்பட்ட மக்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக, தூய்மையான வணக்கத்தைப் பற்றி பேசுகையில், “மதம்” என்ற வார்த்தையின் உபயோகமும்கூட தவிர்க்கப்பட்டது. “மதம் ஒரு கண்ணி, ஒரு மோசடி” என்ற கோஷங்கள் பெரிய நகரங்களின் தெருக்களில் விளம்பரப்படுத்தப்பட்டன. அரசாங்கம் (1928) மற்றும் “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (1943) போன்ற புத்தகங்கள் “கிறிஸ்தவத்துக்கும்” “மதத்துக்கு”மிடையே தெளிவான வேறுபாட்டைக் காண்பித்தது. மகா பாபிலோனின் எங்கும்–ஊடுருவி பரவியிருந்த மத அமைப்புகளிலிருந்து முழுமையாக விடுபட்டு வருவது அவசியமாக இருந்ததால், இந்தத் தீவிரமான நிலைநிற்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மெய் மதமும் பொய் மதமும்
18. 1951-ல் “மதத்தைப்” பற்றிய என்ன புதிய தெளிவு கொடுக்கப்பட்டது? 1975 வருடாந்தர புத்தகத்தில் இது எவ்வாறு விளக்கப்படுகிறது?
18 பின்னர், 1951-ல் மெய் மதத்துக்கும் பொய் மதத்துக்குமிடையிலான தெள்ளந் தெளிவான புரிந்துகொள்ளுதலை யெகோவா தம்முடைய மக்களுக்கு கொடுப்பதற்குரிய காலம் பக்குவமாயிருந்தது. 1975 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் அறிவிக்கிறது: “1951-ல் மெய் வணக்கத்தின் ஆதரவாளர்கள் ‘மதம்’ என்ற பதத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஏதோவொன்றை கற்றறிந்தார்கள். அவர்களில் சிலருக்கு ‘மதம் ஒரு கண்ணி, ஒரு மோசடி’ என்ற சிந்தனையைத் தூண்டும் விளம்பர அறிவிப்பைச் சில சமயங்களில் தாங்கள் ஏந்திச் சென்ற அந்த 1938-ம் ஆண்டு நினைவிருக்கும். அவர்களுடைய நோக்குநிலையிலிருந்து, எல்லா ‘மதமும்’ கிறிஸ்தவமல்லாததாக பிசாசிடமிருந்து வந்ததாக இருந்தது. ஆனால் 1951, மார்ச் 15, காவற்கோபுரம், மதத்தைப் பற்றியதில் ‘மெய்’ மற்றும் ‘பொய்’ என்ற பெயரடைகளைப் பயன்படுத்துவதை அங்கீகரித்தது. மேலுமாக, 1951-ல் பிரசுரிக்கப்பட்டு இங்கிலாந்திலுள்ள லண்டனில் வெம்பிளி அரங்கத்தில் ‘தூய வணக்கம்’ அசெம்பிளியின் போது வெளியிடப்பட்ட மதம் மனிதகுலத்துக்குச் செய்திருப்பது என்ன? என்ற கருத்தைக் கவரும் புத்தகம் இவ்விதமாகச் சொன்னது: “அது பயன்படுத்தப்படும் முறைக்கேற்ப எடுத்துக்கொள்ளப்படுகையில், “மதம்” அதனுடைய எளிமையான பொருளின்படி அது மெய் வணக்கமா அல்லது பொய் வணக்கமா என்பதை கருதாமல் ஒரு வணக்க முறைமையை, ஒரு வணக்கமுறையை அர்த்தப்படுத்துகிறது. இது அபோடா (ʼa-boh-dah) என்ற எபிரெய வார்த்தையின் பொருளோடு இணக்கமாயிருக்கிறது, இதன் நேர்ப்பொருள் “சேவை” என்பதாகும். யாருக்கு இது செய்யப்படுகிறது என்பது பொருட்படுத்தப்படுவதில்லை. அதற்குப்பின்பு, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் ‘பொய் மதம்’ மற்றும் ‘உண்மை மதம்’ என்ற சொற்றொடர்கள் வழக்கில் பயன்படுத்தப்படலானது.”—பக்கம் 225.
19, 20. (எ) மெய் வணக்கத்துக்கு “மதம்” என்ற வார்த்தையின் உபயோகத்தினால் மெய் வணக்கத்தார் ஏன் நிலைகுலைந்துப் போவதற்கில்லை? (பி) இந்தப் புதிய தெளிவு செய்வதற்கு யெகோவாவின் மக்களுக்கு உதவியது?
19 வாசகரின் ஒரு கேள்விக்குப் பதிலாக, ஆகஸ்ட் 15, 1951, காவற்கோபுரம் சொன்னதாவது: “‘மதம்’ என்ற பதத்தின் உபயோகத்தால் எவரும் நிலைகுலைந்து போய்விடக்கூடாது. நாம் அதை பயன்படுத்துகிறோம் என்பதால் நம்மை அது பாரம்பரியத்தால் கட்டுண்ட பொய் மதத் தொகுதியோடு நம்மை இணைத்துவிடுவதில்லை. கிறிஸ்தவர்கள் என்பதாக நம்மை அழைத்துக் கொள்வது கிறிஸ்தவமண்டலத்தின் பொய் கிறிஸ்தவர்களோடு நம்மை இணைக்காமலிருப்பது போல் இது இருக்கிறது.”
20 ஒத்திணங்கிப் போவதாக இருப்பதற்குப் பதிலாக, “மதம்” என்ற வார்த்தையின் இந்தப் புதிய தெளிவு, பின்வரும் கட்டுரை காண்பிக்கும் வண்ணமாக, மெய் மற்றும் பொய் வணக்கத்துக்கிடையிலான பெரும்பிளவை விரிவாக்கவே யெகோவாவின் மக்களுக்கு உதவியது. (w91 12/1)
நம்முடைய புரிந்துகொள்ளுதலைச் சோதிக்க
◻பூமியில் பொய் மதம் எப்போது எவ்விதமாக ஆரம்பமானது?
◻ஜலப்பிரளயத்துக்குப் பின்பு சாத்தான் எதை சாதிக்க முயற்சி செய்தான்? அவனுடைய திட்டம் எவ்வாறு தடைசெய்யப்பட்டது?
◻பாபிலோன் எதற்கு அடையாளமானது?
◻பொ.ச.மு. 537-லும், பொ.ச. முதல் நூற்றாண்டிலும், 1919-லும் என்ன விடுதலைகள் நிகழ்ந்தன?
◻1951-ல் “மதம்” என்ற வார்த்தைக்கு என்ன புதிய தெளிவு கொடுக்கப்பட்டது? ஏன் அப்போது?
[பக்கம் 11-ன் வரைப்படம்/படம்]
உலகம் முழுவதிலும் நம்பப்படுகின்ற பொய்க் கோட்பாடுகள் பாபிலோனில் ஆரம்பமாயின:
◻திரித்துவ அல்லது திரியேகக் கடவுட்கள்
◻மனித ஆத்துமா மரணத்தைத் தப்பி வாழ்கிறது
◻ஆவிக்கொள்கை—“மரித்தோருடன்” பேசுதல்
◻வணக்கத்தில் உருவங்களைப் பயன்படுத்துதல்
◻பிசாசுகளை சாந்தப்படுத்த மந்திரச்சொற்களைப் பயன்படுத்துதல்
◻வல்லமைவாய்ந்த மதகுருமார் ஆட்சி