“கிறிஸ்துவின் தெய்வீகத்”தைப் பற்றி வேத எழுத்துக்கள் என்ன சொல்லுகின்றன?
இயேசு கிறிஸ்து மனிதவர்க்கத்தின்மீது மிக ஆழ்ந்த மத பாதிப்பை உடையவராக இருந்தார். இது எவ்வாறெனில் கோடிக்கணக்கானோர் அவரைப் பின்பற்றுவோரென உரிமை பாராட்டுகின்றனர். எனினும், அவர்கள் எல்லாரும் அவர் யார் என்பதன்பேரில் ஒத்தில்லை.
இயேசுவின் போதகங்களை ஏற்பதாகச் சொல்லும் சிலர் அவரைச் சிருஷ்டிகர்தாமே என்றல்ல, கடவுளுடைய குமாரன் என்று கருதுகின்றனர். மற்றவர்கள் “கிறிஸ்துவின் தெய்வீகத்”தில் நம்பிக்கை வைத்து அவரே உண்மையில் கடவுள் என நினைக்கின்றனர். இயேசு எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறார் எனவும் அவர் பூமியில் இருந்தபோது மனிதனைப் பார்க்கிலும் மேலானவராக இருந்தாரெனவும் இவர்கள் நம்புகின்றனர். இதைப்பற்றிய அவர்கள் நம்பிக்கை சரிதானா? வேத எழுத்துக்கள் என்ன சொல்லுகின்றன?
இயேசுவின் மனிதவாழ்க்கைக்கு முற்பட்ட வாழ்க்கை
இயேசு தமக்கு மனிதவாழ்க்கைக்கு முற்பட்ட ஒரு வாழ்க்கை இருந்ததென சாட்சி பகர்ந்தார். அவர் சொன்னதாவது: “பரலோகத்திலிருந்து இறங்கினவராகிய மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” (யோவான் 3:13, தி.மொ.) இயேசு மேலும் கூறினதாவது: “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.”—யோவான் 6:51.
பூமிக்கு வருவதற்கு முன்னால் இயேசு உயிரோடிருந்தார் என்பது அவருடைய பின்வரும் வார்த்தைகளில் தெளிவாகக் காட்டப்படுகிறது: “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (யோவான் 8:58) ஆபிரகாம் பொ.ச.மு. 2018-லிருந்து 1843 வரையில் வாழ்ந்திருந்தான், இயேசுவின் மனித வாழ்க்கையோ பொ.ச.மு. 2-லிருந்து பொ.ச. 33-வரையில் நீடித்திருந்தது. தம்முடைய மரணத்துக்கு முன்புதானே, இயேசு பின்வருமாறு ஜெபித்தார்: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.”—யோவான் 17:5.
இயேசுவைப் பின்பற்றினவர்கள் இதைப்போன்ற சாட்சி பகர்ந்தனர். அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினான்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. . . . அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:1, 3, 14) ஆம், மனிதனான இயேசு கிறிஸ்துவாக “அந்த வார்த்தை மாம்சமா”யிற்று.
இயேசுவின் மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையைக் குறிப்பாகத் தெரிவித்து, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலிப்பியர் 2:5-7) பவுல் இயேசுவை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது,” என்றழைத்தான்.—கொலோசெயர் 1:13-16.
பூமியில் அவர் தெய்வீகராக இல்லை
இயேசு தம்முடைய பிறப்பிலிருந்து தம்முடைய மரணம் வரையாக முழுமையாய் மனிதனாகவே இருந்தாரென வேத எழுத்துக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த வார்த்தை வெறுமென மாம்சத்தை அணிந்திருந்தாரென யோவான் சொல்லவில்லை. அவர் “மாம்சமானார்” பாதி மாம்சமாகவும் பாதி கடவுளாகவும் இல்லை. இயேசு மனிதனாகவும் அதே சமயத்தில் தேவனாகவும் இருந்திருந்தால், அவர் “தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்”தாரென சொல்லியிருக்க முடியாது.—எபிரெயர் 2:9; சங்கீதம் 8:4, 5.
பூமியிலிருந்தபோது இயேசு கடவுளும்-மனிதனுமாக இருந்தாரெனில், அவர் ஏன் திரும்பத்திரும்ப யெகோவாவிடம் ஜெபித்தார்? பவுல் பின்வருமாறு எழுதினான்: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்”டார்.—எபிரெயர் 5:7.
கிறிஸ்து “மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்,” என்று பேதுரு கூறியிருப்பது, இயேசு பூமியிலிருக்கையில் பாதி ஆவியாக இல்லையென நிரூபிக்கிறது. (1 பேதுரு 3:18) இயேசு முழுமையில் மனிதனாக இருந்ததனால்தானே அபூரண மனிதர் அனுபவிப்பதை அவர் அனுபவித்திருக்க முடியும், இவ்வாறு பரிதபிக்கத்தக்கப் பிரதான ஆசாரியனாக முடியும். பவுல் இவ்வாறு எழுதினான்: “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”—எபிரெயர் 4:15.
“உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி,”யாக இயேசு “எல்லாரையும் மீட்கும் [ஈடு, NW] பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்”தார். (யோவான் 1:29; 1 தீமோத்தேயு 2:6) இம்முறையில், இயேசு, ஆதாம் இழந்த அதையே—பரிபூரண, நித்திய மனித வாழ்க்கையைத் திரும்ப விலைக்கு வாங்கினார். கடவுளுடைய நீதி ‘ஆத்துமாவுக்கு ஆத்துமா’வைக் கேட்டதால், இயேசு கடவுளும்-மனிதனுமாக அல்ல, ஆதாம் தொடக்கத்தில் இருந்ததைப்போலவே—ஒரு பரிபூரண மனிதனாகவே இருக்க வேண்டும்.—உபாகமம் 19:21; 1 கொரிந்தியர் 15:22.
பைபிள் வசனங்களில் இல்லாத கருத்தை வாசிக்க முயலவேண்டாம்
இயேசு கடவுளும்-மனிதனுமாக இருந்தாரென்று சொல்வோர் அவரைக் கிறிஸ்தவமண்டல திரித்துவத்தின் ஓர் உறுப்பினரெனவும், உள்ளியல்பிலும் வல்லமையிலும், மகிமையிலும், நீடிப்பிலும் கடவுளுடன் சமமானவரென்றும் நிரூபிக்க முயன்று வேதவசனங்கள் பலவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வசனங்களை நாம் கவனமாய் ஆராய்ந்து பார்க்கையில், “கிறிஸ்துவின் தெய்வீகத்”தின் சார்பாக விவாதிப்போர் அவை உண்மையில் சொல்பவற்றைப் பார்க்கிலும் அதிகமானதைச் சொல்வதாக அவற்றைக் கருதுகின்றனரென நாம் காண்கிறோம்.
“நாம்” என்ற சுட்டுப்பெயரைக் கடவுள் பயன்படுத்தும் பைபிள் வசனங்கள் மனித வாழ்க்கைக்கு முற்பட்ட வாழ்க்கையிலிருந்த இயேசுவை (அந்த வார்த்தையை) யெகோவாவுக்குச் சமமாக்குகின்றன என்று சிலர் சொல்லுகின்றனர். ஆனால் இந்தச் சுட்டுப்பெயரைப் பயன்படுத்துவது கடவுள் சமமான ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாரென பொருள்கொள்கிறதில்லை. சிறப்பான சூழ்நிலைமையில் இது பரலோக சிருஷ்டிகளுக்குள் ஒருவர், கடவுள் சம்பந்தமாக முன்மதிப்புள்ள ஓர் இடத்தை வகிப்பதைக் குறிப்பாகக் காட்டுகிறது. உண்மையில், மனிதவாழ்க்கைக்கு முந்தின வாழ்க்கையில் இயேசு கடவுளுடைய மிக நெருங்கிய துணைவராக, கைதேர்ந்த வேலையாளராக, மற்றும் பிரதிநிதி பேச்சாளராக இருந்தார்.—ஆதியாகமம் 1:26; 11:7; நீதிமொழிகள் 8:30, 31, NW; யோவான் 1:3.
இயேசுவின் முழுக்காட்டுதலோடு சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகள் கடவுளும், கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் சமமானவர்களென குறிப்பதில்லை. மனிதனாக, இயேசு தம்மைத் தம்முடைய பரலோகத் தகப்பனுக்கு அளிப்பதன் அடையாளமாக முழுக்காட்டுதலுக்குட்பட்டார். அந்தச் சமயத்தில் “வானங்கள் திறக்கப்பட்டன,” கடவுளுடைய ஆவி, புறாவைப்போல் இயேசுவின்மீது வந்திறங்கினது. மேலும், “வானங்களிலிருந்து,” யெகோவாவின் குரல் பின்வருமாறு சொல்வது கேட்கப்பட்டது: “இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.”—மத்தேயு 3:13-17, NW.
அவ்வாறெனில், சீஷர்களை “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குச் சொன்னபோது கருதினதென்ன? (மத்தேயு 28:19, 20) தாமும், தம்முடைய பிதாவும், பரிசுத்த ஆவியும் சமமானவர்களென இயேசு பொருள்கொள்ளவுமில்லை சொல்லவுமில்லை. மாறாக, முழுக்காட்டப்பட்டவர்கள் யெகோவாவை உயிரளிப்பவராகவும் சர்வவல்லமையுள்ள கடவுளாகவும் அறிந்துணர்ந்து, அவருக்குத் தங்கள் உயிரை ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் இயேசுவை மேசியாவாகவும் விசுவாசிக்கும் மனிதவர்க்கத்துக்காகக் கடவுள் மீட்கும்பொருளை ஏற்பாடுசெய்தது அவர்மூலமே எனவும் ஏற்கின்றனர். மேலும் பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல்படும் சக்தியெனவும், அதற்குத் தாங்கள் கீழ்ப்படிய வேண்டுமெனவும் அவர்கள் அறிந்துணருகின்றனர். எனினும், முழுக்காட்டப்படும் அத்தகையோர், யெகோவாவையும், இயேசுவையும், பரிசுத்த ஆவியையும் ஒரே திருத்துவ தெய்வமெனக் கருதக்கூடாது.
ஆனால் இயேசு கடவுளும்-மனிதனும் என அவருடைய அற்புதங்கள் நிரூபிக்கின்றன அல்லவா? இல்லை, ஏனெனில் மோசே, எலியா, எலிசா, அப்போஸ்தலர்கள் பேதுருவும் பவுலும், இன்னும் மற்றவர்கள் கடவுளும்-மனிதருமாக இராமல் அற்புதங்களை நடப்பித்தார்கள். (யாத்திராகமம் 14:15-31; 1 இராஜாக்கள் 18:18-40; 2 இராஜாக்கள் 4:17-37; அப்போஸ்தலர்கள் 9:36-42; 19:11, 12) அவர்களைப்போல், இயேசு, கடவுள் கொடுத்த வல்லமையால் அற்புதங்களை நடப்பித்த ஒரு மனிதனாக இருந்தார்.—லூக்கா 11:14-19.
மேசியாவாகிய இயேசுவை “வல்லமையுள்ள தேவன்,” என ஏசாயா தீர்க்கதரிசனமாய்க் குறிப்பிட்டான். (ஏசாயா 9:6) ஏசாயா 10:21-ல், அதே தீர்க்கதரிசி யெகோவாவை “வல்லமையுள்ள தேவன்,” எனக் குறிப்பிட்டுப் பேசினான். சிலர் இயேசு கடவுள் என்று நிரூபிப்பதற்கு இந்த ஒத்தக் கூற்றைப் பயன்படுத்த முயலுகின்றனர். ஆனால் இந்த வசனங்களுக்குள் இல்லாதக் கருத்தை வாசிக்காதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். “சர்வவல்லமையுள்ள தேவன்.” என்ற சொற்றொடர் இருப்பதுபோல் “வல்லமையுள்ள தேவன்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த எபிரெய சொற்றொடர் யெகோவாவுக்கு மாத்திரமேயென மட்டுப்படுத்தப்பட்டில்லை. (ஆதியாகமம் 17:1) மறுப்புக்கிடமின்றி, வல்லமையுடையவராக இருப்பதற்கும், மேலும் மேம்பட்டவர் இல்லாமல், சர்வவல்லமையுள்ளவராக இருப்பதற்கும் இடையே வேறுபாடுள்ளது.
ஏசாயா 43:10-ல் உள்ளபடி, யெகோவா பின்வருமாறு கூறினார்: “எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.” இந்த வார்த்தைகள் இயேசு கடவுளென நிரூபிக்கிறதில்லை. முக்கியக் குறிப்பு என்னவெனில், யெகோவாவுக்கு முந்தியவர் கிடையாது, அவருக்கு முன்னால் ஒரு கடவுளும் இருக்கவில்லை என்பதே, ஏனெனில் அவர் நித்தியர். யெகோவாவுக்குப்பின் ஒரு கடவுளும் இருப்பதில்லை, ஏனெனில் அவர் எப்பொழுதும் இருப்பார் மற்றும் ஈடற்ற உன்னத பேரரசராக அவருக்கு வாரிசுகள் இருப்பதில்லை. எனினும், சில மனிதரைக் குறித்து பின்வருமாறு சொல்வதன்மூலம் வேத எழுத்துக்கள் காட்டுகிறபடி, யெகோவா தாமே கடவுட்கள் என்றழைத்த மற்றவர்களை உண்டுபண்ணினார்: “நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.” (சங்கீதம் 82:6, 7) இவ்வாறே, ‘அந்த வார்த்தை’ யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு கடவுளாக இருந்தார், ஆனால் ஒருக்காலும் அது இயேசுவைச் சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமாக்கவில்லை.
இயேசுவின் உண்மையான ஸ்தானம்
கடவுளும்-மனிதனுமாக யெகோவா மனித வாழ்க்கையை மேற்கொண்டாரென விவாதிப்போர், இயேசு தம்மை அம்முறையில் கருதினதாக பைபிள் சாடையாகவுங்கூட குறிக்கிறதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மாறாக, இயேசு எப்பொழுதும் தம் பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராகவே இருந்துவந்திருக்கிறாரென அது நிலையாகக் காட்டுகிறது. பூமியிலிருந்தபோது, இயேசு கடவுளுடைய குமாரனாக இருந்ததைப் பார்க்கிலும் மேம்பட்ட எதையும் ஒருபோதும் உரிமைபாராட்டவில்லை. மேலும் கிறிஸ்து: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்,” என்று கூறினார்.—யோவான் 14:28.
பவுல் பின்வருமாறு கூறினதில் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இடையே வேறுபாட்டைத் தெரிவித்தான்: “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 8:6) மேலும் பவுல்: “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்,” என்றும் கூறினான். (1 கொரிந்தியர் 3:23) நிச்சயமாகவே, கிறிஸ்தவர்களுங்கூட தங்கள் எஜமானராகிய, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருப்பதுபோலவே, அவரும் அவருடைய தலைவராகிய யெகோவா தேவனுக்கு உரியவர்.
இதற்கொப்பான குறிப்பைத் தெரிவித்து, பவுல் பின்வருமாறு எழுதினான்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும்,” அறியுங்கள். (1 கொரிந்தியர் 11:3) கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள இந்த உறவு தொடர்ந்திருக்கும். ஏனெனில் இயேசுவின் ஆயிர ஆண்டு ஆட்சிக்குப் பின், “அவர் . . . கடவுளும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடு”ப்பார்.” மேலும் “கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்குக் குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”—1 கொரிந்தியர் 15:24, 28; வெளிப்படுத்துதல் 20:6.
மற்ற வசனங்களுக்குச் சற்றுப் பார்வைச் செலுத்துதல்
இயேசுவின் பிறப்பைக் குறித்து, மத்தேயு பின்வருமாறு எழுதினான்: “தீர்க்கதரிசியின் மூலமாய்க் [ஏசாயா 7:14-ல்] கர்த்தராலே [யெகோவாவால், NW] உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். . . . இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:22, 23) இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற சொந்தப் பெயர் கொடுக்கப்படவில்லை, ஆனால் மனிதனாக அவர் வகித்தப் பாகம் அதன் உட்பொருளை நிறைவேற்றிற்று. மேசியானிய வித்தாகவும் தாவீதின் சிங்காசனத்தின் வாரிசாகவும் இயேசு பூமியில் வந்திருந்தது யெகோவாவை வணங்குவோருக்குக் கடவுள் தங்களோடு, தங்கள் சார்பில் இருந்து, தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஆதரவளித்தாரென நிரூபித்தது.—ஆதியாகமம் 28:15; யாத்திராகமம் 3:11, 12; யோசுவா 1:5, 9; சங்கீதம் 46:5-7; எரேமியா 1:19.
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை நோக்கி, அப்போஸ்தலன் தோமா: “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று ஆச்சரியத்தோடு கூறினான்: (யோவன் 20:28) இதுவும் மற்ற விவரப் பதிவுகளும் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று [நாம்] விசுவாசிக்கும்படியாக . . . எழுதப்பட்டிருக்கிறது.” மேலும் “நான் . . . என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்,” என்ற இந்தச் செய்தியைத் தம்முடைய சீஷர்களுக்கு அனுப்பின இயேசுவுக்கு முரணாகத் தோமா பேசவில்லை. (யோவான் 20:17, 30, 31) ஆகையால் இயேசுவைச் சர்வவல்லமையு
[பக்கம் 23-ன் பெட்டி]
தேவதூதர்கள் இயேசுவை வணங்குகிறார்களா?
எபிரெயர் 1:6-ன் சில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு சொல்கின்றன: “கடவுளின் தூதர்கள் யாவரும் அவரை [இயேசுவை] வணங்குவார்களாக.” [கிங் ஜேம்ஸ் வெர்ஷன்; தி ஜெருசலெம் பைபிள்] அப்போஸ்தலன் பவுல் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்துக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது, அது சங்கீதம் 97:7-ல் பின்வருமாறு கூறுகிறது: “அவருடைய தூதர்களே நீங்களெல்லாரும் அவரை [கடவுளை] வணங்குங்கள்.”—C. தாம்ஸன்.
எபிரெயர் 1:6-ல் “வணங்கு” என மொழிபெயர்த்துள்ள இந்தக் கிரேக்கச் சொல் (ப்ரோஸ்கினீயோ) செப்டுவன்டில் சங்கீதம் 97:7-ல் “குனிந்து வணங்குதல்” என்று பொருள்படும் ஷாச்சா என்ற எபிரெய பதத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மனிதருக்குக் கொடுக்கும் மரியாதைக்குரிய ஏற்கத்தகுந்த ஒரு செயலாயிருக்க முடியும். (ஆதியாகமம் 23:7; 1 சாமுவேல் 24:8; 2 இராஜாக்கள் 2:15) அல்லது அது உண்மையான கடவுளின் வணக்கத்துடனோ, பொய்க் கடவுட்களுக்குத் தவறாகச் செலுத்தப்படும் வணக்கத்துடனோ சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.—யாத்திராகமம் 23:24; 24:1; 34:14; உபாகமம் 8:19.
பொதுவாய் இயேசுவுக்குக் கொடுக்கப்படும் ப்ரோஸ்கினீயோ அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும் பணிவுமரியாதை முறைக்கு ஒத்துள்ளது. (மத்தேயு 2:2, 8; 8:2; 9:18; 15:25; 20:20 ஆகியவற்றை 1 சாமுவேல் 25:23, 24; 2 சாமுவேல் 14:4-7; 1 இராஜாக்கள் 1:16; 2 இராஜாக்கள் 4:36, 37 உடன் ஒத்துப்பாருங்கள்.) இயேசுவுக்குச் செலுத்தப்பட்ட பணிவுமரியாதை முறை கடவுளாக அல்ல “கடவுளுடைய குமாரனாக” அல்லது மேசியானிய “மனுஷகுமாரனாக”வே அவருக்குச் செலுத்தப்பட்டதென்பது அடிக்கடி தெளிவாகத் தெரிகிறது.—மத்தேயு 14:32, 33; லூக்கா 24:50-52; யோவான் 9:35, 38.
கடவுளுக்குக் கீழ் இயேசுவுக்கு இருக்கும் ஸ்தானத்தை எபிரெயர் 1:6 குறிப்பிடுகிறது. (பிலிப்பியர் 2:9-11) இங்கே சில மொழிபெயர்ப்புகள் ப்ரோஸ்கினீயோ என்பதைப் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கின்றன: “பணிவறிவுப்பு . . . செலுத்துகின்றனர்” (தி நியு இங்கிலிஸ் பைபிள்), “பணிவுமரியாதை செலுத்துகின்றனர்” (நியு உவோர்ல்ட் மொழிபெயர்ப்பு), அல்லது “முன் தலைவணங்குகின்றனர்” (அன் அமெரிக்கன் மொழிபெயர்ப்பு). “வணங்குகின்றனர்,” என்று மொழிபெயர்த்திருப்பதை ஒருவர் விரும்பினால், அத்தகைய வணக்கம் சம்பந்தப்பட்டதே, ஏனெனில் இயேசு சாத்தானிடம் பின்வருமாறு சொன்னார்: “உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும் [ப்ரோஸ்கினீயோ என்பதன் ஒரு வகை], அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.”—மத்தேயு 4:8-10, NW.
கடவுளை வணங்குவதைப்பற்றிப் பேசும் சங்கீதம் 97:7-ஐ எபிரெயர் 1:6-ல் கிறிஸ்துவுக்குப் பொருத்திப் பயன்படுத்தின போதிலும், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு “அவருடைய [கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு”க்கிறார் என்று பவுல் காட்டியிருந்தான். (எபிரெயர் 1:1-3) ஆகவே தேவதூதர்கள் கடவுளுடைய குமாரனுக்குக் கொடுக்கும் எந்த “வணக்கமும்” சம்பந்தப்பட்டது மற்றும் அவர்மூலம் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிறது.