கிறிஸ்து அக்கிரமத்தை வெறுத்தார்—நீங்கள் வெறுக்கிறீர்களா?
“நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.”—எபிரெயர் 1:9.
1. நீதியை நேசிப்பதுமட்டுமல்லாமல், யெகோவா தேவனின் உண்மையான ஊழியர் எல்லாரிடமும் வேறு எதுவும் எதிர்பார்க்கப்படுகிறது?
யெகோவாவின் உண்மையான ஊழியர்கள் அவரைத் தங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் நேசிக்கிறார்கள். (மாற்கு 12:30) உத்தமத்தைக் காத்துக்கொள்வதன்மூலம் அவர்கள் யெகோவாவின் இருதயத்தை மகிழச் செய்ய விரும்புகிறார்கள். (நீதிமொழிகள் 27:11, தி.மொ.) இதைச் செய்ய, அவர்கள் நீதியை நேசிக்க வேண்டியது மட்டுமல்லாமல் அக்கிரமத்தையும் வெறுக்க (பகைக்க, தி.மொ.) வேண்டும். அவர்களுடைய முன்மாதிரியான, இயேசு கிறிஸ்து, நிச்சயமாகவே அவ்வாறு செய்தார். அவரைக் குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்.”—எபிரெயர் 1:9.
2. அக்கிரமத்தில் என்ன அடங்கியுள்ளது?
2 அக்கிரமம் என்பது என்ன? அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினபோது காட்டினபடி, அது பாவம்: “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.” (1 யோவான் 3:4) அக்கிரமக்காரன், “சட்டத்தால் அடக்கப்படாதவன் அல்லது கட்டுப்படுத்தப்படாதவன்.” (Webster’s Ninth Collegiate Dictionary; உவெப்ஸ்டர்ஸ் ஒன்பதாவது புதிய கலைக்குழுவுக்குரிய அகராதி) அக்கிரமம் என்பது, கெட்ட, பொல்லாத, ஒழுக்கக்கேடான, தூய்மைகெட்ட, மற்றும் நேர்மையற்ற எல்லாம் அடங்கியது. உலகத்தைச் சற்று நோக்குவது முன்னொருபோதும் இராத வகையில் அக்கிரமம் மட்டுக்குமீறி பெருகிப் பரவியுள்ளதென காட்டுகிறது. 2 தீமோத்தேயு 3:1-5-ல் அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்த “கொடிய காலங்களில்” நாம் வாழ்கிறோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்த எல்லா அக்கிரமத்தையும் கவனிக்கையில், எல்லா கேட்டையும் வெறுக்கும்படி நாம் கட்டளையிடப்பட்டிருப்பது எவ்வளவு நல்லதாயுள்ளது! உதாரணமாக, நமக்குப் பின்வருமாறு சொல்லப்படுகிறது: “யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையைப் பகையுங்கள்.” (சங்கீதம் 97:10, தி.மொ.) அவ்வாறே நாம் வாசிப்பதாவது: “நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்”புங்கள்.—ஆமோஸ் 5:15.
வெறுப்பின் மூன்று வகைகள்
3-5. எந்த மூன்று வகைகளில் “வெறுப்பு” என்றச் சொல் கடவுளுடைய வார்த்தையில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
3 வெறுப்பு (பகைப்பது, தி.மொ.) என்பதன் பொருள் என்ன? கடவுளுடைய வார்த்தையில், “வெறுப்பு” மூன்று தனிப்பட்ட முறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வன்மத்தால் தூண்டப்பட்டு அதன் வெறுப்புக்குரியவருக்குத் தீங்கு செய்ய நாடும் பகை உள்ளது. இந்த வகையான வெறுப்பைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த வகையானதே, நீதியுள்ள தன் சகோதரன் ஆபேலைக் கொல்லும்படி காயீனைத் தூண்டியது. (1 யோவான் 3:12) இயேசு கிறிஸ்துவினிடமாக அந்த மதத் தலைவர்கள் கொண்டிருந்ததும் இந்த வகையான வெறுப்பேயாகும்.—மத்தேயு 26:3, 4.
4 மேலும், “வெறுப்பு” என்ற இந்தச் சொல் குறைவாய் நேசிப்பது என்ற கருத்திலும் வேத எழுத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இயேசு பின்வருமாறு கூறினார்: “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” (லூக்கா 14:26) இவர்களை, நாம் இயேசுவை நேசிப்பதைப் பார்க்கிலும் குறைவாக நேசிப்பதையே இயேசு வெறுமென கருதினாரென்பது தெளிவாயுள்ளது. யாக்கோபு ‘லேயாளை வெறுத்தான்,’ ஆனால் உண்மையில் அவன் அவளை, ராகேலைப் பார்க்கிலும் குறைவாக நேசித்தான்.—ஆதியாகமம் 29:30, 31.
5 பின்னும், நாம் இங்கே முக்கியமாய் அக்கறைகொண்டுள்ள ஒரு பொருளும் “வெறுப்பு” என்ற சொல்லுக்கு உள்ளது. இது, எவரிடமோ எதனிடமோ கடுமையான வெறுப்புணர்ச்சி அல்லது கடுமையான அருவருப்புணர்ச்சி நமக்கு இருப்பதால் அத்தகைய ஆளுடன் அல்லது பொருளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள நாம் தவிர்க்கும் எண்ணத்தை உடையது. சங்கீதம் 139-ல் இது “முழுப்பகை” என பேசப்பட்டிருக்கிறது. அங்கே தாவீது சொன்னதாவது: “யெகோவா, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும் உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக என்ணுகிறேன்.”—சங்கீதம் 139:21, 22, தி.மொ.
அக்கிரமத்தை நாம் ஏன் வெறுக்க வேண்டும்
6, 7. (எ) ஏன், முக்கியமாய், நாம் அக்கிரமத்தை வெறுக்க வேண்டும்? (பி) அக்கிரமத்தை வெறுப்பதற்கு இரண்டாவது வல்லமைவாய்ந்த காரணம் என்ன?
6 நாம் ஏன் அக்கிரமத்தை வெறுக்க வேண்டும்? ஒரு காரணம் நமக்குச் சுய-மரியாதையும் நல்மனச்சாட்சியும் இருக்கும்படியாக. இம்முறையிலேயே நாம் நீதியும், அன்புமுள்ள நம்முடைய பரலோகத் தகப்பன், யெகோவாவுடன் நல்ல உறவை உடையோராக இருக்க முடியும். சங்கீதம் 26-ஐ வாசிப்பதால் காணக்கூடியபடி, இந்தக் காரியத்தில் தாவீது ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார். உதாரணமாக, அவர் பின்வருமாறு கூறினார்: “பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.” (சங்கீதம் 26:5) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவரைப் பகைக்கிறவர்களின் அக்கிரமச் செயல்கள் உட்பட, அவருடைய நோக்குநிலையில் அக்கிரமமாயிருக்கிற எல்லாவற்றிற்கும் நீதியுள்ள கோபம்—ஆம், வெறுப்பு—கொள்ளும்படி, கடவுள்பேரிலும் நீதியின்பேரிலுமுள்ள நம்முடைய அன்பு நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். மேலும், அக்கிரமம் கடவுளுடைய பெயரின்பேரில் நிந்தையைக் கொண்டுவருவதால் நாம் அதை வெறுக்க வேண்டும்.
7 யெகோவாவின் ஜனங்கள் அக்கிரமத்தை வெறுப்பதற்கு மற்றொரு காரணம் அது வெகு ஆபத்தாயும் தீங்குசெய்வதாயும் இருப்பதனால் ஆகும். மாம்சத்துக்கு விதைப்பது, அதாவது அக்கிரமத்தை விதைப்பது, என்ன விளைவை கொண்டுவரும்? பவுல் பின்வருமாறு எச்சரித்தார்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, 8) ஆகையால் அக்கிரமத்தோடு அறவே எதையும் கொண்டிருக்க நாம் விரும்ப மாட்டோம். நிச்சயமாகவே, நம்முடைய சொந்த நலனுக்காகவும் மனசமாதானத்துக்காகவும் எல்லா அக்கிரமத்தையும் நாம் வெறுக்க வேண்டும்.
அக்கிரமத்தை வெறுப்பவர்கள்
8. அக்கிரமத்தை வெறுப்பதில் யார் முதன்மையான முன்மாதிரியை வைத்திருக்கிறார், எந்த வேதவசனங்கள் காட்டுகிறபடி?
8 அக்கிரமத்தை வெறுப்பதில், கடவுளே தம்முடைய அறிவுக்கூர்மையுள்ள சிருஷ்டிகளுக்கு முதன்மையான முன்மாதிரியை வைக்கிறார். அக்கிரமத்தின்பேரில் அவர் நீதியாய் கோபவெறுப்பு கொள்கிறார், அவருடைய வார்த்தை பின்வருமாறு கூறுகிறது: “யெகோவா வெறுக்கின்றவைகள் ஆறு, ஏழும் அவருக்கு அருவருப்பே: அகந்தைக் கண், பொய்நாவு, குற்றமில்லா ரத்தம் சிந்துங்கை, தீயசூழ்ச்சி பிணைக்கும் இதயம், பொல்லாங்குக்கு விரைந்தேகுங் கால், பொய் உரைக்கும் கள்ளச்சாட்சி, சகோதரருக்குள் சண்டை விதைப்பது ஆகிய இவையே.” நாம் மேலும் வாசிப்பதாவது: “யெகோவாவுக்குப் பயப்படுவது தீமையைப் பகைப்பதாம்; பெருமை, வீம்பு, தீமையான வழி, புரட்டு வாய் அனைத்தையும் நான் பகைக்கிறேன்.” (நீதிமொழிகள் 6:16-19; 8:13, தி.மொ.) இன்னும் நமக்குச் சொல்லப்படுவதாவது: “யெகோவாவாகிய நான் நியாயத்தை ஆசிக்கிறேன், அநியாயக் கொள்ளையை வெறுக்கிறேன்.”—ஏசாயா 61:8, தி.மொ.
9, 10. இயேசு தாம் அக்கிரமத்தை வெறுத்ததை எவ்வாறு காட்டினார்?
9 அக்கிரமத்தை வெறுப்பதில் இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் மாதிரியைப் பின்பற்றினார். இவ்வாறு, நாம் வாசிப்பதாவது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன், உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.” (எபிரெயர் 1:9) இந்த வகையான வெறுப்பில் இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்தார். தெரிந்து வேண்டுமென்றே அக்கிரமத்தை நடப்பித்தவர்களை—பொய்மதத் தலைவர்களை—வெளிப்படுத்துவதன்மூலம், அவர் தாம் அக்கிரமத்தை வெறுப்பதைக் காட்டினார். அவர் அவர்களைப் பாசாங்குக்காரரெனத் திரும்பத்திரும்ப வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். (மத்தேயு, அதிகாரம் 23, NW) மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” (யோவான் 8:44) பேராசைக்கொண்ட மத பாசாங்குக்காரரிலிருந்து ஆலயத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் சுத்திகரித்து, இயேசு, உடல்-பலத்தைப் பயன்படுத்தும் அளவாகவுங்கூட அக்கிரமத்துக்குத் தம் வெறுப்பைக் காட்டினார்.—மத்தேயு 21:12, 13; யோவான் 2:13-17.
10 அக்கிரமத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டவராய்த் தம்மை வைத்துக்கொள்வதன் மூலமும் இயேசு அவற்றைத் தாம் வெறுப்பதைக் காட்டினார். ஆகையால், அவர் தம் எதிரிகளைப் பின்வருமாறு நன்றாய்க் கேட்க முடிந்தது: “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” (யோவான் 8:46) இயேசு “பக்தரும் கபடற்றவரும் மாசில்லாதவரும் பாவிகளினின்று பிரிக்கப்பட்டவரு”மாக இருந்தார். (எபிரெயர் 7:26, தி.மொ.) இதை உறுதிப்படுத்தி, பேதுரு, இயேசு “பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை,” என்று எழுதினார்.—1 பேதுரு 2:22.
11. அக்கிரமத்தை வெறுத்த அபூரண மனிதர்களைப்பற்றிய என்ன வேதப்பூர்வ முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
11 எனினும் இயேசு, பரிபூரண மனிதனாக இருந்தார். அக்கிரமத்தை உண்மையில் வெறுத்த அபூரண மனிதர்களைப்பற்றிய வேதப்பூர்வ முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றனவா? நிச்சயமாகவே நமக்கு இருக்கின்றன! உதாரணமாக, மோசேயும் அவருடைய உடன் லேவியர்களும், யெகோவாவின் கட்டளையின்பேரில் விக்கிரகாராதனையில் ஈடுபட்ட ஏறக்குறை 3,000 பேர்களின்மீது மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் விக்கிரகாராதனைக்கான மிகுந்த வெறுப்பைக் காட்டினார்கள். (யாத்திராகமம் 32:27, 28) வேசித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை பினேகாஸ் ஈட்டியால் குத்திக் கொன்றபோது அக்கிரமத்துக்கு மிகுந்த வெறுப்பைக் காட்டினார்.—எண்ணாகமம் 25:7, 8.
அக்கிரமத்துக்கு வெறுப்பை வெளிப்படுத்திக் காட்டுதல்
12. (எ) அக்கிரமத்தை வெறுப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்? (பி) அக்கிரம எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு நடைமுறையான சில வழிகள் யாவை?
12 நம்முடைய காலத்துக்கு வர, நாம் அக்கிரமத்தை வெறுப்பதை எவ்வாறு காட்டலாம்? நம்முடைய சிந்தனைகள், வார்த்தைகள், மற்றும் செயல்களை அடக்கியாளுவதன் மூலம் காட்டலாம். ஏதோ தனிப்பட்ட வேலையில் நம்முடைய மனம் ஈடுபட்டிராதபோது கட்டியெழுப்பும் காரியங்களைப்பற்றிச் சிந்திக்கும் பழக்கத்தை நாம் வளர்க்க வேண்டும். இரவில் நாம் படுக்கையில் விழித்திருக்க நேரிட்டால், மனவருத்தங்களைப்பற்றிய யோசனையில் ஆழ்ந்திருப்பதைப்போன்ற ஏதோ எதிர்மறையான சிந்தனைசெய்ய அல்லது பால்சம்பந்த இயல்முரணிய காரியங்களில் ஈடுபட ஒருவேளை மனஞ்சாயலாம். அத்தகைய காரியங்களுக்கு ஒருபோதும் இடங்கொடாதீர்கள், மாறாக நன்மை பயக்கும் சிந்தனையில் ஈடுபடும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக, வேதவசனங்களை, ஒன்பது மகிழ்ச்சிகளை, மற்றும் ஆவியின் ஒன்பது கனிகளை மனப்பாடம் செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள். (மத்தேயு 5:3-12; கலாத்தியர் 5:22, 23) அப்போஸ்தலர்கள் பன்னிருவரின் பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? பத்துக் கற்பனைகள் உங்களுக்குத் தெரியுமா? வெளிப்படுத்துதலில் செய்தி அனுப்பப்படுகிற அந்த ஏழு சபைகள் யாவை? ராஜ்ய பாட்டுகளை மனப்பாடம் செய்வதும், நம் மனதை உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள, புண்ணியமான, புகழுக்குரிய காரியங்களின்பேரில் ஆழ்ந்திருக்கச் செய்ய உதவிசெய்கிறது.—பிலிப்பியர் 4:8.
13. அக்கிரமத்தை வெறுப்பது என்ன வகையான பேச்சை வெறுக்கும்படி நம்மைச் செய்விக்கும்?
13 மேலும், அசுத்தமான எல்லா பேச்சையும் தவிர்ப்பதாலும் நாம் அக்கிரமத்தை வெறுப்பதைக் காட்டுகிறோம். உலகப்பிரகாரமான பல ஆட்கள் இழிவான வேடிக்கைப்பேச்சுகளைப் பேசுவதிலும் செவிகொடுத்துக் கேட்பதிலும் இன்பங்கொள்கிறார்கள், கிறிஸ்தவர்களோவெனில், அவற்றிற்குச் செவிகொடுத்துக்கேட்க மனஞ்சாயவுங்கூடாது. மாறாக, நாம் அங்கிருந்து விலகிச் சென்று அத்தகைய இழிவான நிலைகளுக்குத் தாழ்வுறும் எந்த உரையாடலிலும் பங்குகொள்வதைத் தவிர்க்க வேண்டும். அங்கிருந்து விலகிச் செல்ல முடியாதிருந்தால், அத்தகைய பேச்சை நாம் வெறுப்பதை நம்முடைய முகபாவத்திலாவது காட்டலாம். பின்வரும் இந்த நல்ல அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (எபேசியர் 4:29) அசுத்தமானதைப் பேசுவதால் அல்லது செவிகொடுத்துக் கேட்பதால் நம்மை நாம் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
14. அக்கிரமத்தை வெறுப்பது வியாபார நடவடிக்கைகள் மற்றும் வேலையைக் குறித்தவற்றில் என்ன பாதுகாப்பை அளிக்கும்?
14 அக்கிரமத்தை நாம் வெறுப்பது பாவமான எல்லா பழக்கச் செயல்களுக்கு எதிராகவும் காட்டப்பட வேண்டும். அக்கிரமத்தை வெறுப்பது இந்தக் காரியத்தில் விட்டுக்கொடுத்து உடன்படும் கண்ணிக்குள் அகப்படுவதைத் தவிர்க்கும்படி நமக்கு உதவிசெய்யும். உண்மையான கிறிஸ்தவர்கள் பழக்கமாய்ப் பாவம் செய்வதில்லை. (1 யோவான் 5:18-ஐ ஒத்துப் பாருங்கள்.) உதாரணமாக, நேர்மையற்ற வியாபார பழக்க நடவடிக்கைகள் யாவற்றையும் நாம் வெறுக்க வேண்டும். இன்று, யெகோவாவின் சாட்சிகள் பலர், தங்கள் எஜமானர்களுக்காக நேர்மையற்ற காரியங்களைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர்; ஆனால் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டனர். கிறிஸ்தவர்கள் பைபிளில் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியை மீறச் செய்யும் ஒன்றைச் செய்வதைப் பார்க்கிலும் தங்கள் வேலைகளை இழப்பதற்குங்கூட மனமுள்ளோராய் இருந்திருக்கின்றனர். மேலும், போக்குவரவு நடமாட்ட சட்டங்களை மீறாமலும் வரிகளோ சுங்க வரிகளோ நாம் செலுத்தவேண்டியிருக்கையில் வஞ்சிக்காமலும் இருப்பதால் நாம் அக்கிரமத்தை வெறுப்பதைக் காட்டவேண்டும்.—அப்போஸ்தலர் 23:1; எபிரெயர் 13:18.
பாலுறவு சார்ந்த அசுத்தச் செயல்களை வெறுத்தல்
15. மானிடரை ஆண்பெண் புணரும் தீவிர இயல்புணர்ச்சியுடன் படைத்தது என்ன நல்ல நோக்கங்களைச் சேவித்தது?
15 கிறிஸ்தவர்களாக, நாம், பாலுறவு சார்ந்த காரியங்கள் உட்பட்ட எல்லா அசுத்தச் செயல்களையும் முக்கியமாய் வெறுக்க வேண்டும். மனிதவர்க்கத்தை ஆண்பெண் புணரும் தீவிர இயல்புணர்ச்சியுடன் படைத்ததால், கடவுள் இரண்டு நல்ல நோக்கங்களை நிறைவேற்றினார். மனித குலம் அற்றுப்போகாமல் இருக்கும்படி நிச்சயப்படுத்தினார், மற்றும் மகிழ்ச்சிக்குரிய மிக அதிக அன்பான ஏற்பாட்டையும் செய்தார். ஏழைகளாக, கல்வி அறிவில்லாத, அல்லது மற்ற ஏதோ வகையில் அனுகூலமற்றிருக்கும் ஆட்களுங்கூட, மண உறவில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடையலாம். எனினும், இந்த உறவை ஓர் எல்லைக்குள் அனுபவித்து மகிழ்வதற்கு யெகோவா வரம்புகளை வைத்தார். கடவுளால் கூறப்பட்ட இந்த வரையறைகள் மதிக்கப்பட வேண்டும்.—ஆதியாகமம் 2:24; எபிரெயர் 13:4.
16. பாலுறவு சார்ந்த அசுத்தப் பொழுதுபோக்கு மற்றும் பழக்கச் செயல்களினிடமாக நம்முடைய மனப்பான்மை என்னவாக இருக்கவேண்டும்?
16 நாம் அக்கிரமத்தை வெறுத்தால், பாலுறவு சம்பந்தமான எல்லா அசுத்தப் பழக்கச் செயல்களையும் ஒழுக்கக்கேடான பொழுதுபோக்கையும் நாம் கடும் முயற்சியெடுத்துத் தவிர்ப்போம். ஆகவே ஒழுக்கப்பிரகாரமாய்ச் சந்தேகத்துக்குரிய எல்லா புத்தகங்களையும், பத்திரிகைகளையும், செய்தித்தாள்களையும் நாம் தவிர்ப்போம். அவ்வாறே, நாம் அக்கிரமத்தை வெறுத்தால், டெலிவிஷனிலோ, ஓடும் திரைப்படங்களிலோ, நாடகமேடையிலோ எதிலாயினும், அசுத்தமான எந்தக் காட்சி அளிப்புகளையும் நாம் பார்க்க மாட்டோம். ஒரு நிகழ்ச்சிநிரல் ஒழுக்கக்கேடானதாக நாம் கண்டால், உடனடியாக டெலிவிஷனை மூடி நிறுத்திவிட நாம் தூண்டியியக்கப்பட வேண்டும் அல்லது நாடகக் கொட்டகையைவிட்டு வெளியேற நமக்குத் தைரியம் இருக்க வேண்டும். இவ்வாறே, அக்கிரமத்தை வெறுப்பது, அதன் உணர்ச்சிப்பாடல்களிலோ விசைவேகத்திலோ காமவெறி உணர்ச்சியை எழுப்பும் எல்லா இன்னிசைகளுக்கும் எதிராக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள செய்யும். ஒழுக்கக்கேடான காரியங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் நாடமாட்டோம் மாறாக ‘கேட்டைக் குறித்ததில் குழுந்தைகளாகவும் எனினும் பகுத்துணரும் வல்லமைகளில் முழு-வளர்ச்சியடைந்தவர்களாயும்’ இருப்போம்.—1 கொரிந்தியர் 14:20, NW.
17. ஒழுக்கப்பிரகாரமாய்ச் சுத்தமாக நிலைத்திருக்க நமக்கு உதவிசெய்யக்கூடிய என்ன அறிவுரையைக் கொலோசெயர் 3:5 கொடுக்கிறது?
17 மிகப் பொருத்தமாகவே, நமக்குப் பின்வருமாறு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், . . . ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” (கொலோசெயர் 3:5) நாம் ஒழுக்கப்பிரகாரமாய்ச் சுத்தமாக நிலைத்திருக்கும்படி தீர்மானித்து நடக்கப்போகிறோமென்றால், சந்தேகமில்லாமல், நம்முடைய பங்கில் வல்லமைவாய்ந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கொலோசெயர் 3:5-ல் “அழித்துப்போடுங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல்லைக் குறித்து, தி எக்ஸ்பொஸிட்டர்ஸ் பைபிள் கமெனட்டரி (The Expositor’s Bible Commentary) பின்வருமாறு கூறுகிறது: “இது தீயச் செயல்களையும் மனப்பான்மைகளையும் நாம் வெறுமென அடக்கும்படி அல்லது கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறுவதில்லை. நாம் அவற்றை அறவே ஒழித்துவிடவேண்டும், பழைய வாழ்க்கை முறையை முற்றிலும் அடியோடொழிக்க வேண்டும். ‘முழுமையாய்க் கொல்’ என்பது அதன் வலிமையைத் தெரிவிக்கலாம். . . . அந்த வினைச் சொல்லின் பொருளும் காலமும், சொந்தத் திடத்தீர்மானத்தின் முழு ஆற்றலுடன் வருந்தி உழைக்கும் செயலைக் குறிக்கின்றன.” ஆகையால் நாம் இழிபொருள் ஓவியத்தை, ஆபத்தான, தொற்றும் தன்மைவாய்ந்த, மரணத்தை உண்டாக்கும் நோயைப்போல் தவிர்க்க வேண்டும், ஏனெனில் ஒழுக்கப் பிரகாரமும் ஆவிக்குரியபிரகாரமும் அவ்வாறே அது இருக்கிறது. ஒரு கை, ஒரு கால், ஒரு கண்ணுங்கூட நம்மை இடறிவிழச் செய்கிறதென்றால் அதைத் தறித்துப்போடும்படி கிறிஸ்து சொன்னபோது இதைப்போன்ற எண்ணத்தையே வெளிப்படுத்தினார்.—மாற்கு 9:43-48.
பொய் மதத்தையும் விசுவாசத்துரோகத்தையும் வெறுத்தல்
18. மத அக்கிரமத்துக்கு நம் வெறுப்பை நாம் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டலாம்?
18 பின்னும், இயேசு பாசாங்குக்கார மதத்தினரின் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துவதாலும் அக்கிரமத்துக்குத் தம் வெறுப்பைக் காட்டினார், அவ்வாறே இன்று யெகோவாவின் சாட்சிகள் பாசாங்குத்தனமான எல்லா மத அக்கிரமத்துக்கும் தங்கள் வெறுப்பைக் காட்டுகின்றனர். எவ்வாறு? மகா பாபிலோனை அது உண்மையில் இருக்கிறபடி, ஒரு மத வேசியாக வெளிப்படுத்திக் காட்டும் பைபிள் புத்தகங்களை அளித்துவருவதன் மூலமே. அக்கிரம மத பாசாங்குத்தனத்தை நாம் உண்மையில் வெறுத்தால், பொய் மத உலகப் பேரரசாகிய, மகா பாபிலோனை வெளிப்படுத்திக் காட்டுவதில் நாம் அஞ்சாமற் பேசுவோராக இருப்போம். அது குருடாக்கிப் போட்டு ஆவிக்குரிய அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கும் நேர்மை இருதயமுள்ள ஜனங்களினிமித்தமாக நாம் அவ்வாறு செய்வோம். மகா பாபிலோனின் அக்கிரமத்தை நாம் உண்மையில் எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ, அந்த அளவுக்கு இந்த ராஜ்ய ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் நாம் ஆர்வமாகப் பங்குகொள்வோம்.—மத்தேயு 15:1-3, 7-9; தீத்து 2:13, 14; வெளிப்படுத்துதல் 18:1-5.
19. விசுவாசத்துரோகிகளை நாம் எவ்வாறு கருதவேண்டும், ஏன்?
19 அக்கிரமத்தை வெறுக்க வேண்டிய கடமை விசுவாசத்துரோகிகளின் எல்லா நடவடிக்கைக்கும் பொருந்துகிறது. விசுவாசத்துரோகிகளினிடமாக நம் மனப்பான்மை தாவீதினுடையதைப்போல் இருக்க வேண்டும், அவர் அறிவித்ததாவது: “யெகோவா, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும் உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.” (சங்கீதம் 139:21, 22, தி.மொ.) தற்கால விசுவாசத்துரோகிகள் “அக்கிரம மனுஷன்” ஆகிய கிறிஸ்தவமண்டல பாதிரிமாரோடு சேர்ந்துகொண்டிருக்கின்றனர். (2 தெசலோனிக்கேயர் 2:3, தி.மொ.) ஆகையால், யெகோவாவின் உண்மை பற்றுறுதியுள்ள சாட்சிகளாக, நமக்கு அவர்களோடு அறவே எந்தச் சம்பந்தமும் இல்லை. அபூரணராயிருப்பதால், நம்முடைய இருதயம் எளிதில் நம் சகோதரர்களிடம் குற்றங்காணும் பாங்குடையதாக இருக்கலாம். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார், தனி நபர்களாக, அபூரண மானிடரே. (மத்தேயு 24:45-47) ஆனால் இந்த வகுப்பு உண்மையும் விவேகமுமுள்ளது. விசுவாசத்துரோகிகள் தங்கள் சொந்த நோக்கத்தை மேம்படுத்துவதற்காக, தலைமை வகிக்கும் சகோதரர்கள் செய்த பிழைகளை அல்லது தவறுகளாகத் தோன்றுபவற்றை வலியுறுத்திக் காட்டுகின்றனர். விசுவாசத்துரோகப் பிரசாரத்தை, அது உண்மையில் இருக்கிறபடி, நஞ்சைப்போல் தவிர்ப்பதில் நம்முடைய பாதுகாப்பு உள்ளது.—ரோமர் 16:17, 18.
20, 21. அக்கிரமத்தை வெறுப்பதற்கான காரணங்களை எவ்வாறு சுருக்கிக் கூறலாம்?
20 இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும். கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சிலர் தாங்கள் நீதியை நேசித்ததாக நினைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் போதுமான அளவு அக்கிரமத்தை வெறுக்கவில்லை. நாம் ஏன் அக்கிரமத்தை வெறுக்க வேண்டுமெனவும் கண்டோம். அவ்வாறு செய்தால் தவிர நமக்கு நல்மனச்சாட்சியும் சுய-மரியாதையும் இருக்க முடியாது. மேலும், அக்கிரமம் யெகோவா தேவனிடமாக உண்மை பற்றில்லாமையைக் குறிக்கிறது. மேலும் அக்கிரமம் மிகக் கசப்பான கனிகளை—ஆழ்ந்த துயர்நிலை, ஒழுக்கச் சீரழிவு, மற்றும் மரணத்தை—அறுவடைசெய்யும்படி நம்மைச் செய்விக்கிறது.
21 நாம் அக்கிரமத்தை வெறுப்பதை எவ்வாறு காட்டுவதென்பதையும் கவனித்தோம். எந்த வகையான நேர்மையில்லாமை, பாலுறவு ஒழுக்கக்கேடு, அல்லது விசுவாசத்துரோகத்துடனும் அறவே எந்தச் சம்பந்தமும் இராதபடி நம்மை வைத்துக்கொள்வதன்மூலம் அவ்வாறு செய்கிறோம். யெகோவாவின் நியாயநிரூபணத்தில் நாம் பங்குகொண்டு அவருடைய இருதயத்தை மகிழச் செய்ய நாம் விரும்புவதால், நாம் நீதியை நேசித்து அவருடைய சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டுகொண்டு இருக்கவேண்டியது மட்டுமல்லாமல், நம்முடைய தலைவரும் கட்டளைகொடுப்பவருமான, இயேசு கிறிஸ்து செய்ததுபோல், அக்கிரமத்தையும் வெறுக்க வேண்டும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ “வெறுத்தல்” என்ற சொல்லை வேத எழுத்துக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?
◻ அக்கிரமத்தை வெறுப்பதற்கு நமக்கிருக்கும் நல்ல காரணங்கள் சில யாவை?
◻ அக்கிரமத்தை வெறுத்தோரின் என்ன நல்ல முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
◻ அக்கிரமத்தை நாம் வெறுப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 8-ன் படம்]
இயேசு அக்கிரமத்தை வெறுத்ததால் ஆலயத்தைச் சுத்திகரித்தார்
[பக்கம் 10-ன் படம்]
நாம் அக்கிரமத்தை வெறுத்தால், பாலுறவு சார்ந்த ஒழுக்கக்கேட்டு பொழுதுபோக்கைத் தவிர்ப்போம்