குடிவெறிப் பழக்கம்—இதோடு போராடுவதில் வெற்றியடைதல்
“வேலைநேரத்தில், காலை சுமார் பத்து மணிக்கு, நான் மதுபானம் குடிப்பதைப்பற்றி யோசிக்க ஆரம்பிப்பேன். பன்னிரண்டு மணிக்குள் ஒன்று அல்லது இரண்டு தடவைக் குடிக்கப் போயிருப்பேன். மூன்று மணிக்குள், உடல் நடுங்க ஆரம்பித்திருக்கும். வேலை முடிந்துபோகும் நேரத்தில், நான் மற்றொரு தடவைக் குடிக்க ஏங்குவேன். வீட்டிற்குப் போகும் வழியில், பெரும்பாலும் இரண்டு தடவைகள் குடிப்பேன். ஏழு மணிப்போல், மீண்டும் குடிக்கவேண்டும் என்ற உணர்வு என்னை ஆட்கொள்ளும். நானும் குடிப்பேன், இருக்கையிலிருந்து கீழே உணர்விழந்தநிலையில் விழுவேன், என் ஆடைகளிலேயே சிறுநீர் கழிப்பேன், பின்பு காலை வரை என் சிறுநீரிலேயே நான் கிடப்பேன். இதைக் கருத்தில் கொண்டு, அதை ஒரு வாரத்திற்கான 7 நாட்களால் பெருக்குங்கள்; அதை ஒரு வருடத்திற்கான 52 வாரங்களால் பெருக்குங்கள்; அதை 29 வருடங்களால் பெருக்குங்கள்.”
இந்த மனிதன் ஒரு குடிவெறியன். அவன் மட்டுமல்ல. இறையியல் வல்லுநர் வெர்னன் E. ஜான்சன் சொன்னபடி, உலக அளவில் லட்சக்கணக்கானோர், “முழு மனிதனையும்: உடல், மனம், மனோதத்துவம், ஆத்மீகம்” அனைத்தையும் உள்ளடக்கும், இந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுகிறார்கள்.a
பல வல்லுநர்கள், குடிவெறி குணப்படுத்த முடியாதது என்று சொல்கிறார்கள்; ஆனால் வாழ்நாட் முழுவதும் தவிர்ப்பதன்மூலம் கட்டுப்படுத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். இது ஒரு நியாயமற்ற தேவையாக இல்லை, ஏனென்றால் குடிபானம் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் இல்லை. உண்மையில், மதுபானத்தைத் துர்ப்பிரயோகம் செய்தால், கடவுளின் தயவை இழக்கநேரிடுகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) மதுபான வெறிக்கு அடிமையாகி, நித்திய ஜீவ வாழ்க்கையை இழப்பதைவிட மதுபானத்தைத் தவிர்த்தநிலையில் கடவுளுடைய புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பது மேலானது.—மத்தேயு 5:29, 30.
மதுபான துர்ப்பிரயோகத்திலிருந்து விடுபடுதல்—விடுபட்டு இருத்தல்—பெரும்பாலும் ஒரு சோதனைக்குரிய சவாலாக இருக்கிறது. (ரோமர் 7:21-24-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) எது உதவிசெய்யும்? நேரடியான சில புத்திமதிகளை நாம் கொடுப்போமாக. நீங்கள் மதுபானமே குடிப்பதில்லை என்றாலும், இந்தப் புத்திமதி அதிகப் பிரயோஜனமானதாக இருக்கும், மேலும் குடிவெறியினால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் எந்த நண்பனுக்கோ உறவினருக்கோ உதவிசெய்ய உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும்.
உங்களைப்பற்றிய ஒரு நேர்மையான சோதனை
நீங்கள் ஒரு குடிவெறியர் என்பதை ஒத்துக்கொள்ள மறுப்பதே மேற்கொள்ளவேண்டிய மிகப்பெரிய தடைகளில் ஒன்று ஆகும். மறுதலிக்கும் தன்மை நேர்மையற்றது. இது ஒரு நோக்கத்தோடு செய்யப்படும் தர்க்கிப்பு: குடிப்பதற்கான உங்களுடைய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு செய்யப்படுகிறது. ‘நான் ஒன்னும் அவ்வளவு மோசமில்லை,’ என்று நீங்கள் வாதிடலாம். ‘என் குடும்பம் இன்னும் என்னோடுதான் இருக்கிறது. என் வேலையையும் நான் இன்னும் இழக்கவில்லை.’ மிக முக்கியமானது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய மதுபானத்தை இன்னும் குடிக்கிறீர்கள் என்பதுதான்.
மறுதலிப்பது, உங்களுக்கு உதவிசெய்ய விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க அனுமதிக்காது. ராபர்ட் தன்னுடைய மனைவியின் மாற்றாந் தந்தை, சுகாதாரமற்ற குடிப்பழக்கங்களைப் பின்பற்றுவதையும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதையும் கண்டார். ராபர்ட் சொல்கிறார்: “சில நாட்கள் கழித்து, நான் அவரிடம் நேருக்குநேர் பேச ஆரம்பித்து, அவருடைய குடிப்பழக்கம் அவருடைய நடத்தைக்குக் காரணமாயிருந்தது என்பதை அவர் உணர்ந்தாரா என்று கேட்டேன்.” விளைவு? “‘உன்னால் நிரூபிக்க முடியாது,’ ‘நான் எப்படி உணர்கிறேன் என்பது உனக்குத் தெரியாது,’ போன்ற வார்த்தைகளினால், முழுக்க முழுக்க மறுதலித்தலையே நான் சந்தித்தேன்.”
உங்களுடைய குடிப்பழக்கத்தைக்குறித்து அக்கறையோடிருக்கிற ஒரு குடும்ப அங்கத்தினராலோ ஒரு நண்பனாலோ நீங்கள் அணுகப்பட்டால், உங்களை நீங்களே துருவிப்பார்த்து, நேர்மையாகப் சோதனையிடுங்கள். (நீதிமொழிகள் 8:33) ஒரு முழு வாரமோ, ஒரு முழு மாதமோ, அல்லது பல மாதங்களோ மதுபானம் இல்லாமல் நீங்கள் வாழ முடியுமா? முடியவில்லையென்றால், ஏன் முடியவில்லை? பொய்யான சாக்குப்போக்குகளால் தன்னைத்தானே வஞ்சிக்கும் ஒரு மனிதனைப்போல் இருக்காதீர்கள். யாக்கோபு சொல்கிறார்: ‘இப்படிப்பட்டவன் கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.’—யாக்கோபு 1:22-25.
கட்டுப்படுத்த ஆரம்பித்தப்பின்புங்கூட, மறுதலிக்கும் இந்தத் தன்மையைக்குறித்து ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மனவுறுதியின் பத்தாதது (Willpower’s Not Enough) என்ற புத்தகம் விளக்குகிறது: “புதிதாகத் தவிர்க்கும் நபர், சிறிது காலத்திற்கு—ஒருவேளை முதன்முதலாக—நிறுத்த முடிந்ததால், அவர் சுகமாகிவிட்டார் என்று தவறாக நம்பக்கூடும்.” இது அதனுடைய அதிகப் பலமிக்க போதைக்குட்படுத்தும் எண்ணம் ஆகும், அது மீண்டும் பழக்கத்திற்கு திரும்பவதற்கு எடுக்கப்படும் முதற்படியாகும். இப்படிப்பட்ட மறுதலித்தலை நீங்கள் எதிர்க்கவேண்டுமென்றால், மற்றவர்களின் உதவியில்லாமல் தனிமையில் இதைச் சமாளிக்க முயற்சிக்கக்கூடாது.
உதவியைப் பெறுங்கள்
தனியாகக் குடிவெறிப் பழக்கத்தை மேற்கொள்ள முடியாது என்பதை அவர் உணர்ந்தவராக, ஒரு மனிதர் வல்லுநர்களின் உதவியை நாடினார்; நாம் அவரை லியோ என்று அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்பு, அவர் பழக்கத்தைக் கைவிடும் தருவாயில் இருந்தார். திறம்பட்டவர்களின் உதவியினுடைய மதிப்பை அசட்டைசெய்யமுடியாது என்று லியோ உணர்கிறார்.b அப்படிப்பட்ட உதவி உள்ளூரில் கிடைக்கக்கூடியதாக இருந்தால், அதைப் பெற்றுப் பயனடைவதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம்.
வெறுமனே தவிர்ப்பதைவிட, பழக்கத்தை விட்டுவிடுவதற்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். குடிவெறிக்குப் பின்னால், அதிக ஆழமான பிரச்னைகளை நீங்கள் எதிர்ப்படவேண்டியதிருக்கிறது. இவற்றை அசட்டைசெய்வது, ஆபத்தானது. டாக்டர் ஷார்லட் டேவிஸ் காஸில் எழுதுகிறார்: “போதைப் பொருள்களின் துர்ப்பிரயோகத்திற்காகப் பதினாங்கு முறைகள் சிகிச்சையளிக்கப்பட்ட மக்களை நான் பேட்டி கண்டேன், ஏனென்றால் துர்ப்பிரயோகம், அடிமையாதல், அசட்டை செய்யப்படுதல் போன்ற அடிப்படை பிரச்னைகள் கையாளப்படவில்லை.”
டென்னிஸ், இதை உண்மையென்று கண்டார். “நான் ஒரு மிதமான குடிப்பழக்கமுடையவன், எனினும் பல பிரச்னைகளை உடையவனாக இன்னும் இருந்தேன்,” என்று அவர் எழுதுகிறார். “அது மட்டுமே நான் குடிப்பதை நிறுத்துவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. நான் கடந்த காலத்தில் எப்படியிருந்தேன் என்பதைக் கவனித்து, என்னுடைய குழந்தைப் பருவத்து அனுபவங்களை ஆராய்ந்துபார்ப்பது, அவை எப்படி என்னைப் பாதித்தன என்பதைப் புரிந்துகொண்டு, என் நடத்தையில் சில மாற்றங்களை செய்யவேண்டியதிருந்தது.”
இதைப்போலவே, லியோவும் குணப்படுவதில் முன்னேறுவதற்கு அவர் அவரைத்தானே ஆழமாக ஆராய்ந்துபார்ப்பது தேவைப்பட்டது. “நான் அதிக பொறாமையுடையவனாகவும், முரட்டுத்தனமானவனாகவும் இருந்தேன்,” என்று அவர் சொல்கிறார். “நான் தன்மதிப்பு குறைந்த காலத்திற்கும் பெருமிதமான மயக்க உணர்வுக்கும் இடையே தத்தளித்தேன்.” எபேசியர் 4:22-ல் (NW) உள்ள பைபிள் புத்திமதியை லியோ பின்பற்றினார்: “உங்களுடைய முந்தின நடத்தைக்குரிய பழைய ஆளுமையைக் களைந்துபோடுங்கள்.” ஆம், “உங்களுடைய முந்தின நடத்தை” உங்கள் ஆளுமைமீது பலமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. சாந்து ஓர் அச்சில் வார்க்கப்படுகையில் எப்படி அதன் வடிவைப்பெறுகிறதோ, அப்படித்தான் உங்களுடைய ஆளுமை, உங்களின் கடந்த கால வாழ்க்கையினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தவறான நடத்தை நீக்கப்படும்போது, என்ன மீதம் இருக்கிறது? ஒருவேளை பல வருட காலமாக வார்ப்பிக்கப்பட்ட ஓர் ஆளுமை. எனவே, குணப்படுதல், உங்களுடைய முந்தின நடத்தைக்குரிய ஆளுமையை மாற்றுவதை உட்படுத்துகிறது.
கடவுளோடு ஓர் உறவை நிலைநாட்டிக்கொள்ளுங்கள்
லியோவின் குணப்படுதல், கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதை அவசியப்படுத்தியது. “யெகோவாமீது சார்ந்திருக்க கற்றுக்கொள்வது, என் எண்ணம், நடத்தை, மனப்போக்கு போன்றவற்றை முற்றிலுமாக மாற்றியது,” என்று சொல்கிறார் அவர்.
ஆயினும், எச்சரிக்கையாயிருப்பது பொருத்தமானது. எந்த உறவும்—மனிதரிடமோ கடவுளிடமோ—யாரிடமும், திறந்த மனப்பான்மை, நேர்மைத்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை தேவைப்படுத்துகிறது. குடிவெறியைத் துடைத்தழிக்கும் முக்கியப் பண்புகள் இவை. அவை வளர்க்கப்படலாம், ஆனால் காலம் எடுக்கும்.
ஒரு குடிவெறியராக, நெருங்கிய உறவு என்பது என்ன என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஒருவேளை அப்படிப்பட்ட ஒன்றை ஒருபோதும் நீங்கள் அனுபவித்திருக்க மாட்டீர்கள். எனவே, பொறுமையாய் இருங்கள். குடிப்பழக்கத்தை நிறுத்திவிடுவதால் தானாக வந்துவிடும் ஒன்றாக, கடவுளோடு கொள்ளும் ஓர் உறவு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, இந்தப் படியை அவசரமாக எடுக்காதீர்கள். கடவுளையும் அவருடைய குணங்களையும் அறிந்துகொள்ள கடும் முயற்சிசெய்யுங்கள். யெகோவா மற்றும் அவருடைய வழிகளைப்பற்றியும் ஆழமான, போற்றுதலுற்குரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பைபிளின் சங்கீதங்களைக் கவனத்துடன் ஒருவேளை வாசிப்பதன்மூலம், ஒழுங்காகத் தியானஞ்செய்யுங்கள்.c
“இயல்பானதற்கு அப்பாற்பட்ட வல்லமை”
கடவுளுடன் ஒரு நம்பத்தக்க, உறுதியான உறவு, உங்கள்மீது வல்லமைமிக்க செல்வாக்கைச் செலுத்தும். குணப்பட எடுக்கப்படும் உங்களுடைய முயற்சிகளுக்கு யெகோவா ஆதரவளிப்பார். (சங்கீதம் 51:10-12; 145:14-ஐ ஒப்பிடுங்கள்.) அவர் உங்களுக்கு “இயல்பானதற்கு அப்பாற்பட்ட வல்லமை” கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு, நீங்கள் அவரை எந்தச் சமயத்திலும் உருக்கமான ஜெபத்தில் அணுகலாம்.—2 கொரிந்தியர் 4:7, NW; பிலிப்பியர் 4:6, 7.
எந்த மனிதனையும்விட அதிகமாக உங்களுடைய சுபாவப்பண்புகளைச் சிருஷ்டிகர் அறிந்திருக்கிறார். (சங்கீதம் 103:14) மனித ஞானத்தில் சார்ந்திருக்கும் மனித ஆலோசகர்கள் உதவிசெய்யக்கூடும்; ஆனால் மனிதனை உண்டாக்கினவர் எவ்வளவு அதிகமாக இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு உதவிசெய்யமுடியும்! (ஏசாயா 41:10; 48:17, 18) அவர் கிறிஸ்தவச் சபைக்குள்ளேயே அன்பான ஆதரவைத் தந்திருக்கிறார்.
ஓர் ஆதரவளிக்கும் அமைப்பு
கிறிஸ்தவச் சபையில் இருக்கும் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள மூப்பர்கள் உதவியின் மகத்தான ஊற்றுமூலமாக இருக்க முடியும். அவர்களில் வெகு சிலர், மருத்துவவியல் அல்லது மனோதத்துவவியல் திறமைப்பெற்றிருப்பதாக உரிமைபாராட்டக்கூடும்; ஆனால் அவர்கள் கடவுளின் வார்த்தையையும் நியமங்களையும் அறிந்திருந்து, அதில் நம்பிக்கைக் காட்டுகிறார்கள். அவர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்,” தங்களை நிரூபிக்க முடியும்.” (ஏசாயா 32:2) அவர்களுடைய உதவியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.d
நிச்சயமாகவே, இப்படிப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்கள், மற்ற குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்களோடு உங்களுடைய சொந்த செயல்களின் விளைவிலிருந்து உங்களைப் பாதுகாக்கமாட்டார்கள். குடியை விட்டுவிடுதல் (Coming Off Drink) என்ற பிரசுரம் இவ்வாறு விளக்குகிறது: “குடிவெறியுடையவர்களின் சிகிச்சையில் முக்கிய பாகம், பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதனால் வரும் சீரழிக்கும் பாதிப்புகளையும், அவர்களுடைய நடத்தைக்கு அவர்களே காரணம் என்பதையும் நேருக்குநேர் குடிவெறியர்களிடம் சொல்வதேயாகும்.” எனவே, அவர்கள் உங்களைத் தயவோடு, ஆனால் நேரடியாக, நிஜத்தை எதிர்ப்படும்படியும் குடிப்பழக்கத்துக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவதற்குத் தேவைப்படும் எந்தச் சிகிச்சையையும் நடத்தை மாற்றங்களையும் முற்றிலும் பின்பற்றும்படியும் உற்சாகப்படுத்துவார்கள்.
குணப்படுவது உங்களுடைய பொறுப்பு
மற்றவர்களின் ஆதரவிலிருந்து நீங்கள் பயனடைந்தாலும், எந்த மனிதனோ ஆவியோ உங்களுடைய குணப்படுத்துதலைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். என்ன செய்யப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையுடையவராய் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய குணப்படுதல் அடிப்படையில் உங்களுடைய பொறுப்பில்தான் இருக்கிறது. (ஆதியாகமம் 4:7; உபாகமம் 30:19, 20; பிலிப்பியர் 2:12-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். நாம், 1 கொரிந்தியர் 10:13-ல் இவ்வாறு உறுதியளிக்கப்படுகிறோம்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” ஆகவே, ஆறுதலடையுங்கள்—குடிவெறிப் பழக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றியடைய முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a இங்குக் குடிவெறிப்பிடித்தவரை ஆணாக நாங்கள் குறிப்பிட்டாலும், இங்குக் கொடுக்கப்பட்டுள்ள நியமங்கள் குறிவெறிப்பிடித்த பெண்ணிற்கும் சரிசமமாகவே பொருந்துகின்றன.
b உதவியளிக்கிற சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள், மற்ற சுகப்படுத்தும் திட்டங்கள் பல இருக்கின்றன. காவற்கோபுரம் எந்தவித குறிப்பிட்ட சிகிச்சையையும் சரி என்று சிபாரிசுசெய்கிறதில்லை. வேதாகம நியமங்களை விட்டுக்கொடுக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும்படி ஒருவர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனினும், முடிவில் எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம் என்பதை, ஒவ்வொருவரும் தனக்குத்தானே தீர்மானம் செய்துகொள்ளவேண்டும்.
c சில உதாரணங்கள், சங்கீதம் 8, 9, 18, 19, 24, 51, 55, 63, 66, 73, 77, 84, 86, 90, 103, 130, 135, 139, 145.
d மூப்பர்களுக்கு உதவியாக இருக்கும் அறிவுரைகள் காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1984, பக்கங்கள் 29-31-ல் காணலாம்.
[பக்கம் 24-ன் பெட்டி]
குடிவெறி உண்டாக்கும் அவமதிப்பினாலும் அவலநிலையினாலும் நீங்கள் ஒருவேளை அவதிப்படலாம். அப்படியென்றால், நம்பிக்கையைத் தளர விடாதீர்கள். உதவி கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.
[பக்கம் 26-ன் பெட்டி]
நீங்கள் பின்வாங்குதலை எதிர்ப்பட்டால்
“பின்வாங்குதலை எதிர்ப்பட தயாராயிருப்பது, ஒரு தீ விபத்தின்போது வெளியேறும் வழியைப் பெற்றிருப்பதைப் போன்றதாகும்,” என்று மனவுறுதியின் பத்தாதது (Willpower’s Not Enough) என்ற புத்தகம் சொல்கிறது. “இது தீயை எதிர்பார்ப்பதை அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் அப்படியொன்று ஏற்பட்டால், பொறுப்புள்ள நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதைக் குறிக்கிறது.” நீங்கள் பின்வாங்குதலை எதிர்ப்பட்டால்:
□ யெகோவாவிடம் ஜெபியுங்கள். உங்களுடைய பிரச்னையை அவர் புரிந்துகொண்டு, உதவிசெய்ய விரும்புகிறார் என்று நிச்சயமாயிருங்கள்.—சங்கீதம் 103:14; ஏசாயா 41:10.
□ தேவை வரும்போது யாரை அணுகுவது என்பதை முன்பே தீர்மானித்தவர்களாக, ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் சொல்லுங்கள். என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒளிவுமறைவின்றி சொல்லுங்கள், அவருடைய வேதாகம ஆலோசனைக்குக் கவனத்தோடு செவிகொடுங்கள்.
□ நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க ஜாக்கிரதையாய் இருங்கள். தன்னைத்தானே வெறுத்தல், ஏறக்குறைய ஒரு முற்றிலுமான பின்வாங்குதலுக்கே வெறுமனே வழிநடத்துகிறது என்பதை மனதில் வையுங்கள்; எனவே, உங்களுடைய தவறை சரியான நோக்குநிலையில் மதிப்பிடுங்கள். ஒரு போராட்டத்தில் தோற்றுவிட்டீர்கள் என்பது நீங்கள் முழுப்போராட்டத்திலும் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்பதைக் குறிப்பதில்லை. மாரத்தான் ஓட்ட வீரர் கீழே விழும்போது, அவர் தன்னுடைய ஆரம்ப கோடிற்கு மீண்டும்போய் தன்னுடைய ஓட்டத்தை ஆரம்பிப்பதில்லை; அவர் எழுந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஓடுகிறார். உங்களுடைய குணப்படுதலிலும் அதையே நீங்கள் செய்யுங்கள். நீங்கள் இன்னும் பாதையில் இருக்கிறீர்கள். நீங்கள் குடிப்பழக்கத்தைத் தவிர்த்து இருந்த வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ ஒன்றும் மறைந்துபோகவில்லை.
[பக்கம் 25-ன் படம்]
உங்களை நீங்களே உறுதியான, நேர்மையான ஒரு சோதனையிடுவதன்மூலம், மறுதலிக்கும் தன்மையை எதிர்த்திடுங்கள்