யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தை ஓர் அரசன் நிந்தனை செய்கிறான்
“தங்கள் கடவுளை அறிந்திருக்கிற மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் வெற்றி பெறுவார்கள்.”—தானியேல் 11:32, NW.
1, 2. திடீர் திருப்பங்களையுடைய என்ன மோதல், 2,000 வருடங்களுக்கும் மேலாக மனித சரித்திரத்தைக் குறித்திருக்கிறது?
இரு எதிர்க்கும் ராஜாக்கள் பேரரசுரிமைக்காக எந்த முயற்சியையும் நழுவ விடாத ஒரு போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் இந்தச் சண்டை தொடர்கையில், முதலில் ஒருவன், பின்னர் மற்றவன், ஆதிக்கத்தைப் பெறுகிறான். நம்முடைய நாளில், இந்தப் போராட்டம் பூமியிலுள்ள பெரும்பாலான மக்களைப் பாதித்திருக்கிறது; மேலும் கடவுளுடைய மக்களின் உத்தமத்தன்மையைச் சோதித்திருக்கிறது. அவற்றில் எந்த வல்லரசும் எதிர்பார்க்காத ஒரு சம்பவத்தோடு அது முடிவடைகிறது. இந்தத் திடீர் திருப்பங்களுடைய சரித்திரம் முன்கூட்டியே பண்டைய தீர்க்கதரிசி தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது.—தானியேல், அதிகாரங்கள் 10 முதல் 12 வரை.
2 “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக” (Your Will Be Done on Earth)a என்ற புத்தகத்தில் விளக்கமாகக் கலந்தாலோசிக்கப்பட்ட, வடதிசை ராஜாவுக்கும் தென்திசை ராஜாவுக்கும் இடையிலுள்ள தொடர்ந்திருக்கும் பகையுடன் இந்தத் தீர்க்கதரிசனம் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது. முதலில் வடதிசை ராஜா, இஸ்ரவேலுக்கு வடக்கிலுள்ள சிரியா என்று அந்தப் புத்தகத்தில் காண்பிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பாகம் ரோமால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், எகிப்து தென்திசை ராஜாவாக இருந்தது.
முடிவு காலத்தில் மோதல்
3. அந்தத் தூதனின்படி, வடதிசை ராஜா மற்றும் தென்திசை ராஜாவைப்பற்றிய தீர்க்கதரிசனம் எப்போது புரிந்துகொள்ளப்படும், மேலும் எப்படி?
3 இந்தக் காரியங்களை தானியேலுக்கு வெளிப்படுத்தும் தூதன் சொன்னார்: “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், [உண்மையான, NW] அறிவும் பெருகிப்போம்.” (தானியேல் 12:4) ஆம், இந்தத் தீர்க்கதரிசனம் முடிவு காலத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது—1914-ல் துவங்கிய ஒரு காலப்பகுதி. அந்தக் குறிக்கப்பட்ட காலத்தில், அநேகர் பரிசுத்த வேத எழுத்துக்களில் “இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள்”; அப்போது பரிசுத்த ஆவியின் உதவியுடன், பைபிள் தீர்க்கதரிசனத்தின் ஒரு புரிந்துகொள்ளுதல் உட்பட உண்மையான அறிவு பெருகியதாக இருக்கும். (நீதிமொழிகள் 4:18) அந்தக் காலத்தினூடே நாம் அதிக ஆழமாகச் செல்லுகையில், தானியேலின் தீர்க்கதரிசனங்களுடைய அதிகதிக விளக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. அப்படியானால், “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக” என்ற பிரசுரம் வெளியிடப்பட்டு 35 வருடங்களுக்குப்பின், இப்போது, 1993-ல், வடதிசை ராஜா மற்றும் தென்திசை ராஜாவைப்பற்றிய தீர்க்கதரிசனத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?
4, 5. (அ) வடதிசை ராஜா மற்றும் தென்திசை ராஜாவைப்பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனத்தில் 1914-ம் வருடம் எந்த இடத்தில் குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) அந்தத் தூதனின்படி, 1914-ல் என்ன சம்பவிக்கும்?
4 முடிவு காலத்தின் தொடக்கம், 1914-ல், முதல் உலகப் போராலும் இயேசு முன்னறிவித்த மற்ற உலக பெருந்துயர்களாலும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. (மத்தேயு 24:3, 7, 8) தானியேல் தீர்க்கதரிசனத்தில் அந்த வருடத்தை நாம் குறிப்பிட்டுக் காண்பிக்க முடியுமா? ஆம். முடிவு காலத்தின் தொடக்கம், தானியேல் 11:29-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறித்தகாலம்.’ (“உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக,” பக்கங்கள் 269-70-ஐ பார்க்கவும்.) அது தானியேலின் காலத்தில் ஏற்கெனவே யெகோவாவால் குறிக்கப்பட்டிருந்த காலமாக இருந்தது; ஏனென்றால் தானியேல் 4-ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசன முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களில் சுட்டிக்காண்பிக்கப்பட்ட 2,520 வருடங்களின் முடிவில் அது வந்தது.
5 தானியேல் இளைஞராக இருந்தபோது, பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவு முதல் பொ.ச. 1914 வரையாக இருந்த அந்த 2,520 வருடங்கள், “புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” என்று அழைக்கப்பட்டன. (லூக்கா 21:24, NW) என்ன அரசியல் சம்பவங்கள் அவற்றின் முடிவைக் குறிக்கும்? ஒரு தூதன் இதைத் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். அந்தத் தூதன் சொன்னார்: “குறித்தகாலத்திலே [வடதிசை ராஜா] திரும்பவும் [திரும்பிச் சென்று, NW] தென்தேசத்திற்கு [விரோதமாக, NW] வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.”—தானியேல் 11:29.
அந்த ராஜா ஒரு போரில் தோல்வி அடைகிறான்
6. வடதிசை ராஜாவும், தென்திசை ராஜாவும், 1914-ல் யாராக இருந்தனர்?
6 வடதிசை ராஜாவின் பாகம், 1914-ன்போது ஜெர்மனியால் எடுக்கப்பட்டிருந்தது; அதன் தலைவர் கெய்ஸர் வில்ஹெம். (“சீசர்” என்ற ரோம பட்டப்பெயரிலிருந்து “கெய்ஸர்” வந்தது.) ஐரோப்பாவில் போர் நடவடிக்கைகளின் திடீர் எழுச்சி, வடதிசை ராஜாவுக்கும் தென்திசை ராஜாவுக்கும் இடையிலான சச்சரவுகளின் தொடரின் இன்னும் மற்றொரு அம்சமாக இருந்தது. இந்தப் பின்கூறப்பட்ட, தென்திசை ராஜாவின் பாகம் இப்போது பிரிட்டனால் வகிக்கப்பட்டது; இது ஆரம்ப தென்திசை ராஜாவின் ஆட்சி எல்லையாக இருந்த எகிப்தை சீக்கிரத்தில் கைப்பற்றியது. போர் தொடர்ந்தபோது, பிரிட்டன் தன்னுடைய முன்னாள் குடியேற்ற நாடாக இருந்த அமெரிக்க ஐக்கிய மாகாணங்களால் சேர்ந்துகொள்ளப்பட்டது. சரித்திரத்திலேயே மிக வல்லமையான பேரரசான, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசாக தென்திசை ராஜா ஆனான்.
7, 8. (அ) முதல் உலகப் போரில், என்ன வழியில் காரியங்கள் “முன்நடபடியைப்போல்” அமையவில்லை? (ஆ) முதல் உலகப் போரின் விளைவு என்ன, ஆனால் தீர்க்கதரிசனத்தின்படி, வடதிசை ராஜா எவ்வாறு பிரதிபலித்தான்?
7 இரு ராஜாக்களுக்கும் இடையிலான முந்தின மோதல்களில், வடதிசை ராஜாவாக ரோம பேரரசு, நிலையாக வெற்றி அடைந்திருந்தது. இந்த முறை, ‘காரியங்கள் முதலில் இருந்த அதேவிதமாக இருக்கவில்லை.’ ஏன் அவ்வாறு இருக்கவில்லை? ஏனென்றால் வடதிசை ராஜா போரில் தோல்வி அடைந்தான். ஒரு காரணம் என்னவென்றால், “கித்தீமின் கப்பல்கள்” வடதிசை ராஜாவுக்கு எதிராக வந்தன. (தானியேல் 11:30) இந்தக் கப்பல்கள் என்னவாக இருந்தன? தானியேலின் காலத்தில், கித்தீம் சீப்புருவாக இருந்தது; முதல் உலகப் போரின் துவக்கத்தில், சீப்புரு பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது. மேலுமாக, தி ஸான்டர்வான் பிக்டோரியல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் தி பைபிளின்படி, கித்தீம் என்ற பெயர் “பொதுவாக மேற்கை, ஆனால் குறிப்பாக கடற்பயண பாதையில் மேற்கு வரையாக உட்படுத்துகிறது.” நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன் “கித்தீமின் கப்பல்கள்” என்ற சொற்றொடரை “மேற்கத்திய கடற்கரையோரப் பகுதிகளின் கப்பல்கள்” என்று மொழிபெயர்க்கிறது. முதல் உலகப் போரில், கித்தீமின் கப்பல்கள் ஐரோப்பிய மேற்கத்திய கரையோரத்திற்கு அப்பால் இருக்கும் பிரிட்டனின் கப்பல்களாக நிரூபித்தன. பின்னர் பிரிட்டிஷ் கப்பற்படை, மேற்கத்திய கண்டமாகிய வட அமெரிக்காவிலுள்ள கப்பல்களால் பலப்படுத்தப்பட்டது.
8 இந்தத் தாக்குதலின்கீழ், வடதிசை ராஜா “மனநோவடைந்து,” 1918-ல் தோல்வியை ஒத்துக்கொண்டான். ஆனால் அவன் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. “அவன் . . . திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, [திறம்பட்டவிதத்தில் செயல்படுவான், NW] பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.” (தானியேல் 11:30) இவ்வாறாக அந்தத் தூதன் தீர்க்கதரிசனம் உரைத்தார்; அது அவ்வாறே நிரூபித்தது.
அந்த ராஜா திறம்பட்டவிதத்தில் செயல்படுகிறான்
9. அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சிக்கு வழிநடத்தியது எது, அவன் எவ்வாறு ‘திறம்பட்டவிதத்தில் செயல்பட்டான்’?
9 போருக்குப்பின், 1918-ல், அந்த வெற்றி வாகை சூடிய நேச நாடுகள் ஜெர்மனியின்மீது ஒரு தண்டனை இயல்புடைய சமாதான ஒப்பந்தத்தை விதித்தன; ஜெர்மானிய மக்களை எல்லையற்ற எதிர்காலத்திற்குப் பட்டினியின் விளிம்பில் வைப்பதற்காக இது திட்டமிடப்பட்டதுபோல் தோன்றியது. அதன் விளைவாக, சில வருடங்களுக்குக் கடுந்துன்பத்தில் தடுமாறியபின், அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சிக்கு ஜெர்மனி தயாராக இருந்தது. அவன் 1933-ல் பேரரசுக்குரிய அதிகாரத்தை அடைந்தான்; அவன் உடனடியாக, இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட “பரிசுத்த உடன்படிக்கைக்கு” விரோதமான ஒரு கொடிய தாக்குதலை மேற்கொண்டான். இதில் அவன் இந்த உண்மைத்தவறாத கிறிஸ்தவர்களில் அநேகரைக் கொடூரமாகத் துன்புறுத்தி, அவர்களுக்கு எதிராகத் திறம்பட்டவிதத்தில் செயல்பட்டான்.
10. ஆதரவைத் தேடி, ஹிட்லர் யாருடன் கூட்டுறவை நாடினான், என்ன விளைவுகளுடன்?
10 பொருளாதார மற்றும் அரசியல் செயலாட்சிக்குரிய வெற்றிகளையும் ஹிட்லர் அனுபவித்து, அந்தத் துறையிலும் திறம்பட்டவிதத்தில் செயல்பட்டான். ஒருசில வருடங்களில், ஜெர்மனியைக் கணக்கில் சேர்க்கவேண்டிய ஒரு வல்லரசாக ஆக்கினான்; இந்த முயற்சியில் “பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்க”ளால் உதவிசெய்யப்பட்டான். இவர்கள் யார்? சான்றுகளின்படி, கடவுளோடு ஓர் உடன்படிக்கைக்குரிய உறவைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டிக் கொண்டு, ஆனால் நெடுங்காலமாக இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கத் தவறிய கிறிஸ்தவமண்டலத் தலைவர்களே. “பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை” அவர்களுடைய ஆதரவிற்காக ஹிட்லர் வெற்றிகரமாக நாடினான். ரோமிலுள்ள போப் அவனோடு ஓர் உடன்படிக்கை செய்தார்; மேலும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் ஜெர்மனியிலுள்ள புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளும், ஹிட்லருக்கு அவனுடைய 12 வருட கொடுங்கோல் ஆட்சி முழுவதும் ஆதரவளித்தன.
11. வடதிசை ராஜா எவ்வாறு ‘பரிசுத்த ஸ்தலத்தை நிந்தனைசெய்து,’ ‘அன்றாட பலியை நீக்கினான்’?
11 ஹிட்லர் போர் தொடுக்கக்கூடிய அந்த அளவிற்கு வெற்றிகரமாக இருந்தான்; அந்தத் தூதன் சரியாகவே முன்னறிவித்தவிதமாக இது இருந்தது. “ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி [நிந்தனைசெய்து, NW], அன்றாட பலியை நீக்”குவார்கள். (தானியேல் 11:31அ) பண்டைய இஸ்ரவேலில், பரிசுத்த ஸ்தலம் எருசலேம் ஆலயத்தின் ஒரு பாகமாக இருந்தது. எனினும், யூதர்கள் இயேசுவை நிராகரித்தபோது, யெகோவா அவர்களையும் அவர்களுடைய ஆலயத்தையும் நிராகரித்தார். (மத்தேயு 23:37–24:2) முதல் நூற்றாண்டு முதற்கொண்டு, யெகோவாவின் ஆலயம் உண்மையில் ஆவிக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது; அதன் மகா பரிசுத்த ஸ்தலத்தைப் பரலோகத்திலும் பிரதான ஆசாரியராகிய இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் சேவிக்கும் ஆவிக்குரிய பிராகாரத்தைப் பூமியிலும் கொண்டிருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடன் சேர்ந்து திரள் கூட்டத்தாரும், 1930-களிலிருந்து வழிபட்டுவருகின்றனர்; எனவே, அவர்கள் ‘கடவுளுடைய ஆலயத்தில்’ சேவிப்பதாகச் சொல்லப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 15; 11:1, 2; எபிரெயர் 9:11, 12, 24) வடதிசை ராஜாவின் ஆதிக்கத்திலிருந்த நாடுகளில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளைக் கடுமை தணியாமல் துன்புறுத்தியதன்மூலம் ஆலயத்தின் பூமிக்குரிய பிராகாரம் நிந்தனை செய்யப்பட்டது. அன்றாடபலி—யெகோவாவின் பெயருக்கு வெளிப்படையான துதியின் பலி—நீக்கப்படும் அளவிற்கு அந்தத் துன்புறுத்தல் அவ்வளவு கடுமையாக இருந்தது. (எபிரெயர் 13:15) எனினும், பயங்கரமான துன்புறுத்தலின்மத்தியிலும், உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், “வேறே ஆடுகளு”டன் சேர்ந்து தொடர்ந்து தலைமறைவாகப் பிரசங்கித்துக்கொண்டிருந்தனர் என்பதை சரித்திரம் காண்பிக்கிறது.—யோவான் 10:16.
“அருவருப்பு”
12, 13. “அருவருப்பு” என்னவாக இருந்தது, மேலும்—உண்மையும் விவேகமுமுள்ள அடிமை முன்னறிந்தபடி—எப்போது, எப்படி அது மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டது?
12 இரண்டாம் உலகப் போரின் முடிவு அருகாமையில் இருந்தபோது, மற்றொரு முன்னேற்றம் இருந்தது. “அவர்கள் நிச்சயமாக பாழாக்கும் அருவருப்பை அதற்குப் பதிலாக வைப்பார்கள்.” (தானியேல் 11:31ஆ, NW) இயேசுவும் குறிப்பிட்ட இந்த “அருவருப்பு,” சர்வதேச சங்கமாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டது; வெளிப்படுத்துதலின்படி அது அபிஸுக்குள் சென்ற சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகமாக இருந்தது. (மத்தேயு 24:15; வெளிப்படுத்துதல் 17:8; பார்க்கவும் வெளிச்சம் [Light], புத்தகம் இரண்டு, பக்கம் 94.) இரண்டாம் உலகப் போர் மூண்டபோது, அது இதைச் செய்தது. என்றபோதிலும், 1942-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய உலக தேவராஜ்ய அசெம்பிளியில், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் மூன்றாவது தலைவர், நேதன் H. நார், வெளிப்படுத்துதல் 17-ன் தீர்க்கதரிசனத்தைக் கலந்தாலோசித்து, அந்த மிருகம் மீண்டும் அபிஸிலிருந்து எழும்பி வருமென எச்சரித்தார்.
13 அவருடைய வார்த்தைகளின் உண்மையை சரித்திரம் உறுதி செய்தது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 1944-க்கு இடையில், ஐக்கிய மாகாணங்களிலுள்ள டம்பார்டன் ஓக்ஸில், ஐக்கிய நாடுகள் என்றழைக்கப்படப்போகும் ஒன்றிற்கான சாசனத்தின்பேரில் வேலை தொடங்கப்பட்டது. அந்தச் சாசனம், முன்னாள் சோவியத் யூனியன் உட்பட 51 தேசங்களால் ஏற்கப்பட்டது; அது அக்டோபர் 24, 1945-ல் அமலுக்கு வந்தபோது, செயலற்றுப்போன சர்வதேச சங்கம் மெய்யாகவே அபிஸிலிருந்து வெளியே வந்தது.
14. வடதிசை ராஜாவின் அடையாளம் எப்போது, எப்படி மாறியது?
14 இரண்டு உலகப் போர்களின்போதும் ஜெர்மனி, தென்திசை ராஜாவின் முக்கிய எதிரியாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஜெர்மனியின் ஒரு பாகம் தென்திசை ராஜாவின் நேசநாடாகும்படி தன்னை மாற்றியமைத்து அணிவகுத்துக்கொண்டது. ஆனால் ஜெர்மனியின் மற்ற பாகம் இப்போது மற்றொரு வல்லமையான பேரரசின் பக்கமாக அணிவகுத்துக்கொண்டது. இப்போது ஜெர்மனியின் ஒரு பாகத்தை உட்படுத்திய கம்யூனிஸ்ட் கூட்டணி, ஆங்கிலோ-அமெரிக்க கூட்டிற்கு விரோதமாக பலமாக எதிர்த்து நின்றது; இரண்டு ராஜாக்களுக்கும் மத்தியிலுள்ள எதிர்ப்பு ஒரு பனிப்போரானது.—“உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக,” பக்கங்கள் 264-84-ஐப் பார்க்கவும்.
அந்த ராஜாவும் உடன்படிக்கையும்
15. ‘உடன்படிக்கைக்கு விரோதமாகத் துன்மார்க்கமாகச் செயல்படுகிறவர்கள்’ யார், வடதிசை ராஜாவுடன் அவர்கள் என்ன உறவைக் கொண்டிருந்திருக்கிறார்கள்?
15 அந்தத் தூதன் இப்போது சொல்கிறார்: “உடன்படிக்கைக்கு விரோதமாகத் துன்மார்க்கமாகச் செயல்படுகிறவர்களை அவன் இச்சகப்பேச்சுகளினால் விசுவாசத்துரோகத்துக்கு வழிநடத்துவான்.” (தானியேல் 11:32அ, NW) உடன்படிக்கைக்கு விரோதமாகத் துன்மார்க்கமாகச் செயல்படுகிற இவர்கள் யார்? திரும்பவும், கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக்கொண்டு, தங்களுடைய செயல்களால் கிறிஸ்தவத்தின் பெயரையே நிந்தனை செய்யும் கிறிஸ்தவமண்டலத் தலைவர்களாகவே அவர்கள் இருக்க முடியும். இரண்டாம் உலகப் போரின்போது, “தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகச் சர்ச்சுகள் கொடுத்த பொருள் சம்பந்தமான மற்றும் நெறிமுறை சார்ந்த உதவியைப் பட்டியலிட சோவியத் அரசு முயற்சி செய்தது.” (உவால்டர் கோலார்ஸின் சோவியத் யூனியனில் மதம், [Religion in the Soviet Union]) போருக்குப்பின், இப்போது வடதிசை ராஜாவாக இருந்த வல்லரசின் நாத்திக கொள்கையின் மத்தியிலும் சர்ச் தலைவர்கள் அந்த நட்பைக் காத்துக்கொள்ள முயன்றனர்.b இவ்வாறு, கிறிஸ்தவமண்டலம் முன்னொருபோதும் இராதவகையில் இந்த உலகத்தின் ஒரு பாகமாக ஆனது—யெகோவாவின் பார்வையில் ஓர் அருவருப்பான விசுவாசத்துரோகம்.—யோவான் 17:14; யாக்கோபு 4:4.
16, 17. “உட்பார்வை உடையவர்கள்” யார், வடதிசை ராஜாவின்கீழ் அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றனர்?
16 எனினும் உண்மையான கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? “தங்கள் கடவுளை அறிந்திருக்கிற மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் வெற்றி பெறுவார்கள், திறம்பட்டவிதத்தில் செயல்படுவார்கள். மக்களின் மத்தியில் உட்பார்வையை உடையவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அநேகருக்குப் புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்தளிப்பார்கள். மேலும் சில நாட்களுக்கு அவர்கள் நிச்சயமாக பட்டயத்தினாலும் அக்கினியினாலும், சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் இடறிவிழும்படி செய்யப்படுவார்கள்.” (தானியேல் 11:32ஆ, 33, NW) வடதிசை ராஜாவின்கீழ் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள் சரியாகவே ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கையில்,’ இந்த உலகத்தின் பாகமாக இருக்கவில்லை. (ரோமர் 13:1; யோவான் 18:36) அவர்கள் இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துவதில் கவனமாய் இருந்துகொண்டு, “தேவனுடையதை தேவனுக்கும்” செலுத்தினர். (மத்தேயு 22:21) இதன் காரணமாக, அவர்களுடைய உத்தமத்தன்மை சோதிக்கப்பட்டது.—2 தீமோத்தேயு 3:12.
17 அதன் விளைவு? அவர்கள் ‘வெற்றியும் பெற்றார்கள்,’ ‘இடறியும் விழுந்தார்கள்.’ அவர்கள் துன்புறுத்தப்பட்டு, கடுமையாக வேதனை அனுபவித்ததில், சிலர் கொல்லவும்பட்டதில், அவர்கள் இடறிவிழுந்தனர். ஆனால் பெரும்பாலாக, அவர்கள் உண்மையாய் நிலைத்திருந்ததில், வெற்றியும் பெற்றார்கள். ஆம், இயேசு உலகத்தை ஜெயித்ததுபோல் அவர்கள் உலகத்தை ஜெயித்தார்கள். (யோவான் 16:33) மேலும், அவர்கள் சிறையிலோ சித்திரவதை முகாமிலோ இருக்க வேண்டியதாக இருந்தாலும், பிரசங்கிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அவ்வாறு செய்வதன்மூலம், அவர்கள் ‘அநேகருக்குப் புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்தளித்தார்கள்.’ துன்புறுத்தல் இருந்தபோதும், வடதிசை ராஜாவால் ஆட்சி செலுத்தப்பட்ட அநேக நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கைகள் அதிகரித்தன. “உட்பார்வையை உடையவர்க”ளின் உண்மைத்தன்மையின் காரணமாக, என்றும் விரிவாகிக்கொண்டே போகும் “திரளான கூட்டத்”தின் பாகம் அந்த நாடுகளில் தோன்றியிருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 7:9-14.
18. வடதிசை ராஜாவின்கீழ் வாழும் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரால் என்ன “கொஞ்சம் ஒத்தாசை” பெறப்பட்டிருக்கிறது?
18 கடவுளுடைய மக்களின் துன்புறுத்தலைப்பற்றி பேசுபவராய் அந்தத் தூதன் முன்னறிவித்தார்: “இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்.” (தானியேல் 11:34அ) இது எவ்வாறு நடந்தது? ஒரு காரியம் என்னவென்றால், இரண்டாம் உலகப் போரில் தென்திசை ராஜாவின் வெற்றி, எதிர் ராஜாவின்கீழ் வாழும் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் விடுவிப்பில் விளைவடைந்தது. (ஒப்பிடவும் வெளிப்படுத்துதல் 12:15, 16.) பின்னர், தொடர்ந்துவந்த ராஜாவால் துன்புறுத்தப்பட்டவர்கள், அவ்வப்போது விடுவிப்பை அனுபவித்தார்கள்; பனிப்போர் தணிந்ததும், உண்மையான கிறிஸ்தவர்கள் ஓர் அச்சுறுத்தலாக இல்லை என்பதை அநேக அரசியல் தலைவர்கள் உணர்ந்து, இவ்வாறு அவர்களுக்குச் சட்டப்படி அங்கீகாரத்தை அளித்தனர்.c மத்தேயு 25:34-40-ல் விவரிக்கப்பட்டதுபோல், அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் உண்மையான பிரசங்கிப்பிற்குச் சாதகமாகப் பிரதிபலித்து அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கும் பேரெண்ணிக்கையான திரள் கூட்டத்தாரிடமிருந்தும் பேருதவி வந்திருக்கிறது.
கடவுளின் மக்களுக்கு ஒரு சுத்திகரிப்பு
19. (அ) சிலர் எவ்வாறு “இச்சகவார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்”கொண்டனர்? (ஆ) “முடிவுகால பரியந்தம்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
19 இந்தச் சமயத்தில் கடவுளைச் சேவிப்பதில் அக்கறை காண்பித்த அனைவரும் நல்ல உள்நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. அந்தத் தூதன் எச்சரித்தார்: “அப்பொழுது அநேகர் இச்சகவார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். அறிவாளிகளைப் [உட்பார்வையை உடையவர்களை, NW] புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியாயிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.”d (தானியேல் 11:34ஆ, 35) சிலர் சத்தியத்தில் அக்கறை காண்பித்தனர்; ஆனால் கடவுளைச் சேவிப்பதற்காக ஓர் உண்மையான ஒப்புக்கொடுத்தலைச் செய்ய அவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கவில்லை. நற்செய்தியை ஏற்றுக்கொள்வதாகத் தோன்றிய மற்றவர்கள், உண்மையில் அதிகாரிகளுக்கு வேவுபார்ப்பவர்களாய் இருந்தனர். ஒரு தேசத்திலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு வாசிக்கிறது: “இந்த எதையும் செய்ய துணிந்த நபர்களில் சிலர், ஏற்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர்; இவர்கள் கர்த்தருடைய அமைப்புக்குள் நுழைந்து, மிகுந்த வைராக்கியத்தை வெளிக்காட்டி, உயர்ந்த ஊழியப் பொறுப்புகளில்கூட நியமிக்கப்பட்டிருந்தனர்.”
20. போலியாக உட்புகுந்தவர்களால் சில உண்மை கிறிஸ்தவர்கள் ‘இடறிவிழும்படி’ யெகோவா ஏன் அனுமதித்தார்?
20 உட்புகுந்தவர்கள் சில உண்மையுள்ளவர்களை அதிகாரிகளின் கைகளில் விழும்படி செய்தார்கள். யெகோவா ஏன் அத்தகைய காரியங்கள் நடக்கும்படி அனுமதித்தார்? ஒரு புடமிடுதலுக்காகவும், ஒரு சுத்திகரிப்பிற்காகவும். இயேசு “பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்”டதுபோல, இந்த உண்மையுள்ளவர்களும் தங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டதன்மூலம் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டனர். (எபிரெயர் 5:8; யாக்கோபு 1:2, 3; ஒப்பிடவும் மல்கியா 3:3.) இவ்வாறு அவர்கள் ‘புடமிடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்படுகிறார்கள்.’ அப்படிப்பட்ட உண்மையுள்ளவர்களின் சகிப்புத்தன்மை பலனளிக்கப்படுவதற்கான குறித்தகாலம் வரும்போது அவர்களுக்குப் பெருத்த சந்தோஷம் காத்திருக்கிறது. தானியேல் தீர்க்கதரிசனத்தை நாம் கூடுதலாகக் கலந்தாலோசிக்கையில் இது காணப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டு, 1958-ல் “தெய்வீக சித்தம்” (Divine Will) யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச அசெம்பிளியில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
b நவம்பர் 1992 உவர்ல்ட் பிரஸ் ரிவ்யூ, தி டோரன்டோ ஸ்டாரிலிருந்து ஒரு கட்டுரையை சிறப்பித்துக் காட்டியது; அது சொன்னது: “கடந்த பல வருடங்களாக, தங்களுடைய நாட்டின் சரித்திரத்தைப்பற்றி முன்னொரு காலத்தில் மறுக்கமுடியாத போலி எண்ணங்களாக இருந்த டஜன் கணக்கான எண்ணங்கள் உண்மைகளின்முன் நொறுங்குவதை ரஷ்யர்கள் கண்டிருக்கின்றனர். ஆனால் கம்யூனிஸ்ட் ஆட்சியுடன் சர்ச் உடனுழைப்பது பற்றிய செய்திவெளியீடுகள்தான் அவற்றிலேயே மிகவும் சிதறடிக்கும் பேரடியைக் குறிக்கின்றன.”
c தி உவாட்ச்டவர், ஜூலை 15, 1991, பக்கங்கள் 8-11-ஐப் பார்க்கவும்.
d “முடிவு காலபரியந்தம்” என்பது “முடிவு காலத்தின்போது” என்று அர்த்தம் கொள்ளக்கூடும். இங்கு “பரியந்தம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை தானியேல் 7:25-ன் அரமேயிக் வாசகத்தில் காணப்படுகிறது; அங்கு “போது” அல்லது “-ஆக” என்று அர்த்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு, 2 இராஜாக்கள் 9:22, யோபு 20:4, மற்றும் நியாயாதிபதிகள் 3:26 ஆகியவற்றின் எபிரெய வாசகத்தில் அதேபோன்ற அர்த்தம் இருக்கிறது. எனினும், தானியேல் 11:35-ன் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், அது “பரியந்தம்,” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; இது சரியான புரிந்துகொள்ளுதலாக இருந்தால், இங்கு ‘முடிவு காலம்’ என்பது கடவுளுடைய மக்கள் சகித்திருப்பதற்கு முடிவான காலமாக இருக்கவேண்டும்.—ஒப்பிடவும் “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக,” பக்கம் 286.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தானியேல் தீர்க்கதரிசனத்தைப்பற்றி ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதல் கிடைக்குமென நாம் ஏன் இன்று எதிர்பார்க்கவேண்டும்?
◻ வடதிசை ராஜா எவ்வாறு ‘குரோதங்கொண்டு திறம்பட்டவிதத்தில் செயல்பட்டான்’?
◻ “அருவருப்பு” மறுபடியும் தோன்றுவது எவ்வாறு அடிமை வகுப்பால் முன்னறியப்பட்டது?
◻ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் எவ்வாறு ‘இடறிவிழுந்து, வெற்றிபெற்று, கொஞ்சம் ஒத்தாசையையும் பெற்றனர்’?
[பக்கம் 15-ன் படம்]
தென்திசை ராஜாவின் கைகளில் அனுபவித்த 1918-ன் தோல்வியிலிருந்து, ஹிட்லரின்கீழ், வடதிசை ராஜா முழுமையாக மீண்டெழுந்தான்
[பக்கம் 16-ன் படம்]
கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் வடதிசை ராஜாவுடன் ஓர் உறவை வளர்த்துக்கொள்ள முயன்றனர்
[படத்திற்கான நன்றி]
Zoran/Sipa Press